என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 27 December 2020

காதல் சோலை - 1

 காதல் சோலை - 1

எதையோ தேடுவதாகச் சொல்லி
நடிக்கும் எல்லோரும்
யாருக்கும் தெரியாமல்
உன்னைத்தான் தேடுகிறார்கள்....
என்ன கேட்டாலும்
வெட்கத்தை மட்டுமே தருவாய்
என்பது
முன்னமே தெரிந்திருந்தால்
உன் வெட்கத்தையே
கேட்டிருப்போம்....
நீ
கரையிலேயே தான்
நிற்கிறாய்...
'புயல் கடலில்
மையம் கொண்டிருக்கிறது'
என்றறிவிக்கிறார்கள்
வானொலியில்...
காதலை விதைத்து
எங்களைப் பெரியவர்களாக்கும் நீ
இன்னமும்
குழந்தையாகவே இருக்கிறாய்...
நீ
உன் ஆடைகளை
சரி செய்கையில்
நாங்கள்
கலைந்து விடுகிறோம்....
- ராம்பிரசாத்

காதல் சோலை - 2

காதல் சோலை - 2


நீ எத்தனை பாரபட்சமானவள்

தெரியுமா?
நான் உன்னை தேவதை ஆக்கினேன்...
நீயோ என்னை பைத்தியமாக்குகிறாய்...
உன் அடையாள அட்டையில்
"என்னைப் பார், காதல் வரும்!!!'
என்று தான்
எழுதவேண்டும்....
'இலவசங்களே வேண்டாம்'
என்று சொல்லும் நீ
எனக்குக் காதலைத் தந்தது
இலவசமாகத்தான்...
நீ வரையும் கோலங்கள்
அழகாய்த்தானிருக்கின்றன...
உன்னையும் உன் கோலத்தையும்
பார்க்கும் நான் தான்
அலங்கோலமாகிவிடுகிறேன்....
செத்துப்போனவன் மீது கூட
வெறுப்பு வருகிறது...
அவனுக்கு நீ
மெளன அஞ்சலி செலுத்தினால்....
ஒரு மரங்கொத்தி போல்
துளையிட்டு
நிரப்புகிறாய் காதலை
என் பிஞ்சு நெஞ்சுக்குள்.....
- ராம்பிரசாத்

Sunday, 13 December 2020

குப்பை - சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 236வது இதழில் எனது சிறுகதை 'குப்பை' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.


கவிதை மட்டும் - போட்டி முடிவுகள்

ராம்பிரசாத் எழுத்தாளர் தேர்வுசெய்த பரிசுக்கவிதைகள், கவிதை மட்டும் " வாட்ஸ்ஆப் குழுவின் தினசரி கவிதைப்போட்டியின்-3 நவம்பர்,2020 அன்று நடந்த போட்டியில் வென்ற கவிதைகளை அட்மின் என்.ஏகம்பவாணன் அறிவிப்பு ,Ramprasath writer Selected poems in KAVITHAI MATTUM WhatsApp group daily poem competition at 3/11/2020 Announced by Admin N.EKAMBAVANAN

https://youtu.be/-pjxEM5DGbw

Parallel Thought

Parallel Thought


லிங்கா திரைப்படம் வெளியான நேரம் அது.

கதா நாயகன், நகைக்கடையில் சாவி இருக்கும் இடத்தை கை விரல்களால் அளந்து குறித்து கொள்ளும் காட்சி ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது தயாரிப்புத் தரப்பில், அது, "Parallel Thought" என்று விளக்கம் தரப்பட்டது.

அதாவது, முன்னவரின் ஆக்கத்தை வாசிக்காமலேயே அல்லது காணாமலேயே பின்னவர் தானாகவே அக்கதைக்கான கருவையும், கதையின் பிற அம்சங்களையும் தனது சொந்த சிந்தனையில் அடைந்துவிட்டார் என்பது.

மேற்கத்திய திரை மரபில் 'Parallel Thought' வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ் திரை உலகில் பயன்படுத்தப்படுவது போல் இல்லை. மேற்குலகில் யாரும் திரைக்கதை விவாதம் என்று ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆறேழு பேர் ஒரு கதையை, அதன் காட்சிகளை, அமைப்பை, கட்டுமானத்தைப் பேசிப் பேசி விவாதித்து உருவாக்குவதில்லை.

கதையை ஒருவர் எழுதுவார். அவர் தன் கதைக்கான அத்தனை அம்சங்களையும் தன் ஸ்கிரிப்டில் வைத்து எழுதித்தந்துவிடுவார். பின் அதை மறவாமல் காப்புரிமையும் பெற்றுவிடுவார். அதை வாசிக்கும் தயாரிப்புத் தரப்புக்கு அந்தக் கதை பிடித்திருந்தால், அதை நேர்மையுடன் அங்கீகரித்து அணுகி ஸ்க்ரிப்டை முதலில் வாங்குவார்கள். ஸ்கிரிப்டைத் தர எழுத்தாளர் முன்வரவில்லை என்றால் தயாரிப்புத் தரப்பால் ஒன்றும் செய்ய இயலாது. அவன் முன்வருகிறார் என்றால், அவரைக் கொண்டே கதையில் தேவையான அம்சங்களை எழுதி வாங்கிப் படமாக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் 'Parallel thought' என்று வருபவரும் முன்னவரின் கதையைப் படிக்காமலேயே, வேறு யாருடனும் விவாதிக்காமலேயே, தானாக ஒரு கதையை எழுதுகிறார். பின் அதைத் தன் பெயரில் பதிவு செய்கிறார். இப்போது ஒரே கதை, இரண்டு பெயர்களில் இரண்டு காலகட்டத்தில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் பின்னவருக்கே திரை வாய்ப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து, முன்னவரின் படைப்பை அறியாமலேயே பின்னவரின் கதை படமாக்கப்படுகிறது. ஆனால், திரைக்கு வருகையில் முன்னவரின் உழைப்பு கவனத்துக்கு வருகிறது. Parallel Thought!

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால்,
1. முன்னவரும் சரி, பின்னவரும் சரி... ஒற்றை ஆள் தான். ஒற்றை மனிதனின் படைப்பாக்கம் தான்.

ஆனால் தமிழ் திரையுலகில் இது வேறு. இங்கே ஸ்க்ரிப்டை ஒருவர் முழுவதுமாக எழுதுவதில்லை. ஆறேழு பேர் சேர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதத்தில் ஐடியாக்கள் சகட்டுமேனிக்கு பகிரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஐடியாவைப் பற்றி அதற்கு முன் கேள்வியே பட்டிராத ஒருவர் அந்த ஐடியாவைக் கேட்டுவிட்டு, அதன் அடுத்தகட்டத்தை தன் கற்பனையால் வளர்க்க முனைவார். இப்படிக் கூட்டாஞ்சோறாகக் கிடைக்கும் பற்பல ஐடியாக்களில் சிலவற்றைக் கொண்டு ஒரு துவக்கம், ஒரு முடிவு, இடைப்பட்டு சில சீன்கள் என்று கதை உருவாகிறது. இந்தக் கதையை ஒருவர் தன் பெயரில் பதிந்துவிடுவார்.

இதில் திருட்டு நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இந்த கதை விவாதத்தில் பங்கேற்ற ஆறேழு பேர் வேறு கதை விவாதங்களிலும் பங்கேற்பார்கள். அங்கும் இதே ஐடியாக்களைப் பகிர்வார்கள். இந்த ஐடியாக்களும் இணையத்தில் வாசிக்க இலவசமாகக் கிடைக்கும் சிறுகதைகள், நாவல்களிலிருந்தே அந்தந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே உருவப்படும் ஐடியாக்கள் தான். ஒரே ஐடியாக்கள் பற்பல கதைகளில் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறுபாடாடையும். ஒன்றில் சாவி இருக்கும் இடத்தை விரல்களால் அளப்பது ரஜினி என்றால், இன்னொன்றில், ஒரு பெண் அதைச் செய்வார். இரண்டுமே ஒன்று தான்.

ஆக, கதையை ஒரே ஒருவர் சுயமாக எழுதி, காப்புரிமை வாங்கியிருந்தால் ஒழிய அதைக் 'Parallel Thought' என்று சொல்வதற்கில்லை. கதைத்திருட்டு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

லிங்கா ஒரு தனி நபர் கதை அல்ல. தனி நபர்க் கதையல்லாத எல்லாக் கதைகளும் திருட்டுக் கதைகளே என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், எதுவுமே எவரின் உள்ளீடுமற்ற ஒரே ஒருவரின் சொந்தக் கற்பனை அல்ல.

plagarism என்பது ஒரு நோய். அறிவுச்சொத்தை மலினமாக்குவது, திருட்டுக்கு வேறு அடையாளம் தருவது என்று எல்லாமுமே மனிதத்தை, மானுடத்தை நாங்கைந்து படிகள் கீழே தள்ளிவிடக்கூடியவைகளே.

ஒரு கதாசிரியனுக்கு இந்த கடமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அதே நேரம், அடுத்தவர் ஐடியாவைத் திருடித்தான் ஒரு கதை செய்ய முடியும் என்பதே அந்தக் கதாசிரியனின் படைப்பூக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது போலத்தான். ஒரு கதாசிரியன், தனக்கு தேவைப்படுவதான ஒரு கதையைத் தானாகவே எவருடைய உள்ளீடும் இல்லாமல் உருவாக்கிவிட முடியவேண்டும். அப்படியே, அகஸ்மாத்தாக, அவன் எழுதிய கதை வேறொருவருடைய கதையை ஒத்து அமைந்துவிடினும் (தற்செயலாக), அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் அடுத்த படைப்பிலேயே அப்படி ஒரு பிரச்சனை எழாத ஒரு கதையைத் தரக்கூடிய வல்லமையை நிரூபிக்க வேண்டும். இது முடியக்கூடியவர்கள் தங்களை கதாசிரியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: lets face it. வராத ஒரு திறனை, வலிந்து தனக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன?

நிறைய பேர் நிறைய எழுதுகிறார்கள். பத்திரிக்கைகளை அண்டுகிறார்கள். எந்தப் பத்திரிக்கையும் அந்த ஆக்கத்தைத் தேர்வு செய்யாத பட்சத்தில் உடனே கிண்டிலில் வெளியிட்டுவிட்டு, அவர்களுக்கு அவர்களே கதாசிரிய பட்டம் கொடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், தங்கள் எழுத்தை வெளியிட்டுக்கொள்ள பத்திரிக்கைகளைத் தாங்களே உருவாக்குவதும் நடக்கிறது. ஏன்? எதற்கு என்பது கேள்வி.

ஒரு கதாசிரியன் எப்படிக் கேட்டாலும் கதை எழுத வேண்டும். அவன் கையாலும் உத்திகளிலும், தேர்வு செய்யும் தலைப்புகளிலும் அவனுக்கான ஸ்டைல் இருக்கலாம். இசைக்கு இளையராஜா, ARR என்று துருவங்கள் இருப்பது போல. அவ்விதம் எழுதத்தெரியாதவர்கள் ஒரு வருடம் முயன்று பார்க்கலாம். அப்படியும் வரவில்லை என்றால் விட்டுவிடலாம். எதற்காக வலிந்து எதையாவது எழுதி கிண்டிலில் வெளியிட்டு, வலிந்து தன்னை ஒரு கதாசிரிய பிம்பத்துக்குள் திணித்துக்கொள்ள வேண்டும், தனக்கு ஆமாம் சாமி போடக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னைச்சுற்றி எப்போதும் இருத்திக்கொண்டே வளைய வர வேண்டும், என்பதே கேள்வி.

கதாசிரிய இடம் என்பது அப்படி ஒன்றும் 'கதி மோட்சம்' அடையே வேண்டிய இலக்கு இல்லை. இந்த உலகில் எத்தனையோ திறமைகள். அதில் அதுவும் ஒன்று. அது ஒருவருக்கு நிச்சயமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. இல்லாவிட்டால் அதில் எந்தக் கீழ்மையும் இல்லை.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உள்ள எல்லா கீழ்மைகளுக்கும் அடித்தளம், தவறானவர்கள், சரியான இடத்திற்கு சென்று சேர்ந்துவிடுவதே. சமூகத்துக்கு அறிவு சொல்லும் இடத்திலிருப்பவர்களே, இதைச்செய்வது ................................................................

வேறொன்றும் சொல்வதற்கில்லை.

Sunday, 29 November 2020

புராதன ஏலியன்கள் - குறு நாவல்


மீண்டும் ஒரு அறிவியல் புனைவுக் குறு நாவலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேற்குலகில் இலக்கிய நாயகர்களை வைத்து அறிவியல் புனைவாக கதை சொல்வதில் 'Avengers' ஒரு மாபெரும் படைப்பு. அது போல் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த 'புராதன ஏலியன்கள்' கதைக்கு உந்து விசை எனலாம். 

இந்தக் குறு நாவலின் அத்தியாயங்களில் வரும் வாதங்கள், நிகழ்வுகள் வாசகர்களுக்கு சற்று அதிர்ச்சியைத் தரலாம் என்பது என் ஊகம். 

இதற்கு என் பதில்: எல்லா ஹாலிவுட் அறிவியல் புனைக்கதைகளிலும் சொல்லப்படும் கருத்தாக்கங்களே உலகிற்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அதை அப்படியே காப்பி அடிக்காமல் புதிதாக எதையேனும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இந்தக் குறு நாவல் இவ்விதம் முடிந்தத்தற்கு ஒரே காரணம். இந்த அறம் நிறைந்த காரணத்தை வாசகர்கள் ஏற்றுக்கொண்டு அதரிப்பார்கள் என்று நம்புகிறேன். 

புதிய கருத்தாக்கத்தை செயல்படுத்துவதன் மூலம் திணிப்பது ஒரு விதமான வன்முறை. அதே புதிய கருத்தாக்கத்தை, சமூக விவாத செயல்பாடுகளுக்கென, அறிவுசார் தளத்தின் பார்வைக்கு பொதுவில் வைப்பது ஒரு Socio-friendly அணுகுமுறை என்பது என் வாதம். அப்படித்தான் இந்த வாதங்கள் இந்தக் குறு நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இந்த வாதங்களை, அறிவுத்தளத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு வாசகர்களையும், நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் தான் நானும் என்பதையும் இங்கே தெளிவுற பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். நன்றி.

கிண்டில் நூலை வாசிக்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

புராதன ஏலியன்கள்

https://www.amazon.com/dp/B08P63QM35


கிண்டிலும் உள்ள எனது இதர நூல்கள் இங்கே


காதல் சோலை - கவிதைக்கிறுக்கல்கள்

https://www.amazon.com/dp/B089454W6X


கதாவனம் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B089Q2XXSR


அட்சயபாத்திரா - நாவல்

https://www.amazon.com/dp/B08F6DFZHM


ஹென்றியின் டைரியில் கிடைத்த கதைகள் - சிறுகதைத் தொகுதி

https://www.amazon.com/dp/B08BP1V4DP


குறுங்கதைகள்

https://www.amazon.com/dp/B089KQ2MM3


குற்றக்கதைகள்

https://www.amazon.com/dp/B089S9K16F


உங்கள் எண் என்ன - கணித நாவல்

https://www.amazon.com/dp/B08CSWC988

Tuesday, 24 November 2020

சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்'

 சொல்வனம் 235வது இதழில் எனது சிறுகதை 'காதல்' வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

அன்னை வயலட் கலை, அறிவியல் கல்லூரி - பன்னாட்டு கருத்தரங்கம்

 சென்னை மேனாம்பேட்டில் அமைந்துள்ள, அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் "உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது.

வரும் நவம்பர் 27, 28 திகதிகளில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இலண்டன், கொழும்பு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரையாளர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா சார்பில் நான் பங்கேற்கிறேன். "அமெரிக்கத் தமிழ் எழுத்துகளில் அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
என் தந்தை திரு.ரங்கசாமி அவர்கள் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. ஒரு கட்டட பொறியாளர். தமிழக அரசாங்கத்தில் பொதுப்பணித்துறையில் சுமார் முப்பத்தி ஐந்து வருடம் எவ்விதக்குறையும் இன்றி வேலை பார்த்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு அக்கம்பக்கத்து பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கிறார். அவரிடம் சுமார் ஐம்பது முதல் அறுபது பேர் படிக்கிறார்கள். இந்த மாணவர்களில் பலருடைய நெருக்கமான சொந்தத்திலிருந்தும், நட்புறவிலிருந்தும் அனேகம் பேர் இந்தக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் வகுப்புகள் படிப்பதாக, டியூஷனுக்கு வரும் பிள்ளைகள் மூலம் முதன் முதலில் பரிச்சயமான இந்தக் கல்லூரியில் தற்போது உரையாற்ற இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
"அமெரிக்கத் தமிழ் எழுத்துக்களில் அறிவியல்" என்பதுதான் தலைப்பு. தமிழாசிரிகளை விடவும் 'தமிழ் எழுத்துக்களில் அறிவியல்' குறித்து நாமென்ன விஸ்தீரணமாகப் பேசிவிட முடியும்? 'கல்லூரிக்குப் பிறகு என்ன?' என்பதே மாணவர்களின் ஆர்வமாக இருக்கும் என்பது என் ஊகம். ஆதலால், என் சிற்றுரையை முடித்துவிட்ட பிறகு மாணவர்களிடமிருந்தே கேள்விகளைப் பெற்று அதற்கேற்றார்போல் பதிலளிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எப்படியாகினும், மாணவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள நாம் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் கேள்வி பதிலாக நிகழ்வை நகர்த்திச் செல்ல முயல்வதன் நோக்கம். பார்க்கலாம்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய S2S நிறுவனர் திரு.இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





Monday, 2 November 2020

கவிதைப்போட்டி - நடுவர் - திரு ஏகம்பவாணன் அவர்கள்

பல்வேறு காலகட்டங்களில் பல திரைப்படங்களை என் உறவுக்கூட்டத்தில் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். சிலாகித்திருக்கிறோம். சின்னப்பிள்ளையாக இருந்து கேபிளிலில் பார்த்துப் பழகிய திரைப்படங்கள் அவைகள். அப்படி நாங்கள் பார்த்த பல படங்களின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் திடீரென உள்பெட்டியில் அணுகினால் எப்படி இருக்கும்? 

அப்படித்தான் இருந்தது திரைப்பட இயக்குநர்கள் சங்க இணைச்செயலாளரும், இணை இயக்குநரும், வசனகர்த்தாவுமான திரு.ஏகம்பவாணன் அவர்கள் முக நூலில் அணுகி தான் நடத்தும் கவிதை குழுவிற்கு 'நீங்கள் நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்து தர வேண்டுகிறேன்'  என்றபோது. 

ஒரு மனிதர் இத்தனைத் திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா? ஆச்சர்யம் தான். உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். சினிமா உலகில் பல திரைப்படங்களில், பல்லாண்டுகளாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கும் ஒருவருடன், இணையக் கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கொள்கிறேன். வாய்ப்பளித்த திரு.ஏகம்பவாணன் அவர்களுக்கு எனது நன்றிகளும், அன்பும்.