Thursday, 19 October 2017

தீபாவளி நாளில் ஜெயா ப்ளஸ் சானலில் எனது நூல்

ஜெயா ப்ளஸ் சானலில் தீபாவளி திருநாளான 18 அக்டோபர் 2017 தேதியில் காலை 9 மணிக்கு சற்று முன்னதாக "நூல் நயம்" பகுதியில் எனது நாவல் "உங்கள் எண் என்ன?"  குறித்து சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு ஒளிபரப்பட்டது.

https://www.youtube.com/watch?v=8H9dkQZQBkc


"நூல் நயம்" பகுதியில் ஒளிபரப்ப எனது நூலை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


video

Monday, 16 October 2017

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் எனது நூல்

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் எனது நூல்

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நாளை அல்லது தீபாவளித்திருநாள் அன்று காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் "நூல் நயம்" நிகழ்ச்சியில் எனது நூல் "உங்கள் எண் என்ன?" குறித்து பேச இருக்கிறார்கள். நண்பர்கள் யாரேனும் அந்த தொலைக்காட்சி நிகழ்வை வீடியோ எடுத்து அனுப்ப இயலுமா


Wednesday, 11 October 2017

இரண்டு விரல்கள் - தினமலர்

கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேரும் தினமலர் நாளிதழில் "இரண்டு விரல்கள்" நூல் குறித்த குறிப்புகள் "பிடித்தவை" பகுதியில் வெளியாகியிருக்கின்றன.

எனது நூலுக்கு ஐந்துக்கு நான்கு மதிப்பீடு வழங்கியுள்ள தினமலர் நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, 29 September 2017

எழுத்தாளர்கள் எல்லாம் தெரிந்தவர்களா?

எழுத்தாளர்கள் எல்லாம் தெரிந்தவர்களா?


ஆனால் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகிக்கத்தோன்றுகிறது. இன்னொரு பெரிய சந்தேகம் என்னவெனில் இந்த பிம்பம் உருவாக்கப்படுவது எழுத்தாளராலா? அல்லது வாசகனாலா ? என்பதுதான்..

லீவு விட்டால் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு சில எழுத்தாளர்கள் குவார்ட்டருடன் துவங்கலாம் என்று பதிவிட்டிருந்தததை காண நேர்ந்தது.
உண்மையிலேயே இலக்கிய உலகிலும், சினிமா உலகிலும் லீவு நாட்கள் அப்படித்தான் கடத்தப்படுகின்றன. அவ்வாறான கூட்டங்களில் கவிஞர்கள் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக்கொள்வதும் நடக்கிறது. குவார்டரில் என்ன சந்தோஷம், நிம்மதி இருக்க முடியும்? இது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. சற்றேரக்குரைய நகரின் அத்தனை சந்து பொந்துகளிலெல்லாம் பயல்கள் இதையே தான் சொல்கிறான்கள். எனக்கெல்லாம் பித்த உடம்பு. அருந்தும் காப்பியில் டிகாக்ஷன் கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தியானாலும் நான் மட்டைதான். நான் எங்கே இதையெல்லாம் முயற்சிப்பது.

பெரும்பான்மை மனிதர்களின் பொதுவான பொழுதுபோக்கு என்ன விதமானது என்பதையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் மூன்று நூல்கள் எழுதியிருக்கிறேன்.

எனக்கென்னமோ எழுத்தாளர்களை விட வாசகனும், வாசகனைவிட புத்தகத்தையே கையில் தொடாத மனிதர்களும் அதிகம் தெரிந்து வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. சிக்கல் என்னவென்றால், இந்த அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள், சில காரியங்களை தாங்களாகவே செய்துவிட்டால், எழுத்தாளனாவது, சிந்தனையாளனாவது ஒரு மண்ணாங்கட்டியும் தேவை இல்லை.

அந்த சில காரியங்கள்: ஜாதி பேதம் பார்க்காமலிருப்பது, பொருளாதாரத்தை மையப்படுத்தி இயங்குவது, மற்றவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுதல், எட்ஸெட்ரா...எட்ஸெட்ரா....

இதை பொது ஜனம் செய்துவிட்டால், எழுத்தாளன் காணாமல் போய்விடுவான் அல்லது கதைகளை மட்டும் எழுதிவிட்டு காசு சம்பாதித்துவிட்டு போய்விடுவான் என்றே நினைக்கிறேன். இலக்கியம் என்பதை எளிமையாக விளக்கு என்று யாரேனும் கேட்டால், "பொதுஜனம் உணராத ஒன்றின் தேவையை பொதுஜனத்துக்கு உணர்த்த உருவாக்கப்படும் ஆவணம்" என்கிற வரி பொருத்தமாக இருக்கலாம்.

சிலரெல்லாம் இருக்கிறார்கள். வாசகர் வட்டமெல்லாம் வைத்து ஜகஜோதியாக மேனேஜ்.- இல்லையில்லை... சரியான தமிழ் வார்த்தை - மெயின்டெயின்.... மெயின்டெயின்  செய்துகொண்டிருக்கிறார்கள். கூட்டங்களில் பேசுகிறார்கள். இதை சொல்ல வேண்டும். நீங்கள் தமிழில் நடைபெறும் இலக்கிய, கவிதை கூட்டங்களுக்கு போயிருக்கிறீர்களா? அது ஒரு டார்ச்சர்.

புத்தகக்கண்காட்சியில் நடக்கும் கவிதை கூட்டங்கள் வேடிக்கையானவை. கூட்டம் துவங்கும் முன் பேச்சாளரே புத்தக அரங்கில் வந்து வலுக்கட்டாயமாக நட்பை காரணம் காட்டி இழுத்துச்சென்றுவிடுவார். சரி, நம் போல நிறைய பேர் இருப்பார்கள் என்று நினைத்து போனால், நான்கே நான்கு பேர் இருப்பார்கள் ஐந்தாவதாக நாம் போய் அமர்வோம். நல்ல வேளை. என் வீட்டிலிருந்து யாரும் புத்தக வெளியீட்டு விழாவுக்கோ, கூட்டங்களுக்கோ வருவதில்லை.

எனக்கு இதெல்லாம் சிக்கலில்லை. ஏனெனில் நான் தமிழ் நாட்டிலேயே இல்லை. அதனால் கூட்டங்கள், இலக்கிய சண்டை என எதிலும் பங்கேற்பதில்லை. அங்கே நடந்த சண்டையைப் பற்றி முக நூலில் யாரேனும் எழுதுவார்கள். அதை வாசிப்பதோடு சரி.

எழுத்தாளன் பெரிய பு...கி எல்லாம் கிடையாது.  எல்லாமும் தெரிந்தவன் இறைவன் மட்டுமே.

எழுத்து என்பது ஒரு விதமான திறன். அவ்வளவுதான். சில நேரங்களில் ஒரு வரியாவது எதையேனும் எழுதிவிட கை பரபரக்கும். இந்த பரபரப்பு தான் "எழுத்து" என்பது. சிலருக்கு கிரிக்கெட் மட்டையை பிடித்து ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பவில்லை என்றால் எதையோ இழந்தது போலிருக்கும். சிலருக்கு ஒரு தூரிகை பிடித்து ஒரு கோடாவது இழுக்க வில்லை என்றால் என்னவோ போலிருக்கும். திறன் என்று தான் அடையாளப்படுத்த வேண்டி இருக்கிறது. அதைத்தாண்டி எழுத்து என்பதில் பெரிய தில்லாலங்கடி வேலை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, சப்பாத்தி, சால்னா என்று தெரிந்த தக்காளி, அரிசி, கோதுமை, வெங்காயத்தையே விதம் விதமாக செய்து பார்க்கும் அதே திறன் தான் தெரிந்த வார்த்தைகளையே ஓ ஹென்றித்தனமான கதைகள், புனைவு, மெடா ஃபிக்ஷன், சரித்திரம் என்று விதம் விதமாக எழுத தெரிவது என்பது.

சமையல் போல, விளையாட்டு போல, எழுத்து நேரத்தை விழுங்குகிறது.  உலகை வெவ்வேறு கோணங்களில் பார்க்க உதவுகிறது. அதன் மூலமாக 60 வருட வாழ்வை ஒரு குடத்தில் நீர் ஊற்றி நிரைப்பது போல, சிந்தனைகளால் நிரைக்க உதவுகிறது. என் வரையில், என் எழுத்து மூலமாக நான் கண்ட பலன் இதுவே.

மற்றபடி, மூன்று நூல்கள் எழுதியும் எனக்கு எதுவுமே தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை..

Thursday, 28 September 2017

ஒழுக்கம் - 1

ஒழுக்கம்  - 1


ஒழுக்கம் என்பது என்ன?

எனக்கு தெரிந்து பலர் இருக்கிறார்கள். தினம் கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பிட்ட கிழமைகளில் கவிச்சி என்ன வெங்காயம் கூட சேர்க்கமாட்டார்கள். ஜாதி பார்ப்பார்கள். கேட்டால் பரிசுத்தம், தூய்மை, ஒழுங்கு என்பார்கள். மிக மிக சுய நலவாதிகளாக இருப்பார்கள். லாபமில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் மேல் எதிர்பாலினத்திற்கு ஈர்ப்பெல்லாம் இருக்காது. அதனாலேயே இவர்கள் துணையின்றி இருப்பார்கள் அல்லது இருக்கும் துணையும் தாமரை இலை தண்ணீர் போல் ஒரு ஒட்டுதல் இன்றி இருக்கும். இவர்களுக்கெல்லாம் கல்யாணம் என்ற ஒன்று ஆகிவிடுவதாலேயே முழுமையான மனிதன் என்கிற நினைப்பு இருக்கும். "கலாச்சார பாதுகாவல்" வேலையெல்லாம் செய்வார்கள். பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும், விதவை பெண்கள் தெருவில் நடமாடலாமா , கூடாதா, மொபைல் ஃபோன் பெண்களுக்கு தேவையா? என்றெல்லாம் சுற்றியிருக்கும் பெண்களை டார்ச்சர் செய்வார்கள். இவர்கள் பெரும்பாலும் மது அருந்துவார்கள். கேட்டால் மது அருந்துவதே கலாச்சாரம் என்பார்கள். மது அருந்தாதவனெல்லாம் நல்லவன் இல்லை என்று வியாக்யானம் பேசுவார்கள்.இப்போது இவர்களை ஒழுக்கமானவர்கள் எனலாமா?

இன்னொரு வகை இருக்கிறார்கள். அளவாக சாப்பிடுவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். கோயிலுக்கும் செல்வார்கள். நிறைய புத்தகம் படிப்பார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் இருப்பார்கள். இவர்களது அதீத பர்ஃபெக்ஷனால் ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள் நடக்கும். வெற்றியாளர்களாக இருப்பார்கள். அதனால்  இவர்களுக்கு எதிர்பாலினத்திடம் ஈர்ப்பு இருக்கும். பல சமயங்களில் அது உடலுறவாகக்கூட இருந்துவிடும். ஆனால் யோசித்துப்பார்த்தால் அது முழுக்க முழுக்க இரு தரப்பும் விரும்பி, ஒருவரையொருவர் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இணைப்பாக‌ இருக்கும். இப்போது இந்த‌ ஒற்றை காரணத்திற்காய் இவர்களை ஒழுக்கம் கெட்டவரகள் என்று சொல்லிவிடலாமா?

அப்படியென்றால் ஒழுக்கம் என்றால் என்ன?
இந்த இரண்டில் எந்த வகையான ஒழுக்கம் ஒரு சமூகத்திற்கு நன்மை பயக்கும்?

கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழைவதைக்குறித்து இணையத்தில் அவதூராக நிறைய பதிவிடுகிறார்கள். அவர் பல பெண்களுடன் இருந்தவராம். அதனால் அவர் தலைவருக்கான தகுதி இல்லாதவராம்.

தெரியவில்லை. அது என் பிரச்சனை இல்லை.

ஆனால் ஒழுக்கம் என்பது என்ன? எந்த ஒழுக்கம் நமக்கு தேவை?

நடிகர்கள் பலர் திரைக்கு பின்னால் இயங்கும் விதம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கப்படவே கேள்விப்படுகிறோம். ஆனாலும் பெண்களுக்கு அவர்களை பிடிக்கிறது. ஏன்? அவர்கள் இரண்டாம் வகையினர். திறமைகள், உழைப்பு, அர்ப்பணிப்பு, அறிவு சார் செயல்பாடுகள் என்று அவர்கள் தனித்து தெரிகிறார்கள். எதிர்பாலினத்தின் ஈர்ப்பை சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

ஒருமுறை அர்விந்தசாமி, க்ரோர்பதியில் 20 தொடர்பற்ற பொருட்களை சொல்லச்சொல்லி நினைவில் வைத்திருந்து பின் கேட்கும்போது சொன்னார். அது ஒரு விதமான மூளை விளையாட்டு. அந்த திறமை பிடித்திருந்தது. ஆணாக எனக்கே அவரை பிடித்திருந்ததென்றால் பெண்களை கேட்கவா வேண்டும்?

வேறு விதமாய் யோசித்து பார்க்கலாம். இப்போதெல்லாம் பெண் விடுதலை குறித்த குரல்க‌ள் உக்கிரமாக ஆண்கள் தரப்பிலிருந்தே வெளிப்படுகிறது. அவைகள் எல்லாமும் உண்மையான‌ நோக்கமுடன் கூடிய குரல்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.அந்த குரல்களில் கணிசமானது பெண் உடலை போகப்பொருளாக்கி துய்க்கும் நோக்கமுடையது. பெண் உடல் கிடைக்கவேண்டுமென்றால் அவர்களை குடும்பம் என்னும் அரணிலிருந்து வெளியே இழுக்க வேண்டும். அந்த நோக்கிலேயே பெண் விடுதலை குரல்கள் பல கயவாளிகளால் ஒலிக்கவிடப்படுகிறது. இது புரியாமல், பெண்க‌ள் அவர்களை சப்போர்ட் செய்யும் அவலமும் இங்கே நிறைய நடப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

 உண்மையான நோக்கமுடன் குரல் தருபவர்கள், பிரச்சனையை ஆழ்ந்து புரிந்தவர்களாக இருப்பார்கள். பிரச்சனைக்கான அவர்களின் தீர்வுகள் தட்டையாக, "அவன் செய்தால் நீயும் செய்" என்பதாக இருக்காது.

துரதிருஷ்டம் என்னவெனில், குடும்பம் என்னும் அமைப்பில் சிக்குண்டு உழலும் பெண்கள், இப்படியான பொய் நோக்கமுடன் அலையும் காமுகர்களின் வார்த்தைகளிளேயே தடுமாறி, தடம்மாறி போய்விடுகிறார்கள். ஏனெனில் அவர்களை சிறை வைத்திருக்கும் அந்த அமைப்பு, அந்த காமுகர்களின் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை சோதித்து பார்க்கும் அவகாசத்தையோ, சுதந்திரத்தையோ வழங்குவதில்லை. இன்னொருவிதமாக சொல்லவேண்டுமானால், கிடைத்த சின்ன இடைவெளியை பயன்படுத்திக்கொள்பவர்களாக காமுகர்களின் எண்ணிக்கை இருக்கிறது எனலாம்.

பெண் சுதந்திரத்தை தன் படைப்பெங்கும் இழைய விடும், பெண் சுதந்திரத்திற்கென பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் பெண் கவிஞர் ஒருவர் " சுதந்திரத்தை பாடுபட்டு அடையும் முனைப்பில் இயங்கும் பெண்கள் அந்த இயக்கத்திலேயே தங்களை, தங்கள் இருப்பை தொலைத்து விடுகிறார்கள். இறுதியில், அப்படியாக அடையும் சுதந்திரம் சூன்யமாகிவிடுகிறது" என்று சொல்லவும் கேள்விப்படுகிறோம்.


எதையோ பேசத்துவங்கி எங்கோ வந்துவிட்டேன் பாருங்கள்.

ஒழுக்கத்தின் விளைவுகள் விரும்பப்படுகின்றன. அதன் பக்கவிளைவுகளால் ஒழுக்கத்தின் இருப்பை காலி செய்ய முடிந்ததில்லை. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். பெயர்களை சொல்ல வேண்டி இருக்கும். எதற்கு வம்பு.
உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை போன்றவைகளால் இயங்குபவர்களுக்கு எதிர்பாலின உறவுகள் கடந்து போகும் மேகத்தை ஒத்ததாகவே இருக்கிறது. நிரந்தரமாக அவர்களிடம் இருப்பது அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் , திறமைகளுமே.

Sunday, 24 September 2017

எப்படி எழுதத்துவங்கினீர்கள்?

எப்படி எழுதத்துவங்கினீர்கள்? - 1

சமீபமாக இந்த கேள்வியை அதிகம் கடந்து போகிறேன்.

2008ல் டி.சி.எஸ் நிறுவனத்துக்காக துரைப்பாக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். வீடு அம்பத்தூரில். தினமும் டி.சி.எஸ் பேருந்து வரும்.  அப்போது ஓஎம் ஆர் சாலை இப்போதுபோல் நவீனத்துவப்படவில்லை. கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது. ஆகையால் இரண்டு மணி நேரமாகிவிடும் பேருந்து பயணம். காலை மாலை என மொத்தம் நான்கு மணி நேரங்கள்.

நான் தெரிந்த முகங்கள் இல்லையென்றால் யாரிடமும் சட்டென பேச மாட்டேன் அப்போதெல்லாம். நான்கு மணி நேரங்களை என்ன செய்வது? தூக்கம் வராது. அப்போது தோன்றியதையெல்லாம் கிறுக்க ஆரம்பித்தேன். அப்போது அதெல்லாம் வெறும் கிறுக்கல்களே. ஒன்றிரண்டை கூடல்.காம் என்றொரு தளத்திற்கு அனுப்பினேன். அதில் வலையேற்றினார்கள். முதல் வலையேற்றம். ஜிவ்வென்றாகிவிட்டது.

அந்த நேரம் லண்டனுக்கு பயணப்பட்டேன். 2009 புது வருடத்தில் பிள்ளையார் சுழி. வார்ப்பு, கூடல், என்று சில தளங்களில் சில கிறுக்கல்கள் வெளியாயின.

லண்டன் ப்ராஜெக்ட் முடிய, அங்கிருந்த சில மேனேஜர்கள் வில்லத்தனம் செய்து வேறொருவருக்கான என் இடத்தை காலி செய்துவிட்டனர். பெட்டி கட்டிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். ஆனால், வேறொரு ப்ராஜெக்டுக்காக ஸ்காட்லாந்து அழைத்தார்கள். அங்கே என்னைத்தவிர தமிழர்களே இல்லை. பெரும்பாலும் தெலுங்குக்காரர்கள் தான். என்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

தனிமை. தனிமை. தனிமை.

தனிமையில் புத்தியை கண்டதன் மேலும் அலையவிடாமல், ஃபோகஸ் செய்ய கிறுக்கல்கள் உதவின. கீற்று, திண்ணை, பதிவுகள், உயிர்மையின் உயிரோசை, என்று கண்ணில் பட்ட அத்தனை தளத்திலும் கவிதைகள் வெளியாயின. 2009 செப்டம்பரில் முதல் சிறுகதை கீற்றில் வெளியானது. அதன் பிறகு அலுவலக வேலை நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் கவிதைகளும், சிறுகதைகளும்.

எழுத யாரும் கற்றுத்தரவில்லை. இணையத்தில் வாசிக்க வேண்டியது, பின் எழுத வேண்டியது. இப்படித்தான் எழுத்து பழக்கப்பட்டது.

2010 ல் இந்தியா திரும்பி வந்தபோது உயிர்மையின் உயிரோசையில் பல நண்பர்களுடன் எழுதிக்கொண்டிருந்தேன்.

"இப்படி எழுது, இப்படி எழுதாதே, இதை எழுது, இதை தொடாதே" என்றெல்லாம் சொல்லித்தர எவருமில்லை. "சோதனை செய்தல்-பிழையிலிருந்து கற்றல்" என்கிற ரீதியிலேயே தொடர்ந்தேன். வேறொரு நிறுவனம் மாறியபோது நாவல் எழுத தோன்றி 2011 செப்டம்பரில் எழுதி முடித்தேன். அது 2012 துவக்கத்தில் தேவியின் கண்மணியில் வெளியானது. சமூக நாவல் தான். நேரடியாக புத்தகமாக வெளியாகியிருக்கவேண்டும். விவரம் தெரியவில்லை.

இப்போதும் அப்படித்தான். 2014ல் அமெரிக்கா வந்தேன். வந்ததிலிருந்து தனிமை. அதிகம் நண்பர்கள் இல்லை.

தனிமை. தனிமை. தனிமை.

கவனச்சிதறல் இன்றி ஃபோகஸ் செய்ய எழுத்து உதவுகிறது. 2015 - 2016 டிசம்பர் முடிய இரண்டு நாவல் எழுதினேன். எனக்கே பிடிக்கவில்லை. அப்படியே வைத்துவிட்டேன். 2016 ஜனவரி - 2016 டிசம்பர் காலத்தில் தனிமையை இட்டு நிரப்பிக்கொள்ள எழுதிய நாவல் தான் "உங்கள் எண் என்ன?". அதோடு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும்.

ஸ்டாம்பிங் செய்ய இந்தியா வந்தபோது, பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷனுக்காக சென்னையில் இருக்க நேர்ந்த காலத்தை நூலாக வெளியிட கிடைத்த வாய்ப்பாக பயண்படுத்திக்கொண்டேன். 2017 ஜனவரியில் அமெரிக்கா திரும்பிவிட்ட பிறகு இருந்த தனிமையை இட்டு நிரப்பிக்கொள்ள எழுதிய நாவல் "இரண்டு விரல்கள்".

இப்படி தனிமையை இட்டு நிரப்பிக்கொள்ள உருவானவைகள் தான் எனது நாவல்கள். நூல்கள். இப்போது யோசித்தால் இந்த மூன்று புத்தகங்கள் உருவாகவே என்னை இயறகையே தனிமையில் இருக்க வைத்திருக்கிறதோ என்றும் கூட அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. எது உண்மை என்று யாருக்கு தெரியும்? எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.

என் வரையில், திருமணமாகிவிடாத இந்த காலகட்டத்தை, பேச்சிலராக இருக்க கிடைத்த இந்த காலத்தை நான் உருப்படியாக பயன்படுத்திக்கொண்டேன்.  ஐந்து - பத்து வருடங்களுக்கு பிறகு நினைவு படுத்திப்பார்க்குங்கால் "இந்த கால கட்டத்தில் ஒன்றுமே செய்யவில்லை, வீணாக போய்விட்டது" என்கிற எண்ணம் எனக்கு வந்துவிடக்கூடாது என்றே இவ்விதம் இயங்கியிருக்கிறேன். நான் அவ்விதமெல்லாம் சிந்திப்பவன் தான். அதனாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

2014 - 2017 தமிழில் இரண்டு புத்தகங்கள், ஆங்கிலத்தில் ஒரு மொழிபெயர்ப்பு. எண்ணற்ற கவிதைகள். இந்த உழைப்பு இந்த காலகட்டத்தில் எனது செயல்பாடுகளை இனி வரும் காலங்களில்  நியாயப்படுத்தும் என்று நம்புகிறேன்.   இந்த புத்தகங்களுக்கென மேற்கொண்ட வாசிப்புகள், தகவல் சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை பின்னெப்போதோ எதற்கோ மூலதனமாகலாம் என்பது எனது நம்பிக்கை.

Saturday, 23 September 2017

தரமணி - 3

தரமணி - 3

நம் சந்தோஷமான வாழ்க்கை நம் கையில் தான். அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

நீங்கள் ஒரு பெண். தினம் உடற்பயிற்சி செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்கள் உணவை நீங்களே தயாரித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள். அறிவை விருத்தி செய்யும் தொழில் உங்களுடையது.  சாகசங்கள் நிறைந்திருக்கிறது வாழ்க்கை. தினம் தினம் புதிது புதிதாக எதையேனும் கற்றுக்கொள்கிறீர்கள். சிந்தனை சுத்தமாக, அகலமாக விரிந்துகொண்டே போகிறது. நல்ல ஆடைகள் உடுத்திக்கொள்கிறீர்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்கள். இப்படி இருக்கும் உங்களை, ஒரு ஆணால் என்ன செய்துவிட முடியும்? இதே போல் ஆண்களுக்கும் சொல்லலாம்.

பொருந்தாத ஆணை நீங்கள் புறக்கணித்தால் வருந்த‌வேண்டியது அவன் தான். நீங்கள் அல்ல. அதேபோல,
பொருந்தாத பெண்ணை நீங்கள் புறக்கணித்தால் வருந்தவேண்டியது அவள் தான். நீங்கள் அல்ல.

நீங்கள் கடவுளின் செல்லப்பிள்ளை என்பதை, நீங்கள் இதுகாறும் சேர்த்து வைத்திருக்கும் நல்ல விஷயங்கள் உரத்துச்சொல்லிக்கொண்டே இருக்கும். இதை விட வேறென்ன வேண்டும்? மீண்டும் சொல்கிறேன். நம் சந்தோஷமான வாழ்க்கை முற்றிலும் நம் கையில் தான்.

ஆனால் இது எப்போது என்றால், பொருந்தாதவர்களை நாம் பிரிந்துவிடும்போதுதான். பிரியவில்லை எனில், சனியனை நம்மோடு சேர்த்துக்கொள்கிறோம் என்று பொருள். அந்த வகையில் ஆல்தியா தன் கணவனை பிரிதல் ஒரு அறிவுப்பூர்வமான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அதே ஆல்தியா, பிரபுவுடன் இணைவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. ஆல்தியாவையும் பிரபுவையும் பொருத்திப்பார்க்கலாம். ஆல்தியா திருமண முறிவுக்கு பிறகு, வேலைக்கு செல்கிறார். சுய சம்பாத்தியம். தீய பழக்கங்கள் எதையும் கைகொள்ளவில்லை. தன்னைத்தானே அழித்துக்கொள்ளவில்லை. தினம் ஒரு ஆணுடன் படுக்கை பகிரவில்லை. நேர்மையாக இருக்கிறார். அவர் வாழ்க்கை பிரச்சனைக்குரியதாய் இருப்பினும் அவரது ஆழ்மனம் நிம்மதியாய் இருக்கிறது. சந்தோஷமாய் இருக்கிறது. பூரணமாய் இருக்கிறது. பெரும்பாலும் அவள், பிறரது தவறுகளுக்காய் தான் அவஸ்தை படுகிறாளே ஒழிய அவளால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் பிரபு, ஆல்தியாவை பிரிந்தபிறகு அதிகம் குடிக்கிறான். கண்ட கண்ட பெண்களின் தனிமையை பயன்படுத்திக்கொள்கிறான். போலீஸால் பின் தொடரப்படுகிறான். ஒரு கொலைக்கு காரணமாகிறான். இத்தனை எதிர்மறையாய் செயல்படும் பிரபு பலரின் பிரச்சனைகளுக்கு காரணமாகிறான். இப்படிப்பட்ட ஒருவனது வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாகவும், நிச்சயமற்றதாகவும் தான் இருக்க முடியும்.

அப்படிப்பட்டவனை ஆல்தியா தன் வாழ்வோடு இணைத்துக்கொள்ளுதல் ஒரு சரியான முடிவாக எனக்கு படவில்லை. அது இருக்கும் நிம்மதியை குலைத்துக்கொள்வது போன்றது. பிரபு அப்பாவியாக இருக்கலாம். ஆனால், தெளிவற்றவன்.

ஆல்தியா பிரபுவை சேர்த்துக்கொள்வது, அவளுக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பதையே காட்டுவதாக எடுத்துக்கொள்கிறேன். இது சரியல்ல. ஆல்தியா போன்ற பெண்கள் நிறைவான , நிம்மதியான குடும்ப அமைப்புக்கு முழுவதும் தகுதியானவர்கள். அவர்களால் எப்போதும் எவருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது . அவர்கள் ஒன்றை பத்தாக்கக்கூடியவர்கள். பத்தை நூறாக்கக்கூடியவர்கள். மற்றவர்களே அவர்களுக்கு பிரச்சனை தருபவர்களாக அமைகிறார்கள்.

ஆனால் பொதுப்புத்தியில் விவாகரத்தான ஆணை, பெண்ணை ஒரு சமூகம் புறக்கணிக்கவே செய்கிறது. அந்த புறக்கணிப்புக்கு பயந்து தான் பல பெண்கள் ஒதுங்கிப்போகிறார்கள். வாய் மூடி மெளனிக்கிறார்கள். ஆனால் அது தீர்வல்ல. ஒரு புதிய பிரச்சனைக்கு திறவுகோல்.

எது வாய்மூட வைக்கிறதோ அதையே தான் இந்த சமூகமும் மூலதனமாக்குகிறது. புறக்கணிப்பை வாள் ஆக்கி பெண் மீது வீசுகிறது. பெண்கள் அதை எதிர்த்து வெளிவரவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும்.


தரமணி - 2

தரமணி - 2
ஆல்தியாவை நான் நல்ல பெண்களின் வரிசையில் வைக்க காரணமிருக்கிறது. ஆல்தியா சுய சம்பாத்தியத்தில் இயங்குகிறார். நேர்மையாக நடந்துகொள்கிறார். மகனுக்கு தாய் என்கிற பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்.  ஓவராக வழியும் மேனேஜரை புறக்கணித்துவிட்டு தன் வழியில் செல்கிறார்.  பணி இடங்களில் அனேகம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அவருக்கு அவருடைய மேனேஜரால் நேர்கையில் அதை முக நூலில் தைரியமாக வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறார். அந்த விதமான தைரியம் எல்லா பெண்களுக்கும் ஆண்களின் அத்துமீறலை எதிர்கொள்கையில் இருக்க வேண்டும்.

ஒரு ஓரினச்சேர்க்கையாளனை மன்னிப்பதை தவிர அவரிடம் வேறு குறைகளே இல்லை. ஆனால் நம்மை ஒருவர் வலிந்து ஏமாற்றுகையில் எதிர்ப்பு என்பது அத்தியாவசியமாக இருக்க வேண்டும்.. அது பிழைத்திருத்தலின் அடிப்படை. தவறான துணை என்று தெரிந்தும், மறுமணத்துக்கு பயந்து, சமூக அங்கீகாரத்திற்கு பயந்து, சகித்து வாழ்தல் என்பது, ஒரு தவறான செயலை ஊக்குவிப்பது அன்றி வேறில்லை. அப்படி செய்வது தவறுகள் மென்மேலும் பெருகவே வழி செய்யும். அந்த வகையில் ஆல்தியா என்னும் கேரக்டரை மிகவும் பிடித்திருக்கிறது.  பெண்கள் மறுமணங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.  அதைத்தான் செய்கிறார் ஆல்தியா.

ஆல்தியாவின் கேரக்டர் , இந்த காரணங்களுக்காய் எத்தனை பிடிக்கிறதோ அத்தனைக்கு போலீஸ்காரரின் மனைவியாக வரும் கதாபாத்திரம் வெறுப்பையே வரவழைக்கிறது. கணவன் சரியில்லை என்று தெரிந்தும் பிரியாமல் அதிலேயே உழன்று நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார். இதில் கணவனை வெறுப்பேற்ற தன் கேரக்டரையும் சேர்த்து சிதைத்துக்கொள்கிறார். கிட்டத்தட்ட  பொறுந்தாத துணியை எடுத்துவந்துவிட்டு, துணிக்கேற்ப உடல் சதைகளை வெட்டியெடுப்பது போல.

பொறுந்தாத கணவனுக்காக, துரோகம் செய்யும் கணவனுக்காக "கணவனே கண் கண்ட தெய்வம்" என்கிற ரீதியிலான அவரது அணுகுமுறை சுத்தமாக பிடிக்கவில்லை. தகுதியற்ற கணவர்களுக்கே "அர்ப்பணிப்பான மனைவி" என்றால் தகுதியுள்ள கணவனுக்கு? என்கிற கேள்வி எழுகிறது. அத்தனை புத்தகங்களையும், அத்தனை அறிவையும், அத்தனை அர்ப்பணிப்பையும் ஒரு தகுதியற்ற மிருகத்திற்கு அவர் வாழ் நாள் முழுவதும் தரத்துணிவதைப்பார்த்தால், சைக்கோத்தனத்தில் இது என்ன வகை என்று யோசனை வருகிறது. அதற்கு மேல், பிரபுவுடன் உறவு இருப்பதாக அவர் போடும் நாடகத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. பதிலுக்கு தகுதியற்ற கணவனை மூக்குடைப்பதாக கொள்ள வேண்டுமா? ஏன்? தகுதியற்ற கணவன் என்றால் பிரிந்துவிட வேண்டியதுதானே?

அவர் அறையில் ஏகத்துக்கும் புத்தகங்கள். அத்தனை புத்தகங்களும் ஒன்று சேர்ந்து இந்த அடிப்படை அறிவை க்கூடவா அவருக்கு தரவில்லை? பெண்-சுதந்திரம், சொந்தக்காலில் நிற்பது போன்றதெல்லாம் தகுதியற்ற ஆணை எதிர்க்க பயன்படாதோ? பிறகெதற்கு அதெல்லாம்? சுய சம்பாத்தியம், பன்னாட்டு நிறுவன அனுபவம் போன்றவைகளால் கிடைத்த அறிவு என்பது,  தகுதியற்ற கணவன் வாய்த்தால், நான்கு சுவற்றுக்குள் சண்டை போட்டுவிட்டு, படுக்கை அறைக்கு வெளியே சிரித்து சந்தோஷமாக இருப்பதாக காட்டிக்கொள்ளத்தானா? இதற்கு படிப்பெதற்கு? சம்பாத்தியம் எதற்கு? அறிவு எதற்கு?

இந்த காரணங்களால் போலீஸ்காரரின் மனைவியாக வரும் கேரக்டர் சுத்தமாக பிடிக்கவில்லை. அறைமுழுவதும் புத்தகங்களை அடுக்கி "அறிவு ஜீவி பிம்பம்" உருவாக்குவதை அன்றி அந்த சைக்கோ கேரக்டர் வேறு எதையும் சாதிக்கவில்லை.

ஒருவகையில் பிரபுவும், போலீஸ்காரனின் மனைவியும் ஒரே விதமாய இயங்குகிறார்கள். அதாவது, ஒரு அநீதி திணிக்கப்படுகையில் உடனே தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறார்கள். எதற்கு? அடுத்தவரின் தவறுகளுக்கு, குறை புரிதல்களுக்கு தன்னையே பலிகொடுப்பானேன்?.

பிரபு ஆல்தியாவை விட்டு பிரிந்தவுடன், பெண்களுக்கு போன் செய்து, தனியே வரவழைத்து, அதை வைத்தே மிரட்டி பணம் பறிக்கிறான். ஏன்? ஆல்தியாவோ, செளமியாவோ தான் வாழ்வின் இலக்கா?

நம் வாழ்க்கையும், சந்தோஷமும் முற்றிலும் நம்மிடம் தான் இருக்கிறது. அதை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

Friday, 22 September 2017

தரமணி - 1

தரமணி - 1


ஒரு சமூக நலன் கருதிய படம்.

பிரபு காதல் தோல்வியுற்ற சமயம் ஆல்தியாவை ஒரு மழை நாளில் சந்திக்கிறான். ஆல்தியாவுக்கு திருமண முறிவு. அவளது கணவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன். சமூக புறக்கணிப்புக்கு பயந்து ஆல்தியாவை மணம் செய்துகொள்கிறான். அவன் மூலமாக ஆல்தியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

பொது புத்தி ஓரினச்சேக்கையாளர்களை பரிதாபத்துடன் அணுகுவதையே சரி என்கிறது. கொஞ்சம் இப்படி யோசித்து பார்க்கலாம். இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றாக இணைந்தால் குழந்தை பெற வாய்ப்பில்லை. ஆக இயற்கையே அந்த விசித்திர சேர்க்கையை அடுத்தடுத்த தலைமுறைக்கு பரவாமல் தடுப்பதாக கொள்ளலாம். ஆல்தியா தனது கணவனை மன்னிக்கும் இடம் சரிதானா என்பது எனக்கு புரியவில்லை.  அடுத்தவர் வாழ்க்கையில் விளையாட எவருக்கும் உரிமை இல்லை. ஆல்தியாவின் கணவன், தன் பாலுணர்வு தெரிந்தே ஆல்தியாவை திருமணம் செய்துகொள்கிறான். இதை ஆல்தியா ஒரு பரிதாப உணர்வோடு அணுகுவது சரியா தெரியவில்லை.

மறுபக்கம் பிரபுவுக்கும் செளமியாவுக்குமான காதல் அவளது வெளி நாட்டு வாய்ப்பில் காணாமல் போய்விடுகிறது. செளமியாவின் உடைகள் வெளி நாடு சென்றவுடன் மாறிவிடுகின்றன. செளமியா என்கிற பெண் செளமியாவாகத்தானே இருக்க வேண்டும்? பிரபு விலகி விடுகிறான் அல்லது விலக்கப்படுகிறான்.

பிரபுவுக்கு ஆல்தியா மீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் ஆல்தியாவும் பிரபுவை விரும்பத்துவங்குகிறாள்.

ஆனால் பிரபு காதல் உந்திய பொசசிவெனெஸ்ஸுக்கு உள்ளாகிறான். ஆல்தியாவிடம் வழியும் மேனேஜர் குறித்து கேள்வி எழுப்புகிறான். நடு ரோட்டில் கத்துகிறான். அதனால் இருவருக்குமிடையில் சண்டை வருகிறது.

நாம் யார் என்பதை நாம் என்ன செய்கிறோம் என்பது காட்டிக்கொடுத்துவிடும். 18 வயது வரையிலான காலம் வரை வளர்ப்பு எல்லோருக்கும் ஒன்றே போலத்தான். நாம் எதை எவ்விதம் கையாள்கிறோம் என்பதைப்பொறுத்து நம் பர்சனாலிட்டி உருவாகிறது.

எவரையுமே சரி , தவறு என்கிற இருமைக்குள் அடைக்க இயலாது. யாரையும் யாரும் கட்டுப்படுத்தி விடவும் முடியாது. யாரையும் யாரும் அடக்கி ஆண்டுவிடவும் முடியாது. நாம் ஒழுக்கமாக வாழ்ந்தால், பிணி இல்லை. வலி இல்லை.

என் பள்ளிக்காலத்தில் ஏகத்துக்கும் காதலிகளுடன் 'விளையாடிய'   நபர்களை கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன். நமக்கு ஏன் அப்படியெல்லாம் இல்லை என்று யோசித்திருக்கிறேன். ஆனால், இப்போது அதில் பலருக்கும் மண்டையில் முடி கொட்டிவிட்டது. தொப்பை விழுந்துவிட்டது. ஷுகர். பிபி. அல்சர். வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாமல், நடக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பலர். சரியான உத்தியோகமோ, சம்பளமோ இல்லை. தரங்கெட்ட மனிதர்களுடன் கூடி, பிரச்சனைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயது ஒன்றே தான். ஆனால் வாழ்க்கை?

யோசித்துப்பார்த்தால். ஒழுக்கம் ஒன்றே நிலையான சந்தோஷத்தை தருகிறது. அறிவு சார் செயல்பாடுகளே மன நிறைவைத்தருகின்றன. இளமையாய் இருக்கும் உடல், எல்லையற்ற தன்னம்பிக்கையை தருகிறது. உடல் வலு தருகிறது. மனதை, எண்ணங்களை இளமையாக வைத்திருக்கிறது. அந்த பேரின்பங்களை சுவைத்துவிட்ட பிறகு, சிற்றின்பங்கள் ஈர்ப்பதே இல்லை. அது எல்லோருக்கும் புரிந்துவிடாது. அதை  அனுபவிப்பவர்களுக்கே அது புரியும்.

ஆனால் இது நாம் தேர்வு செய்வது அல்ல. நமக்கு இதெல்லாம் புரிவதற்கு முன்பே நாம் நம் இலக்கை நோக்கிய பயணத்தை நம்மையும் அறியாமலேயே துவங்கிவிட்டிருப்போம்.

பிரபுவின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஆல்தியா போதுமென்று இருந்திருப்பேன். நாம் யாரையும் கட்டுப்படுத்துவதற்கில்லை என்று விட்டிருப்பேன். எனக்கென்று ஒரு வேலையை கைக்கொண்டிருப்பேன். காதலை உணர மட்டுமே முடியும். வரவழைக்க முடியாது. உணர முடியவில்லை என்றால் பிரிந்திருக்கலாம். சண்டை போட்டு கெடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டியதில்லை. ஆல்தியாவிடம் பிரபுவுக்கான காதல் இருந்திருந்தால், அவள் அவளது மேனேஜரின் அத்துமீறலை தானே சமாளித்திருப்பாள். அதை நடு ரோட்டில் கத்தி தான் கேட்க வேண்டுமென்பதில்லை. ஆல்தியா பிரபுவுடனான காதலை உணரவில்லை என்றால் வீட்டில் தங்க அனுமதித்திருக்க வேண்டியதில்லை.

உறவுகள் விஷயத்தில் என்னுடைய தாரக மந்திரம் ஒன்று உண்டென்றால் அது: நாம் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்றால் நமக்கும் யாரும் தீங்கிழைக்க மாட்டார்கள். அவ்வளவே.

இரண்டு டிகிரி படித்த அப்பா, தன் மகனும் இரண்டு டிகிரி கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிற எண்ணப்பாட்டுடன் பிள்ளையை நடத்த துணியும் துணிபுவை ஒத்தது பிரபு ஆல்தியாவை நடுரோட்டில் கையாளும் விதம். அப்படியெல்லாம் செய்வதனால் படிப்பையோ, காதலையோ வரவழைத்துவிட முடியாது.

எல்லோருக்குமான ஒரே அவுன்ஸ் காதல் இல்லை. காதலின் அளவு ஒவ்வொருவருக்குமிடையே மாறுபடும். அதை அவரவரே கண்டடைய வேண்டும். தேடி போகலாம். நமக்கானதை தேர்வு செய்கிறோமா என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு டிவி ஷோ, நீயா நானா என்று நினைக்கிறேன். ஒரு பெண் வந்து "என் காதலன் என்னை நடுரோட்டில் அறைந்தார். அதனால் என்ன? நானே அவருக்கு என்றாகிவிட்டபோது அறைந்தால் என்ன?" என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நவீனத்துவவாதிகள் கேட்டால் "இந்த மாதிரி பெண்களுக்கு எது பெண் உரிமை என்பதே தெரிவதில்லை" என்பார்கள். ஆனால் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் போய் நவீனத்துவம் குறித்து வாய் கிழிய பேசினாலும் அவர்களுக்கு அது தேவைப்படாது.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், எல்லா விரல்களும் ஒன்றே போல் இருக்காது. அவ்வளவுதான். ஒருவரின் இயல்பு அதுதான் என்றால் அதை மாற்ற முயற்சிக்கக்கூடாது. முடிந்தால் அதனுடன் ஒத்துப்போய்விடலாம். அல்லது பிரிந்து அவரவர் பாதையில் சென்றுவிடலாம். அதுதான் நியாயம் என்று நினைக்கிறேன்.

ஆல்தியாவால் முடிந்த காதல், தேவைப்படும் ஆணாக பிரபு இல்லை. பிரவுக்கு தேவைப்படும் அளவினதான காதலை தரக்கூடிய பெண்ணாக ஆல்தியா இல்லை.

ஆனால் ஆல்தியாவை அவளது குழந்தையோடு ஏற்றுக்கொள்ளும் ஆல்தியா-வகையான ஆண் இல்லை. அதே போல் பிரபுவின்-வகையான பெண்ணும் இல்லை. அல்லது அவர்கள் இருவருமே தங்கள் சரியான துணைகளை நோக்கி தேடிப்போகவில்லை என்று கூட சொல்லலாம்.

பெண்களை அடக்கி வைக்கும் ஆணாக வரும் அந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வாவ். அவரது மனைவிக்கு கணவனிடன் காதல் கிடைக்கவில்லை. ஆனால், கணவர் மனைவியை ஏதோ காரணத்திற்காய் பிரிய மறுக்கிறார். ஆயினும், அவரை சுதந்திரமாய் இயங்கவும் அணுமதிப்பதில்லை. இதில் வெறுப்பின் உச்சத்திற்கு போய்விடும் அந்த மனைவி, பிரபுவுடன் தனக்கு உறவு இருப்பதாக சொல்லி போலீஸ்காரரை வெறுப்பேற்றுகிறார்.

அப்போதுதான் பிரபுவுக்கு புரிகிறது ஆல்தியாவை தன் நடவடிக்கைகள் எத்தனை வெறுப்பேற்றியிருக்கும் என்பது.