Monday, 28 January 2013

தவறுகள் இல்லாத தண்டனைகள் - சிறுகதை


தவறுகள் இல்லாத தண்டனைகள் - சிறுகதை

ரகு மாலதிக்காக அலுவலக உணவகத்தில் காத்திருந்தபோது மணி மாலை ஐந்து இருக்கும். ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்றாள்.

ரகுவும் அவளும் அந்த கணிப்பொறி அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவில் வேலை செய்கிறோம். தனித்தனி கட்டிடங்களில் எங்கள் பிரிவுகள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், உணவகம் பொது தான். அவர்களுக்குள் பரிச்சயம், இருவரும் ஒரே நாளில் அலுவலகத்தில் இணைந்த அன்று நடந்தது. மாலதியின் கணவர் தாம்பரத்தை அடுத்த மெப்ஸில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவர்கள் அலுவலகம் செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா சிட்டியில் இருந்தது. அம்மா, அப்பா, தம்பி தங்கையுடனான ரகுவின் வீடு நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் சாலையில் இருந்தது. மாதம் பத்தாயிரம் வாடகை. மீட்டருக்கு ஏழு ரூபாய் கட்டணம். முறைவாசல், தண்ணீர், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்திக்கொள்ள இடம் இத்தியாதி இத்தியாதி என ஏகப்பட்ட வரைமுறைகள். அதெல்லாம் கூடப் பரவாயில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் வரக்கூடாது என்பது தான் செயல்படுத்த மிகக்கடினமாக இருந்தது ரகுவிற்கு. ஆறு மணிக்கேனும் கிளம்பினால் தான் ரயில் பிடித்து உரிய நேரத்துக்கு வீடு போய் சேர முடியும். இல்லையெனில், அடுத்த நாளே வீட்டு உரிமையாளர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி அரைமணி நேரம் சொற்பொழிவாற்றிவிட்டுப் போவார்.

இதற்கு மேலும் சிக்கல் உண்டாக்காமல், மாலதி நேரத்துக்கு வந்துவிட வேண்டுமே என்று ரகு ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தான். மனதில் ஓரத்தில் விஷயம் திருமணம் தொடர்பாகத்தான் இருக்குமென்று தோன்றியது. எதுவாக இருப்பினும், கூடியமட்டும் அவளே சொல்லும்வரை தானாக‌ எதையும் கேட்டுவிடக்கூடாதென‌ நினைத்துக்கொண்டான். ரகு இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கையிலேயே மாலதி வந்துவிட்டிருந்தாள்.

"என்ன ரகு, வெகு நேரம் காத்திருக்க வைத்துவிட்டேனா?" என்றாள்.

"பரவாயில்லை மாலு. மணி ஆறுக்குத்தான் கிளம்ப வேண்டும். இன்னும் நேரமிருக்கிறது. உட்காருங்கள். தேனீர் அருந்துவோமா?"

"ஆங்.. வேண்டாம். இப்போதுதான் அருந்தினேன் ரகு"

"ம்..சரி சொல்லுங்கள். ஏதோ பேசவேண்டும் என்றீர்களே?"

"ஆங்.. ஆமாம்.. எங்கள் உறவில் ஒரு பெண் இருக்கிறாள். உங்களுக்கு பொருத்தமாய் இருப்பாள். ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்த்தாகிவிட்டது. தூரத்து அத்தை மகள். நட்பு வட்டத்தில் நல்ல பையன் இருந்தால் சொல்லச் சொல்லியிருந்தார்கள். எனக்கு உங்கள் நினைப்பு தான் வந்தது. நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள். உங்கள் வீட்டிலும் பெண் பார்க்கிறார்கள் என்று. பெண், நல்ல அழகு. படித்திருக்கிறாள். குணமான பெண். இந்தாருங்கள் அவளின் புகைப்படம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றுவிட்டு ஒரு பெண்ணின் முழு நீள‌ப்புகைப்படத்தை நீட்டினாள் மாலதி.

இது ரகு ஏற்கனவே எதிர்பார்த்தது தான். பெண் புடவையில் அழகாக‌ இருந்தாள். நல்ல உயரம். மாநிறம் என்றாலும் முகம் லட்சணமாய் குடும்பப்பாங்காய் இருந்தது. பொருண்மை லாபங்களின் மீதான தேடல்களில் தன்னையே தொலைத்துவிடும் மனிதர்கள் இரைந்து கிடக்கும் இக்காலத்தில், பொருண்மையையும் தாண்டி சிந்திக்கக்கூடிய த‌ன் வகையான பெண் குறித்த ரகுவின் தேடல்களை மாலதி நன்கு அறிந்தவள் என்பதாலேயே மாலதி காட்டிய பெண் பிடித்துப்போயிற்று. 'இவள்தான் இவள்தான்' என்று மனம் அடித்துக்கொள்வதையும், த‌ன்னையும் மீறி சற்று உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பெண்ணின் பால் ஈர்க்கப்படுவதையும் ரகுவாலேயே உணர முடிந்தது. ஆயினும் ரகுவிற்கு 'அதை' பற்றி இப்போதே பேசிவிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது. இப்போது பேசாவிட்டால் பின்னாளில் குழப்பங்கள் நேரலாம் என்ற எச்சரிக்கை உணர்வு வந்தது.

"மாலு, நீங்கள் பார்த்து சொல்லிவிட்டால் வேறென்ன வேண்டும்? நீங்கள் சரியாகத்தான் கணித்திருப்பீர்கள். எனக்கு சம்மதம். நான் முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? எங்கள் வீட்டில் ஜாதி, மதம் பேதமில்லை. தனிப்பட்ட முறையில் நானே ஒரு ஏதியஸ்ட்"

"அதெல்லாம் தான் முன்பே சொல்லியிருக்கிறீர்களே ரகு. ஜாதி எதுவாக இருந்தால் என்ன ரகு. இக்காலத்தில், இந்த புது யுகத்தில், இருபத்தியோராம் நூற்றாண்டில் ஜாதியெல்லாம் எந்த மூலைக்கு ரகு. நீங்களும் இதையெல்லாம் பெரிதுபடுத்திக் கேட்கிறீர்களே. எங்கள் வீட்டிலும் ஜாதி, மதம் பேதமில்லைதான். அப்படியானால், உங்களுக்கு சம்மதம் தானென்று வீட்டில் சொல்லிவிடட்டுமா?"

'அப்பாடி!' என்றிருந்தது ரகுவிற்கு. ஜாதகத்தை அன்றிலும் ஜாதி ஒன்றுதான் பிரச்சனை செய்யும். ரகு அவர்கள் ஜாதி இல்லை. இப்போது இரண்டுமே அவர்கள் தரப்பில் சரி என்றாகிவிட்ட பிறகு இனி தடைகளேதும் இல்லை என்கிற நினைப்பே ரகுவின் வயிற்றில் பால் வார்த்தது போல் உணரச்செய்தது.

"கேட்கிறேனென்று தவறாகக் கொள்ள வேண்டாம் மாலு, நீங்கள் வேறு ஏதேனும் வரன் பார்த்திருக்கிறீர்களா.. இல்லை என்னுடையது மட்டும்தானா?"

"அவளைக் கேட்டு நிறைய வெளி நாட்டு வரன்கள் கூட‌ வந்ததுதான் ரகு... ஆனால், அவளுக்கு பிடித்தமில்லை... அவளும் உங்களைப் போலவே தான்... மெட்டீயரிலிஸ்டிக், கேபிடலிஸம் என்று பேசுவாள்... உங்களைப் பற்றிச் சொன்னேன்.. உடனே ஒப்புக்கொண்டாள்... "

"சரி மாலு, ஆமாம் இவர் பெயர் என்ன?"

மாலதி இதழ்களில் துளிர்த்த மெல்லிய புன்னகையும், ஓர விழிகளும், ரகுவை பரிகாசித்தன.

"அதை இப்போது சொல்ல முடியாது. ஒரு வாரம் பொறுத்து சொல்கிறேன். நாளை பார்க்கலாம்" என்றுவிட்டு ரகுவிடமிருந்து அவளின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு சிரித்தவாறே சென்றாள்.

ரயில் பயணம் முழுவதும் விதம் விதமான கற்பனைகள், கனவுகள். தரையில் நின்றும் எங்கோ மிதப்பதான உணர்வுகள், காதல் பாடல்களை கேட்டபடியே கூட்டமாய் இருக்கும் ரயிலில் துள்ளி குதித்து நடனமாடத் தோன்றுவது, பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் நீட்டியது, சாலையில் யாரோ ஒர் ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்றால் ரசித்து பார்ப்பது என இவையெல்லாம் ரகு காதலில் விழுந்துவிட்டான் என்று சொல்லாமல் சொல்லின. கல்யாணத்திற்கு பெண் வீட்டிலிருந்து சல்லிக்காசு வேண்டாம் என்று அப்பாவிடம் தீர்மானமாக கூறிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். திருமணத்திற்கு, த‌ன் தேவதைக்கு, சேலைக்கு அரை லகரமேனும் செலவு செய்து சூடிப் பார்த்து மகிழ வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தேனிலவுக்கு செஷல்ஸ் நன்றாக இருக்கும். தோழன் மாதேஷ் சமீபமாகத்தான் சென்று வந்தது நினைவிருந்தது. அவனிடம் அதற்கான வழிமுறைகள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

வழியெங்கும் அந்த பெண், அந்த பெயர் அறியாத பெண், அழகான பெண், குணவதியான என் வகையான பெண் ரகுவை ஆக்ரமித்துக்கொண்டாள். பசியெடுக்கவில்லை. தூக்கம் கூட இல்லை. த‌ன் மனதில் முதன் முதலாய் துளிர்த்த காதலை அணுஅணுவாய் உணர்ந்தபடி நொடிகள் கரைவது சுகமாய் இருந்தது ரகுவிற்கு.

அப்பாவிடம் சொன்னான்.. அம்மாவிடம் சொன்னான்.. உடனே ஒப்புக்கொண்டார்கள். தங்கை துள்ளிக் குதித்தாள். ரகுவிற்கு வானத்தையே வென்றுவிட்ட உணர்வு மேலோங்கியது. நண்பனை அலைபேசியில் அழைத்து நான்கு லட்சத்துக்கு கல்யாண செலவுக்கு லோன் குறித்து விசாரித்தான். அவன் துள்ளிக்கொண்டு தனக்கொரு இரை சிக்கிவிட்ட மகிழ்வில் வீட்டிற்கே வந்து ஒரு கூடை நிறைய காகிதத்தில் கையெழுத்து வேட்டையாடிவிட்டுச் சென்றான். ரகு கனவுகள் கொண்டான். கறபனைகள் கொண்டான். அந்த நாள் இரவு இனி சாகும் வரை மறக்காது போலிருந்தது ரகுவிற்கு.

அவள் பெயர் என்னவாக இருக்குமென்று ஊகம் செய்து செய்து இருப்பு எங்கிலும் தொலைந்தது. மனதில் பலவிதமான பெயர்கள் தொன்றி மறைந்தன. எதிலும் மனம் ஒட்டவில்லை. அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால், அவள் பெயர் தெரிந்துகொள்ளவதற்காகவேனும் மறு நாள் அலுவலகம் சென்றதும் மாலதியைத்தான் முதலில் பார்க்கச் சென்றான் ரகு. அன்று, உறவில் பெண்ணிற்கு திருமண விஷயமாய் விடுமுறை என்றார்கள்.

த‌ன்னைத் தவிப்பில் விட்டுவிட்டு போய்விட்டாளே என்று தோன்றினாலும் இன்னொரு பக்கம், அவர்கள் வீட்டிலும், திருமணத்திற்கு தயாராவது குறித்து ரகுவிற்கு சொல்லவொன்னா மகிழ்ச்சி. மாலதி அடுத்த நாளுக்கும் வரவில்லை. இடையில் ரகு விண்ணப்பித்திருந்த லோன் வங்கியில் அனுமதியளிக்கப்பட்டு கைக்கு வந்திருந்தது. அம்மாவிடம் பணம் தருகையில் வாழ் நாளில் முதன் முறையாக ரகு வெட்கப்பட்டது அவனுக்கே என்னவோ போலிருந்தது.

வார இறுதி நாள் வெள்ளியன்று அதற்கடுத்த வாரத்தில் சம்பிரதாயமாக பெண் பார்த்து கையோடு நிச்சயித்துவிடலாமென்று தோன்றியது. மாலதி தொடந்து வராததால், நிச்சயத்திற்கான தேதிகள் அடுத்த வாரத்தில் தான் துவங்க வேண்டியிருக்கும் என்று எண்ணியபடியே ரகு உணவகத்தில் உணவு உணடபடி அமர்ந்திருக்கையில் தூரத்தில் மாலதி அவள் தோழிகளுடன் அமர்ந்து உணவுண்டுகொண்டிருந்த‌து தெரிந்தது.

சட்டென சுவர்க்கத்தினுள் நுழைந்துவிட்ட உணர்வு. இன்றே நிச்சயம் பற்றி பேசிவிட்டால், சனி ஞாயிறில் கூட சம்பிரதாயமாக‌ பெண் பார்த்தல் துவக்கிவிடலாம் என்று தோன்றியது. அது வேலையை துரிதமாக்கும் என்று தோன்றியது. பொறுமையின்றி மாலதியை சந்தித்துவிட உணவகத்தின் வாசலிலேயே காத்திருந்தாள். கால் மணி, அரை மணியென நீண்டு, ஒரு மணி நேரமானதில் அவளை எப்படியோ தவற விட்டது புரிந்தது. அவள் வரவில்லை. அவனைத் தாண்டித்தான் சென்றிருக்க வேண்டும். ஒரு வேளை பின்பக்க வழியே சென்றிருக்கலாமென்று தோன்றியது.

உணவு நேரம் முடிந்ததும், மாலதியை சந்திக்கும் நோக்கத்தில் அவள் இருக்கும் அலுவலக கட்டிடத்தில் நுழைந்தான் ரகு. வாசலில் வேறு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தவள் தூரத்திலேயே ரகுவைப் பார்த்துவிட்டவுடன், பார்க்காததுபோல திரும்பி, தன் அலுவலக பிரிவுக்குள் அடைந்தது ரகுவிற்கு சுருக்கென்றது. ஒருவேளை த‌ன்னைச் சரியாகப் பார்க்கவில்லையோ என்றென்னி, வாசலில் இருந்தபடி அவளை அவளின் அலைபேசியில் அழைக்க, அழைப்பு விரயமானது.

வேறுவழியின்றி, வாசலில் பாதுகாப்பாளர்களிடம் மாலதியின் இருக்கை எண்ணைத் தொடர்பு கொண்டு அழைத்ததில் வெளியே வந்தாள் மாலதி. ரகு மெல்ல அவளை அண்டி,

"ஹாய் மாலு, என்ன இரண்டு மூன்று நாட்களாக உங்களை காணவில்லையே?!" என்றான்.

"ஓ.. ஹாய் ரகு, ஆமாம் கொஞ்சம் வேலை. உறவில் பெண் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்தோம். அதுதான் அலுவலகத்திற்கு வரமுடியவில்லை" என்றாள்.

ரகுவிற்கு தூக்கிவாரிப்போட்டது. 'அவளையா!! என்னவளையா!? என் தேவதையையா!!' மனம் ஜீரணிக்க தடுமாறியது.

"மாலு, நாம் பேசிக்கொண்டோமே! அந்தப் பெண்ணா?"

"ஆமாம் ரகு"

"என்ன மாலு சொல்கிறீர்கள், நிச்சயம் முடிந்துவிட்டதா?! என்னிடம் வேறொன்று சொன்னீர்களே!?"

"ஆமாம். வேறொன்று சொல்லியிருந்தேன். இப்போது அது சரிப்படாது. அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது ரகு. உங்களுக்கு வேறு நல்ல இடம் அமையும். விடுங்கள். உங்கள் அலுவல்கள் எல்லாம் எப்படிப் போகிறது?"

எனக்குப் புரிந்துவிட்டது. மாலதி மழுப்புகிறாள். 'அந்த பெண் இனி உனக்கில்லை' என்கிறாள். ஏதோ நடந்திருக்கிறது. உண்மையை மறைக்கிறாள்.

"இப்படிச் சொன்னால் எப்படி மாலு?"

"ரகு, இதில் விவாதிக்க ஏதுமில்லை. உங்களையும் சேர்த்து இரண்டு மூன்று வரன்கள் பார்த்தது. அதில் வேறொரு வரன் மிக நன்றாகவே பொருந்தியது. அதையே முடித்துவிட்டோம். விடுங்கள். உங்களுக்கு வேறு நல்ல இடம் அமையும் பாருங்கள். எனக்கு இந்த நேரம் ஒரு கலந்துரையாடல் இருக்கிறது. ரகு போக வேண்டும். அதனால்...." என்றுவிட்டு இழுத்தாள் மாலதி. ஏமாற்றம், அதிர்ச்சி, மேலும், ரகு ரசித்து ரசித்து கண்ட அழகான காதல் நொருங்கி விழுவது உள்ளுக்குள் வலித்தது. கையிலிருந்த பொம்மையை தவர விட்ட குழந்தைபோல் மனதிற்குள் அழுகை முட்டியது.

"என்ன மாலு இது?. நீங்கள் சொல்லித்தானே கிட்டத்தட்ட ஒரு தலையாய் அவளைக் காதலிக்கவே துவங்கிவிட்டேன்.இப்போது இப்படிச் சொன்னால் எப்படி? நீங்கள் எதையோ என்னிடமிருந்து மறைக்கிறீர்கள். என்னவென்று சொல்லிவிடுங்கள். என்ன பிரச்சனை?"

"பிரச்சனை என்றெல்லாம் ஒன்றுமில்லை ரகு. நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள். மற்றபடி உங்களுக்கு வேறு நல்ல இடம் அமையும். இதை இதோடு விடுங்கள்"

"இல்லை மாலு. என் மனதில் ஆசையை வேறு வளர்த்துக்கொண்டுவிட்டேன். வாழ் நாளில் முதல் முறையாக காதலை உணர்ந்திருக்கிறேன். இதோடு விட முடியாது. நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். தயவுசெய்து சொல்லிவிடுங்கள். நீங்கள் முதலில் ஒன்று சொன்னீர்கள். இப்போது வேறொன்று சொல்கிறீர்கள். என்ன நடக்கிறது?"

மாலு எதுவும் பேசாமல் மெளனமாக நின்றாள்.

"சொல்லுங்கள் மாலு, என்ன பிரச்சனை?"

"அவளுக்கு மட்டும் பிடித்து பலனில்லை ரகு. அவளது குடும்பத்திற்கும் பொருந்தவேண்டும் அல்லவா. அப்படி பொருந்தும் ஒரு வரன் அமைந்துவிட்டது. அவ்வளவுதான். இதை இதோடு விடுங்களேன்"

"என்ன பொருந்த வேண்டும் மாலு? என் விஷயத்தில் அப்படி என்ன பொருந்தவில்லை? வேலை, உயரம், குணம் எல்லாமும் உங்களுக்கு முன்பே தெரிந்தது தானே. அதையும் மீறி பொருந்தவில்லை என்றால், என்ன அர்த்தம்? ஜாதியா? நான் எதையும் மறைக்கவில்லையே மாலு. நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. நீங்களும் கூட ஜாதி மதம் பேதமில்லை என்றுதானே சொன்னீர்கள்? அதன் பிறகு தானே இந்த பேச்சே தொடர்ந்தது?"

மாலு சற்றே இடைவெளிவிட்டு,

"ரகு, ரகு சொன்னேன் தான். இப்போதும் சொல்கிறேன். வேறெந்த ஜாதிகளும் பேதமில்லை தான். இருந்தாலும், இது... ஒரு குடும்பமென்று வந்துவிட்டால்..... அதாவது.... வீட்டில் பெரியவர்களெல்லாம்...." எதையோ சொல்ல எத்தனித்து மென்று விழுங்கினாள் மாலதி. ரகுவிற்கு புரிந்துவிட்டது.

"நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. யார் மீதும் சேற்றை வாரி இறைக்கவும் விரும்பவில்லை. என்னை நிராகரித்ததற்கான உண்மையான காரணம் எனக்கு புரிந்துவிட்டது மாலு. ஆனால், அதற்கு நான் பொறுப்பல்ல. பிறப்பை யாராலும் நிர்ணயிக்க இயலாது மாலு. அது உங்களுக்கும் தெரியும்." என்றுவிட்டு நிறுத்தினான் ரகு.

மாலதி மெளனித்தாள். ரகு புரிந்துகொண்டதை ஊர்ஜிதம் செய்தாள்.

அவள் விழிகளைக் கூர்மையாய் ஊடுருவும் ரகுவின் பார்வைகளை எதிர்கொள்ள இயலாமல் தலை கவிழ்ந்த மாலதி, வேறெங்கோ பார்த்தபடியே,

"ரகு, அது முடிந்த கதை. இனி பேசிப் பலனில்லை. எனக்கு வேலை இருக்கிறது. நாம் பிறகு சந்திக்கலாம்" என்றுவிட்டு ரகுவின் பதிலைக் கூட எதிர்பாராமல் அவள் தன் அலுவலக பிரிவுக்குள் நுழைந்து மறைந்தாள்.

அது தான் அவளை ரகு கடைசியாகப் பார்த்தது. அந்த நிகழ்வு அவர்களுக்கிடையே இருந்த நல்ல நட்பை சிதைத்திருந்தது.

ஆண்களும், பெண்களுமான இந்த சமூகம், ஒரு தனி மனிதனை, தவறேதும் செய்திராத நிலையிலும் தண்டிக்கிறது. ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பேயே அவனுக்கு ஓர் அடையாளத்தை தந்துவிடுகிறது. ஜாதி பாகுபாடு, பெண்ணடிமை, நிற வேற்றுமை எல்லாவற்றிலும் இதுதான். அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த அடையாளத்துடனே வாழ அவனை நிர்பந்திக்கிறது. அவன் பொறுப்பேற்க இயலாத குற்றத்தை அவன் மீது வலுக்கட்டாயமாக சுமத்துகிறது. அதனோடே வாழ அவனை நிர்பந்திக்கிறது. இந்த அடக்குமுறையிலிருந்து, சர்வாதிகாரத்திலிருந்து, அடிமைத்தனத்திலிருந்து விடுபட அவன் போராடத்தான் வேண்டியிருக்கிறது. அந்த போராட்டம் அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒடுக்கப்படுபவன் மறுக்கப்படுகிறான். எது மறுக்கப்பட்டதோ, அது பழக்கப்படுவதில்லை. ஒடுக்கப்பட்டதின் மீது பரிதாபம் தோன்றுகிறது. எதன் மீது பரிதாபம் தோன்றுகிறதோ, அதன் மீது ஈர்ப்பு உருவாகிறது. எது ஈர்க்கிறதோ அது காலப்போக்கில் இணையத்துடிக்கிறது. துடிப்பது காலத்தை மறக்கிறது. அவசரப்படுகிறது. அவசரத்தில் மதி இழந்து, ஓடுகிறது. அது மீண்டும் குரோதம் வளர்க்கிறது. குரோதம் வளர்த்தது மீண்டும் மறுக்கப்படுகிறது. இயற்கை எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி முறையை கையாள்கிறது. அதை புரிந்துகொண்டால் பாதகமில்லை.

ஒரு வகையில் வேற்றுமையை அனுபவிக்கும் உயிர்கள், பிரிதொரு வகையில் பிரிதொரு உயிரின் மீது வேற்றுமையை கட்டவிழ்ப்பது இறுதியில் வேற்றுமைகளையே வெல்லச் செய்கிறது. வேற்றுமைகள் என்றுமே வேற்றுமை பார்ப்பதில்லை. வேற்றுமைகளின் இயல்பு அது.

இந்த‌ வேற்றுமை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுமெனில், அதே ஸ்திதியில், ஆணுக்கு பெண் அடிமை என்பதும், ஆண் பிள்ளை உசத்தி என்பதும், வாரீசுகளே நாட்டை ஆள்வது என்பதும், மருமகள் மூன்றாவது மனுஷி என்பதும், போன்ற‌ வேற்றுமைகள் கூட மறைமுகமாக‌ ஊக்குவிக்கப்படுகிறது தான். ஆனால், சமூகம் இதற்கெல்லாம் கொடி பிடிக்கிறது, கோஷம் போடுகிறது. வெகு ஜனத்தின் சமூகப் பார்வைகள் இங்கே முரண்பட்டுப்போகிறது . தனக்குத்தானே குதர்க்கமாகிப் போகிறது. குழப்புகிறது. சமூகம் இதற்கு ஒத்துப்போவதின் மூலம் பெண்ணடிமைத் தனத்தையும், ஆண்களின் அடக்குமுறையையும், இன்ன பிற வேற்றுமைகளையும் கூட நியாயப்படுத்திவிடுகிறது.

அந்த நிகழ்வு அவர்களின் நட்பை தகர்த்தெறிந்துவிட்டது. ரகுவின் ஒரு தலைக் காதலையும் சேர்த்துத்தான். அந்த இரண்டு நாட்கள், அவற்றில் ரகு கண்ட கனவுகள், கற்பனைகள் அவனின் நினைவுகளை விட்டு சாகும் வரை அகலப்போவதில்லை. அவைகள் தவறுகள் இல்லாத தண்டனைகள்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6169)

Tuesday, 1 January 2013

குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை


குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை

7.1.2013 தேதியிட்ட‌ இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'ஜுரம்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை, பக்கம் 71 ல் வெளியாகியிருக்கிறது.

பிரசுரமான கதையின் பிரதியை இங்கே இணைத்திருக்கிறேன்.
நட்புடன்,

ராம்ப்ரசாத்