Monday, 10 December 2012

காலையில் ஒரு கொலை - சிறுகதை


காலையில் ஒரு கொலை - சிறுகதை


மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேறக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை. இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லா களேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார், பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் அன்றைய தினத்தை சற்று வித்தியாசமாகவே கழித்துக்கொண்டிருந்தது அந்த இடம்.

சாலையோரம் போலீஸ் ஜீப்புகள் இரண்டும், ஹுண்டாயின் போலீஸ் ரோந்து கார்கள் இரண்டும், நெடுஞ்சாலைப் பாதுகாப்புத்துறையின் ஆம்புலன்ஸும் நின்றுகொண்டிருந்தது இன்னும் பரபரப்பை அதிகமாக்கிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் சவுக்கு மரங்கள் சீராக வளர்ந்திருக்க, இடையில் இருந்த மண் சாலையில் சற்று தொலைவில் ஒரு டாடா இன்டிகா டாக்ஸி கார் கடலை நோக்கி நின்றிருக்க, அதன் இரு பின் கதவுகளும் திறந்திருந்தது. உள்ளே வெள்ளை அரைக்கை சட்டை, கருப்பு பாண்ட் அணிந்த ஒருவன் டிரைவர் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவாறே மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தபடி மல்லாந்து கிடந்திருந்தான். மண்டையில் எதனாலோ பலமாகத் தாக்கப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியாய் அடர்த்தியாய் தலைமயிருடன் ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தது. காயத்தைப் பார்க்கையில் அடர்த்தியான சதுர வடிவம் கொண்ட இரும்பால் தாக்கப்பட்ட தோரணை இருந்ததை உணர முடிந்தது.கண்கள் அரைத்தூக்கம் கொண்டது போல் மூடியும் மூடாமலும் செருகிக்கிடந்தன. உட்கார்ந்தவாறு அவனைப் பார்க்கலாம். அவனது உயரம் ஐந்தடி மூன்றங்குலம் இருக்கலாமென்று தோன்றியது. அதைச் சுற்றிச் சுற்றி ஒரு போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே போலீஸ் தலைகள் நின்று அவரவர்க்கு கிடைத்த வாக்கி டாக்கிகளில் யாருக்கோ எதையோ சொல்லிக்கொண்டிருக்க, அந்தக் காரின் பக்கவாட்டில் காரையே பார்த்தபடி நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் சேது. அவருக்குப் பக்கத்திலேயே சப்‍-இன்ஸ்பெக்டர் சங்கர் கையில் ஒரு ஃபைலில் தான் எழுதிக்கொண்ட ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டை சரிபார்த்துவிட்டு சேதுவை நெருங்கினார்.

'சேது, எளனீ கடைக்காரர் மருது சொன்னத வச்சி எஃப்.ஐ.ஆர். எழுதிட்டேன் . அவர் காலைல 10 மணிக்கு பாத்திருக்கார். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கார். நாம 10:15 க்கு வந்திருக்கோம். ஃபோட்டோ செஷன் சொல்லி முடிஞ்சாச்சு. இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றதுக்கான பேப்பர் வொர்க் கூட முடிஞ்சது. நாம‌இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணிடலாமா?'.

'உனக்கு என்ன தோணுது சங்கர்?'.

'ம்ம்.. கேப் டிரைவரை அடிச்சி கொன்னிருக்கானுங்க. அதுவும் ஹைவேஸ்க்கு பக்கத்துல. எதாவது கள்ளக்கடத்தல் இல்லேன்னா வழிப்பறி சண்டையா இருக்கும் சேது. அந்த ஆங்கிள்ல ப்ரோசீட் பண்ணலாம்னு தோணுது. வாட் டூ யூ சே?'.

'ம்ம்.. இல்ல சங்கர். வண்டிய பாத்தியா? இவன் ஒரு ரெஜிஸ்டர்டு கேப் டிரைவர். இவன மாதிரி ஆள வச்சில்லாம் கள்ளகடத்தல் பண்ணியிருக்கமாட்டாங்கன்னு என் இன்ஸ்டிங்ட் சொல்லுது. அப்புறம், அவன் பாக்கெட்ல பாத்தியா, பணம் அப்படியே இருக்கு. வழிப்பறி பண்ணனும்னு நினைச்சா ஏன் பணத்தை விட்டுட்டு போகணும்?'.

'ம்ம்... அதுவும் சரிதான். அப்போ எப்டிதான் ப்ரொசீட் பண்றது சேது?'.

'தெரியல. சரி, கார்ல எவ்ளோ பெட்ரோல் பாக்கி இருக்குன்னு பாரு?'.

'ஓகே சேது' என்றுவிட்டு அகன்றார் சங்கர்.

சேது மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். வண்டியின் டாகுமென்ட்ஸ் எல்லாம் டாஷ்போர்டில் இருந்தது. அதன்படி செத்தவன் பெயர் கதிர். வயது முப்பது. வண்டி 2007 மாடல். ஐந்து வருட லோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆர்.சி. யில் இருந்த ஹைப்போதிகேஷன் முத்திரை தெரிவிக்கிறது. வண்டியில் சிகரெட் லைட்டரோ அல்லது வத்திப்பெட்டியோ அல்லது லைட்டரோ இல்லை. அவன் உதடுகளைப் பார்க்கையில் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவனாகத் தோன்றவில்லை. பார்க்கவும் டீசன்டாக இருந்தான். ஷூ அணிந்திருந்தான். தலை படிய வாரப்பட்டிருந்தது. உடைகள் அயர்ன் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றியது. மொத்தத்தில் ஏதோவொரு ஒழுங்கு இருந்தது அவனிடம். கலிகாலத்தில் இப்படி இருப்பதுவும் ஆபத்து என்று தோன்றியது அவருக்கு. காரின் டாஷ்போர்டில்,ஒரு மொபைல் ஃபோனும், ஒரு டைரியும் இருந்தது. பெரும்பாலான பக்கங்களில் கொடுக்கல் வாங்கல்கள்தான் இருந்தாலும், மிகச்சில பக்கங்களில் தமிழில் சில கிறுக்கல்களும் இருந்தன. எங்கெல்லாம் கிறுக்கல்கள் இருந்தனவோ அங்கெல்லாம் 'மாலு' என்று எழுதப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

சங்கர் இப்போது சேதுவின் அருகில் வந்தார்.

'சேது, டாங்க்ல இன்னும் 9 லிட்டர் டீசல் இருக்கு சேது'.

'. சரி, அந்தக் கதிரோட வீட்டுக்கு சொல்லியாச்சா?'.

'சொல்லியாச்சு சேது. அந்த டாஷ்போர்ட்ல இருந்த டாகுமென்ட்ஸ்ல ஒரு நம்பர் இருந்தது. நான் கால் பண்ணினேன். யாரோ கண்ணன்னு அவனோட ஃப்ரண்ட் போலருக்கு. சொல்லிட்டேன். அவன் கதிரோட வீட்டுக்கு சொல்லிட்டு இப்போதான் வந்தான்' என்றுவிட்டு திரும்பி 'ஏய், தம்பி..இங்க வாப்பா' என்று உரக்க கத்த ஓட்டமும் நடையுமாய் ஒருவன் ஓடி வந்தான். அரக்கு நிறத்தில் சாக்கு போலொரு கட்டம்போட்ட சட்டையும், சாயம்போன பச்சை நிறத்தில் முட்டிப்பகுதியில் கிழிந்த வாக்கில் ஒரு ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். உயரம் ஆறடி இருக்கலாம். மாநிறம். வகைதொகையாக கண்ட நேரத்திலும் கண்டதையும் தின்பான் போலிருந்தது. வயது முப்பத்தைந்து இருக்கலாமென்று எண்ணத்தோன்றியது. சவரம் செய்யப்படாமல் இருந்தது அவன் முகம். முகம் கழுவும் பழக்கமே இல்லையென்பதை ஆங்காங்கே மருக்கள் உருதி செய்தன. வெளிப்புறத் தோற்றத்துக்கு அவன் சாதாரணமாக இருப்பதாகத் தோன்றினாலும், சேதுவின் உள்ளுணர்வுக்கு அவன் சற்று பயந்துபோயிருப்பதைத் தெளிவாக உணர முடிந்தது. அவன் அதை மறைக்க முயற்சிப்பதையும் அவர் கவனித்தும் கவனிக்காதது போல் காட்டிக்கொண்டார்.

'ம்ம்.. கதிரோட ஃப்ரண்டா நீ?'

'ஆமா சார்'.

'உங்களுக்கு வீடு எங்க?'

'கொட்டிவாக்கத்துல சார், கதிரு என்கூடத்தான் சார் தங்குறான்'.

'உனக்கு கதிர எப்படித் தெரியும்?'.

'சார், நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊருதான் சார். மாயூரம் பக்கத்துல ஏனாதி சார். அங்க இருக்குற கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தான் சார் +2 வரை படிச்சோம். அப்புறம் அவன் ஐ.டி.ஐ. படிச்சான். நான் வேலைக்கு வந்துட்டேன் சார். அவனுக்கும் வேலை கிடைக்காம கடைசில என்கிட்ட வந்தான் சார். நாங்க பாங்கல லோன் போட்டு கேப் வாங்கி ஓட்றோம் சார்'.

'கடைசியா கதிர‌ எப்ப பாத்த?'.

'காலைல சார். இன்னிக்கு அவனுக்குப் பொறந்த நாள் சார். காலைலயே குளிச்சிட்டு பக்கத்துல மங்காத்தக் கோயிலுக்குப் போயிட்டு கேப்பை கிளப்பிகிட்டு போனான் சார். திருவான்மியூர் தாண்டி டீசல் தீர்ந்திடிச்சின்னு போன்ல கூப்பிட்டான் சார். மணி 8:55 இருக்கும் சார். நான் என் கேப்ல போய் எம்.ஜி.எம். போற வழில இருக்குற பங்க் வரைக்கும் டோப் பண்ணினேன் சார். அப்புறம் நான் சவாரி எடுக்கப் போயிட்டேன் சார்.'.

'காலைல டீசல் போடுறதுக்கு எதுக்கு சிட்டிக்கு வெளில போறான் அவன்? கொட்டிவாக்கத்துல வீடுன்னா உங்களுக்கு திருவான்மியூர் போற ரூட்ல ஒரு ஹெச்.பி. பங்க் இருக்கே. அதானே பக்கம்?'.

' ஆமா சார். ஆனா, அவன் அங்கதான் சார் போடுவான். ஏன்னு எனக்குத் தெரியாது சார்'. இப்போது அவன் முகம் சற்றே கலவரப்பட்டது போல் தோன்றுவதை சேது, சங்கர் இருவருமே கவனித்தனர். சங்கர் மணி பார்த்துக்கொண்டார். மணி மதியம் பதினொன்றாகியிருந்தது.

'ம்ம்.. சரி எவ்ளோக்கு டீசல் போட்டீங்க?'.

'சார், 10 லிட்டர் போட்டோம் சார்'.

'சரி இப்ப‌நீ போ, தேவைப்பட்டா கூப்பிடறோம்' என்றுவிட்டு சேது சங்கரிடம் திரும்பி, கண்ணன் திரும்பி நடப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு 'சங்கர், 10 லிட்டர் டீசல் போட்டிருக்கான். 9 லிட்டர் இருக்கு. இன்டிகாவோட மைலேஜ் 18 கிலோமீட்டர் லிட்டருக்கு. அப்படின்னா 18 கிலோ மீட்டர் வந்திருக்கான். இங்கிருந்து 18 கிலோமீட்டர் முன்னாடி யாரோ ஏறியிருக்காங்க. அவந்தான் சஸ்பெக்ட். அவந்தான் கொன்னிருக்கணும்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?'.

'கரெக்ட், சேது'.

'ம்ம்.. அந்த‌டாஷ்போர்ட்ல இருந்த கேப் பாஸஞ்சர் பில் எந்தெந்த கார்ப்போரெட் கம்பெனில ரீஇம்பர்ஸ்மென்ட்க்குப் பயன்படுத்தியிருக்காங்கங்குறத அந்தந்த கார்ப்போரெட்ல விசாரிச்சி லிஸ்ட் எடுங்க‌.அப்டியே அந்தப் பையன் கதிரோட மொபைலுக்கு காலைல 8 மணிலேர்ந்து 10 மணி வரை யாரெல்லாம் கால் பண்ணியிருக்காங்கங்குற லிஸ்டும் எடுத்திருங்க‌'.

'ஓகே சேது' என்றுவிட்டு பாக்கெட்டிலிருன்த‌ஃபோனை எடுத்து ம‌த்திய‌காவ‌ல்துறை த‌க‌வ‌ல் சேக‌ரிப்புப் பிரிவைத் தொட‌ர்பு கொண்டார் ச‌ங்க‌ர்.

போனைக் காதுக்குக் கொடுத்துவிட்டு க‌ட‌ந்து போகும் ச‌ங்க‌ரைப் பார்த்த‌ப‌டியே யோச‌னையில் ஆழ்ந்திருந்தார் சேது. இது நிச்ச‌ய‌ம் கொலைதான். கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் சீராக‌இருந்தான். அவ‌னுடைய‌ந‌ண்பன் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ன் கேடி போலிருக்கிறான். பொதுவாக ஆரோக்கியமான ந‌ட்புக‌ள் இப்ப‌டிச்சாத்திய‌ப்ப‌டாது தான். ஆனால், கதிர் கொல்லப்படவேண்டிய நோக்கம் என்னவாக இருக்கும்? இப்போதுவ‌ரை தெளிவாக‌ஏதும் இல்லை. கதிர் ஒரு கேப் டிரைவர். லோனில் கார் வாங்கியிருக்கிறான். அதைக் கவனமாக திருப்பிச் செலுத்தும் பொறுப்பு அவன் தோரணையில் தெரிகிறது. அப்படியிருப்பவன் கொல்லப்படும் அளவுக்கு என்ன செய்திருப்பான் என்று யோசிக்கத்தோன்றியது. கலிகாலத்தில் பணத்திற்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அவன் பாக்கெட்டில் இருந்த பணம் அப்படியே இருக்கிறது. அது என்னவோ பணத்துக்காகக் கொலை நடக்கவில்லை என்று நினைக்கத்தோன்றியது.

இப்போது ச‌ங்க‌ர் ஃபோனை பாக்கேட்டில் செருகிவிட்டு சேதுவிட‌ம் வ‌ந்தார். சேது மணி பார்த்துக்கொண்டார். மணி பதினொன்றரை ஆகியிருந்தது.

'சேது, அந்த‌கேப் பில்ல‌மூணு பெண்க‌ள்தான் அடிக்கடி த‌ங்க‌ளோட‌க‌ம்பெனில‌ரீஇம்ப‌ர்ஸ் ப‌ண்ணியிருக்காங்க‌. அவுங்கள பத்தின எல்லா தகவலும் அதாவது அவுங்க‌நேட்டிவ், ஸ்கூலிங், காலேஜ், வேலை, அட்ர‌ஸ்லாம் கிடைச்சிடிச்சி. போன்ல‌யே வாங்கிட்டேன். இந்தாங்க‌' என்றுவிட்டு நீட்ட‌, ஆர்வ‌மாய் வாங்கிப் பிரித்தார் சேது.

சேது அந்த லிஸ்ட்டைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தொடர்ந்தார் சங்கர்.

'சேது, அப்புறம் 8 மணிலேர்ந்து 10 வரை கதிருக்கு ஒரே ஒரு கால்தான் வந்திருக்கு. அது ஏதோ ஒரு லோக்கல் பி.சி.ஓ. மாதிரி இருக்கு. அதோட அட்ரஸையும் எடுத்துட்டேன். கொட்டிவாக்கத்துலதான் இருக்கு சேது'.

சங்கர் தந்த லிஸ்டில் மூன்று பெண்க‌ள் பெய‌ர்க‌ள் இருப்பதைக் கவனித்தார் சேது. க‌ல்ப‌னா, மால‌தி, வ‌சுதா. சேது ஒரு நிமிட‌ம் அந்த‌லிஸ்டை தீர்க்க‌மாய் பார்த்துவிட்டு 'என்கூட‌வாங்க‌ச‌ங்க‌ர்' என்று விட்டு நேராக‌ஜீப்பை நோக்கி ந‌ட‌க்க‌, ச‌ங்க‌ர் தொட‌ர்ந்தார். ஜீப் உருமி, இருவ‌ரையும் உள்வாங்கிப் ப‌ற‌ந்த‌து.

'சேது, நாம‌ எங்க‌ போறோம்?'.

'மால‌தி வீட்டுக்கு. அடையார்ல, ஜெகன்னாதன் தெருல ஃப்ளாட் நம்பர் 14/2, அவஸ்தி அபார்ட்மென்ட்ஸ். அதுக்குமுன்னால அந்த டெலிபோன் பூத்துக்கும் போகணும். எது முன்னாடி வருதோ அங்க போகலாம்'.

'ஏன் மால‌தி வீட்டுக்கு சேது?'.

'க‌ண்ண‌ன் சொன்ன‌த‌க‌வ‌னிச்சீங்க‌ளா? ஏனாதி க‌வ‌ர்ன்மென்ட் ஸ்கூல்ல‌ப‌டிச்ச‌தா சொன்னாங்க‌. இந்த‌மால‌தியும் அதே ஸ்கூல்ல‌தான் ப‌டிச்சிருக்கா' என்றுவிட்டு நிறுத்தினார் சேது.

'சேது, க‌ரெக்ட், அப்ப‌க‌ண்டிப்பா பொம்ப‌ள‌ மேட்ட‌ர்தான். க‌ண்ண‌ன் தான் கொன்னிருக்க‌ணும். ரெண்டு பேரும் அவள‌ல‌வ் ப‌ண்ணிருப்பானுங்க‌. அவ‌க‌திர் மேல‌க‌ண்ணு வ‌ச்சிருப்பா. அதான் க‌ண்ண‌ன் கொன்னிருப்பான். அவ‌ன‌லாக்க‌ப்ல‌வ‌ச்சி ரெண்டு த‌ட்டு த‌ட்டினா தெரிஞ்சிடும் சேது'.

'ம்ம்ம்... தேவைப்ப‌ட்டா அதையும் செஞ்சிட‌லாம்' என்றுவிட்டு நிறுத்தினார் சேது. அவ‌ர் முக‌ம் எந்த‌வித‌ச‌ல‌ன‌மும் இல்லாம‌ல் இருந்ததைக் கவனித்துக்கொண்டார் சங்கர்.

முதலில் அந்த டெலிபோன் பூத்தில் நின்றது ஜீப். தெருவிலிருந்து சற்று உள்ளடங்கி இருந்தது அந்தக் கடை. அதை தாண்டித்தான் மாலதியின் தெருவுக்குப் போகவேண்டுமென்று டிரைவரிடம் வழி சொல்லியிருந்தார்கள். வண்டியிலிருந்து இருவரும் குதித்திறங்கினார்கள்.

'சங்கர், கவனிச்சீங்களா?... இங்கிருந்து கொலை நடந்த இடம் 18 கிலோமீட்டர் இருக்கலாம்... சோ இங்கிருந்துதான் கொலையாளி கால் பண்ணியிருக்கான்'.

'ஆமா சேது, கரெக்ட்'.

'ம்ம்..சரி போயி அந்த பி.சி.ஓல 8 லேர்ந்து 10 வரை யாரெல்லாம் பேசினாங்கன்னு விசாரிங்க?'

'ஓகே சேது' என்றுவிட்டு சங்கர் அந்த கடைக்குள் போக, வாசலில் நின்றபடி அந்த இடத்தை அவதானித்துக்கொண்டிருந்தார் சேது. ஆரவாரமான தெருபோல் தெரியவில்லை. அந்தக் கடையில் டெலிபோன் தவிர ஃபாண்டா, பெப்ஸி என குளிர்பானங்களும், ஜெராக்ஸ் மிஷின்களும், ஷாம்பு, சோப்பு , பேனா, பென்சில், நோட்டுப்புத்தகங்கள் முதலான ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. குளிர்பானங்களைக் குளிரூட்ட ஒரு ஃப்ரிஜும் சம்பிரதாயமாய் சுவற்றில் ஒரு கடிகாரம் கூட இருந்தது. சிறிது நேரத்தில் சங்கர் கையில் ஒரு பேப்பருடன் திரும்பி வர இருவரையும் அணைத்துக்கொண்டு பறந்தது ஜீப்.

சங்கர் கொடுத்த காலர்ஸ் லிஸ்டைப் பார்த்தார் சேது. மூன்றே மூன்று குறிப்புகள் இருந்தது. கதிரின் நம்பருக்கு வந்த அழைப்பு 9:30க்கு வந்திருந்தது. அதற்கு முன் 9:15 மணிக்கு ஒன்றும், பின் 9:45க்கு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது. கடைக்காரர், இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். ஒன்று, 9:15 மணிக்கு ஒரு சிறுவனும், 9:30 மணிக்கு ஒரு ஆளும் கால் செய்ததாகச் சொல்லியிருக்கிறார். கால் செய்த அந்த ஆளுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாமென்றும், ஆறடி உயரம் இருந்தானென்றும் சொல்லியிருக்கிறார். சேது கவனமாக எல்லா தகவல்களையும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.

ஜீப் குழப்பமான, நெரிசலான தெருக்களில் ஆங்காங்கே நின்று குறிப்பிட்ட அட்ரஸைத் தோண்டித் துழாவி ஒரு வழியாக அந்த அட்ரஸில் போய் நின்றது. இருவரும் இறங்கி அந்த அபார்ட்மென்டை அவதானித்தனர். வெகு பணக்காரக் களையுடன் கூடிய அபார்ட்மென்ட். பெரும்பாலான வீடுகளில் மனித நடமாட்டமே தெரியவில்லை. ஆனால் எல்லா வீட்டு பால்கனியிலும் ஏதாவதொரு துணி கொடியில் காய்ந்துகொண்டிருந்தது. அபார்ட்மென்ட் வாசலில் ஒரு மாருதி சென் காரும், அதன் பக்கவாட்டில் இரண்டு பேரும் நின்றிருந்தனர். காரின் டிக்கி திறந்திருந்தது. அதனுள் ஒரு ஸ்டெப்னி இருப்பதும் கூடத் தெரிந்தது. முதலில் சுத்தமாக காற்றிறங்கிப் போயிருந்த முன் சக்கரத்தையே பார்த்தபடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் போலீஸ் ஜீப்பைப் பார்த்துவிட்டு சற்று கலவரமானார்கள் அந்த இருவரும்.

சேது முன்னே செல்ல சங்கர் பின்தொடர்ந்தார். தரைதளத்தில் 2 என்று எழுதப்பட்டிருந்த வீட்டின் காலிங்பெல் அழுத்தி காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒரு பெண் லேசாக கதவு திறந்து எட்டிப்பார்த்தார். காவல்துறை சீருடையில் இருவரைப் பார்த்ததும் அந்தப் பெண் வெகுவாக புருவம் சுருக்கினார்.

'மேடம், மாலதி நீங்கதானே. ஐ ஆம் சேது. இன்ஸ்பெக்டர். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்'.

'எத பத்தி சார்?'.

'சத்தியமா என்னோட பாங்க் பாலன்ஸ் பத்தி இல்ல'.

அந்தப் பெண், கொஞ்சம் யோசித்துப் பின் கதவு திறந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். நல்ல நிறமாய் இருந்தாள். உயரம் ஐந்தரை அடி இருக்கலாம். குழந்தை பெற்றவள் போல் தோன்றவில்லை. அவளின் வீடும்தான். அவளைப் பார்க்கையில் நகைகள் மீது ஆர்வமில்லாதவளோ என்று தோன்றியது. ஆனால், நன்றாய் சிங்காரித்துக்கொள்வாள் போலிருந்தது.

  இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வீடு, சிறியதாக ஆனால் அழகாக இருந்தது. ஹாலில் சுவருடன் ஒட்டிக்கொண்ட ஃப்ளாட்ரான் மானிட்டர், கறுப்பு நிறத்தில் சோபா, மரக்கதவிட்ட அலமாரி, பவர் ஹவுஸ், ஷோகேஸ், அதில் நிறைய அழகுப்பொருட்கள் இன்னும் என்னென்னவோ. அடையார் சிக்ஸ்த் சென்ஸில் காணப்படும் சில வீட்டு அலங்காரப்பொருட்கள் கூட இருந்தன. சுவற்றில் சுவர்க்கடிகாரம் மாலை ஐந்தரையைக் காட்டிக்கொண்டிருந்தது. விருந்தோம்பலில் அமர்வுக்கும், பரஸ்பரம், தண்ணீர் பரிமாறல்களுக்குப் பின், சேது ஆரம்பித்தார்.

'மாலதி, நீங்க பூஜ்யம் கம்பெனிலதானே வொர்க் பண்றீங்க?'.

'ஆமா சார்'.

'ஓகே. ஐ திங்க் நீங்க மேரீட். சரிதானே?'.

'ஆமா சார். அவர் பேரு ரமேஷ். ஒரு வேலையா பங்களூர் போயிருக்காரு. காலைல 8 மணிக்கு ஃப்ளைட் சார். ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ். அவரும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலதான் வொர்க் பண்றாரு'.

'ஓகே மாலதி.. எப்போ வருவார்?'.

'அவருக்கு நைட் 7 மணிக்கு ரிடர்ன் ஃப்ளைட் சார். எட்டரை மணிக்கு வீட்ல இருப்பாரு சார்'.

'ம்ம்.. வீக்கென்ட் ஆச்சே. என்ன வேலையா அவர் பங்களூர் போயிருக்காருன்னு சொல்லமுடியுமா?'.

'அவரு பாட்டுல்லாம் நல்லா பாடுவாரு. ரீசென்ட்டா ஒரு காம்படீஷன்ல கூட ஆயிரம் ரூபா கேஷ் ப்ரைஸ் வாங்கினாரு. அது விஷயமா யாரையோ பாக்கணும்னுதான் போயிருக்காரு. காலைல 8 மணிக்கு ஃப்ளைட்' என்றுவிட்டு நிறுத்தினார் மாலதி.

அவளுக்கு மிக அருகில், மரத்தாலான அலமாரி தென்பட்டது. மொத்தம் நான்கு கப்போர்டுகள். சறுக்கும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. மேலிரண்டு கப்போர்டுகள் புத்தகங்களால் நிறைக்கப்பட்டிருக்க, மூன்றாவது கப்போர்டில் இரண்டு ஃபோட்டோக்கள் இருந்தன. ஒன்று அவர் பரிசு வாங்கிய சான்றிதழ் லேமினேட் செய்யப்பட்டிருந்தது. அதற்கு பக்கத்தில் இன்னொன்றில் அவர் கேஷ் ப்ரைஸான ஆயிரம் ரூபாயை இரண்டு கைகளாலும் பிடித்து உயர்த்திக் காண்பித்தபடி சிரித்து நின்றிருந்தார். பக்கத்திலேயே சுவற்றில் ஆணியில் தொங்கவிடப்பட்டு இரண்டு மலைகள் குவியும் இடத்தில், ஒரு ஆறு நேராகச் செல்வது போலொரு காட்சி மிக எளிமையாக இருந்தது மரச்சட்டங்களுக்குள்.

'ஓகே மாலதி. உங்களுக்கு கதிர தெரியுமா?'. வெடுக்கென்று கேட்டார் சேது. அவர் பார்வை, மாலதியின் கண்களை ஊடுருவிக்கொண்டிருந்தது.

மாலதி சட்டென துணுக்குற்றது போல் பார்வை திருப்பி அவரைப் பார்த்ததை இருவருமே கவனித்தனர். சங்கர் ஓரக்கண்ணால் தன்னைப் பார்ப்பதை அப்போதைக்கு அசூயையாக உர்ந்தவர் பதிலுக்குக் காத்திருந்தார் சேது.

'ஆங்.. ம்ம் தெரியும் சார். ஆபீஸுக்கு அவர் கேப்ல தான் போவேன் சார்' என்றுவிட்டு நிறுத்தினாள் மாலதி. அதற்கு மேல் அதுபற்றி அவள் வேறெதுவும் பேசத் தயாராக இல்லையென்பதாக இருந்தது அவளது தோரணை.

அவள் பட்டென்று அத்தோடு நிறுத்தியது பொசுக்கென்று பட்டது சங்கருக்கும், சேதுவுக்கும். முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார் சேது.

'ஓ கேப்லயா போவீங்க. உங்ககிட்ட கார் இல்லயா?'.

'இருக்கு சார். ஒரு சுவிஃப்ட் இருக்கு. ஆனா, சிட்டில டிரைவ் பண்றது ரிஸ்க்குன்னு நான் போறதில்ல சார். அவர்தான் எடுத்துட்டு போவாரு. இப்ப கூட கார் சர்வீஸ்க்கு விட்டிருக்கு. அதான் அவர் ஸ்பைஸ்ஜெட் ஃப்ளைட் புக் பண்ணிப் போயிருக்காரு'.

'ஓ மாருதி சர்வீஸ் ஸ்டேஷன்லயா?'.

'இல்ல சார். நாலு தெரு தள்ளி முருகன் கார் சரிவீஸ் சென்டர்ல தான் விட்டிருக்காரு சார். எப்பவுமே அங்கதான் விடுவாரு'.

'ஓ உங்க கார் நம்பர் என்னன்னு சொல்ல முடியுமா?'.

'TN 11 M 1980 சார்'

'ஓ..ஓகே .. ஒண்ணுமில்ல மாலதி. கதிரோட பாஸஞ்சர் பில்லுல சில பிரச்சனை இருக்கு. உங்களுக்கு அதனால ஏதும் பிரச்சினை ஏதுமில்ல. சொல்லிட்டுப் போலாம்னு தான் வந்தோம்' என்றுவிட்டு எழுந்துகொண்டார் சேது.

'ஓகே தாங்க்ஸ் சார்' என்றுவிட்டு அவள் வாயை மூடிக்கொண்டதில் அவள் அதிகம் வாயை விடவேண்டாமென எச்சரிக்கை உணர்வு கொண்டவளாகத் தோன்றியதை இருவருமே கவனமாக்க் குறிப்பெடுத்துக்கொண்டனர்.

சேதுவைத் தொடர்ந்து சங்கரும் எழுந்துகொள்ள, இருவரும் வெளியே நடந்து ஜீப்புக்கு வந்தனர்.

'சேது, இது நிச்சயம் பொம்பள மேட்டர்தான். கதிர் ஸ்கூல் ஃப்ரண்டுன்னு அவ காமிச்சுக்கவே இல்ல பாத்தீங்களா? நமக்குத் தெரியும்னு அவளுக்குத் தெரியல. டெலிஃபோன் பூத்ல கூட 9:30க்கு கால் பண்ணினது ஒரு ஆளு, ஆறடி உயரம்னு சொன்னார். அது கண்ணனாத்தான் இருக்கும். கண்டிப்பா இது கண்ணன் பண்ண கொலையாத்தான் இருக்கும் சேது'.

'ம்ம்.. வாங்க.. ஊர்ஜிதம் பண்ணிக்கலாம்.. முதல்ல அக்கம்பக்கத்துல விசாரிக்கலாம். கணவன்- மனைவி உறவு எவ்வளவு தூரம்ன்னு' என்ற சேது சங்கருடன் வெளியே வந்தார். அவர்களுக்குப் பின்னால் அந்தப் பெண் மாலதி வீட்டைத் தாழிடுவது தெரிந்தது. சேதுவும் சங்கரும் வெளியே அபார்ட்மென்ட் மெயின் கேட் வரை வர, அங்கு இப்போது அந்த மாருதி கார் மட்டும், டிக்கி திறந்த மேனிக்கு நின்றிருக்க, பக்கத்தில் நின்றிருந்த இருவரும் இப்போது இருக்கவில்லை. இரண்டு நிமிட இடைவெளி விட்டு, மீண்டும் சேது மாலதி வீட்டருகே சென்று முதல் தளம் செல்லும் படிக்கட்டுகளில் ஓசைப்படாமல் ஏற, பின்னாலேயே சங்கரும் தொடர்ந்தார் மெளனப் பூனையென. சேதுவுக்கு அந்தப் பெண் மாலதி கீ ஹோல் வழியே தாங்கள் இருவரும் வெளியே செல்வதை ஊர்ஜிதம் கொள்வாள் என்று தெரிந்திருந்தது.

இருவரும் நேராக முதல்தளம் சென்று வலதுபக்க வீட்டைத் தட்ட கீழே நின்றிருந்த அந்த இருவரில் ஒருவர் திறந்தார். முகத்தில் கேள்விக்குறியுடன். அவர் முகத்துக்கு நேரே வெளிப்புற சுவற்றில் சுப்பிரமணியன், ‍அபார்ட்மென்ட் செக்ரட்டரி என்று ஆங்கிலத்தில் தமிழிலும் எழுதியிருந்தது. உள்ளே ஒரு ஜமாவே இருந்தது. நான்கைந்து விடலைகள், அவர்களுள் சில பெண்கள், லேட் நாற்பதுகளில் ஒரு பெண். ஒவ்வொருவர் கையிலும் ஜிலேபியோ ஜாங்கிரியோ லட்டுவோ இருந்தது. ஏதோ ஒரு வெற்றியை வாழ்த்த வந்தவர்கள் போல் ஆரவாரமாய் குதூகலமாய் நின்றிருந்தனர்.

'சார், சொல்லுங்க சார்'.

'இன்ஸ்பெக்டர் சேது.. மார்னிங்.. இவரு சங்கர், சப் இன்ஸ்பெக்டர்'.

'ஐ ஆம் சுப்பு சார். நைஸ் மீட்டிங் யூ சார். வாங்க சார்'.

'மிஸ்டர் சுப்பு, இந்த அபார்ட்மென்ட்ல சமீபமா போன மூணு மாசத்துல ஏதாவது பிரச்சினை நடந்திச்சா? யாரோட லெட்டர்/ ரிஜிஸ்தர் தபால் ஏதாச்சும் நீங்க வாங்கி வச்சிருந்தீங்களா? பூட்டியிருக்குற வீட்டுக்குள்ள கேஸ் லீக் அப்டி இப்டின்னு ஏதாச்சும்...?'

'சார், அப்டில்லாம் ஏதும் இல்ல சார்.எல்லாரும் ரெஸ்பான்ஸிபிளா இருப்பாங்க சார். நோ கம்ப்ளெயின்ட்ஸ் சார். இன்ஃபாக்ட் ரொம்ப‌காம் பீபிள் சார், எக்சப்ட் மாலதி ரமேஷ் கபிள் சார்'.

'ஓ அவுங்க அடிக்கடி சண்ட போட்டுப்பாங்களா?'

'அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனா, ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால, பாத்துக்குறதே அபூர்வம் சார். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எதையாவது ஆஃப் பண்ண மறந்துடுவாங்க. பாத்துக்குற நாளும் சண்டை போட்டுக்குவாங்க சார். என்ன ஏதுன்னு எங்களுக்குத் தெரியாது சார்'

அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மற்றவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென சிரிப்பும் கேலியுமாகப் பேசிக்கொண்டிருக்க இப்போது அவர் சம்பிரதாயமாய் சேதுவிடம்,

'சார், என் பையன் ஸ்கூல்ல நடந்த பெயின்டிங் காம்படீஷன்ல பரிசு வாங்கியிருக்கான் சார். இது அந்த சர்டிபிகேட் சார். அதான் சின்னதா ஒரு செலிப்ரேஷன். ஸ்வீட் எடுத்துக்கோங்க சார், டேய் ரகு இங்க வா... இவந்தான் சார் என் பையன்' என்றுவிட்டு சற்றே எட்ட இருந்த டைனிங் டேபிளில் இருந்த ஸ்வீட் பாக்ஸை வலதுகையிலும், இடது கையில் அந்த சர்டிபிகேட்டையும் நீட்டினார். அந்த சர்டிபிகேட்டில் ராஜலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என கொட்டை எழுத்தில் இருக்க, கீழேயே அட்ரஸ், ஃபோன் நம்பர், இத்தியாதி இத்தியாதி இருந்தன. இப்போது அவர் பக்கத்தில் அவரின் பையன் ரகு வந்து நின்றான். வயது 17 இருக்கலாம். ஐந்தரை அடி உயரம். நல்ல நிறம். ஜீன்ஸ் பாண்ட், டிசர்ட் என ஸ்டைலாக இருந்தான்.

'ஓ கங்க்ராட்ஸ், பையன் பெயின்டிங்லாம் பண்ணுவாரா..குட் குட்.. ?' என்றுகொண்டே ஸ்வீட்பாக்ஸிலிருந்து லட்டு ஒன்றை எடுத்து வாயில்போட்டுக்கொள்ள‌, சங்கரும் தன் பங்குக்கு ஒரு லட்டை சுவீகரித்தார்.

'ஆமா சார், இதோ பாருங்களேன்' என்றுவிட்டு கையிலிருந்தவற்றை டைனிங் மேஜையில் வைத்துவிட்டு அதே டைனிங் டேபிளில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சார்ட் பேப்பர்கள் சிலவற்றை விரித்துக் காண்பிக்க, வாட்டர்கலரிங்கில் பூக்களும், பூனைகளுக்கும் மத்தியில் பாதி தெரியும் வகையில் பெண்ணின் முகம் ஒன்றிலும், இன்னொன்றில் பாலைவனத்தின் ஒற்றை மரத்தில், ஒரு பறவையின் நிழலில் ஒரு பெண்ணின் முகமுமாக இருந்தது. இவ்வகை விடலைப் பையன்கள் ஒரு தினுசு. இவர்களின் ஓவியங்களில் பெண் முகங்கள் இருக்கும். கேட்டால் மேஜிக்கல் ரியலிசம், முந்திரிபாயாசம் என்று வகைவகையாக டயலாக் விடுவர்.

'ஓகே கீழே நிக்கிதே அது உங்க சென் காரா? என்ன ப்ராப்ளம்? பங்க்ச்சரா?'.

'ஆமா சார், பங்க்ச்சர் சார். ஸ்டெப்னி இருக்கு. ஆனா, ஜாக்கி டிக்கிலதான் இருந்தது. அத காணல சார். போன தடவை மெக்கானிக் ஷாப்ல சர்வீஸ் விட்டப்போ மிஸ் ஆயிடிச்சோன்னு தெரியல சார்'.

'ஓ.. ஓகே ஓகே.. கேரி ஆன் சுப்பு.. நாங்க வரோம்'.

'ஓகே சார்' என்றுவிட்டு அவர் சிரித்து வழியனுப்ப இருவருமாய் வெளியே வந்தார்கள்.

சேது சங்கருடன் நேராக முருகன் கார் சர்வீஸ் சென்டர் சென்று அதே சுவிஃப்ட் கார் சர்வீஸில் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டார். அதே நேரம் சங்கர் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு போன் செய்து ஸ்பைஸ்ஜெட் ஃப்ளைட்டின் பாஸஞ்சர் மானிஃபெஸ்டில் ரமேஷ் என்ற பெயரில் ஒருவர் ஃப்ளைட் போர்ட் செய்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டார். சேது மணி பார்த்துக்கொண்டார். மணி மாலை ஐந்தைத் தாண்டியிருந்தது. தானோ, சங்கரோ அதுவரை மதிய சாப்பாடு சாப்பிடவே இல்லையென்பது நினைவுக்கு வந்தது. ஜீப் சேதுவையும், சங்கரையும் ஏற்றிக்கொண்டு கொலை நடந்த ஈ.சி.ஆர். ரோட்டிற்கு விரைந்துகொண்டிருந்தது.

'நீங்க என்ன நினைக்கிறீங்க சங்கர்?'

'சேது, இட்ஸ் க்ளீன் நவ். கதிரோட டைரில மாலுன்னு போட்டிருக்கு. அது மாலதியாதான் இருக்கணும். மாலதி மேல அவனுக்கு பால்ய காதல் இருந்திருக்கும். கண்ணனுக்கு அவ மேல ஒரு கண்ணு இருந்திருக்கலாம். மாலதிக்கும், அவ புருஷனுக்கும் சண்டைகள் இருந்தாலும் இந்தக் கேஸைப் பொறுத்தவரை ரமேஷ் காலைலயே பங்களூர் போயிட்டார். ஃப்ளைட் போர்ட் பண்ணிட்டதா ஏர்போர்ட்ல கன்ஃபர்ம் கூட பண்ணிட்டாங்க. கதிர் நம்பருக்கு 9:30 க்கு கால் வந்திருக்கு. 9:30 க்கு கால் பண்ணினவன் ஒரு ஆளுன்னு அந்தக் கடைக்காரன் சொன்னது கண்ணனாகத்தான் இருக்கணும் சேது. சோ, கண்ணன் தான் கொன்னிருக்கணும் சேது'.

'ஒரு வேளை, இத மாலதிக்கு வேண்டப்பட்டவங்க‌பண்ணியிருந்தா?'.

'யாரு ரமேஷா!! அதெப்படி காலைல 8 மணி ஃப்ளைட்டுக்கு பங்களூர் போனவன் 9:30 மணிக்கு கால் பண்ண முடியும், கொலை பண்ண முடியும் சேது?'

சேது பதிலேதும் பேசாமலிருந்தார். அவர் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. சிறிது நேரங்கழித்து சேது தன்னுடைய மொபைலை பாக்கேட்டிலிருந்து எடுத்து ஏதோ ஒரு நம்பரைச் சுட்டி, காதில் பொறுத்திக்கொண்டார்.

'ஹலோ, நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது பேசறேன். ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக....'

சங்கர் தனக்கு தீவிரமாக பசிப்பதை உணர்ந்துகொண்டவராய் ஒருவித ஆயாசத்துடன் அமர்ந்திருந்தவாக்கில் முறுவலித்தார். அவருக்குக் காது அடைப்பதைப் போலிருந்தது. அவ்வப்போது வந்த கொட்டாவிகள் மேலும் காதுகளை செவிடாக்கின. சேது ஃபோனில் பேசிக்கொண்டிருந்த சில வார்த்தைகள் காதிலேயே விழாதது பசியால்தானோ என்று நினைத்துக்கொண்டார். தான் உணர்வது போல் சேதுவும் பசியை உணர்ந்திருப்பாரா என்று நினைக்கத்தோன்றியது. ஆசை புலன்களை வெல்கிறது. பசி புலன்களை அடைக்கிறது. விசித்திரமான உணர்வுகளுக்குப் புலன்கள் வெறும் பகடைக்காய் ஆகின்றன. சங்கருக்கு சட்டென ஏதோவொரு சர்சின் பாதிரியாராகிவிட்ட உணர்வு மேலிட்டது.

சேது காதுக்குக் கொடுத்திருந்த போனை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொள்வது தெரிந்தது.

'சேது, கண்ணன்தான் கொலை பண்ணீயிருக்கான். மாலதிய ஒரு தலையா கண்ணன் லவ் பண்ணிருக்கான். ஆனா, மாலதி கதிர பத்தி சொல்லாம விட்டத பாத்தா அவளுக்கும் கதிர் மேல கண் இருந்திருக்கலாம். அவன் தான் காலைல கதிர கடைசியா பாத்திருக்கான். ரமேஷ் சென்னைலயே இல்ல. கதிர கொலை பண்ணனும்ற மோட்டிவ் வேற யாருக்கும் இல்ல. டீசல் பங்க் வரைக்கும் டோப் பண்ணிருக்கான். தன்னோட மொபைல்ல கூப்பிட்டா எவிடென்ஸ் ஆயிடுமோன்னு லோக்கல் பி.சி.ஓலேர்ந்து கூப்பிட்டிருக்கான். 18 கிலோ மீட்டர் தனியா கூட்டிட்டுப் போயி கொலை பண்ணிருக்கான். சிம்பிள். நமக்குத் தெரியவேண்டியது, கதிர் மாதிரி கண்ணனுக்கும் மாலதி மேல லவ்வான்னு தெரியணும் அவ்ளோதான். லாக்கப்ல வச்சி நாலு தட்டு தட்டினா அதை அவனே சொல்லிடுவான் சேது. எல்லாமே சரியாதான் இருக்கு சேது'.

'ம்ம்... ஆமா சங்கர். எல்லாமே சரியாதான் இருக்கு. ஆனா, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அத தான் க்ளியர் பண்ணிக்க ட்ரை பண்றேன் சங்கர்' என்றார் சேது.

'அது என்ன மேட்டர் சேது?'.

'ஆங்..அதுவா... அது...' என்று சேது ஏதோ சொல்ல வாயெடுக்கும்போதே, மீண்டும் அவரது தொலைபேசி மணியடிக்க, மொபைலை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார் சேது.

'ஹலோ ..சேது ஸ்பீக்கிங்.. ஆங்.. ம்.. ஓகே ஓகே குட்... தாங்க்ஸ் ஓகே ஓகே' என்றுவிட்டு போனை வைத்துவிட்டு திரும்பி டிரைவரிடம் சொல்லி ஜீப்பை மீண்டும் மாலதி வீட்டுக்கு திருப்பச்சொல்ல, ஜீப் அடுத்து வந்த ஒரு வளைவில், ஒரு அரைவட்டம் அடித்துத் திரும்பி மாலதி வீட்டை நோக்கி விரைந்தது.

மாலதி வீட்டை நோக்கி போகச் சொல்லும் சேதுவைப் புரியாமல் சங்கர் ஏதோ கேட்க எத்தனித்து

'சேது, என்னாச்சு... மாலதி வீட்டுக்கு ஏன் போறோம்?' என்று கேட்க‌,

'அங்க வந்து பாருங்க ..தெரியும்... ' என்று சேது சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஜீப் மாலதி வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்து வீட்டின் முன் நின்றது. அவர் முகம் இப்போது தெளிவாக இருப்பதாகத் தோன்றியது சங்கருக்கு. ஆனால், காரணம் புரியவில்லை.

ஜீப்பிலிருந்து மிடுக்காய் சேது இறங்க, பின்னாலேயே சங்கரும் இறங்க, இருவரும் மாலதி வீட்டுக்கதவை நெருங்கினார்கள். சேது மாலதி வீட்டுக்கதவின் காலிங்பெல்லை அழுத்தாமல் நேராக மாடிப்படி ஏறி முதல் தளம் செல்ல, சங்கர் ஏதும் புரியாமல் சேதுவைப் பின் தொடர்ந்தார். சேது நேராக சுப்புவின் வீட்டிற்கு சென்று காலிங் பெல் அழுத்த, சுப்பு கதவைத் திறந்தார்.

'சார், சொல்லுங்க சார்.. எதாச்சும் மறந்து வச்சிட்டுப் போயிட்டீங்களா?'.

'நோ சுப்பு, உங்க பையன கொஞ்சம் கூப்பிடறீங்களா? அவர்கிட்ட கேக்க சில கேள்விகள் இருக்கு. பதில் தெரிஞ்சா உபயோகமா இருக்கும்'.

சுப்பு என்ன என்பதாய் ஆச்சர்யமா அதிர்ச்சியா என்று தோன்றாத வகைக்குப் பார்த்துவிட்டு உள்ளே திரும்பி, ரகுவைக்கூப்பிட, உள் ரூமிலிருந்து வெளியே வந்தான் ரகு. வீட்டில் இப்போது அத்தனை ஆரவாரமிருக்கவில்லை. கலைந்து கிடந்தவற்றை ஒதுங்க வைத்துக்கொண்டிருக்கும் தோரணை தெரிந்தது.

'ரகு, உன்னோட ஸ்கூல் பேக்க கொஞ்சம் கொண்டு வாயேன். நான் பாக்கணும்'.

'ஓகே அங்கிள்' என்றவன் முகத்தில் பீதி மெல்ல அப்பிக்கொள்ள, டைனிங் டேபிளுக்கு அருகாமையில் பால்கனியை ஒட்டி வைத்திருந்த பேக்கை எடுத்து நீட்டினான்.

'அங்கிள் ..இதான் அங்கிள் என் பேக்' அவன் குரலில் பதட்டம் கூடியிருந்தது. முகம் மெல்ல மாறத் துவங்கியிருந்தது. பேக்கை வாங்கிப் பிரித்துப் பார்த்த சேது வார்த்தைகளில் அதிகம் கடினம் கூட்டியவராய் உருமத் துவங்கினார்.

'இன்னிக்கு ஸ்கூலுக்கு எத்தனை மணிக்கு போன ரகு?'.

'ச..சார்..அ..அது..வவந்து.. காலைல எட்டரைக்கு சார்'. என்றவனுக்கு விரைந்து ஓடும் மின்விசிறியைத் தாண்டி வியர்க்கத் துவங்கியிருந்தது. ரகு பதறுவது குறித்து அதிகம் கவலைப்பட்டவராய் இடைமறித்தார் சுப்பு.

'சார், அவன் காலைல 8 மணிக்கே ஸ்கூல் கிளம்பிட்டான் சார். நீங்க அப்டில்லா...' என்றவரை இடைமறித்தார் சேது.

'பொய், நீ பதினொன்றரைக்குத் தான் போயிருக்க. லேட்டா போனதுக்கு ஃபைன் கட்டியிருக்க. கொஞ்சம் முன்னாடி உன் ஸ்கூல்ல விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். கீழ்வீட்டு மாலதி ரெகுலரா கேப்ல போறது உனக்குத் தெரிஞ்சிருக்கு. மாலதி மேல ஒரு கண் உனக்கு. அதுக்கு சாட்சி மாலதிக்கு இருக்குற அதே கன்னக்குழி உன் பெயின்டிங் எல்லாத்துலயும் இருக்கு. மாலதி வீட்ல இருக்குற பெயிண்டிங்க‌மேலோட்ட‌மா பாத்தா ஒரு இய‌ற்கைக் காட்சி. ஆனா, அதுல‌ம‌லைக‌ளைவ‌ச்சி இத‌ய‌மும், ஆத்தை வ‌ச்சி அம்புமா இத‌ய‌த்தை குத்தாதேங்கறா மாதிரி காட்சி வ‌ச்சிருக்க‌. அது உன்னோட‌பெயிண்டிங்னு கீழே ர‌குன்னு உன் கையெழுத்து வேற‌. மாலதியும் கதிரும் பால்ய காதலர்கள்ங்குறது உனக்கு மாலதி மூலமா தெரிஞ்சிருக்கு. அவுங்க பழக்கம் இப்பவும் தொடர்றது உனக்கு புடிக்கல. மாலதிகிட்ட நீ சொல்லிருக்கலாம். அவ கேக்காம இருந்திருக்கணும். உங்க வீட்டு கார்ல இருந்த ஜாக்கிய பேக்ல மறைச்சி எடுத்துட்டு போயிருக்க. அதுக்கு சாட்சி துருப்புடிச்ச இரும்பு உன் பேக்ல ஒட்டியிருக்கு. கதிர் கேப் ஒரு லோக்கல் பி.சி.ஓலேர்ந்து 9:30 க்கு கால் பண்ணி வரவழைச்சி கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டு போயி அங்க இந்த ஜாக்கியால அடிச்சி கொன்னிருக்க. நீ கால் பண்ணினதுக்கு சாட்சி அந்த பி.சி.ஓ கடைக்காரன். அவன் கடிகாரம் 15 நிமிஷம் ஸ்லோ. அவன்கிட்ட விசாரிச்சாச்சு. 9:15 க்கு ஒரு ஸ்கூல் பையன் பண்ணினதா சொன்ன கால் உண்மைல 9:30க்கு. அத பண்ணினது நீ. அப்புறம் எதுவும் நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு பதினொன்றரைக்கு போயிருக்க‌' சொல்லிவிட்டு சேது நிறுத்த, சேதுவையே திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ரகு மெளனம் கலைத்துக் குலுங்கிக் குலுங்கி அழத்துவங்கினான். அவன் அழுவதைப் பார்த்து அதிர்ச்சியில் சிலையாகி நின்றார் சுப்பு.

முற்றும்

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6133)

Saturday, 1 December 2012

கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு


கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு


சென்னையில் 2013 ம் வருடத்தின் புத்தகக் கண்காட்சிக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த‌ வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியின் நினைவுகள் நியாபகத்திற்கு வருகின்றன...

ஜனவரி (2012) 5ம் திகதி துவங்கி 17ம் திகதி வரை நடைபெற்ற 35 வது புத்தகக்கண்காட்சியில், உயிர்மை ஸ்டாலில் நண்பர் இளங்கோவுடன் நின்று கொண்டிருந்தேன். ஸ்டால் வாசலில், கவிஞரும், எழுத்தாளரும், உயிர்மை ஆசிரியரும், ஊடகவியலாலரும், உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும்... (ஷ்ஷப்பா... இவர் செய்திருப்பதை எழுத ஆரம்பித்தாலே தனியாக அதற்கொரு கட்டுரை எழுத வேண்டும் போல் இருப்பதால் எளிமையாக கவிஞர் மனுஷ்யப்புத்திரன் என்றே விளிக்கிறேன்.. ;)) கவிஞர் மனுஷ்யப்புத்திரனிடம் பலர் கையழுத்து வேட்டை நடத்திக்கொண்டிருந்தார்கள்.. என்னதான் உயிர்மையின் உயிரோசையில் என் ஆக்கங்கள் வெளிவந்திருந்தாலும், அவருக்கு என்னை நினைவிருக்குமோ என்கிற ஐயப்பாடு முதலிலிருந்தே இருந்தது.

பிற்பாடு நானும் இளங்கோவும் அவரை சந்தித்தோம். 'சார், என் பெயர் ராம்ப்ரசாத். உயிரோசையில் எழுதுகிறேன்' எனும்போதே என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'கவிதைகள், த்ரில்லர், சஸ்பென்ஸ், காதல் கதைகள்னு வெரைட்டியாக நன்றாக‌ எழுதுகிறீர்கள்..' என்றார். 'ஒரு நல்ல எழுத்தாளன் எல்லாவகையான எழுத்தும் எழுத வேண்டும்' என்றும் பேச்சினூடே சொன்னார்.

நான் எழுத‌த்துவ‌ங்கிய‌து 2009 ன் துவ‌க்க‌த்தில். ஒவ்வொரு இத‌ழுக்கும் ஆக்கங்களை அனுப்புவ‌து என்ப‌தே எனக்கு மிகச் சிர‌ம‌மான‌ காரியமாக இருந்தது. இதுவ‌ரை வேறெங்கிலும் வெளிவ‌ராத‌தாயும், எழுத்துப்பிழைக‌ள் இல்லாததாயும் இருக்க‌ வேண்டும் அனுப்ப‌ வேண்டிய‌ ஆக்க‌ங்க‌ள். எழுதிய‌வற்றை மீண்டும் மீண்டும் ரிவ்யூ செய்கையிலும் அலுவலக மடிக்கணிணி, என் சொந்த மடிக்கணிணி என்று எழுதியும் ப‌ல‌ வெர்ஷ‌ன்க‌ள் கிடைத்து, எது க‌டைசி வெர்ஷ‌ன் என்ப‌து ஆக்க‌த்திற்கு ஆக்க‌ம் குழ‌ப்பி, அனுப்பிய‌ ஆக்க‌ங்க‌ளில் எது எங்கே வெளியாகியிருக்கிற‌து என்று பார்த்து, வெளியாகாத‌வைக‌ளை மீண்டும் எந்த‌ இத‌ழுக்கு அனுப்புவ‌து என்றெல்லாம் யோசிப்ப‌து ஆக்க‌ங்க‌ளை உருவாக்கும் நேர‌த்தை க‌ப‌ளீக‌ர‌ம் செய்துவிடும்.

பிரச்சனையின் தீவிரத்தை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒரு சமயம், ஆனந்த விகடனுக்கு என் கதை ஒன்றை அனுப்ப, ஆனந்த விகடனின் ஆசிரியர் மானா பாஸ்கர், பின்வருமாறு பதில் அனுப்பினார்..
"...... உங்களுக்கு கதை எழுத மிக மிக நன்றாக வருகிறது சார். உங்களால் இதைவிட சிறப்பான கதையை விகடன் வாசகர்களுக்கு வழங்க முடியும் என்பதை உங்கள் சர சரவென் நகரும் எழுத்து நடை மெய்ப்பிக்கிறது".

(கிட்டத்தட்ட இதே போன்றதொரு பதிலை, வடக்குவாசல் யதார்த்தா பென்னேஸ்வரனும் ஒரு கட்டத்தில் சொல்லியிருக்கிறார்.) அப்போதிருந்து, எழுதும் எல்லா சிறுகதைகளையும் எல்லா இதழ்களுக்கும் அனுப்ப முடியாது போயிற்று.

இந்த‌க் குழ‌ப்ப‌த்தில் என் மின்ன‌ஞ்ச‌லின் ஃபார்ம‌ட்டை நான் ச‌ற்றும் க‌வ‌னித்திருக்க‌வில்லை. அதையும் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்கள் க‌வ‌னித்து நினைவூட்டிய‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அதற்கு பின்னும் அவருடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கெல்லாம் என்னை எங்கே நினைவிருக்கப்போகிறது என்கிற என் எண்ணம் பொய்த்துப்போனதில் எனக்கு மட்டும் உள்ளுக்குள் எதிலோ மிதப்பது போலவே இருந்தது.

வெகு சமீபமாக கூட‌, நவம்பர் 2012, 3ம் தேதி அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தோம். பேச்சினூடே,

".. நீங்கள் கூட த்ரில்லர், சஸ்பென்ஸ், டிடெக்டிவ் எல்லாம் எழுதுவீர்களே.. அது போல் நிறைய‌ எழுதுங்களேன்" என்றார். நான் அதுபோல் நிறைய எழுதி கைவசம் வைத்திருந்தாலும், தமிழ் எழுத்துலகில், அதுபோல் எழுதுவதை மலினமான எழுத்து என்று ஒதுக்கி வைக்கும் போக்கு இருப்பது போல் அவதானித்திருந்ததால், அவற்றை அனுப்பியிருக்கவில்லை. அதையே அவரிடம் கூறினேன். அனுப்ப தயக்கமாக இருக்கிறது என்றேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்றும், தயக்கமில்லாமல் அவ்வகை கதைகள் எழுதும்படியும் கூறினார்.

Tuesday, 27 November 2012

ராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை

2.12.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'எவ்வகை ரோஜா' என்ற‌ க‌விதை ப‌க்க‌ம் 18 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதை வெளியான ராணி வார இதழின் 18 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


அந்தக் கவிதை இதோ:

அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்...


புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம் வகை
ரோஜாக்களில் இவள்
எந்த ரகம் என்றே...

Monday, 19 November 2012

பழிக்குப்பழி - சிறுகதை


பழிக்குப்பழி - சிறுகதை

சுள்ளென்று அடிக்கும் வெய்லில், எங்கும் நிறைந்திருந்த பொட்டல் காட்டு மணலில் அவ்வப்போது லேசாக சுற்றிச்சுழலும் புழுதியில், நெற்றி வியர்வை இடது காதுக்கும் புருவத்துக்கும் இடையில் மெல்ல வழிவதைத் துடைக்கும் எண்ணம் அறவே இன்றி, நிலைகுத்தி வெறித்த பார்வையுடன் நான்காவது சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக்கொண்டிருந்தான் சுதாகர்.

'அந்த மனோகரைப் பழிவாங்க வேண்டும். எத்தனை பெரிய துரோகி அவன். அவனுக்காக என்னவெல்லாம் செய்திருப்பேன். கடைசியில், என்னையே காட்டிக்கொடுத்துவிட்டானே. 8 வருடங்கள் ஜெயிலில் கம்பி எண்ண வைத்துவிட்டானே. பணம், சொகுசு வாழ்க்கை, வேளா வேளைக்கு ருசியான சாப்பாடு எல்லாம் போச்சு. அவனை நிச்சயம் பழிவாங்கியே ஆகவேண்டும் சுதாகர் ஆத்திரத்துக்கு சிகரெட் துண்டுகள் தற்காலிகமாய் பலியாயின.

சுதாகர், மனோகர் இருவரும் கிரிமினல்கள். திருட்டு, கொலை, கொள்ளை, கை எடுப்பது, கால் எடுப்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். இன்னது செய்ய இத்தனை ரேட் என்று பேசிவிட்டால் போதும். பணம் முழுதும் கைமாறியதும் சொன்னதைச் சொன்னபடி செய்துவிடுவார்கள். கான்ட்ராக்ட் கில்லர்களாக இருப்பதில் பெருமை வேறு இவர்களுக்கு. ஒரு காலத்தில் இருவரும் இணைந்துதான் தொழில் செய்தனர். ஒரு சேட்டைக் கொலை செய்யப்போன இடத்தில், சுருட்டிய பணத்தில் பங்கு பிரிப்பதில் சாதாரணமாக எழுந்த வாக்குவாதம், யார் பெரியவன் என்ற ரீதியில் திரும்பி, இருவர் நட்பையும் கொன்று போட்டதில் பிரிந்தவர்கள். அதன் பிறகு, மனோகர் வேறு ஒரு கும்பலுடன் இணைந்து தொழில் செய்யத் தொடங்கினான். சுதாகர் தனியே தொழிலைத் தொடர்ந்தான். சில காலம் பிரச்சினையின்றிதான் கழிந்தது.

மனோகர் புதிதாய் சேர்ந்திருந்த கும்பல் சற்றே அரசியல் செல்வாக்கானது. மூடிவிட்ட கொலை கேஸ் ஒன்றை போலீஸ் திருப்பி எடுக்க, அதில் சுதாகரும், மனோகரும் சம்பந்தப்பட்டிருக்க , மனோகர் தான் தப்பிப்பதற்காக, அதில் சுதாகரை மாட்டி விட்டுவிட்டான். மனோகரிடம் அரசியல் செல்வாக்கு இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சுதாகர், அந்த ஒரு கொலைக்காக 8 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்ததில் வந்த க்ரோதம் இது.


அவனை சும்மா விடக்கூடாது. பழிக்குப் பழிவாங்க வேண்டும். 8 வருடங்கள் ஜெயிலில் கல்லுடைத்திருந்தாலும், இரத்தத்தில் இறங்கியிருந்த கிரிமினல் புத்தி, பாய முனையும் ஈட்டி போல கூராக இருந்தது. தீர்மானமாய், வெகு நேரம் யோசித்தான். மனோகர் சாக வேண்டும். அவன் சாவில்தான், தான் இத்தனை காலம் ஜெயிலில் கல்லுடைத்த வலி போகும். என்னை மாட்டிவிட்டு அவன் ஜெயித்துவிட்டதாக நினைக்கிறான். அவனைக் கொல்ல வேண்டும். அவன் உயிர் பிரியும் நேரம் அவன் கண்முன் தான் கர்ஜிக்கவேண்டும். 8 வருடம் தன் தூக்கம்காணா இரவுகளின் முடிவை அவன் கண்களில் பார்க்க வேண்டும். சுதாகர் உக்கிரமாய் கழுவிக்கொண்டான்.

எப்படிக் கொல்லலாம் என்று யோசிக்கையில் நகரத்தின் மத்தியில் அமைந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் நினைவுக்கு வந்ததில் அவனின் அந்நேரம் வரை சுருங்கிய நெற்றி, சற்றே தளர்ந்து இயல்பானது. உடனேயே பஸ் ஏறி அந்த ஹோட்டலை அடைந்தான். நேராக ஹோட்டலுக்குள் செல்லாமல், பக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து படியேறி நான்காம் தளம் வந்தான். அந்த ஹோட்டல் தெளிவாகத் தெரிந்தது.

பற்ற வைத்து இரண்டு சிகரெட்டுகள் முடிக்கும் முன் ப்ளான் ரெடி.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே அறை எடுத்துத் தங்க முடியுமென்கிற அளவிற்கு உயர்தர ஹோட்டல். சில சமயங்களில், தானும் மனோகரும் இணைந்து தொழில் செய்த காலத்தில் சில தொழிலதிபர்கள், இது போன்ற ஹோட்டல்களில் வந்து தங்கித்தான் தங்கள் வேலைக்கு அசைன்மென்ட் கொடுப்பார்கள். தாங்கள் இங்கு வந்து தங்கியதை மறைக்க, வேறு பெயரிலேயே தங்குவார்கள். ஹோட்டல் பில்லும் க்ரெடிட் கார்டுகள் மூலமாகச் செலுத்தப்படாமல், பணமாகவே செலுத்தி வேலை முடிந்ததும் போய் விடுவார்கள். சுதாகர், மனோகருக்குமான கான்ட்ராக்ட் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும். சுதாகரோ, மனோகரோ ஏமாற்ற நினைத்தால், அவர்களை விட பெரிய ஆட்களை வைத்து, இவர்களையும் க்ளோஸ் செய்துவிடுவார்கள் என்பதால் வேலை தொழில் பக்தியுடன் நடக்கும். சுதாகரையோ, மனோகரையோ நேரடியாக நெருங்க முடியாது. இதற்கென ரகசிய ஏஜன்ட்கள் இருப்பார்கள். அவர்கள் தான் கோர்த்துவிடுவார்கள். இது ஒரு நெட்வொர்க்.

மூன்று நாட்கள் அந்த ஹோட்டலை இப்படி இந்தக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் நின்று வேவு பார்த்ததில் ப்ளான் கச்சிதமாக ரெடி. இந்த நிமிடம் வரை, தான் அந்த ஹோட்டலின் உள் நுழையவில்லை. அதனால், கண்காணிப்பு காமிரா கண்களுக்குத்தான் எவ்வகையிலும் பரிச்சயமில்லை. மூன்றாவது மாடியில், லிஃப்டிற்கு பக்கத்தில் உள்ள அறையில் ஒருவன் தங்கி இருக்கிறான். வட நாட்டுக்காரன் போல இருந்தான். காலை 10 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மாலை 5 மணி சுமாருக்குத்தான் திரும்புகிறான். ப்ளான் இதுதான்.

மனோகரை, ஒரு கான்ட்ராக்ட் கொலைக்கான அசைன்மெண்ட் என்று சொல்லி ஹோட்டல் ரூமிற்கு அழைக்க வேண்டும். அதற்கு இந்த வட நாட்டுக்காரன் ரூமைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கள்ளச்சாவி போட்டு எந்த லாக்கையும் திறக்கத் தெரியும். அடுத்தவன் பெயரில் ரூம் இருப்பதால் என்ன நடந்தாலும் பழி அந்த வட நாட்டுக்காரன் பேரில்தான் விழும். தான் தப்பித்துக்கொள்ளலாம். மனோகர் ரூமிற்குள் வந்ததும் தயாராய் வைத்திருக்கும் கத்தியை அவன் குரல்வளையில் இறக்க வேண்டும். கத்த முயன்றும் முடியாமல் அடங்கிப்போவான் மனோகர். ஹோட்டலை விட்டு வெளியேறுகையில் காமிரா கண்களில் படாமல் ரூமின் ஜன்னல் வழியே, தண்ணீர் பைப் குழாய்களைப் பிடித்து இறங்கி வெளியேறிவிட வேண்டும். தயாராய் வாங்கி வைத்திருக்கும் மும்பை ரயில் டிக்கட்டில் இரவோடு இரவாக மும்பை போய் விட வேண்டும். அங்கு எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம். ப்ளான் ரெடி. இனி செயல்தான்.

சுதாகர் மறு நாளே நாள் குறித்தான்.

அன்றிர‌வே ம‌னோக‌ரைக் குறி வைத்து கான்ட்ராக்ட் கில்ல‌ர்க‌ளின் ஏஜன்டாக‌செய‌ல்ப‌டும் வேதாச‌ல‌ம் மூல‌மாக‌, த‌க‌வ‌ல் கொடுத்தான். 8 வ‌ருட‌இடைவெளியில் வேதாச‌ல‌ம் சுதாக‌ரின் குர‌லை ம‌ற‌ந்துபோயிருந்த‌தால் வேலை சுல‌ப‌மாயிற்று. 1 ம‌ணி நேர‌ம் க‌ழித்து சுதாக‌ரைத் தொட‌ர்பு கொண்ட‌ம‌னோக‌ரிட‌ம், ம‌று நாள் காலை 11 ம‌ணி அள‌வில், ஹோட்ட‌ல் மாஸ்க்கில் மூன்றாம் தளத்தில் லிஃப்டை ஒட்டிய‌ரூமில் வ‌ந்து ச‌ந்திக்கும்ப‌டி த‌ந்தியாய் சொல்லிவிட்டு போனை வைத்தான். வ‌ழ‌க்கமாக‌அசைன்மெண்ட் த‌ருப‌வ‌ர்க‌ள் போனில் அதிக‌ம் பேச‌மாட்ட‌ர் என்ப‌து ம‌னோக‌ர் அறிந்த‌துதான்.

மறு நாள், மனோகரை எதிர்பார்த்து கூர் தீட்டிய கத்தியை ஒரு சூட்கேசில் மறைத்து வைத்து, 10:45 மணி அளவில் அந்த ஹோட்டலை அடைந்தான். முன் வாசலில் நடமாட்டம் அதிகம் இருப்பதை உணர்ந்து, பின் வாசலில் கார் பார்க்கிங் ஏரியா வழியாக உள்ளே வந்தான்.

மழமழவென உயர்ரக டைல்ஸ் பதிக்கப்பட்ட மாடிப்படி தெரிந்தது. பக்கத்து குடியிருப்பில் நின்று பார்த்தபோது, லிஃப்ட் அருகில் இதே போன்ற டைல்ஸ்... பதிக்கப்பட்ட மாடிப்படிகளை போட்டோ எடுத்திருந்தான். அதனோடு ஒப்பிட்டதில் இதுதான் அது என்று தெளிவாயிற்று.

'மூன்றாவது தளத்திற்குத்தான் வர சொல்லி இருந்தோம். லிஃப்டில் செல்ல வேண்டாம். லிஃப்ட் ஆபரேட்டர் கண்களில் பட்டால் தேவையற்ற எவிடன்ஸ் ஆகிவிடும். ஆதலால், படிகளினூடே செல்வதே உசிதம். சுதாகர் மூளை நிதானமாக அதே நேரம் கனகச்சிதமாக வேலை செய்தது. ஒவ்வொரு மாடி ஏறும்போதும் எண்ணிக்கொண்டான். மூன்றாவது தளம் நெருங்கியது. தயாராய் வைத்திருந்த கைக்குட்டையால் முகத்தை துடைக்கும் பாவனையில் முகத்தைக் காமிரா கண்களிடமிருந்து மறைத்தவாறு தன்னிடமிருந்த திருட்டு சாவியால் திறந்தான். அதிகம் சிரமம் தராமல், இரண்டாவது சாவிக்கு வழி விட்டுத் திறந்து கொண்டது. உள்ளே நுழைந்ததும் கதவு சாத்திவிட்டு மணி பார்த்தான். மணி 10:56.

'அப்பாடா, ஒரு வழியாக யார் கண்ணிலும் படாமல் வந்தாயிற்று. சூட்கேஸைத் திறந்து கூர் தீட்டிய கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டான். இன்னும் சற்று நேரத்தில் மனோகர் வந்து விடுவான். அவன் கதவு தட்டியதும் அவனை உள்ளே வர விட்டு, கதவை சாத்தி, அவன் எதிர்பாராத நொடியில் இடுப்பிலிருந்த கத்தியால் அவன் தொண்டைக்குழியில், மூச்சுக்குழலைச் சேர்த்துக் கிழித்தபடி இறக்க வேண்டும். அதிகம் போனால் 10 நொடிகளில் மனோகர் உயிர் பறந்து விடும். ரூம் ஜன்னல் வழியாக பைப் பிடித்து இறங்கி நேராக சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று 11:45 க்கு மும்பை ரயில் பிடிக்க வேண்டும். அந்த வட நாட்டுக்காரன் ரூம் என்பதால் தன் மேல் நிச்சயம் சந்தேகம் வராது. அப்படியே, லேசாக சந்தேகம் வந்தாலும் அதற்குள் தான் மும்பை சென்றுவிடுவோம். ப்ளான் சூப்பர். மனோகர் வருவதற்குள் ரூம் ஜன்னல்களைத் திறந்து ரெடியாக வைத்துவிடவேண்டும்.'

சுதாகர் விரைந்தான். ரூமில் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த சிவப்பு நிற தடித்த‌திரைச்சீலையை விலக்கியபோது அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. ஜன்னல் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. ஒரு நொடி குழம்பியவன் சுதாரிக்குமுன் 'ரூம் சர்வீஸ்' என்ற குரலுடன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

'ச்சே, இந்த நேரத்தில் ரூம் சர்வீஸா? முதலில் இதைக் கவனிப்போம்.' அவசரமாக, திரைச்சீலையை பழையபடி மூடிவிட்டு கதவருகே நின்று ஓட்டை வழியே பார்த்தான். ஹோட்டல் சீருடையில் சிப்பந்தி நின்றிருந்தது தெரிந்தது.

'மனோகர் வரும் நேரத்தில் இவனா? முதலில் இவனை அனுப்பும் வழி பார்க்க வேண்டும்' என்றெண்ணியபடியே திறந்தான். சட்டென, காக்கி சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் நால்வர் பக்கவாட்டிலிருந்து சுதாகரைத் தள்ளியபடி உள்ளே நுழைந்தனர். இரு போலீஸ்காரர்கள் சுதாகரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, ஒருவர் சுதாகர் உடைகளைச் சோதனை செய்ய, மேலும் ஒருவர், ரூமை சோதனை செய்யலானார்கள்.

அவர்கள் அவனையும், அந்த ரூமையும் சோதனை செய்கையில், யதேச்சையாக சுதாகர் கண்ணில் பட்ட, அந்த ரூம் கதவில் இருந்த எண் சுதாகர் மூளையை என்ன நடக்கிறது என்று ஊகிக்கக்கூட விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.

201.

'அப்படியானால் இது இரண்டாவது தளமா? இல்லையே, மூன்று மாடிகள் சரியாகத்தானே எண்ணி ஏறி வந்தேன். எங்கே தவறியது' சுதாகர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவன் கண்ணில் பட்டது அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் கார்டு.

'பார் வசதிகள் -‍‍கீழ்த்தளத்தில்'

சுதாகருக்கு மெல்ல புரியத்தொடங்கியிருந்தது. அவன் குடியிருப்பிலிருந்து பார்த்ததில் கீழ்த்தளம் தெரிந்திருக்கவில்லை. பின்வாசல் வழியாக வந்ததில், அவன் முதலில் ஏறியது கீழ்த்தளத்திலிருந்து, தரை தளத்திற்கு. மூன்று முறை மாடி ஏறியது, கீழ்த்தளத்தில் தொடங்கி, இரண்டாவது தளத்தில் முடிகிறது. சுதாகர் இரண்டாவது தளத்தை மூன்றாவதென நினைத்து இந்த ரூமில் நுழைந்திருக்கிறான்.

சுதாக‌ர் உடையை சோத‌னை செய்த‌போலீஸ்கார‌ர், இடுப்பில் வைத்திருந்த‌க‌த்தியை எடுக்க‌வும், ரூமை சோத‌னை செய்த‌வ‌ர் மூடிய‌துணி க‌ப்போர்ட் க‌த‌வை திற‌க்க‌, உள்ளிருந்து, மார்பில் க‌த்தி சொருக‌ப்ப‌ட்டு, வ‌ழிந்த‌ர‌த்த‌ம் உறைந்த‌நிலையில் ஒரு ஆண் பிண‌ம் கீழே விழ‌வும் ச‌ரியாய் இருந்த‌து.

சுதாகர் அதிர்ச்சியில் உறைந்தான்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6087)


Monday, 5 November 2012

மனக்கணக்கு - சிறுகதை


மனக்கணக்கு - சிறுகதை


எஸ்!. எஸ்!. எஸ்!.

ஹரி குதூகலித்தான். எம்பிக் குதித்தான். உள‌ம் பூரித்தான். காரணம், அவன் கையிலிருந்த ராங்க் கார்டு. அதில் அவ‌ன் பெய‌ர். கீழே ம‌திப்பெண்க‌ள். 183, 192, 196 ..... அத‌ன் கீழே சிவ‌ப்பு மையில் 1. முத‌ன் முறையாக‌வாங்கிய‌முத‌லாவ‌து ராங்க். அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வில். முந்தைய வருடம் பதினோராம் வகுப்பு தேர்வுகள் அத்தனையிலும் ஹரியால் அதிகபட்சமாக ஆறாவது ராங்க்தான் வாங்க முடிந்தது. வினய் தான் இறுதியாண்டுத் தேர்வில் டாப்பர். வகுப்புத் தோழி ப்ரத்திமா, உஷா, ஷீலா எல்லோரும் சென்ற வருடம் அவன் பக்கம் மாறி மாறி அவன் மேல் விழுந்தது ஹரிக்கு எரிச்சலாக வந்தது. ஹரிக்கு ப்ரத்திமாவைப் பிரத்தியேகமாகப் பிடித்தம். எல்லாம் விடலை வயதுக்கோளாறுதான். ப்ர‌த்திமாவும் வினய்யும் அடிக்க‌டி பேசிக்கொள்வ‌தும், அலைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்வதும், உணவுக்கூடத்தில் ஒன்றாக‌சாப்பிடுவ‌‌தும் ஹரிக்கு ஏக‌த்துக்குக் கிள‌றிவிட்ட‌து.

அப்போதே கங்கணம் கட்டிக்கொண்டு பதினோராம் வகுப்பு படிக்கையிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படிக்கத் துவங்கிவிட்டான். இப்போது பன்னிரண்டாம் வகுப்பு துவங்கி காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்ற‌ன‌. ஹ‌ரிதான் டாப்ப‌ர். இனிமேல் வின‌ய் இல்லை. ஹ‌ரிதான். நினைக்கையிலேயே ச‌ந்தோஷ‌மாக‌இருந்த‌து ஹரிக்கு.

ஆனால் அன்றைக்கென்று ப்ர‌த்திமா ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை. அத‌னால் அவ‌ளுக்குத் தெரிந்திருக்க‌நியாய‌மில்லை. அவ‌ளுக்குத் தான் முத‌ல் ராங்க் வாங்கிய‌து தெரிய‌வேண்டுமே என்று ஹ‌ரி ம‌ன‌ம் அடித்துக்கொண்ட‌து. அவ‌ள் வீடு இருக்கும் தெரு வ‌ழியே போகிற மாதிரி போய்விட்டு, த‌ற்செய‌லாக‌அவ‌ளைப் பார்த்த‌து மாதிரியும், பின் த‌ற்செய‌லாக‌ராங்க் கார்டு ப‌ற்றிப் பேசுவ‌தாக‌வும், முத‌ல் ராங்க் வாங்கிய‌து ப‌ற்றி சொல்வ‌தாக‌வும், அவ‌ள் ஹ‌ரியின் முக‌த்தைத் தாழ்த்தி நெற்றியில் முத்த‌மிட்டு முத்த‌ப்ப‌ரிசு த‌ருவ‌தாக‌வும் ஹ‌ரிக்குக் க‌ற்ப‌னைக‌ள் தோன்றி இனித்த‌து.

இந்தக் கதையின் வாசகர்களுக்குக் கொஞ்சம் உபரித்தகவல். இது போன்ற எத்தனையோ ப்ரத்திமாக்களுக்கும், ஹரிக்களுக்கும், வினய்களுக்கும் இந்தியாவில் ராங்க் கார்டு என்பது ஒரு மனிதனின் தலையெழுத்து. க்ளார்க் வாய்ப்பாடோ, கணினியோ இல்லாமல் லாகரிதம் கணக்கிடத் தெரியாது. இவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியாது. கலவி பற்றி பெற்றோர்கள் கவனமாகச் சொல்லிக் கொடுக்காமல் போனால், சுற்றம் எப்படியாகினும் தப்பும்தவறுமாக நிச்சயம் கற்றுத் தந்துவிடும் என்பது தெரியாது. அடுத்தவருக்கு நிகழும் துன்பம் தனக்கும் என்றாவது நிகழலாம் என்பது தெரியாது. அப்பா என்கிற ஆணைப் பற்றி அம்மா என்கிற பெண்ணுக்கு தெரியாது. காதலன் என்கிற ஆணைப் பற்றி காதலி என்கிற பெண்ணுக்குத் தெரியாது. இப்படி எத்தனையோ தெரியாது. தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான். வாழ்க முரண்பாடுகள்.

அன்று வீட்டில் ஹரியின் அம்மா இருக்கவில்லை. அவள் நாகப்பட்டினத்தில் இருக்கும் தங்கை வீட்டிலிருந்து இரவுப் பேருந்தில் சென்னை வருவதாக இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லலாமென்றால் பிரயோஜனமில்லை. எத்தனை முறை அழைத்தாலும் ஒன்று எடுக்க மாட்டாள் அல்லது அலைபேசி கோமாவில் இருக்கும். மின் உயிரூட்டும் எண்ணமே இருக்காது. அம்மா அந்தக் காலத்து மனுஷி. கையில் ஒரு நோக்கியா அலைபேசி இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது இன்னமும் அவளுக்கு ஒரு சிந்துபாத் புதிர் தான். வீட்டில் அண்ணன் அப்பாவிடம் சொன்னதில், கல்லூரிக்கு பைக் வாங்கித் தருவதாக அப்பாவிடமிருந்து வாக்குறுதியும், அண்ணனிடமிருந்து ஒரு முறைப்பும் கிட்டியது.

எனினும் ப்ரத்திமாவுக்கு இது தெரியுமோ தெரியாதோ என்பதே ஒரே கவலையாக இருந்தது ஹரிக்கு. அலைபேசியில் அழைத்துச் சொல்லிவிடலாமா என்று யோசித்து, பின் தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாக அவள் நினைத்துவிடுவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி சிந்தித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான் ஹரி. தானாகத் தெரியட்டும், அதுதான் உசிதம் என்று தோன்றியது ஹரிக்கு.

உல‌கில், க‌லாச்சார‌மும், நாக‌ரீக‌மும் இப்ப‌டித்தான் உருவாகிற‌து. விளைவுகளைப் பற்றிய ஒரு முன்அனுமானம் கொண்டு, சாதகமான விளைவுகளை உருவாக்குவதான இயக்கங்களை இனம் கண்டு, தரம் பிரித்து, பின் செயற்கையாய் அதனை உருவாக்கி... இப்படித்தானே உருவாகிறது கலாச்சாரமும் நாகரீகமும். அன்பின் நாகரீக வெளிப்பாடுதான் காதல். எதிர்முனையில் அங்கீகரிக்கப்பட்டால் வெற்றி. இல்லையெனில் தோல்வி.

மறுநாளும் ப்ரத்திமா பள்ளிக்கு வரவில்லை. வைரஸ் ஜுரம் என்றார்கள் ஷீலாவும் உஷாவும். இரண்டொருமுறை அலைபேசியில் அழைக்க முயன்றதில் ப்ரத்திமாவின் அலைபேசி கோமாவில் இருந்தது. ஹரி பெரிதும் அலைக்கழிந்தான். வகுப்பில் கவனம் செல்லவில்லை. வீட்டுக்குச் செல்லும் வழியில் வரசித்தி வினாயகர் கோயிலில் ப்ரத்திமாவுக்கென வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

98405..... என்று துவங்கி ஒரு புதிய எண். இது ஏர்டெல் எண்ணாயிற்றே! குறுஞ்செய்தி, ஆங்கிலத்தில் முதல்வனுக்கு வாழ்த்துக்கள் என்றுவிட்டு கண்ணடித்து சிரித்தது.

வீட்டில் எல்லோரும் ஏர்செல். ஹரியின் நண்பர்களும் அனைவரும் வோடஃபோன். சில ஆசிரியர்கள் கூட. உஷா, ஷீலா இருவரும் கூட ஏர்செல்தான். ஹரி குழப்பமுடன் நிமிர்கையில், ஷீலாவும், உஷாவும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. பின் வெகு தீவிரமாய் கரும்பலகையைக் கவனித்தார்கள். அதில் ஒரு செயற்கைத்தனம் தெரிந்ததை ஹரி குறித்துக்கொள்கையில் அலைபேசி மீண்டும் அவனின் கால்சட்டைப் பையில் அமர்ந்தது.

மீண்டும் பாட‌ம். குப்புசாமி இம்முறை ஸ்பின் குவாண்ட‌ம் எண்க‌ள் ப‌ற்றிப் பாட‌மெடுத்துக்கொண்டிருந்தார். 'ஸ்பின் குவாண்ட‌ம் எண் என்ப‌து ஒரு அணுவைச் சுற்றி ஓர் நொதுமின்னி எந்த‌திசையில்....'

மீண்டும் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

இம்முறையும் அதே 98405..... எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. ஆங்கிலத்தில் 'நீ ஸ்மார்ட்டாக இருக்கிறாய்' என்றது. ஹரி இம்முறை சுதாரித்தவனாய், லேசாகத் தலை நிமிர்த்தி உஷா, ஷீலாவைப் நோட்டம் விட, அவர்கள் இருவரும் இம்முறையும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். முகத்தில் மெல்லிய புன்னகை. கரும்பலகை மீது கவனம்.

ஏதோ புரிந்தது போலிருந்தது ஹரிக்கு.

இந்தப் பெண்கள் ப்ரத்திமாவின் தோழிகள். ப்ரதிமா வைத்திருப்பது ஏர்டெல் எண். இப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படுவதும் ஏர்டெல் எண். ஒவ்வொரு செய்தி அனுப்பபடுகையிலும் இவர்கள் உளவு பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன நடக்கிறது? அப்படியானால், அப்படியானால்.... ஒருவேளை இப்படி இருக்கலாமா? இந்தப் பெண்கள் விளையாடுகிறார்கள். இவர்கள் தோழிகள். தன்னை வேவு பார்க்கும் தோழிகள். இளவரசி அங்கிருக்கிறாள். இந்த எண்ணின் மறுமுனையில் இருக்கிறாள். குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தோழிகள் மூலம் என் தவிப்பை உளவு பார்க்கிறாள் என்று இருக்கலாமா?.

ச்சேசே, அனுப்பப்படுவது ஏர்டெல் எண்ணிலிருந்து என்றால் அது உடனே ப்ரத்திமாவாகத்தான் இருக்க வேண்டுமா? இந்தப் பெண்கள் தற்செயலாகக் கூடத்தான் சிரித்திருக்கலாம். ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் ஹரி. ஆனாலும் இந்தப் புதிய எண் இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது, இதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மாலை அம்மா வந்திருந்தாள். அவளிடம் ராங்க் பட்டியல் காண்பித்தான் ஹரி. கட்டியணைத்துப் பாராட்டினாள் தாய் புவனா. இனி உனக்கு எல்லாம் வெற்றிதான் என்று அவள் வாழ்த்துகையில் அவன் நினைவுகளில் ப்ரத்திமா குறுக்கிலும், நெடுக்கிலும் கடந்து போனாள்.

அடுத்த நாள் ப்ரத்திமா வகுப்பறை வந்திருந்தாள். மதியம் உணவு இடைவேளையில் அவள் ஹரியின் இருக்கையை அண்டி, முதல் மதிப்பெண் வாங்கியதற்கு வாழ்த்தியபோது அவளின் முதுகிற்குப் பின்னால், உஷாவும், ஷீலாவும் கல்மிஷமாய் இவர்களைப் பார்த்தபடி தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

"நான் அனுப்பிய குறுஞ்செய்தி வந்ததா?" என்றாள் ப்ரத்திமா. ஹரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"ஆமாம், நேற்று இரண்டு குறுஞ்செய்திகள் வந்தன. அது, 98405 என்று தொடங்கிய எண்களாயிற்றே... அது ..உன்னுடையதா ப்ரத்திமா

தலையைப் பெரிதாக மேலும் கீழுமாக ஆட்டினாள் ப்ரதிமா.

"சரி, ஹரி.. குறிச்சுக்கோ.. நான் குறுஞ்செய்தி அனுப்பினா, பதில் அனுப்பிவிடாதே அந்த எண்ணுக்கு.. அது என் சித்திவழி தம்பியின் எண் தான்.. தற்காலிகமாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்... என் அலைபேசியில் பணம் இல்லையெனில் அவனிலிருந்து பேசுவேன்.. " என்றுவிட்டு தன்னிருக்கைக்குப் போய்விட்டாள் ப்ரத்திமா.

அப்படியானால், அவளேதானா? ச்சே.. முதலிலேயே தோன்றியது தான். ப்ரத்திமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. ஆனால் தற்செயல் நிகழுவுகள் என்று குழப்பிக்கொண்டாயிற்று என்று தோன்றியது ஹரிக்கு. உஷாவும் ஷீலாவும் இன்னமும் தங்களுக்குள் நகைத்துக்கொண்டிருந்தார்கள். என்ன‌முட்டாள்த‌ன‌ம்! கிட்ட‌த்த‌ட்ட‌க‌ண்டுபிடித்த‌விஷ‌ய‌ம் தான். என்ன‌வோ தோன்றி ப்ர‌த்திமாவாக‌இருக்காதென்று நினைத்த‌து எத்த‌னை த‌வ‌று? க‌டைசியில் அது அவ‌ள்தான். ஒரே ஏர்டெல் ந‌ம்ப‌ராக‌இருந்த‌திலிருந்தே அதை அறுதியிட்டிருக்க‌வேண்டும். த‌ன‌க்குள்ளாக‌வே அலுத்துக்கொண்டான் ஹ‌ரி. முதல் வேளையாக அந்தப் புதிய எண்ணை ப்ரத்திமா பெயரில் பதித்துக்கொண்டான்.

அதற்குப் பின்வந்த நாட்கள், இதுவே வாடிக்கையானது. வெள்ளிக்கிழமை கலர் சட்டைகள் அணிந்து வந்தபோது, அதே எண்ணிலிருந்து 'அற்புதம்' என்று குறுஞ்செய்தியில் வந்து விழுந்தாள் ப்ரத்திமா. வகுப்பறையில் சீரியஸாகப் பாடம் கவனிக்கையில் ஒன்றுமே நடக்காதது போல 'என்ன செய்கிறாய்?' என்று குறுஞ்செய்தியில் வினவி கண்ணடித்துவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல பாடம் கவனித்து சீண்டிவிட்டாள் ப்ரத்திமா.

ஹரி இப்போதெல்லலாம் முதுகுத்தண்டில் ரத்தம் பாய்வதை அடிக்கடி உணர்ந்தான். வகுப்பறையிலேயே ப்ரத்திமாவுடன் 'ஒல்லி ஒல்லி இடுப்பே.. ஒட்டியாணம் எதுக்கு' விஜய் பாடலுக்கு நடனம் ஆடினான். குதிரை வண்டியில் முகம் தெரியாத மனிதர்களால் ப்ரத்திமா கடத்தப்படுகையில் எங்கிருந்தோ வந்து குதித்து, காற்றிலே பறந்து பறந்து சண்டை போட்டு ப்ரத்திமாவைக் காப்பாற்றினான் பகல் கனவுகளில். ப்ரத்திமா அவ்வப்போது அவனை அர்த்தமுடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். ஹரிக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு ப்ரத்திமாவை அந்த நிமிஷமே திருமணம் செய்யவேண்டும் போலிருந்தது.

பொறு. பொறு. அவசரப்படாதே. இன்னும் காலம் இருக்கிறது. கல்லூரி இருக்கிறது. அதற்குப்பின் வேலை. பின்னர்தான் திருமணம். பொறு. நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை இப்படியே காதலி. தினம் தினம் காலி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் விடு. தொடரட்டும் இந்தக் குறுஞ்செய்திகள். தொடரட்டும் இந்த கல்மிஷ சிரிப்புகள். இது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க காதல். உபதேசித்தது மனம்.

இது எல்லாமும் எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அதைத் தக்க வைக்க வெகுவாகப் போராடினான். அரையாண்டுத் தேர்வு முடிவுகளும் ஹரியை முதல்வனாக்கி வேடிக்கை பார்த்தன. அம்மா முத்தம் கொஞ்சினாள். அப்பா கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் சேகரித்தார். அண்ணன் பெருமையுடன் ஹரியைத் தன் தம்பியென்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டான். ப்ரத்திமா இது அத்தனையையும் விட அதிகம் போதையேற்றினாள்.

ஒரு நாள், சனிக்கிழமை. சிறப்பு வகுப்பு அன்று. கெமிஸ்ட்ரி சிறப்பு வகுப்புகள் மதியம் மூன்று மணிவரை. விருப்பமில்லை என்றாலும் ப்ரத்திமாவைப் பார்க்க இன்னுமொரு வாய்ப்பென்று தவறாமல் வந்தான் ஹரி. ப்ரத்திமா வகுப்பில் இல்லை. பத்து மணிக்குத் துவங்கிய வகுப்பு ஒரு மணிக்கு இடைவேளை விட்டது. ஷீலா, உஷா கூட ப்ரத்திமா பற்றி உதட்டைப் பிதுக்கினார்கள். ஹரிக்குப் பாடத்தில் மனம் லயிக்கவில்லை. ப்ரத்திமா பற்றியே சிந்தனை போனது. மூன்று மணிக்கு வகுப்பு முடிந்து, ஹரி சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவிக்கையில் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தப்போது, ப்ரத்திமா, மாலை ஐந்து மணிக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் படி அழைத்திருந்தது சற்று ஆசுவாசம் கொள்ள வைத்தது. அப்பாடா! என்றிருந்தது. இனிமேல் இவளிடம் எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு, செல்லும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஹரிக்கு. வீட்டுக்குச் செல்லாமல் நேராக முருகன் கோயிலுக்கு நான்கு மணிக்கே சென்றுவிட்டான் ஹரி.

ப்ரத்திமாவுக்கென காத்திருந்த நிமிடங்கள், உண்மையில் யுகங்கள் தாம் என்பதை உணர்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கே கோயிலின் ஓர் ஓரத்தில் ப்ரத்திமா, அருகிலேயே வினய். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஹரிக்கு அடிவயிற்றில் அமிலம் வேகமாய்ச் சுரந்தது. வினய் எங்கே இங்கே வந்தான்? பூஜை வேளையில் கரடி போல். இதில் ப்ரத்திமாவுடன் வாக்குவாதம் வேறு. முதலில் அவனை அவளிடமிருந்து விலக்க வேண்டும் என்று தீர்மானித்தபடியே அவர்களை அவசரமாய் அண்டினான் ஹரி. ஹரியைப் பார்த்துவிட்டு, ஏதோ பார்க்ககூடாதவனைப் பார்த்துவிட்டதுபோல சலிப்புடன் வினய் அகல, இப்போது அழத்துவங்கியிருந்தாள் ப்ரத்திமா.

"என்னாச்சு ப்ரத்திமா?"

"ஹரி, எல்லாமே போச்சு ஹரி. உன் எண் என்று நினைத்து நான் இத்தனை நாளும் யாருக்கோ அனுப்பிக்கிட்டு இருந்திருக்கேன் ஹரி. அவன் இன்றைக்கு என் வீடு வரைக்கும் வந்து பெரிய கலாட்டா ஆகிவிட்டது. இப்போதென்றால் வினய் என்னை நம்பவே மாட்டேன் என்கிறான் ஹரி. நான் வினயை எத்தனை காதலிக்கிறேன் தெரியுமா!" என்றுவிட்டு விம்மினாள் ப்ரத்திமா, ஹ‌ரியின் இத‌ய‌ம் நொறுங்குவ‌தை உண‌ராம‌ல்.

ஹரி அதிர்ச்சியில் ஆழ்ந்து செய்வதறியாமல் திகைத்திருக்கையில் ஹ‌ரியின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு அதே 98405..... எண்ணிலிருந்து வ‌ர‌, அதிர்ந்தான் ஹ‌ரி. க‌ண்முன்னே ப்ர‌த்திமா விசும்பி அழுது கொண்டிருக்க‌, இத்த‌னை நாளும் அவ‌ள்தான் என்று நினைத்திருந்த‌எண்ணிலிருந்து அழைப்பு வ‌ந்து ஹ‌ரியை ஏக‌த்துக்கும் குழ‌ப்பிய‌து.

தடதடக்கும் இதயத்துடன் அவசரமாய் ஹரி அந்த அழைப்பை ஏற்று "ஹ‌லோ" என்றான்.

"ஹேய் ஹ‌ரி" என்ற‌து எதிர்முனையில் ஒரு பெண்குர‌ல். அந்த‌க் குர‌ல்! அந்த‌க் குர‌ல்! அப்ப‌டியே அச்சு அச‌லாய், ஹ‌ரியின் அம்மாவின் குர‌லை ஒத்து இருக்க‌, ஹ‌ரி அதிர்ச்சியில் உரைய‌,

"என்ன‌ஹ‌ரி, சீக்கிர‌மே வ‌ந்துவிட்டாய்? ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச் சொல்லியிருந்தேன்" அந்த‌க் குர‌ல் வெகு அருகாமையில் கேட்க‌திரும்பினான் ஹ‌ரி. ஹ‌ரியின் அம்மா புவனா புன்ன‌கைத்த‌ப‌டி நின்றிருந்தாள்.

"அம்மா, நீ... நீங்க‌..."

"என்ன‌டா ஹ‌ரி..ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச்சொன்ன‌து? ஏன் இத்த‌னை முன்கூட்டியே வ‌ந்துவிட்டு காத்திருக்கிறாய் ஹரி. பரவாயில்லையே! எம் புள்ளை கோயில் குளமென்று இருக்கிறானே. சமத்து!" என்று திருஷ்டி சுற்றி சிலாகித்தாள் புவனா.

"அம்மா, இது உங்கள் எண்ணா?"

"ஆமாம்டா, நாகைல‌உன் சித்தி வாங்கிக்கொடுத்தாள். ஏதோ அலுவலக எண்ணாம். இதில் பேசினாள் செலவு இல்லையாம். நீதான் என்னை எப்போதும் திட்டுவாயே! அதுதான், உன் சித்தியிட‌ம் இந்த‌க் குறுஞ்செய்திகள் அனுப்புவ‌து எப்படி என்று க‌ற்றுக்கொண்டேன். ச‌ரியா வ‌ந்த‌தா?"

"அம்மா, நீங்கள்தானென்று சொல்லக்கூடாதா?"

"அதையும்தான் குருஞ்செய்தியென அனுப்பினேனே ஹ‌ரி."

"அப்ப‌டியா? எப்போ அம்மா அனுப்பினீர்கள்? எனக்கு வரவில்லையே" என்றுவிட்டு அம்மாவின் கையிலிருந்த‌மொபைலை வாங்கிப்பார்த்தான் ஹ‌ரி.

'ஹாய் ஹ‌ரி -‍உன் அம்மா' என்ற‌குறுஞ்செய்தி அனுப்ப‌ப்ப‌டாம‌ல் காத்திருப்பிலேயே வைக்கப்பட்டதென அந்த அலைபேசி எந்த விதமான உணர்ச்சிகளும் இன்றி சிவனேயென்று சொன்னது..

ஹரிக்கு அழுகை வரும்போல இருந்தது.

முற்றும்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6054)

Tuesday, 23 October 2012

தண்ணீர் காட்டில் - 9


தண்ணீர் காட்டில் - 9

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்...

கரைந்தே கிடக்கிறது
தண்ணீர்...

எவர் கரைத்ததோ?...

- ராம்ப்ரசாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)


@நன்றி கீற்று

Friday, 19 October 2012

தண்ணீர் காட்டில் - 8


தண்ணீர் காட்டில் - 8
முகமென்று
ஏதுமற்ற‌ நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...

முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை...

- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com)
@நன்றி கீற்று

Monday, 27 August 2012

குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை


குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை

3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி ‍- 75 ம் பக்கம் முடிய‌ வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


பிரபல ஓவியர் மாருதி, மிக அழகாக, சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். கதையை எழுதுகையில் நான் கற்பனை செய்திருந்த காட்சிகளை தத்ரூபமான ஒவியமாக வரைந்திருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பி.கு: எனது இச்சிறுகதையை வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 20 August 2012

ஒப்பிடுதல்


ஒப்பிடுதல்


எங்கும்,
எதிலும்,
நாம் ஓவிய‌ங்க‌ளையே கற்றாலும்,
நம் ஓவியத்தைப்
பிறர் ஓவியங்களுடனேயே
நாம் எப்போதும்
ஒப்பிட்டுக்கொள்கிறோம்...


ஒப்புமைக்கான‌
சாத்திய‌க்கூறுக‌ளையே
எப்போதும்
க‌வ‌ன‌த்தில் கொள்கிறோம்...


இப்படித்தான்
நாம் எல்லோரும்
ஓர் ஓவியத்தின்
காரணிகளைப்
புறக்கணிக்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5883)

Monday, 13 August 2012

இரைஞ்சுத‌ல்


இரைஞ்சுத‌ல்

நம் செய்கைகள்
அனைத்திற்கும்
இதுதான் அர்த்த‌மென‌
நாம் எல்லோரும்
எதை எதையோ
குறிப்பிடுகிறோம்...

அவ்வ‌ர்த்த‌ங்க‌ள் பொருத்த‌மில்லை
எனும்போது
த‌ன்னிலை விள‌க்க‌மொன்றிற்கான‌
வாய்ப்பை இரைஞ்சுகிறோம்...

அவ்வாறான‌வாய்ப்பொன்றிற்கு
இரைஞ்சாத‌வ‌ர்க‌ள்
ந‌ம்மிடையே
எவ‌ரும் இல்லை...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5875)

Monday, 30 July 2012

தெளிவற்ற நாடகங்கள்

தெளிவற்ற நாடகங்கள்


நாடகங்கள்
எங்கு,
எவ்விதம்
துவங்குகிறதென‌
நம்மிடம்
தெளிவான குறிப்புகள்
இல்லை...

பிற நாடகங்களின்
பக்க விளைவுகளெனவும் கூட‌
புதியதாய்
ஓர் நாடகம்
உயிர்த்தெழக் கூடும்...

நாம்
நடித்துக்கொண்டிருக்கும்
நாடகம் கூட‌
அப்படி ஒன்றாக‌
இருக்கக் கூடும்...

இப்ப‌டித்
தெளிவான‌குறிப்புக‌ள்
இல்லாத‌நாட‌க‌ங்க‌ளைத்தான்
நாம்
தின‌ம் தின‌ம்
விரும்பி ந‌ட‌த்துகிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5802)

Monday, 23 July 2012

பயணத்தின் சாரம்

பயணத்தின் சாரம்ஓர் நாழிகை கூட‌
வீணாகிவிடாமல்
சீராக‌
பாதையினூடே
பயணித்தல்
இலக்கை எட்டுதலைத்
துரிதமாக்குகிறது தான்...


ஆனால்,
மைல்கற்கள் தோறும்
பயணத்தை நிறுத்தி
திரும்பிப் பார்த்தலே
பயணத்தின் சாரமாகிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

தனியாத வேட்கை

தனியாத வேட்கை


எந்த ஒரு நாடகத்தையும்
நம் விருப்பப்படிதான்
நடத்துகிறோமென‌
நாம் எல்லோரும்
நினைத்துக்கொள்கிறோம்...


நாடகங்கள் அனைத்தும்
தங்கள் விருப்பப்படிதான்
நம்மை இயக்குகின்றன‌
என்பதை
நாடகம் முடியும் தறுவாயிலோ,
முடிந்த பின்னரோ தான்
உணர்ந்து கொள்கிறோம்...


ஆயினும்,
ஓர் நாடகத்தை
நம் விருப்பப்படியே
நடத்திட வேண்டுமென்கிற‌
தனியாத வேட்கை
நம் அனைவருள்ளும்
பெருந்தீயென எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

Monday, 9 July 2012

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்


நமக்கு
என்ன வேண்டுமென்பதில்
எப்போதுமே
நமக்கு
குழப்பங்கள் இருக்கிறது...


நமக்கு
வேண்டாதவைகளிலிருந்து
வேண்டியவைகளை
துல்லியமாக இனம் காண‌
நம்மால்
எப்போதுமே முடிவதில்லை...


ஆனாலும்,
நாம் எல்லோரும்
எப்போதும்
எதையேனும்
வேண்டியபடியேதான் இருக்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

ஓர் மெல்லிய இடைவெளி

ஓர் மெல்லிய இடைவெளி


கைக்கெட்டும் தொலைவிலேயே
இருந்தாலும்
நம்மில் பலர்
வெகு தொலைவில்
நின்று கொள்கிறார்கள்...


நம் பாதைகளுக்கு
அவர்கள் எட்டாது
நிற்கிறார்கள்...


அவர்களை அண்டுவதான முயற்சிகள்
நமது பயணங்களைத்
தாமதமாக்க கூடுவதாக,
ரத்து செய்யவும் கூடுவதாக‌
இருக்கிறது...


இங்கு வலுக்கிறது
தவிர்க்க இயலாமல்
ஓர் மெல்லிய இடைவெளி...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

Monday, 2 July 2012

அதுவாகவே ஆகி விடுதல்

அதுவாகவே ஆகி விடுதல்


நாம்
அடைய விரும்பும் எல்லையின்
வெவ்வேறு பரிமாண‌ங்களை
அவதானித்துக் கொண்டே
இருக்கிறோம்...


அப்பரிமாணங்களுக்கு
நம்மை நாமே
தொடர்ந்து
பழக்கப்படுத்திக் கொள்கிறோம்...


நாம்
எதைத் தொடர்ந்து
பழக்கப்படுத்துகிறோமோ
பிற்பாடு
அதுவாகவே ஆகி விடுகிறோம்...

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5725)

Monday, 25 June 2012

அந்த ஓர் பயணம்

அந்த ஓர் பயணம்

நாம் பாதைகளில்
எட்டி நடந்து,
எம்பிக் குதித்து,
இடறிவிட்டதாய் நடித்து,
தாவிக் குதித்து,
நெளிந்து,
வளைந்து,
எப்படி பயணித்தாலும்
இறுதியில்
யாரையேனும்
முந்திச் செல்லவே
விரும்புகிறோம்...


முந்திச் செல்வதன்
சாத்தியங்களையும்,
வாய்ப்புக்களையும்
தொடர்ந்து விஸ்தரிக்கிறோம்...


நாம்
அடைய விரும்பும்
எல்லைவரை விரிந்துகிடக்கும்
பாதைகள்
தன்னை அடைவதான‌
யாரோ ஒருவனின்
பயணத்தை எதிர்நோக்கி
சலிக்காமல்
காத்திருப்பைத் தொடர்கின்றன...


அந்த ஓர் பயணத்தை தான்
நாம் பயணிக்கிறோமென‌
நம்பியபடியே தான்
நாம்
நம் பயணங்களை
எப்போதும் மேற்கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5718)

Monday, 18 June 2012

பிரதானப்படுத்துதல்

பிரதானப்படுத்துதல்


நாம் எல்லோரும்
நமது செய்கைகள்
அனைத்திற்கும்
ஏதேனும் ஓர் அர்த்தத்தைக்
கற்பித்துக் கொள்கிறோம்...

அந்த அர்த்தங்கள் அனைத்தும்
மகத்துவம் வாய்ந்தவை என்றும்,
முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும்,
நமக்கு இன்றியமையாதவை என்றும்,
நாம் தொடர்ந்து
வலியுறுத்துகிறோம்... 


சமயம் கிடைக்கும்போதெல்லாம்
அதை
நிரூபிக்கவும் முயல்கிறோம்...


இப்படித்தான்
நாம் எல்லோரும்
இயக்கங்களையும்,
அதன் ஆதார உண்மைகளையும்
புறந்தள்ளிவிட்டு
நம்மையே
பிரதானப்படுத்திக் கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5696)

Friday, 15 June 2012

முரண்களும் நாமும் - 1

முரண்களும் நாமும் - 1


தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். உட்கார இருக்கைகள் இல்லை எனினும் பொதுவில் எனக்கு நிற்பதும், நடப்பதும் பிடிக்குமென்பதால், என் பாட்டுக்கு ஏதேதோ சிந்தித்தவாறே பயணம் மேற்கொண்டிருந்தேன். காட்டாங்களத்தூர் ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது அது நடந்தது. ஒரு வயதானவர். வயது 55 இருக்கலாம். அவருடன் 50 வயதில் ஒரு பெண்மணி (மனைவியாக இருக்கலாம்), கூடவே 35 வயதில் ஒரு மணமான பெண் (கால்களில் மெட்டி அணிந்திருந்ததால்!). தோற்றத்திற்கு வயதானவரோ, அவரது மனைவியோ போல் இல்லாமல் இருந்ததால் மருமகளாக இருக்கலாமென்று தோன்றியது. மூவரும் எழுந்து இரண்டு கைகளிலும் ஏதேதோ மூட்டை முடிச்சுக்களுடன், ரயில் கதவு நோக்கி வந்தனர். இரண்டு முனைகளிலும் இருக்கைகளுக்கு மத்தியில் இருந்த பாதையில், ஒருவர் ஒரு மூட்டை நிறைய வெள்ளரிப்பிஞ்சுடன் பாதையை அடைத்துக்கொண்டு "வெள்ரிப்பிஞ்ச் வெள்ரிப்பிஞ்சேய்ய்ய்ய்" என்று கூவிக்கொண்டிருந்தான்.

மூட்டை முடிச்சுக்களுடன் வந்த பெரியவருக்கோ, இந்த வியாபாரியை தாண்டித்தான் ரயில் கதவுகளுக்கு வர வேண்டும். தாண்டி வந்ததில் அவரும் அவர் மனைவியும் முட்டியில் இடித்துக்கொள்ள, பெரியவர் சற்று கோபத்துடன்,

"ஓரமா வச்சிட்டு நில்லேம்பா. பாதையில வச்சிக்கிட்டு...." என்றார் சலிப்புடன்.

"ஏன் நீ ஓரமா போயேன்..வந்து ஏறிட்டு போற... மாடு கணக்கா" என்றான் வெள்ளரிக்காரன். (இத்தனைக்கும் அவனுக்கு!? வயது 40 இருக்கலாம்)

மனைவி முன்னால் அவமானப்பட்டது போல் அவர் உணர்ந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தாழ்ந்து போன தன் மானத்தை மீட்டெடுப்பதான அவரின் முயற்சி கண்கூடாகத் தெரிந்தது.

"யோவ், ஓசியில ட்ரெய்ன் ஏறுறது நீயா நானா? டிக்கேட் வாங்கிட்டா இதெல்லாம் விக்கிற? இதெல்லாம் ட்ரெயினுக்குள்ள விக்கிறதுக்கு ரூல்ஸ் இருக்கா? என்னமோ பேசுற" என்றார் பெரியவர்.

இதற்குள் ரயில், காட்டாங்களத்தூர் ரயில் நிலையம் வந்து ப்ளாட்பாரத்தில் வண்டி நிற்க, பெரியவர் தன்னுடன் வந்த பெண்களை முதலில் இறங்கவிட்டுவிட்டு பின்னால் இறங்குகையில், அந்த வியாபாரி,

"என்னா ரூல்ஸ் பேசுற, போய்யா வேலையை பாத்துக்கிட்டு" என்றுவிட்டு அந்தப் பெரியவரின் பின்னால் முதுகில் சப்பென்று அறைந்தான். கம்பார்ட்மென்டில் உள்ள யாரும் எதிர்பார்க்கவில்லை இந்த தாக்குதலை.

பெரியவர் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு, அவன் மேல பாய, அவன் அடிக்க, பதிலுக்கு அவரும் அடிக்க, பெரிய ரகளை ஆகிப் போனது... கூடி நின்றவர்களெல்லாம் விலக்கி விட, பின்னாலேயே பெரியவரின் மனைவியும், மருமகளும் பின்னால் வந்து இழுக்க, ரயிலும் சரியான நேரத்தில் விசிலடித்து கிளம்பத்துவங்க, ஒருவழியாக பெரியவர் அவசரமாக இறக்கப்பட்டார்.

ப்ளாட்பாரத்தில் அவரின் மனைவி, பெரியவரை " நமக்கேன் வம்பு, அவனோட சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க?... " என்ற தோணியில் ஏதோ வசைபாடிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அந்த வெள்ளரிப்பிஞ்சுக்காரன் செய்தது தான் உச்சகட்டம்

வண்டி புறப்பட்டுவிட்ட தைரியத்தில், கதவோரம் வந்து "ஓத்த தேவ.....பையா.... பொம்பளை பின்னால ஒளிஞ்சிக்கிட்டான் பாரு..பொறம்போக்கு... தைரியம் இருந்தா வாடா தேவ..... பையா " என்றவாறே காலில் கிடந்த செருப்பை தூக்கி ப்ளாட்பாரத்தில் மனைவியுடன் சண்டைபோட்டுக் கொண்டிருந்த பெரியவர் மீது விட்டெறிந்தான்.

அதுவரை அரைகுறையாக ஏதோ யோசனையில் இந்த சம்பவத்தை அரைக் கவனத்தில் கொண்டிருந்த நான், அந்த நொடியில் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டேன். அந்த நொடி, ரயில் பெட்டியிலிருந்த பலரும், நடப்பதை ஒரு வித அசூயையுடன், ஆனால், ஆர்வமுடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரயில் மெல்ல மெல்ல வேகமெடுத்து அகல, சூழ் நிலை, வெள்ளரிப்பிஞ்சுக் காரனுக்கு சாதகமாகவும், அந்த பெரியவருக்கு பாதகமாகவும் முடிந்தது.

அதற்கு பிறகுதான் க்ளைமாக்ஸ்.

நான் ஏதோ நடந்த அத்தனையையும் பார்த்துவிட்டு, ரயிலில் பயணப்பட்டவர்கள் அத்தனை பேரும் அந்த வெள்ளரிப்பிஞ்சுக்காரனை தாளிக்கப்போகிறார்கள் என்று நினைத்திருக்கையில், அவன் மறுபடி

"வெள்ரிப்பிஞ்ச் வெள்ரிப்பிஞ்சேய்ய்ய்ய்" என்று கூவ, ஆள் ஆளுக்கு பையிலிருந்து காசு எடுத்து நீட்டி சமர்த்தாக வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொண்டு அவரவர் இடத்தில் அமர்ந்து நாளிதழ் பார்ப்பதும், ஜன்னலினூடே வேடிக்கை பார்ப்பதும், பாட்டு கேட்பதுமாக சகஜமாகிவிட்டார்கள். அதற்கு முன்பு ஒரு பெரிய அமளிதுமளி நடந்ததற்க்கான, ஒரு மெலிந்த வயதான பெரியவர் ஒருவரின் மானம் அவர் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் கோரமாக, மூர்க்கமாக துகிலுரிக்கப்பட்டதான நிகழ்வொன்று நடந்ததற்க்கான எந்த சுவடும் அங்கே இல்லை.

ஒரு அநீதி நடக்கிறது. கண்முன்னே. அநீதி இழைக்கப்பட்டது ஒரு வயதான பெரியவருக்கு. பெரியவர் சொன்னது உண்மை. ரயிலில் பயணிக்கும் பயணிகளை முன்வைத்தும் கூட ஒரு பிரிவினரால் பிழைக்க முடிகிறது. அப்பிரிவினருக்கு பயணிகள் தான் வாழ்வாதாரம். அந்த வியாபாரத்திலும் வாங்குபவன் இருப்பதால் தான் வியாபாரம் பிழைக்கிறது. வாடிக்கையாளன், வாங்குபவன் எல்லோரும் வியாபாரத்திற்கு கடவுள் போல. ரயிலில் வியாபாரம் செய்தல் சட்டமில்லை. அதையும் மீறி ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நடக்கும் வியாபாரம், பிச்சை, அலிகளின் வசூல்வேட்டை, இவை எல்லாவற்றையும், சமூகம் பொறுத்துப்போவதற்கும், சகித்துப்போவதற்கும், கண்டும் காணாமல் போவதற்கு ஒரு ஆதார உணர்வு இருக்கிறது. அது உதவி. அடுத்தவனும் பிழைக்கட்டும், இப்படியாவது பிழைக்கட்டும் என்கிற எண்ணம். அப்படி இருக்கையில், வியாபாரம் செய்பவன் ஒவ்வொரு பயணியிடத்திலும் கடமைப்பட்டிருக்கிறான். பிச்சை எடுப்பவன் ஓவ்வொரு பயணியிடத்திலும் கடமைப்பட்டிருக்கிறான். அவந்தான் பொறுத்துப் போக வேண்டும். ஆனால், அது அன்று அப்படி நடக்கவில்லை.

ஆனால், ஒரு அநீதி சமூகத்தின் முன்னே நடக்கையில் சமூகம் அந்த அ நீதிக்கு காட்டவேண்டிய எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை? யாருக்கோ நடந்தால் நாம் கவலைப்பட வேண்டியதில்லையா? யாருக்கோ நடந்தால் சமூகம் எதிர்ப்பைக் காட்ட வேண்டியதில்லையா? இது என்ன நியாயம்? அன்று அந்த பெரியவருக்கு நடந்தது நாளை நமக்குள் யாருக்கோ கூட நிகழலாமென்கிற எண்ணம் ஏன் இல்லை சமூகத்திற்கு? ஒரு தவறு , அநீதி இழைக்கப்படுகையில், ஓர் எதிர்ப்பை, அதனால் பலன் உண்டா, இல்லையா என்பதெல்லாம் அப்புறம், ஓர் எதிர்ப்பை, அந்த அநீதிக்கு பொருத்தமான அளவிலான ஓர் எதிர்ப்பை சமூகம் நிச்சயம் காட்ட வேண்டும்.

இங்கு மட்டும் என்றல்ல. எங்கும் வேண்டும். அது கடமை. சமூகத்தின் கடமை. அந்தப் பெரியவரை பற்றி இப்போது நினைத்தாலும் ஒரு வித இயலாமை என்னை பீடித்துக்கொள்கிறது.

Monday, 11 June 2012

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்


நாம் எல்லோரும்
நமக்கு விருப்பமான‌
ஒன்றுடன்
பொறுத்திக்கொள்ள‌
தொடர்ந்து முயற்சிக்கையில்,


நம் எல்லோரையும்
ஏதாவதொன்று
தனக்குப் பொறுத்தமாக்கிக்
கொள்கிறது...


அதை நாம்
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்... 


ந‌ம்மை,
எதனோடோ
பொருந்திக் கொள்வதற்கும்,
எதுவோ
பொறுத்திக் கொள்வதற்கும்,
இடையேயான
மெல்லிய‌இடைவெளியில்
நாம் எல்லோரும் , எப்போதும்
உழ‌ல்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5681)

Monday, 4 June 2012

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

தானே துளிர்த்து,
தானே வேர் விட்டு,
தானே நீர் உறிஞ்சி,
தானே ம‌ண் இறுக்கி,
தானே கிளை ப‌ர‌ப்பி
தானே மொக்கு விட்டு,
தானே நிற‌மூட்டி,
தானே பூ ம‌ல‌ர்ந்து,
தானே க‌னி விட்டு,


இப்ப‌டி
எல்லாவ‌ற்றிற்கும் தானே
பொறுப்பேற்கிற‌து சுய‌ம்பு...


இருந்தும்
உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்
ஏனைய‌தாவ‌ர‌ங்க‌ளைப் போல‌த்தான்
சுய‌ம்புக‌ளுக்கும்...


#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5664)

த‌ண்ணீர் காட்டில் - 7

த‌ண்ணீர் காட்டில் - 7


திடமானால் நீராகிவிடுகிறது...
லேசானால் காற்றாகிவிடுகிறது...


பிறக்கையிலேயே
பரிசுத்தமான இது
அசுத்தங்களை கழுவுகிறது...


க‌ட‌லென‌ இருந்தும்
ம‌ம‌தை துளிகூட‌
அற்ற‌து நீர்...


நீரின்றி உடல் இல்லை...
உடல் இன்றி உயிர் இல்லை...
ஆனாலும் நீர்
எப்போதும் கால்களின்
கீழ் தான்...


- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கீற்று(http://keetru.com/index.php?option=com_content&view=article&id=20011:-7&catid=2:poems&Itemid=265)

Tuesday, 29 May 2012

பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்


பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்


நாம்
எல்லோரும்,
எப்போதும்,
எதையேனும்
நோக்கிப் போய்க்கொண்டே
இருக்கிறோம்...

ந‌ம் பாதைக‌ள்
ந‌ம் புல‌ன்க‌ளுக்கு
ஏதோ ஓர் வ‌கையில்
ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌வைக‌ளாக‌வே
இருக்கின்ற‌ன‌...

ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌பாதைக‌ளில்
செல்ல‌நேர்வ‌து குறித்து
பெரும்பாலும்
நாம்
எண்ணிப்பார்ப்ப‌தே இல்லை...

ஆயினும்
ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌பாதைக‌ளில்
ப‌ய‌ணிப்ப‌த‌ன் சாத்திய‌ங்க‌ள்
ந‌ம் பாதைக‌ள் எங்கும்
விர‌விக்கிட‌க்கின்ற‌ன‌...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5650)

Monday, 21 May 2012

அனுப‌வ‌ம்

அனுப‌வ‌ம்
நாம்
பள்ளிக்கூடங்களிலும்,
கல்லூரிகளிலும்
பெரும்பாலும் ஓவியங்களையே
கற்கிறோம்...


பிற்பாடு,
க‌ற்ற‌ஓவிய‌ங்க‌ளை
இணைக்க‌முய‌ல்கிறோம்...


அவ்வாறு
இணைப்ப‌தைத்தான் அனுப‌வ‌ம்
என்கிறோம்...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5616

Monday, 14 May 2012

இரண்டாம் பட்சம்


இரண்டாம் பட்சம்
எல்லோரும்
எதையேனும்
எப்போதும்
விளக்கிவிட முனைந்துகொண்டே
இருக்கிறார்கள்...

விளக்கங்கள்
தங்களை நியாயப்படுத்தும்
என்றெண்ணுகிறார்கள்...

அவர்கள்
விளக்கங்களைப் பெரிதும்
நம்புகிறார்கள்...

விளக்கங்களின் துணை
வாழ்நாளில் ஒரு முறையேனும்
இன்றி
ஒருவராலும்
தன்னிச்சையாய் இயங்க முடிவதில்லை...

இருந்தும்
விளக்கங்கள் எப்போதும்
இரண்டாம் பட்சமாகவே
நடத்தப்படுகின்றன...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5601)

Monday, 7 May 2012

ஓர் உருவம்


ஓர் உருவம்
புரிதலின் வடிவங்கள்
முப்பரிமான உருவங்கள்
கொண்டிருக்கின்றன...


எங்கிருந்து அவற்றை
பார்க்கவேண்டும்
என்கிற இலக்கணம்
தெரிந்திருக்க அவைகள்
நம்மை நிர்பந்திப்பதில்லை...


எங்கிருந்து நோக்கினும்
ஓர் உருவம்
நிச்சயம் தெரிகிறது...


எந்த இடம்
செளகர்யப்படுகிறதோ
அதற்கென ஓர் உருவம்
கொள்கிறது...- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5571)

Monday, 30 April 2012

பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்


பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்
பூட்டுகளை உடைத்தெறியும்
சாவிகளை
எவரும் தேடுவது போல்
தோன்றவில்லை...

பூட்டுகள்
செருகியிருக்கும் சுவர்களைப்
மூர்க்கமாக உடைத்துத்
திறக்கிறார்கள்...

உடைத்த சுவர்களை
பட்டுத் துணி கொண்டு
மறைக்கிறார்கள்...

பூட்டுகளைத் திறக்கும்
சாவிகளைச் செய்யும்
கொல்லனை எவரும்
கண்டுகொள்ளவில்லை...

நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

மிஞ்சும் மெளனம்


மிஞ்சும் மெளனம்
துரோகி ஒருவன்
புறமுதுகில் பேசுகையிலும்,

வார்த்தைகளைத் தப்பர்த்தம்
கொண்டவன் விலகி நடக்கையிலும்,

நுனிக் கிளையில் அமர்ந்தவன்
அடிக்கிளையை வெட்டுகையிலும்,

வார்த்தைகளை நம்பாதவனின்
விஷமச் சிரிப்புகளிலும்,

இனி விளக்கி
பயனில்லையெனும் போதும்,

எந்த விளக்கமும்
பயனளிக்காதெனும் போதும்

மெளனமே மிஞ்சுகிறது...நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

Monday, 23 April 2012

தொலையும் வாழ்க்கை


தொலையும் வாழ்க்கை
நம் பயணங்களை
எப்போதும்,
எதை நோக்கியேனும்,
தொடர்ந்தபடியே இருக்கிறோம்...


கடக்க நேரும் எல்லாவற்றிலும்
எங்கேனும் இடையில் நுழைந்து,
எங்காவது இடையில் வெளியேறிவிடுகிறோம்...


இடைப்பட்ட பாதைகளில்
பரிதாபமாய் தொலைகிறது
வாழ்க்கை...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5523)

Tuesday, 10 April 2012

கண்விழிப்பு

கண்விழிப்பு
விளக்கு இன்னமும்
உறங்கவில்லை...

துணைக்கு என்னையும்
இருத்தி வைத்திருக்கிறது...

அதன் ஓயாத பேச்சுக்களைக்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...

அதன் பேச்சுக்களை
முன்பே கேட்டிருந்தும்
ச‌லிக்க‌வில்லை...

மீண்டும் மீண்டும் அத‌ன்
வார்த்தைக‌ளை சுவீக‌ரிப்ப‌தில்
என‌க்குத் த‌ய‌க்க‌ங்க‌ளில்லை...

உண்மையைச் சொல்ல‌வேண்டுமானால்
அது அர்த்த‌ம‌ற்றுப் பேசிக்கொண்டிருக்கையில்
சுவார‌ஸ்ய‌ங்க‌ளுட‌ன் அது முன்ன‌ர்
உதிர்த்திருந்த‌வார்த்தைக‌ளையே
அசை போட்டுக்கொண்டிருந்தேன்...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5461)

ராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்

15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இற‌ப்புக‌ள்' என்ற‌ க‌விதையும், 'தாக‌ நிலா' என்ற‌ க‌விதையும் ப‌க்க‌ம் 42 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதைக‌ள் வெளியான ராணி வார இதழின் 42 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


இனிக்கும் இறப்புகள்


இந்தத் தேயிலை
என்றோ இறந்திருக்கவேண்டும்...

பசுவின் உதிரத்தில்
க‌டைசி உயிர்
பாலாகிவிட்டிருக்க‌வேண்டும்...

கரும்பு தன்னைப்பிழிந்து
சர்க்கரைக்கு தன்
உயிரை அளித்திருக்கவேண்டும்...

உயிரற்ற தேனீர்
எத்தனை இனிக்கிறது?...


தாகம்அகண்ட மதிலின் மடியில்
சிறு குட்டையென‌
தேங்கிக்கிடந்த நீரில்
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
உச்சி வெய்யில்...


ஒரு சிட்டுக்குருவி,
ஒரு துறுதுறு அணில்,
ஒரு சிறிய மியாவ்
என ப‌கிர்ந்துகொண்ட‌ நீரை
பொழுது சாய்ந்தும் வெய்யில்
விடுவ‌தாயில்லை...


நடுநிசியில்
ஒர் இனம்புரியா கண்விழிப்பில்
வெய்யிலை விர‌ட்டிவிட்டு
தாக‌ம் த‌ணித்துக்கொண்டிருந்த‌து
பால் நிலா ...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி
ராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.

என் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 2 April 2012

காட்சிகள்

காட்சிகள்
எப்போதும் உரத்த குரலில்
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும்
மின்சார விளக்கு
இன்று பலவீனப்பட்டு
திக்கியது...

அதன் வார்த்தைகளைக்
கோர்த்து பலனிருக்கவில்லை...

அத்தனையும் ஒன்றற்கொன்று
தொடர்பற்ற,
பொருளற்ற
வார்த்தைகள்...

அர்த்தங்களை வெறுப்புடன்
நிராகரித்துவிட்டு கோர்க்கப்பட்ட‌
ஓசைகளின் முறையான பிழைகள் போல‌
இருப்பதில்லை இந்த விளக்குகளின்
வார்த்தைகள்...

இவைகள் திக்கித் திக்கிப்
பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்
தனித்தனியே இயங்குகிறது
ஒரு வண்ண உலகம்...

நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5443)

Monday, 26 March 2012

மெல்லிய தீப்பொறி

மெல்லிய தீப்பொறிஎனக்குள் ஒரு அக்கினிப்பொறி
மெல்லக் க‌ன‌ன்று கொண்டிருக்கிற‌து...


மிக‌க்க‌வ‌ன‌மாய் அந்த‌ப் பொறியை
பெருந்தீயென‌ பெருக்க
தொடர்ந்து முய‌ற்சிக்கிறேன்...


அது
சிணுங்குகிற‌து...
சாய்கிற‌து...
நீள்கிற‌து...
குறுகுகிறது...
கண் சிமிட்டுகிறது...
ஆனால் அணையவில்லை...


என்றாவது ஒரு நாள்
அது அணைந்துவிடும் என்றும்
தோன்றவில்லை...


அணைதல் இல்லாத‌ அந்தப் பொறி,
சாகாவ‌ர‌ம் பெற்ற‌ அந்த‌ப் பொறி
விசித்திரம் எனப் படுகிறது எனக்கு...


கொஞ்சமென அதன் முனை கிள்ளி
வழியெங்கும் தூவிச் செல்கிறேன்...


இதோ, இப்போது கூட‌
இந்தக் கவிதையென...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5419)

Monday, 19 March 2012

மிகமெல்லிய நூல்

மிகமெல்லிய நூல்மிக மெல்லிய நூலொன்று
என்னை எனக்கான திசையில்
கவனமாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது...


அதன் நீள அகலங்களை
நான் அறுதியிட்டுக்கொண்டே
இருக்கிறேன்...

அந்த நூலை எப்படியேனும்
அறுத்துவிட எப்போதும் யாரேனும்
முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்....

அந்த நூல் அறுபடுவது
என்னை நானே கொல்வதுபோல...

அதில் எனக்கு ஒப்புமையில்லை....

மிகவும்
பொறுமையுடனும்,
சகிப்புத்தன்மையுடனும்,
நிதானத்துடனும்,
உறுதியுடனும்,
திடத்துடனும்
அந்த நூலைப் பாதுகாக்கிறேன்....- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
# நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5402)

Monday, 12 March 2012

அற்புத‌ இர‌வு

அற்புத‌ இர‌வு
பகலின் திரளான படைக்குள்
ஆக்ரோஷமாய் முன்னேறுகிறது
வெளிச்சம் கூட்டுப்ப‌டையென‌...

தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்த‌ அது
வஞ்சகமாய் மெல்ல தன் திசையை
மாற்றிக்கொள்கிறது...

வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌க‌ல்
வெளிச்ச‌த்தின் முதுகில்
துர‌த்தி அக‌ல‌
விடிகிற‌து ஓர் அற்புத‌ இர‌வு...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5380)

Tuesday, 6 March 2012

ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை

ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை

4.3.2012 தேதியிட்ட ராணி குடும்ப (வெகுஜன) வாரந்திரியில் நான் எழுதிய சிறுகதை 'அம்மி அம்மா' என்ற தலைப்பில் பக்கம் 40 ‍- 41 ல் வெளியாகியிருக்கிறது. சிறுகதை வெளியான ராணி வார இதழின் 40 - 41 பக்கங்களின் பிரதிகள் இங்கே.அம்மி அம்மா - சிறுகதை
'என்ன காரணம்னாச்சும் சொல்லுங்கப்பா?' அழுகையும், ஆத்திரமும் உள்ளுக்குள் மண்டிக்கிடக்க வெடித்தாள் ராகினி.

'காரணம்லாம் சொல்லிகிட்ருக்க முடியாது ராகினி. படிச்சிட்டோம்னு கொழுப்பா உனக்கு? இல்ல நாலு காசு சம்பாதிக்கிறோம்னு திமிரா? உன்ன வேலைபாக்க விட்டது தப்பாபோச்சி. படிச்சகையோட எவன்கிட்டயாச்சும் புடிச்சு குடுத்திருக்கனும்' கோபத்தில் பதிலுக்கு உருமினார் மனோகரன்.

'அப்பா, இப்ப என்னப்பா நான் தப்பா கேட்டுட்டேன். ஒருத்தர லவ்பண்றேன்னு சொன்னேன். கட்டிவையுங்கன்னு கேக்குறேன். அதுக்கு ஏன்பா திமிரு, அது இதுன்னு பேசறீங்க?' உடைந்து போயிருந்த அவளின் குரல் இயலாமையின் விரக்தி சூழ மேலும் தழுதழுத்தது.

'ஆமா, இது திமிரு இல்லாம என்னவாம்? நம்ம சாதிப் பையனா இருந்தாலும் பரவால்ல. எவனோ புள்ளைமாராம். காதலிக்கிறேன்னு நீ சொன்னா உடனே நான் கட்டிவைக்கணுமா? காதல் பண்ணத்தான் உன்ன வேலைக்கு அனுப்பினேனா? அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் குடுத்தா தலைக்குமேல போறியே நீ. இன்னும் ஒரு வார்த்தை பேசாத ராகினி. வயசானவன் நான். அம்மா மட்டும்தான் உனக்கு இப்ப இல்ல. அப்பாவும் இல்லாம அனாதையாயிடாத, போ உள்ள'. கோபத்தின் உச்சத்தில் எழுந்து நின்று கத்தினார் மனோகரன். அவரின் குரல் அந்த வீட்டின் நாற்புறமும் எதிரொலித்தது. அவர் முகம் உஷ்ணம் கூட்டி வியர்த்திருந்தது. அறுபது வருடங்கள் அவருடனே பயணித்த விரல்கள் அவரையும் மீறி நடுங்கின.

அவர் இத்தனை ஆத்திரமாய் அவளிடம் குரல் உயர்த்தி அதுவரை கத்தியிருக்கவில்லை. அவரின் அத்தனை பெரிய கோபத்தின் முதல் ஸ்பரிசம் அவளுக்கு அதிர்ச்சியளித்திருக்கவேண்டும். அதற்கு மேல் ஏதும் பேச இயலாதவளாய், பொங்கி வந்த அழுகையை அடக்க முயன்றவளாய் உள்ளங்கையில் அழுத்திய துப்பட்டாவினால் வாயை மூடியபடி உள்ளே பக்கவாட்டிலிருந்த த‌ன் அறைக்குள் அடைந்தாள் ராகினி. அவளின் விசும்பல் சப்தங்கள் வெகு நேரம் அவரின் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது.

மனோகரன், மணி பார்த்தார், மணி இரவு 12 தாண்டியிருந்தது. எப்போது இத்தனை நேரங்கடந்தது என்பதாய்த் தோன்றியது அவருக்கு. ராகினியுடனான 25 வருட அப்பா மகள் உறவில் இத்தனை கடுமையாய், ஆக்ரோஷமாய், துவேஷமாய் நடந்துகொண்டதில்லை. முதல்தடவை அப்படி நடந்திருப்பதுதான் தன்னையுமறியாமல் நேரங்கடந்துபோகக் காரணமென்று நினைத்துக்கொண்டார். இரண்டடி எட்டிவைத்து சோர்வாய் விளக்கை அணைத்துவிட்டு தளர்வாய் அந்த சோபாவில் விழுந்தார் மனோகரன்.அந்த அடர்ந்த இரவில் தூரத்தில் எங்கோ குலைக்கும் நாயின் கதரலோடு, கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.மனோகரன் இடது மணிக்கட்டை, ஜன்னலோர நிலாவொளி நோக்கித் திருப்பி மணி பார்த்தார். மணி நடுநிசி ஒன்று காட்டியது. ராகினி விசும்பும் சத்தம் இப்போது கேட்கவில்லை என்பது சற்று நிம்மதியளித்தது. அழுது அழுது தூங்கியிருக்கலாமென்று நினைத்துக்கொண்டார். இப்போது அந்த‌ க‌ர‌க் க‌ர‌க் ச‌ப்த‌ம் முன்னைவிட‌வும் அதிக‌ம் கேட்ப‌து போலிருந்த‌து.அதே கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார் ம‌னோக‌ர‌ன். இருள் கிடைத்த‌வ‌ற்றையெல்லாம் க‌வ்விக்கொண்டிருந்த‌து. ம‌னோக‌ர‌ன் மெல்ல‌ எழுந்து ப‌க்க‌வாட்டிலிருந்த‌ ஜ‌ன்ன‌ல‌ருகே சென்று பார்த்தார். அந்த‌ ச‌ப்த‌ம் இன்னும் தெளிவாய்க் கேட்ட‌து. சுற்றிலும் எந்த‌ வீட்டிலும் விள‌க்கெரிய‌வில்லை. நிச‌ப்த‌ம் எங்கும் சூழ்ந்திருக்க‌ அந்த‌ ச‌ப்த‌ம் அவ‌ர் வீட்டின் கொள்ளைப்புர‌த்திலிருந்து வ‌ருவ‌து போலிருந்த‌து.

ம‌னோக‌ர‌னின் வீடு அவ‌ரின் த‌ந்தை க‌ட்டிய‌து. த‌னி வீடு. த‌ரைத‌ள‌ம் ம‌ட்டுமே. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. பின்னால் கொல்லை. முதலில் வரும் ஹாலைத்தொடர்ந்து, பக்கவாட்டில் இரண்டு அறைகள், ஹாலை அடுத்து சமையலறை. ஹால், அறைகள், சமையற்கட்டு, கொல்லை என எல்லாமும் மரக்கதவால் தடுக்கப்பட்டு, திரைச்சீலையிட்டு கதவுகள் மறைக்கப்பட்டிருக்கும். வீட்டில் ஹாலில் இருந்ததெல்லாம் மரத்தாலான மேஜை, டிவி ஸ்டாண்டு, குஷன் சோபா, பவர் ஹவுஸ் என எதுவுமே இரும்பால் ஆனது அல்ல. உள்ளறையில் பீரோ, கட்டில், டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர் டேபிள் என எல்லாமும் மரத்தாலானதுதான். கொல்லை பெரிதென்று கிடையாது. நான்கைந்து பூச்செடிக‌ளும், ஒரேயொரு கொய்யா ம‌ர‌மும், ஒரு துள‌சி மாட‌மும் இருக்கும். கொல்லையை ஒட்டி சமையல் அறை. ம‌னோக‌ர‌னின் ம‌னைவி வ‌ள்ளி உயிருட‌ன் இருந்த‌ கால‌ம் வ‌ரை முழுப்ப‌ராம‌ரிப்பும் அவ‌ளுடைய‌து. பண்பானவள். அதிகாலை ஐந்து மணிக்கே குளித்துவிடுவாள். புடவை சுற்றி முந்தினம் தோட்டத்தில் பூத்த பூக்களைச் சேகரித்துக் கட்டிய‌ பூச்சரத்தை கூந்தலிலிட்டு பயபக்தியுடன் துளசி மாடம் சுற்றி, சுலோகம் சொல்லி, அப்பபா ஒரு பண்பான குடும்பத்துப் பெண்ணாக அந்தக் கொல்லை அவளின் இறைத்தழுவலில் திளைத்துக்கிடக்கும். அவ‌ள் இற‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆகிவிட்டிருந்த‌து. சமையற்கட்டின் கொல்லைப்புற ஓரத்தில் உட்கார்ந்தவாக்கில் அப்படியே இறந்திருந்தாள். அதிகாலை ஆறு மணிக்கு மனோகரன் விழித்தெழுந்தபோது அவள் அப்படித்தான் கிடந்தாள்.என்ன‌ கார‌ண‌மென்று தெரிய‌வில்லை. உட‌ல் சில்லிட்டிருந்த‌து.அவ‌ள் இற‌ந்துவிட்டிருந்தாள். 25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவள் எந்த ஒரு சமயத்திலும் அதண்டு இருந்ததேயில்லை. எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை. சண்டைபோட்டுக் கோபித்துக்கொண்டதில்லை. பொய்க்கோபங்கள் இல்லை. மனோகரன் அலுவலகம் விட்டு வீடு வர மாலை நேரக்காத்திருப்புக்கள் கூட இருந்ததில்லை. எப்போதும் கோயில், பூஜை, புனஸ்காரம், விரதம், நெய் விளக்கேற்றுதல், கோயில் திருக்கல்யாணம், பிரதோஷம் என ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருப்பாள். தானுண்டு தன் வேலையுண்டு என் இருப்பாள். தன் வழியில் செல்லும் நத்தை போல அவள். எதற்கும் ஒரு புன்னகை மட்டுமே. அதிகம் போனால் அதுவே சிரிப்பாக மலரும். அவ்வளவே. ஆனால், திருமண வாழ்வின் முக்காலே மூணுவீச காலம் அடுப்பங்கறையிலேயே கழித்தவள். மீதம் பூஜையறையில்.

மனோகரன் சற்று சுதாரிப்பானார். திருட்டு மிகுத்த சென்னைப் பட்டினம் அவரை எச்சரிக்கையுணர்வு கொள்ள வைத்தது. சப்தம் கொல்லையிலிருந்து தான் வந்தது. ஒருவேளை ஏதேனும் திருட்டாக இருக்குமோ. ராகினியின் நகைகளாக ஒரு ஐம்பது சவரம் வீட்டில் இருந்தது வயிற்றைப் பிசைந்தது. மெல்ல நகர்ந்து அவர் சமையலறை திரைச்சீலையை விலக்கி பார்க்கக் கதவு திறந்திருந்தது. அவர் மேலும் எட்டிப் பார்க்க‌ அங்கே நிழலாடுவது தெரிந்தது. மனோகரன் கண்களைச் சுருக்கிப் பார்க்க, கால்களை மடித்து பக்கவாட்டில் சாய்த்தவாறே அடுப்பங்கறை சுவற்றில் சாய்ந்தபடி ராகினி கொல்லைப்புறத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். கொல்லைக் கதவு லேசாக திறந்திருக்க, வெளியே மங்கிய நிலவொளியில் அம்மிக்கல் காய்ந்துகிடந்தது. அந்த கரக் கரக் சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.


மெல்ல மனோகரன் சமையற்கட்டினுள் நுழைந்து ராகினியின் அருகில் சென்றார். அத்தனை பக்கத்தில் நின்றும் மனோகரனில் இருப்பை உணராதவளாய் ராகினி கொல்லையையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

'ம்மா!'.

'......'.

'ம்மா!'.

'ம்ம்.. என்னப்பா?'.

'என்னடா பண்ற இங்க?'.

'ஆங்.. ப்பா.. அந்த சத்தம்!..அது..'.

'ம்ம்.. தெரியலமா.. அக்கம்பக்கத்து வீடுங்களா இருக்கும்மா.. நீ போயி படுத்துக்கோம்மா'.

'உங்களுக்கு அது கேக்குதாப்பா?'

'கேக்குதும்மா... யாராவது தூக்கம் வராம மராமத்துவேலை பண்றாங்களா இருக்கும்மா.. காலைல பாத்துக்கலாம் யாருன்னு. நீ போயி படும்மா'.

'இல்லப்பா... அம்மா!'.

'என்னம்மா?'

'அம்மா பா.. அம்மா.. உங்ககிட்ட ஏதோ சொல்ல வராங்கபா' என்றபடி ராகினி கொல்லையை ஒட்டி இருந்த அந்த அம்மிக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு தூக்கிவாறிப்போட்டது போலிருந்தது.

மனோகரன் அப்போதுதான் கவனித்தார். அந்த சப்தம், அம்மியை கல்லில் எதையோ இட்டு அரைப்பதான ஒலியை ஒத்து இருந்தது. வள்ளி எப்போதும் இங்குதானிருப்பாள். வீட்டில் மிக்ஸி இருந்தாலும் அவள் இங்குதான் தேங்காய் சட்னி, கார சட்னியெல்லாம் அரைப்பாள். சில நேரங்களில் அரைக்க ஏதுமில்லையென்றாலும் எதையாவது வைத்து அரைத்துக்கொண்டிருப்பாள். கேட்டால் ரெஸிப்பி அது இது என்பாள். அவருக்கு சட்டென ஏதோ அமானுஷ்யமாய் இருப்பது போலப்பட்டது. அவருக்கு நினைவு தெரிந்து, ஒரு வாரம் முன்பு கூட அப்படி அவர் அங்கே அந்த அர்த்த ராத்திரியில் தண்ணீர் குடிக்க வந்தார். ஆனால் அப்போது அப்படி ஏதும் கேட்கவில்லை. இப்போது கொல்லைக் கதவு திறந்திருக்கிறது. அம்மிக்கல் அப்படியே இருக்கிறது. ஆனால், அதில் எதையோ அரைப்பதான ஒலி மட்டும் நிற்கவேயில்லை. அது எப்படி.
கிட்ட நெருங்கி எட்டி கொல்லையில் சுற்றுமுற்றும் பார்த்தார். சத்தியமாக யாருமில்லை. அரவமுமில்லை. ஆனால் சப்தம் மட்டும் நிற்கவில்லை.

'அம்மாவா?' மனோகரன் தன்னிச்சையாய் குழப்பத்துடன் இழுக்க,

'ஆமாப்பா, அம்மாதான்பா அது. பாவம்பா அம்மா.'

'என்னடா சொல்ற? எப்படிடா?'.

'நீங்கதான்பா, நீங்களும்தான்பா'.

'நானா? நான் என்னடா செஞ்சேன்?'

'அம்மா காதலிச்சாங்களே பா. உங்க கல்யாணத்துக்கு முன்னால. அவரு நாயக்கருன்னு அம்மாவோட அப்பா அவருக்குக் கட்டிக்குடுக்காம உங்களுக்கு குடுத்தாரு. கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட அவரபத்தி அம்மா சொன்னாங்களாமேபா. நீங்களும் நம்ம ஜாதிப்பொண்ணு இன்னொரு ஜாதிக்குப் போய்டக்கூடாதுன்னு அம்மாவ வலுக்கட்டாயமா கட்டிக்கிட்டீங்களாமேபா. அம்மா அப்போவே மனசளவுல செத்துட்டாங்கப்பா. எனக்கு மஞ்சள் நீராட்டுவிழா அன்னிக்கு யாரோ திருட்டுத்தனமா பந்திக்கு வந்துட்டதா சொல்லி ஒருத்தர அடிச்சீங்களேபா. அவருதான்ப்பா அம்மாவ காதலிச்சவர். அம்மா கிடைக்காததுனால, யாரையுமே அவரு கல்யாணம் முடிக்கலபா. அவர் வீடு இந்தக் கொல்லைலேர்ந்து பாத்தா தெரியும்பா. அம்மாவ மறக்க முடியாம, அம்மாவொட நினைவுலயே இருந்தாராம்பா. உடம்பாலயும், மனசாலயும் அம்மா உங்களோட வாழ்ந்தாலும், தன்னால அவரோட வாழ்க்கை நாசமாயிட்டதா அம்மா அவர் மேல ரொம்ப பரிதாபப்பட்டாப்பா. அந்த பரிதாபத்துக்கு வடிகால் கிடைக்கவேயில்ல அவங்களுக்கு. பாத்துக்க சொந்தங்கள் ஏதும் இல்லாம, அம்மாவ மறக்க குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி போன வருஷந்தான்ப்பா அவரு செத்தாரு. அந்த துக்கமோ என்னமோ அம்மாவும் செத்துட்டாங்கபா'. சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் இப்போதும் அந்த அம்மியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த சப்தம் இப்போதும் தெளிவாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

'இதெல்லாம் உனக்கெப்படிம்மா தெரியும்?'.

'அம்மாதான்ப்பா. தோளுக்கு மேல வளந்துட்டா தோழன்னு சொல்வாங்க. ஆனா, அம்மாவுக்கு பொண்ணு தோளுக்கு மேல வளரணும்னு கூட இல்லப்பா. அம்மா ஒரு தோழியா என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்காங்க. அம்மா செத்துப்போனதுக்கப்புறம் கூட இந்த ஒரு வருஷமா அவுங்ககிட்ட என் காதலைப் பத்தி பேசிட்டுதான்ப்பா இருக்கேன். இப்படித்தான் அவுங்க கேட்டுக்கிட்டிருக்காங்க'.

மனோகரன் காதுக்கு அந்த சப்தம் இன்னும் துல்லியமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

ராகினி சொன்ன ஒவ்வொரு விஷயமும் மனோகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணத்துக்குமுன் வள்ளி தன் காதலைப் பற்றி சொன்னாள்தான். ஆனால், அப்போதிருந்த ஜாதிபுத்தி அவள் சொன்னதை உதாசீனப்படுத்தமட்டுமே தூண்டியது. அவள் காதலித்தவன் யாரென்று கூடப் பார்க்காமல் வள்ளியின் அப்பா கேட்டுக்கொண்டதன் பேரில் வள்ளியை உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார் மனோகரன். அதன்பின் வந்த நாட்களில் வள்ளி ஒரு பெண் குழந்தைக்கு தாயானதும், சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதாய்தான் தோன்றியது. வள்ளியிடம் ஏதொரு பெரிய மாற்றமும் இருக்கவில்லை. ஆதலால், அந்தப்பிரச்சனையை அதோடு முடிந்துவிட்டதென்று மறந்தும் போனார்.

ராகினியின் பூப்பு நீராட்டுவிழா இன்றும் நினைவிருக்கிறது. ஊரிலேயே பெரிய மஹால் புக் செய்து, ஐந்நூறு பேருக்கு சமைத்துபோட்டு, பந்தி பந்தியாய் இனிப்பு பரிமாறி, கட்டவுட் வைத்து, போஸ்டர் ஒட்டி கொண்டாடிய விழாவில், வண்ண ஓவியத்தில் ஒரு கரும்புள்ளியாய்த் தான் நினைத்திருந்தார் திருட்டுத்தனமாய் வேற்று ஜாதிப்பயல் பந்தி நடக்கும் இடத்தருகே பிடிபட்டதில். ஆனால், அவந்தான் வள்ளியின் முன்னால் காதலனென்று அப்போது அவருக்கு தெரியாது. இப்போது புரிகிறது. தான் தகப்பனாக இல்லாவிட்டாலும், தான் மனமார காதலித்தவளின் பெண்ணைத் தன் பெண்ணாய் பாவித்து வந்திருந்தவனை அடித்து விரட்டி அவமானப்படுத்தியபோது வள்ளியின் இதயம் எத்தனை வலித்திருக்கும். இப்போது புரிந்தது, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வள்ளி ஏன் எப்போதும் இந்த அம்மிக்கல் கொல்லையிலேயே தவம் கிடந்தாளென்று.

மனோகரனுக்கு வெகு தாமதாய், வள்ளியின் பல செய்கைகளுக்கு இப்போதுதான் காரணம் புரிந்தது. திருமணத்தில் இன்னொரு பெண்ணை தன்னிடத்தில் நிறுத்த முடியாமல் தனக்காகவே மணமுடிக்காமல் திரிந்தவன் வாழ்க்கை வீணாய்போவதை எண்ணியெண்ணி அவள் மனம் வெதும்பித்தான் தன்னுடனான திருமண வாழ்வில் மனம் ஒன்ற முடியாமல் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறாள். நாளோ, கிழமையோ எதுவானாலும் அவளுக்கு எல்லாமும் ஒன்றாய்த்தான் இருந்ததன் காரணம் பொய்யாகிப்போன அவளின் காதல். உள்ளத்தால் பிணமாகிவிட்டவளால் தான் அப்படி இருந்திருக்கமுடியும். அவள் இயல்பாய்த்தான் இருக்கிறாள் என்ற தன் அனுமானம்தான் தவறாகியிருக்கிறதென்று தோன்றியது அவருக்கு.

அவளுக்கு அவன் மேல் பரிதாபம் இருந்திருக்கிறது. தனக்குக் குடும்பம் அமைந்ததுபோல் அவனுக்கும் அமையாமல், தனிமரமாகிவிட்டானென்பதில் தோன்றியதில் பச்சாதாபம் இருந்திருக்கிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன். சிந்திக்கும் திறனுள்ளவன். பகுத்தறியமுடியும் அவனால். ஆனாலும், மனிதனை சமூகம் என்னும் கட்டுக்குள் கொண்டுவருவது மனிதனுக்கு மனிதன் உணர்ச்சிகளுக்குண்டான மதிப்பளிப்பதில்தான். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமன், மச்சான் என எல்லா உறவுகளும் உணர்ச்சிகளை முறையாக்குவதில்தான் தொடங்கியிருக்கிறது. அக்கா விரும்பியவனுக்கு கட்டிக்கொடுத்தால் அவன் மாமாவாகிறான். மாமனின் பெண் முறைப்பெண் ஆகிறாள். இப்படித்தான் உறவுகள் உருவாகின்றன. அதுதான் சமூகத்தை உருவாக்குகின்றன. அது இல்லையெனில் நாய்களைப் போல் என்றோ அடித்துக்கொண்டு அழிந்துபோயிருக்கும் மனித இனம். ஆனால், ஜாதி என்கிற பெயரில் மனிதனுக்கு மனிதன் தோள் கொடுத்துக்கொள்ளவேண்டிய உணர்ச்சிகளை காலில் போட்டு மிதித்திருக்கிறோமென்று புரிந்தது. முறைப்படுத்தப்பட வேண்டிய உணர்ச்சிகள் சாகடிக்கப்பட்டால் மனிதனே உயிருடன் இருந்தாலும் பிணமாகிவிடுகிறான். வாழ்க்கை அர்த்தப்படுவதில்லை. முடமாகிவிடுகிறது. அப்படிப்பார்த்தால் ஜாதி எதன் அடையாளம்? உணர்ச்சிக்கொலையின் அடையாளம். பிணமாக்குதலுக்கு மறுபெயர். பிணந்தின்னிகளின் பசி.

'நீ சொல்றதெல்லாம் உண்மையாம்மா?'.

'ஆமாப்பா'.

'உனக்கெப்படிம்மா தெரியும் இதெல்லாம்?'.

'அம்மா என்கிட்ட சொல்லியிருக்காப்பா. உண்மையான காதலுக்கு மட்டும்தான்ப்பா அந்த சக்தி இருக்கு. இல்லன்னா அம்மாவுக்கு சாகுற வயசாப்பா. அம்மாவோடது உண்மையான காதல்ப்பா. அவுங்க காதல் ஜெயிச்சிருக்குப்பா. அதனாலதான் அம்மாவும் காரணமேயில்லாம‌ செத்திருக்கா. அந்தப் பரிதாபம், பரிவு இதெல்லாம் அந்த உண்மையான‌ காதலோடதுப்பா. அதுக்காகத்தான் அம்மா உயிர் போயிருக்கு. என் காதலும் உண்மைதானப்பா. அதுவும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா ஜெயிக்கும்ப்பா' சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் பார்வை இப்போதும் அந்த அம்மிக்கல்லின் மீதே நிலைகுத்தியிருந்தது.

'வேணாம்மா. இந்த முறை உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா' மனோகரன் மகளின் தலையை கோதிவிட்டவாறே, கொல்லையில் அதே அம்மிக்கல்லை பார்த்துக்கொண்டிருக்க, ராகினி சட்டென மனோகர‌ன் பக்கம் திரும்பினாள்.

'என்னப்பா சொன்னீங்க?'.

'உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா. நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கோம்மா' என்ற மனோகரனின் கண்கள் கலங்கியிருந்தன. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த சப்தம் சட்டென நின்றுபோனது.


முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

நன்றி
ராணி (4.3.2012) குடும்ப வார இதழ்.
என் சிறுகதையை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கும், இதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.