என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறு நாவல் - அத்தியாயம் - 3

 

அத்தியாயம் - 3

 

 

 

எனக்கு சூர்யாவைப் பிடிக்கும்.

 

‘சற்று முன், பெண்களைப் பிடிக்கும் என்றாயே?” என்காதீர்கள். சூர்யாவைப் பெண்களைவிடவும் அதிகம் பிடிக்கக் காரணங்கள் இருந்தது.  நான் முன்பே சொன்னது போல், நான் எல்லோர் கண்களுக்கும் புலப்பட மாட்டேன். ஒரு சிலர் கண்களுக்கு மட்டுமே நான் காணக் கிடைப்பேன். சூர்யாவிடம் அப்படியான கண்கள் இரண்டு இருந்தன. 

 

அந்த சூர்யா, தமிழக மக்களுக்காய் ஒரு பேட்டி தர இருந்தான். எனக்கு அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க வேண்டியிருந்தது. ஆதலால் பேட்டி நிகழும் இடத்தில் நான் ஆஜராகியிருந்தேன்.

 

ராய் தொலைக்காட்சியில், கணிணி மென்பொறியாளர் சூர்யாவைப் பேட்டி எடுக்க ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தாள். திரையில் காட்சியின் அழகிற்காய் அழகான பெண்களை இவ்விதமான பேட்டிகளுக்கு அமர வைப்பது எல்லாத் தொலைகாட்சிகளிலும் நடக்கிறதுதான். என் கேள்வி என்னவெனில், இது போல் எண்ணற்ற பேட்டிகளில் அமர்ந்தும் அவள் ஏன் இன்னமும் தொகுப்பாளினியாகவே தொடர்கிறாள் என்பதுதான். சில சமயங்களில் சிலரால் நான் தேவைகளற்று உருவாக்கப்படுவதும் உண்டு; தொகுப்பாளினியாகவே பல ஆண்டுகள் தொடர்வது என்பது கூட ஒரு நேர் கோடு வரைவது போலத்தானே.

 

"வணக்கம். நம்ம ராய் தொலைக்காட்சியில ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கியமானப் பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பேட்டியெடுக்கிறோம்.  இந்த வாரம் நம்ம கூட பேச வந்திருப்பவர் பத்தி நாம அறிமுகம் செய்தே ஆகணும். இவர் பெயர் சூர்யா. ஒரு காலத்துல சோஷியல் நெட்வொர்கிங்னாலே ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு அமேரிக்க நிறுவனங்கள் மட்டுமே நம்ம கிட்ட இருந்துச்சு. அதை உடைச்சு ஒரு தமிழர், தமிழர்களாலும் கணிணி மென்பொருள் உலகத்துல கோலொச்ச முடியும்ன்னு நிரூபிச்சிருக்கார். அவர் நம்ம சமூகத்தை பார்க்கிற பார்வை என்ன, அதுல இருக்கிற சாத்தியங்கள், அசாத்தியங்கள், சாதகங்கள், பாதகங்கள் என்னென்னங்குறதைப் பத்தியெல்லாம் இப்ப அவர்கிட்டவே கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். வாங்க நிகழ்ச்சிக்குப் போகலாம்." என்ற தொகுப்பாளினி இப்போது சூர்யாவிடம் திரும்பி,

 

"சார் வணக்கம். எப்படி இருக்கீங்க?"

 

"ரொம்ப நல்லா இருக்கேன்"

 

"சார், சோஷியல் நெட்வொர்கிங்னாலே வெளி நாட்டு நிறுவனங்கள் தான்னு ஒரு காலத்துல இருந்தது. அதுல என்ன பிரச்சனைன்னு நீங்க நினைக்கிறீங்க?"

 

"மனித உறவுகளை எப்படி கணித மாதிரியா உருவாக்குறதுங்குறதுல இருந்து இது துவங்கிச்சுன்னு சொல்லலாம். முதல்ல மனித உறவுகளைக் கணித மாதிரியா அமெரிக்க நிறுவனங்களால முழுமையாக உருவாக்க முடியலை. அதனால அவங்க, மனிதர்களோட ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், தேர்வுகள்ன்னு பட்டியலெடுத்து அதை ஒரு மாதிரியா  (model) ஆக்கினாங்க.”

 

இந்த வேலையைச் செய்ய டேட்டா சயிண்டிஸ்ட் (Data Scientist) என்றொரு பிரிவே இருந்துச்சு. ஆனா, இது வர்த்தக ரீயிலான பலன்களை மட்டுமே கொடுத்துச்சு. ஒரு பொருள் யாருக்கெல்லாம் தேவைப்படும், எப்போவெல்லாம் தேவைப்படும், இந்தத் தேவையை துல்லியமா ஊகிச்சி, எப்படியெல்லாம் வர்த்தகம் பண்ணலாம்ங்குற கோணத்துல தான் இருந்துச்சு.

 

ஆனா, இதுல பிரச்சனைகள் அனேகம் இருந்தது. உதாரணமா, நீங்க ஒரு வாடகைக் கார் ஓட்டுறவரா இருந்தா பயணருக்காக பயணர் சொல்ற இடத்துக்கு போவீங்க. நீங்க அந்த இடத்துக்கு போறதை வச்சே அந்த மென்பொருள்கள், உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருக்குன்னு எடுத்துக்கும். இது ஒரு உதாரணம் தான். இப்படி நிறைய சொல்லலாம்.   இது தவறான விளைவுகளையே தந்துச்சு. இதனால கணித மாதிரி உருவாக்குறது முதல் சவாலா இருந்துச்சு. அந்த சவாலை கையில எடுத்துக்கிட்டதுக்கு அப்புறம் ஒரு முறையான கணித மாதிரி கிடைச்சது. அதை அடிப்படையா வச்சு மென்பொருள் எழுத முடிஞ்சது."

 

சூர்யா சொல்லி முடிக்க பார்வையாளர்கள் பக்கமிருந்து பலத்த கரகோஷம் கேட்டது.

 

சூர்யா மிகக்குறைவான வார்த்தைகளில், அந்தக் கேள்விக்கான விடைக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு தோதான எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி விளக்கியிருந்ததாகத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு சூர்யாவின் பார்வைக்கோணம் பிடித்திருந்தது. எளிமையாகச் சொல்வதானால், மேற்குலகில் என்னை ஒருவிதமாக உருவாக்கினார்கள் எனில் தெற்காசியாவில் வேறு விதமாய் உருவாக்கினார்கள். ஆக, இரண்டிலுமே இறுதியில் உருவானதென்னவோ நான் தான். இலக்கு ஒன்று தான். மார்க்கங்கள் தான் வெவ்வேறு. இன்னும் எளிமையாகச் சொல்வதானால், சூர்யா தன்னை இன்னொரு குட்டிக் கடவுளாக்கியிருந்தான்.

 

தெற்காசியாவில் கலாச்சாரம் வேறு. எந்த நிலப்பரப்பிலும், மனித உறவுகள் அந்தந்த நிலப்பரப்பில் வழக்கிலுள்ள கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாவது தான் ஆரோக்கியமான, நீண்ட காலம் நீள்வதான உறவுமுறைகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. அந்த ஆரோக்கியத்தை மேற்குலகின் விதிகள் அணுகும் முறை வேறாக இருந்தன. தெற்காசிய நிலப்பரப்பிலுள்ள மனிதர்கள் மேற்குலக விதிகளை உலகமயமாக்கலின் விளைவாக எதிர்கொள்ள நேர்கையில் அவர்களது கலாச்சாரம் மழுங்கடிக்கப்படுகிறது.  புறக்கணிக்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் மேற்குலகின் கலாச்சாரத்திற்கென உருவாக்கப்பட்ட செயலிகளான டின்டர் போன்ற செயலிகளில், நிலப்பரப்பு சார்ந்த கலாச்சார விழுமியங்களின் முக்கியத்துவங்கள் பாதுகாக்கப்படுவதில்லை.

 

நானறிந்தவரையில் சூர்யாவின் கணித மாதிரி, அந்த எதிர்கொள்ளலை மிகவும் கவனமாகக் கையாண்டது தான் என்னை அதில் ஈர்த்த அம்சமாக இருந்தது.