Monday, 9 December 2013

முடிச்சு - சமூக நாவல்

முடிச்சு - சமூக நாவல்

நாவல் எனப்படுவது ஒரு கதையை பக்கம் பக்கமாக நீட்டி, பக்கத்துக்கு பக்கம் எதிர்பாராத நிகழ்வுகள் தந்து எழுதுவது அல்ல. அது வாரா வாரம் தொடரும் தொடர்கதையும் அல்ல. வேறெங்கோ வாசித்த வாக்கியத்தை குறியீடுகள், உவமானங்கள், உவமேயங்கள் என இஷ்டம் போல் மாற்றி எழுதுவதுமல்ல. 6 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை சிறுக‌தை என‌வும், 50 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை குறுநாவ‌ல் என‌வும் 90 அல்ல‌து அத‌ற்கு மேற்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌து நாவ‌ல் என்கிற‌ ஆகிருதியும் அல்ல‌.

நாவல் எனப்படுவது யாதெனில், இதற்கு முன் முன்மொழிந்திரப்படாத அல்லது ஓர் மாற்றுக்கருத்தை முன்வைப்பதான ஒரு கருத்தாக்கத்தை விளக்க, அதன் சூழலுக்கு பொருந்துவதான கதை மாந்தர்களை உருவாக்கி, பொருத்தமான கதைக் களம் ஒன்றில் சாதகமான வாதங்களை முன்வைத்து எழுதுவதே நாவல் எனப்படுவது.

அதிலும் சமூக நாவல் எனப்படுவது, சமூக அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை கேள்விக்கு உட்படுத்துவது. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்வது. காலாவதியாகிவிட்ட அடையாளங்களை, மதிப்பீடுகளை, வ‌ழ‌மைக‌ளை க‌ண்டுகொண்டு மாற்று சிந்த‌னைக‌ளை முன்மொழிவ‌து.

ச‌மூக‌ நாவ‌ல்க‌ள் எழுதுவதில் உள்ள‌ சிக்க‌ல், இந்திய‌ ச‌மூக‌ அமைப்பு என்ப‌து புரிந்துகொள்ள மிக‌ மிக‌ சிக்க‌லான‌து. த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதைவிட‌ சிக்க‌லான‌து. இதில் ச‌மூக‌ அடையாள‌ங்க‌ளை, ம‌திப்பீடுக‌ளை, வ‌ழ‌மைக‌ளை இன‌ம் காண்ப‌தே முத‌ல் ச‌வால். ச‌மூக‌ நாவ‌ல் எழுத‌ முத‌லில் ச‌மூகத்தின் இயங்குமுறை துல்லிய‌மாக‌ புரிந்திருக்க‌ வேண்டும். ஒரு சிக்க‌லான‌ ச‌மூக‌ அமைப்பை புரிந்துகொள்வ‌து அத்த‌னை சுல‌ப‌ம‌ல்ல‌.

அந்த வகையில் எனது நாவல்களான 'ஒப்பனைகள் கலைவதற்கே' மற்றும் 'முடிச்சு' இரண்டுமே இதுவரையில் முன்மொழிந்திரப்படாத கருத்தாக்கங்களை முன்வைக்கும், ஒரு நாவ‌லாசிரிய‌னாக‌ என‌க்கு திருப்திய‌ளித்த‌ நாவ‌ல்க‌ள்.

Friday, 18 October 2013

ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை


ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை

16.10.2013 தேதியிட்ட இந்த வார ராணி முத்து இதழில் எனது ஒரு கவிதை 'விரயம்' பக்கம் 24 ல் வெளியாகியிருக்கிறது. குறிப்பிட்ட அந்த இதழில் கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.

Monday, 2 September 2013

மதிப்பு ‍- சிறுகதை

மதிப்பு ‍- சிறுகதை

காரில் அமர்ந்தபடி ஜன்னலினூடே வெளியே பார்க்க பார்க்க பிரமிப்பாய் இருந்தது ராமசாமிக்கு.

குமரி மாவட்டம் கல்குளம் கிராமத்திலிருந்து, பேரன் ரகு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் பரிசு வாங்குவதைக் காண, முன் தினம் தான் மனைவி லலிதாவுடன் ரயிலில் வந்திருந்தார் ராமசாமி.

கிராமத்தில் ஓடுகள் பதித்த கல் வீடுகளே அதிகபட்சம். இங்கு சர்வ சாதாரணமாய் பத்து பதினைந்து மாடிகளுக்கு உயர்ந்த கட்டிடங்கள். மழமழவென கண்ணாடியில் இழைத்து, உள்ளே அமர்ந்து போனில் கதைத்தபடியே காற்றில் ஓவியம் வரையும் விந்தை மனிதர்களை சாலையிலிருந்தே பார்க்கும் வகையான கண்ணாடி சுவர்கள். பல வண்ணங்களில் கார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில். அதிலும் சில கார்களை கார்கள் என்று சொல்வதை விட‌ கப்பல்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கச் செய்தது. நெருக்கமாக விரையும் கார்கள். இருந்தும் பல கார்களின் உடலில் கீரல்கள் என்று ஏதும் இல்லை. அது ஓட்டுன‌ரின் திற‌மையா, அல்ல‌து பொருளாதார‌மா என்று குழ‌ப்ப‌ம் தந்தது. வித‌ம் வித‌மான‌ வீடுக‌ள். வித‌ம் வித‌மான‌ ம‌னித‌ர்க‌ள். நாக‌ரீக‌ உடைக‌ளில் க‌ட‌ந்து போகும் சில ம‌னித‌ர்க‌ளின் வ‌ய‌தை, உட‌னுக்குட‌ன் பிரித்த‌றிவ‌து க‌டின‌மென‌ நினைக்க‌ச் செய்த‌து. பொருளாதாரத்திற்கு பல நிறங்கள் இருப்பதாகத் தோன்றச் செய்தது.

கிராமங்கள் இப்படி இல்லை.

கிராமங்கள் பொருளாதாரத்தை மிக எளிமையாக இரண்டே விதங்களில் பாகுபடுத்துவதாகவே தோன்றியது அவருக்கு. ஒன்று குடிசைகள், மற்றொன்று ஓடுகள் பதித்த கல் வீடுகள். குடிசையில் வ‌சிப்ப‌வ‌ன் க‌ல் வீட்டில் வ‌சிப்ப‌வ‌னை விட‌ வ‌ச‌தியில் குறைவு. க‌ல் வீட்டில் வ‌சிப்ப‌வ‌ன், குடிசையில் வ‌சிப்ப‌வ‌னை விட‌ வ‌ச‌தி அதிக‌ம். அவ்வளவுதான். அதையும் தாண்டி, பெண்கள் அணியும் சீலைகளிலும், ஆண்கள் அணியும் வேட்டியின் பட்டிலுமே வித்தியாசம் தெரியும்.

ஜன்னலினூடே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்த ராமசாமியின் கவனத்தை கலைத்தது மகன் தினேஷின் குரல்.

'திவ்யா, கேமரா சார்ஜ் பண்ணிட்டல?' என்றான் தினேஷ் அருகாமையில் அமர்ந்திருந்த மனைவியிடம்.

'ஆச்சு..ஆச்சு.. எல்லாம் ரெடியா இருக்கு.. நீங்க உள்ளே போனதும் முதல் வேளையா, மேடைக்கு பக்கமா ஒரு இடமா பார்த்து உக்காருங்க.. ரகு பரிசு வாங்கும்போது ஃபோட்டோ எடுக்க வசதியா இருக்கும்' என்றவள், பின்னால் திரும்பி ராமசாமியிடம்,

'மாமா, இன்னிக்கு உங்க பேரன் கட்டுரைப் போட்டியில முதல் பரிசு வாங்கறான் மாமா' என்றாள் பெருமையுடன்.

'அடடே.. பேராண்டி.. யாரு?! சிங்கம்ல... இவன் பிறக்கும்போதே தெரியுமேம்மா.. யோக ஜாதகமாச்சே.. பெரிய ஆளா வருவான்னு சொன்னாரே நம்ம சுசீந்திரம் ஜோஸ்யரு' என்றார் ராமசாமி.

'அப்படியா சொன்னாரு?!'

'பின்ன?.. மகம் நட்சத்திரம்மா.. புத்திசாலித்தனத்துக்கும், அறிவுக்கும் பஞ்சமே இருக்காதுல.. லக்கினத்துலயே குரு பார்வை இருக்குதும்மா நம்ம ரகுவுக்கு... ஆமா, என்ன தலைப்பும்மா கட்டுரை?'

'ஆங்..அதுவா... குமரியிளம் கன்னியாகுமரி மாமா'

'அடடே.. தாத்தா ஊரைப் பத்தி கட்டுரை எழுதியிருக்கியா பேராண்டி' என்ற ராமசாமி காரின் பின் சீட்டில் தனக்கும் மனைவி லலிதாவுக்கும் இடையில் அமர்ந்திருந்த ரகுவின் நெற்றியில் முத்தமிட்டார்.

ரகு மோகனமாய் சிரித்தான்.

பேசிக் கொண்டிருக்கையிலேயே கார் அண்ணா நகரின் மத்தியில் அமைந்த அந்த மெட்ரிக்குலேஷன் பள்ளியை நெருங்கிவிட்டிருந்தது.

வாசலில் ஏகத்திற்கும் குறுக்கும் நெடுக்குமாய் கார்கள். வரிசையை தவறவிட்ட எறும்புகள் போல, கார்கள் பள்ளி வாசலில் குழுமி ஒன்றுக்கொன்று ஹாரன் அடித்து முறைத்துக்கொள்ள, தனியொரு ஆளாக பள்ளியின் வாட்ச்மேன் பாதையை ஒழுங்கு செய்ய கண்ட படி பிகில் ஊதிக்கொண்டிருக்க, எதையும் பொருட்படுத்தாது, ஒழுங்காய் படித்து பட்டம் பெற்ற பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும் ஒழுங்கின்றி கண்டபடி வாகனங்களினூடே வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவ‌ர்க‌ளைப் போல‌வே, ஹார‌னை அல‌ற‌ வைத்து, எரும்பென‌ ஊர்ந்து, எவ்வித‌மான‌ ஒழுங்கிற்கும் உட‌ன்ப‌டாம‌ல் கிடைத்த‌ இடைவெளிகளிலெல்லாம் நுழைந்து, மேற்கொண்ட முயற்சிகளில் இர‌ண்டொரு முறை அணைந்துவிட்ட‌ காரை மீண்டும் உயிரூட்டி ஒரு வ‌ழியாக‌ பள்ளியின் உள் நுழைந்து, விளையாட்டு மைதானத்தின் ஓரமாய் காரை பார்க் செய்துவிட்டு இறங்குகையில்,

'நல்ல காலம்.. சின்ன காரா வாங்கினது... இல்லைன்னா, இத்தனை நேரத்துக்கு உள்ளேயே நுழைஞ்சிருக்க முடியாதுப்பா' என்றான் தினேஷ்.

'ஆமாமா.. நாந்தான் அப்போவே சொன்னேனே.. நீங்கதான் செடான் வாங்கலாம்ன்னு சொன்னீங்க' என்று ஆமோதித்தாள் திவ்யா.

'தினேஷ், நம்மளது சின்னதாப்பா?' என்றார் ராமசாமி.

'ஆமாப்பா.. பாருங்க.. நம்ம காரை.. எவ்ளோ கச்சிதமா இருக்குன்னு' என்றான் தினேஷ்.

ஐவரும் காரை விட்டிறங்கி பள்ளியின் ஆடிட்டோரியம் நோக்கி நடக்கையில் திரும்பி ஏனைய கார்களைப் பார்த்தார் ராமசாமி. மற்ற கார்கள் போல் இல்லாமல் தினேஷின் கார் பின்பக்கம் சற்று மொழுக்கட்டையாக இருந்தது. ம‌ற்ற‌ கார்க‌ள், பின்புற‌ம் அதிகப்படியாக அக‌ண்டிருப்ப‌து தெரிந்த‌து. இன்னும் சில‌ வ‌ண்டிக‌ள் மிக‌ப்பெரிய‌தாய் இருந்த‌ன‌. சில‌ கார்க‌ளின் என்ஜின்க‌ளே நெஞ்சுக்கு நேராக‌ நின்று முறைப்ப‌து போலிருந்த‌து. சில‌ கார்க‌ள் அநியாய‌த்திற்கு நீள‌மாய் இருந்த‌ன‌.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பயன்படும் வாகனங்கள் இத்தனை விதப்படுவது எதைக் குறிக்கிறது? ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பயன்படும் வாகனங்கள் இத்தனை விதப்படுவது எதைக் குறிக்கிறது? பயணம் என்பதின் மீதான ரசனை இத்தனைக்கு பலதரப்பட, அந்த ரசனை எத்தனைக்கு பிரதானப்பட்டிருக்க வேண்டும்!? அதற்கேற்ப பொருளாதாரமும், மனிதர்களும் எத்தனை வகைப்பட்டிருக்க வேண்டும்? உண்மையில் பயணத்தின் நோக்கங்கள் அல்லவா பிரதானப்பட்டிருக்க வேண்டும்? ராமசாமி சிந்தனையில் ஆழ்ந்தபடியே நடந்து கொண்டிருந்தார்.

பள்ளிக்கூடமே பரபரப்பாக இருந்தது. பெற்றோர்கள் ஆடிட்டோரியம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். மேடை அருகே கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பிள்ளைகள் நாரதர், சிவன், பார்வதி, அரசியல் தலைவர்களின் வேடங்கள் அணிந்து வட்டமாக நின்றிருக்க மத்தியில் பள்ளியின் அடையாள அட்டை அணிந்த முப்பதுகளின் பெண்கள் கைகளில் பற்பல காகிதங்களுடன் நின்று எதையோ கேட்பதும் எதையோ ஒப்புவிக்க சொல்வதுமாக இருந்தனர். சின்னஞ்சிறு பிள்ளைகளுள் பலர் அணிந்திருந்த ஆடைகள், சமீபத்து சினிமாவின் கதா நாயகிகளை நினைவூட்டின.

அப்பா, அம்மா, மனைவி மூவரையும் ஆடிட்டோரியத்தின் நடுவே மூன்று சீட்டுகளில் அமரவைத்துவிட்டு தினேஷ் ரகுவை அழைத்துக்கொண்டு மேடைக்கு அருகே சென்றான்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு காகிதத்துடன் திரும்பி வந்தான். இதற்குள் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட, உட்கார்ந்து பேச செளகர்யப்படாமல்,

'அப்பா, இதோ ரகு முதல் பரிசு வாங்கின கட்டுரை... பாருங்க.. இதை குடுக்கலாம்ன்னு தான் வந்தேன்.. எனக்கு முன்னாடி ஒரு சீட் போட்ருக்கேன்..' என்றுவிட்டு கையிலிருந்த காகிதங்களை ராமசாமியிடம் நீட்டினான்.

'அடடே.. நம்ம ரகு எழுதினதா.. குடு குடு' என்றபடி ஆர்வமாய் ராமசாமி வாங்கிக்கொள்ள, திரும்பி மேடையை நோக்கி நடந்தான் தினேஷ்.

'ரகுன்னா, ரகுவே எழுதினது இல்லை மாமா.. ரகு ட்யூஷன் படிக்கிறான்ல.. ஒரு மிஸ்ஸூ.. அவங்க எழுதித் தந்தது... ஆனா, ரகு தான் மனப்பாடம் பண்ணி மேடையில ஒப்பிச்சான்...' என்றாள் திவ்யா.

'அப்படியாம்மா! பலே பலே.. ரகுவோட டீச்சர் எழுதினதா? தனியா ட்யூஷன் போறானா ரகு?' என்று ராமசாமி கேட்க,

மேடையில் பாதி கவனத்தை தொலைத்தபடியே,

'தனி ட்யூஷன் இல்ல மாமா. ஸ்கூல் டீச்சர்கிட்ட தான் போறான்..' என்றாள் திவ்யா.

அவ்வப்போது லலிதாவும் திவ்யாவும் விழாவிற்கு வந்திருந்த பெண்கள் அணிந்திருந்த சேலைகள் பற்றியும், நகைகள் பற்றியும் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்வது கேட்டது.

எழுதப்பட்டது தான் பிறந்த ஊர் என்பதால் ஆர்வமாய் கையில் வாங்கிய காகிதங்களை விரித்தார் ராமசாமி.

கிறுக்கலான கையெழுத்தில் , இழுத்து இழுத்து எழுதப்பட்டிருந்தது கட்டுரை. ஆங்காங்கே இரண்டு சுழி னவுக்கும், மூன்று சுழி ணவுக்கும் பேதமில்லாமல். ஒற்றெழுத்துக்கள் வாக்கியங்களோடு ஒட்டாமல். சிரமப்பட்டு ஒருவாறு வாசித்ததில் கட்டுரை பின்வருமாறு இருந்தது.

அவையோருக்கு வணக்கம்.

என் பெயர் ரகு. நான் சொல்லப்போவது குமரி மாவட்டத்தின் சரித்திரத்தை. குமரி என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டமானது இந்தியாவின் தெற்கு பகுதியில் கடலைப் பார்த்து அமைந்த அற்புத நகரம். இக்காரணத்தினாலேயே இது கடல்சார் வாணிபத்தில் பண்டைய காலம் முதலே சிறப்பு பெற்று விளங்கியது. பண்டைய காலத்தில் சேர மற்றும் சோழர் மன்னர்களால் சீரும் சிறப்புமாக‌ ஆட்சி செய்யப்பட்ட நிலப்பரப்பு கன்னியாகுமரி ஆகும். சேர, சோழ மன்னர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கூட சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த பெறுமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உண்டு எனலாம். ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் காலூன்றிய காலம் தொட்டே சுதந்திர போராட்டத்தின் எழுச்சி கன்னியாகுமரியில் துவ்ங்கிவிட்டதென அறியலாம். இந்த ஸ்தலமானது ஆன்மீகப் பின்னணியும் கொண்டது. ராமர் ராவணன் இடையிலான போரில், ஹனுமானால் ஹிமாலய மலையிலிருந்து பெயர்த்து எடுத்து வரப்பட்ட மிருத சஞ்ஜீவனி மலையினின்று ஒரு பகுதி பெயர்ந்து விழுந்த இடம் கன்னியாகுமரி என்றொரு ஸ்தல புராணமும் உண்டு. அவ்வாறு பெயர்ந்து விழுந்த பகுதி மருந்துவாழ்மலை எனப்படும். பலதரப்பட்ட நோய்களை குணப்படும் சக்தி கொண்ட பச்சிலைகள் அடர்ந்த மலை இதுவென மூலிகை மருத்துவம் இதன் பெருமை கூறுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த மூலிகைகள், நோயை விரட்டி, உடல் நலத்தை காத்து, ஆரோக்கியம் பேணி, வாழ் நாளை நீட்டித்து, இளமையை கூட்டும் சக்தி படைத்தன. ஆகவே இது, குமரியிளம் கன்னியாகுமரி என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.

வாய்ப்புக்கு நன்றி.

இப்படிக்கு ரகு.

கட்டுரையை வாசித்துவிட்டு அதிர்ந்தார் ராமசாமி.

மனைவி லலிதாவும், மருமகள் திவ்யாவும் மேடையில் சிறுபிள்ளைகளின் லவகுசா நாடகத்தை நடித்துக்கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அரங்கம், நிரம்பி வழிந்தது. உட்கார இடமின்றி பல பெற்றோர்கள் அரங்கத்தின் ஓரத்தில் நின்றபடியே கலை நிகழ்ச்சிகளை கவனித்துக்கொண்டிருந்தனர். தினேஷ், மேடையின் அருகே இன்னும் அப்பாக்களோட பேசிக்கொண்டிருந்தான். ஆங்காங்கே ஃப்ளாஷ் கண் சிமிட்டியது. யாரோ சிலர் கை தூக்கி யாருக்கோ டாட்டா காட்டினார்கள்.

மனைவியையும், மருமகளையும் குறுக்கிட‌ மனமின்றி காகிதத்தை இருக்கமாக பிடித்துக்கொண்டே எழுந்து, வரிசையாக உட்கார்ந்திருந்த மனிதர்களின் கால்களின் மீதே நடந்து வெளியே வந்தார். அகப்பட்ட பள்ளிக்கூட பணியாளரை நிறுத்தி,

'இந்த ஸ்கூல் ப்ரின்சிபால் ரூம் எங்கய்யா இருக்கு?' என்றார் அதட்டலாக‌.

அவசர வேலையாக அந்த பக்கமாக போய்க்கொண்டிருந்தவன்,

'இப்ப யாரும் பிரின்சிபாலை பாக்க முடியாதுங்க' என்று சொல்ல நினைத்து, அதட்டலாக வந்து விழுந்த கேள்வியில், ராமசாமியை கண்களில் பார்த்துக் கொண்டே, இயந்திரத்தனமாக திசை காட்டினான். அவன் காட்டிய திசையில், சற்று தள்ளி, தரைதளத்தில் வராந்தையோரம் சற்று உள்ளடங்கி இருந்தது அந்த அறை. மூடியிருந்த கண்ணாடி கதவின் மேல், அழுத்தம் திருத்தமாக 'தலைமை ஆசிரியர் அறை' என்று எழுதியிருந்தது.

ராமசாமி லேசான ஆவேசத்துடன் அந்த அறையை நோக்கி நடந்தார். வராந்தையை தாண்டி, கண்ணாடி கதவுவினை லேசாக தள்ளி ஒருக்களித்து நிறுத்த, சட்டென குளிர் காற்று வீசியது.

திறந்த கதவினூடே, தூரத்து பள்ளி விழா அரங்கத்தின் கூச்சல்கள், கனத்துக் கேட்க, தனது அறையினுள் அரவம் கேட்டு நிமிர்ந்தார் தலைமை ஆசிரியர் தனிகாசலம். அவரது தலைக்கு மேல் ஸ்பிலிட் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. சற்றே அகண்ட அந்த அறையில் அவர் அமர்ந்திருந்த மேஜையில் இரண்டு தொலைபேசிகள், இரண்டு கோப்புக் கூடைகள், ஒரு டேபிள் வெயிட், எண்ணற்ற ஃபைல்கள், ஒரு டெஸ்க்டாப் கம்ப்யீட்டர் இத்தியாதி இத்தியாகிகளுடன் டெல் கார்னகியின் ஹவ் டு வின் ஃப்ரண்ட்ஸ், ஸ்டீஃபன் கோவேயின் செவன் ஹேபிட்ஸ் ஆஃப் எஃபக்டிவ் பீபிள் போன்ற புத்தகங்கள் இருந்தன‌.

தனது அனுமதியின்றி யார் புதியவரை உள்ளே விட்டது என்று குழம்பி, எவரையும் அப்போதைக்கு அதட்ட இயலாது என்கிற சூழல் புரிந்து,

'எஸ் சார்.. என்ன வேணும்?' என்றார் தனிகாசலம்.

'நியாயம் வேணும் சார்' என்றார் ராமசாமி.

'என்ன சார் சொல்றீங்க? நீங்க யாரு முதல்ல?'

'என் பேரன் ரகு இந்த ஸ்கூல்ல தான் சார் படிக்கிறான். இன்னிக்கு கட்டுரைப் போட்டியில முதல் பரிசு அவந்தான் வாங்கப்போறான் சார்'

'வெரி குட்!.. உங்க பேரன் தானா அது.. பிரில்லியண்ட் பாய்..'

'இன்னிக்கு முதல் பரிசு வாங்கப்போற கட்டுரையை படிச்சுப் பாருங்க சார்' என்றுவிட்டு தனிகாசலத்தின் மேஜையில் கையிலிருந்த காகிதங்களை வைத்தார் ராமசாமி.

காகிதங்களை விரித்து ஒரு முறை அதன் மீது தனது பார்வையை ஓட்டிவிட்டு, நிமிர்ந்த தனிகாசலம்,

'அட!! இது நம்ம இங்கிலீஷ் டீச்சர் கிருத்திகா ப்ரிப்பேர் பண்ணினதாச்சே.. அதுல பாருங்க... நல்ல கட்டுரை சார் இது.. என்னமா எழுதியிருக்காங்க அந்த டீச்சர்.. இத்தனைக்கும் அவுங்க இங்கிலீஷ்க்கு டீச்சர் சார்.. ஹிஸ்டரி டீச்சரும் லீவு.. தமிழ் டீச்சரும் லீவு.. ஃபைல் மேல ஃபைல் பெண்டிங் சார்.. ஒரு வார்த்தை தான் சொன்னேன்... அவுங்களுக்கு சம்மந்தமே இல்லாத டிபார்ட்மென்ட்.. இருந்தும் கூகுள நோண்டி தெரிஞ்ச தமிழை வச்சிக்கிட்டு என்னமா எழுதியிருக்காங்க பாருங்க... நான் தான் ரிவ்யூ பண்ணினேன்... க்ளாஸ் சார்.. இந்த காலத்துல யங்க்ஸ்டர்ஸ் என்ன வேகம் சார்? என்ன ப்ரொஃபெஷனலிசம்? டெக்னாலஜியை வச்சிக்கிட்டு என்னமா வித்தை காட்றாங்க?' என்றார் தனிகாசலம்.

'சார் வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க சார்.. இன்னிக்கு இருக்குற கன்னியாகுமரி, 1956 நவம்பர் 1 வரை கேரளத்தோட இருந்தது தெரியுமா சார் உங்களுக்கு?... அப்போ அதுக்கு பேரு கன்னியாகுமரி கூட இல்லை... தெக்கன் திருவிதாங்கூர்.. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தேழுக்கு முன்னே சமஸ்தான ஆட்சிதான் சார் அங்கெல்லாம்... நாலு வட்டம் இருந்தது.. தோவாளை, கல்குளம், விளவன்கோடு, அகஸ்தீஸ்வரம்... அகில இந்திய காங்கரஸ் வலுப்பெற ஆரம்பிச்ச காலத்துல தான் இந்த மாவட்டத்தை தமிழ் நாட்டோட இணைக்கணும்னு முயற்சி செஞ்சாங்க.. நானெல்லாம் சின்னப் பையன் சார் அப்போ... '

'உங்களுக்கு தெரியுமா? இந்தியா முழுமைக்கும் 1947 ஆகஸ்டுல சுதந்திரம் கிடைச்சிட்டாலும் நாங்க எங்க தனிப்பட்ட சுதந்திரத்தை 1956 ல தான் சார் அடைஞ்சோம்... நாங்க போராடலைன்னா, இப்போ நீங்க கட்டுரையா எழுதியிருக்குற கன்னியாகுமரி, கேரளாவோட இருந்திருக்கும் சார்.. எத்தனை போராட்டம்? எத்தனை எதிர்ப்பு? அப்போல்லாம் மலபார் மாகாணக் காங்கிரஸ், கொச்சி பிராஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தானக் காங்கிரஸ் தான் சார் அப்போ இருந்த தெக்கன் திருவிதாங்கூர் சமஸ்தானம் உட்பட கேரளா முழுமைக்கும்.. அதுக்கப்புறம் தான், அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் உருவாச்சு.. அதுக்கு சமஸ்தான காங்கிரஸ் எவ்ளோ எதிர்ப்பு தெரியுமா? தமிழன் பத்திரிக்கையில‌ ப.சிதம்பரம் பிள்ளையோட கட்டுரையை அந்தக் காலத்துல‌ சமஸ்தானம் முழுக்க வினியோகிக்கிற பொறுப்பில நானும் இருந்திருக்கேன்.. '

'தினத்தந்தி, தினமணி, சுதேசமித்திரன்லே எல்லாம், தலையங்கமே இந்த பிரச்சனை தான் அப்போ.. சமஸ்தான காங்கிரஸ் லேசுல விடலை.. எத்தனை எதிர்ப்பு? 1948 ல அகில இந்திய அளவுல முதல் தேர்தல் நடந்தது... தெக்கன் திருவிதாங்கூர்ல மொத்தம் எட்டு தொகுதி... உச்சி வெய்யில்ல பிரச்சாரம், தாகத்துக்கு மோர்ப்பந்தல், ஊர்வலம் போறது, மீட்டிங் போட்டு தொண்டைத் தண்ணி வத்த கத்துறது எல்லாத்துலயும் ஒரு ஓரத்துலயாவது நான் இருந்திருப்பேன்... அந்த தேர்தல்ல சமஸ்தான காங்கிரஸ் படு தோல்வி... அத்தனையையும் மீறி, போராடி தமிழகத்தோட இணைஞ்சோம் சார்.. தெக்கன் திருவிதாங்கூருக்கு கன்னியாகுமரின்னு பேர் வச்சதே பெருந்தலைவர் காமராசர் தானேய்யா.. கன்னியாகுமரி பத்தின கட்டுரையில அதைக்கூடவா விடுறது? இங்க காத்தாடி மலை, மருந்துவாழ் மலை, கல்மலை, தாடகைமலை, மகேந்திரகிரி மலை, வேளிமலைன்னு ஏகப்பட்ட மலைகள் இருக்குது... களிமண்ணும், சுண்ணாம்பும் கலந்த மண்ணு இந்த மண்ணு.. இது எதுவுமே கட்டுரையில இல்லை.. இதுக்கு முதல் பரிசு வேற.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு நம்ம சரித்திரம் பத்தின சரியான விஷயத்தை சொல்ல வேண்டாமா?.. '

கிட்டத்தட்ட அலறினார் ராமசாமி.

'சேச்சே.. நீங்க என்ன சார் என்னென்னமோ சொல்றீங்க? எத்தனை தடவை நான் கன்னியாகுமரி போயிருக்கேன்.. இப்படி கேட்டதே இல்லையே.. நீங்க வேற எதையாவது சொல்றீங்களா இருக்கும் சார்.. அப்படியெல்லாம் இருக்காது.. இன்டர்னெட்லேர்ந்து எடுத்த கட்டுரை சார்... எதையும் பாசிட்டிவ்வா பார்க்கணும் சார்.. உங்க‌ பேர‌ன்தானே முத‌ல் ப‌ரிசு வாங்குறாரு.. அது எவ்ளோ பெரிசுன்னு பாருங்க‌ சார்..'

'இன்டர்னெட்லேர்ந்து எடுத்ததுன்னா அது சரியாதான் இருக்கணுமா? அதைச் செய்யிறதும் மனிதர்கள் தானே சார். அதுல தப்பு நடக்க வாய்ப்புக்களே இருக்காதா சார்?'

'நான் அப்படி சொல்லலை சார்... அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, ஸ்டாஃப் தப்பா எழுதியிருக்க மாட்டாங்க‌ சார்..இவ்ளோ பெரிய‌ ஸ்கூல் வ‌ச்சி ந‌ட‌த்துறோம்.. எங்க‌கிட்ட‌ யாரோட‌ பிள்ளையெல்லாம் ப‌டிக்கிறாங்க‌ தெரியுமா? சொசைட்டியில‌ எங்க‌ளுக்கு எவ்ளோ ரெபூடெஷ‌ன் தெரியுமா? எங்க‌ளுக்கு தெரியாத‌தா? பிள்ளைக‌ளுக்கு என்ன‌ சொல்லித் த‌ர‌ணும், என்ன‌ சொல்லித் த‌ர‌க்கூடாதுன்னுட்டு? உங்க‌ளுக்கு என்ன‌ங்க‌ தெரியும்? இதெல்லாம் மேடை பய‌ம் இருக்க‌கூடாதுங்குற‌துக்கு செய்யிற‌ எக்ஸ‌ர்சைஸ் தான் சார்... எங்க‌ கிட்ட‌ ப‌டிச்ச‌ ஸ்கூட‌ண்ட்ஸ் எல்லாரும் இப்ப, அமேரிக்க‌, ஆஸ்ட்ரேலியான்னு செட்டில் ஆயிருக்காங்க.. அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா தப்பா எதுவும் இருந்திருக்காது சார்'

'அப்போ நான் த‌ப்பா சொல்றேனா.. நான் க‌ல்குளம்லேயே பொற‌ந்து வ‌ள‌ந்த‌வ‌ன்யா'

'ஆவேசப்படாதீங்க சார்.. எதுவா இருந்தாலும், இப்போதைக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. இன்னும் கொஞ்ச நேரத்தில பரிசே குடுத்திடுவாங்க... இப்பப்போய், அதை நிறுத்தினா குழப்பமாயிடும்.. லீவு கேக்குற எம்ப்ளாயீக்கு லீவு குடுக்கணும்னு எம்ப்ளாய்மென்ட் ஆக்ட் சொல்லுது.. விழா நேரத்துல ஆள் இல்லை.. நீங்க போங்க... விழா முடியட்டும்.. என்ன ஏதுன்னு நான் பாத்துடறேன்..' என்றார் தனிகாசலம் இன்முகத்துடன்.

வெற்று சமாளிப்பு தான் அது என்பது தெளிவாகப் புரிந்தது ராமசாமிக்கு. இனி பேசிப் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை என்ப‌தாய், திரும்பி ந‌ட‌ந்த‌ ராம‌சாமி அறையை விட்டு வெளியேறுகையில்,

'பேசிக்கிட்டு இருக்கும்போதே ம‌ரியாதையில்லாம‌ வாய்யா போய்யான்னு பேசிக்கிட்டு... சிச்சீ.. கன்ட்ரீ புரூட்..' என்ற‌ தனிகாசலத்தின் குரல் சன்னமாக‌ காதில் விழுந்தது.

த‌லைமை ஆசிரிய‌ர் அறையை விட்டு வெளியேறி அர‌ங்க‌ம் நோக்கி மெளனமாய் ந‌ட‌ந்த ராம‌சாமியின் நடை தளர்ந்திருந்தது.. பள்ளிவிழா கொண்டாட்டங்கள் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிள்ளைகள் அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தார்கள். பல வண்ணங்களில் கார்கள் வருவதும் போவதுமாய் இருந்தன. சற்று தொலைவில் இருந்த அரங்கத்திலிருந்து, கைதட்டும் ஓசைகளும், ஹோவென எல்லோரும் கூவும் ஓசைகளும் கலந்து கலந்து கேட்டுக்கொண்டிருந்தன.

ஆயிர‌த்து தொள்ள‌யிர‌த்து ஐம்ப‌துக‌ளின் போராட்ட‌ம், நா நுனிவ‌ரை வந்துவிட்ட‌ வார்த்தைக‌ள் போல‌, நெஞ்சு முழுவ‌தும் நிறைந்திருந்த‌து ராமசாமிக்கு. ஆயிர‌த்து தொள்ளாயிர‌த்து நாற்ப‌த்தேழு ஆக‌ஸ்டில் நாடே சுத‌ந்திர‌ம‌டைந்துவிட்ட போதிலும், திருவிதாங்கூர் ச‌ம‌ஸ்தான‌த்தின் கேரளத்தோடு இணைத்துவிடும் முயற்சிகளில் இருந்து விடுபட்டு தமிழகத்தோடு இணைவது அக்காலங்களில் கிட்டத்தட்ட உள்ளூரிலேயே நிகழ்ந்த சுதந்திர போராட்டமாய்த்தான் இருந்தது.

ஒருங்கிணைய, ஒன்று திரள தினமணி , தினத்தந்தி, சுதேசமித்திரனில் தலையங்கங்க‌ள் வெளியாகையிலெல்லாம் வீட்டுக்கு வீடு சென்று வினியோகம் செய்தது, உள்ளூர் கேரள பெருந்தலைகளின் எதிர்ப்புக்கு ஆளானது, அதையெல்லாம் பொருட்படுத்தாது தேர்தல் வேலை பார்த்தது, பெருந்தலைவர் காமராசர் கன்னியாகுமரி என பெயரிட்டு தமிழகத்தோடு இணைந்ததென அறிவித்த நாளில் உள்ளுக்குள் பொங்கிய விடுதலை உணர்வு என எத்தனை சுகங்கள், பெருமுயற்சிகள் அந்நாட்களில்?

அவை எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. அவையெதுவும் இன்றைக்கு எவருக்கும் நினைவில் கூட இல்லை. எவருக்கும் இந்தத் தகவல்கள் எதுவும் தேவையும் இல்லை. எவருக்கும் அக்கறை இல்லை. இன்றைக்கு பிரிதொன்று பெரியதாகி விட்டது. அந்த ஒன்றின் புறத்தோற்றம் வசீகரமாக இருக்கிறது. வண்ண வண்ண நிறங்களில் அது கண்ணைப் பறிக்கிறது. கவனங்களை சாதுர்யமாக திசை திருப்புகிறது. விண்ணை முட்ட உயர்ந்து வாயை பிளக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. மிரள வைத்து பணிய வைக்கிறது. தனது வசீகர தோற்றத்தால் வலிமையற்ற அகத்தை மூடி மறைத்து விடுகிறது. அகம் என்ற ஒன்றின் இருப்பின் பிரஞையையே அது இல்லாமல் செய்து வெல்கிறது.

ராமசாமி யோசனையாய், அரங்கத்தை அடைந்து, மனைவி மருமகள் அமர்ந்திருந்த வரிசையை அடையாளம் கண்டு, வந்தமர்ந்தார்.

'எங்க போயிருந்தீங்க? இப்பவாவாது வந்தீங்களே? நல்ல காலம். அங்க பாருங்க. நம்ம ரகு பரிசு வாங்குற அழகை' சலித்தபடியே பணித்தாள் மனைவி.

மேடையில் ரகு பரிசு வாங்கிக்கொண்டிருக்க, அரங்கம் உற்சாகமாய் கைதட்டிக் கொண்டிருக்க, தினேஷ் அரங்க மேடையின் ஓரம் நின்றபடி கையிலிருந்த கேமராவால் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான்.

ராமசாமி மேடையைப் பார்த்தவாறே கைதட்டுகையில், அவர் கண்களினின்றும் கண்ணீர் வழிந்தது.

'திவ்யா, நம்ம கிட்ட ஒரு கேமரா இருந்தா பேராண்டி பரிசு வாங்குறதைப் பாத்து தாத்தா ஆனந்தக் கண்ணீர் விடுற அழகை எடுத்து ஃப்ரேம் போட்டு மாட்டியிருக்கலாம்' என்றாள் லலிதா திவ்யாவிடம்.

பெருமிதத்துடன் லலிதாவும், திவ்யாவும் ராமசாமியை பக்கவாட்டிலிருந்து பார்த்தபோது, அவரின் கண்கள் உதிர்த்த கண்ணீர் தெரிந்த அளவிற்கு அவரின் முகத்தில் இருந்த வெறுமை இருவருக்குமே தெரியவில்லை.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6350)

Monday, 26 August 2013

குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை


குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை

2.9.2013 தேதியிட்ட குங்குமம் இந்த வார இதழில் பக்கம் 81ல் நான் எழுதிய 'ஜாகிங்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான குங்குமம் இதழின் பிரதி இங்கே.

Thursday, 22 August 2013

குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை


குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை

கடந்த‌ 27 பிப்ருவரி 2013ம் தேதியிட்ட‌ குமுதம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருந்தது குறித்து பணி நிமித்தம் ஹாங்காங்கில் இருந்தபோது தான் தகவல் கிடைத்தது. வெளி நாட்டில் இருந்தமையால் குறிப்பிட்ட அந்த இதழை சேகரிக்க வாய்ப்பின்றி தேடிக்கொண்டே இருந்தேன்.

ஈகரை இணைய தளம் மூலம் நண்பராக அறிமுகமான முத்து முகமது இணைய தளம் மூலமாகவே குமுதம் இதழின் மின் பிரதியிலிருந்து குறிப்பிட்ட அந்த சிறுகதையின் பிரதியை தந்து உதவியிருக்கிறார்.

'கண்ணாடி நெஞ்சம்' என்ற தலைப்பிலான எனது அந்தச் சிறுகதையின் பிரதி இங்கே.. பக்கம் 58ல் துவங்கி, பக்கம் 64 வரை வெளியாகியிருக்கிறது...நண்பர் முத்து முகமதுவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது சிறுகதையினை தேர்ந்தெடுத்து வெளியிட்ட குமுதம் இதழின் ஆசிரியர் குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, 7 August 2013

கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை


கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை

கணையாழி கலை இலக்கிய திங்களிதழின் இந்த மாத (ஆகஸ்ட் 2013) இதழில் நான் எழுதிய 'முடிச்சு' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 18ல் துவங்கி 23ல் முடிய வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான கணையாழி கலை இலக்கிய இதழின் பக்கங்களின் பிரதிகள் இங்கே.


இனி அந்தக் கதை:

முடிச்சு - சிறுகதை

மது, கண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். எலுமிச்சை நிறத்தவளுக்கு சிவப்பில் சுடிதார், இழைத்தது போலிருந்தது. துப்பட்டா எடுப்பான மார்புகளை மறைக்கும் வகைக்கு இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். தோள்களை விட்டகலாமல் இருக்க பின் செய்து கொண்டாள். மெல்லிய பிங்க் நிற உதட்டுச் சாயம் பாந்தமாய் கண்ணை அடிக்காமல் இருந்தது. இரண்டு நிமிட பார்வையின் முடிவில் அலட்சியமாய் காற்றை மேல் நோக்கி ஊதியதில் முன் நெற்றில் துவண்டிருந்த கற்றை முடி காற்றில் எம்பி அழகாய் சரிவதை ரசித்துவிட்டு கண்ணாடியை விட்டகன்றாள் மது.

தன்னைத் தானே ரசிக்கும் மனிதன், நிச்சயம் கண்ணாடியை விரும்புவான். அம்மனிதன் வீட்டில் கண்ணாடி கூட ரசனையோடிருக்கும். குறைந்தபட்சம், திருத்தமாகவாவது இருக்கும். பெண்மை, பிரிதெதையும் விட முதலில் தன்னையே ரசிக்கும். எந்தப் பெண்ணுக்கும் தன்னம்பிக்கையின் முதல் வித்து, அவள் அறைக் கண்ணாடிதான். ஒரு பெண்ணின் அறைக் கண்ணாடி பல விஷயங்கள் சொல்லும். முகம் பார்க்கும் கண்ணாடி, இந்தப் பெண் மேலுக்கு மட்டும் அழகி எனச் சொல்லும். ஆளுயரக் கண்ணாடி, இந்தப் பெண், முகம் மட்டுமல்ல, முழுமையிலும் அழகு வேண்டும் என்று நினைப்பவளெனச் சொல்லும். சுத்தமான கண்ணாடி, அவள் தெளிவென்று சொல்லும். அழுக்கேறிய கண்ணாடி, அவள் அவ்வளவுதானென்று சொல்லும்.

செருப்பை அணிந்து வாசலைக் கடக்கையில் தொற்றிக்கொண்ட அவசரம், கல்லூரியை அடையும் வரை உடனிருந்தது. கல்லூரி வளாகத்தினுள் 9 மணிக்குள் நுழைந்த பின்னர்தான் மூச்சே வந்தது. வகுப்பறை நோக்கி நடந்துசெல்கையில், இருபுறமிருந்தும், வாலிபர்களின் 'அட!' பார்வைகளை, கவனியாதது போல் மேலுக்கு அவள் அலட்சியம் செய்தாலும் உள்ளுக்குள் அது பிடித்திருந்தது. பெருமிதமாய் உணர வைத்தது. உண‌ர்ந்த‌தைத் த‌க்க‌வைத்துக்கொள்ள‌ தோன்றிய‌து. உடுத்தியிருந்த‌ உடை எந்த‌க் க‌டையில் வாங்கிய‌து என்று நினைத்துப்பார்க்க‌ வைத்த‌து. ஓரமாய் நின்றிருந்த இரண்டு பையன்கள் குசுகுசுவென தங்களுக்கு ஏதோ பேசிக்கொண்டார்கள். சட்டென ஒருத்தன் இன்னொருத்தனை அவளை நோக்கி தள்ளிவிட்டான். அவன் ஏதோ சொல்லும் நோக்கில் அவளருகில் வந்து ஏதும் சொல்லாமல் கடந்து போனான். முதுகிற்கு பின்னால் சிரிப்பு சத்தம் கேட்டது. மது இது எல்லாவற்றையும் மெளனமாய் ரசித்தபடி தன் போக்கில் வகுப்பறை வந்து தன்னிருக்கையில் தோழி இளவஞ்சி அருகில் அமர்ந்துகொண்டாள்.

மதுவின் வகுப்பில் பயிலும் ஏனைய மாணவர்களும் இதை ஓரக்கண்ணால் கவனித்தார்கள். கவனியாதது போல் பாசாங்கு செய்தார்கள். தங்களுக்குள் உதட்டை இறுக்கி, புருவங்களை உயர்த்தினார்கள். அவர்களுள் ரகு சலனமின்றி இருந்தான். வகுப்பினுள் நுழைந்த மது இளவஞ்சியிடம் பேசத்துவங்கியிருந்ததை மெளனமாய் எவரும் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

"இளா"

"என்ன‌டி?"

"அந்த‌ சிவா இன்னிக்கு என்னை ரொம்ப‌ ப‌ய‌முறுத்திட்டாண்டி"

"என்ன‌டி ஆச்சு"

"நான் இப்ப‌ க்ளாஸ்க்கு வ‌ந்துக்கிட்டு இருக்கும்போது என்கிட்ட‌ வ‌ந்துட்டாண்டி".

"ஓ.. எதாச்சும் சொன்னானா?"

"இல்லைடீ.. கிட்ட‌ வ‌ந்து அப்ப‌டியே போயிட்டாண்டீ"

"க‌லாய்க்கிறானாமா... அவ‌னுக்கு இதே வேலைடீ.. பாலிம‌ர் மாலினி இருக்கால‌?"

"ஆமா"

"அவ‌கிட்ட‌யும் இதே மாதிரி தான் ப‌ண்ணியிருக்கான்... பொறுக்கி"

இளா வேண்டுமென்றே குட்டையை குழப்பினாள். சிவா அப்படியில்லை என்பது அவளுக்கு தெரியும். ஆனாலும் அவள் அப்படிச் சொன்னாள்.

சில பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் பெண்மை விசித்திரமானது. அந்த‌ பெண்மை தான் விரும்பிய அனைத்தும் தனக்கு கிடைக்கவேண்டும் என்றெண்ணும். தான் மதிக்கும் அத்தனையும் தன்னையும் மதிக்கவேண்டும் என்றெண்ணும். நட‌க்கவில்லையெனில் இருமாப்பு கொள்ளும். குறுக்கு வழியிலாவது நடத்த‌ முயற்சிக்கும். அப்படியும் நட‌க்கவில்லையெனில் அதனை விட்டு தொலைதூரம் விலகி இருக்கும். அல்லது அதனை கண் காணாது போக வைக்கும். தன் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் அனுமதிக்காது. தன் நெருங்கிய நட்புகளுக்கும் கூட நட்பாக விடாமல் தடுக்கும். சேற்றை வாரி இரைக்கும். அதற்கு எப்பேற்பட்ட காரியத்தையும் நிகழ்த்தும். இங்கே இளவஞ்சிக்கு சிவா அப்படித்தான். உன்னுடன் நட்பு கொள்ள விழைகிறேன் என்பதான இளவஞ்சியின் உள்ளர்த்த பார்வைகளை மதுவின் மீதான கவனத்தில் சிவா துரதிருஷ்டவசமாக கவனியாது போனதில் வந்த கோபம் அவளுக்கு.

சில பெண்கள், நட்பு நாடும் உள்ளர்த்த பார்வைகளை தூண்டிலிடுகிறார்கள். பல பெண்கள், அவ்வாறு தூண்டிலை வீசி, வெறுமனே விளையாடுகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு, நெருங்கினால் ' உன்னை யார் பார்த்தார்கள்?' என்று கேலி செய்வார்கள். இவ்வாறான விளையாட்டுப் பார்வைகளால், சிவா, இளவஞ்சியின் பார்வையை தவறவிட்டது குழப்பத்தை விளைவித்தது. அதற்குப் பின் அவன் நட்பு நாடி வந்தபோது, பதிலுக்கு செய்வதாய் எண்ணி, பொது இடத்தில் பேச வந்தவனை , வெடுக்கென்று முகம் திருப்பி அவமானப்படுத்தினாள். நட்பு துளிர் விட ஓர் நல்லபிப்ராயம் தேவை. அதை முதலிலேயே பாழாக்கிவிட்டால் நட்பு துளிர்க்காது. முதலிலேயே நம்பகத்தன்மையை உடைத்துவிட்டால் நட்பு சாத்தியப்படாது. அதைத்தான் தந்திரமாய் காய் நகர்த்தி சாதித்தாள் இளவஞ்சி.

தகுதியான ஓர் ஆண், இவ்விதம் நடத்தப்படக் கூடாது. அது பெண்மையின் மீதான் நம்பிக்கையை தகர்த்துவிடும். பெண்மை நியாயமானதாக இருக்க வேண்டியதில்லை என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். தேவியென போற்றப்படும் பெண்மையிலும் குதர்க்கங்கள் உண்டு என்று எண்ண வைக்கும். உண்மை கண்டறிந்திருக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்படக்கூடாது. அதில் நிதானம் காட்டியிருக்கவேண்டும். முதற்கண் பரிச்சயத்தில் ஆயிரம் குளறுபடிகள் இருக்கலாம் என்பதாக இன்னொரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக வேறொன்று நடந்தது.

இப்படித்தான் சில பொருத்தமான மனிதர்களுக்கிடையேயான நட்பு துளிர்க்காமலேயே போய்விடுகிறது. உண்மையில், சிவா உறுப்பினராக இருக்கும் நுங்கம்பாக்கம் அமேரிக்கன் நூலகத்தில் மதுவும் உறுப்பினர். ஆனால் இருவருக்கும் அது தெரியாது. சிவாவுக்கு பிடித்தமான எழுத்தாளர்கள் மதுவுக்கும் பிடித்தம். தனிமையில் மது கேட்கும் இளையராஜாவின் இசை, சிவாவிற்கு மனப்பாடம். சிவாவுக்கு பிடித்தமான திரைப்படங்களின் இசைத்தட்டு மதுவின் சேகரிப்புகளில். ஆனால், இந்த அத்தனை ஒற்றுமைகளும், பரிச்சயம் என்ற ஒன்று இருந்தால்தானே ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியும். அது முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டால்? அதைத்தான் நடத்தினாள் இளவஞ்சி.

"அப்படியா, ச்சே அவனை நல்லவன்னு நம்பினேன்டீ"

"எல்லா பசங்களும் பார்க்க அப்படித்தான்டீ இருப்பானுங்க.. விடு.. கண்டவனைப் பத்தி நமக்கென்ன பேச்சு"

அடுத்தமுறை, மது எதிரில் வருகையில் ஸ்னேகமாய் புன்னகைத்தான் சிவா. மது கவனியாதவளாய் முகத்தை எதிர் திசையில் செலுத்தி தன் வழியே நடந்தாள்.சிவா குழம்பினான். இரண்டு மூன்று முறை கடந்து செல்கையில் கவனித்து, மது வேண்டுமென்றே விலகிச் செல்வதை கவனித்துக் கொண்டான். அவனுள் ஏதோ உடைந்தது. மதுவின் மேல் கோபம் வந்தது. பெண்மை மேல் கோபம் வந்தது. இயலாமையை உணர வைத்தது.

தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தான். யாருக்கு என்ன செய்தோம், ஏன் இந்த தண்டனை என்று உள்ளுக்குள் புழுங்கினான். மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா தனக்கு என்றெண்ணி வருந்தினான். 12ம் வகுப்பு வரை, வகுப்பில் முதல்வனாக வந்து, உயர் கல்வித் தகுதியில் பொறியியல் கல்லூரியில் ஃப்ரீ சீட் பெற்று, குடி சிகரெட் ஒதுக்கி கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு இத்தனையும் மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா என்ற எண்ணம் மேலோங்கியது. இத்தனையையும் கவனியாத பெண்மை என்ன பெண்மை? என்று பெண்மை மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. பெண்மையின் அவதானிப்புகள் தவறாகவும் இருக்கலாம் என்று எண்ணச் செய்தது.

தகுதியான ஆண், ஓரளவிற்கு மேல் இறங்கி வரமாட்டான். அதலபாதாளத்திற்கும் இறங்கி வருபவனிடம் திறமை தங்காது. தகுதி, மான ரோஷம் பார்க்கும். அதைப் பார்க்காவிடில், தகுதி என்ற ஒன்றே வந்திருக்காது. மோசம் போயிருப்பான் அல்லது திசை மாறிப் போயிருப்பான். தகுதியான ஆணுக்கு திமிர் அழகு கூட்டும். திறமை குடியிருக்கும். திறமை குடியிருப்பதாலேயே தகுதி வந்துவிடும். திறமையான ஆண், தலைசிறந்த வித்து. திமிர், ஓர் அணிகலன். திறமை இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்கக்கூட அடிப்படையில் ஒரு பரிச்சயமோ சினேகமோ தேவைப்படும். அது தகுதியானவனுக்கு வழங்கப்பட வேண்டும். தகுதியானவன் இரைஞ்ச விசனப்படுவான். இரைஞ்சுதல் பிடிக்காது அவனுக்கு. அதுவும் அணிகலன். மரியாதை.

தன்னை விட தகுதியில் குறைந்தவர்களுடன் பெண் நட்பு பாராட்டுகையில், பெண்மை தவறாகவும் சிந்திக்கலாமென்ற‌ தோற்றம் தருகிறது. பெண்மை மீதான அவ நம்பிக்கை இங்கே ஆழமாய் வேர் விடுகிறது. தங்கையோ, அக்காவோ, மனைவியோ 'இவன் என் நண்பன்' என்று ஒரு ஆண்மகனை அறிமுகப்படுத்துகையில், அந்த நட்பின் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. அது பொய்யோ என்று நினைக்க வைக்கிறது. எங்கோ நிச்சயம் பிசகியிருக்கலாமென்று நினைக்க வைக்கிறது. அது அந்த நட்பை பிரிப்பதிலோ, அல்லது அதற்கு ஒத்துழைக்காமல் விடுவதிலோ போய் முடிகிறது.

"ஹாய் இளவஞ்சி"

"ஹாய் ரகு"

"ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு யாரு இளவஞ்சின்னு பேர் வச்சது?"

"ஆங்..எங்கம்மா"

"ஓ.. நல்ல தமிழ் பெயர்.. எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்"

"ஓ.. உங்களுக்கு தமிழ்ன்னா பிடிக்குமா?"

"ஆமா, ரொம்ப.. சுஜாதாவோட எப்போதும் பெண் நாவல் படிச்சிருக்கீங்களா?"

"ஆங்..படிச்சிருக்கேன்.. ரத்தம் ஒரே நிறம் கூட படிக்கணும்.. ஃப்ரண்ட்ஸ் யார்கிட்டயும் அந்த புக் இல்லை"

"அட.. கவலையை விடுங்க.. என்கிட்ட இருக்கு.. நாளைக்கு தரேன்"

"ஓ.. தாங்க்ஸ்"

ரகு தந்திரமாய் காய் நகர்த்தினான். அவனுக்கு தெரியும். இளவஞ்சி மட்டுமே தான் போகும் வழிக்கு திசைகாட்டி என்று. பள்ளிப்பருவத்திலேயே இரண்டு பெண்களை காதலித்த அனுபவம் தந்த அறிவு. மரியாதையை வார்த்தையில் காண்பித்தான். சாதுர்யத்தை அணுகுமுறையில் காண்பித்தான். உண்மையில் இலக்கியம் அவனுக்கு வெகு தூரம். இளவஞ்சிபற்றி கொஞ்சம் தகவல் சேகரித்தான். தமிழ் பிடிக்குமென்று தெரிந்ததும், சிவாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிரபலமான எழுத்தாளர்கள் யாரென்று தெரிந்துகொண்டான். அவர்களின் ஆக்கங்கள் தெரிந்துகொண்டான். ஆக்கங்களின் வகைகள் தெரிந்துகொண்டான். இளவஞ்சியை அணுகினான்.

"மது.. இன்னைக்கு ரகு வந்து என்கிட்ட பேசினான்டீ"

"எந்த ரகு?"

"அதாண்டீ.. கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பானே"

"ஓ..அவனா"

"நல்லா பேசுறாண்டீ.. எனக்கு நாவல் தரேன்னு சொல்லியிருக்கான்... தமிழ்லாம் படிப்பான் போல...இந்த காலத்துல இப்படி பையனை பாக்குறது கஷ்டம் தெரியுமா? நல்ல பையன்"

தன்னையும் ஒருவன் மதித்துப் பேசிவிட்டானென்பதில், இளவஞ்சி சற்று அதிகமாகவே பேசினாள். தன்னிடம் வந்து பேசியவனின் மதிப்பை இயன்றவரை உயர்த்திப் பிடித்தாள்.

"ம்.. என்ன நாவல்டீ?"

"ரத்தம் ஒரே நிறம்"

"ஏய்..அதுவா?!.. படிச்சிட்டு குடுடீ.. நானும் படிக்கணும்"

"என்னோடதில்லை..ரகுவோடது.. எதுக்கும் நீயும் ஒரு வார்த்தை கேட்டுடேன்?"

"அப்படியா..சரி முதல்ல நீ முடி..அப்புறம் பாக்கலாம்.."

முதலில் மறுதலித்துவிட்டாலும், மதுவின் மன‌த்திற்குள் ரகுவைக் குறித்தான ஒர் நல்லெண்ணம் வேர் விட்டது. ஓர் எதிர்பார்ப்பு கூடியது. மது, தமிழ் விரும்பி. தன்னையொத்த தமிழ் விரும்பி மட்டுமே தனக்கு இணையாக முடியும் என்று நம்புகிறவள். ரகுவின் அறிமுகம் இளவஞ்சியின் மூலமாக மதுவிற்கு கிடைத்த‌தில், இள‌வ‌ஞ்சியின் ந‌ட்பை ப‌ற்றி மதுவுக்கு உய‌ர் எண்ண‌ம் கொள்ள‌ வைத்த‌து. அது ஒரு ந‌ம்பிக்கைக்கு வித்திட்ட‌து. தகுதியான‌ சிவா காணாம‌லே போனான்.

மனிதனுக்கு மனசாட்சியே ஒப்பற்ற நீதிமன்றம். பெண்மையை ஏமாற்றி அணுகுபவனின் மனம், ஏமாறும் பெண்மையை முன்னுதாரணமாக்கிப் பார்க்கும். எல்லா பெண்களையும் ஏமாற்ற முடியும் என்பதாக கணக்கு போட வைக்கும். ஏமாற்றினால் பெண்மையை நெருங்கிவிடலாம் என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். பெண்மையை இளப்பமாக நினைக்க வைக்கும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதும் என்று எண்ண வைக்கும். சகோதரியோ, மனைவியோ, சித்தியோ, அத்தையோ இன்னுமொரு ஆண்மகனை 'இவன் என் தோழன்' என்று அறிமுகம் செய்கையில், அது கூட ஏமாற்றுதலோ என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். அதில் எங்கோ பிசகியிருக்கிறது என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். இந்த எண்ணம் இருக்கும் வரை, அந்த நட்பு, உளமார ஒப்புக்கொள்ளப்பட்டிருக்காது. கண்காணிக்கப்படும். முதுகில் குறை கூறப்படும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதுமென்கிற எண்ணம் ஆண்மைக்கு தோன்றுவது பெண்மைக்கு இழுக்கு. அவமானம். தன் சவக்குழியை தானே வெட்டிக்கொள்வது போல. இங்கே தவறிவிட்டால், பிறகெங்கும் பெண்மை சுதாரிக்க இயலாது. கூட்டம் கூடி, கோஷமிட்டு பலனில்லை.

தகுதியான ஆண்மகன் புறக்கணிக்கப்படக் கூடாது. அப்படிப் புறக்கணிக்கப்பட்டால், அது பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். தவறான ஆண்மகனை பெண்மை இனம் காண முடியாமல் ஏமாறக் கூடாது. அதுவும் பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். உறவுமுறைகளின் மூலம், நம்பிக்கை. அன்பின் உட்கரு நம்பிக்கை. அது நஷ்டமானால் பிறகெல்லாம் சூன்யமே.

இய‌க்க‌ங்க‌ளால் ஆன‌ முடிச்சுக்க‌ள் குழ‌ப்ப‌மான‌வை. ம‌னித‌ன் காணும் எதுவும், ஏதோ ஓர் இய‌க்க‌த்தின், ஏதோவொரு மூலை ம‌ட்டுமே. இப்படியான பார்வை ம‌னித‌ன் விரும்பி ஏற்பதல்ல. இவ்வகையான பார்வைதான் பெற‌ப்ப‌டுகிற‌து. அளிக்கப்படுகிறது. பெருவாரியான இயக்கங்களுக்கு பெண்மை இலக்காகிறாள். பலவகையான நாடகங்கள் பெண்மையை மைய‌ப்ப‌டுத்தி நடத்தப்படுகின்றன. பல சமயங்களில் அவளையும் அறியாமல், அவள் வழி நடத்தப்படுகிறாள். இவ்வகையான வழி நடத்துதலும் அவள் விரும்பி ஏற்பதல்ல. ஆனால், இந்தச் சமூகம் அவ்வகையான வழி நடத்துதலுக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. யாரோ, எதன் பொருட்டோ, எதையோ இயக்கி, ஒரு மூலையில் தள்ளிவிட, அங்குதான் அதன் மீதான பரிச்சயம் அவளுக்கு துவங்குகிறது.

இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும், அதன் கட்டமைப்பையும், அது எப்படி அரங்கேறுகிறது என்பது பற்றியும் தெளிவாகத் தெரியாமல்தான், பெண்மை குழம்புகிறது. அரைகுறைப் புரிதலுடன், தான் நினைத்ததை சரியெனக் கொள்கிறது. இது, முக்காலே மூணு வீசம் ஒரு தவற்றுக்கு இட்டுச் சென்றுவிடுகிற‌து. த‌வ‌றிழைக்க‌ப்ப‌ட்ட‌தும், தான் இய‌க்க‌ப்ப‌ட்டிருப்ப‌து புரிகிற‌து.

இது த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டுமானால், இது அனைத்தும் புரிய‌ வேண்டும். இய‌க்க‌ங்க‌ள் புரிய‌வேண்டும். அதற்கு முதலில் எதிர்பாலின‌ம் புரிய‌ வேண்டும். ஈத‌னைத்திற்கும் முதிர்ச்சி வேண்டும். கால‌ம் க‌னிய‌ வேண்டும். அதுவ‌ரை காத்திருக்க‌ வேண்டும். வெறும‌னே ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். ஆரோக்கிய‌மான‌, அறிவு சார் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். அவ‌ச‌ர‌ப்ப‌ட்டால், கேடு விளையும். ச்சீ என்றாகும். பாராமுக‌ம் கொள்ள‌ வேண்டியிருக்கும். ஒதுங்கிப் போக‌ வேண்டியிருக்கும். நம்பிக்கை இழக்க வேண்டியிருக்கும்.

"உங்க ரெண்டுபேருக்கும் என்ன வேணும்?"

"ரகு, எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்" என்றாள் இளவஞ்சி.

"ரகு, எனக்கு பஃப்" என்றாள் மது.

"ஓகே..கொஞ்சம் இருங்க..வாங்கிட்டு வந்திடறேன்" என்றுவிட்டு எழுந்து கவுண்டர் நோக்கி ரகு நகர்ந்த போது, எதிர்பட்ட சிவா, ரகுவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, சலனமின்றி கேன்டீனை விட்டகன்றான்.

"ரகு, இனிமே எங்களைத் தனியா விட்டுட்டு போகாதப்பா.. கண்டவனும் எங்களை மொறைச்சிட்டு போறான்" என்றாள் இளவஞ்சி, அப்பிள் ஜூஸ், பஃப்ஃபுடன் வந்த ரகுவிடம்.

"மொறைச்சிட்டா? யாரு... யாரது" இரைஞ்சினான் ரகு.

"அவன் பேரு சிவா. எனக்கு தெரியும். சரியான பொறுக்கி அவன்" என்றாள் இளவஞ்சி.

ரகு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

@நன்றி
கணையாழி கலை இலக்கிய திங்களிதழ்(ஆகஸ்ட் 2013)

Wednesday, 31 July 2013

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை


குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

27.2.2013 தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பணி நிமித்தம் ஹாங்காங் வந்திருப்பதால், வார இறுதிகளில் அலைபேசியில் பேசுகையில் ரூ. 1000 த்திற்கான காசோலை குமுதம் பப்ளிகேஷன்ஸிடமிருந்து வந்திருப்பதாக வீட்டில் சொன்ன பிறகே இந்த விஷயம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

நண்பர்கள் எவரிடமேனும் குறிப்பிட்ட இந்த இதழ் இருக்குமானால் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Tuesday, 30 July 2013

ஒரு வேலை - சிறுகதை


ஒரு வேலை - சிறுகதை

ராகேஷ், நீலகண்டனை அவரது அறையில் அணுகியபோது, நீலகண்டன் அப்போதுதான் டோனால்ட் பார்த்தெல்மேயை முடித்திருந்தார்.

"ராகேஷ், இந்த மனிதர் பார்த்தெல்மே பின் நவீனத்துவம் குறித்து என்னமாய் எழுதியிருக்கிறார் பார்த்தாயா?.. இல்லையென்றால் நீ நிச்சயம் இதைப் ஒருமுறை...." நீலகண்டர் வாக்கிய‌த்தை முழுமையாக‌ முடிக்கும் முன்பே இடைம‌றித்தான் ராகேஷ்.

"இடைம‌றிப்ப‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும் சார். கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌ம். நீங்க‌ள் இப்போதே என்னுட‌ன் வ‌ர‌ முடியுமா?" என்றான்.

"இப்போதென்ன விஷ‌ய‌ம்?" என்ற‌வாறே இருக்கையை விட்டு எழுந்த‌ நீலகண்டரை, அலுவலகத்தினூடே காரிடார் வழியாக விவாத‌ அறை நோக்கி அழைத்துச் சென்றான் லேரி. இவர்களின் சிரங்களுக்கு பின்னால், அந்த அலுவலகம் இருமைகளுக்குள் எதையெல்லாமோ தேடிக்கொண்டிருந்தது.

நீலகண்டன், பிரிட்டனின் பிரதான வங்கியின் மென்பொருள் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர். அவரின் கீழே இயங்கும் பல ப்ராஜெக்ட்களை நிர்வகிக்கும் பொறுப்பு ராகேஷிடம் இருந்தது. நீலகண்டன், வங்கியின் வியாபார பரிவர்த்தனைகள் சார்ந்து இயங்குபவர். ராகேஷ், அவ்வகையான வியாபார பரிவர்த்தனைகளை மென்பொருள்களால் உருவாக்கும் தொழில் நுட்பங்கள் சார்ந்து இயங்குபவர். நீலகண்டனின் கையிலிருக்கும் வியாபார‌ ப‌ரிவ‌ர்த்த‌னைக‌ளை திட்டம் தீட்டி, ஆட்கள் நியமித்து செய்து முடிக்க‌ கால‌மும், கோடிக‌ளில் ப‌ண‌மும் செல‌வாகும். அதையே ராகேஷ், த‌ன் தொழில் நுட்ப‌ வ‌ல்லுன‌ர்க‌ளைக் கொண்டு மென்பொருள்க‌ளாக‌ உருவாக்கினால், கால‌த்திற்கும் பைசா செல‌வின்றி இய‌ங்க‌லாம். ஆட்க‌ளை நிய‌ம‌ன‌ம் செய்தால், வ‌ரும் செல‌வின‌ங்க‌ளை விட‌ மென்பொருள்க‌ள் ச‌ல்லிசு. நீலகண்டன் கொடுத்தால் தான் ராகேஷிற்கு வேலை. ராகேஷ் செய்து முடித்தால் தான் நீலகண்டனுக்கு லாப‌ம். தொழில் நிமித்தம் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பவர்கள். சம கால அனுபவம் உடையவர்கள்.

ராகேஷ், நீலகண்டனின், தோளில் தோழமையும் கைபோட்டவாறே,

"அடுத்த மாதம் நாம் வெளியிட்டாக வேண்டிய மென்பொருள் தொகுப்பை கருத்தில் கொண்டு கொஞ்சம் கவனமாக பேசுங்கள்" என்றான் சன்னமாக. கவனமாகக் கையாளவேண்டிய எதுவோ நடந்திருக்கிறது என்பது புரிந்துவிட்டாலும் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது. கூடவே எச்சரிக்கை உணர்வும். எதுவும் பேசாம‌ல் அமைதியாய் ந‌ட‌ந்த‌ ராகேஷை, என்ன‌வாக‌ இருக்குமென்று யோசித்த‌ப‌டியே தொட‌ர்ந்தார் நீலகண்டன். ராகேஷ், விவாத அறையின் கதவை தள்ளித் திறந்து நீலகண்டனை சைகையால் உள்ளே வரச்சொல்லி அழைக்க‌, உள்ளே நுழைந்தார் நீலகண்டன்.

அறையில் ம‌த்திம‌மாக‌ இட‌ப்ப‌ட்டிருந்த‌ வட்ட மேஜையின் ஓர் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த மனோஜ், அறைக்குள் நுழையும் ராகேஷையும், நீலகண்டனையும் சலனமின்றி பார்த்தது நீலகண்டனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் மனோஜ், எப்போது நீலகண்டனையோ, ராகேஷையோ சந்தித்தாலும், சினேகமாக வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்படி சலனமே இன்றி இருக்க, மனோஜை எப்போதுமே கண்டதில்லை நீலகண்டன்.

குழப்பத்துடனே நீலகண்டன், மனோஜ் எதிரே இருந்த நாற்காலியில் அமர, நீலகண்டனின் அருகாமையில் இருந்த இருக்கை ஒன்றில் தன்னை நிறைத்துக்கொண்டார் ராகேஷ்.

தகவலொன்றைப் பகிர்ந்துகொள்ளும் தோரணையில் துவங்கினார் ராகேஷ்.

"நீலகண்டன், நம் எதிரே அமர்ந்திருக்கும் மனோஜை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அதிர்ச்சியளிக்கும் வகையில் மனித வளத்துறையிலிருந்து இன்று எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், மனோஜ், நம் அலுவலகத்தில் இணைகையில் போலியான சான்றிதழ்கள் அளித்திருக்கிறார் என்பதுதான்" என்றுவிட்டு தகவல் தந்ததோடு தன் வேலை முடிந்துவிட்டது என்கிற ஸ்திதியில் அமைந்தார் ராகேஷ்.

நீலகண்டனுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்திருக்க வேண்டும். மனோஜிடம் திரும்பி,

"ராகேஷ் சொல்வதெல்லாம் உண்மையா மனோஜ்?" என்றார் அதிர்ச்சி கலந்த குரலில். மனோஜ் மெளனமாக ஆமாம் என்பதாக மேலும் கிழும் தலையசைத்தான்.

"அப்ப‌டியானால், உன் உண்மையான கல்வித் தகுதிதான் என்ன மனோஜ்?".

"வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் படிப்பைவிட்டு பாதியில் நிறுத்தப்பட்டவன் நான் நீலகண்டர்". இப்படிச் சொன்ன டாமின் குரல் மெலிந்திருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது, இனி என்ன என்பதாக இருந்தது.

"படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா? எதனால் என்று எங்களிடம் சொல்ல முடியுமா நண்பா?"

"என் பெற்றோர்கள் சமூக விரோத காரணங்களினால், திடீரென்று கைது செய்யப்பட்டமையால், படிப்பைத் தொடர, பல்கலைக்கழகத்திடம் கட்ட போதுமான பணம் என்னிடம் இருக்கவில்லை நீலகண்டன்"

ராகேஷிற்கு மனோஜின் நிலைப்பாடு குறித்து பரிதாபமாக இருந்தது. மெளனமாக நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தார். மனோஜ் சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்தவனாய் அமர்ந்திருந்தான். நீலகண்டன், மனோஜே தொடரட்டும் எனக் காத்திருந்தார். அந்த விவாத அறையில் மயான அமைதி நிலவியது.

"என் பெற்றோர்கள் செய்த தவற்றினால், வீடிழந்து, பொருளிழந்து நான் நடுரோட்டிற்கு வந்துவிட்டேன் நீலகண்டன். போதாத குறைக்கு, அவர்கள் வாங்கிய கடனை நான் அடைக்க வேண்டியிருந்தது. என் கையிலோ பணமே இருக்கவில்லை. எப்படியோ சமாளித்தவன், பிற்பாடு, ஒரு இரவு விடுதி நடனக்காரியை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு இரண்டு வயதாகும்போது, என் மனைவி, தான் வேலை பார்த்த அந்த இரவு விடுதியில் உடன் வேலை பார்த்த ஒருவனுடன் ஒரு நாள், வீட்டிலிருந்த பொருள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். மீண்டும் நான் தனியனாகிவிட்டேன் நீலகண்டன். ஆனால் இந்த முறை இரண்டு வயதுக் குழந்தையுடன். தனியே இருந்திருந்தாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இரண்டு வயது குழந்தையை என்ன செய்வது? அவளை தனியே தவிக்க விட்டு, செத்துப்போக‌ விரும்பவில்லை".

"நகரத்தில் நான் வேலை கேட்டு ஏறி இறங்காத வணிக சந்தைகள், கடைகள் இல்லை நீலகண்டன். மீன் கடையிலிருந்து துவங்கி பெரிய நகைக்கடைகள் வரை ஏறி இறங்கிவிட்டேன். முதல் இன்றி, சிபாரிசு இன்றி எந்த வேலையும் கிடைக்கவில்லை. அப்படியே முயன்று பெற்ற வேலைகளும் சில வாரங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அவற்றில் கிடைத்த பணம் எனக்கும், என் சின்ன குழந்தைக்கும் அரை வேளை உணவுக்கு கூட எட்டவில்லை. பல நாட்கள் தொடர்ந்து நாங்கள் பட்டினியாக இருந்திருக்கிறோம். என் இரண்டு வயது மகள் பட்டினியில் துவண்டு மயங்கி விழுவதைப் பார்ப்பதற்கு செத்துப்போகலாம் போலிருக்கும் நீலகண்டன்".

"அப்போதுதான் செய்தித்தாளில் உங்கள் அறிவிப்பைப் பார்த்தேன் நீலகண்டன். கணிணி வல்லுனர்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தாய். நான் பள்ளிக்கூடம் போனவரை, கணிணிக்களுக்கு அறிவைக் கொடுக்க கற்றிருந்தேன் நீலகண்டன். ஆனால், அது மட்டும் தான் இருந்தது. முறையான ஆவணங்களோ, சான்றிதழ்களோ என்னிடம் இருக்கவில்லை நீலகண்டன்"

"நம்மைச் சுற்றியுள்ள நவீன உலகைப் பாருங்கள் நீலகண்டன். சிலருக்கு லட்சங்களையும், கோடிகளையும் அது தருகையில், பலரை பட்டினியில் கொல்கிறது. ஒரு பக்கம், மக்கள் பிச்சைக்காரராகிறார்கள், மறுபக்கம் மக்கள் வோல்வோவில் தங்கள் கோடிக்கணக்கான பணத்தை முடக்குகிறார்கள். இந்த நவீன யுகத்தில், பணம் படைத்த முதலாளித்துவமே, யார் வாழ வேண்டும், யார் அழிய வேண்டுமென முடிவு செய்கிறது நீலகண்டன். சுவாசிக்க எனக்கான காற்று மறுக்கப்பட்ட போது, நான் சுவாசிக்க, எனக்கான காற்றை எடுத்துக்கொண்டேன். அது தவறா?"

ராகேஷும், நீலகண்டனும் டாமை பிரமிப்புட‌ன் பார்த்தபடி அமர்ந்திருக்க, மனோஜ், உள்ளக்குமுறலை கொட்டிக்கொண்டிருந்தான்.

"நான் வேறென்ன செய்ய நீலகண்டன்? வேலை இல்லை. பணம் இல்லை. ஆனால் இருவர் வாழ வேண்டும். எனக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை நீலகண்டன். ஒன்று நான் திருட வேண்டும், அல்லது வழிப்பறி செய்யவேண்டும். இல்லையென்றால் நானும் என் இரண்டு வயது குழந்தையும் பசியாலோ, குளிராலோ, நோய்வாய்ப்பட்டோ சாக வேண்டும். எனக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை நீலகண்டன். உங்களுடைய‌ சார்த்தர் சொல்லும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாகத்தான் நான் இருந்தேன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் நீலகண்டன்."

நீலகண்டன், மிகுந்த சிந்தனையுடன் மனோஜையே பார்த்து அமர்ந்திருந்தார்.

"நீங்கள் முப்பது நாட்கள் தேவைப்படும் என்று கணக்கிட்ட கணிணி ப்ரோக்ராம்களை பத்து நாட்களில் நான் செய்து முடிக்க‌வில்லையா?"

நீலகண்டன் மனோஜையே பார்த்தபடி அமோதிப்பாக தலையசைத்தார்.

"உங்களுக்கு தெரியுமா நான் அதை எப்படிச் செய்தேன் என்று? எனக்கு இருபதாயிரம் சம்பளம் நீலகண்டன். நான் பயன்படுத்திய மடிக்கணிணிக்கள் இரண்டு வாங்கினேன் நீலகண்டன். என் போன்றே கணிணிக்களுக்கு அறிவூட்டத் தெரிந்த, ஆனால், போதுமான சான்றிதழ்கள் இல்லாத இரண்டு பேரை என்னோடு இணைத்துக்கொண்டேன் நீலகண்டன். என் வீட்டில் ஓரரையில் அவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வரும் வேலைகளை பகிர்ந்து செய்கிறோம் நீலகண்டன். அதன்படியே, என் இருபதாயிரம் சம்பளத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் நீலகண்டன். இப்போது எங்கள் மூவருக்கு வாழ்க்கை இருக்கிறது. நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. நமது நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நீ அறிவாய் தானே நீலகண்டன்? நான் அதை என் வரையில் முழுமையாக உடைத்திருக்கிறேன் நீலகண்டன். இப்போது நாங்கள் மூவரும் சம்பாதிக்கிறோம். வேலை செய்கிறோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை நீலகண்டன். பிச்சைக்காரர்களிடமிருந்து எங்களை பிரிக்க உதவும் பணம் இப்போது எங்களிடமும் இருக்கிறது நீலகண்டன். அதைக் கொண்டு என் மகள் மர வேலைகள் கற்கிறாள் நீலகண்டன். பின்னாளில் அவள் மரவேலைகள் செய்து பிழைத்துக்கொள்வாள்".

" நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது நீலகண்டன்?. உனக்கு நன்றாகவே தெரியும். நமது நாடு ஒரு முதலாளித்துவ நாடு. ஏதுமறியாத பாமர மக்கள் 80 பேர் சேர்ந்து கடினமாக உழைத்து, எல்லாம் தெரிந்த 20 பேரை உச்சாணியில் கொண்டு வைக்கும் நாடு. நம் அலுவலகத்தில் எத்தனை பேர் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலையை இழுத்து இழுத்து இரண்டு நாட்களுக்கு செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே நீலகண்டன். அத்தகைய, சோம்பேரிகளே இந்த நவீன உலகத்தில், கண்ணாடி அறையில், அமர்ந்தபடி, கை நிறைய சம்பாதிக்கையில், சரியான தகுதிகளுடன், வேலை தெரிந்த , கடினமாக உழைக்கக்கூடிய என் போன்றவர்கள் ஏன் குளிரிலும், பசியிலும், நோயிலும் சாக வேண்டும் நீலகண்டன்? முதலாளிகளை உருவாக்க முதலாளித்துவம் வ்ரையறுத்த கோட்பாடுகளின்படியான‌ சான்றிதழ்கள் என்னிடம் இல்லாததாலா?"

"நீங்கள் டொனால்ட் பார்த்தெல்மேயையும், சார்த்தரையும் படிப்பவர் தானே. நீங்களே சொல்லுங்கள் நீலகண்டன். நான் என்ன செய்ய?"

ராகேஷும், நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அங்கே மீண்டும் மயான அமைதி நிலவியது. இருவரில் எவரும் பேசவில்லை. சற்று கணங்கள் கழித்து, ராகேஷ் அமைதியாக எழுந்து விவாத அறையை விட்டு வெளியேறினார்.

நீலகண்டன் இருக்கையை விட்டு எழுந்து, மனோஜின் தோளில் நட்பாய் கைபோட்டபடி அழைத்துக்கொண்டு காரிடாரில் நடந்து, அலுவலகத்தின் வாயிலை நோக்கி நடந்தார். அவர்களின் தலைகளுக்கு பின்னே அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன், நீலகண்டன், மனோஜிடம்,

"என் அருமை மனோஜ், நீங்கள் மூவரும் உங்கள் வீட்டில் இது காறும் செய்துகொண்டிருந்த வேலையை இனி வரும் காலங்களில், என் வீட்டில் செய்கிறீர்களா?" என்றார்.

முற்றும்.

@நன்றி உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6244)

Monday, 8 July 2013

புதிய வீடு - சிறுகதை


புதிய வீடு - சிறுகதை

அறை முழுவதையும் கூட்டி, பெருக்கி குப்பைகளை அள்ளி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ராகவன் சோபாவில் அயர்ச்சியுடன் சாய்கையில் அருகாமையிலிருந்த தேவாலயத்தின் மணி ஆறுமுறை டிங் என்று ஒலித்துவிட்டு நின்றது. அந்த ஓசையில் ஏதோ ஒரு இனம் தெரியாத ஈர்ப்பு ராகவனுக்கு எப்போதுமே இருந்தது. அது, இளம்பிராயத்தில் கிரிஸ்துவ பள்ளியில் படித்ததன் விளைவாக இருக்கலாமென்றும் கூட அவனுக்கு தோன்றியிருக்கிறது.

இப்படியான ஈர்ப்பு எல்லா மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. தூரத்து ரயிலோசை, ரயில் இருக்கைகளின் வாசம், கோயிலின் எண்ணெய் வாசனை, பசு மாட்டின் கழுத்து மணியோசை, மெல்லிய கொலுசொலி, கிராமத்து மண் வாசம், இளம்பிராயத்தில் படித்த பள்ளிக்கூடம் என்று, எல்லோருக்கும் ஏதோ ஒன்றின் மீது இனம்புரியாத ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. இது இல்லாத மனிதன் எவரும் இருக்க முடியாது. மனதில் சிறிதளவேனும் ஈரம் இருப்பதன் அடையாளம் அது.

நிதர்சன வாழ்வின் செயற்க்கைத்தனங்களில், தொலைந்து போகும் முன், இந்த ஈர்ப்புகள் தாம் அவ்வப்போது மனிதர்களை வெளியே இழுத்துப் போடுகின்றன. காலம் எத்தனை தான் நில்லாது ஓடினாலும் இத்தகைய நினைவுகள் அப்போதுதான் நிகழ்ந்த வண்ணம் அப்படியே மனதுள் இருந்து கொண்டு காலத்தை ஜெயிக்கின்றன தாம். காலம் கடந்து நிற்கின்றன தாம்.

ராகவன் புதியதாய் வாங்கிய வீடு அது. அம்பத்தூரை ஒட்டிய புதூரில் பிரதான சாலையினின்றும் இடது புறம் திரும்பினால் முதலில் வரும் மிகப்பெரிய அபார்ட்மென்ட் வளாகத்தின் இரண்டாவது மாடியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஃப்ளாட் அது. மொத்தம் 32 வீடுகள் கொண்டது அந்த வளாகம். எல்லா வீடுகளும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் ஃப்ளாட்களை வாங்கிய பலர் இன்னும் குடிபுகுந்திருக்கவில்லை. ராகவன் தான் முதலில் வீட்டில் பால்காய்ச்சி குடி புகுந்திருக்கிறான்.

முன்பு வாடகைக்கு இருந்த வீட்டிலிருந்து, பயன்படுத்திய தட்டு முட்டு சாமான்களை, புது வீட்டிற்கு லாரி வைத்து கடத்தி வந்து, வீடு முழுவதும் அதனதன் இடத்தில் வைக்க நாள் முழுவதும் காலாவதியாகிவிட்டிருந்தது. எல்லாவற்றையும் வைத்துவிட்ட நிலையில், இறுதியாக வீட்டின் ஹாலில் பார்வையாக வைக்க ஆர்டர் செய்திருந்த ரோஜா பூக்கள் மட்டும் அதுவரையிலும் வந்திருக்கவில்லை.

இர‌வுக்குள் ம‌னைவியும், ம‌க‌னும், பெற்றோரும், மாம‌னார், மாமியாரும் வ‌ருவ‌தாக‌ திட்ட‌ம் இருந்த‌து. அவர்களுக்கென சின்னதாக ஒரு பார்ட்டி தருவதெனவும் ஒரு திட்டம் இருந்தது. அவ‌ர்க‌ள் வ‌ருமுன் வீடு முழுவ‌தும் அழ‌கான‌ வாச‌னை மிகுந்த‌ ரோஜா ம‌ல‌ர்க‌ளை குவித்து வைத்து அலங்கரித்து வைப்பது இன்னும் இன்னும் ரம்மியமாகவும், பின்னாளில் நினைவு கூர்ந்தால், இனிமையாக இருக்குமென்பதற்காகவும் அதற்கென சுமார் ஆயிரத்து ஐந்நூறு மலர்களை ஆர்டர் செய்திருந்தான் ராகவன். ஐந்தரைக்கு வருவதாக கடைக்காரப் பையன் லோகா என்கிற ரித்மஸ் லோகா உறுதியளித்திருந்தது நினைவுக்கு வந்தது. உடல் முழுவதும் வியர்த்து வழிய, செல்வம்‌ வரும் நேரம் அழுக்காக இருக்க வேண்டாமென முடிவு செய்து, அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு, அரைக்கால் சட்டை, பனியன் அணிந்து ராகவன் வெளியே வருவதற்கும், வாசலில் ட்ரிங் என்று சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

ராகவன் கதவு திறக்கையில்,

"ஹலோ சர், பூ ஆர்டர் பண்ணியிருந்தீர்கள் தானே?". என்றான் லோகா. அவன் கையில் சின்னதாக ஒரு பை மட்டுமே இருந்தது க‌ண்டு ராக‌வ‌னின் புருவ‌ங்க‌ள் சுருங்கின‌. ஆயிர‌த்து ஐந்நூறு பூக்க‌ளை எடுத்து வ‌ந்திருப்ப‌வ‌ன் போல லோகா தோன்ற‌வில்லை என்ப‌தை குறித்துக்கொண்டான் ராக‌வ‌ன். அத்தனை பூக்களை தனியொருவனாய் எடுத்து வர இயலாமல், கீழேயே வண்டியில் நிறுத்திவிட்டு வந்திருக்கலாமென்று தோன்றியது. ரித்மஸ் லோகா என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. கிரிஸ்துவனாக இருக்கலாமென்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. லோகா சற்றேரக்குறைய ஆறடி உயரம் இருந்தான். நிறத்தில் கருமை. நிரம்ப வெளியிடங்களிலேயே சுற்றிக்கொண்டிருப்பவன் என்பதை, முகப்பருக்கள், பழுப்படைந்து அழுந்தி கோணிய‌ காதோர‌ கேசம் சொல்லாமல் சொல்லின. கொஞ்சம் கவனமின்மையுடன் பார்க்கின், கென்ய நாட்டு மனிதனோ என்று நினைக்கத்தோன்றிவிடும் அளவிற்கு இருந்தான்.

"அட! வாப்பா.. உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயே வந்துவிட்டாய். வா. உள்ளே வா" என்றழைத்த ராகவன், லோகாவிற்கு வழிவிட்டு பின்னடைய, லோகா வீட்டிற்குள் நுழைந்தான். புதியதாக வெள்ளையடித்த வீட்டின் சுற்றுச் சுவர்களுக்கு மத்தியில் அவன் கரும்பலகை போல் நின்றிருந்ததாகப் பட்டது ராகவனுக்கு. குறை வெளிச்சத்தில் சுவற்றில் படியும் நிழல் போலத் தோன்றினான்.

"மன்னியுங்கள், வேறொரு வாடிக்கையாளருக்கு பூக்கள் டெலிவரி செயததில் சற்று தாமதமாகிவிட்டது" என்றான் லோகா, உள்ளே நுழைந்து கொண்டே.

"பரவாயில்லையப்பா. எனக்கும் சற்று முன் தான் வேலை ஒழிந்தது. நீ முன்னமேயே வந்திருந்தால் எனக்கு சிரமமாகத்தான் இருந்திருக்கும். நல்லவேளை நீ இப்போது வந்தாய்" என்றான் ராகவன்.

"ஓ.. அப்படிங்களா" என்ற லோகா, வீட்டை ஒரு முறை, சுற்றும் பார்த்துவிட்டு, "வீடு நன்றாக அமைப்பாக இருக்கிறது" என்றான்.

"இருக்காதா பின்னே! முழுதாக தொள்ளாயிரம் சதுர பரப்பளவில், பிரதான சாலையின் ஓரமாக அமைந்திருக்கிறதே. முழுதாக முப்பத்தியைந்து லகரம் செலவு. இத்தனைக்கும் இதில் கார் பார்க்கிங் சேர்த்தி இல்லை" என்றான் ராகவன்.

"அப்பாடி! அத்தனை விலையா?"

"என்ன அப்படி சொல்லிவிட்டாய்! இதுவாவது பரவாயில்லை.. அடையார், திருவான்மியூர் எல்லாம் இதை விட விலை அதிகம். என்ன செய்வது? இங்காவது கிடைத்ததே " சலித்துக்கொண்டான் ராகவன். அந்த வீட்டிற்கென வேகாத வெய்யிலில் பைக்கில் அலைந்தது, இடைத்தரகர்கள் இஷ்டத்திற்கு விலை சொல்ல சரியான விலை குறித்து அல்லாடியது, கொடுக்கப்பட்ட கோப்புகள் சரிபார்த்தல், கருப்பில் கரைந்த பணத்தில் சோர்வுற்றது, வங்கிகளுக்கு லோன் வேண்டி அலைந்தது என அதுவரையில் அவன் அந்த வீட்டிற்கென பட்ட கஷ்டங்கள் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தன. என்றாலும், தனக்கே தனக்கென ஒரு வீடு கட்டி அதனுள் ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்து ஒரு வாய் காப்பி அருந்துவதன் சாசுவதம் பிடித்திருந்தது. அந்த வீட்டிற்கென பட்ட கஷ்டங்கள் நொடியில் தேனென இனிக்கச் செய்தது.

"இந்தக் காலத்தில் ரியல் எஸ்டேட்ஸ் தான் சார்.. நான் கூட, இந்த பூக்கள் வேலையை விட்டுவிட்டு, ரியல் எஸ்டேட்ஸ் செய்யலாமா என்று இருக்கிறேன் சார். இந்த பூக்கள் வேலையில் அத்தனை திருப்தி இல்லை" என்றான் லோகா சலிப்பாக‌.

"ஏனப்பா, விரக்தியாகப் பேசுகிறாய்.. பூக்கள் நல்ல தொழில் அல்லவா? சிங்கப்பூர், மலேசியா இன்ன பிற ஐரோப்பியன் நாடுகளுக்கெல்லாம் இங்கிருந்து பூக்கள் விமானத்தில் அனுப்பப்படுகின்றன என்றொரு கட்டுரையில் கூட படித்தேனே" என்றான் ராகவன் சமாதானம் சொல்லும் நோக்கில்.

"ஆமா... பூக்கள் தானே போகின்றன‌.. நாங்களா போகிறோம்" என்றான் லோகா. அவன் பேச்சில் ஒரு வெறுமை தின்மையாகத் தெரிந்தது. அவனிடம் வீட்டைப் பற்றி அதற்குமேல் பேசுவது சரியாக இருக்குமென்று ராகவனுக்கு தோன்றவில்லை.

"ம்ம்.. சரி.. பூக்கள் தயாரா?" என்றான் ராகவன் பேச்சை மாற்றும் நோக்கில்..

"தயார் சார். தந்துவிட்டு போகலாம் என்றுதான் வந்திருக்கிறேன். எத்தனை ஆர்டர் செய்திருந்தீர்கள்?" என்றான் லோகா.

"அயிரத்து ஐந்நூறு பூக்களப்பா.. பூக்களெல்லாம் எங்கேயப்பா? கீழே வண்டியில் இருக்கிறதா" என்றான் ராகவன்.

"இல்லை சார், இந்தப் பையில் தான்" என்ற லோகா, தன் கையில் கொண்டிருந்த சின்ன தோல்பையை காட்டினான். தோல் பை, மெலிந்து காணப்பட்டது. இரண்டொரு குறிப்பேடுகள், சீப்பு, ஒரு சிகரெட் பாக்கேட், செல் ஃபோன் சார்ஜர் முதலான சின்னச் சின்ன பொருட்களே வைக்கக்கூடிய மிகச்சிறிய அந்த பைக்குள் ஆயிரத்து ஐந்நூறு பூக்களா என்று நினைத்துப் பார்க்கையிலேயே, ராகவனுக்கு வியப்பாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.

"இந்த பையிலா?" என்றான் ராகவன் நம்பிக்கையின்றி.

"ஆமாம் சார்"

"என்ன விளையாடுகிறாயா லோகா?! இத்தனை சிறிய பையில் அத்தனை பூக்களா?" என்றான் ராகவன் தீர்மானமில்லாமல்.

"அய்யய்யோ.. உண்மையாத்தான் சார்.. உங்க‌ளுக்கே உங்க‌ளுக்காக தனிச்சிறப்பான பூக்களாக கொண்டுவ‌ந்திருக்கிறேன்" என்றான் லோகா மெலிதாக‌ சிரித்துக்கொண்டே.

"அப்ப‌டியா! எங்கே காட்டு பார்க்க‌லாம்?" என்றான் ராகவ‌ன் ச‌ந்தேக‌மாக‌.

"மொத்த‌ம் எத்த‌னை கேட்டீர்க‌ள்?"

"மொத்த‌மாக‌ ஆயிர‌த்து ஐந்நூறு பூக்க‌ள்"

"இதோ.. உங்க‌ள் பூக்க‌ள்" என்ற‌ லோகா, தான் கொண்டு வ‌ந்திருந்த‌ தோல் பையின் ஜிப்பை இழுத்துத் திறந்து, நான்கு ரோஜா பூக்க‌ளை வெளியே எடுத்தான். மெல்ல‌ அப்பூக்க‌ளை அருகாமையிலிருந்த‌ மேஜை மீது வைத்துவிட்டு ச‌ட்டைப் பைக்குள் துழாவி ஒரு க‌த்திரிக்கோலை எடுத்து நான்காவ‌து பூவின் த‌ண்டில் இர‌ண்டாக‌ வெட்டி , மூன்று முழுப்பூக்க‌ளையும் ஒரே ஒரு இன்ச் நீள‌முள்ள‌ த‌ண்டையும் மேஜைமீது அடுத்த‌டுத்து வைத்தான். வெட்டி எஞ்சிய‌ ரோஜாவை மீண்டும் த‌ன் பைக்குள் திணித்துக்கொண்டான்.

இத்தனையும் செய்கையில் அவன் முகம் சலனமற்று இருந்தது. விழிகளில் ஒரு தீர்க்கம் இருந்தது. அவன் அதிகம் பேசவில்லை. இலக்கற்று ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. கீ கொடுத்த பொம்மை போல, அவன் அதை செய்தாலும், அதிலும் ஒரு நேர்த்தி இருந்தது.

பார்த்துக்கொண்டிருந்த ராகவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு பூக்கள் எங்கே மூன்றே மூன்று பூக்களெங்கே என்று தோன்றியது.

மேஜையின் மீதிருந்த மூன்று பூக்களும் அழகாக இருந்தன. மலர்ந்த சூட்டில் பறித்து வந்துவிட்டாற் போல் தோற்றம் தந்தன. அழகான செவ்விதழ்கள் கொண்ட, வாசம் மிகுந்த ரோஜா பூக்களை, சிருஷ்டி, முள்ளுடன் தான் படைத்திருக்கிறது. இது எதைக் குறிக்கிறது? சரியும் தவறும், தீமையும் நன்மையும், தர்மமும் அதர்மமும் ஒரே காகிதத்தின் இரண்டு பக்கங்கள் என்பதையா? ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்பதையா? சரி, நியாயம், தர்மம் இவைகளெல்லாம் எங்கோ நடக்கையில், தவறு, அநியாயம், அதர்மமும் அங்கேயே நிகழும் என்பதையா?

"ஏய், லோகா.. என்னப்பா மூன்றே மூண்று பூக்கள் வைத்திருக்கிறாய்? இவைகள் தான் விசேஷமான பூக்களா?" என்றான் ராகவன் ஏமாற்றத்துடன்.

"இல்லையே சார்.. நீங்கள் கேட்ட ஆயிரத்து ஐந்நூறும் இருக்கிறதே.." என்றான் லோகா.

"ஏனப்பா? உன் கண் என்ன குருடா? மூன்று தானே இருக்கிறது. உனக்கு எண்ணிக்கை தெரியுமா? தெரியாதா? என்ன படித்திருக்கிறாய்?"

"எம்.எஸ்ஸி மாதமாடிக்ஸ் சார்."

"படித்தவந்தானே நீ! படித்தவன் செய்கிறா காரியமா இது? இந்த ஸ்திதியில், இவைகள் எல்லாம் விசேஷமான பூக்கள் என்று வேறு சொல்கிறாயே?" என்றான் ராகவன் சற்று கோபத்துடன்.

"உண்மைதான் சர்.. இவை விசேஷமான பூக்கள் சார்"

"அப்படியென்ன விசேஷம் இவைகளில்?"

"அதென்ன அப்படி கேட்டுவிட்டீர்கள் சார்.. நன்றாக பாருங்கள்.. இந்த மூண்று பூக்களும், ஒரு இன்ச் ஒற்றைக் காம்பும் உங்கள் தொள்ளாயிரம் சதுர அடி வீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைக்கவில்லை. பார்த்தீர்களா? எத்தனை இடம் உங்கள் பயன்பாட்டிற்கு மிச்சமிருக்கிறது பாருங்கள்? இந்த மீந்த இடங்களில் நீங்கள் எத்தனை பொருட்கள் வைக்கலாம்? எத்தனை பேர் இங்கு சாவதானமாக அமர்ந்து சீட்டாடலாம்? பேசிச் சிரிக்கலாம்? பொழுது போக்கலாம்? " என்றான் லோகா சாவதானமாக.

"மூண்று ரோஜா பூக்கள் கூட பரவாயில்லை. இந்த காம்பு எதற்கு?" என்றான் ராகவன்.

"சார், எங்கள் கடை யாரையும் ஏமாற்றுவதில்லை. எண்ணிக்கை தவறியதே இல்லை. மிக மிகச் சரியாக இருக்கும். இந்த காம்பு இல்லையெனில், ஆயிரத்து ஐந்நூறு சாத்தியமில்லை." என்ற லோகா, தன் தோல் பையிலிருந்து ஒரு ரசீது புத்தகத்தை எடுத்து காண்பித்துவிட்டு,

"உங்களுக்கு சொந்தமானதை பெற்றுக்கொண்டதாக நீங்கள் அத்தாட்சி கையழுத்து ஒன்று போட வேண்டும்" என்றான்.

"சரியாப் போச்சு.. இது வேறா?.. நல்ல கடைப் பையனப்பா நீ" என்று சலித்தவாறே ராகவன் , லோகா நீட்டிய ரசீதுக் காகிதத்தில் கையழுத்திட்டுத்தர, வாங்கிக் கொண்டு,

"சரி சார்.. எங்களிடம் பூக்கள் வாங்கியமைக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் உங்கள் பூக்கள் வேண்டுமென்றாலும் எங்களிடம் வாருங்கள்.. பூக்கள் வாங்க, விற்க எங்ககிட்ட வாங்க.. நாங்கள் பூக்கள்" என்று விட்டு கலகலவென சிரித்தபடியே திரும்பி ஹாலை விட்டு வெளியேறும் லோகாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராகவன்.

லோகா விட்டுச் சென்ற பூக்கள் மேஜைமேல் பத்திரமாக இருந்தது.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6234)

Friday, 21 June 2013

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ஒரு எழுத்தாளன் என்பவன் எல்லாவகையான எழுத்துக்களையும் எழுத வேண்டும் என்பார்கள். காதலில் பரிச்சயமே இல்லாவிட்டாலும் கூட, காதல் கவிதைகளை எவரும் எழுதி விட முடியும் என்பதே காதல் கவிதைகளுக்கென இருக்கும் தனிச்சிறப்பு. காதல் செய்ய இதுகாறும் கொடுத்துவைக்கவில்லை என்றாலும், கற்பனையான எனது இன்னுமொரு காதல் கவிதை இந்த வார ராணி வார இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

'இமைக்குடை' என்ற தலைப்பிலான இக்கவிதை வெளியான இதழின் 16ம் பக்கத்தின் பிரதி இங்கே.


Tuesday, 11 June 2013

நேற்றில் ஒரு நாள் - சிறுகதை

நேற்றில் ஒரு நாள் - சிறுகதை

சுட்டெரிக்கும் 45 டிகிரி வெய்யிலும், குறுக்கும் நெடுக்குமாய் பறந்து கொண்டிருந்த ஹைட்ரோஜன் கார்களும், அவற்றினூடே தெருவோரங்களில் கடந்து போய்க்கொண்டிருந்த ரோபாட்களுமாக, காலை நேர பரபரப்புக்கிடையே மார்க் டைம் ட்ரான்ஸ் என்று பெரியதாக தங்க நிறத்தில் எழுதப்பட்ட அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் மெயின் கேட்டை ஊடுறுவி ஓட்டமும் நடையுமாக ஒருவன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.

உயரம் ஐந்தரை அடி. மாநிறம். கறுப்பு பாண்டும், வெள்ளையில் சட்டையும், கறுப்பு ஷூவும் அணிந்து ஒரு பக்கா எக்ஸீக்யூட்டிவ் போலிருந்தான். அவன் நடவடிக்கைகளில் ஒரு திட்டமிட்ட அவசரம் தெரிந்தது. அவன் கண்கள் அலைபாய்ந்தபடி இருந்தன. அவன் உடைக்கும் கொஞ்சம் பொறுந்தாமல் அவன் கழுத்தை கட்டித் தொங்கிக்கொண்டிருந்தது அந்த மெமரி அப்சார்பர் வையர்லெஸ் டிவைஸ்.

இந்தக் கருவி குறித்த மேல்விவரங்கள் கொஞ்சம். இது ஒரு கம்பியில்லாத கருவி. மூளையில் உருவாகும் மிகமிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தை இந்தக் கருவியில் இருக்கும் எலக்ட்ரோ மாக்னெட் வசீகரித்து தனக்குள்ளே இருக்கும் நினைவுக்கூட்டில் சேகரித்துக்கொள்ளும். இது அந்தக் கருவியை அணைக்கும் நொடி வரையிலான அந்த மனிதனின் நினைவுகளைத் தனக்குள்ளே பதிந்துகொள்ளும். மூளைக்கு இரண்டடி தூரம் வரைதான் அது வேலை செய்யும். மூளை மாற்று அறுவை சிகிச்சைகளிலோ, அல்லது செயற்கையாக மூளையை உருவாக்கும் பொருத்தும் தொழில் நுட்பங்களிலோ இந்த கருவிகொண்டு சேகரித்த நினைவுகளைப் பதிந்து மீண்டும் அந்த மனிதனைப் பழையபடி மாற்ற முடியும்.

மெயின் கேட்டைத்தாண்டிய ரிசப்ஷனில் காத்திருந்த ஒரு சிறிய ரோபாட், ஸ்கேனரை எடுத்து நீட்ட சரியாக பத்துமணிக்குண்டான ரிசர்வேஷன் டிக்கட்டை நீட்டிய‌ அவனுடைய வலது கையில் ஒரு ஃபைல் இருந்தது. 'ஆக்ஸஸ் க்ளியர்ட்' என்று சற்று உரக்கமாக ஒரு ஒளிப்பெருக்கி கத்த, பக்கவாட்டிலிருந்த கண்ணாடிக்கதவு திறந்துகொள்ள அதனுள் ஊடுறுவி நுழைந்தான். மேலும், கீழும், பக்கவாட்டிலும் என நாற்புறங்களிலும் பளீர் வெள்ளையில் அந்த அறை பிரம்மாண்டமாக இருக்க, சற்றேரக்குரைய 20 டிகிரியில் அறைமுழுவதும் சீராக குளிரூட்டப்பட்டிருக்க, அறைக்கதவின் வெகு அருகாமையில் நான்கு பேர் சதுரமாக அமர்ந்து பேசக்கூடிய வகையில் குஷன் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அதைத் தாண்டி, பூமி மற்றும் செவ்வாய் கிரகங்களின் லேசர் காட்சிகளும் பக்கத்திலேயே ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் புகைப்படமும் லேசரில் ஓடிக்கொண்டிருக்க, அதன் கீழே 12-05-2511 என்று தேதி காட்டிக்கொண்டிருக்க‌, அதையும் தாண்டி கறுப்பு நிறத்தில் ஒரு மேஜையில் சில கோப்புக்களை சரிபார்த்தபடி இருந்த, கண்ணாடி மற்றும் கருப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து அமர்ந்திருந்த‌ அந்த நாற்பத்தைந்து வயதுக்காரர் நிமிரவும், அவன் அவருக்கெதிரே வந்து நிற்கவும் கனகச்சிதமாக இருந்தது. அவரின் மேஜையில் இருந்த பெயர்ப்பலகையில் மார்க் (மார்கண்டேயன்) என்றிருந்தது. அவர் ஏதோ கேட்க எத்தனித்து அவதானிக்கும் தோரணையில அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி....

'கேன் யூ ஹெல்ப் மி? எனக்கு ஒரு பொண்ண காப்பாத்தணும்.' அவருக்கு அதிகம் வேலை கொடுக்காமல் தொடங்கினான் அவன்.

'ஓ தட்ஸ் இன்ட்ரஸ்டிங். நீங்க....?'.

'ஐ ஆம் ராஜேஷ்'.

'ஓ எஸ்..எஸ் ஐ ரிமெம்பர். நீங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தீங்கள்ள!! ஹ்ம்ம் அன்ட் நீங்க காப்பாத்தனும்னு நினைக்கிறது?'

'ப்ரியா. என் லவர்'.

'ஓ தட்ஸ் ரோமான்டிக். ஹ்ம்ம் ச‌ரி நான் எப்ப‌டி உத‌வ‌முடியும்னு நினைக்கிறீங்க?'

'அவ‌ சாகுற‌துக்குள்ள‌ அவ‌ள‌ நான் காப்பாத்த‌ணும்னா நான் அவ‌கிட்ட‌ போக‌ணும்'

'ஓகே அவ‌ங்க‌ இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?'.

'அவ‌ எங்க‌யும் இல்ல‌'.

'அப்டின்னா?'

'அவ‌ செத்துட்டா'.

'ஓ காட், எப்போ?'

'நேத்து காலைல பத்து மணிக்கு'.

'ச‌ரி இப்போ நான் என்ன‌ செய்ய‌ணும்?'.

'அவ‌ சாகுற‌ நொடி நான் அங்க‌ இருக்க‌ணும். அதாவ‌து நேத்து காலைல‌ ப‌த்து ம‌ணிக்கு பக்கத்துல இருக்குற பார்க்குல நான் இருக்கணும்'. சொல்லிவிட்டு மார்க்கையே பார்த்தான் ராஜேஷ். ராஜேஷை ஒரு கணம் ஆழமாக பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் மார்க்.

'அதுக்கு நிறைய செலவாகும் ராஜேஷ்'.

'தெரியும். ஐ காட் சம்திங் ஆஃப் யுவர் இன்ட்ரஸ்ட். நான் நேற்றைக்கு போயே ஆகனும். அதுக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா எனக்கு சொந்தமான மார்ஸ் ஸ்டோன்ஸ், அதோட ஸ்பேஸ் ஷிப்ஸ், மார்ஸ்ல கல்லு வெட்றதுக்கான பர்மிஷன்ஸ் இதெல்லாத்துலயும் உங்களுக்கு பார்ட்னர்ஷிப் குடுக்குறேன். அது என்னை அனுப்புறதுக்கான உங்க ஃபீஸைவிட ஜாஸ்திதான்னு எனக்கு தெரிஞ்சிருந்தும்'.

காலாட்டிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த மார்கின் கால்கள் சட்டேன நின்றுபோனது. ராஜேஷ் சொன்ன தொழில்கள் குறித்து அவர் முன்பே அறிந்திருந்தார். முன்பெல்லாம், நிலத்தினடியில் கிடைத்த தங்கங்களை வெட்டி ஆபரணங்கள் செய்து அணிந்துகொண்டிருந்த மனித இனம் இப்போது, செவ்வாய் முதலான கிரகங்களில் கிடைக்கும் கற்களை பூமிக்கு கொண்டுவந்து ஆபரணங்களாக்கி அணிந்து மகிழ்கிறது. ஜூப்பிடர் கிரகத்தை சுழலும் ஒரு நிலாவின் மேல்தளம் மைனஸ் நூற்றுஅறுபது டிகிரிக்கு குளிர்ந்து வெறும் பனிக்கட்டிகளாக இருக்கும். ஆனால், இதன் கீழ் இளகிய தண்ணீர் நிலவைச் சுற்றிலும் சூழ்ந்து இருக்கும். இந்த நீரில் பூமியில் வாழும் கடல் உயிரிணங்களை போல் சில உயிரினங்கள் வாழ்கின்றன. அவைகளையும் அங்கிருந்து இங்கே கொண்டு வந்து ஆக்குவாரியங்களில் காட்சி பொருளாக வைத்தல், வீட்டில் வளர்த்து அழகு பார்த்தல் முதலானவை இப்போது பூமியில் பிரபலம். அதைத்தான் தொழிலாகச் செய்கிறான் ராஜேஷ். கோடீஸ்வரர்கள் இவைகளுக்கு பல லட்சம் கோடிகளை வாரி இறைப்பார்கள்.ஒரு நொடி மீண்டும் ராஜேஷை ஆழமாகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.

'வெல், இட்ஸ் எ ஃபைன் செட்டில்மென்ட் தென். ஒரு நாட்டோட கவர்ன்மென்ட் குடுக்காத டீல் எனக்கு நீங்க குடுக்கறதா சொல்றப்போ, இட்ஸ் இன்ட்ரஸ்டிங். பி ப்ராக்டிக்கல் படி. ஒரே ஒரு லவர். அவளும் செத்துட்டா. நீங்க குடுக்கறதா சொல்ற சொத்து எவ்ளோ வொர்த் தெரியுமா? 2511 ல அது ரொம்ப ரொம்ப காஸ்ட்லி. பேசாம புதுசா ஒரு பொண்ண லவர் ஆக்கிக்குவீங்களா, அத விட்டுட்டு ஏன் பழசு'.

'இருக்கலாம். ஒரு விஷயம் முடிஞ்சிடுச்சுன்னு மனுஷன் நினைச்சிட்டா அதுதான் அதோட முடிவுன்னு ஆயிடிச்சி. நான் அவ முடிஞ்சிட்டதா இன்னும் நினைக்கல. அதான்.' என்றுவிட்டு மெளனித்த ராஜேஷ் பின் தொடர்ந்தான்.

'நீங்க என்னை அனுப்புறதுக்குள்ள எனக்கு மனசு மாறிச்சுன்னா பாக்கலாம். இதுல‌ உங்களுக்கு தேவையான என் மார்ஸ் ஸ்டோன்ஸ் ரிலேடெட் டாகுமென்ட்ஸ் இருக்கு உங்களுக்கு தேவையான ப்ரைமரி டாகுமென்ட்ஸ்ல என் சிக்னேச்சரோட‌. நீங்க என்னை எவ்ளோ சீக்கிரம் அனுப்புறீங்களோ அவ்ளோ அதிகமா நான் உங்கள நினைப்புல வச்சிருக்க முடியும்'. என்றுவிட்டு எதிரேயிருந்த மேஜையில் ராஜேஷ் தான் கொண்டுவந்திருந்த‌ அந்த‌ ஃபைலை அவர் பக்கமாக வைத்தான். ராஜேஷை ஸ்னேகமாய் பார்த்துக்கொண்டே அதை தன் இடதுகையால் தன் பக்கம் இழுத்துக்கொண்டார் மார்க்.

'ஷீலா' இழுத்த ஃபைலைப் பிரித்துப் பார்க்காமல் உட்கார்ந்திருந்த சீட்டில் ஒரு பொத்தானை அழுத்தியபடி சற்றே உரக்க அவ‌ர் அழைக்க, சில நொடிகள் இடைவெளி விட்டு

'எஸ் ஸார்' என்றபடி ரூம் கதவு திறந்து உள்ளே வந்தாள் அவள். பார்க்க ஆங்கிலோ இந்தியப்பெண் போலிருந்தாள். அவரது செக்ரட்டரியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான் ராஜேஷ். அவளின் ஒடுங்கிய கன்னங்கள் அவளைப் பற்றிக் குதர்க்கமாக அவனை நினைக்க வைத்தது.

'ஷீலா, கன்சிடர் திஸ் ஜென்டில்மேன்ஸ் கான்டிடேச்சர். அர்ஜென்ட்.' என்றுவிட்டு, 'எஸ் ஸார்' என்றபடி ஃபைலை உடனே கையிலெத்துக்கொண்டு வெளியேறுபவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தொடர்ந்தார் மார்க்.

'ஓகே ராஜேஷ், டைம் டு ஃப்ளை, என்னோட வாங்க‌' என்றுவிட்டு எழுந்து நடக்கத் தொடங்க தன்னிச்சையாய் ராஜேஷ் சீட்டிலிருந்து எழுந்துகொண்டு மார்க்கை தொடர்ந்தான்.

'திஸ் வே ப்ளீஸ்' என்றபடி மார்க் ஏவுதளத்தை நோக்கி ராஜேஷை அழைத்துச்சென்றார்.

மார்க் வைத்திருப்பது கடந்த காலத்திற்கு பயணிக்க உதவும் ஒரு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய டிராவல்ஸ் நிறுவனம். 2010 களில் காகிதத்தில் இருந்த தொழில் நுட்பம் 2511 களில் சாத்தியமாகி, மக்களுக்கான நேரடி பயன்பாட்டுக்கு வந்திருந்தது. இருப்பினும் பூமி மொத்தத்துக்கும் ஒரே ஒரு நிறுவனம்தான். அது பொருளாதாரம் மிக வளர்ந்துவிட்ட இந்தியாவில் இருந்த மார்க்கின் நிறுவனம். இந்தத் தொழில் நுட்பம் சற்றே வித்தியாசமானது.

அதிக எடை கொண்ட, அதே நேரம் ஈர்ப்பு விசை கொண்ட ஒரு வஸ்துவானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சுருங்கிப்போகும்போது அதன் அபரிமிதமான‌ ஈர்ப்பு விசை தன்னைத்தானே விழுங்க நினைக்கையில் அது ஒரு ப்ளாக் ஹோலாகிவிடுகிறது. இப்படியாகிவிடும் ப்ளாக் ஹோலுக்கருகில் எது வந்தாலும் அது உள்ளிழுக்கப்படும். இதன் அபரிமிதமான ஈர்ப்பு விசையில், ஒளியை கண்களால் உணரவைக்கும் நுண்துகல்கள், அவை துகள்களோ அல்லது அலைகளோ, கூட விழுங்கப்படுவதால் இந்த ப்ளாக் ஹோல் எத்தனை பெரியதாக இருந்தாலும் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால், இவைகளை டாப்ளர் கண்ணாடிகள் மூலம் பார்க்கலாம். ஆனால் மறைமுகமாக. அதாவது, ப்ளாக் ஹோல்கள் எதையும் விழுங்குகையில் அதனால் ஏற்படும் ஒளி மாற்றங்களை இந்தக் கண்ணாடிகள் படம் பிடிக்கும். அதைக் கொண்டு ஓரளவு ஊகித்துக்கொள்ளத்தான் முடியுமே தவிர நேரடியாக கண்களால் பார்க்க முடியாது. ப்ளாக் ஹோல்களின் ஈர்ப்பு சக்திக்கும் எதிரிடையான ஒரு நிகழ்வு ஒயிட் ஹோல் என்பது. அதாவது உள்ளிருக்கும் எதையும் அபரிமிதமான வேகத்தில் வெளித்தள்ளுதல். ஒரு ப்ளாக் ஹோல் விழுங்கும் எதுவும் வெளித்தள்ளப்பட ஒயிட் ஹோலை சந்தித்தாக வேண்டும். அந்தப் பாதையை வார்ம் ஹோல் என்பார்கள்.

மார்க்கின் நிறுவனம், ஒரு ஸ்பேஸ்ஷிப் வைத்திருக்கிறது. இதன் எடை அதிகம் ஆனால் விட்டம் குறைவு. இதில் ஏறிவிட்டால், அது விண்வெளியில் ஒரு வட்டப்பாதையில் மணிக்கு 70000 மைல் வேகத்தில் சுழல்கையில், ப்ளாக்ஹோல் உருவாகும். அதனுள் இந்த விண்களம் உள்ளிழுக்கப்பட்டு, ஒரு வார்ம் ஹோல் பாதையில் பயணித்து, ஒரு ஒயிட் ஹோல் மூலமாக வெளித்தள்ளப்படும். அவ்வாறு வெளித்தள்ளப்படுகையில், காலத்தின் அந்தத் தருணத்தில் வெளித்தள்ளப்படும் ஒவ்வொரு வஸ்துவும் கடந்த காலத்தில் அவர்களுக்கான இடத்தில் இருப்பார்கள். அப்படி ஒரு இடம் இருக்கவில்லையெனில் அவர்கள் ஒரு ஒன்றுமில்லாத இடத்தில் இருப்பார்கள். அந்த இடம் மறுபடியும் ஒரு ப்ளாக் ஹோல்தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். காலத்துக்கு முன் பயணித்துவிட்ட பின் மீண்டும் நிகழ்காலத்துக்கு வர, இதேபோன்றதொரு ப்ளாக்ஹோல்‍ - வார்ம் ஹோல் - ஒயிட் ஹோல் இருக்கவேண்டும். இந்தத் தலைவலிகளையெல்லாம் மார்க்கின் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.

'ராஜேஷ், இதை வச்சுக்கோங்க' என்றுவிட்டு ஒரு சிறிய பேனாவைப் போன்று தோற்றமளித்த ஒன்றை நீட்டினான். ராஜேஷ் அதை வாங்கி உருட்டி உருட்டி பார்த்தான். அதன் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு பொத்தான் இருந்தது. அது முழுமைக்கும் ஒரு குப்பி போல் இருந்தது.

'இதுதான் ஸ்விட்ச். இதை அழுத்தினா இது ஒரு மயக்க மருந்தை உங்க விரல் வழியா இன்ஜெக்ட் பண்ணும். நீங்க கண் முழிச்சி பாக்குறப்போ நீங்க நேற்றைல சரியா பத்து மணிக்கு இருப்பீங்க. அங்க நீங்க செய்யக்கூடாத ஒண்ணு, உங்கள பெத்தவங்களையோ, அல்லது தாத்தா பாட்டனாருங்களையோ கொன்னுடக்கூடாது. அப்புறம் நீங்க நிகழ்காலத்துக்கு திரும்பி வர்றதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். அவ்ளோதான். இந்த சிவப்பு ஸ்விட்சை மறுபடியும் அழுத்துறவங்க கண்ணு முழிச்சி பாக்குறப்போ இங்க இருப்பாங்க. உங்களுக்கு மறுபடியும் இன்னிக்கு வரணும்னா நீங்கதான் அழுத்தணும். இல்லன்னா நீங்க கடந்த காலத்துலயே இருக்க வேண்டி இருக்கும். புரியிதா' என்றுவிட்டு ராஜேஷைப் பார்த்தார் மார்க்.

மார்க்கின் கண்களை தீர்க்கமாய் பார்த்தபடியே அமோதிப்பாய் மேலும் கீழுமாய் தலையசைத்தான் ராஜேஷ். அவன் பார்வையில் சீக்கிரம் கிளம்பும் அவசரம் தெரிந்தது.

'ஓகே. சீ யூ சூன்' என்றுவிட்டு மார்க் நின்றுகொள்ள, வெளிர் பச்சை நிறத்தில் சீறுடை அணிந்த இருவர் ராஜேஷை அங்கிருந்து அழைத்துச்செல்ல வந்தனர். ராஜேஷ், சற்று நிதானித்துவிட்டு, திரும்பி நடந்து மார்க்கை நெருங்கி, அவரை தோழமையாய் அணைத்துவிட்டு, அந்த சீருடைக் காவலர்கள் காதில் விழாத வகைக்கு அவரின் காதில் ஏதோ சொல்ல, கவனமாய்க் கேட்டுக்கொண்டார் மார்க். கைகுலுக்கிவிட்டு ராஜேஷ் அந்த சீருடைக் காவலர்களுடன் நடக்க, ராஜேஷ் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார் மார்க். செல்லும் வழியெங்கும் அவர்கள் ஏதும் பேசவில்லை. நேராகச் சென்று வலது புறம் திரும்பி ஒரு கதவைத் திறக்க உள்ளே ஒரேயொரு படுக்கையுடன் ஒரு சின்ன அறை முழுவதும் பளீர் வெள்ளை நிறத்தில். ராஜேஷ் உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அவன் பின்னே அந்த அறைக்கதைவை பூட்டும் சத்தம் கேட்டது.

சற்று நேரம் அந்த அறையை அமைதியாய் அவதானித்தான் ராஜேஷ். படுக்கையை ஒட்டி துணியாலான அந்த அறை சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி அவன் கவனத்தை ஈர்த்தது. ராஜேஷ் மெதுவான சீரான நடையில் அதன் முன் சென்று நின்றான். அவன் முகத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்தான். நீண்டதொரு பெருமூச்சுவிட்டுப் பின் அந்த படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு நிமிடம் தியானிப்பது போல் ஆழமாக மூச்சிழுத்துவிட்டான். அவன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மெமரி அப்சார்பர் தொடர்ச்சியாய் அவன் நினைவுகளைப் பிரதியெடுத்து சேமித்துக்கொண்டிருந்தது. தன் வலது கை கட்டை விரலால் மார்க் தந்த குப்பியின் சிவப்பு பொத்தானை அழுத்த விசுக்கென்று ஏதோ உடலுக்குள் நுழைந்த உணர்வுடன் அவன் நினைவு இருளைத் தழுவியது.

ராஜேஷ் கண்விழிக்கையில் அவன் அந்த பார்க்கில் மல்லாந்து கிடந்திருந்தான். அந்தப் பார்க் அடர்த்தியாக இருந்தது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட பூக்கள், செடிகள். முட்களுடன் மலர்ந்திருந்த தாமரை அவன் கவனத்தைக் களவாட முயன்று தோற்றது. சீராக வெட்டப்பட்ட செடிகள், புற்கள். சில செடிகள் குளிர்பிரதேசத்தில் மட்டுமே வளரக்கூடியன. ஆனால் இங்கே வளர்ந்திருந்தது. அவன் கைகளில் அந்த குப்பி அப்படியே இருந்தது. கையில் அணிந்திருந்த லேசர் ரிஸ்ட் வாட்ச்சில் சின்ன முள் பத்திலும், பெரிய முள் பன்னிரண்டிலும் நிற்க, தேதி 11-05-2511 என்று காட்டியது.தூரத்தில் (ஒரு நூறு மீட்டர் இருக்கலாம்) ப்ரியா நின்றிருந்தாள். வெள்ளை நிறத்தில் காட்டனில் ஒரு பாண்டும், சட்டையும் அணிந்திருந்தாள். புற்களின் மேல் அவள் நிற்பதைப் பார்க்கையில் வெள்ளைத்தண்டில் பூத்த சிவப்பு ரோஜாவைப் போலிருந்தது. காற்று அவளின் கூந்தலுடன் அளவளாவிக்கொண்டிருந்தது. அவள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்திருந்தாள். யாருக்கோ காத்திருப்பது போல் தெரிந்தது.

அவளுக்கு பக்கவாட்டில், அவள் கவனிக்காதவண்ணம் ஒருவன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். பார்க்கத் திருடன் போலிருந்தான். ஐந்தரை அடி உயரம். ஒல்லியான உருவம், அழுக்கேரிய சட்டை, முட்டியில் கிழிந்த பாண்ட். சவரம் செய்யாத முகம், தலைக்கு குளித்து மாதக்கணக்காகியிருக்கும் போல. ராஜேஷ் தெளிவாகப் பார்த்தான். முன்னர் நடந்தபோது, அவள் கத்தியால் குத்தப்பட்டு நடுவே கிடக்க, இரத்த சிவப்பு அவளின் வெள்ளை ஆடைகளை நனைத்திருக்க, வட்டமாய் ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. அப்போதுதான் ராஜேஷ் அந்த இடத்துக்கு வந்திருந்தான். அதனால், ப்ரியாவை கத்தியால் குத்திக் கொன்றவனை யாரென்று அடையாளம் காண இயலவில்லை. ஆனால், இம்முறை காலத்தை முன்னே பயணப்பட்டதில், அந்தக் கிராதகன் யாரென்று தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இவன் தான் ப்ரியாவை கொன்றிருக்கிறான். ஆனால், இம்முறை விடக்கூடாது. கொஞ்சம் தாமதித்தாலும் காரியம் கெட்டுவிடலாம்.

ராஜேஷ் ப்ரியாவை நோக்கி ஓடத்துவங்கினான். ராஜேஷ் ஓடிவருவதை கவனிக்காமல், அந்தக்கிராதகன் அவளை நோக்கி முன்னேற, அவளை எப்படியும் காப்பாற்றிவிடும் நோக்கில் ராஜேஷ் வேகமெடுக்க, அவன் அவளை நெருங்கி அவளின் கழுத்தில் கிடந்த வைர நெக்லஸை பிடித்திழுக்க, அவள் சுதாரித்து திமிற, ராஜேஷ் அவனை ஆவேசமாய் நெருங்க, அவள் சுதாரித்துத் திமிறுவதை உணர்ந்து காரியம் கெட்டுவிடுமோ என்றெண்ணி அவன் இடுப்பிலிருந்து பளபளக்கும் கத்தியை உருவி அவளின் மார்புகளை நோக்கி பாய்ச்ச எத்தனிக்க, இடையில் ராஜேஷ் புகுந்துகொள்ள கத்தி இப்போது ராஜேஷின் நெஞ்சை சீராக ஊடுருவியது. இதற்குள் அந்த வைர நெக்லஸ் அவளின் கழுத்தை விட்டகல, அவன் தப்பி ஓட, ராஜேஷ் கீழே சரிய, ராஜேஷை கண்டுகொண்டு அதிர்ச்சியில் அலறியபடி தாங்கிப் பிடித்தாள் ப்ரியா.

'ப்ரியா.....'

முனகியபடியே விழுந்தவனை தாங்கிப் பிடித்தாள் ப்ரியா. திடீரென தன் மீது கத்தியுடன் பாய்ந்தவன் யாரென்று யோசிப்பதா, தன்னைக் கொல்ல வந்த கத்தியை நெஞ்சில் தாங்கிக் கொண்டவனை நினைத்து இதயம் உருகிப்போவதா செய்வதறியாது திகைத்தாள் அந்தப் பேதை.

'ராஜேஷ்....அய்யோ யாராவது காப்பாத்துங்களேன்...ராஜேஷ்' ப்ரியா அலற தூரத்தில் பார்க்கில் நடை பழகிக்கொண்டிருந்தவர்களெல்லாம் என்ன நடக்கிறதென்று அப்போதுதான் கவனிக்கதுவங்கியிருந்தனர்.

'ப்ரிய்...ப்ரியா, உனக்கு ஒண்ணும் இல்லல' முனகியபடியே பலகீனமாக‌ வினவினவனிடம்,

'இல்ல .. எனக்கு ஒண்ணும் இல்ல ராஜேஷ்... நீ... அய்யோ யாராவது காப்பாத்துங்களேன்...' பதறினாள் ப்ரியா.

'ப்ரியா, இந்த இத வச்சிக்கோ' என்றவாறே கழுத்தைக் கட்டிக்கிடந்த மெமரி அப்சார்பரைப் பிடுங்கி அவளின் வலதுகையில் அந்த குப்பியையும் அதனுடன் அந்த‌ அப்சார்பரையும் தந்துவிட்டு, அவளின் கைவிரல்களால் அந்த குப்பியின் சிவப்பு பொத்தானில் வைத்து அழுத்த... நொடிப்பொழுதில் இருளடைந்து மயங்கிச் சரிந்தாள் ப்ரியா.

அவள் கண்விழித்தபோது அவள் இருந்தது மார்க்கின் அலுவலக அறையில் ஒரு மேடையில். அவள் கையில் அந்த குப்பி மற்றும் மெமரி அப்சார்பர். அந்த இரண்டும் என்னவென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த அறையில் அவளையும், அந்த படுக்கையையும், அவளின் பதட்டத்தையும் தவிர வேறெதுவும் இல்லை. அறையெங்கும் நிரம்பிக் கிடந்தது வெண்மை. அவள் கண்கள் ராஜேஷைத் தேடின. அவன் அருகில் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். நடந்தது கனவோ என்று நினைக்கத்தோன்றியது. பார்க்கில் நின்றிருந்த நாம் இங்கெப்படி வந்தோமென்று குழப்பமாக இருந்தது. ஒன்றும் விளங்கவில்லை. தலை லேசாக வலிப்பது போலத் தோன்றியது. நடப்பது எதையும் நம்பமுடியவில்லை.

ப்ரியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அந்நேரம் அந்த அறைக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான் மார்க். ப்ரியா மார்க்கை புரியாமல் பார்க்க ...

'ஹாய் ப்ரியா'.

'ஹாய்.. என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?'.

'ராஜேஷ் தான் சொன்னாரு. பை த பை, உங்க கைல இருக்குற அந்த ரெண்டையும் என்கிட்ட தரமுடியுமா? நான் உடனே ராஜேஷை அனுப்புறேன்' என்றுவிட்டு கை நீட்ட, ப்ரியாவின் கை தன்னிச்சையாக நீண்டு மார்க்கிடம் அந்த குப்பியையும், மெமரி அப்சார்பரையும் ஒப்படைத்தது.

ப்ரியா இப்போதும் ஏதும் புரிந்துகொள்ளாதவளாய் அவரையே பார்க்க , சம்பிரதாயமாய் தொடர்ந்தார் மார்க்.

'தாங்க்ஸ்.. நான் போய் ராஜேஷை அனுப்புறேன். நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க' என்றுவிட்டு, நகர்ந்தார் மார்க். அந்த அறைக்கதவு அவருக்குப்பின்னால் மெல்ல அடைந்தது.

சிறிது நேரம் கழித்து அந்த அறைக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான் ராஜேஷ். ராஜேஷை பார்த்தபின் தான் ஸ்வேதாவிற்கு போன் உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. மேடையிலிருந்து இறங்கி, ஓடிப்போய் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவசரமாக அவனின் சட்டை பொத்தான்களை அவிழ்த்துவிட்டு வெற்று மார்பில் கைகளால் தடவிப் பார்த்துக்கொண்டாள்.

'ராஜேஷ், நீ... நீ... அவன்... உன்ன கத்தியால குத்தினானே? உனக்கு ஒண்ணும் ஆகல?'.

'என்ன.. கத்தியா? குத்தினானா? யாரு?... என்ன உளருர...'.

'இல்ல ராஜேஷ், யாரோ உன்ன கத்தியால குத்தினாமாதிரி... உண்மைல நடந்தாமாதிரி இருந்ததுபா'.

'அப்படியா, ஹ்ம்ம்ம் ... எப்பவும் டயட், வொர்க் அவுட்ன்னு சரியா சாப்பிடாம இருக்காதன்னு சொன்னேன், கேட்டியா. பார்க்லயே மயக்கம் போட்டு விழுந்துட்டு, இப்ப பாரு, என்னென்னவோ பேசுற.. இதெல்லாம் தேவையா...' என்றபடியே சிரித்தபடி ப்ரியாவை அணைத்துக்கொண்டே போனான் ராஜேஷ். காலம் கடந்த பின்னும், கடந்த காலத்துக்கு விரைந்து சென்று செத்துப்போன காதலியைக் காப்பாற்றிவிட்டோம் என்கிற பெருமிதமும், பூவை அவளுக்கு கொல்லப்படும் அளவுக்கு துன்பம் நேர்ந்தது என்பது தெரிந்தால் வருத்தம் கொள்வாளோ என்று நினைத்து, அந்த கெட்ட நிகழ்வுகளை நடக்கவே இல்லையென்பதாக‌, கெட்ட கனவாக அவளை உருவகிக்க வைக்கும் நோக்கமும் அவன் பேச்சிலும் செயலிலும் நிறைந்திருந்தது. ராஜேஷும் ப்ரியாவும் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்தார் மார்க். அவர்கள் இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தவாறே கண்ணை விட்டு மறைந்ததும் தன் இருக்கைக்கு வந்தார் மார்க்.

ராஜேஷ் சொல்லிச்சென்றபடி ராஜேஷ் என்கிற பெயரில் ஒரு க்ளோன் தயாரித்து மிகக்குறைந்த நேரத்தில் அந்த க்ளோனுக்கு ராஜேஷின் இருபத்தியெட்டு வயது உடல் வளர்ச்சியை அட்வான்ஸ்ட் செல் மானிபுலேஷன் மூலமாக கொணர்ந்து, அதற்கு ராஜேஷே தந்த அவனின் நினைவுகளைக் கொண்ட மெம்ரி அப்சார்பரை வைத்து அந்த க்ளோனிற்கு நினைவுகளைத் தினித்து உண்மையான ராஜேஷைப் போலவே உருவாக்கியதற்கான மருத்துவ சான்றிதழ்களை மேஜையின் டிராயரிலிருந்து எடுத்து இடது கையில் பிடித்தபடி வலதுகையால் கோட் பாக்கேட்டிலிருந்து லைட்டரை எடுத்து எரியூட்டி எரித்தார் மார்க்.

ப்ரியாவின் காதலை உயிரூட்ட ராஜேஷ் உயிருடன் இல்லையென்றபோதிலும், ராஜேஷ் உயிருடந்தான் இருக்கிறான் என்கிற பொய் அதே காதலை வாழவைக்குமென்று தோன்றியது. ராஜேஷை போன்று அச்சு அசலாக ஒரு க்ளோன், அந்த க்ளோனிற்கு தான் ஒரு க்ளோன் என்பது கூடத் தெரியாது எனில் சிக்கல் எங்குமில்லை என்று தோன்றியது. இனி தானே நினைத்தாலும் இப்போதிருக்கும் ராஜேஷ் ஒரு க்ளோன் என்பதை நிரூபிக்க இயலாது. இது போதும்.

இந்தக் க்ளோன் தன்னை உண்மையான ராஜேஷ் என்று நினைத்திருக்கலாம், தான் ஒரு க்ளோன் என்பது அதற்கு தெரியவாய்ப்பில்லை, ஏனெனில், ராஜேஷ் கொல்லப்படும் வரையிலான நிகழ்வுகளை அந்த மெமரி அப்சார்பர் சேமித்து அந்த க்ளோனுக்கு அளித்திருந்தது. அந்தக் க்ளோனைப் பொறுத்தவரை, காதலித்த பெண்ணைக் கடந்த காலத்திற்கே சென்று மீட்டுக் கொணர்ந்ததில் நெஞ்சில் பாய்ந்த கத்திக்காயத்தை மார்க்கின் மருத்துவமனையில் சரி செய்துகொண்டதாகத்தான் நினைவில் ஏற்றப்பட்டிருக்கிறது.

இப்போதிருக்கும் ராஜேஷ் என்கிற க்ளோன், தான் இரண்டு மனிதர்கள் ஈன்றெடுத்த நிஜ மனிதன் அல்ல, தான் ஒரு க்ளோன் என்பதை புரிய வைக்கும் கடைசி அத்தாட்சி நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது. இறந்து போன‌ ராஜேஷின் கடைசி ஆசைப்படி, அவன் காதலி ப்ரியாவைப் பொறுத்த வரை ராஜேஷ் சாகவில்லை என்பதாகவே இருக்கட்டும் என்பதை பொய்யாக்கக்கூடிய சாட்சி முழுவதும் கருகும்வரை காத்திருக்கலானார் மார்க்.

#நன்றி

உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6224)

Monday, 27 May 2013

ராணி வார இதழில் என் க‌விதை

ராணி வார இதழில் என் க‌விதை

ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இரவும் பகலும்' என்ற‌ க‌விதை வெளியாகியிருக்கிறது. க‌விதை வெளியான ராணி வார இதழின் பிர‌தி இங்கே

Monday, 15 April 2013

Fiction கதைகள் எழுதுவது எத்தனை கடினம்?


Fiction கதைகள் எழுதுவது எத்தனை கடினம்?

நான் எழுதிய ஒரு சிறுகதை, ஆகஸ்டு 2010 ல் அப்போது மலேஷியா சிங்கப்பூரில் வெளியாகும் வல்லினம் கலை இலக்கிய இதழில் வெளியானது.

'போலீஸ் வந்துவிட்டால்' என்ற தலைப்பில் அதன் சுட்டி இங்கே:

http://www.vallinam.com.my/issue20/story1.html

http://ramprasathkavithaigal.blogspot.in/2010/07/blog-post_06.html

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 15.04.2013 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் பக்கம் 11ல் 'கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை' என்ற தலைப்பில் வெளியான பெட்டிச் செய்தியின் பிரதி இங்கே.


Fiction கதைகள் எழுதுவது எத்தனை கடினம் என்பதை இன்று காலை தினத்தந்தி நாளிதழில் வெளியான இந்தப் பெட்டிச் செய்தி எனக்கு புரிய வைத்துவிட்டது.

Thursday, 11 April 2013

கணையாழி (ஏப்ரல் 2013) திங்களிதழில் என‌து சிறுக‌தை


கணையாழி (ஏப்ரல் 2013) திங்களிதழில் என‌து சிறுக‌தை

இந்த மாதம் கணையாழி (ஏப்ரல் 2013) கலை இலக்கிய திங்களிதழில் பக்கம் 51ல் துவங்கி 56ல் முடிய நான் எழுதிய 'காலம் வரையும் கோலம்' என்ற தலைப்பிலான சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான பக்கங்களின் பிரதிகள் இங்கே.


ந‌ன்றி.

ந‌ட்புட‌ன்,
ராம்ப்ர‌சாத்

Wednesday, 27 March 2013

ஒப்பனைகள் கலைவதற்கே - சமூக‌ குறுநாவல்


ஒப்பனைகள் கலைவதற்கே ‍- சமூக குறுநாவல்

இன்று...

தேவியின் கண்மணியின் 03.04.2013 தேதியிட்ட இந்த வார இதழில் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான எனது முதல் சமூக குறுநாவல் வெளியாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மார்ச் 8ம் திகதி, அண்ணா சாலையில் உள்ள தேவியின் கண்மணி அலுவலகத்தில் குறுநாவலை பகிர்ந்துகொண்டது துவங்கி வெளியான இன்றுவரை சுவையான நிகழ்வுகள் பல. அவற்றையெல்லாம் மிகப்பொறுத்தமான தருணமொன்றில் பகிர்ந்துகொள்ள‌வென‌ சேமிக்கிறேன்.

எனது குறுநாவலை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு தேவியின் கண்மணி ஆசிரியர் குழுவுக்கும், மற்றும் நிர்வாக குழுவுக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவல் மிக அழகாக வந்திருக்கிறது.

பிரபல ஓவியர் மாருதி மிக மிக அழகாக மூன்று சித்திரங்கள் வரைந்திருக்கிறார். குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு சிறுகதைக்கும் அவரே தான் வரைந்திருந்தார். எனது முதல் குறுநாவலுக்கும் அவரே வரைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவ‌லின் அட்டைப் பக்கம் ம‌ற்றும் பின்ப‌க்க‌ங்க‌ளின் பிர‌திக‌ள் இங்கே.குறுநாவல் வாசிக்க கிடைத்த நண்பர்கள், உங்கள் கருத்துக்களை என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Tuesday, 26 March 2013

வாழ வைக்கும் காதல் - சிறுகதை


வாழ வைக்கும் காதல் - சிறுகதை

மழை வரும் போல இருந்தது.

எதிர்வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு நான் காத்திருக்க‌, க‌த‌வு திற‌ந்த‌ மஞ்சு சினேகமாய் புன்னகைத்தாள். தூக்கத்திலிருந்து எழுந்தவள் போலிருந்தாள். இந்த நேரம் வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது எனக்கு. ஆயினும், மக‌ள் வினோதாவின் உறக்கம் வேறெதையும் விட முக்கியம். அதனால், வேறு வழியில்லை என்பதாய் என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

மஞ்சு இளம் வயதுப்பெண். ஆனால், கணவனை ஒரு விபத்தில் பரிகொடுத்தவ‌ள். அப்பா உயிருடன் இல்லை. அம்மாவும் மகளுமாக ஆண் துணையில்லாத வீடு. என் மனைவி வந்தனா தான் மஞ்சுவுடன் கதைப்பது, ஒன்றாக ஷாப்பிங் செல்வது எல்லாம். பெண்களுக்கு பெண்கள் ஒத்து. நான் மஞ்சுவிடம் இலக்கியம் தொடர்பாக மட்டும் பேசியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன் நாவல்கள் பகிர்ந்திருக்கிறேன். மற்றதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. மஞ்சுவிற்கு என் மகள் வினோதா என்றால் கொள்ளை பிரியம்.

'ஹலோ' என்றாள் மஞ்சு.

'ஹலோ.. அம்மா இல்லையா?'

'ம்ம்.. இருக்காங்க.. தூங்குறாங்க‌..'

'மழை வர மாதிரி இருக்கு. உங்க‌ வீட்டு ஜ‌ன்ன‌லை கொஞ்ச‌ம் சாத்திக்கிட்டீங்க‌ன்னா காத்துல‌ ஆடாம‌ இருக்கும். வினோதா தூங்குறா. அதான்...' என்றுவிட்டு நான் இழுக்க‌

'ஓ.. ஓகே...சாத்திடறேன்.. அப்புற‌ம்..இந்த வாரம் மலர்ல உங்க வாழவைக்கும் காதல் கவிதை படிச்சேன். சூப்பர்ப்'

'தாங்க்ஸ்'

'பாலகுமாரனோட கல்லூரி பூக்கள் இருந்தா குடுங்களேன்? படிச்சிட்டு தரேன்'.

'ஓ..ஷ்யூர்.. வந்தனாகிட்ட குடுத்துவிடறேன்'

'ஓகே... வந்தனா வரலயா'

'இ... இல்ல.. இன்னும் இல்ல... அம்மா எழுந்த‌தும் நான் வந்தேன்னு சொல்லுங்க'.

'சரி' என்றாள் ம‌ஞ்சு.

நான் என் வீட்டுக்க‌த‌வை சன்னமாய்ச் சாத்துகையில் வினோதா இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தது நிம்மதியாய் இருந்தது. எதிர்வீட்டின் பக்கவாட்டு உள்அறைக்கும் என் வீட்டின் படுக்கையறைக்கும் ஒரே சுவர். அவர்கள் வீட்டு ஜன்னல் வேகமாக சாத்தினால் அதன் அதிர்வுகள் படுக்கையறையிலும் கேட்கும். ஆதலால் மழை நாட்களில் அவர்கள் வீட்டின் ஜன்னலை மூடச்சொல்லிவிடுவது வழக்கம். பொதுவாய் வந்தனா செய்வாள். இப்போது அவள் வீட்டில் இல்லை. நான் படுக்கையை நெருங்கி வினோதா அருகில் அமர்ந்துகொண்டேன்.

நல்ல வேளை, வினோதா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகளுக்கென வேயப்பட்ட அழகான தென்னைமரக்கீற்றின் நரம்புகளை முறுக்கிச்செய்த கூடையில், மெத்துமெத்தென்று இளவம் பஞ்சால் ஆன குட்டிப் படுக்கையில். படுக்கையறையின் ஸ்ப்லிட் ஏசி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. கிழக்குக்கடற்கரைச்சாலையில் வாகனங்கள் விரையும் சத்தம் கேட்காதவாறு வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் முழுக்க ஏற்றப்பட்டிருப்பதால், ஒன்றரை வயது வினோதா சத்தத்தில் எழுந்திருக்க வாய்ப்பில்லை. அவளின் தூக்கத்தின் மீதான அக்கறையில் வழமைபோல அலைபேசியை ஏற்கனவே ஊமையாக்கிவிட்டாயிற்று. வீட்டில் தனிமையில் இருந்தாலே வழக்கமாய்க் கேட்கும் இளையராஜாவையும், மஞ்சு வீட்டு ஜன்னலையும் சேர்த்து. பசியில் எழுந்துவிட்டால் கொடுக்க இளஞ்சூட்டில் பால் ஃப்ளாஸ்கில் தயாராக இருக்கிறது. வந்தனாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்துக்கொண்டேன். வழமைபோல‌ ஒரு குறுந்தகவல் கூட இல்லை. மணி மாலை ஐந்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் இது. தேதி 20ஐ தாண்டிவிட்டது. அலுவலகத்தில் வேலையாம். ஐ.டி. கம்பெனியில் அதுவும் சர்வீஸ் கம்பெனியில் டிசம்பர் மாதத்தில் 20 தேதிக்கு மேல் வேலை என்பது கொஞ்சம் பொருத்தமில்லாத வாக்கியமாகத் தோன்றுவதை எத்தனை முயன்றும் சகிக்க முடியவில்லை. நான்கிற்கெல்லாம், வீட்டுக்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். ஒரு மணி நேரம் ஆகிறது. எந்தத் தகவலும் இல்லை. வெறுப்பாக இருந்தது எனக்கு.

சாய்ந்து உட்கார செளகர்யமின்றி படுக்கையில் உட்கார்ந்தே இருந்ததில் முதுகில் லேசாக‌ வ‌லிக்க‌த்துவ‌ங்கியிருந்த‌து. புத்தகம் ஏதேனும் படிக்கலாமென்று தோன்றிய நொடிகளில் போர்ஹேவை சற்று முன் தான் முடித்ததினால், எழுத்துக்களுக்காய் கண்கள் ரொம்பவே உறுத்தின. டிவியோ ரேடியோவோ வினோதாவின் தூக்கத்தைக் கலைக்கக்கூடியது என்பதால் அவைகளை நெருங்க மனமிருக்கவில்லை.

இதுவே, வ‌ந்த‌னாவென்றால், உடனுக்குடன் தொலைக்காட்சியை உயிரூட்டியிருப்பாள். குழ‌ந்தையின் தூக்க‌த்திற்கென அவள் மென‌க்கெட்டு க‌வ‌னித்த‌தேயில்லை. அது ஏனென்பது நிச்சயமில்லாது இருந்தது. பேரண்டத்தின் எல்லைக்கப்பால் என்ன என்பது போல.

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நேரங்கடந்து வரும் எல்லா கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமை உட்பட‌ சர்வ நிச்சயமாக அவள் உறங்கியிருப்பாள். திருமணத்தில் இணையப்போகும் வாழ் நாள் பந்தத்திற்கெனதான வந்தனாவின் அர்ப்பணிப்பு பற்றி கேட்கவே வேண்டாம். மதியம் சமைத்த சாதம் சப்பென்று இருக்கும். சாம்பாரா, ரசமா நிச்சயமில்லாது இருக்கும். தொட்டுக்கொள்ள பெரும்பாலும் அப்பளம் தான், அதுவும் நைந்தமேனிக்கு. பிறந்த நாளுக்கு அவள் எடுத்துத்தரும் எந்த சட்டைகளையும் நண்பர் முன்னால் அணியும் வகைக்கு இருக்காது. இத்தனைக்கும் அவளின் ஆடைகள் அத்தனை நேர்த்தியாய் இருக்கும். வீட்டு வேலைக்காரியின் முதல் பிரசவத்துக்கு சென்றவள் குழந்தைக்கு வைத்த பெயர் அகிலா. இரவில் அலுவல் என்றபடி நேரங்கடத்தி வரும் சில தினங்களில் அவள் அணிந்த சுடிதாரில் கடற்கரை மண். டாய்லட், வாஷ்பேசின் கழுவிப் பராமரிப்பதில்லை. வீட்டிற்குச் செலவு செய்கையில் தன் காசென்பதாய் பேதம் பார்க்கிறாள். நான் வாசிக்க வாங்கி வைத்திருக்கும் நாவல்களில், கவிதைத் தொகுப்புகளின் பக்கங்களில் அலட்சியமாய் அவளின் ஷாப்பிங் கிறுக்கல்கள். சமயத்தில் மின்சாரம் தடைபட்ட சமயங்களில் சில புத்தகங்கள் மீது தான் மெழுகேற்றி நிறுத்தியிருப்பாள். தற்செயலாக அவளின் பெட்டியை வேறெதற்கோ நோண்டியதில் அவள் கல்லூரி நாட்களில் எடுத்த புகைப்பட ஆல்பத்தில் சில புகைப்படங்கள் கிழிக்கப்பட்ட நிலையில். அதுபற்றி கேட்டால் மழுப்பல் பதில்கள். என் எச்சில் பட்ட எதையும் கையால்கூடத் தொடுவதில்லை. அவளின் சிறுவயதுத்தோழிகள் வீட்டுக்கு வந்தால் மொட்டை மாடியில் நின்று கிசுகிசுவென மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பாள். நான் வந்துவிட்டால் நிறம் மாறிவிடும் அந்தப் பேச்சுக்கள். இப்படி எத்தனையோ. சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு வேளை, அவளின் முதல் காதலனுக்கு பிறந்தவள் வினோதா என்றிருந்தால், அவள், வினோதா மீது அக்கறை காட்டியிருப்பாளோ? சாதம் சூடாக இருந்திருக்குமா? சாம்பார் ருசியாக இருந்திருக்குமோ? ராவைக்கு காத்திருந்து கதவு திறந்து கட்டிப்பிடித்திருப்பாளோ? வாஷ்பேசின், டாய்லெட் அவளாகவே பராமரித்திருப்பாளோ? யாருக்குத் தெரியும்? வந்தனாவையே கடந்து மூன்று வருடங்களாய்த்தான் தெரியும். வாழ்க்கையில் இருபது ‍ இருபத்தியைந்து வருடங்கள் கூடப்பிறந்து வளர்ந்த‌ பிறப்புக்களைக்கூட கடைசி வரை புரிந்துகொள்ள முடியாமல் போகையில் இருபத்தியைந்து வயதில் ஒட்டும் பெண்ணை நிச்சயதார்த்த தேதிக்கும், திருமணதேதிக்குமான ஆறு மாத காலத்தில் பொது வாழ்வின் அசெளகர்யங்களினூடே எத்தனை புரிந்துகொள்ள முடியும்?.

எனக்கு ஆயாசமாய் இருந்தது. மெல்ல எழுந்து மூடிய கண்ணாடி ஜன்னலுக்கருகில் நின்றேன். ஜன்னலினூடே மழை நீர் ஓவியமென ஓடுவதை வெறித்தேன். அந்த அழகான நீரோவியத்தை ரசிக்க விடாமல் எதுவோ என் நினைவுகளை அலைகழிக்கத் துவங்கியிருந்தது.

திருமணத்திற்கு முன்பு அவள் காதலித்திருக்கிறாள் என்கிற தகவல் இப்போது நினைவுக்கு வந்து ஹிம்சித்தது. அவன் அவளுடன் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தவனாம். பெயர் அகிலன். அவளே சொல்லியிருக்கிறாள், திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகான ஏதோ ஒரு நாளில். திருமணத்திற்கு முன்பே இதை அவ‌ள் என்னிடம் சொல்லியிருந்திருக்கலாமென்று அடிக்கடித் தோன்றும். காதலிப்பது அவளின் உரிமை தான். ஆயினும், எனக்கான துணை எப்படி இருக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்திருக்க வேண்டுமே ஒழிய, அது ஒரு திணிப்பாக இருந்திருக்கக் கூடாதல்லவா? திருமணத்திற்குப் பிறகு அவள் ஒரு மருமகளாக நிச்சயம் இருந்திருக்கிறாள். மணமான பெண்ணாக இருந்திருக்கிறாள். மனைவியாக, எனக்குக் காதலியாக அவள் எந்த க்ஷணமும் இருந்ததாக நினைவில் இல்லை. எங்கள் படுக்கை கூட ஒரு வகையில் ஒரு மனனம் செய்யப்பட்ட அர்த்தங்கள் இல்லாத வாய்ப்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செய்கைகள். விளைவு வினோதா.

உலகில் தோன்றும் எல்லா காதல்களுக்குப் பின்னாலும் ஒரு அபத்தம் நிச்சயம்.

எத்தனை கஷ்டங்கள் இந்த வாழ்க்கைக்காக?

17 வயது வரை படிப்பு, படிப்பு, படிப்பு மட்டுமே. கணக்கு, அறிவியல், வேதியியல், புவியியல், உயிரியல். மொத்த மதிப்பெண்களில் ஐந்து குறைந்தாலும் அப்பாவின் பெல்ட் பேசும். இனிய வாழ்க்கைக்கான அதிகபட்ச கவனங்களில் கோடை விடுமுறைகளில் கூட வகுப்புகள். பகலில் பள்ளிக்கூடம். மாலையில் ட்யூஷன். நாளொன்றுக்கு நான்கு பேப்பர்கள் வீதம் வாரத்திற்கு 28 தேர்வுகள். மதிப்பெண் பட்டியல்கள். பிறகு நுழைவுத்தேர்வுகள். ஃப்ரீ சீட் வாங்குவதற்கு நாயாய் உழைப்பு. ஐந்து மார்க் குறைந்ததில் தவறிப்போன ஃப்ரீ சீட்டால், ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே பாங்க் லோனில் பொறியியல் படிப்பு. லோன் தொடர்ச்சியாக வாங்க, பொதுத் தேர்வையும் மிகுத்துவிடும் செமஸ்டர் தேர்வுகள். அது முடிந்தால் வேலை, கேம்பஸ் ப்ளேஸ்மென்ட். வேலை கிடைத்ததும் தொழில் கற்றுக்கொள்ள இரவும் பகலும் வேலை வேலை வேலை. ஐந்து வருட பொருளாதார வளர்ச்சியை ஒரே வருடத்தில் அண்டிவிட அயல் நாட்டிற்கு சென்றும் வேலை. இத்தனையும் எதற்கு? அழகான மனைவி, அளவான குடும்பம், இவர்களை எந்தக் குறையுமின்றி போதரவாக கவுரதையாக வைத்து பார்த்துக் கொள்ள சொந்தமாக வீடு. பெண்டாட்டியும் பிள்ளையும் வெய்யிலில் அலையாமல், வேனலில் வேகாமல், மழையில் ஒண்டாமல் வெளியே போக வர வசதியாக கார். இத்தனைக்கும் தேவை பணம். அதை ஈட்டுவதிலேயே கழியும் இளமைக்காலம். இப்படியான ஒருவனுக்கு இவள் எந்த வகையில் பொருத்தம்? இதில் அபத்தமில்லாத பகுதி அவள் மட்டும்தான்.

உலகின் எல்லா காதல்களுக்கு பின்னேயும் ஒரு ஆதார அபத்தம் நிச்சயம். வந்தனா தன் காதலை சின்னமாய் பாதுகாக்கிறாள்தான். அப்படியானால் அபத்தமானது...?

நானா!?

என் காத்திருப்பா? என் வாழ்க்கையா? 25 வருட காத்திருப்பு ஒரு அபத்தமா? இத்தனை காலமும், இத்தனை கவனமும், இத்தனை கவலையும், இத்தனை அக்கறையும், இத்தனை கண்ணீரும், இத்தனை உழைப்பும், இத்தனை காத்திருப்பும் வெறும் அபத்தமா?

காதல் என்பது, ஒரு அழகான ரோஜாவின் இயல்பைக் கொண்டிருக்கிறது. அதை விரும்பாதவர் இல்லை. அது எல்லோருக்கும் பிடித்தம். எல்லோருக்கும் அது வேண்டும். ஆனால், அது எத்தனை பாரபட்சமானது? அழகான செவ்விதழ்களை ஒரு பக்கம் தந்துவிட்டு மறுபக்கம் கூர் முள்ளால் குத்துகிறது அந்த ரோஜா. பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம் என்பது போல‌ காதல் அழகானதுதான். ஆனால் அதன் பின்னுள்ள இந்த அபத்தம் எத்தனை வலிகள் நிறைந்தது? இவ்வளவுதானா காதல் என்பது? இதற்குப்பின் என்ன? இதற்கு பின் ஒன்றுமில்லை. கண்டும் காணாமல் போய் விடவேண்டும். கவனியாதது போல் திரும்பிட வேண்டும். மேலுக்கு சிரிக்க வேண்டும். எப்போதும் போல் உழைத்துக் கொட்ட வேண்டும். என் காலம் முடிந்தது. இனிமேல் வினோதாவின் காலம் தான். இனி வினோதா துவங்குவாள். இதுவரை நடந்த அத்துனையும் மறுபடி நடக்கலாம். வினோதாவும் காதலிக்கலாம். அந்தக் காதல் ஒரு அழகான ரோஜாவைப்போல, அழகியலை ஒரு புறமும், அபத்தத்தை இன்னொரு புறமும் தரலாம். பள்ளிப்பாடம், தேர்வுகள், மதிப்பெண்கள், கல்லூரி, காதல், முறிவு, மீள்வு, வாழ்க்கைச் சக்கரம் என எல்லாமும் மீண்டும் வரலாம். எங்கோ? யாருக்கோ? .

இந்த வலிக்காகவா இத்தனை போராடினேன்? இத்தனை எதிர் நீச்சல் போட்டேன்? இதுதான் என் வாழ்க்கையின் அருந்தவப்பயனா? இதோடு என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா? என் வாழ்க்கை என்ன அடுத்தவர் பயன்படுத்திவிட்டு வீசி எரியப்படும் டிஷ்யூ காகிதமா?

என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அயர்ச்சி ஒட்டிக்கொண்டது. நுரையீரல் அகண்டு கெட்டித்தது. நீண்ட பெருமூச்சு இயலாமையை உணர்த்தியது.

வேண்டாம். எனக்கு எதற்கு இந்த வலி? நான் இந்த வலிக்கு தகுதியானவன் இல்லை. என் தகுதிகள் இதையும் விட அதிகம். யாரோ, எவரோ பொருத்தமின்றி, முதிர்ச்சியின்றி, லயிப்பின்றி, அர்ப்பணிப்பின்றி செய்த தவறுகளுக்கு எனக்கு எதற்கு இந்த வலி? எப்படியாகினும் அர்ப்பணிப்புகளும், முதிர்வுகளும், பொருத்தங்களும் இந்த நவீன யுகத்திற்கு தேவைப்படப் போவதில்லை. இதுவரை தேவைப்படாதது, இனிமேல் எதற்கு?

காலம், கவனம், கவலை, அக்கறை, கண்ணீர், உழைப்பு, காத்திருப்பு இவை அனைத்தும் அபத்தத்திற்கு இட்டுச்செல்வதில்லை. ஆனால், இவை அனைத்தும் அதில் போய் முடிந்தால், அது முடிவு அல்ல. அது முற்றுப்புள்ளி அல்ல. அது ஒரு கால் புள்ளி. சரியாகத் தொடரப்படவேண்டிய நிர்பந்தத்தைச் சொல்லும் ஒரு கால் புள்ளி. இதற்கு மேலும் வாக்கியம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதான கால் புள்ளி. சுவாரஸ்யம் அடுத்துவரும் வரியில் என்பதான கால் புள்ளி.

நான் தீர்மானித்துக்கொண்டேன். வினோதா இன்னமும் தூங்கிக்கொண்டுதானிருந்தாள். வெளியில் இப்போது மழை நின்றிருந்தது. மெல்ல நடந்து கதவு திறந்து எதிர்வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். மஞ்சு கதவு திறந்தாள். புன்னகைத்தாள்.

'ஜன்னல் கதவ அப்போவே சாத்திட்டேனே' என்றாள்.

'இல்ல.. நான் அதுக்கு வரல... இது..வந்து... ஏதோ தோணிச்சு... ரெண்டு வரி கிறுக்கினேன்'

'அப்படியா!.. சொல்லுங்களேன்.. கேட்போம்'

'சந்தனக்காடு முழுமைக்கும் எப்படி உன் ஒருத்தியின் வாசம் மட்டுமே!' என்றுவிட்டு நிறுத்தினேன். அவள் கண்களை ஊடுறுவினேன்.

'வாவ்.. ' என்றவள் என் பார்வை அம்புகளை தடுக்க திராணியின்றி திணறினாள். மெல்ல என் பார்வைகளை உள்வாங்கினாள். பின், என்னைப் பின் தொடர்ந்தாள்.

நான் திரும்பி, என் வீட்டுக்கதவை சாத்துகையில் மஞ்சு இன்னமும் வாசலிலேயே நின்றபடி என்னை பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நான் முடிவு செய்துகொண்டேன். எனக்கானவள், இலக்கியம் விரும்பும், கவிதைகள் விரும்பும், விவாதங்கள் விரும்பும், இனிமையான இந்த மஞ்சுதான். வந்தனா வந்தவுடன் அவளுடன் பேசவேண்டும். வந்தனா எனக்குச் செய்ததை அவளுக்கு திருப்பிச் செய்ய எனக்கு விருப்பமில்லை.

வந்தனாவை விவாகரத்திற்கு சம்மதிக்க வைக்கவேண்டும். விவாகரத்து பெற்றவுடன் மஞ்சுவை திருமணம் செய்ய வேண்டும். என் வாழ்க்கை மஞ்சுவுடன் எனில் இன்னும் அர்த்தப்படும் என்று தோன்றியது. அவள் விதவை பெண். அவளுக்கும் இன்னொரு வாழ்க்கை தேவை. என்னைப்போலவே கவிதைகள் விரும்பும், கதைகள் விரும்பும், இலக்கியம் விரும்பும் அறிவிப்பூர்வமான என் வகையான பெண். வந்தனாவை விடவும் மஞ்சுவால் என்னை இன்னும் துள்ளியமாகப் புரிந்துகொள்ள முடியும். வந்தனாவிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டால் நானும் மனைவியை இழந்தவன் தான். மஞ்சுவும் நானும் வினோதாவுமாய் இணையும் காதல் எங்களை வாழவைக்கும் என்று தோன்றியது. அது வாழவைக்கும் காதல்.

நான் படுக்கையறையை அண்டி வினோதாவைப் பார்த்தேன். உப்பிய கன்னங்களுக்கிடையில் சுழித்த உதட்டுடன் வினோதா இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள். நான் வினோதா அருகில் அமர்ந்தேன். என்றைக்கும் இல்லாத திருநாளாய், எனக்குள் உற்சாகம் புதுப்பிரவாகமென ஊற்றெடுக்கத்துவங்கியது. தூங்கிக்கொண்டிருக்கும் வினோதாவையும், விழித்திருக்கும் என்னையன்றியும் வேறொருவரும் அல்லாத அந்த இருட்டு அறையில் நான் சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வேண்டுவது கிடைக்கப்போகிறது. நான் தேடியது கிடைக்கப்போகிறது. இனி வரப்போகும் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்குமென்று தோன்றியது.

- ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6209)

Saturday, 23 March 2013

தேவியின் கண்மணியில் எனது சமூக நாவல் வெளியீடு


அறிவிப்பு!!!

அன்பின் நண்பர்களுக்கு,

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில் நான் எழுதிய சமூக நாவல், வரும் 27 மார்ச் 2013 அன்று வெளியாக இருக்கும் தேவியின் கண்மணி இதழில், வெளியாக இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடனும், பேருவகையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது என்னுடைய முதல் நாவல்.

நண்பர்கள், எனது இந்த நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Monday, 11 March 2013

இடைவெளி - சிறுகதை


இடைவெளி - சிறுகதை


அண்ணா நகரின் 17வது அவென்யூவில் உள்ள ஓர் அழகான அபார்ட்மென்டின் முதல் தளத்திலிருக்கும் என் வீட்டின் உள் அறையின் ஜன்னல் மட்டும் கம்பிகள், கதவுகள், தாழ்ப்பாள் உட்பட‌ எப்போதும் துடைத்து பளிச்சென்று இருக்கும். வீட்டின் பிற பகுதிகளில் லேசாக தூசு இருந்தாலும், என்னால் சகிய இயலும். ஆனால், இந்த ஜன்னல் மட்டும் என் பார்வைக்கு துப்புரவாக இருக்கவேண்டும்.

ஜன்னல் வழியே, அமைதியான தெரு, ஒரு நடமாடும் இஸ்தரிக் கடை, காலையிலும், மாலையிலும் நாய்களை வாக்கிங் அழைத்துச் சென்றபடி மனிதர்கள், சில சமயம் பெண்கள், பெரும்பாலும் மத்திம வயதுப் பெண்கள், யார் வீட்டிலேனும் பார்ட்டி, மாலை மங்கிய நேரத்தில் தெரு முக்கில் நிழலடைந்த இடத்தில் அருகருகே நின்று பேசிக்கொள்ளும் காதலர்கள், தவறாக நுழைந்துவிட்டு அமைதியான தெருவில் யாரிடம் விலாசம் விசாரிக்கலாமென அலைபாயும் இளைஞர்கள், அருகருகே அமர்ந்தபடி சும்மா தெருக்களை ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டே இருக்கும் இளம்பெண்கள், சாலையோரமாய் உள்ளிருக்கும் எதுவும் வெளியே தெரியாவண்ணம் எல்லா கண்ணாடிகளும் ஏற்றப்பட்டு லேசாய் அதிர்ந்தபடி உருமிக்கொண்டிருக்கும் ஸ்விஃப்ட் யாரேனும் அண்ட சட்டெனக் கிளம்பிவிடுவது, தூரத்து அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கும் கல்லூரி பெண்கள் ஜன்னல் கம்பிகளினூடே கைகளை தொங்கவிட்டு சிகரெட் பிடிப்பது, இப்படி எத்தனையோ பார்க்கக் கிடைப்பதில் என் போன்ற அறுபது வயதுக்காரனுக்கு வயோதிகம் சுவாரஸ்யப்படுவது இந்த ஒரு ஜன்னலால்தான் என்பதால் வரும் அதிகபட்ச கரிசனம் காரணமாக அந்த ஜன்னலை மட்டும் மேலதிக கவனத்துடன் நான் பராமரிப்பது வழக்கம்.

இவையெல்லாம் கூட குமுதம், குங்குமம் இதழ்களில் வரும் ஒரு பக்க கதைகள் போல தினப்படி பொழுதுபோக்கிற்கு பயன்பட்டாலும், நான் இந்த ஜன்னல் மூலமாக‌ அவதானிக்கும் சில தொடர்கதைகளும் உண்டு. அதில் ஒன்று, சாலை தாண்டி எதிர் அப்பார்ட்மென்டின், முதல் தளத்திலிருக்கும் குடும்பம். அப்பா, அம்மா, பெண், பிள்ளை என்று நால்வர் கொண்ட சிறிய குடும்பம். குடும்பத்தலைவர், ஏதோ மோட்டார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவரின் மனைவி, குடும்பத்தலைவி. அந்த வீட்டில் ஒர் இளம்பெண். வயது 18 இருக்கலாம். கல்லூரி செல்கிறாள். அந்தப் பிள்ளை காலேஜ் நுழையவிருக்கிறான். மத்திய தரத்திற்கும் மேலான குடும்பம் அது. இவர்களுக்கு சொந்தமாக இரண்டு பைக்குகளும், ஒரு காரும் கூட உள்ளது.

இவர்களை சிரமேற்கொண்டு நான் தேர்ந்தெடுக்கவில்லை. தொடரவில்லை. என் ஜன்னலைத் திறந்தாலே இவர்கள் வீட்டின் பால்கனி, மற்றும் ஜன்னல் தான் தெரியும். ஆதலால், கண்டுகொள்ளாமல் போக வாய்ப்பில்லை. அதன் காரணத்தினாலேயே, இக்குடும்பத்தை, வேறு வக்கின்றி, கவனிக்கத் துவங்கியதில், ஏனைய மூவரையும் விட, அந்த இளம்பெண், தான் அதிக‌ம் வ‌சீக‌ரித்தாள்.

என் வீட்டின் கீழ் வீட்டில் ஒரு பைய‌ன் இருக்கிறான். பெயர் ரவி. அவ‌ள் வ‌ய‌துதான். அவ‌னும் க‌ல்லூரியில் ப‌யில்கிறான். நான் மிக நன்றாக அறிவேன் அவனை. ஒரு முறை என்னுடன், இரத்த தானம் செய்ய வந்திருக்கிறான். வயோதிகத்தில் சுகர் காரணமாக என்னை புறந்தள்ளிவிட்டு அவனிடம் இரத்தம் எடுத்துக்கொண்டது மருத்துவமனை. பி பாஸிட்டிவ் வகை இரத்தம். ஆல்கஹால் சுத்தமாக இல்லை. அன்று தான் கண்டுகொண்டேன், தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்று அவன் முன்பெப்போதோ சொன்னது உண்மையென்று. ஆனால், அவ‌னுட‌ன் அவ‌ள் பேசி நான் க‌வ‌னித்த‌தே இல்லை. இத்த‌னைக்கும், அவன் ஒரு ஓவிய‌ன். ந‌ன்றாக‌ ஓவிய‌ம் வ‌ரைவான். இர‌ண்டொரு நிக‌ழ்ச்சிக‌ள் கூட‌ செய்திருக்கிறான். த‌ன்னையொத்த‌ க‌ல்விய‌றிவுட‌ன் பொறியிய‌ல் ப‌டிக்கிற‌, க‌லைக‌ளில் ஆர்வ‌ம் கொள்கிற‌, க்ரியேட்டிவிட்டு இருக்கிற‌ ஒரு ஆணுட‌ன் அவ‌ள் ஏன் ப‌ழ‌க‌வில்லை என்ப‌து என‌க்கு புரியாத‌ புதிர். இத்த‌னைக்கும், அவ‌ளை, ஆங்காங்கே தெருக்க‌ளிலும், ஸ்டேஷ‌ன‌ரி ஷாப்க‌ளிலும், பேக்க‌ரிக‌ளிலும், பெட்ரோல் ப‌ங்க‌ளிலும் வேலை செய்யும் பைய‌ன்க‌ளுட‌ன் க‌தைய‌டிப்ப‌தை நானே பார்த்திருக்கிறேன். இவ‌ர்க‌ளை விட‌, தன்னைப் போலவே பொறியிய‌ல் வ‌ரை நீந்தி வ‌ந்த‌ ஒருவ‌ன் எந்த‌வ‌கையில் த‌குதி குறைவு என்ப‌து புரிய‌வில்லை. பொறியியல் படிக்கிறானென்பதற்காகவோ, நிகழ்ச்சிகள் செய்கிறானென்பதற்காகவோ ஒருவ‌னை உத்த‌ம‌ன் என்று சொல்ல‌ முடியாதுதான். ஆனால், பொறியிய‌ல் ப‌டித்த‌ப‌டியே க‌லையையும் வெற்றிக‌ர‌மாக‌ செய்ப‌வ‌னுக்கு எந்த‌ வ‌கையில் ஒரு பெண்ணுட‌ன் அடிப்படை நட்பு கொண்டு பேச‌ த‌குதியில்லை என்ப‌து புரிய‌வில்லை. இவனைவிட, ஸ்டேஷனரி ஷாப் பையன்கள், பெட்ரோல் ஊற்றும் பையன்களிடம் ஒரு பொறியியல் படிக்கும் பெண்ணுக்கு நட்பில் பகிர்ந்துகொள்ள என்ன இருக்குமென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளது சகோதரன் பொறியியல் படிக்க இருக்கிறான். அந்தப் பொறியியல் படிப்பிற்குள் நுழைவதற்கு தேவையான உழைப்பை நிச்சயம் தன் சகோதரி கண் பார்க்கத்தான் அவன் மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிக் கூடவா அந்த இளம் பெண்ணுக்கு, அந்த உழைப்பை புரிந்து கொள்ள இயலாமல் போகும்? அவளானால், கீழ் வீட்டு ரவியிடம் ஏதும் பேசுவதில்லை. ஆனால், கடைக்காரப் பையன்களுடனும், பெட்ரோல் பங்க் பையன்களுடனும் பேசுகிறாள். அப்படியானால், பொறியியல் படிப்பு என்பது உண்மையில் என்ன விதமான படிப்பு என்ற கேள்வி எழுகிறது எனக்குள். அந்தப் படிப்பில் உண்மையில் ஒன்றுமே இல்லையா?

இதில் எனக்கு எந்த துணிபாற்றலும் துணிதலும் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும், அந்த துணிபாற்றல்களில் எந்த தர்க்கமும் தெரியவில்லை. ஆனால், இதற்கு இவளை மட்டும் குறை சொல்ல முடியுமா என்பதும் தெரியவில்லை.

அன்றொரு நாள் , நான் பார்க்க, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்த தாயும் மகளும், ஆட்டோவில் அமர்ந்தபடியே சில்லரைக்கு காத்திருக்கையில், ஆட்டோ டிரைவரை பொருட்படுத்தாது, அவள் தாய், சற்று முறுவலித்து கவட்டையில் கைவிட்டு சொறிய, டிரைவர் அதை ஒரு குறுகுறுப்புடன் ஓரக்கண்ணால் பார்ப்பதை, அந்தப் பெண் பார்த்துக்கொண்டிருந்தது. என் 60 வயது அனுபவத்தில் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று நான் மிகவும் குழம்பிப்போன மனிதர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.

பிறிதொரு நாள், அந்த வீட்டின் இள‌ம் பெண், தன் அறைக்கண்ணாடியின் எதிரே நின்றவாறு, அணிந்திருந்த சுடிதாரைக் கழற்றினாள். அறை ஜன்னல் திறந்திருக்கிறதைப் பற்றியோ, அதன் மூலம் தன்னை எவரேனும் பார்க்க நேரலாம் என்பது பற்றியோ அவள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. திறந்திருக்கும் ஜன்னல் வழியே எவரெனும் தன்னை பார்க்கக்கூடும் என்ற பிரஞை கூடவா ஒர் இளம்பெண்ணுக்கு இல்லாமல் இருக்கும்!. மெதுவாக, மிக மெதுவாக, ஆடைகளை களைதல் என்கிற அந்த நிர்வாணப்படுத்திக் கொள்ளுதலை, அத்தனை மெதுவாக, அனுபவித்துச் செய்ய, ஒரு பெண் தன்னைத் தானே எத்தனைக்கு ரசித்திருக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி நான் அயர்ந்தே போனேன். உள்ளாடைகள் வரை கழற்றிவிட்டு, பாத்ரூமிற்குள் போய்விட்டாள்.

எனக்கு ஒன்று புரிந்தது. இன்றைய இளம் தலைமுறையினர், தான் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றி எந்த விதமான அக்கறைகளும் இல்லாமல், தானே தனக்குள்ளாகவே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைத் தாங்கும் இந்த நிலம் பற்றியோ, அதனுள் இயங்கும் ஏனைய ஜீவராசிகள் பற்றியோ , சூழ்ந்திருக்கும் சமூகம் பற்றியோ, தான் பங்குபெற நேரும் பல்வேறு இயக்கங்கள் பற்றியோ யாதொரு பிரஞையும் இல்லாது இருக்கிறார்கள் போலும். இடம் அல்லது சூழல் என்பதை தேவைப்படும்போது தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்ளும் ஒரு உடை போல அவர்கள் நடத்த முயல்வது போல் தோன்றுகிறது. அவ்வாறு நடத்தத் தேவையான அளவுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஜென்மப் பிரயத்தனப்பட்டு சுருக்கிக் கொள்வது போல் தோன்றுகிறது.

அவள் தான் இப்படியென்றால், அவளின் சகோதரன் வேறு தினுசு. அவனும், அவளும் பேசி நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் இந்தக் குடும்பம் என் வீட்டெதிரில் சுமாராக இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவனை நான் பார்க்கையிலெல்லாம், ஏதோ ஒரு புசுபுசு நாய்க்குட்டியை பாசமுடன் தடவித் தருபவன் போல, அவன் பைக்கை துடைத்துக் கொண்டிருப்பான். எனக்கென்னவோ, அவனுக்கு வீடென்ற ஒன்று தேவையே இல்லையென்று தோன்றும். டீ, காபி குடிப்பது, நண்பர்களுடன் ஃபோனில் கதைப்பது, சும்மா வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, மொபைலில் விளையாடுவது, நொருக்குத் தீனி தின்பது இப்படி ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அந்த பைக்கின் மீதே கழிக்கும் அவனுக்கு வீடு என்ற ஒன்று எதற்கு?.

வாலிபப் பருவத்தின் துவக்கத்தில், பைக், அவனது அடையாளமாகிப் போவதை இந்தக் காலத்துப் பையன்கள் ஒரு வித போதையுடன் விரும்பி ஏற்கிறார்கள். பெருமிதத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள். பைக் ஒன்று போதும் இளமைக்கு என்று முடிவு செய்கிறார்கள். ராஷ் டிரைவிங்கில் மாட்டிக்கொள்வதை பதக்கமெனப் பேணுகிறார்கள். பைக் வைத்திருப்பதே இளமையின் நோக்கமென்கிற தோற்றம் தருகிறார்கள். மறைமுகமாக, எதிர்பாலினத்திடம் இவ்வளவுதானே நீ எதிர்பார்த்தாய் என்கிறார்கள். மறுக்கவேண்டிய கடமையை மறந்துவிட்டு மறு தரப்பு, அங்கீகரித்துவிடுகிறது. பிற்பாடு, இதைவிட அதிகம் தேவையெனும்போது, அப்படியொன்றும் இல்லாது போகையில், அதே எதிர்பாலினம் ஏமாறுகிறது. ஆண் வர்க்கத்தை இளக்காரமாய் நினைத்துவிடுகிறது. மரியாதை தர மறுக்கிறது. ' நீ என்ன பெரிய இவனா?' என்கிறது. தானும் அதற்கொரு காரணம் என்பதை உணர மறுக்கிறது. இது, இக்காலத்தில் பலருக்கு புரிவதுகூட இல்லை. எவருக்கும் இந்தக் கோணத்தில் ஒரு சிறு பிரஞை கூட இல்லை. இதை என்னவென்று சொல்வது?

அந்த பைக்கை அவன் பார்த்துக்கொள்ளும் விதமும், அதைக் கையாளும் விதத்தையும் பார்த்தால், அந்த பைக் ஏதோ அவனின் சமீபக் காதலி போல் தோன்றும். பஜாஜின் பல்சர் வகை பைக் என்று தெரிகிறது. என்பத்தி ஐந்தாயிரம் விலை உள்ள பைக், லிட்டருக்கு முப்பத்தி ஐந்து கிலோமீட்டருக்கு மேல் கொடுக்காதென்று சொல்கிறார்கள். கல்லூரிக்கு செல்ல இருக்கும் இவனுக்கு இப்படி ஒரு பைக். அதை ஓட்ட பெட்ரோலுக்கு காசு யார் தருகிறார்கள்? வசதி இருக்கிறதென்றால், சொந்தக் காசில் வாங்க வேண்டிய கடமை இல்லாது போகுமா என்ன? வசதி இருக்கிறதென்றால், அப்பன் காசில் பவிசு காட்ட வேண்டுமா என்ன? பதின்ம வயதில் பைக், அப்பனின் சம்பாத்தியத்தையும், பிள்ளைப் பாசத்தையும் வேண்டுமானால் சொல்லலாம். இக்காலத்தில் அனேகம் பிள்ளைகளின் பொறியியலும் கூட அப்பன் காசுதான் என்பதை ஒவ்வொரு பாங்க் மானேஜரும் அறிவார். இதில், பையனின் முயற்சி என்று என்ன இருக்கிறதென்று புரியவில்லை. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள் என்று புரியவில்லை. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றன?

ஒன்று மட்டும் புரிகிறது. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாளோ, அதற்குத்தான் இந்த சமூகத்தை அவள் பழக்கப்படுத்துகிறாள். இப்ப‌டி ப‌ழ‌க்க‌ப்ப‌டும் ச‌மூக‌த்திட‌ன் என்ன‌ வித‌மான‌ த‌ர‌த்தை எதிர்பார்க்க‌ இய‌லும்? இன்றைய இளைஞர்களில் அனேகம் பேர், இலக்கற்று இருக்கிறார்கள். க‌ல்லூரியென்றால் பையன்கள் பைக்கிற்கு அடித்துக்கொள்கிறார்கள். கல்லூரி முடித்தால் ஐ.டி வேலைக்கு அடித்துக்கொள்கிறார்கள். காசு சேர்ந்தவுடன் காலாட்டுகிறார்கள். அதற்கு பிறகு என்ன என்று தெரியவில்லை? இலக்கற்று போய்விடுகிறார்கள். எட்ட நிற்கும் வரை பவிசு காட்டி பெண்ணை அண்டுகிறார்கள். நாலு சுவற்றுக்குள், உண்மைகளை மறைக்க முடியாமல் அசடு வழிகிறார்கள். அல்லது, உடல் வலு காட்டி வாயை அடைக்க முயன்று தோற்கிறார்கள். பணத்தால் அடிக்கிறார்கள். ஏனெனில் அது ஒன்று தான் கையிருப்பு.

இந்தக் கால இளைஞர்கள் நிஜ வாழ்க்கையில், கலை, இலக்கியம், ஓவியம், நடனம் என்று கொடி நாட்டியவர்கள் யாவரும், தங்கள் கல்லூரி நாட்களில் மேடை ஏறாதவர்களே என்று நினைக்கும் படி செய்து விடுகிறார்க‌ள். கல்லூரி மேடைகள் ஒரு ஆரம்பம் தான். ஒரு ஊக்குவிப்பு மட்டும் தான். போலிகளின் வித்து அதில் கிடைக்கும் லேசான போதையிலேயே தீர்ந்து விடுகிறது. உண்மையான திறமை உள்ளவனுக்கு, உண்மையான கலைத் தாகம் உள்ளவனுக்கு, உண்மையான நடனக்காரனுக்கு, உண்மையான திறமைசாலிக்கு கல்லூரி மேடைகளுக்குப் அப்பால் தான் நிஜ மேடைகள் துவங்குகின்றன. உண்மையான போட்டி, அவ்வகையான மேடைகளில் தான் துவங்குகிறது. அம்மேடைகளே உண்மையான மேடைகள். ஆனால், அது இங்கே எவருக்கும் புரிந்தது போல் தோன்றவில்லை. புரிந்தவர்களும் பணத்தால் அடித்தே தனக்கான மேடையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புளித்த முதலாளித்துவங்களில் மேடைகளும் வெகு எளிதாக சாத்தியப்பட்டு விடுகின்றன.

ஒரு குடும்பத்தின் போக்கை அதன் தலைமையைக் கொண்டு தீர்மானித்துவிடலாம்.

இவர்களைக் கொண்ட குடும்பத்தின் தலைவர்களை நான், நடு இரவில், வழி தவறி, பசித்தழும் ஓர் நாய்க்குட்டியின் கேவலோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தாயோ, உணவோ வேறெங்கோ இருக்க, யாருமற்ற சாலையில், தனக்கே இன்னதென்று தெரியாத தேவைகளுடன் செய்வதறியாது அங்குமிங்கும் இயந்திரத்தனமாய் அலையும் அந்த நாய்க்குட்டி, இவர்களைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கேனும் ஐந்தறிவு, வாயில்லா ஜீவன் என்கிற சலுகையெல்லாம் இருக்கிறது. மனிதர்கள், அதுவும் வயதில் பெரியவர்கள் அப்படியில்லையே. அவனின் அப்பா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஏதேனும் ஒரு ஃபைலில் மூழுகியிருப்பார். ஃபைலில் தான் நாள் முழுக்க கழிக்க வேண்டுமெனில் இவர் ஏன் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூட எனக்கு அவ்வப்போது தோன்றும். பதின்ம வயதின் பையனை புரிந்துகொள்ள இயலவில்லை. அவனின் மனப்போக்கு புரியவில்லை. அவ்வயதை கடந்தவனுக்கு அவ்வயதின் பிள்ளை புரியவில்லை. அதே வீட்டில் ஜன்னலைத் திறந்துவைத்தபடி, உடை மாற்றும் பெண்ணைத் தெரியவில்லை. வாடகையும், கார் இன்ஷூரன்சும் போக எத்தனை சேமிப்பு என்பது மட்டுமே ஓர் குடும்பத் தலைவனின் கண்களுக்கு தெரிந்தால் போதுமா?

நானும் தான் அலுவலகம் சென்று வேலை செய்திருக்கிறேன். ஆனால் இப்படியல்ல. எச்.வி.எஃப்ஃபில், கூடுதலாக வேலை செய்தால் ஓ.டி எடுத்துக்கொள்ளலாம் என்ற போதும் வீட்டிற்கு ஓடி வந்தவன் நான். கூடுதலாக பணம் சேர்த்து வங்கியில் வைத்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம். ஆனால் இழந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா என்ன? இவரானால், வாழ்க்கை என்பதே சம்பாதிக்க என்று திரிவதாய்த் தோன்றுகிறது. இவர் எத்தனை சம்பாதிக்க ஓடுகிறாரோ, அத்தனைக்கத்தனை அவரின் மகனும் மகளும் திசை மாறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இவர் எப்போதுதான் உணர்ந்துகொள்வார் என்று எண்ணி வியந்திருக்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்கு என்று ஒரு நாளேனும் அவர் அருகே சென்று உரக்க கத்த வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இவர்கள் யாருக்கும் சமூக அமைப்பு தெரிந்திருப்பது போல் தோன்றவில்லை. த‌ன் பாத்திரம் நிரம்பினால் போதும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் சுயத்திற்குள்ளாகவே மூழ்கிப் போய்விடுவதாகத் தோன்றுகிறது. தான், தன் குடும்பம் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழ்ந்து பழக விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

சில சமயங்களில், 'படித்தவர்' என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்று நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களே. தாய், தந்தை, மகள் மூவரும் பொறியியல் படித்த/படிக்கிறவர்கள். பிள்ளை படிக்க இருக்கிறான். பொறியியல் படித்த ஒரு முழுக் குடும்பமே இப்படியென்றால், கல்வியை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இந்தியா போன்ற, இரண்டாவது மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட நாட்டின் தரம் என்ன என்று நினைத்தால் என் காலினடியில் தரை நழுவுவது போல் உணர்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாமும் தானே வந்துவிடுமா? வராவிட்டால் என்ன செய்வது? இவர்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்? யாரைக் குறை சொல்வது? எங்கு பிழையாகி போனது? நினைக்க நினைக்க, முடிவில்லாத பிரபஞ்சம் போல கேள்விகள் விஸ்தரித்துக்கொண்டே போகிறது. நம் பாதைக்கு எட்டாது நிற்ப்பவர்களை அண்டுவதான முயற்சிகள் நமது பயணங்களைத் தாமதமாக்க கூடுவதாக, ரத்து செய்யவும் கூடுவதாக இருக்கையில் வ‌லுக்கும் மெல்லிய‌ இடைவெளியை எதைக் கொண்டு நிர‌ப்புவ‌து? இந்த‌ச் சிறுக‌தை, நிர‌ப்பிடுமா?

முற்றும்.

- ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6197).