என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 29 August 2022

இரண்டு கவிதைகளும், விமர்சன பார்வைகளும்

கவிதை மீதான விமர்சன பார்வைகள்:

விமர்சனத்தை ஒலிவடிவில் கேட்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

https://on.soundcloud.com/Vf5z



சேர விதியற்ற சுதிகள் - கவிதை

எதிர் வீட்டு யுவதி
பயன்படுத்திய நாப்கின்னை
வீதியில் வீசினாள்...
தெரு நாய் ஒன்று நடுத்தெருவில்
அசிங்கம் செய்தது...
காய்கறி விற்பவன்
அழுகிய காய்களை
கரிய ஒழுங்கையில் வீசிச்சென்றான்....
வழிப்போக்கன் புகை பிடித்துவிட்டு
எஞ்சிய சிகரெட்டைத்
தெருவோரம் வீசினான்...
கடலை சாப்பிட்டுவிட்டு
காகிதத்தை நடுச்சாலையில்
வீசினான் வேறொருவன்...
பக்கத்துவீட்டு மணமாகாதவன்
பிரியாணியை உண்டுமுடித்துவிட்டு
பொட்டலத்தை சுருட்டி எறிந்தான்...
நாளைய இந்தியன் ஒருவன்
காரணமின்றி அணிச்சை செயலாய்க்
காரி உமிழ்ந்தான்...
இறுதியில்,
இந்த எல்லா பிழைகளும்
சுதி சேர்ந்துவிடாதவாறு
பேய் மழை ஒன்று
அடித்துப் பெய்தது....
- ராம்பிரசாத்
*****************************




திமிர் பிடித்த கவிதை - கவிதை


அந்த கவிதைக்கு
அத்தனை திமிர்...
நான் இழுத்ததற்கெல்லாம்
அது வந்துவிடவில்லை...
நானும் சளைத்தவனல்ல...
அதன் போக்கில்
நானும்
துவக்கத்தில் சென்றிருக்கவில்லை...
என்னையன்றி
அது
பிற எவரிடத்திலும்
செல்லவுமில்லை...
பாவம்!!
நானறியாத அதுவும்
அது அறியாத நானும்
ஒரு நாள் சந்தித்தோம்...
இறுதியில்,
என் இரு நூறு பக்க புத்தகத்தில்
அதனால் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்
நிரப்ப முடிந்ததை
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை....
பல்லாயிரம் கோடி பேரில்
என் ஒருவன் மூலம்
உருப்பெற நேர்ந்த
அதற்கும் கிட்டத்தட்ட
அவ்விதமே தோன்றியிருக்கக்கூடும்...
- ராம்பிரசாத்

Friday 19 August 2022

No means no

 No means No


இது நடந்து சுமார் நான்கைந்து வருடங்கள் இருக்கலாம்.  Atlanta Botanical Garden சென்றிருந்தேன்.  Instagramல் பகிர ஏகத்துக்கு நல்ல காட்சிகள் கிட்டும் ஸ்திதி இருந்தது. புகைப்படம் எடுக்க வேண்டுமே. சுத்திப் பார்த்ததில் ஒரு தென்னிந்தியர் நின்றிருந்தார். பார்க்க தமிழ் ஆள் போல் இருக்கவே "தமிழா?" என்றேன் புன்னகைத்துவிட்டு "ஆம்" என்றார். அப்படியே பேசத்துவங்கிவிட்டோம். 




என்னதான் சிரித்து சிரித்துப் பேசினாலும், முகத்தில் ஏதோவொரு வாட்டம். என்னவென்று எப்படிக் கேட்பது என்று தோன்றி நான் எதுவும் கேட்கவில்லை. இதற்குள் மனிதர் முக நூலில் என்னைப் பார்த்துவிட்டார். எழுத்தாளர் என்று தெரிந்ததும் 'ஜி நல்ல வக்கீல் இருந்தா சொல்லுங்களேன்" என்றார். என்னவென்று விசாரித்ததில் தான் விவரம் தெரிந்தது. 

வயது 38. 35ஆக இருக்கையில் வீட்டில் பெண் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண் பிடித்துப் போக பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். பிற்பாடு பெண்ணிடம் ஃபோனில் பேச முயன்றிருக்கிறார். 5 நிமிடம் தான் பேச அனுமதித்தார்களாம். அந்த  5 நிமிடத்திலுமே பெண் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட இப்படிக் கேட்டால் இப்படி பதில் சொல் என்கிற ரீதியில். இவர் இருந்தது சென்னையில், அந்த பெண் இருந்தது வேலூரில். வாரத்திற்கு ஆறு நாள் வேலையில், இவரால் வேலூர் சென்று பார்க்கவும் முடியவில்லை. அதற்கும் கூட அனுமதிக்கவில்லை. 

'அடடா... எப்படி வளர்த்திருக்காய்ங்க....  குடும்பம்னா இவுங்க தான் குடும்பம்...' என்கிற ரீதியில் புலகாங்கிதப்பட்டிருக்கிறார்.

திருமண  நாள் வந்து, திருமணமும் முடிந்திருக்கிறது. எதுவுமே பேசாமல் முதலிரவு நடந்திருக்கிறது. திருமணம் முடிந்தும் மாப்பிள்ளை வீட்டில் சடங்கு சம்பிரதாயம் என்று ஒரு வாரத்திற்கு தங்கியிருந்திருக்கிறார்கள். பெண் வீட்டார் சென்றுவிட்ட பிறகும் புது மணப்பெண் அதிகம் பேசாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். கேட்ட கேள்விக்கு பதில், பிறகு அடுக்களை, சமையல், உறக்கம் என்று. மூன்று மாதங்கள் ஆகியிருந்திருக்கிறது. 

மறுபடி 'அடடா... எப்படி வளர்த்திருக்காய்ங்க....  குடும்பம்னா இவுங்க தான் குடும்பம்...' என்கிற ரீதியில் புலகாங்கிதப்பட்டிருக்கிறார். சோதனையாக, இவர் அணுகிய, ஆலோசனை கேட்ட எல்லோருமே அந்தப் பெண் ஏன் அதிகம் பேசாமல் மெளனம் காக்கிறார் என்பதற்கு அவரவர்க்கு தெரிந்த பெண்ணிய காரணங்களையே தான் அடுக்கியிருக்கிறார்கள். ஒருவர் கூட, 'அவங்க எதையோ மறைக்கிறாங்க' என்று ஒரு வார்த்தை கூட இவருக்குச் சொல்லியிருக்கவில்லை. 

பெண் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் குடும்ப மருத்துவர் என்று வேலூருக்கே அழைத்திருக்கிறார். என்ன ஏதென்று விசாரித்ததற்கு 'பெண்கள் விஷயம்... ஒங்களுக்கு புரியாது' என்று பதில் வந்திருக்கிறது. இவரும் விட்டிருக்கிறார். குடும்ப மருத்துவருக்குத்தானே மருத்துவ history தெரியும் என்று கார் வைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்.  இருவரையும் பரிசோதித்துவிட்டு இவரது ஆண்மையில் பிரச்சனை என்று மருத்துவர் சொல்லிவிட, இதை எப்படி வெளியில் சொல்வது என்று பம்மியிருக்கிறார். அதற்கு அவர்களே தீர்வும் தருவதாகச் சொல்ல, ஐந்து லட்சம் செலவு செய்து செயற்கை கருத்தரிப்பு மையத்தில் அந்தப் பெண்ணுக்கு கரு உருவாக்கம் நடந்திருக்கிறது. 

இந்தப் புள்ளி வரையில், யாருமே இந்தப் பெண்ணைத் தவறென்று சொல்லப்போவதில்லை. எல்லாம் சரியாகத்தானே நடந்திருக்கிறது என்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்தப் பையனைக் குறையாகப் பார்ப்பார்கள். தன் மீது குறையை வைத்துக்கொண்டு இவனெல்லாம் எதற்கு திருமணம் செய்கிறான் என்று கூட சொல்லக்கூடும். குழந்தையின்மைக்கு ஆண்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று வேறொரு திசையில் கூட வாதம் செய்யலாம்.

நாளடைவில், பிரசவத்தின் போது, தான் அந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே மன நலம் சரியில்லாமல்  இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.  கூடுமானவரை வாய் மூடி இருக்கச்சொல்லி திருமணம் செய்து வைத்திருந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்றால், மாப்பிள்ளை லாக் செய்ய முடியாது என்று அஞ்சி, குழந்தை பெற வைத்திருக்கிறார்கள். அதைத் திணிக்க, குடும்ப மருத்துவர் என்று சொல்லி தங்கள் இடத்துக்கு வரவழைத்து, மாப்பிள்ளைக்கு உடலில் கோளாறு என்று தந்திரமாக நம்ப வைத்திருக்கிறார்கள். 

தன் ஆண்மை குறித்து கேள்வி வந்துவிட்ட பிறகும் இவர் மனைவியை, அவரது குடும்பத்தை அதீதத்திற்கு நம்பியிருந்திருக்கிறார். அது பிழையாகிவிட்டது. 

இதையெல்லாம் பிரச்சனை என்று வந்துவிட்ட பிறகு, இவர் , மருத்துவமனையை அணுகி தன்னைத்தானே சோதித்துத் தெரிந்துகொண்டது.  விவரம் தெரிந்து இவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார். இப்போது விவாகரத்து தர சம்மதமில்லை என்று இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கோ வயது 38 ஆகிவிட்டது. திருமணம் ஏற்கனவே முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்னொரு திருமணம் செய்ய வாய்ப்பில்லை. 

அப்படியே செய்தாலும் 'ஆணாதிக்க வாதி' என்ற அடையாளத்துடன் தான் இவர் எஞ்சிய வாழ்வை வாழ வேண்டும். 

ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் பதிவு இல்லை இது. இப்படி நடந்துவிட்டதாலேயே இவரை நல்லவர் என்று நியாயப்படுத்தும் பதிவும் இல்லை இது.  நான் யாரையுமே ஜட்ஜ் செய்யவில்லை. 

தவறு செய்பவர்கள் பெண்களிலும் உண்டு. அந்தப் பெண்ணின் சூழல் என்ன என்று நுணுகி நுணுகி பார்த்து நம்மைத் தயார்படுத்திக்கொள்ள முயலும் நமக்கு, ஒரு ஆணின் சூழல் என்ன என்று நுணுகி நுணுகிப் பார்த்து அதற்கும் தயார் செய்ய வேண்டும் என்பது புரிவதில்லை. 





என்ன நடந்திருந்தால் இவர் இதிலிருந்து தப்பித்திருக்கல்லாம் என்று யோசிப்பதில் தான் நமக்கு ஒரு பாடம் கிடைக்க முடியும். 

ஆண்மையில் பிரச்சனை என்று கேள்வி வந்ததுமே தன் பங்குக்கு ஒரு மருத்துவமனையில் இவரும் சோதித்திருக்கலாம். அதற்குத் தேவை, புதிதாக வந்தவர்களின் பேச்சை நம்பாமல் இருப்பது. எதற்கும் second opinion கேட்பது. ஆனால், second opinion க்கு தேவைப்படும் டெஸ்டுகளின் விலை அதிகமானால், சராசரி வருமானக்காரன் என்ன வங்கியில் கடன் வாங்கியா சோதிக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் மூலம் திருமணம். அதிலேயே துவங்கியிருக்கிறது எல்லாமும். அந்தப் பெண் சரியாகவே பேசவில்லை , கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என்ற இடத்திலேயே, 

'என் கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை...Insufficient data உடன் என்னால் எந்த முடிவுக்கும் வர முடியாது' என்று பின் வாங்கியிருந்தால் பிரச்சனை அதோடு முடிந்திருக்கும். 

ஆனால், அப்போதும் உலகம் "ஒரு பொண்ணு சரியா பேசாததுக்கா வேணாம்னுட்டா.. ரொம்ப ஆணாதிக்கவாதிடா நீ" என்று தான் சொல்லியிருக்கும். அந்தப் பெயரை வாங்கக்கூடாது என்று எண்ணி தான், விவரம் தெரிந்ததாக நடந்து கொள்வதாக நினைத்து பாழும் கிணற்றில் விழுந்திருக்கிறார். என்னைக் கேட்டால், பாழும் கிணற்றில் விழுவதை விடவும், 'ஆணாதிக்கவாதி' என்ற பெயருடன் கடந்து வருவது எத்தனைக்கோ பரவாயில்லை என்பேன்.

சில குற்றங்களின் தன்மை இப்படித்தான். அது தன் போக்கில் இழுக்கும். நாம் இழுத்துப்பிடிக்கும் பட்சத்தில் கொஞ்சம் கெட்ட பெயர் கிடைக்கும். 'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது' என்கிற ரீதியில் அதோடு விலகிவிட வேண்டும். அந்தக் கட்டத்தைத் தாண்டினால், முழுக்க சேற்றில் தான் விழ வேண்டி வரும். 

No means no என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் தான். இன்னும் சொல்லப்போனால், எல்லோருக்கும் தான். நியாயமான கேள்வியை எல்லா இடத்திலும் கேட்கத் தயங்கவே கூடாது. ஆனால், அங்குதான் எல்லா ஏமாற்று வேலைகளும் கூட நடக்கும். அடுத்தவரை ஏய்த்து, இளிச்சவாயனாக்குவதன் மூலமாக மட்டுமே தன் வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் விழக்கூடாதெனில், சரியான கேள்விகளை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் கேட்க வேண்டும். பதில் வர வில்லை என்றால், அதோடு விலகிச் செல்ல நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. 

அதையும் கூட அந்தக் கூட்டம் "ஆணாதிக்கவாதி" என்று தான் அடையாளப்படுத்தும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், எந்தக்கூட்டம் அடுத்தவரை ஏய்த்து மட்டுமே பிழைக்கக்கூடிய கூட்டமோ, அதுதான் இப்படி முதலில் பழி சுமத்தத்துவங்கும்.  

என்னதான் பெண்வழிச் சமூகம், ஆணாதிக்கம் என்றெல்லாம் சமூக விதந்தோதுதல்கள், விழிப்புணர்வுகள் எல்லாம் நம்மைச் சுற்றிப் பரவலாக விதைக்கப்பட்டாலும், 'தனக்குப் பின் தான் தானமும், தர்மமும்'; நள்ளிரவில் நெருஞ்சாலையில் பெண் ஒருத்தி நின்று lift கேட்டால், நாம் வண்டியை நிறுத்தக்கூடாது. இதுதான் இன்றைய உலகம். 

நம்மைக் காவு கொடுத்துத்தான் சமூக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய தேவை யாருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது.  Just ask the right question. அது மடத்தனமான கேள்வியாகக் கூட இருக்கட்டுமே. ஒருக்கால் அந்தப் பெண் உண்மையிலேயே நல்ல பெண்ணாக இருந்தால், மன நிலை சரியில்லாத பெண்ணாக இல்லாமல் இருந்திருந்தால்?

இருந்திருந்தால் என்ன? வேறு ஒருவருக்கு மனைவி ஆகியிருப்பார்.  ஏனென்றால், நிராகரிப்புக்கு அவர் தகுதியானவர் இல்லை அல்லவா... அதே நேரம் அவர் கிடைக்காததால் நீங்களும் நாசமாகப் போய்விடப்போவதில்லை. ஏனெனில், நிராகரிப்புக்கு நீங்களும் தகுதியானவர் இல்லை. அல்லவா? ஆக, சரியான கேள்வியைக் கேட்பதில் யாருமே கெட்டுப்போய்விடப் போவதில்லை. அது தலைகாக்கும் கருவியாக மட்டுமே செயல்படும்.


It's all about DECISION MAKING.

It's strictly about DECISION MAKING. 


அவ்வளவு தான். எதை எப்படி யார் நகர்த்திப்போனாலும், எந்தப் புள்ளியிலும் நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்ற, முழுக்க மூழ்கிவிடுவதிலிருந்து தவிர்க்க, மீண்டும் மேலேறி வர,  நமக்குத் தேவை சரியான முடிவுகள் மட்டுமே. எந்தக் கற்பிதங்களையும் வைத்து அந்தச் சரியான முடிவுகளை எட்டும் வழித்தடங்களை நாம் குழப்பிக்கொண்டுவிடக்கூடாது என்பதைச் சொல்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.

சரியான முடிவுகளின் தொடர்ச்சியையே நாம் , வளர்ச்சி என்கிறோம், மக்களே. தொடர்ந்து வளர வேண்டுமானால், ஒவ்வொரு புள்ளியிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும். அந்த சரியான முடிவுகளின் தொடர்ச்சியே நம்மை, நம் வளர்ச்சியைப் பற்றிப் பேசும்.  எந்த சமூக விதந்தோதுதலுக்காகவும், சரியான முடிவுக்கு இட்டுச்செல்லும் தகவல்களைப் பெறுவதில், சுணக்கம் (compromises) செய்யலாகாது. 

முடிவெடுக்கையில், எந்த சமூக சித்தாந்தங்களையும், விதந்தோதுதல்களையும்  மனதில் இட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். உங்கள் தர்க்கத்திற்கும், அதன் விளைவான முடிவுக்கும் என்ன தகவல்கள் தேவையோ, அவைக் கிடைக்காத பட்சத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.   


No means no... 

Wednesday 17 August 2022

ஹம்ரீ - சிறுகதை - வாசகசாலை

வாசகசாலை இதழில் எனது சிறுகதை 'ஹம்ரீ' வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

https://www.vasagasalai.com/hamri-ram-prasath/




Saturday 6 August 2022

ப்ளூமிங்டன் வாசகர் வட்டம் - Illinois

 Bloomington, Illinois தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ப்ளூமிங்டன் வாசகர் வட்டம் மாதம் இருமுறை இணைய சந்திப்பாக நிகழ்வது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் படி நண்பர் அருண் அழைத்திருந்ததன் பேரில் கலந்து கொண்டிருந்தேன்.  நேரம் கடந்ததே தெரியவில்லை. அருமையான நிகழ்வு. Very insightful participants. 



Thursday 4 August 2022

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022 - எனது சிறுகதை தேர்வு

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022



தமிழ்ச் சிறுகதைகளுக்கான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருதைப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எழுத்தாளர் இரா.முருகன் தலைமையில் நடத்தப்பட்ட ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022ல் எனது சிறுகதையும் தேர்வாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தெரிவு செய்த தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




Monday 1 August 2022

எஞ்ஜாயி எஞ்ஜாமி விவகாரம்

 எஞ்ஜாயி எஞ்ஜாமி விவகாரம்


செய்த வேலைக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் பல சமயங்களில் கிடைக்காமல் போய்விடும். மிக மிகக் குறைந்த பேருக்கே அது நேரத்துக்குக் கிடைத்து கைகொடுத்திருக்கிறது.

அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எத்தனை பெரிய மனஉளைச்சல் என்பதை நான் பற்பல தருணங்களில் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இன்றிருக்கும் பொருண்மை உலகில், உங்கள் அங்கீகாரம் என்பது நீங்கள் சார்ந்திருக்கும் குழுவையும், அதன் சமூக இடத்தையும், அதற்குக் கிடைக்கும் ஆதரவையும் பொருத்தே அமைகிறது என்பது சோகமான உண்மை. பலருக்கு, அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்களால், அவற்றின் சமூக இடத்தால், அங்கீகாரம் வெகு விரைவிலேயே கூடக் கிடைத்தும் விடுகிறது.

'கடமையைச்செய், வெளிச்சம் நிச்சயம்' என்பதையெல்லாம் சொல்ல தந்திரம் போதும். உற்சாகமூட்டுகிறேன் பேர்வழி என்று கதையளக்க விரும்பவில்லை.

உண்மை என்னவென்றால், அங்கீகாரம் பலருக்குக் கடைசி வரையிலும் கூடக் கிடைக்காது என்பதுதான். இதைச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இதுதான் உண்மை. இன்றைக்குப் புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களை விடவும் பல மடங்கு திறன் படைத்தோர், இருளிலேயே முங்கி மறைந்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

அங்கீகாரத்திற்கென வேலை செய்வது வீண் தான். உள்ளார்ந்த அர்ப்பணிப்பு இருந்தால், செய்யும் வேலையின் மீது தீராக்காதல் இருந்தால், அந்த அர்ப்பணிப்புக்காக, அந்தக் காதலுக்காகத் தொடர்ந்து செய்யுங்கள் என்பதே என் ஆலோசனை. ஏனெனில், இவ்விதத்தில் மிக மிகக் குறைந்தபட்சமாக, ஆதம திருப்தியேனும் மிஞ்சும்.