என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 17 October 2009

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3


ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா.

இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து, புடுபுடுவென புல்லட் சத்தம் காதைக்கிழிக்க பவனி வரும் ஒரு உதவாக்கரை. ஏழ்மை காரணமாக புவனா அதே ஊரில் ஒரு கருவாடு, இரால் பண்ணையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். என்ன‌தான் இரால் ப‌ண்ணையில் வேலை என்றாலும் புவ‌னாவிற்கு ம‌ன‌சு ரொம்ப‌ பெருசு. த‌ன்னால் முடிந்த‌வரை, யாரென்றும் பாராமல் தைரியமாய் எல்லோர்க்கும் உத‌வுவாள். அதே ஊரில் பைத்திய‌மாய்த் திரிந்து கொண்டிருந்த மஞ்சு என்ற ஒரு பெண்ணை ஒரு ம‌ழை நாளில் சில‌ பொறுக்கிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்பார்க்க‌, அதைத் த‌ந்திர‌மாய்த் த‌டுத்து அவ‌ளை அன்று முத‌ல் பாதுகாப்பாய் த‌ன் வீட்டிலேயே த‌ங்க‌ வைத்த‌வ‌ள். என்ன‌தான் ம‌ஞ்சுவிற்கு பைத்திய‌ம் தெளிந்தாலும், ஊர் ந‌ம்ப‌ ம‌றுக்க‌ த‌ன் ச‌கோத‌ரியாய் அவ‌ளைத் த‌ன் ஒத்தாசைக்கு என்று கார‌ண‌ம் சொல்லித் த‌ன்னுட‌னேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். வீடுவீடாய் ட்ரை சைக்கிளில் சென்று இரால், க‌ருவாடு விற்ப‌துதான் வேலை. ம‌ஞ்சுவும் புவ‌னாவும் மாறி மாறி செய்வார்க‌ள்.


உதவி கேட்க ஆயிரம் பேர் இருந்தும் ஓரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி இவனிடம் பண உதவி கேட்டு, திருப்பிதர முடியாமல் போகவே, அந்த பணத்திற்கு ஈடாக நன்றாய் வளர்ந்து ஆளாகியிருந்த, அழகு மயில் புவனாவை 'வைத்துக்கொள்வதாக' வைரவன் கட்டாயப்படுத்த, அதனால் வந்த மாரடைப்பில் விழுந்தவர்தான், இதோ வீடே துக்கவீடாய் மாறியிருந்தது.
அந்த மோசமான சூழ் நிலையிலும், கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சியின்றி புவ‌னாவை த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தான். கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி அருணா என்கிற பெண்ணை தூது அனுப்பி, அதிலும் தன் அனுபவத்தை காட்டியிருந்தான். புவனாவிற்கு சகலமும் புரிந்துபோனது. அவன் நிறுத்தப்போவதில்லை. அவன் ஒரு மிருகம். மிருகத்திடம் மனசாட்சி எதிர்பார்க்க முடியாது.

தூதாய் வந்த பெண்ணிற்கு இதில் நல்ல அனுபவம் போல. பக்குவமாய் புரிய வைத்தாள். புவனா ஒரு முடிவிற்கு வந்தாள். அங்கீகரிப்பாய் புன்னகை செய்தாள். அதில் பல அர்த்தங்கள் உள்ளடக்கினாள். கடைக்குச்சென்று மீடியம் சைஸ் சட்டை ஒன்றை வாங்கி தூது வந்தவளிடம் தந்தனுப்பினாள். யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்படி வைரவனிடம் சொல்லச்சொல்லி அனுப்பினாள்.


அருணா புன்சிரிப்பாய் அந்த ச‌ட்டையை வைர‌வ‌னிட‌ம் த‌ர‌, அவ‌னுக்கு புரிந்துவிட்ட‌து. த‌ன் ஆஜானுபாகு உட‌ல் இளைக்க‌வேண்டும், இள‌ந்தோற்ற‌ம் வேண்டுமென்று அவ‌ள் குறிப்பால் உண‌ர்த்திய‌து புரிந்துகொண்டு உட‌ல் இளைத்தான். ப‌டித்த‌ பெண் அல்ல‌வா? விருப்ப‌த்திலும், அதை வெளிக்காட்டுவ‌திலும் தெரிந்த‌ முதிர்ச்சி க‌ண்டு அதிச‌யித்தாள் அருணா. அவ‌ளும் ஒரு கால‌த்தில் விப‌சாரியாய் இருந்த‌வ‌ள் தான். இருந்தாலும் இத்துணை நெளிவு சுளிவு தெரிந்த‌வ‌ளாய் அவ‌ள் இருக்க‌வில்லை. இந்த கால‌த்துப்பெண்க‌ள் மிக‌வும் தெளிவுதான்.

என்ன‌ இருந்தாலும் ஒரு பாத‌க‌னுக்கு ப‌டுக்கைய‌றைப்பாவையாக‌ இருக்க‌ப்போவ‌தை நினைத்து அவள் வெதும்பியிருக்க‌வேண்டும். புவ‌னா இளைத்துக்கொண்டே போனாள். உட‌ல் மெலுந்து கொண்டே போன‌து. ஆனால், புவ‌னா அதைப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட்ட‌தாக‌த் தெரிய‌வில்லை.

வைர‌வ‌னைத் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ வேண்டாமென்றாள். தானே ஒரு நாள் அவ‌ன் வீட்டுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள். ஒரே வீட்டில் இருந்த‌தினால், ம‌ஞ்சுவுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து புரியாம‌ல் இல்லை. புவ‌னா, அவ‌ளுக்கு தெய்வ‌ம். புவ‌னாதான் என்ன‌ செய்வாள் ஒற்றை ஆளாய், அதுவும் பெண்ணாய். அவ‌ளைச்சொல்லிக் குற்ற‌மில்லை. எல்லாம் வைர‌வ‌னால்தான். இதுபோல் எத்த‌னை பெண்க‌ளை சீர‌ழித்திருப்பான். த‌ன்னைக் காப்பாற்றிய‌ புவ‌னாவை காப்பாற்ற‌ வேண்டும். அவ‌ளை ம‌ட்டும‌ல்ல‌, எல்லா பெண்க‌ளையும். அத‌ற்கு வைர‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும். யாருக்கும் தெரியாமல் தான் கொன்றுவிட்டால், போலீஸ் க‌ண் த‌ன் மீது விழாது. ஏனெனில் தான் ஒரு பைத்திய‌ம் என்ப‌தாக‌த்தான் ஊரில் எல்லோருக்கும் நினைப்பு. அப்ப‌டியே தெரிந்தாலும் பைத்திய‌த்திற்க்குதான் ம‌ருத்துவ‌ சிகிச்சை த‌ருவார்க‌ள். இந்த ப‌ண‌ப்பைத்திய‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் பைத்திய‌க்கார‌ ஆஸ்ப‌த்திரி எவ்வ‌ள‌வோ மேல். ம‌ஞ்சு வ‌ஞ்ச‌ம் கொண்டாள். அவ‌னைக் கொல்ல‌ ச‌ம‌ய‌ம் பார்த்தாள். நாள் குறித்தாள்.

இர‌ண்டு நாள், க‌ழித்து ஒரு மாலை வேளையில், ம‌ஞ்சு த‌ன் இடுப்பில் கூர்மையான‌ க‌த்தியை ம‌றைத்து வைத்து வைர‌வ‌ன் வீட்டுக்கு ட்ரை சைக்கிளில் இரால், க‌ருவாடு இற‌க்க‌ சென்றாள். செல்லும் வ‌ழியெங்கும் ச‌ன‌ம் த‌ள்ளிப்போன‌து நாற்ற‌த்துக்கு ப‌ய‌ந்து. வாலிப‌ர்க‌ள் பைத்திய‌த்திற்கு ப‌ய‌ந்து ஒதுங்கினார்க‌ள். ச‌த்த‌மாய் பாட்டுப்பாடி, த‌லையை இப்ப‌டியும் அப்ப‌டியுமாய் அசைத்து, சிரித்த‌வாறே ம‌ஞ்சு வைர‌வ‌ன் வீட்டை நெருங்கினாள். கொல்லைப்புற‌த்தில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு, இடுப்பில் ம‌றைத்த‌ க‌த்தியுட‌ன் வைர‌வ‌னை தேடினாள். ஹால், வ‌ராண்டா, ரூம், சாமிய‌றை, ச‌மைய‌ற்க‌ட்டு, தோட்ட‌ம் என் எங்கு தேடியும் வைர‌வ‌ன் கிடைக்க‌வில்லை.

எங்கு போயிருப்பான்? ச்சே, இவ‌னுக்கெல்லாம் நேர‌ம் ச‌ரியாய் அமைகிற‌தே? த‌ப்பிவிட்டானே.. மாட்டாம‌லா போவான். நாளையோ நாளை ம‌று நாளோ நிச்சயம் மாட்டுவான். புவ‌னாவை க‌ள‌ங்க‌ப்ப‌ட‌ விட‌க்கூடாது. அத‌ற்குள் அவ‌னை கொன்றுவிட‌லாம். நாளையே கொன்றுவிட‌லாம் என்று முடிவு செய்து வ‌ண்டியை திருப்பினாள், க‌டைக்கு. க‌டைதாண்டி ஒரு குப்பைமேட்டை ஒட்டிய‌ வாய்க்காலில் விற்ற‌து போக‌ மீதியைக் கொட்டிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

வாய்க்காலை ஒட்டி வ‌ண்டி நின்ற‌தும் இராலும், கருவாடு மூட்டையும் மெல்ல அசைந்தது கண்டு மஞ்சு துணுக்குற்றாள். நொடிகள் செல்ல செல்ல பலமாக அசைந்தது. சற்று நேரத்தில் இராலை, க‌ருவாடைக் க‌லைத்துக்கொண்டு புவ‌னா இற‌ங்குவ‌தைக்க‌ண்டு ம‌ஞ்சு அதிர்ச்சிய‌டைந்தாள். வ‌ண்டியில் வைர‌வ‌னின் உயிர‌ற்ற‌ உட‌ல் க‌ருவாடுக‌ளுக்கு ம‌த்தியில் தெரிந்த‌து. ‌புவ‌னா, வைர‌வ‌னின் பிரேத‌த்தோடு ஒரு பெரிய‌ க‌ல்லைக் க‌ட்டி சாக்க‌டையில் த‌ள்ளினாள். கையோடு வைத்திருந்த கொடிய விஷம் நிறைந்த குப்பியை சாக்கடையில் வீசினாள்.‌ பின், கடைக்கு வந்து தண்ணீர் தெளித்து தன் காது மடல்களை மிகக்கவனமாக சோப்பு போட்டு கழுவினாள்.

ம‌ஞ்சுவுக்கு புரிந்துவிட்ட‌து. தான் வைர‌வ‌னைக் கொல்ல‌, அவன் வீடு நோக்கி ட்ரைசைக்கிளில் சென்ற‌போதே புவ‌னா ட்ரைசைக்கிளில் தான் இருந்திருக்கிறாள். அவ‌ள் உட‌ல் மெலிந்து போயிருந்த‌தால் வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. மஞ்சு வீட்டினுள் வைரவனைத் தேடிக்கொண்டிருந்தபோது, புவ‌னா வைர‌வ‌னை அவன் படுக்கையறையில் ச‌ந்தித்திருக்க‌ வேண்டும். புவனாவை நெருங்கிய வைரவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக்கொண்டே அவள் காது மடல்களை பொங்கி வந்த காமத்தில் கடித்திருக்கவேண்டும். விஷம் தடவப்பட்ட காதுமடல்களிலிருந்த‌ கொடிய விஷம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். வைரவனின் உயிரற்ற உடலை புவனா ட்ரைசைக்கிளில் கருவாட்டு மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து தானும் ஒளிந்திருக்கவேண்டும். வைரவன் ஏற்கனவே மெலிந்திருந்ததால், வித்தியாசமாய் தெரிந்திருக்கவில்லை.


இப்போது புரிந்தது மஞ்சுவிற்கு, புவனா வைரவனை ஏன் இளைக்கச் சொன்னாள் என்று.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@gmail.com)

Sunday 4 October 2009

படுக்கையறைக் கொலை - ௨ - கீற்று

படுக்கையறைக் கொலை - 2
http://www.keetru.com/index.php/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/575--2.html

பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப்பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக்கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்ப‌டி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிப‌தி. இந்த‌ வீடும் அந்த‌ சொத்தில் அட‌க்க‌ம்.
வீட்டில் யாரும் இல்லை. யாரும் வ‌ருவ‌த‌ற்க்குள் காரிய‌த்தை முடிக்க‌வேண்டும். இதோ, இந்த‌ ஸ்க்ரூவைத் தள‌ர்த்தி,ஆன் செய்த‌ 10 நிமிட‌ங்களுக்குள் விழுந்துவிடுமாறு செட் செய்துவிட‌வேண்டும். ம‌ணி இப்போது 1. மதியம் 2 ம‌ணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வ‌ந்துவிடுவாள். மதியமானால் சாப்பிட்ட‌தும் ஒரு குட்டித்தூக்க‌ம் போடுவ‌து அவ‌ள் வ‌ழ‌க்க‌ம். வ‌ந்த‌தும் சாப்பிட்டுவிட்டு ஃபேன் ஆன் செய்து ப‌டுத்துவிடுவாள்.

ஸ்க்ரூ லூசாகிவிட்ட‌ ஃபேன், அடுத்த‌ 10 நொடிக‌ளுக்குள் சாந்தினியின் மேல் விழும். அதிக‌ ப‌லுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்த‌தும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இற‌ந்துவிடுவாள். போன வாரம் தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.சாந்தினி பெட்ரூமில் அவள் இற‌ந்தால், ப‌ல‌ன‌டைய‌ப்போவ‌து அவ‌ள் க‌ண‌வ‌ன் ராக‌வ். ஏனெனில் அவ‌ளின் 50 கோடி சொத்து. மேலும் அது சாந்தினியின் படுக்கையறை. அதில் சகல உரிமை உள்ளவன் ராகவ் தானே. அத‌னால் போலீஸின் முத‌ல் ச‌ந்தேக‌ம் ராக‌வ் மீது தான் விழும். ராக‌வ் தான் கொலையாளி என்ப‌த‌ற்கு இவைக‌ளே கார‌ண‌ங்க‌ளாகிவிடும். அவ‌ன் ஜெயிலுக்கு சென்ற‌தும் கார்டிய‌ன் என்கிற‌ பெய‌ரில் சொத்தை அனுப‌விக்க‌லாம்.

எல்லாம் செய்தாகிவிட்ட‌து. இனி அவ‌ள் வ‌ர‌ வேண்டிய‌து தான். ஃபேன் போட‌வேண்டிய‌து தான். சாக‌வேண்டிய‌துதான். ஆட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்டை ஒநாயைப்போல் காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார் ச‌த்த‌ம் கேட்க‌வே, அவ‌ள் வ‌ரும் நேர‌ம், பேச்சுக்கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌வாறு தூங்குவ‌து போல் பாசாங்கு செய்ய‌லானான்.

அவ‌ள் உள்ளே வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து. தொட‌ர்ந்து பாத்ரூமில் த‌ண்ணீர் ச‌ல‌ச‌ல‌ப்பும், கிச்ச‌னில் பாத்திர‌ங்கள் உருளும் ச‌த்த‌மும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவிவிட்டு சாப்பிடுகிறாள். அவ‌ன் எதிர்பார்த்தப‌டியே எல்லாம் ந‌ட‌ப்ப‌தாய் அவ‌னுக்கு உண‌ர்த்தின‌.

சிறிது நேர‌ம் க‌ழித்து, அவ‌ள் பெட்ரூம் க‌த‌வுக‌ள் சாத்த‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. வைத்தியை இன‌ம் புரியாத‌ ஒரு உண‌ர்வு தொற்றிக்கொண்ட‌து. என்ன நடக்குமோ என்கிற ஆர்வ‌மா, ஒரு உயிரை சாக‌டிக்க‌ப்போகிற‌ ப‌த‌ட்ட‌மா தெரிய‌வில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் ம‌ணி அடிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து.

அய்யோ, இந்த‌ நேர‌ம் பார்த்தா டெலிபோன் அடிக்க‌ணும். ச்சே..

டெலிபோன் அழைப்பின் ம‌றுமுனையில், ராக‌வ் இட‌து கையில் இருந்த‌ மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட்லைனை அழைத்த‌ப‌டி, வ‌ல‌து கையில் இன்னொரு ஃபோனால் ச்ந்த்ருவுக்கு க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தான். ச‌ந்த்ரு, த‌ன் காதுக‌ளில் மாட்டியிருந்த‌ வ‌ய‌ர்ல‌ஸ் சாத‌ன‌த்தில் கேட்டுக்கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறிவைத்து காத்திருந்தான்.
'ச‌ந்த்ரு, க‌ன்ஃப‌ர்ம்ட். அவ‌ சிவ‌ப்பு க‌ல‌ர்ல‌ சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவ தான். கால் வந்தா அவ தான் எடுப்பா. டெலிஃபோன‌ எடுத்த‌தும் போட்ரு'.

ரிசீவ‌ரை ம‌றுமுனையில் அவ‌ள் எடுக்க‌ காத்துக்கொண்டே ச‌ந்த்ருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்ப‌து சாந்தினியும் அவ‌ள் மாமாவும். இன்னொருத்த‌ர் வீட்டில் விருந்தாளியாய் த‌ங்கியிருப்ப‌தால், சாந்தினி இருக்க‌, அவ‌ர் ஃபோன் எடுக்க‌ மாட்டார். சாந்தினி தான் எடுப்பாள். சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுத‌லில் கைதேர்ந்த‌வ‌ர் என்ப‌து எல்லோருக்கும் தெரியும். அவ‌ர் கைவ‌ச‌ம் வைத்திருந்த தோட்டாக்க‌ளைத்தான் ச‌ந்த்ரு துப்பாக்கியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்போகிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்க்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்ச‌ய‌ம் மாட்ட‌ப்போவ‌து அவ‌ள் மாமா தான். அத‌ற்க்கு பிற‌கு சொத்து முழுவ‌தும் த‌ன‌க்குத்தான் என்றெண்ணிய‌ப‌டியே ப‌த‌ட்ட‌மாய் காத்திருந்தான் ராக‌வ்.

எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். 'இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்' என்று கருவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட்லைனை அழைத்தான் ராகவ்.

ரிஸீவ‌ர் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. உட‌னே ச‌ன்ன‌மாய் ச‌ந்த்ருவுக்கு சிக்ன‌ல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொறுத்தப்பட்ட வண்ணக்கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியை கிழித்து ஸைல‌ன்ச‌ர் பொறுத்த‌ப்ப‌ட்ட‌ துப்பாக்கி அமைதியாய் த‌ன் வேலையைச் செய்த‌து. பேச‌ப்ப‌ட்ட‌ மீதிப்ப‌ண‌த்தை வாங்கிக்கொண்டு த‌லைம‌றைவானான் ச‌ந்த்ரு.

தான் அனுபவிக்கப்போகும் ராஜ வாழ்க்கைக்கு கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே அவ‌னை அனுப்பிவிட்டு த‌ன் வீடு நோக்கி ந‌ட‌ந்தான் ராக‌வ். வீட்டை நெருங்க‌ நெருங்க‌ ப‌த‌ட்ட‌ம் அதிக‌மான‌து. வீட்டு புல்வெளியைத்தாண்டி ம‌தில் சுவ‌ரோர‌ம் நின்று ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் கதைக்கும் பெண்ணைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்ட‌து ராக‌விற்கு. கார‌ணம், அந்த‌ பெண் சாந்தினி போல‌வே இருந்ததுதான். கிட்ட‌ப்போக‌ போக‌ ராக‌விற்கு வ‌யிற்றில் புளியைக்க‌ரைத்த‌து போலிருந்த‌து. அந்த‌ பெண் சாந்தினியேதான்.

இவ‌ள் எப்ப‌டி உயிருட‌ன். ஃபோனில் சுட்டுவிட்ட‌தாக‌ சொன்னானே ச‌ந்த்ரு. பொய் சொல்லிவிட்டானா. அட‌ப்பாவி, அவ‌ள் செத்த‌தை உருதிப்ப‌டுத்தாம‌ல் அவ்வ‌ள‌வு பெரிய‌ தொகை கொடுத்துவிட்டோமே. அத‌ற்க்கு சாந்தினி க‌ண‌க்கு கேட்டால் என்ன‌ சொல்வ‌து என்று ப‌ல‌வாறு யோசித்த‌ப‌டியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்த‌து. வெய்யிலில் சென்று வ‌ந்த‌து புழுக்க‌மாயிருந்த‌து. சந்த்ரு ஏமாற்றியது கோபம் வந்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் த‌ட்டிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தான்.

ச்சே, ஏமாற்றிவிட்டானே. அவ‌னை என்ன‌ செய்ய‌லாம்? அய்யோ, அவ‌னை இப்போது எங்கிருந்து பிடிப்ப‌து. இவ‌னை மாதிரி நாடோடிக‌ளை எப்ப‌டிப்பிடிப்ப‌து.

விய‌ர்வை வ‌ழிவ‌து நிற்க‌வில்லை. நெற்றிப்புருவம் சுறுங்க‌ அப்போதுதான் க‌வ‌னித்தான்.ஃபேன் ஓட‌வில்லை. க‌ர‌ண்ட் இல்லை. ஏதோ தோன்றி எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப்பார்த்த‌வ‌ன் உறைந்தான். அங்கு வைத்தி ர‌த்த‌ம் ப‌டிந்த‌ சிவ‌ப்பு ஜிப்பாவில் ம‌ல்லாந்து இற‌ந்துகிட‌ந்தான். தான் முத‌ல் த‌ட‌வை அழைத்தபோது, கரண்ட் போயிருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்கவேண்டும். சாந்தினிக்கு ப‌திலாக‌ வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க‌ வேண்டும். ஃபேன்சி வ‌ண்ண‌க்க‌ண்ணாடி வ‌ழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து ச‌ந்த்ரு சுட்டிருக்க‌ வேண்டும். ராக‌விற்கு புரிந்துபோன‌து. நடந்ததை அவன் மனம் ஜீரணிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவ‌னை ஆசுவாச‌ம் கொள்ள‌ பின்னோக்கி த‌ள்ளிய‌து.

மெல்ல‌ மெல்ல‌ அவ‌ன் விய‌ர்வை அட‌ங்குவ‌து போலிருந்த நொடிகளில் க்ள‌க் என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் ஃபேன் பார‌ம் தாளாம‌ல் ஸ்க்ரு நெகிழ்ந்த‌து. பின்னோக்கி உந்த, தன்னையும் அறியாமல் பெட்ரூமினுள் வந்த அவன் மீது விழுந்த‌து ஃபேன். ‌ராக‌வ் ர‌த்த‌ வெள்ள‌த்தில் சிறிது நேர‌ம் துடித்துப்பின் மெல்ல‌ அட‌ங்கிப்போனான்.

கரண்ட் வந்து 10 நொடிகள் தாண்டியிருந்தது.
வாச‌லில் இது ஏதும் அறியாம‌ல் சாந்தினி, ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் க‌தைத்துக்கொண்டிருந்தாள்.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@yahoo.co.in)