அத்தியாயம் - 11
ராய் தொலைக்காட்சியில்,
சூர்யாவுடனான பேட்டி முடியும் தருவாயை எட்டியிருந்தது.
“இவ்வளவு
நேரம் நமக்காக, நம்ம கூட சூர்யா அவரோட எண்ணங்களைப் பகிர்ந்துகிட்டாரு.” என்ற தொகுப்பாளினி,
இப்போது சூர்யாவிடம் திரும்பி,
“ரொம்ப நன்றி
சார். உங்களோட அடுத்தடுத்த ப்ராஜக்ட்ஸ்க்கு எங்களோட வாழ்த்துக்கள் சார். எங்களுக்கு
ஒரே ஒரு ரிக்வஸ்ட் தான். இந்த உங்க கணித மாதிரிய நீங்க திரைப்படமா எடுக்கணும். அப்போதான்
இது எல்லாருக்கும் ரீச் ஆகும். கூடிய சீக்கிரம் உங்க கணிணி மாதிரியைத் திரைப்படமா எதிர்பார்க்கிறோம்.
எங்களுக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களோட ஒரு அரை மணி நேரம் உக்காந்து பேசினதுக்கு
ரொம்ப நன்றி சார்.” என்றாள்.
சூர்யாவும்
பதிலுக்கு நன்றி சொல்ல, பேட்டி இனிதே முடிந்தது.
அதற்கு மேலும்
தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்த நான் சூர்யாவைப் பின் தொடர்ந்து சென்றேன். அவனது இழையை
மிகக் கவனமுடனும், உன்னிப்பாகவும் ஆய்ந்தேன்.
சூர்யா முதலில்
சென்றது அவனது அலுவலகத்திற்கு. அங்கே அவனுக்காக ஒருவர் காத்திருந்தார். அவரை எங்கோ
பார்த்த நினைவு எனக்கிருந்தது. என் நினைவுகளில் தேடியபோது அவரை அஞ்சலி முதன் முதலில்
அர்விந்தை சந்தித்த அந்த வணிக வளாகத்தில் வைத்துப் பார்த்தது நினைவுக்கு வந்தது. முகத்தில்
கண்ணாடி, முன் தலை வழுக்கை, லேசான தொப்பை – ஆமாம். அவரே தான். அவருக்கு ராமுடன் என்ன
வேலை என்ற கேள்வியுடன் சூர்யாவைப் பின் தொடர்ந்தேன்.
“ஹாய், தலைவா…
உங்க இன்டர்வியூ பார்த்தேன். மார்வெல்லஸ். உங்களுக்கு எப்படி இருந்தது?” என்றார் அவர்.
“நல்லா இருந்தது
அரசு. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?” என்றான் சூர்யா.
“கொஞ்சம்
பேசணும்.”
“என்ன பேசணும்?
போன்லயே சொல்லியிருக்கலாமே.”
“நேர்ல பேசலாம்ன்னு
வந்தேன்”
“சரி சொல்லுங்க”
“நீங்க போகச்சொன்ன
ஷாப்பிங் மால்ல ட்ரெயிலர் நேர்லயே பாத்தாச்சு. அஞ்சலி, பவித்ரா, அர்விந்த்ன்னு எல்லாம்
ஓகே. இதைப் பெரிய அளவுல செய்யலாம்ன்னு தோணுது?”
சூர்யா யோசித்தான்.
பிறகு,
“எனக்குப்
புரியிது. அது அவ்ளோ சுலபம் இல்லை. கொஞ்சம் செலவு ஆகும். எனக்கும் ஒரு பங்கு கொடுத்துட்டீங்கன்னா
செஞ்சிடலாம்”
“ஜீ.. உங்களுக்கில்லாததா?
நீங்க தானே இது எல்லாத்துக்குமே அடிப்படை. நீங்க இல்லைன்னா, எங்களை மாதிரி வக்கீலுங்களுக்கெல்லாம்
வேலையும் இல்லை. வரும்படியும் இல்லை.”
“சரி”
என்ற சூர்யா,
மேற்கொண்டு தன் கணிணியைத் திறந்தான்.
“இந்தக்
கணித மாதிரிக்கு வைக்கப்பட்டிருக்கிற பேரு 'கலைத்துப்போடுதல்'?"
"ஏன்
அப்படி?"
சூர்யா தொலைக்காட்சியை
உயிரூட்டினான். அதில் சியாமளா, பார்கவியின் பேட்டி தோன்றியது. அரசு பேட்டியை முழுவதுமாகப்
பார்த்துவிட்டு,
“என்னப்பா,
சூர்யாங்குற அழகான உன் பெயரைச் சொல்லாம, ஷியாம்ன்னு சொல்லியிருக்க?” என்றார்.
“எல்லாம்
ஒரு ரியல் டைம் டேட்டாவுக்காகத்தான். பேட்டியில பாத்தீங்கள்ல? பொருத்தமா இருக்கவே கூடாதுன்னு
நினைக்கிறவங்களையும் கொண்டதுதான் இந்த சமூகம்.”
"சரி.
முழுசா புரியலைன்னாலும் ஏதோ புரியிது. நீங்க மேல சொல்லுங்க. நான் புரிஞ்சிக்க முயற்சிப்
பண்றேன்"
சூர்யா கீழ்க்காணும்
படத்தை வரைந்தான்.
"என்ன
இது?"
"இது
1லிருந்து 9 வரை, எந்த எண் உள்ள ஆணையும், எந்த எண் உள்ள பெண்ணுடனும் சேர்க்கும் போது
அந்த எண்கள்ல உள்ள வித்தியாசமும், அப்படியான உறவில் இருக்கக்கூடிய ஆண் மற்றும் பெண்களின்
எண்ணிக்கையும். சுருக்கமா, புரியிறா மாதிரி சொல்லணும்னா, ஐம்பது ஆண், ஐம்பது பெண் கொண்ட
ஒரு நூறு பேரை கணக்குல எடுத்துக்கிட்டா, ஐந்து வித்தியாசங்கள் இருக்கக்கூடிய ஆண்-பெண்
இணை அதிகபட்சமா 4 தான் இருக்கலாம். அதில நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் வருவாங்க"
என்ற சூர்யா
மேலும் ஒரு படத்தை வரைந்தான்.
"இது
என்ன?"
"ஐந்து
வித்தியாசங்கள் இருக்கக்கூடிய இணைகள் என்னென்னங்குறது தான் இந்தப் பட்டியல். MeT செயலின்னு ஒரு சமூக வலைபின்னல் செயலியை நாங்க
இந்த விதமாத்தான் நடத்துறோம். உதாரணமா 3-8 ங்குற இணையில 3ங்குறது ஒரு ஆண். 8ங்குறது ஒரு பெண். அதே போல,
7-3ங்குற இணையில, 7ங்குறது ஆண். 3ங்குறது பெண். "
"சரி.
இப்ப இதுல தேர்வுங்குறது?"
"எங்க
செயலி எல்லோருடைய ஆன்ட்ராய்ட் அலைபேசியிலும் நிறுவப்பட்டிருக்கு. இந்த செயலியை வச்சி ஒரு பயணாளர் எங்க போறாரு, எங்க
வர்றாரு, ஒரு குறிப்பிட்ட நாள் நேரத்துல எந்த இடத்துல இருக்காரு, அவருக்கு எந்தெந்த
வங்கியில கணக்கு இருக்கு இப்படி எல்லா தகவலையும் எடுத்துடலாம். இப்படி 8ங்குற பெண்ணுக்கும்
7ங்குற ஆணுக்கும் பொதுவான ஆர்வங்களைக் கண்டுபிடிச்சி இருவரும் தானாகவே சந்திக்கிறா
மாதிரி செஞ்சோம். அதே மாதிரி 3ங்குற ஆணுக்கும். 3ங்குற பெண்ணுக்கும் பொதுவான ஆர்வங்களைக்
கண்டுபிடிச்சி இருவரும் தானாகவே சந்திக்கிறா மாதிரி செஞ்சோம். அதுதான் ட்ரெயிலரா நீங்க
பார்த்தது."
“8ங்குற
எண் – அஞ்சலி,
7ங்குற எண்
– அர்விந்த்,
3ங்குற எண்
– ரவி மற்றும் பவித்ரா”
"3-3
ஐயும், 7-8 ஐயும் சந்திக்க வைக்கிறோம். இதுல மறுமணங்களுக்கான ஒரு தேவை உருவாகுது. இதைத்தான்
நீங்கள் பணமா மாத்தப் போறீங்க.”
“அதாவது
நல்லா இருக்கிற குடும்பங்களைப் பிரிச்சு, அதன் மூலமா காசு பார்க்கிறது?” என்றார் அரசு.
“இல்லை.
ஜாதி, ஜாதகம், பொருளாதாரம் போன்ற காரணிகளால நடக்குற பொருந்தா திருமணங்களோட சாயத்தை
வெளுக்குறது. ஒரே விதமா இருந்தா பிரச்சனை வரும், எதிர் எதிர் துருவமா இருந்தா தான்
ஒத்துப்போகும்ன்னு சொல்லிக்கிற உறவுகள் எந்தளவுக்கு பலமானதுன்னு சோதிக்கிறது” என்றான்
சூர்யா ஆணித்தரமாக.
சூர்யா சொன்னதை
ஆழ்ந்து உள்வாங்கிவிட்டு, மத்திமமாகச் சிரித்தார் அரசு.
“சரி.. அப்போ
இந்த மாதிரி நிறைய பேரை உருவாக்கணும்னா?”
“ஒரு நூறு
பேர் கொண்ட குழுவுல இணை வித்தியாசம் 5, 4,
3க்கும் சேர்த்து முப்பது பேர் தான் பிரிவாங்க. உங்களுக்கு அறுபது கேஸ் கிடைக்கும்”
“எல்லாரையும்
பிரிக்கலாமே சூர்யா”
“ரொம்ப ஆசைப்படாதீங்க
அரசு. ஆணுக்கும் பெண்ணும் எட்டு வித்தியாசங்கள்
இருக்கிற இணைகளோட ஒட்டு மொத்த எண்ணிக்கை குறைவு தான். அவங்களை இலக்காக்குறதுல உங்களுக்கும்
எனக்கும் செலவுகள் தான் அதிகம்”
“புரியிது.
சரி, இப்ப அடுத்த கட்டம் என்ன?”
சூர்யா கணிணியின்
பொத்தான் ஒன்றைத் தட்ட, அது
“அஞ்சலிக்கும்
அர்விந்துக்கும் மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. இடம் சத்யம் திரையரங்கம்.
அஞ்சலிக்கு பிடித்தமான படம் ஒன்று சத்யம் திரையரங்கில்
ஓடுகிறது. மதியக் காட்சி மணி 1க்கு. அர்விந்துக்குத் தேவையான ஒரு பைக் உதிரி பாகம்
சத்யம் திரையரங்கின் அருகில் உள்ள கடையில் மட்டும் தான் குறைந்த விலையில் கிடைக்கும்
என்று அர்விந்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக, இவர்கள் ஒருவரையொருவர்
சந்திக்க இருப்பது அவர்களுக்குத் தெரியாது. சந்திப்பு இன்னும் முப்பது நிமிடங்களில்.”
என்றது கணிணியில் ஒரு கணிணிக்குரல்.
“போய்ப்
பார்ப்போமா?” என்றார் அரசு.
“எதுக்கு
நமக்கு அதெல்லாம்?”
“எல்லாம்
ஒரு கிக் தான். இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததில்லை. சம்பந்தப்பட்டவங்களுக்கே தெரியாம
அவங்க ரெண்டு பேரையுமே நாமளா சந்திக்க வைக்கிறது. நினைச்சாலே கொஞ்சம் எக்ஸைட்டிங்கா
இருக்கு”
சூர்யா ஒரு
நோடி யோசித்துவிட்டு,
“சரி வா,
போகலாம்” என்றான். இருவரும் எழுந்து மகிழுந்துகள் நிறுத்துமிடம் வந்தார்கள்.
சற்றைக்கெல்லாம்
மகிழுந்து அவர்களை விழுங்கிக்கொண்டு சாலையில் விரைந்தது.
அரை மணி
நேரப் பிரயாணத்தின் முடிவில், சத்யம் திரையரங்கு வாசலில் அரசும், ராமும் அஞ்சலிக்கென
காத்திருந்தார்கள்.
அஞ்சலியும்
அர்விந்தும் அதிக நேரம் காத்திருக்க வைக்கவில்லை. அர்விந்தின் ஏற்கனவே தனது இரு சக்கர
வாகனமொன்றில் அங்கே ஆஜராகியிருந்தான். அஞ்சலி சற்றைக்கெல்லாம் ஊபர் மகிழுந்தில் வந்திறங்கினாள்.
அஞ்சலியைப் பார்த்துவிட்டு அர்விந்த் அஞ்சலியை அணுகினான்.
சூர்யாவும்,
அரசுவும் அவர்களின் சம்பாஷனைகள் கேட்கும் தொலைவில் தங்களை இறுத்திக்கொண்டு பிரிதேதோவொன்றின்
மீது கவனம் தொலைத்தவர்களாய் நடிக்கத்துவங்கினார்கள்.
“ஹாய் அஞ்சு”
“ஓ.. ஹாய்
அர்விந்த். எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன்.
உன்னைப் பார்த்தாலே தெரியிது ரொம்ப நல்லா இருக்கேன்னு. ஆனா ஏன் எனக்கு கால் பண்ணலை?
நான் கால் பண்ணினாலும் எடுக்குறது இல்லை.”
அஞ்சலி உடனே
பதிலளிக்கவில்லை. சற்று யோசித்தாள். பின்,
“அர்விந்த்
நாம இனிமே சந்திக்க வேண்டாம்ன்னு தோணுது. அதான்.” என்றாள்.
இதைக்கேட்டு
அர்விந்த் மட்டுமல்ல, சூர்யாவும், அரசுவுமே அதிர்ந்தார்கள்.
“ஏன்? என்னாச்சு?
எனி ப்ராப்ளம்? உன் புருஷனுக்கு தெரிஞ்சிடுச்சா?” அர்விந்தின் குரலில் பதற்றம் இருந்தது.
“அப்படி
எல்லாம் இல்லை. ஆனா, எனக்கு ஆர்வம் இல்லை” என்றாள் அஞ்சலி.
சற்றே திகைத்த
அர்விந்த் பின் சுதாரித்தவனாய்,
“இல்லை.
அன்னிக்கு நான் சரியா செய்யலை தான். கொஞ்சம் அலுப்பு. உன்னோட சந்திப்பு ஏற்பாடு ஆனதும்,
அலுப்போட வந்து…….. அதுமட்டும் இல்லை, அஞ்சு.. நேர்மையா சொல்லணும்னா இப்பத்தான் எனக்கான
வாழ்க்கையே என் கண்ணுக்கு தெரியிறா மாதிரி இருக்கு.. அதுக்குள்ள பார்வையை பிடுங்கிடாத..
எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு தான்.. ஆனா, யார் வாழ்க்கையையோ நான் வாழ்ந்துட்டு இருக்கிறா மாதிரி இருக்கு.. அதை
நான் வெறுக்கிறேன்.. பாலைவனத்துல ஒரு மழைத்துளி மாதிரி உன் அறிமுகம் எனக்கு… ” என்று
இழுக்க,
“ஐயோ…Nothing
about your performance that day. அது பிரச்சனை இல்லை. புரிஞ்சிக்கோ. எனக்கு இனிமே
வேணாம். ப்ளீஸ்.. என்னைத் தொந்திரவு பண்ணாத” என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் அஞ்சலி
சத்யம் திரையரங்கின் உள்ளே நடக்க, அர்விந்த் அதிர்ந்து போனவனாய், அஞ்சலியையே பார்த்து
நின்றுகொண்டிருந்தான்.
‘மாஞ்சா
அறுந்திடுச்சா…..” என்று குதூகலமாக விசிலடித்தபடியே இருவர் அர்விந்தை நெருக்கமாகக்
கடந்து போனார்கள்.
“சப்புன்னு
ஆயிடுச்சு” என்றார் அரசு. சூர்யா சிரித்தான்.
இருவரும்
மகிழுந்து நிறுத்துமிடத்திற்கு நடந்தனர்.
“ஒரு குடும்பத்தைக்
கலைச்சிட்டோம்ன்னு உனக்கு தோணுதா?” என்றார் அரசு.
“இல்லை.
நாம கலைக்கலையே. அவங்களா கலைஞ்சிக்கிட்டாங்க. இன்னிக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு
ஒபீனியன் இருக்கு.”
“அஞ்சலி
ஏன் அர்விந்தைக் கண்டுக்கலை? ஒருவேளை அவன்……..”
“அப்படி
இருக்காது. அதான் அவளே உத்தரவாதமா சொன்னாளே.”
“அப்புறம்
என்ன? அவளுக்கும் அர்விந்தைப் புடிச்சிருக்கு. உன்னோட கணித மாதிரியின் பிரகாரம், அவங்க
ரெண்டு பேருமே தகுதிகள், விருப்பங்கள் அடிப்படையில கிட்டத்தட்ட சமமானவங்க தானே? அப்புறம்
என்ன?”
“சமமானவங்கன்னு
சொல்ல முடியுமான்னு தெரியலை. அஞ்சலி 8, அர்விந்த் 7.”
“எப்பா?
ஒரே ஒரு வித்தியாசத்துல அப்படி என்னப்பா பெரிய பிரச்சனை வந்துடும்? ரவியை கம்பேர் பண்ணிப்
பாக்குறப்போ அர்விந்த் எண்கள் ரீதியா பரவாயில்லை தானே?”
“ரவிக்கு
அர்விந்த் பரவாயில்லை தான். ஆனால், அப்புறம் ஏன் அவனை நிராகரிக்கணும்?”
“ஒரு வேளை,
உன்னோட ப்ரோக்ராம் அவளை வேற யாருக்காச்சும் கோர்த்துவிட்டுடுச்சா?”
சூர்யா சட்டென
நிமிர்ந்து அரசுவைப் பார்த்தான்.
“என்னப்பா
அப்படிப் பாக்குற? ப்ரோக்ராம்ல ஏதாச்சும் பிழை இருக்கோ?” என்றார் சந்தேகமாக.
“ப்ரோக்ராம்ல
பிழை இருக்க வாய்ப்பில்லை. ஆனா, இப்படி ஒரு கேள்வி வந்துட்டதுக்கு அப்புறம், பிழை ஏதும்
இல்லைன்னு நிரூபிக்கலைன்னா சரியா இருக்காது. வாங்க போகலாம்.” என்றான் சூர்யா.
“எங்க?”
“என் அலுவலகத்துக்குத்தான்.”
என்றுவிட்டு சூர்யா மகிழுந்தை உயிரூட்ட, அரசு அதில் தன்னையும் திணித்துக்கொண்டார்.
மகிழுந்து
சூர்யாவின் அலுவலகத்தை அடைந்தது. இருவரும் சூர்யாவின் இருக்கைக்கு விரைந்தார்கள்.
சூர்யாவின்
இருக்கையில், மடிக்கணிணியின் முகத்தை அரசுவின் பக்கம் திருப்பிவிட்டு,
“இதோ பாருங்க.. இப்போவரை நம்ம ஆப்னால பிரிக்கப்பட்ட இணைகள் அஞ்சலி
– ரவி, அர்விந்த் – பவித்ரா மட்டும் தான். இதுவும், இந்த மென்பொருள் எப்படி வேலை செய்யும்ன்னு
உங்களுக்குக் காட்டத்தான். மத்தபடி, வேற யாரும்
இதுல இன்வால்வ் ஆகியிருக்க வாய்ப்பில்லை.” என்றான் சூர்யா.
சூர்யாவின்
கணிணித்திரையில், அஞ்சலி – ரவி, அர்விந்த் – பவித்ரா புகைப்படங்களும் அவர்களின் எண்களையும்
அன்றி வேறெதுவும் இருக்கவில்லை.
“அப்படி
என்ன அர்விந்துக்கிட்ட இல்லைன்னு இந்த அஞ்சலி அவனை ஒதுக்குறாப்பா?” என்றார் அரசு தொடர்
நாடகங்கள் பார்க்கும் குடும்பஸ்திரிகளின் நிஜமான சலிப்புடன்.
“அதையும்
பாத்துருவோம்.” என்ற சூர்யா, கணிணியில் அவர்களது எண்களையும் அதோடு கூடிய பொருத்தம்
மற்றும் இன்னபிற மென்பொருள் சார்ந்த மாறிலிகளை (variables) வருவித்தான்.
|
அரவிந்த் |
அஞ்சலி |
|
1. லேசான பழமைவாதம் |
லேசான
பழமைவாதம் |
|
2. முற்போக்குச் சிந்தனை |
முற்போக்குச்
சிந்தனை |
|
3. பகுதியை தவிர்த்து முழுமையை தரிசிக்கும்
திறம் |
முழுமையை
தரிசிக்கும் திறம் |
|
4. கடின உழைப்பு |
கடின உழைப்பு |
|
5. அறமான வாழ்க்கை |
அறமான
வாழ்க்கை |
|
6. நினைத்ததை அடையும் முயல்வு |
நினைத்ததை
அடையும் முயல்வு |
|
7. அழகியல் |
அழகியல் |
|
8. |
பழகுதல் |
|
ரவி |
பவித்ரா |
|
முற்போக்குச் சிந்தனை |
முற்போக்குச் சிந்தனை |
|
பகுதியை மட்டுமே பார்க்கும் பார்வை |
பகுதியை மட்டுமே பார்க்கும் பார்வை |
|
பழகுதல் |
பழகுதல் |
“பெரிய வித்தியாசம்
இல்லையேப்பா?” என்றார் அரசு.
“அர்விந்த்
சோஷியலைஸ் பண்றது இல்லைன்னு போட்டிருக்கு” என்ற சூர்யா, முக நூலில் அரவிந்தின் இணையக்கணக்கைத்
தோண்டி எடுத்தான். அதில் இரு நூறுக்கும் குறைவாகவே நண்பர்களின் எண்ணிக்கை இருந்தது.
“இதெல்லாம்
ஒரு காரணமா தலைவா?” என்றார் அரசு.
“அட, அதெல்லாம்
அவுங்கவுங்க விருப்பம் தானே. அந்தப் பொண்ணுக்கு அது முக்கியமா பட்டிருக்கலாம்ல? இதுல
ஒண்ணு கவனிச்சீங்களா? பவித்ராவுக்கு இணையா இருக்கிற ரவி அஞ்சலிக்கு புருஷனா ஆயிருக்கான்.
இந்த கள்ள உறவில ஒரு நியாயம் இருக்கும்ன்னா அது இதுதான்” என்றார் சூர்யா.
எனக்கும்
அதில் உடன்பாடு இருந்தது. ஜாதி, ஜாதகம், பொருளாதாரம் போன்றவைகள் யாருக்கு யார் திருமணப்
பொறுத்தம் என்பதைத் தீர்மானித்துவிடுகையில், கள்ள உறவுகள் தான் நியாயத்தை நிலை நாட்ட
உதவுகின்றன. பிரச்சனை என்னவென்றால், இந்த நியாயம் இறுதி நியாயம் அல்ல என்பதுதான்.
“சரி. நான்
வேற மாதிரி கேக்குறேன். இப்ப நாம அஞ்சலி மாதிரியே எண் எட்டு உள்ள ஒரு ஆணை அவளை அணுகுறா
மாதிரி செஞ்சு பாத்தா என்ன?”
“ஏன்?”
“எட்டும்
எட்டும் சந்திச்சிக்கிட்டா பச்சக்குன்னு ஒட்டுதான்னு பாக்கத்தான்.”
“அதைப் பாத்து
என்ன பண்ணப்போறீங்க?”
“ஆங்.. உன்
ஆப் மேல உள்ள நம்பிக்கையில தான் என் வாழ்க்கையையே முதலீடா வைக்கப் போறேன். அது சரியாதான்
வேலை செய்யிதுன்னு தெரிஞ்சா தானே நானும் தைரியமா முதலீடு பண்ண முடியும்?”
சூர்யா சற்று
நேரம் யோசித்தான். அரசு சொல்வதும் நியாயமாகத்தான் பட்டது. மீண்டும் அட்டவணையை வருவித்துப்
பார்த்தான்.
84 என்கிற
எண்ணின் மேல் சுட்டி, கணிணியில் ஒரு பொத்தானைத்தட்ட அந்த இருவர் குறித்து புகைப்படங்களுடன்
திரையில் விபரங்கள் முளைத்தன.
கணிணித்திரை
8 என்கிற ஆணின் பெயர் வினய் என்றது. ஒரு வங்கி ஒன்றில் மேலாளராக வேலையில் இருந்தான்.
இன்னமும் திருமணமாகியிருக்கவில்லை. ஆனால் காதலி இருந்தாள். அவளுடைய பெயர் ஜெஸித்தா.
எண் 4.
“கல்யாணம்
ஆகலையா இன்னும்?” என்றார் அரசு கணிணித்திரையிலிருந்து கண்களை விலக்காமல்.
“இல்லை.”
“அப்போ ஏதாச்சும்
கல்யாணமான பையனா பார்க்கலாமா?”
“வேணாம்.
இவனையே கோர்த்துவிட்டுப் பார்ப்போம். பிச்சிக்கிட்டா அந்த ஜேஸித்தா வாழ்க்கை தப்பிச்சிதுன்னு
அர்த்தமாயிடும் இல்லையா?”
“அதுவும்
சரிதான்.”
சூர்யா தொடர்ந்து
மடிக்கணிணியில் வினய்யின் பெயரைத் தேர்வு செய்து, ஒரு பொத்தானை அழுத்த, மென்பொருள்
வினய்யின் இணையக்கணக்கைத் துழாவத்துவங்கியது.
சற்று நேரத்தில்,
‘வினய்க்கு
மாலையானால் பக்கத்திலிருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் வழக்கமிருக்கிறது.
அந்த மைதானத்துக்கருகில் லீ கடை இருக்கிறது. அஞ்சலி ஆறு மாதங்களுக்கு முன்பு லீ ஜீன்ஸ்களை
விருப்ப ஆடைகளாகக் குறித்திருக்கிறாள். ஆகையால், அவளை அந்தக் கடைக்கு வரவழைக்கும் நேரத்தில்,
வினய் அங்கே அவளைக் கடந்து போகுமாறு செய்ய இயலும். செய்யட்டுமா?” என்று கேட்டது.
சூர்யா
‘சரி’ என்று ஆணைப் பிறப்பிக்க, தொடர்ச்சியாக அந்த மென்பொருள் தன் வேலையைத் துவங்கியது.
சூர்யாவின்
அலுவலகத்தில் நடந்தனவைகளைப் பார்க்கின் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பகுதியை எண்களாய்ப்
பார்த்தது போலிருந்தது எனக்கு. எனக்கு சூர்யாவின் அட்டவணைகள் அணுக்கமாக இருந்தன. கடவுள்கள்
இப்படித்தான் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் அமர்ந்தபடி தங்களுக்குள் ஆலோசித்து மனித
உறவுகளை ஒரு கணிணி விளையாட்டு போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயம் தோன்றியது
எனக்கு.
ஒரே ஒரு
வித்தியாசம் என்னவெனில், மனிதர்கள் இந்த விளையாட்டை தங்களை வைத்தே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு சூர்யாவின் விளையாட்டு பிடித்திருந்தது. அதில் நான் விதம்விதமாகப் பிறக்க வாய்ப்பிருந்தது.
சூர்யாவின்
கணித மாதிரியைப் பார்த்ததும் என்னுள் சில கேள்விகள் எழுந்தன. அஞ்சலி-ரவி இணைக்கு எட்டில்
ஏழி அம்சங்கள் பொருந்தின. ஆயினும், அவர்களால் ஏன் பொருந்திப் போகும் அம்சங்களுடன் ஒருங்கிணைந்து
காதலுடன் தங்கள் வாழ்வைத் தொடர முடியவில்லை?
“அவளுக்கு
நிச்சயமா ஆண் நண்பர்கள் இல்லாம இருந்திருக்காது. பொண்டாட்டி தான் எல்லாம்ன்னு இருந்திருந்தா எனக்கு பெருத்த ஏமாற்றமா இருந்திருக்கும். இல்ல?”
ரவியின்
வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. “எப்படியும் விளையாட்டு மைதானத்தில் அசுத்தமாகத்தான்
போகிறது. அப்படி இருக்கையில் எதற்குக் குளித்துவிட்டு விளையாடச்செல்வானேன்?” என்கிற
ரீதியில் ரவியின் வாதம் அமைந்திருப்பதாய்த் தோன்றியது.
ஒருவேளை
எல்லோருக்கும் அவர்களுக்கு தகுதிப்பட்ட எல்லாமும் கிடைக்கும் என்ற ஸ்திதி இருப்பின்,
ரவி, பவித்ராவுடன் தான் செய்ததைச் செய்திருக்க மாட்டானோ? என்ற கேள்வி எழுந்தது. பவித்ராவுடனான
கள்ள உறவில், தன் ஏமாற்றத்திற்கு மருந்து தேடியிருக்கிறான் ரவி. ஆயினும், அதிலும் போதாமை
ஏற்பட்டு, அது அஞ்சலியின் மீது சுடு சொற்களாய் வெளிப்பட்டிருக்கிறது.
அந்த சுடு
சொற்களின் தகிப்பில், அஞ்சலி வெந்திருக்கிறாள். உண்மையில், அஞ்சலி பவித்ரமாகத்தான்
இருந்திருக்கிறாள். ஆயினும், ரவி, படி தாண்டியிருக்கிறான். இல்லாத ஏமாற்றத்திற்கு மருந்து
தேடி அடைந்திருக்கிறான். இப்போது, அவன் உண்மையிலேயே அஞ்சலிக்கு தகுதிப்படாமல், அவளின்
கள்ள உறவுகளுக்கு தகுதிப்பட்டு விட்டிருக்கிறான்.
சூர்யாவின்
கணித மாதிரியைக் கண்டிராவிட்டால் முந்தீர்மானங்கள் உந்தி ஒழுக்க மீறல்களில் ஈடுபட வேண்டாம்
என்று தான் நானும் சொல்லியிருப்பேன். ஆனால், நான் தான் சூரியாவின் கணித மாதிரியைக்
கண்டுவிட்டேனே.
சூர்யாவின்
கணித மாதிரியைக் கண்டவனாக என்னால் சொல்லக்கூடிய விடயங்கள் வேறாக இருக்கின்றன.
எங்கெல்லாம்
சூர்யா, ஒரே எண்ணுடையவர்கள் ஒன்று சேர்வது குறித்துப் பேசியிருக்கிறானோ அங்கெல்லாம்
தொடர்ச்சியாக, ‘…..ஏன் அதிக எண்ணுடையவர்களுக்கும், குறைந்த எண்ணுடையவர்களுக்கும்
நல்ல வாழ்க்கை அமைந்தே விடாதா?....” என்கிற ரீதியில் கேள்விகள் எழுவதை நான் கவனித்தே
இருக்கிறேன். அந்தத் தொகுப்பாளினி கூட அந்த அர்த்தத்தில் தான் கேட்டாள்.
எல்லோருமே
முன்னேற்றப்பாதைகளில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதையே விரும்புவதாக இதை வைத்து
அர்த்தம் கொள்ளலாம் என்றால் அது மட்டும் தான் காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் இறுதியில்
வலுக்கவே செய்தது. காரணம்: ரவி மற்றும் பவித்ராவின் எண்கள். ரவி மற்றும் பவித்ரா இருவருமே
அவர்தம் துணைகளான அஞ்சலி மற்றும் அர்விந்த் ஆகிய இருவர்களின் எண்களை விடவும் குறைவான
எண்ணுடையவர்கள். இதன் பொருள் என்ன? இருவரையும் விட இவர்களின் துணைகளிடமிருந்து இவர்கள்
கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது என்பதுதானே. அவ்விதம் அவர்கள் கற்றுக்கொண்டால், அவர்களும்
அவர்களின் துணைகளுக்கு நிகராக உயரலாம் அல்லவா? அதன் மூலம் எனக்கும் இன்னொரு நான் பிறக்க
வழி பிறக்கும். ஆனால் அது ரவி, பவித்ராவுக்கு நடந்ததாகத் தெரியவில்லை.
என் ஊகம்
என்னவெனில், குறை எண்ணுடையவர்கள் பெரும்பாலும் தங்கள் துணைகளை ஒரு ஒட்டுண்ணி போல் சார்ந்து
வாழ்ந்து, அந்த வாழ்க்கை தரும் சுகங்களில் சோம்பிக் கிடக்கவே விரும்புகிறார்கள் என்பது
தான்; மிக மிக அரிதாகத்தான் துணைகளினூடே தானும் வளர்வது நடக்கிறது; அப்படியே அரிதாக
நிகழ்ந்தாலும், அது, ஒரே திறன் உள்ள இருவர் ஒன்றுகூடுவதன் மூலம் உருவாகும் உச்ச சாத்தியத்திற்கு
எவ்வகையிலும் சமமாவதில்லை; ஆக, சோம்பிக் கிட்ககும் பொருட்டே கூட இவர்கள் திட்டமிட்டே
தன்னை விட தகுதி அதிகமுள்ளவர்களைத் தேடிச்சென்று சேர்கிறார்களோ என்று எனக்குத் தோன்றியபடியே
இருந்தது.
காரணம்,
கணவன் – மனைவி இருவருமாக ஒன்றிணைந்து ஒரே துறையில் இயங்கு உச்சம் அடைவதற்கான சாத்தியங்களை
மிகுவித்து என்னை உருவாக்குவது மேலை நாடுகளில் தொடர்ந்து நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில்
எந்த நாடு மிக அதிக எண்ணிக்கையிலான தங்கப்பதக்கங்களைத் தட்டிச்செல்கிறது என்பதை வைத்து
இதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தியா
போன்ற இரண்டாவது மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட நாட்டிலும் அதே போல் நடந்தால் நானும் இன்னும்
இன்னும் கோடிக்கணக்கில் பிறக்க முடியுமே என்கிற
நப்பாசை தான். ஆனால் எனக்குத் தெரியும். இங்கே வாழ்வியலின் மையம் என்பது ‘வாழ்தல்’
தான்.
ஏற்கனவே
வாழ்வாங்கு வாழ்பவன் இன்னும் இன்னும் ஏன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே இங்கு கேள்வி.
ஆதலால், ஒரு மருத்துவன் இன்னொரு மருத்துவரைத் துணையாகத் தேடினால், அதை பேராசையென்றே
பார்க்கும் பார்வை இருக்கிறது. அது எனக்குப் புரியாமல் இல்லை.
ஆனால், எனக்கு
என்ன புரியவில்லை என்றால், இந்தப் பார்வைக்கு ஏன் சில உச்ச நடிகர்கள், சில அரசியல்வாதிகள்,
சில தொழிலதிபர்கள் விதி விலக்காகிறார்கள்? இங்கெல்லாம் ‘வாழ்வியலின் மையம் வாழ்தல்’
என்பது காலாவதியாகிவிடுமா? இங்கெல்லாம் கலாச்சாரம் தன் பலத்தை இழந்துவிடுமா? அறம் இங்கெல்லாம்
பொய்த்துவிடுமா?
