Sunday, 29 August 2010

பதிலளிக்கப்படாத கேள்விகள் - சிறுகதை

'பதிலளிக்கப்படாத கேள்விகள்' என்ற தலைப்பில் , நான் எழுதிய‌ சிறுகதை, செப்டம்பர், 2010 மாத காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 48வது பக்கம், மற்றும் சிறுகதையின் கடைசி பக்கங்களின் பிரதிகள் இங்கே.

பதிலளிக்கப்படாத கேள்விகள் - சிறுகதைஹலோ எவ்ரிபடி. என் பெயர் எண்ணங்கள். என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மைதான். நான் எண்ணங்களே தான். நான் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விருப்பு, வெருப்பு, குணாதிசயம், உணர்வுகளின் எல்லை, திறன் முதலானவைகளால் உருவம் பெறுபவன். அம்மனிதனின் நினைவடுக்குகள்தான் நான் விளையாடும் விளையாட்டின் விதிகள். அதனால் நானாக உருவாவதில்லை. எனக்கென்று ஒரு உருவமுமில்லை. நான் நிரையாத மனிதன் உலகிலேயே இல்லை. உங்களுக்குள்ளும் இருக்கிறேன் நான். இதை நீங்கள் படிக்கையில் கூட நான் இன்னும் ஒரு பிறவி கொண்டு எனக்குள்ளே ஐக்கியமாகிவிடுவது புரிகிறதா உங்களுக்கு? ஹ்ம்ம். எனிவே தட்ஸ் நாட் த பாய்ன்ட் நவ். நான் சொல்ல வந்தது வேறு. எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும்.


நான் முன்பே சொன்னதுபோல, நான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வெறு விதமாய் உருவம் கொள்கிறேன். என் உருவம் எல்லா மனிதருக்குள்ளும் ஒன்றுபோலவே இருக்காது. ஆனால் என் உருவம் அந்தந்த மனிதனைச் சார்ந்தே அமைகிறது. அவன் கடந்து வந்த பாதை, அதில் கற்ற பாடங்கள், அடுத்தவரிடம் கேட்டறிந்த பாடங்கள், அவனின் குணாதிசயங்கள் என எல்லாவற்றையும் சார்ந்தே நான் அமைவேன். கிட்டதட்ட டி.என்.ஏ மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒவ்வொரு மனிதனின் செயல்பாடுகளுக்கும் நானே காரணகர்த்தா. ஆனால் எதையும் நானாக உருவாக்குவதில்லை. எல்லா மனிதருக்குள்ளும் நான் பாய முடியும். மனிதர்களின் மனங்கள் நான் நீந்தி விளையாடும் கடல். என் உருவம் எல்லா மனிதருக்குள்ளும் ஒன்று போலவே இல்லாதிருப்பதால் பல சமயங்களில் நான் மிகவும் நெருங்கிய உறவுகளுக்குள்ளும் குழப்பம் வர கூச்சல் போட காரணமாகிவிடுகிறேன். அது என் தவறல்ல என்றபோதிலும் இது தொடர்கிறது. நானென்ன செய்ய.


வெகு சமீபத்தில் கூட அப்படி ஒன்று நடந்தது. அது இங்கிலாந்து. வானம் மழையென நினைத்து தவறுதலாய் பனியை அள்ளி அள்ளிப் பொழிந்துவிடும் நாடு. அந்த நாட்டின் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருந்தது ஒரு வங்கியின் கணிப்பொறித்துறையின் அலுவலகம். அந்த இடத்தை சவுத்வார்க் என்பார்கள். லண்டனின் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பாலம் இங்கிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். அங்கே தான் வேலை நிமித்தம் வந்திருந்தனர் அஞ்சலியும் சுந்தரும்.


ஈஸ்ட் ஹாம் என்னும் தென்னிந்தியர்கள், தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நண்பர்களுடன் ஒரு மேன்ஷன் வீட்டில் தங்கியிருந்தான் சுந்தர். வீட்டிற்கு வெகு அருகாமையில் ரயில் நிலையம். இரவு நேரங்களில் வேலை பலு காரணமாக அலுவலகத்திலேயே இருக்கும்படி நேர்ந்தால், அகால வேலையில் கூட சீக்கிரம் ரூம் போய்விடலாம். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வீட்டிலிருந்து ஈஸ்ட் ஹாமில் ரயில் ஏறி வெஸ்ட் ஹாம் வந்து மீண்டும் பாதாள ட்யூப் ரயில் ஏறி சவுத்வார்க் வந்து சப்வே படிகள் ஏறினால் அலுவலகம். லண்டன் மாநகரை இந்த ட்யூப் ரயில்கள் குறுக்கிலும் நெடுக்கிலுமாய் முழுவதுமாய் படர்ந்து இருக்கும். இதனால், ஒருவர் லண்டனின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்கு ரயில் மூலமாகவே பயணிக்கலாம்.


குளிர்ந்த காற்று வீசும் காலையில் சுந்தர், மிகவும் மலர்ச்சியாய் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் அணிந்து வந்த ப்ரிங்கில் ஜெர்கின் அருகில் இருந்த ஜெர்கின் ஸ்டாண்டில் மாட்டியிருந்தது. அவன் எதிரில் கணிப்பொறித்திரையில் அஞ்சலியின் குட் மார்னிங் மெயில் திறந்திருந்தது. அஞ்சலி இல்ஃபோர்ட் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறாள். இந்த இடம் ஈஸ்ட் ஹாமிற்கு சற்றே அருகில் தான். லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் இவை.


அவன் நினைவடுக்குகளை நான் திறந்து பார்த்தபோது அதில் அஞ்சலியைப் பற்றி அதிகம் தகவல்கள் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அங்கு சந்தித்து மிக சில நாட்களே ஆகியிருந்தது. மேலும், ஒரு பெண்ணை முதன்முதலில் சந்திக்கையில், அவளுக்கு அந்நாள்வரையில் வேறு ஏதேனும் நெருக்கமான உறவுகள் இருந்திருக்கலாமென ஒரு எச்சரிக்கையுணர்வு கொள்ளும் குணாதிசயம் கொண்டவனாக சுந்தரும் இருக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது. அதனால் அவனின் அப்போதைய குதூகலத்திற்கு நான் தடையேதும் சொல்லவில்லை.


நீணட நாட்களாக சேவல்களே உலவிக்கொண்டிருந்த அவன் நினைவுகளில் முதல் முறையாக ஒரு அன்னம். அவன் குதூகலித்தான். கற்பனைகள் கொண்டான். நான் ஒத்துழைத்தேன். தடை சொல்லக் காரணங்கள் இருந்திருக்கவில்லை. அவனின் நினைவடுக்குகளை நான் துழாவியபோது எனக்குக் கிட்டியதெல்லாம் கல்லூரி நாட்களில் கூடப் படிக்கும் பெண்களிடம் பாடங்கள் தொடர்பான விளக்கங்கள் தந்ததுவும், காண்டீனில் நண்பர்களுடனும் தோழிகளுடனும் சேர்ந்து உண்டதுவும், கல்லூரிப்பருவத்து நண்பனொருவன் ஒரு திருமணமான பெண்ணை வளைத்துப் போட்டது எப்படி என்று ஒரு நாள் ராத்திரி முழுவதும் கதை சொன்னதுவும், பால்ய வயதில் ஒரு நாள் பக்கத்துவீட்டு பரிமளா ஆண்டி தூங்கிப்போன நிமிடங்களில் காற்றில் விலகிய முந்தானையினூடே பார்த்த அவளின் மார்புகளும் இன்ன பிற பால்ய வயதுக்கே உரிய விளையாட்டுக்களும், சில இடங்களில் மாட்டிக்கொண்டு முழித்ததும் தான் அதிகபட்சமாகக் கிட்டியது. அவனை வழிநடத்த அவனின் முன் வாழ்க்கையில் வேறேதும் நிகழ்ந்திருக்கவுமில்லை. அவனை வழி நடத்தும் விதிகள் குறைவாக இருந்தது. முன் அனுபவங்கள் அத்தனை முதிர்வடையவில்லை.


நான் கூடு விட்டுக் கூடு பாய்ந்தேன். அஞ்சலியை உலவு பார்த்தேன். அஞ்சலி ஒரு பெண். அதிலும் அழகான பெண். சுந்தர் போல அனேகம் நட்புகளைப் பார்த்திருந்தாள். அவளிடம் குதூகலம் இருக்கவில்லை. கற்பனைகள் இருக்கவில்லை. ஆனால், சுந்தருடன் பரிச்சயம் கொண்ட நாட்களில் அவனின் அவளது அழகைக் கண்டு வெளிப்படுத்திய கண்ணசைவுகளும், குதூகலமும், அவளை மேலும் தெரிந்து கொள்ளத் தூண்டும் ஆர்வமும் அவள் நினைவடுக்குகளில் பதிந்திருந்தன. இது நான் எதிர்பார்த்ததுதான் என்பதாக இருந்தது அவளின் அவதானிப்புகள். அவள் நினைவுகளை நான் தேடுகையில் இது போன்ற எண்ணற்ற பதிவுகள் இருந்தன. கல்லூரி படிக்கையில் ஷ்யாம், சிவா, மனோஜ் இன்னும் பலரும் கண்ணசைவுகளும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.


பள்ளிப்பருவத்தில் எதிர்வீட்டு பொறுக்கி கொடுத்த லவ்லெட்டர், கரண்ட் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மாடி வீட்டு மாமா அவள் இடுப்பை கிள்ளிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தது, கீழ் வீட்டில் இருந்த இரண்டு வயது இளைய சிறுவன் ஒரு நாள் இவளின் பின்னழகைத் தட்டிவிட்டு அறை வாங்கியது என்று இருந்தது. மேலும் அவளுக்கு அந்த நேரம் அவன் எப்படிப்பட்டவன் என்ற கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது எனக்கு. சுந்தரின் நடவடிக்கைகள், இதற்கு முன்பு அவள் பார்த்த, நல்லவன் என்று நம்பிய சிலரின் குணாதிசயங்களுடன் ஒத்துப்போனதால் நான் அவளுக்கு சுந்தரால் தீங்கு விளையாது என்றே அறிக்கை தர முடிந்தது.


எனக்குத் தெரியும் நான் சொன்னது ஒரு பொய்தான். உண்மையில் அவன் தீங்கு செய்பவனா இல்லையா என்று எனக்கும் தெரியாது. ஆனால் எனக்கு இதுவும் தெரியும் அவர்கள் அப்போதைக்கு அந்த பொய்க்கு மட்டுமே தகுதியானவர்களாய் இருந்தார்கள். உண்மையை எதிர்கொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லவேண்டுமானால், ஏதோ ஒரு வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை என் மேல் ஏவி என்னிடமிருந்து வார்த்தைகளைப் பிடுங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


அதே நேரம், சுந்தர் அறியாவண்ணம் அஞ்சலியின் மெயில் பாக்ஸில் வினோத், மாறன், தினா என்று மேலும் வேறு சிலரின் மெயில்களும் வந்திருந்தன. இவர்களும் அதே அலுவலகத்தில் வேறு ப்ராஜெக்டில் வேலை செய்கிறார்கள். அவைகளும் சுந்தரின் மெயில்கள் ரீதியானவைகளே. அவள் அழகில் மயக்கமுற்றதான, அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் நோக்கமுடையதானதாய் இருந்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. அதற்குள் சுந்தர் சற்றே நெருக்கமாகிவிட்டிருந்தான். ஒரே துறையில் ஒரே அலுவலகத்தில் வேலை. இல்ஃபோர்ட், ஈஸ்ஹாம் என்று வீடும் அருகாமையிலேயே அமைந்ததால், இல்ஃபோர்டில் இருக்கும் சினி வோர்ல்டில் வருட சாந்தா பெற்று வார இறுதிகளில் ஒன்றாக படம் பார்ப்பது, பார்த்த படங்களைப் பற்றி சிலாகிப்பது, அருகிலேயே இருக்கும் ஷாப்பிங் மால், ஒன் பவுண்ட் ஷாப் மற்றும் செயின்ஸ்பரியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, வேலை நேரம் போக மீதி நேரத்தில் கட்டுரை, கவிதை எழுதுவது இருவருக்குமே பொழுதுபோக்கானதில் நெருக்கம் வளர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.


என் பாடு திண்டாட்டமாகியிருந்தது. சுந்தரிடம் நான் அவதானித்தவகையில், அவனின் கற்பனை உலகில் அவனும், அஞ்சலியும் தேவைப்படும் இடங்களில் அவனின் குடும்பமும் மட்டுமே இருந்தது. ஆனால், அவளின் கற்பனை உலகில் சுந்தர், வினோத், தினா, மாறன் இன்னும் பலர் இருந்தனர். அந்தக் கற்பனைகள் அவளின் நட்பு எல்லையைத் தாண்டி வரவில்லை கற்பனையில் கூட. அந்தக் கற்பனைகளில் அவள் பல சாதனைகள் செய்தவளாய் இருந்தாள். எல்லோராலும் புகழப்படும் இடத்தில் திறமை மிக்கவளாய் இருந்தாள். உலகில் உள்ள எல்லா பெண்களின் பிரதினிதியாக இருந்தாள். சுந்தர், வினோத் போன்றோர் அவளின் நலன் விரும்பிகளாக இருந்தனர்.


எனக்கு யோசனையாக இருந்தது. அஞ்சலி, தனக்கு மெயில் அனுப்பும் மற்றவர்களைப் பற்றி சுந்தரிடம் சொல்லச் சொல்ல வேண்டுமா என்று. அவளின் நினைவடுக்குகளில் நான் தேடியபோது பிரிதொரு சமயம், இப்படியாக வருண் என்பவனுடனான் நட்பை அஜய் என்ற இன்னொரு நட்பிடம் சொல்லப்போய் அதனால் சில பிரச்னைகள் வந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. அது, அஜய், வருணுடனான அஞ்சலியின் நெருக்கத்தை தேடப்போய் கடைசியில் நட்பு முறிந்ததாக இருந்தது.


அவளிடம், மற்ற மெயில்களைப் பற்றி சுந்தரிடம் சொன்னால், சுந்தர் இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்கமாட்டான் என்று சொல்ல போதுமானதாக இருந்தது. ஒருவகையில் என்னை அப்படிச் சொல்ல வைத்ததும் அவளேதான். அவள்தான் என்னிடம், சுந்தரை என் நட்புவளையத்தில் பொருத்துவதாய் இருக்கவேண்டும் உன் கருத்துக்கள் என்றாள். அதே நேரம், என் ஏனைய நட்புகள் என்னிடமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் அவளேதான் நிர்பந்தித்தாள். அந்தக் கட்டளை அவளின் அடிமனதில் வாயில்களிலிருந்து வந்தது. நான் வேறு என்னதான் செய்ய. நான் சொல்லிவிட்டேன். அஞ்சலியும் அதையே தான் செய்தாள். அவள் சொல்லவில்லை. இது ஒரு சிறிய விடயம் என்றும் சுந்தரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் நட்பு முதிரவில்லை என்றும் என்னிடம் திணித்தாள்.


இதற்குப் பிறகு நிறைய நடந்தது. சுந்தரும் அஞ்சலியும் காதலித்தார்கள். அப்போது, அது நாள்வரை அவளுக்கு இதர மெயில்கள் அனுப்பியவர்களெல்லாம் தெரிந்தவர்கள் என்ற எல்லையைத் தாண்டி, நண்பர்கள் என்ற எல்லைக்குள் வந்திருந்தனர். அவர்களை நண்பர்கள் என்றே அறிமுகப்படுத்தினாள் சுந்தருக்கு. பின் அஞ்சலி சுந்தர் இருவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா வந்து திருமணம் செய்துகொண்டு ஒரு மாதம் தேனிலவை கொண்டாடிவிட்டு மீண்டும் லண்டன் வந்தனர். அவைகளைப் பற்றிய விளக்கங்களெல்லாம் இந்தக்கதைக்கு உதவாது என்றே நினைக்கிறேன்.


இப்போது அவர்கள் கணவன் மனைவி. இல்லறம் இனிதே தொடர்ந்தது. நாட்கள் மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியிருந்தது. எனக்குத் தான் தர்மசங்கடம் இனி. எனக்கு நானே முரண்பட்டுக்கொள்ளும் காலம் தொடங்கிவிட்டதல்லவா. ஒரு நாள், சுந்தர் எத்தனை மணிக்கு செயின்ஸ்பரி போகலாம் என்று அஞ்சலியிடம் கேட்டு மெயில் அனுப்ப, அஞ்சலியிடமிருந்து பதில் இருக்கவில்லை. எங்காவது மீட்டிங் செல்வதாயிருந்தால் அஞ்சலி சுந்தரிடம் மெயிலில் சொல்லிவிட்டு செல்வது அவனின் நினைவுகளில் பதிந்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று மெயில் அனுப்பியும் பதில் இல்லாததால் சுந்தர் அஞ்சலியின் இடத்திற்கு வந்தான். நானும் அவனுடன் இருந்தேன். அஞ்சலி அவளின் இருக்கையில் தான் இருந்தாள். யாருக்கோ மெயிலில் பதிலளித்துக்கொண்டிருந்தாள். அவள் எதற்கு பதில் எழுதிக்கொண்டிருந்தாளோ அது சுந்தர் மெயில் இல்லை.


அந்த பதில் அலுவலக பதில் போல் இல்லைதான். தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியது போன்று இருக்கவே சம்பிரதாயமாய் நான் சுந்தரின் எச்சரிக்கை உணர்வுகளை எழுப்பிவிட்டேன். நானென்ன செய்ய. அவனின் கற்பனைகளிலோ, நினைவுகளிலோ இப்படி இதற்கு முன் பதிந்ததில்லை.அவனின் எதிர்பார்ப்புக்களையும் மீறி இருந்தது அது. அதனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. அவள் சிவா என்பவனுக்கு பதில் அனுப்பிக்கொண்டிருந்தாள். நான் அவனை எச்சரிக்கையாக இருக்கும்படியும், தற்போது பார்த்ததை அவளுக்கு தெரியாமல் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னேன். அது ஏமாற்றமா, துரோகமா, வலிவில்லாத அபாயமில்லாத ஏதோ ஒன்றா என்று தெரிந்துகொள்ள வேண்டும் சுந்தருக்கு.


சுந்தர் தன் இருக்கைக்குத் திரும்ப வந்தான். அவள் இன்னேரம் அவனின் மெயில் பார்த்து பதில் அனுப்பியிருந்தாள். சுந்தர் அவளுக்கு ஃபோன் செய்தான்.

ட்ரிங் ட்ரிங். ஃபோன் எடுக்கப்பட்டது. மறுமுனையில் அவள்.

'ஹாய் டியர்' இது அஞ்சலி.

'ஹாய், ஹேய் ரிப்லை பண்ண இவ்ளோ நேரமா?' சுந்தர் வினவினான்.

'இல்லப்பா, ஒரு மீட்டிங்க்கு ப்ரிபேர் பண்ணிக்கிட்டிருந்தேன், அதான்'.

'சரி விடு, ஈவ்னிங் சிக்ஸ்க்கு செயின்ஸ்பரி போலாம். ஒ கே?'.

'ஆங் ஓ கே டியர்'.

'ஒ கே பை'. மறுமுனையில் ஃபோன் வைக்கப்பட்டது.

ஃபோனை மேஜையில் வைத்துவிட்டு அதனின்றும் கையை எடுக்காமல் விரல்களால் மெல்லியதாய் தட்டியபடியே அமர்ந்திருந்தான் சுந்தர். அவன் கண்கள் சன்னலினூடே தேம்ஸ் நதியில் செயற்கையாய் நீரோட்டம் உருவாக்கப்படுவதை வெறுமையாய் வெறித்துக்கொன்டிருந்தது. பொய் சொல்கிறாள். யாருக்கோ பதில் எழுதித்தான் நேரம் கடந்திருக்கிறது. ஆனால், தன்னிடம் மறைக்கிறாள்.


அஞ்சலியின் இந்த செய்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒருவேளை அவனுக்கும் அஞ்சலிக்கும்............??!! ஒரு பதிலளிக்கப்படாத கேள்வி உருவாகியிருந்தது. சுந்தரின் எல்லைக்குள் இந்தக் கேள்விக்கு எனக்குமே பதில் தெரியவில்லை. ஒருவேளை அஞ்சலியின் எல்லைக்குள் எனக்கு இதற்கான பதில் கிடைக்கலாம்.


நான் அஞ்சலியின் எல்லைக்குள் நுழைந்த‌ போது உண்மை புரிந்தது. அவள் க‌விதைக‌ளைச் சிலாகித்து வ‌ரும் ப‌தில்க‌ளை ப‌ர‌வ‌ச‌த்துட‌ன் பதிலனுப்பிக்கொண்டிருந்திருக்கிறாள். தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் எனக் கொண்டிருந்தாள். ஆனால் அவ‌ளுக்கு தெரிய‌வில்லை, அவ‌ள் க‌விதைக‌ளை சிலாகித்து எழுதிய யாரும் சுந்த‌ரின் க‌விதைக‌ளைப் பார்க்க‌க்கூட‌ இல்லை என்பது. அது ஏனென்று அவ‌ர்க‌ளின் எல்லைகளுக்குள் சென்றால் தான் என‌க்கு விள‌ங்கும். நான் சென்ற‌போது ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் தென்ப‌ட்டாலும் எதிர்பாலின‌ம் என்ற‌ கார‌ண‌மே பிர‌தான‌மாக‌த் தென்ப‌ட்ட‌து. ம‌னித‌ன் வில‌ங்கிலிருந்து வ‌ந்த‌வ‌ன் என்ப‌தை அடிப்ப‌டை குணாதிச‌ய‌ங்க‌ளில் நிரூபிக்க‌வே செய்கிறான்.


அவளைப் பொறுத்தமட்டில் அது அவளின் நட்பு. ஒரு நட்பு தரும் ஊக்கம். ஒத்த கருத்துடைய நண்பன் தன் படைப்பைப் பற்றி சிலாகிக்கும் நிகழ்வு. தன்னை ஊக்குவிக்கவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. சுந்தருக்கு இப்படி யாரும் செய்யவில்லை என்பதை அவள் உணர வாய்ப்பே இல்லை. அந்தக் கோணத்தில் யோசிக்கக்கூட தோன்றியிருக்கவில்லை அவளுக்கு. ஏனெனில், எதையும் ஆழ்ந்து யோசித்துப் பழகியிருக்கவில்லை. உறவுகளை ஆராய்ந்து பழகியிருக்கவில்லை அவள். தன்னிடம் வருபவர்களை அப்படியே நட்பாய் சுவீகரிக்க மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறாள். அஞ்சலி வெறும் நட்புறவாகத்தான் ஏனையோரிடம் பழகுகிறாள். ஆனால் அதை சுந்தரிடம் ஏன் மறைக்க வேண்டும். நான் அவளின் நினைவடுக்குகளைத் துழாவினேன். மறைக்க‌ வேண்டுமென்று அவ‌ள் ம‌றைத்திட‌வில்லை. மாறாக‌, இதெல்லாம் அற்ப‌ விஷ‌ய‌ம், இதையெல்லாம் சொல்ல‌ வேண்டிய‌ தேவையில்லை என்ப‌தாக இருந்தது. என‌க்கு புரிந்துவிட்ட‌து. அழகிய நட்பை அவள் இழக்க விரும்பவில்லை. ஆனால், இதை நான் சுந்த‌ரின் எல்லைக்குள் கொண்டு செல்ல‌ இய‌லாது. என‌க்கு அத‌ற்கு அதிகார‌மில்லை. ச‌க்தியில்லை. நான் மெளனித்துவிட்டேன்.


சுந்தர் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. உண்மைக்குத் தகுதியானவர்களாய் இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்றாவது ஒரு நாள். அவன் நினைவுகளில் நின்ற, கல்லூரிப் பருவத்து நண்பனொருவன் திருமணமான பெண்ணை வளைத்ததைப் பற்றிச் சொன்ன சமாச்சாரங்கள் இப்போது அஞ்சலியுடன் நடப்பதுடன் வெகுவாக ஒத்துப்போயின. சுந்தர் தோல்விகளை விரும்பாதவன். அவன் வாழ்க்கையில் தோற்க விரும்பவில்லை. அது அவன் குணாதிசயம். இப்படியிருக்கையில் எனக்கு வேறு வழியில்லை. நான் சுந்தரை எச்சரித்துத் தான் ஆகவேண்டும்.


'ஹேய் செல்லம், நீ கண்டிப்பா வேலைக்கு போகணுமா என்ன? நான் சம்பாதிக்கிறதே போதுமே' என்று படுக்கையறையில் கொஞ்சலுடன் ஆரம்பித்த சுந்தர், அஞ்சலியிடமிருந்து அவனுக்கு சாதகமாக பதில் வராது போகவே 'வீடு எப்படி கிடக்கு பாரு, கார்ப்பொரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி. இதெல்லாம் நீ கவனிக்கக்கூடாதா. இதக்கூட கவனிக்காம என்ன கிறுக்கல் வேண்டி கிடக்கு. எங்கம்மா வீட்டை எப்படி பாத்துப்பாங்க தெரியுமா? நடு வீட்ல சாதத்தை கொட்டி பாத்தி கட்டி திங்கலாம். அவ்ளோ சுத்தமா இருக்கும். பெருசா கிறுக்கறாளாம். நானும் தான் எழுதுறேன். ஒருத்தன் கூட பதில் போட மாட்டேங்குறான். அது சரி. நான் என்ன உன்ன மாதிரி பொட்டச்சியா' என்பதாக விரிந்தது.


நாளாக நாளாக, அவளைப் பற்றிய பதிலளிக்கப்படாத கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன‌. அவ‌ளுக்கு சுந்த‌ர் அனுப்பும் மெயில்க‌ளுக்கு தாம‌த‌மாக‌ ப‌தில் வ‌ருவ‌து வாடிக்கையாகிவிட்ட‌து. பிறிதொரு நாள், வேலை ப‌லு கார‌ண‌மாக‌ சுந்த‌ர் அலுவ‌ல‌க‌த்திலேயே தாம‌திக்க‌ நேரிட‌, அன்றைக்கென்று தினா அவ‌ளைத் காரில் அவ‌ள் வீட்டில் ட்ராப் செய்திருக்கிறான். இப்ப‌டியான‌ ட்ராப்க‌ள் த‌ன‌க்குக் கிடைப்ப‌தில்லை. இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. பதிலளிக்கப்படாத இன்னுமொரு கேள்வி. இப்போதெல்லாம், வினோத்தை அடிக்க‌டி அஞ்ச‌லியுட‌ன் தேனீர் இடைவெளிக‌ளில் பார்க்க‌ முடிகிற‌து. ஊர்ல இருக்கிறவன்லாம் டைம்பாஸ் பண்ற‌துக்கா நான் பொண்டாட்டி கட்டி வச்சிருக்கேன். சுந்தர் வார்த்தைகளால் கருவினான். ஏமாற்றம் அறவே பிடித்தமில்லை சுந்தருக்கு. அது அவன் குணாதிசயம். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பதில்கள் இல்லாத நிலையில் தனக்கே தனக்கென்று நினைத்த இதயத்தில் தனக்கென்று ஒரு சிறு பகுதிதான் அளிக்கப்பட்டிருக்கிறதென்று உருவகித்துக்கொண்டுவிட்டான் அவன். அந்த ஏமாற்றம் அவனை மிகவும் எரிச்சலூட்டியது. தான் ஒரு கதா நாயகன் என்று நினைத்திருந்த இடத்தில், பத்தோடு பதினொன்றாகியிருக்கிறோம் என்ற நினைப்பை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.


அஞ்சலியிடம் வேலையை விடச்சொல்லிக் கெஞ்சியதில் அவள் மிஞ்சித்தான் போனாள். நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ விஷ‌ய‌ம் கைமீறிப் போய்க்கொண்டே தான் இருக்கிற‌து. முன்பாவது மெயில்களுடன் நின்றது இப்போது வீடு வரை ட்ராப், காபி பிரேக், வீக்கென்ட் விசிட் என்று போகிறது. இரண்டொரு முறை இதையெல்லாம் அன்பாய் எடுத்துச்சொல்லப்போய், அஞ்சலியிடம் நாரோமைன்டட் என்று பெயர் வாங்கியதுதான் மிச்சமானது.


தான் எதிர்பார்த்த வேலையை உதவியாளனை சரியாக செய்ய வைக்க, முதலில் கண்ணாபின்னாவென்று கத்த வேண்டும். அடங்கித்தான் போக வேண்டுமென்கிற நிர்பந்தத்துடன் இருக்கும் உதவியாளன் நிச்சயம் பணிந்து போவான். எதிர்பார்த்த வேலையை தானாகச் செய்வான் என்று உலகம் கற்றுத்தரும் பாடம் அவன் நினைவடுக்குகளில் பதிந்திருந்தது. அன்பாய் சொல்லியும் அஞ்சலி கேட்கவில்லை. இப்போதைக்கு கைமீறிப்போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை கட்டுக்குள் கொண்டு வர வேறெந்த உபாயமும் தெரியாத பட்சத்தில் எனக்கும் சுந்தரின் எல்லைக்குள் வேறு வழியிருக்கவில்லை. அந்த யுக்தியையே சுந்தருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதாயிற்று வேறு வழியே இல்லாமல்.


சுந்தர் அதையே பிரயோகித்தான். 'எப்ப பாத்தாலும் ஏன் கண்ணாடி முன்னாடி நிக்கிற. பெரிய மேனா மினுக்கியா நீ. ராம்ப் ஷோவுக்கா போகப் போற? இப்ப பல்லிலிக்கிறவன்லாம் பத்தாதா உனக்கு? இதுல ஜிம் வேறயா. வாய்க்கு ருசியா சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு. எங்கம்மா அவ்ளோ நல்லா சமைப்பாங்க தெரியுமா. நீ மினுக்கிகிட்டு, ஜிம் போய்ட்டு அவசர அவசரமா சமைச்சா எப்படி நல்லா இருக்கும். கண்றாவி. இதெல்லாம் ஒரு டிபனா' என்ற அவனின் உருமல்கள் அவளின் பெருவாரியான நேரத்தை வீட்டிலேயே செலவிடும்படி சொல்லும் நோக்கமுடையதாகவே இருந்தது.


அஞ்சலி சுந்தருக்குமான சண்டை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தது. ' லவ் இஸ் பிளைண்ட்னு சொல்றது உண்மைதாண்டி. ஹி வாஸ் நாட் லைக் திஸ் பிஃபோர். லவ் பண்றப்போ கண்ணே மணியேன்னு கொஞ்சறது. கல்யாணம் ஆனதுக்கப்புறம் நாயே பேயேன்னு திட்றது. சுந்தரும் எல்லா ஆம்பிளைங்க மாதிரி இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லடி' என்பதாக தோழிகளுடன் புலம்பித்தீர்த்தாள் அஞ்சலி.


நான் அஞ்சலியை பார்த்து பரிதாபம் கொண்டேன். அவளுக்கு உண்மை புரியவில்லை. சுந்தருக்கும் தான். ஏனெனில் நான் விசித்திரமானவன். ஒருவரின் எல்லைக்குள் நடக்கும் எந்த விஷயத்தையும் அடுத்தவரது எல்லைக்குள் தானாய் பிரவேசிக்கச்செய்ய எனக்கு சக்தியில்லை. என்னில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. சரியும் உண்டு, தவறும் உண்டு. ஆனால் எதையும் நானாக உருவாக்குவதில்லை. நான் எந்த மனிதனிடம் இருக்கிறேனோ, அந்த மனிதனின் குணாதிசயங்களை, பண்புகளை, விருப்பு வெறுப்புக்களை, வாழ்க்கையில் அதுவரை கற்ற பாடங்களை, கடந்து வந்த நிகழ்வுகளைப் பொறுத்தே நான் அவனை வழி நடத்தமுடியும். அதனால், என்னைக் குறை சொல்வது அறிவீனம். முட்டாள்த்தனம்.


பிற்பாடு நடந்தவைகள் எதுவும் என் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவர்கள் உணர்வுகளால் என்னை பலவீனப்படுத்தியிருந்தனர். ஆத்திரமும், கோபமும், துவேஷமும் கொண்டு என்னிடமிருந்து தொடர்ச்சியாக வார்த்தைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தனர். அஞ்சலியிடன் பெண் சுதந்திர எண்ணங்கள் அதிகம் இருந்தன. நானறிவேன். யாரிடமும் அடிமையாக இருக்க தான் தயாராக இல்லையெனக் கருவினாள். அவளை ஊக்குவிக்க அனேகம் பேர் இருந்தனர். அந்த ஊக்குவிப்புகளுக்கான நோக்கங்கள் வேறு என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை. ஐந்திலக்க ஊதியமும், அந்நிய நாட்டு கலாச்சாரமும் அவர்களின் பேச்சும் அவளுக்கு தைரியம் தந்திருக்கவேண்டும். சுந்தருக்கும் பொறுமையில்லை. தன் கட்டுப்பாட்டை மீறி அவள் சத்தம் போடுவது அவனை எரிச்சலூட்டியது. நாலு கால் பாய்ச்சலில் முந்திக்கொண்டு விவாகரத்து பத்திரம் நீட்டினான் சுந்தர். நான் மட்டுமென்ன சளைத்தவளா என்பதாக ஆவேசமாய் கையழுத்திட்டாள் அஞ்சலி. நிதானமின்றி உணர்வுகள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டன. அவைகள் ஆசுவாசம் கொண்ட நொடிகளில் அவர்கள் இருவரும் நிரந்தரமாய்ப் பிரிந்திருந்தனர்.


பதிலளிக்கப்படாத கேள்விகள் அவர்களின் திருமண வாழ்வை சிதைத்திருந்தன. அஞ்சலி, சுந்தரை சந்தேகப் பேய் என்று கூடச் சொல்லலாம். சுந்தர் அஞ்சலியை திமிர் பிடித்தவள் என்று ஒதுக்கியிருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியும் இந்த பதிலளிக்கப்படாத கேள்விகள் தான் இவர்களின் திருமண வாழ்க்கை சிதைக்கப்பட்டதற்குக் காரணம்.


உண்மையில் எந்த ஒரு ஆண்மகனும் தன் மனைவியையோ, காதலியையோ வேற்று மனிதர்களுடன் நட்பு ரீதியாய் பேசவோ, அலுவலக ரீதியில் இணைந்து செயலாற்றிடவோ தடை சொல்லும் அளவிற்கு அறிவில் முதிர்ச்சியடையாதவர்களாய் இருப்பதில்லை. அப்படி செயலாற்றினால், உடனே அதற்கு பாலியல் ரீதியான காரணங்கள் கற்பித்து பெண்ணை ஒதுக்கிவிடுபவர்களாக‌ இருப்பதில்லை. மாறிவரும் புதிய உலகில், முதிர்ந்து வரும் சமூக சூழ்நிலையில் இதெல்லாம் பெரிய விஷயமாக கருதப்படுவதில்லை. ஆனால் எதற்குமே ஒரு எல்லை உண்டு. எதுவுமே ஒரு பதிலளிக்கப்படாத கேள்விகள் உருவாகும்வரை தான். பதில்களில்லாத கேள்விகள் வரும் அளவிற்கு ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் கேள்வி. பதிலளிக்கப்படாத கேள்விகள் வளரும் தன்மை உடையன. அவைகள் வளர்ந்தால், அது நாளடைவில் சந்தேகமாய் உருவெடுக்கின்றன‌


கணவன் மணைவிக்கிடையிலோ, அல்லது காதலர்களுக்கிடையிலோ இது போன்ற பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கிடைக்கப்பெற்றால், பிரச்சனைகள் வரவேண்டிய தேவை இராது. நான் சங்கடப்பட வேண்டிய அவசியமும் இராது. இப்போது நீங்கள் சொல்லுங்கள். இது போலொரு திருமண முறிவை அல்லது காதல் முறிவை இப்பூலகில் எங்கோ யாருக்கோ என‌ நீங்கள் கடந்திருக்கிறீர்களா?- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
காற்றுவெளி செப்டம்பர் (2010) மாத இதழ்

Wednesday, 18 August 2010

தங்க பிஸ்கட்ஸ் - சிறுகதை
தங்க பிஸ்கட்ஸ் - சிறுகதை

'என்ன பாண்டி, என்ன விசேஷம், நீ சும்மா கூப்பிடமாட்டியே?' மஃப்டியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் அந்த ஒதுக்குப்புரமான உள்ளடங்கிய சந்தில் நின்றபடி சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்.


'வழக்கம்போலதான் சார். 25 கோடி மேட்டரு. ஃபுல்லா தங்க பிஸ்கட்டு. திருப்பிவிட்றதுக்கு சொல்லிருக்கானுங்க. போன தபா மாரி சல்லிசு கெடையாது. அதான் சொல்ட்டு போலான்னு சார்'.


'ம்ம்..என்னிக்கி?'.


'நாளன்னைக்கு சார்'.


'ம்ம் ..55 கோடின்னு மெஸேஜ் வந்திச்சே'.


'அது தெர்ல சார். என்கிட்ட 25 தான் சார் சொன்னாங்க. மீதியை வேற யார்னா கிட்ட கூட குட்த்ருக்கலாம் சார்'.


'ம்ம்.. வ‌ர‌வ‌ர‌ நீங்க‌ல்லாம் கூட‌ கார்ப்ப‌ரேட் மாதிரியே ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டீங்க‌டா. ஒருத்த‌ன வ‌ச்சே கைமாத்துற‌தில்ல‌.'


'ஆமா சார், நாங்க‌ளும் பொழைக்க‌ணும்ல‌'


'அட‌ப்பாவிங்களா, இதுல‌ நியாய‌ம் வேற‌யா'


'என்னா சார் ப‌ண்ற‌து. அப்ப‌ன் ஆத்தா ப‌ண்ண‌ த‌ப்பு. ப‌டிப்பு இல்ல‌. ஆனா வ‌யிறுன்னு ஒண்ணு இருக்குல‌. ஆர‌ம்பிச்சாச்சு. பின்னால‌ போக‌ முடியாது சார். வாழ்வோ, சாவோ இதுல‌தான் சார். திருந்துரேன்னு சொன்னாலும் ஒலகம் எங்களையெல்லாம் ஒத்துக்கவா போவுது?'.


'ம்ம்.. ஹீரோலேர்ந்து வில்லன்வரைக்கும் எவ‌ன‌ கேட்டாலும் இது ஒண்ணு சொல்லிடுங்க‌. ச‌ரி என்னா ப்ளான்'.


'பாக் ரூட்ல‌தான் சார். க‌ட‌ல்ல‌யே கைமாத்த‌னும் சார். வ‌ழ‌க்க‌ம்போல‌ கைமாத்ன‌ப்புற‌ம் நான் போய்டுவேன். நீ புட்சிக்க சார். இல்ல‌னா என்னைய‌ போட்ருவானுங்க‌'.


'ம்ம்..சரி, ஆனா இந்த‌ த‌ட‌வ‌ ஒன்னையே புடிக்க‌லாம்னுதான் இருக்கேன்'.


'அது ஒன்னால‌ முடியாது சார்'.


'டேய், என்கிட்ட‌யே ச‌வாலா? நான் போலீஸூடா. நீ க‌ட‌த்த‌ல்ப‌ண்ற‌வ‌ன். நினைப்புல‌ இருக்க‌ட்டும்'.


'அது இருக்கு சார். ஆனா ஒன்னால‌ என்ன‌ ச‌ர‌க்கோட‌ புடிக்க‌ முடியாது சார்'.


'என்னடா சவாலா?'.


'அத்த‌ ஏன் சார் ச‌வால்னு சொல்ற‌. க‌த்துக்கோயேன்'.


' நானா? ஒன்ட்ட‌யா? நேர‌ம்டா'.


'இதுல‌ இன்னாசார் கீது. யார்ட்ட‌னாலும் க‌த்துக்க‌லாம் சார். ஒன்ன டபாய்ச்சி நான் கைமாத்திட்டா அப்ப நான் கில்லாடிதானே சார். ஒரு கில்லாடி இன்னொரு கில்லடி கிட்ட கத்துக்கலாம்தானே சார்.'


'ம்ம் நல்லாதான் பேசற. சர்டா சவால்டா. ஒன்னைய நாளன்னைக்கு புடிக்கிறேன்டா. சரக்கோட. மவனே ஓடிடாத. ஒழுங்கா வந்து சேரு'


சொல்லிக்கொண்டே சதாசிவம் திரும்பி, சந்து முனையில் நிறுத்தியிருந்த தன் பைக்கை நோக்கி நடக்கலானார். பாண்டி அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தான். சில‌ர் அடிப்ப‌டையில் மனசாட்சி சொல் கேட்கும் உத்தமர்களாய் பிற‌ந்திருப்ப‌ர். கால‌மும், வ‌ள‌ரும் சூழ‌லும் அவ‌ர்க‌ளை கெட்ட‌வ‌ர்க‌ளாக்கியிருக்கும். பாண்டி அப்ப‌டித்தான் க‌ள்ள‌க்க‌ட‌த்த‌ல் தொழிலுக்கு வ‌ந்திருந்தான். அடிப்ப‌டையில் ந‌ல்ல‌ ர‌த்த‌ம் இருந்த‌த‌னாலோ என்ன‌மோ ம‌ன‌சாட்சி உறுத்த‌, ஒரு க‌ட்ட‌த்தில் தேச‌துரோக‌ம் செய்ய‌ ம‌ன‌ம் கோணாம‌ல், அதே நேர‌ம், க‌ள்ள‌க்க‌ட‌த்த‌லிருந்து முழுமையாக‌ வெளிவ‌ர‌வும் முடியாம‌ல் குழம்பியிருந்தவனை ஒரு கேஸ் விஷயமாக விசாரித்ததில் தெரியவந்தது.


திருந்தவேண்டுமென நினைப்பவனுக்கு ஒரு வடிகால் கிடைத்தே ஆகவேண்டும். இல்லையென்றால், இனி திருந்தியென்ன என்பதாய் கள்ளத்தனத்திலேயே மூழ்கிப்போய்விட வாய்ப்புள்ளது. அப்போதுதான், அவனை இன்ஃபார்மராய் செயல்பட வைக்கும் எண்ணம் வந்தது. கள்ளத்தனம் செய்து கொண்டே இதையும் அவனை செய்ய வைக்க, சல்லிசாக வரும் கடத்தல்களை வேண்டுமென்றே பிடிக்காமல் விட்டுவிட்டு, அளவில் மற்றும் விளைவுகளில் பெரியதாக இருக்கும் கடத்தல்களில் அவன் கைமாற்றிய பின்னர், அடுத்தவர் கைகளில் சரக்கு இருக்கையில் பிடித்துவிட்டு, அவனைதேசத்துரோகம் செய்ததான குற்ற உணர்விலிருந்து காப்பாற்றி, அவனுக்கு பாதகமில்லாமல் அவனுக்கான வடிகால்களை கொடுப்பதுதான் சதாசிவத்தின் எண்ணம். இதனால் சதாசிவத்துக்கும் கேஸ் கிடைக்கிறது. பாண்டிக்கும் தான் ஒரு தேசத்துரோகி இல்லை என்ற எண்ணம் அவனை வாழ வைக்கிறது. இரண்டுபக்கமும் லாபம்.


சரியாக அவன் கைமாற்றிவிட்டு போனதும், ரெகுலர் ரெய்டில் பிடிப்பதுபோல் பிடித்துவிட்டு ஒருவாறாக இது நாள்வரை நிறைய கேஸ் பிடித்தாகிவிட்டது. பாண்டிக்கு சரியான க்ரிமினல் ப்ரெய்ன். போலீஸில் சேர்ந்திருந்தால் பக்காவான துப்பறியும் போலீஸ் ஆகியிருப்பான். அவனிடம் சவால் விட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஒருவேளை அவன் சொன்னது போல் தனக்கு உண்மையாகவே டிமிக்கி கொடுத்துவிடுவானோ என்று தோன்றியது. அப்படி அவன் செய்துவிட்டால், போலீஸ்ன்னு கெத்து காமிக்க முடியாதே. அதற்காகவேனும், அவனை சரக்குடன் பிடிக்கவேண்டும். சதாசிவம் பைக்கில் வீடு செல்லும்வரை இதே நினைப்பாகத்தான் இருந்தார்.


அவன் கைமாற்ற இருப்பது 25 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை. 24 காரட் தங்கம். ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடிக்கருகில், கடலில் 20 நாட்டிகல் மைல் தொலைவில் பாக் பே என்ற இடம் வருகிறது. அந்த ரூட் வழியாகத்தான் புலிகளுக்கான ஆயுதங்கள் கடத்தல்கள் பல நடந்திருக்கின்றன. இப்போதும் அதே ரூட்டில்தான் கடத்தப்போகிறான். எப்படியாவது பிடித்துவிடவேண்டும்.


அடுத்த நாள் முழுவதும் சதாசிவத்திற்கு அதே சவாலின் நினைப்பாகவே இருந்தது. அதற்கடுத்த நாள், மதியம் மணி மூன்று. இந்தியன் நேவியின் கோஸ்ட் கார்டு கப்பலில் ரோந்து வந்துகொண்டிருந்தார் சதாசிவம். தூரத்தில் ஒரு சின்ன கப்பல் தலைமன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாண்டியின் கப்பலாகத்தான் இருக்கும். அருகே செல்லச் செல்ல ஊர்ஜிதம் ஆயிற்று. பாண்டியின் கப்பலேதான். பெட்ரோல் இன்ஜினில் ஓடும் சிறிய ரக, மீன் பிடித்தலுக்கு பயன்படும் கப்பல். கப்பலை நிறுத்தச்சொல்லி வந்த கட்டளைக்குப்பணிந்து பாண்டி கப்பலை கோஸ்ட் கார்டு கப்பலுக்கருகில் நிறுத்தினான்.


சதாசிவம், இன்னும் இரண்டு போலீஸ் ஆட்களோடு பாண்டியின் கப்பலில் இறங்கினார். தேடுதல் வேட்டை தொடங்கியது. கப்பலின் கீழ்த்தளம், ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மரத்தாலான பெட்டி, இன்ஜின் ரூம், பின்பக்கம், முன்பக்கம் என எல்லா இடத்திலும் தேடப்பட்டது. மெகானிக் பாக்ஸில் வெறும் இன்ஜின் பழுதுபார்க்கும் இரும்பாலான‌ சாதனங்கள் மட்டுமே இருந்தன. தண்ணீரில் மிதப்பதான காற்றடைக்கப்பட்ட உருளை வடிவ ரப்பர் குழாய்கள், கத்தியால் கிழிக்கப்பட்டன. வெறும் ரப்பர் தோல்களே மிஞ்சியது. இன்ஜின் இருக்கும் இடத்தில் இன்ச் விடாமல் தேடப்பட்டது. மிதமிஞ்சி கொட்டப்பட்ட க்ரீஸ், துருப்பிடித்த இரும்பு சாமான்களுடன், கள்ள மார்க்கெட்டில் கிடைக்கும் தரம் குறைந்த உதிரி பாகங்கள் மட்டுமே கிடைத்தன.


பாண்டி நின்றிருந்த இடத்தின் கீழ், அவன் பாதங்களுக்கு அடியில் பத்து சென்டிமீட்டர் சதுர இடைவெளியில் ஸ்க்ரூக்கள் இருந்தன. அதில் ஒரு பக்கமான இரண்டு ஸ்க்ரூக்கள் சமீபத்தில் திருகப்பட்டதான தோற்றத்தில் இருந்தன. பொதுவாக ரகசிய அறை செய்து கடத்துபவர்கள், ரகசிய அறைக்கான கதவின் ஸ்க்ரூக்களை நெம்புவ‌தால், அந்த இடம் சற்றே வித்தியாசமாக புதிது போல் இருக்கும். சதாசிவம் ஒரு புன்முருவளுடன் அவனை தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு அந்த ஸ்க்ரூக்களை திருகித் திறக்க உள்ளே காலியாக இருந்தது. பாண்டி முகத்தில் எந்தவித உணர்வும் அற்று நின்றிருந்தான்.


சுருங்கிய நெற்றியுடன், தொடர்ந்து தேடிய சதாசிவத்திற்கு ஏதோ பொறி தட்ட, சட்டேன கப்பலின் பின்னே பார்த்தார். மீன் பிடிக்க உதவும் தூண்டில்கள் நாலைந்தில் ஒவ்வொன்றிலும் ஒரு பெரிய மீன் இறைச்சி கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. ஏன் தொங்கவிடப்படவேண்டும். இறைச்சி தொங்கினால், சுறாக்கள் வரும். சுறாக்களை ஏன் வரவைக்க வேண்டும். சதாசிவத்திற்கு வித்தியாசமாய்த் தோன்றியது. இந்த சமயத்தில் ஏனோ அவருக்கு நாயகன் கமல்ஹாச‌னெல்லாம் நினைவுக்கு வந்து போனார். உடனே ரோந்துக்கப்பலிலிருந்து இரும்புக்கூண்டு ஒன்று கடலில் இறக்கப்பட்டது. அதனுள் இறங்கிய‌ அவர், கப்பலின் கீழேயும் சென்று தேடினார். எந்தப் பெரிய பெட்டியோ அல்லது மூட்டையோ தொங்கிக்கொண்டு இருக்கவில்லை. கப்பலைச் சுற்றிச்சுற்றி முக்கால் மணி நேரத் தேடலுக்குப்பின் பாண்டி வேண்டுமென்றே தன் கவனத்தை திசைதிருப்ப இப்படிச் செய்திருக்கலாமென்று தோன்றியது.


சதாசிவம் மேலே வந்தார். ஒரு வேளை பாண்டி வந்திருப்பது பைலட் வண்டியாக இருக்கலாமென்று பட்டது. வாகனங்களில் கள்ளக்கடத்தல் செய்பவர்கள், சரக்கு எடுத்துச் செல்லும் வண்டிக்கு முன்பாக ஒரு டம்மி வண்டியை அனுப்பி வேவு பார்ப்பது வழக்கம். அந்த மாதிரி வண்டிகளையே பைலட் வண்டி என்பார்கள். மேலே வந்ததும் ராடார் உதவியுடன் பார்த்ததில் 30 நாட்டிகல் மைல் ரேடியஸ்ஸில் வேறெந்த கப்பலும் தென்படவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. பாண்டி இன்னும் கடத்தவில்லை. ஒரு வேளை அவனை மேலே போகவிட்டால், அடுத்த கட்டத்தில் மாட்டலாமென்று பட்டது. பாண்டி விதியே என்று கடலை வெறித்தபடி சதாசிவத்தின் அனுமதிக் கையசைப்பிற்க்கு காத்து நின்றிருந்தான். சதாசிவம் கோஸ்ட் கார்டு கப்பலில் ஏறிக்கொண்டு, கையசைக்க பாண்டி தன் கப்பலை தொடர்ந்து தலைமன்னாரை நோக்கி செலுத்தினான். சதாசிவம் பாண்டியின் கப்பல் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.


ஒரு அரை மணி நேரத்தில் பாண்டியின் கப்பல் கண்களை விட்டகன்றது. ஆனாலும் வேறெந்தக் கப்பலோ, ராடாரில் சமிஞ்கைகளோ தெரியவில்லை. அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. சதாசிவத்துக்கு ஏமாற்றமாக இருந்தது. பாண்டி கப்பலில் துரும்பு விடாமல் சோதித்தாகிவிட்டது. தங்கக் கட்டிகள் நல்ல தின்மையுடன் கூடிய எடை இருக்கும். அப்படி ஒரு எடையுள்ள சமாச்சாரத்தின் இருப்பைக் கொண்டது போலவே தோன்றவில்லை அந்தச் சின்ன கப்பல். அளவில் சிறியதாய் இருந்ததால், அந்தக் கப்பலில் மறைத்துவைக்க நிறைய இடங்கள் இருக்க வாய்ப்பில்லை.


சதாசிவம் இரவு வெகு நேரம் வரை காத்திருந்தார். வேறெந்தக் கப்பலும் வரவில்லை. ஆனால், எப்படியோ தங்கக் கட்டிகள் கைமாறிவிட்டதாக போலீஸ் இலாக்காவிற்கு தகவல் வந்தது. இலங்கை வழியாக பே ஆஃப் பெங்கால் கடல் வழியே இந்தோனெஷியாவிற்கு கடத்தப்படப் போவதாக வந்த தகவலை அடுத்து, பே ஆஃப் பெங்கால் கடலில் வளைத்துப் பிடித்தது தமிழ் நாடு கோஸ்ட் கார்டு போலீஸ்.


பாண்டி பெரிய கில்லாடிதான். நிரூபித்துவிட்டான். ஆனால் எப்படிக் கடத்தியிருப்பான். அவனுடைய கப்பலை அக்குவேறு ஆணிவேறாக சல்லடை போட்டுத் தேடியாகிவிட்டதே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், அது மிகச் சிறிய கப்பல். அதில் இத்தனை பெரிய சரக்கை கடத்துமளவிற்கு இடமோ, வசதியோ இருக்காதே. இவனுக்கெல்லாம் கடத்தல் மன்னன் என்று தான் பெயர் வைக்கவேண்டும். சதாசிவத்துக்கு அவன் மேல் லேசாக ஒரு மரியாதை வந்தது.


இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே குறுக்குச் சந்து.


'என்ன வேலு பாய், எப்படியிருக்க' இது சதாசிவம்.


'வேலு பாயா, இன்னா சார் இப்டிலாம் கூப்டுற.' இது பாண்டி.


'ஆமா, சொன்ன மாதிரியே கடத்திட்டல. பெரிய ஆளுடா நீ. ம்ம் சரி, எப்டி கடத்தின'


'ஆங்..அதுவா சார்.. அதே கப்பல்ல தான் சார்'.


'அது தெரியுது.. ஆனா, நாந்தான் முழுக்க தேடினேனே. அதுல இல்லயே. அப்புறம் எப்படி கடத்தின?' தெரிந்து கொள்ளாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் தோரனையில் கேட்டார் சதாசிவம்.


'சார், நீ இன்ச் வுடாம தேடுவன்னு தெரியும் சார். அதான் அந்த தங்கத்தலாம் அப்டியே உருக்கி ப்ளேட் மாதிரி பண்ணி, மேல பெயிண்ட் அடிச்சி, கப்பலோட அடீல ஸ்க்ரூ போட்டு முடுக்கிட்டேன் சார். மிதக்கற கப்பல்ல நீ கவின்ச்சிருக்க மாட்ட சார்'. அமைதியாக பாண்டி அதைச் சொல்லச் சொல்ல வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் சதாசிவம்.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3287)

பின் குறிப்பு : என் சிந்தனையில் உருவான இந்தக் கதையின் கருவை, அதாவது தங்கக் கட்டிகளை உருக்கி கடத்தப்பட இருக்கும் வாகனத்தின் ஒரு பாகமாக மாற்றிக் கடத்துவதான கருவை சற்று மாற்றி பின்வருமாறும் எழுதலாம். நான்கு சக்கர வாகனத்தின் பானட், டிக்கி, கதவுகலாகவோ அல்லது ஏதொரு இருசக்கர வாகனத்தின் உதிரி பாகமாகவோ அல்லது தங்கத்தை வைக்க இருக்கும் ஏதொரு கண்டேய்னரகவோ மாற்றி எழுதலாம். அப்படி எழுதப்பட்டால் அது இக்கதையை திருடியது போன்றதே ஆகும். இக்கதையின் கருவை பயன்படுத்த நினைப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 9 August 2010

வண்டுகள் மொய்க்கும் பூ - சிறுகதை

'வ‌ண்டுகள் மொய்க்கும் பூ' என்ற தலைப்பில் , நான் எழுதிய‌ சிறுகதை, ஆகஸ்ட் மாத காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 18வது பக்கம், மற்றும் சிறுகதையின் கடைசி பக்கங்களின் பிரதிகள் இங்கே.


வண்டுகள் மொய்க்கும் பூ - சிறுகதை


'அப்பா வர நேரம் ஆச்சு. பக்கத்து நாடார் கடைல டீத்தூள் வாங்கிட்டு வா டீ. எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்ருக்கேன்'

'தோ போறேன்மா, தொணதொணங்காத'

வசந்தி நிலைக்கண்ணாடி முன் நின்று அழகாய் ஸ்ட்ரெய்டன் செய்யப்பட்ட கூந்தலில் சில கற்றைகளை முகத்தில் வழிய விட்டுவிட்டு க்ளிப் போட்டு இறுக்கி, முகத்தை சற்றே சாய்த்து இதழோரம் ஒரு விஷமப்புன்னகையை வடித்துத் தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். மெரூன் நிற சல்வார் அவளின் ஐந்தடி ஆறங்குல‌ உயர ஐம்பது கிலோ உடலை சிக்கென்று பிடித்திருந்தது. பெண்களே பார்த்தால் பொறாமை கொள்ளும் உடல்வாகை தன்னிடமே பார்த்து பார்த்து அவள் மனம் அந்தரத்தில் உயர உயர பறந்துகொண்டிருந்தது. கற்பனைகளின் வானில் ஓங்கிய கழுகென அவளைப் பறக்கச்செய்தது. மனம் குதூகளித்தது. உடல் சிலிர்த்தது.
வசந்தி வாசலுக்கு விரைந்தாள். ஏற்கனவே கண்ணாடி முன் நின்று அதிக நேரம் செலவிடுவதாய் போவோர் வருவோரிடமெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறாள் அம்மா. இன்னும் சற்று நேரம் தாமதித்தாலும் அம்மா பெரிதாகக் கத்தக்கூடும். வாசலுக்கு விரைந்தவளை வாசல் சற்று நேரம் தாமதிக்கவே செய்தது. அவளின் உயரத்திற்கும், உடைக்கும், மெருகேற்றிய அழகிற்கும் பொருத்தமான காலனி இல்லாதிருப்பது இம்முறை வெளியில் செல்ல எத்தனிக்கும் போதும் உறுத்தியது. உயரே பறந்து கொண்டிருக்கையில் சட்டேன தரையில் சுருண்டு விழுந்தது போலான உணர்வைத் தந்தது. குதூகளித்த மனம் சட்டென வாடிப்போனது. சிலிர்த்த உடல் சற்றே வியர்த்தது..
சற்றும் பொருத்தமில்லாமல், கல்லூரி லேப்பிற்கு செல்கையில் அணியும் கருப்பு நிற லெதர் கட் ஷூவை அணிந்து தெருவில் இறங்கினாள். வேறுவழியில்லை. அது ஒன்றுதான் இப்போதைக்கு உறுப்படி. வைத்திருந்த இன்னொன்று கிழிந்துவிட்டது. பேசாமல் ரூமிற்கு திரும்பப் போய் சாதாரண உடை அணிந்துகொண்டு கடைக்குப் போகலாமா என்று கூட எண்ணம் வந்தது. ஆனால், இப்போது மீண்டும் ரூமிற்குள் அடைந்தால் அம்மா மீண்டும் கத்தக்கூடும். தெருவே இவள் நடந்து செல்வதை ரசித்தது. பலர் பால்கனி வழியே எட்டிப்பார்த்தனர். சிலர் பின்னால் நடந்தனர். ஆனாலும் வழியெங்கும் இருப்பு கொள்ளவில்லை.


கடந்து செல்லும் எல்லோரும் தன்னை விட பொருத்தமில்லாத தன் ஷூவையே கவனிப்பதாய் தோன்றியது. கடைக்கார பையன் இவள் வந்ததும் இவளுக்கே முன்னுரிமை கொடுத்தான். இன்முகத்தோடு உடனே டீத்தூள் எடுத்துக்கொடுத்தான். எடுத்துத் தருகையில் அவன் நடவடிக்கை சற்றே பதட்டப்படுவதை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போலிருந்தாள். இவனேதான் ஒரு முறை வீட்டிற்கு அரிசி சிப்பம் கொண்டு வந்த போது அவளை தாவணியில் பார்த்துவிட்டு அழகாக இருப்பதாக சொல்லிச் சென்றான். அந்த நிமிடம் அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் ஒவ்வொருமுறை வரும்போதும் அவனைக் கடந்து போகத் தூண்டியது. அப்படிப் போகையில் அவன் அவளின் அழகைப்பற்றி ஏதேனும் சொல்கிறானா என்று கவனிக்கத் தோன்றியது. ஆனால் இப்போது டீத்தூள் வாங்கிவிட்டு வீடு வரும் வரை பொருத்தமில்லாத ஷூ நினைப்புதான்.


வேறு யார் பார்ப்பதைப்பற்றியும் கூட வசந்தி அதிக‌ கவலைப்பட்டிருக்கமாட்டாள்.. ஆனால் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ரஞ்சித்தும் பார்த்துவிட்டதுதான் அவளை பாடாய்ப்படுத்தியது. ரஞ்சித் அழகானவன். இவளைப்போலவே பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு முடித்திருக்கிறான். வேலைக்கு முயற்சிக்கிறான். திறமைசாலி. இப்போதிருக்கும் வீட்டிற்கு வசந்தியின் குடும்பம் புதியதாய்க் குடிவந்தபோது, ஒரு நாள் அவள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, ரஞ்சித் தான் முதன் முதலில் அவளிடம் வந்து பேசினான். அவள் அழகாய் இருப்பதாய் கூறினான். அவன் இயல்பாய் அவள் அழகைப் பற்றி புகழ்ந்ததாகத் தோன்றியது. அவன் பேச்சு அவளுக்கு வெகுவாய்ப் பிடித்திருந்தது. அவனை அடுத்தடுத்த முறை கடக்க நேர்ந்தபோதும் அதையே அவள் மனம் எதிர்பார்த்தது. நாளடைவில் நட்பாய் உருவானது. இவளுக்கு அவனை பிடிக்கும் தான். ஆனால் அவன் கண்ணில் இன்றைக்குப் பார்த்து பட்டுவிட்டோமே என்று தோன்றியது. வீட்டுக்கு வந்ததும் ஷூவைக் கழட்டிவிட்டு, டீத்தூள் பொட்டலத்தை மேஜைமீது எறிந்துவிட்டு, சோபாவில் பொத்தென்று விழுந்தாள். என்ன நினைத்திருப்பானோ? ச்சே.
ஏமாற்றமோ, அவமானமோ யாரோ ஒருவரிடத்தில் நேர்ந்தால், அந்த நிகழ்வு நாளடைவில் மறந்தாலும், அது சொல்லித்தரும் படிப்பினை மனதில் நின்றுவிடும். ஆனால், நாம் விரும்பும் மனிதர்களிடம் அது நிகழ்ந்துவிட்டால், அது ஒரு ஆலகால விஷம். நினைவில் நின்றே கொல்லும். சில அனுபவங்கள் உறவுகளின் முகத்தில் விழிக்கக்கூட லாயக்கற்றதாக்கிவிடும்.
அப்பா மாத‌ச்ச‌ம்ப‌ள‌க்கார‌ர். அதுவும் பாங்க் உத்யோக‌ம். ச‌ம்ப‌ள‌ம் ஏழாயிர‌ம் தான். இப்போது அவ‌ள் அணிந்திருக்கும் மெரூன் ச‌ல்வார் கூட‌ போன‌ தீபாவ‌ளிக்கு எடுத்த‌துதான். அதுவும் ஆறு மாத‌ங்க‌ள் போல‌ காசு சேர்த்து, அந்த‌ தொகையில் எடுத்த‌து. போன‌ வார‌ம், ஸ்பென்ச‌ரில் விண்டோ ஷாப்பிங் செய்த‌போது பார்த்த‌ கால‌ணி பொருத்த‌மாக‌ இருக்கும்தான். ஆனால் விலை இர‌ண்டாயிர‌ம். அப்பாவிடம் கேட்டால் அடி கிடைக்கும். வ‌ச‌ந்தி நீண்ட‌தொரு பெருமூச்சுவிட்டாள். அப்பாவை எதிர்பார்த்து ப‌ல‌னில்லை.


புத‌ன்கிழ‌மை ஹின்டூவின் ஆப்ப‌ர்ச்சுனிட்டீஸ் பேப்ப‌ர் காற்றில் ஆடிக்கொண்டிருந்த‌து. வ‌ச‌ந்தி பேப்ப‌ரை எடுத்து பார்க்க‌த்தொட‌ங்கினாள். சில மெயில் ஐடிக்களை குறித்துக்கொண்டாள். ரெசியூம் கவனமாக அனுப்பினாள் மின்னஞ்சலில். அவளின் வேலைக்கான தேடல், ஒரு கட்டாயத்துடனே தொடங்கியது. பகல் பொழுதுகள் அவளின் வேலை தேடலுக்கான முயற்சிகளுடன் கழியத்துவங்கியது.


ஒரு நாள் அப்படி இன்டர் நெட் சென்டரில் மெயில் அனுப்பிவிட்டு வரும் வழியில் உள்ள பார்க்கில் ஒரு புதர் மறைவில் எதிர்வீட்டு ரம்யாவுடன் ரஞ்சித் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. ரம்யாவும் வசந்தியும் ஒரே வகுப்பில் தான் பொறியியல் படித்தனர். ரம்யாதான் வசந்திக்கு எப்போதும் போட்டி. அந்தப் போட்டி மனப்பான்மை இப்போது ரஞ்சித் விஷயத்திலும் தொடர்ந்தது. பொருளாதார நிலையைத் தவிர ரம்யாவுக்கும் வசந்திக்கும் பெரியதாக வேறு வித்தியாசமில்லை. ரம்யாவும் வசந்தி அளவுக்கு அழகுதான்.


பெரும்பாலான சந்தர்பங்களில் ரம்யா, வசந்தியை, அழகை வெளிப்படுத்தும் வகையில் தான் முந்துவாள். ரம்யாவின் குடும்பம் வசதியானது. பணத்திற்கு பஞ்சமில்லை. விதம்விதமான உடைகள், உடைக்கேற்ற காலணி, தோடு, உதட்டுச்சாயம் என ரம்யா ஒரு செட்டாகத்தான் வளைய வருவாள்.


என்றேனும் இது தனக்கு ஒரு பிரச்சனையாக வரும் என்பதை உணர்ந்தே இருந்தாள் வசந்தி. ஏனெனில், என்னதான் ரம்யாவும் வசந்தியும் போட்டியாளராக இருந்தாலும், அத்தனை பணம், வசதி, செல்வச்செழிப்பு கொண்டு ரம்யா செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும், வசந்திக்கு இயற்கை ஈடுகட்டி போட்டிக்கு நிறுத்தியது. ரம்யா, ஜிம்மிற்கு போய், உடலை கட்டுக்கோப்பாக வைத்தால், வீட்டு வேலைகள் வசந்தி உடலை பராமரித்தது. ரம்யா உயர் ரக உணவு சாப்பிட்டால், வசந்திக்கு பழைய சோறும், காய்கறிகளும், சில நேரங்களில் வறுமை தரும் பட்டினியும் ஆரோக்யம் தந்தது. வெளி நாட்டு அழகு சாதனங்கள் ரம்யாவின் அழகைக் கூட்டினால், சுற்றுப்புறம் தந்த அன்பாலும், அரவணைப்பாலும் வசந்தி முகத்தில் எப்போதும் பூத்தே இருக்கும் புன்னகை அவள் அழகைக் கூட்டியது.


ஆனால், இயற்கை அவளுக்குச் செய்யும் இம்மாதிரியான உதவிகள் அவளுக்குப் புரிந்ததே இல்லை. என்னதான் வசந்திக்கு ரம்யா போட்டியாக நின்றாலும், மேலோட்டமாக பார்த்தால் ரம்யாவின் வசதிதானே எல்லோருக்கும் கண்களுக்கு தெரியும். அழகு பெண்களின் அடையாளம். அறிவும் திறமையும் ஆண்களின் அடையாளம்.
சந்தித்துக்கொள்ளும் நொடிகளில், தன்னை அழகாய் வெளிப்படுத்திக்கொள்ளும் தன்னம்பிக்கை வாய்ந்தவளாய் ரம்யா இருந்துவிட, வறுமை தந்தவைகளை குறைகளாகக் காண நேர்ந்ததால் வெளிப்படுத்த சங்கோஜப்பட்டு வசந்தி ஓடி ஒளிய, ரஞ்சித்துக்கு ரம்யா வெகு சீக்கிரம் நட்பையும் தாண்டிய உறவாகிப்போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். வசந்தியின் நிறைகள் ரஞ்சித்தின் முதிராத அறிவின் கண்களுக்குத் புலப்பட்டிருக்கவில்லை. ரஞ்சித் அதை உணர்ந்திருக்கவில்லை.
பார்க்கில் அவர்களைப் பார்த்தபோது இப்படியும் நேரலாம் என்பது வசந்தி அனுமானித்தது தான். அது அவளை ரஞ்சித்தை கடந்து போகும் தைரியம் தந்தது. அது விளக்கிய உண்மைகள் ஏனோ வசந்திக்கு புரியவேயில்லை. தேவைகளைப் பூர்த்திசெய்யவே திராணியற்று, கிடைத்ததில் சுருங்கி ஒட்டிக்கொள்வது போலான வாழ்க்கை, இது போன்ற தருணங்களில் இப்படித்தான் தைரியம் கொள்ள வைக்கும். கடந்து போக வைக்கும். கடந்து போகப் பழக்கப்படுத்தும். அவள் மட்டுமென்ன விதிவிலக்கா? கடந்து போவதும் ஒரு நிர்பந்தம், அது பழக்கப்படுவதும் ஒரு நிர்பந்தம் தான். பொருளாதார சுதந்திரமும், மேல்தட்டு மக்கள் நிறைந்த சுற்றுப்புறமும் இல்லாததுதான் தான் நிராகரிக்கப்பட்டதறகுக் காரணம் என்று கொண்டாள்.
இரவும் பகலும் நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்தாள். மனத்தில் வலியுடன் தயார் செய்தாள். இயலாமை பரிசளித்த கோபம் தயார் செய்வதில் திரும்பியது. இல்லாததிலிருந்து புதிதாய் ஒன்றை உருவாக்கியது. இரண்டு மாத கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. ஒரு அமேரிக்க மென்பொருள் நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது. அவள் எதிர்பார்த்த சுதந்திரம், பொருளாதார மேன்மை கிடைத்தது. வீடு, ஒரு பணக்கார அபார்ட்மென்டிற்கு இடம் பெயர்ந்தது. வாங்கிக் குவிக்க ஏங்கிய அத்தனை பொருட்களும் வீட்டில் நிறைந்தது.


ஆனால், வசந்தியின் தாகம் அடங்கவில்லை. அவள் அன்பு வெறுமனே நிராகரிப்பட்டதில் உள்ளத்தில் தேங்கிய கோபம், நிராகரிக்கப்படுதலின் வன்மம் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீ ரஞ்சித்தை விட சிறந்த ஒருவனால்தான் அணையும் என்று தோன்றியது. அவனைத் தேடத் தூண்டியது. தான் ரஞ்சித்தை விட திறமையான ஆணுக்கும் தகுதியானவள் என்று நம்பினாள். அது நாள்வரை விட்டதை மீண்டும் எட்டிப்பிடித்திட அவளை முனையச்செய்தது. அழகு நிலையங்களின் நவீனங்களை தன்னுடலில் உடனுக்குடன் கிரகித்தாள். அழகு, அறிவு, திறமை முதலான அனைத்திலும் தானே தலைசிறந்து விளங்க வேண்டுமென விரைந்தாள். தனக்கான ஆண் தன்னையும்விட சிறந்தவனாக, ரஞ்சித்தைவிட பல கோணங்களிலும் சிறந்தவனாக இருக்கவேண்டுமென்று கனவு கண்டாள்.
அந்த கம்பெனியில் ஆண்கள் பலர் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டாள். ரஞ்சித்தோடு ஒப்பீடு செய்தாள். ரஞ்சித்தை மிஞ்சும் திறன் யாரிடம் இருக்குமென்று தேடினாள். மென்மேலும் தெரிந்து கொள்ள அதிகம் பழக அனுமதித்தாள். சிலருடன் வெறுமனே நட்புக்காய்ப் பழகினாள். ஒவ்வொருவரும் விதம்விதமாய் அவளைப் புகழ்ந்தார்கள். அதைத் தனது திறமைகளின் வெளிப்பாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரமெனக் அர்த்தம் கொண்டாள். நலன் விரும்பிகள் என்று வகைப்படுத்தினாள்.


அவர்களுள் இருவர் அவளுக்கு நெருக்கமானார்கள். ஒருவன் ரமேஷ், அழகானவன் ஆனால் மணமானவன். மற்றொருவன் தியாகு, பார்க்க சுமார்தான் என்றாலும் பெண்களைப் பேசியே மயக்கத்தெரிந்தவன், மணமாகாதவன். இருவருமே அவள் அழகைப் புகழ்ந்தார்கள். தாங்கள் புகழ்ந்த பெண்களில் இவளாவது தங்களுக்கு வழிவிடுவாளா என்று அனுமானித்தார்கள். அவர்களின் புகழ்ச்சியில் அவள் தன்னை மறந்தாள். அந்தரத்தில் பறந்தாள். சாதித்துவிட்டதான உணர்வைக் கொண்டாள். தனக்கு தகுதியான ஆணைத் தேடித் தன் தேடலைத் தொடர்ந்தாள். அவள் மிச்சம் வைத்த கொஞ்ச நஞ்ச நேரத்தில் தங்களை நிறைத்துக்கொள்ள எத்தனித்தார்கள். அப்படித் தொடங்கி, நாளடைவில், அவளையே அவர்களுக்கு நேரமொதுக்க செய்தார்கள். அலுவலகம் அமைத்துக்கொடுத்த மெயில் நெட்வொர்க், இம்மூவரையும் இணைத்தது.


' தியாகு, போன வாரத்துக்கு இந்த வாரம் நான் கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டுட்டேன் தானே?'. இது வசந்தி.


' எனக்கெப்படி தெரியும்? வேணும்னா ஒரு தடவை தூக்கி பாத்துட்டு வேணா சொல்றேன். ஒரு சான்ஸ் குடேன்' இது தியாகு.


' ஓ, குடுக்கலாம். ஆனா நீ என்னை கீழ போட்டுட்டனா?' இது வசந்தி.


இப்படியே கழிந்தது அவர்களின் உரையாடல்கள். வசந்தியின் மனம் இரண்டு பிரதியெடுக்கப்பட்டு இருவருக்கும் அளிக்கப்பட்டது அவளின் மூலமாகவே. உறவுகளுக்கு ஒரு பெயரிட்டுவிட்டுத் தொடர முடிகிறது சில சந்தர்ப்பங்களில். உறவுகளுக்கு சரியான பெயரிட எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசத்திலேயே அவ்வுறவுகள் வளர்ந்து வேறு உருவங்கள் பெறுவதை கவனித்தும் கவனியாதது போலிருந்தாள் வசந்தி.


இயந்திரத்தனமாகிவிட்ட உலகம், இப்படித்தான் உறவுகளுக்கு பெயரிடக்கூட நேரம் தருவதில்லை. சில சந்தர்ப்பங்களில், சில உறவுகள் கட்டாயமாக்கப்படுகின்றன, திணிக்கப்படுகின்றன‌. கார்ப்போரேட் உலகில் இதெல்லாம் நவீனங்களென்று கொள்ளப்படுவது வேதனைக்குரியது.


எனதென்று நினைக்கும்வரையில்தான் சில உணர்வுகள் இயல்பாய் வெளிப்படுகின்றன. எனது மட்டுமல்ல எனும்போது அவ்வுணர்வுகள் இயல்பாய் வெளிப்படுவது இயல்பாகவே தடைபடுகிறது. அந்தத் தடைபடுதலில் அவளுக்கு உடன்பாடில்லை. எனதென்னும் நிலையில் எதிர் பாலினம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவள் விரும்பினாள். அது தந்த மயக்கம் போதவில்லை. இன்னும் இன்னும் வேண்டுமெனக் கேட்டது. ரஞ்சித்துடனான காதல் நிராகரிக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்த ஆண்களின் காதல் நெஞ்சங்களை பலியாக்கினாள். எல்லோராலும் விரும்பப்படுதலில் கூட அது அடங்கவில்லை. ரமேஷுடன் பேசுவதை தியாகுவிடம் வெளிக்காட்டிக்கொள்வதை தவிர்த்தாள் வசந்தி. தியாகுவுடனான தன் உரையாடல்களை ரமேஷூடன் பகிர்ந்துகொள்வதில்லை. மூடிய கைகளில் ஒளிந்துள்ளவைகள் பதிலளிக்காத கேள்விகள் அவளைத் தொடரத் தொடங்கின.ரமேஷ் மற்றும் தியாகுவுடனான உறவு ஒரு முக்கோணமாய்க் காட்சியளிப்பதை அவ்வப்போது அவள் உள்மனம் அவளுக்கு எடுத்துரைக்கும் நொடிகளில் முகம் மாறினாள். கவனத்தை வேறு விஷயங்களில் திசைதிருப்பினாள். அம்மாதிரி திசைதிருப்புவது தனக்கான வாழ்க்கையென்று அர்த்தப்படுத்தினாள். எஞ்சியது அவர்களின் பாடு என்று விட்டுவிடுதல் ஒரு வகையில் புத்திசாலித்தனமென்றும் அது அவர்களின் விருப்பமென்றும் நினைத்துக்கொண்டாள். ஆனாலும் தியாகு வசந்தியை அறிந்தே இருந்தான். புத்திசாலித்தனமாய், அவளால் வகுக்கப்பட்ட அவனின் எல்லைக்குள் நின்றுகொண்டான்.


தியாகு அளவிற்கு ரமேஷ் பெண்களைக் கையாள அறிந்திருக்கவில்லை. வசந்தியைப் பற்றியும், அவளுடனான தன் அந்தரங்க உரையாடல்கள் பற்றியும் ரமேஷ் தன் நண்பர்களிடன் பெருமையாய் பீற்றிக்கொண்டான்.அவனது நண்பர்களின் காதுகளுக்கு புதியதாய் வாய் முளைத்தது. அது போவோர் வருவோரிடமெல்லாம் சன்னமாய் முனுமுனுத்தது.


ரமேஷும் தியாகுவும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளின் தேனீர் நேரங்களையும், மொபைல் பேச்சுக்களையும் பகிர்ந்துகொண்டனர். நிறைய பேசினர். ஆனால் அந்த பேச்சின் நோக்கம் அவளிடமிருந்து சிரிப்பை வரவழைப்பதாய் மட்டுமே இருந்தது. சிரிக்க வைக்கவே அவள் அழகை அதிகம் புகழ்ந்தனர். புகழ்ந்து புகழ்ந்தே அவளை உயரப் பறக்க வைத்தனர். அதன்மூலம் உண்மைகளை மறைத்தனர். வசந்தி கானல் நீரால் நிறைந்தாள். தனது திறமைகளின் வெளிப்பாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரமென தவறாக உருவகப்படுத்தினாள்.பேச்சினூடே அவ்வப்போது உணர்வுகளின் எல்லைகளைக் கடந்தனர் அந்த ஆண்கள். அந்தரங்கங்களைப் பற்றிப் பேசி மெல்ல அவளை ஆழம்பார்த்தனர். ஆண் வேட்டையாடுவதற்கு தேவையான திறன்களால் மட்டுமே அடையாளம் கொள்ளப்பட்ட விலங்கின சாரங்களின் உருவாக்கம். உணர்வுகளை விட்டு தள்ளி இருக்கப் பழகியவன். அப்படியிருந்தால் மட்டுமே வேட்டையாடமுடியும். பொருள் சேர்க்க முடியும். சண்டையை சமாளிக்கமுடியும். பெண் அப்படியல்ல. உணர்வுகளால் உருவானவள். காதலுக்காகவே படைக்கப்பட்டவள். அன்பால் மட்டுமே உயிர் வாழக் கற்றவள். ஆணுடன் சேர அன்பு வேண்டும் அவளுக்கு. காதல் வேண்டுமவளுக்கு. புரிதல் வேண்டுமவளுக்கு. ஆனால் ஆண் அப்படியல்ல. உணர்வுகளைத் தள்ளி வைத்துவிட்டு வெறுமனே மிருகமாக முயங்கவும் இயலும் அவனால். இயற்கை உந்திவிட்டால் தேடல் தொடங்கிவிடும் அவனுக்கு. தேடலைத் தீர்க்கும்வரை புத்தி மூர்க்கமாக இருக்கும் அவனுக்கு. தேடல் தீர்வது ஒன்றே குறி. வேறெதுவும் கண்ணுக்கு தெரியாது. இது அறிவியல் ஆணைப்பற்றி அளந்துவிட்டு சொன்ன கதை.


அவள் எல்லாவற்றிற்கும் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் நிறைந்திருக்கும் மெளனம் அவர்களின் எண்ணங்களை ஊனமாக்குமென்று தனக்குத் தானே அர்த்தப்படுத்திக்கொண்டாள். அவர்கள் அதை அவளின் அனுமதிக்கடிதமென்று கொண்டார்கள். அவர்களுக்கு தன் அதிகபட்ச நேரங்களைத் தந்து ஊக்குவித்தாள். அவர்கள் மூவரும் ஆரோக்யமான பேச்சுக்களை விட்டகன்று தொலைதூரத்தில் நின்றனர். ரகசியங்களால் நிறைந்தனர். அவளின் ரகசியங்கள் அந்த ஆண்களிடம் ஒரு கானல் நீர் போலத் தெளிவில்லாமல் தங்க, அந்த ஆண்கள் இருவரின் ரகசியங்களும் அவளிடம் தெளிவாய்ப் புதைந்தன.


மெல்ல மெல்ல வசந்தியைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது. அந்தக்கூட்டம் அவளை புகழ மட்டுமே செய்தது. அவளின் குறைகளை அவளிடமிருந்து அவர்கள் அனைவரும் மறைத்தார்கள். அது தங்களுக்கு பாதகம் என்பதால். வசந்தி தன் சொந்த உழைப்பால் முன்னேறினாள். வெளி நாடுகள் சென்று பணியாற்றினாள். அந்தப் பயணங்கள் அவளுக்கான சுற்றுப்புறத்தை அவளிடமிருந்து பிரிப்பதை உணராதவளாய் வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு வரையறுக்கப்படாத கூண்டுக்குள் அடைந்தாள்.
அவளின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்ய முடியாத அளவுகோள்களைக் கடந்து போய்க்கொண்டே இருந்தது. நடுத்தர வர்க்கத்தின் தகுதிகளை அவள் தாண்டியிருந்தாள். பணக்கார வர்க்கத்தின் பார்வையில் அவளின் வாலிப்பான உடலும், அழகான பேச்சும் , மோப்பம் பிடித்த ரகசியங்களும் அவளுக்கு பின் வாசற்கதவுகளை மட்டுமே திறந்தது. யாரும் முன்வாசற்கதவுகளை அவளுக்காகத் திறப்பது அவள் தகுதிக்கு மீறியதென்று நினைக்கச்செய்தது.


நாளடைவில் ரமேஷும் தியாகுவும் தத்தம் வாழ்க்கைப்பாதையில் பிரிய நேரிட, அவள் தனியானாள். பிற்பாடு ஒரு நடனக்கலைஞனும் கவிதைகளில் ஆர்வமுள்ளவனும் வசந்தியுடன் இணைந்தார்கள். அவர்களுக்கு ரமேஷையும் தியாகுவையும் பற்றி தெரிந்திருக்கவில்லை. வசந்தி சொல்லவுமில்லை. ஆனால் வசந்திக்கு இவர்களையும் தெரிந்தது. மீண்டும் அதே இனிப்பான பேச்சுக்கள். ரகசியங்கள். ஆனால், யாரும் அவளைத் திருமணம் செய்ய மட்டும் முன்வரவில்லை. அப்படியே முன்வந்தாலும் அது அவளிடம் இருந்த பணத்துக்காக மட்டுமே என்று இருந்தது. அழகு, அறிவு, திறமை என எல்லாமும் இருந்தும் வசந்திக்கு அது ஏனென்று கடைசிவரை புரியவில்லை.
சில நேரங்களில் எண்ணிப்பார்த்து மிகவும் குழம்பிப்போவாள். ஏன் தன்னை வாழ்க்கைத்துணையாக யாரும் தேர்ந்தெடுக்கவில்லையென்று. அது போன்ற நேரங்களில் அவள் வீட்டு சன்னல் தான் அவளுக்குத் துணை. அந்த சன்னலினூடே வீட்டு மதில்களைத் தாண்டி சாலையோரத்தில் பூத்திருக்கும் ரோஜாச் செடிதான் அவளின் பார்வையில் நிறையும். வண்டுகளால் எப்போதும் மொய்த்தே இருக்கும் அந்த ரோஜாச்செடி. மதில் சுவருக்கு அப்பால், கூண்டுகள் அளிக்கும் பாதுகாப்பில் நிறையாமல், தெருவில் போவோர் வருவோர் யார் விரல்களிலும் சுலபமாய் எட்டும் தூரத்தில் இருக்கும்.


அவள் அந்த அழகான ரோஜாவையே பார்த்துக்கொண்டிருப்பாள். விடியல்களில் அழகாக பூக்கும் இந்த ரோஜா மாலையானால், வாடி வதங்கி, தூசி படிந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கும். அதை ஒவ்வொரு நாளும் பார்க்கையில் கூட அவளுக்கு புரிவதில்லை, அனைவராலும் விரும்பப்படும் தூரத்தில் இருப்பதான சுதந்திரத்தின் எல்லை, தனக்கான, தன் வகையான வாழ்க்கையை தன்னிடமிருந்தே பிரிக்கும் வரை இருத்தல் கூடாதென்பதும், மரியாதையுடன் கூடிய அழகு நிலைக்கவேண்டுமெனில், பாதுகாப்பு அவசியமென்பதும், இயற்கை எந்நிலையிலும் ஒரு சமன்பாட்டை கொண்டுவரும், அந்த சமன்பாட்டின் எல்லைக்குள் வசித்துவிடுவது அமைதியான, நிம்மதியான, ஆரோக்யமான வாழ்விற்கு வழி என்பதும்.
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி
காற்றுவெளி இலக்கிய இதழ் (ஆகஸ்ட்)
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11008078&format=html)

Monday, 2 August 2010

பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை


பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை
'சரக்கு வந்தாச்சு. இந்த தடவ பி.எம்.டபிள்யு என்ஜின். பங்களூரின் ஹொசூர் வழியாக‌ சென்னைக்கு போகனும். ரொம்ப கெடுபுடி இருக்கும். ஆனா போயே ஆகணும். கை நீட்டி காசு வாங்கி குடி, குட்டின்னு ஏப்பம் விட்டாச்சு. இத பண்ணலனா நாளைக்குத் தொழில் பண்ணமுடியாது. அதனால இத பண்ணியே ஆகனும் பழனி'.

பெரியவர் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினார். அவர் பார்வை தரையை வெறித்திருந்தது. எதிரில் உட்கார்ந்திருந்த பாஸ்கர், பழனி இருவரையும் அவர் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். பெரியவரை அன்றி மற்ற இருவர் கையிலும் எரிந்துகொண்டிருந்தன சிகரெட் துண்டுகள்.

வெகு நேர மெளனத்தை சட்டென கலைத்தான் பழனி.

'இந்த தடவ சரக்க நான் கைமாத்துரேன்'.

வெறித்துக்கொண்டிருந்த இடத்தையே பார்த்தபடியிருந்த அவன் முகத்தில் இப்போது லேசான புன்னகை இருந்தது.

பெரியவரும், பாஸ்கரும் ஒரே நேரத்தில் பழனியை திரும்பிப் பார்த்தனர். பெரியவர் தொடர்ந்தார்.

'எப்டி? ரொம்ப ரிஸ்கான வேலை. போலீஸ்க்கு நியூஸ் போயாச்சு. சல்லடை போட்டு தேடுவானுங்க. மாட்னோம் சங்குதான்'.

'மாட்ட மாட்டோம்னா. நான் பண்றேன்' திடமாய் பதிலளித்தான் பழனி.

'பண்றேன் பண்றேன்ங்கிறியே எப்டி பண்வ. உன்னால முடியுமா?'.

'முடியும்னா. ஆனா தனியா பண்ணமுடியாதுனா. ரெண்டு ஆளுங்க வேணும்'. மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்தினான் பழனி.

'சரி. ப்ளான் என்ன?'.

'ப்ளான் இருக்கட்டும்னா. யாரு அந்த ரெண்டு ஆளுங்க?' பழனி கொக்கிபோட்டான்.

'வேற யாரு, நானும், பாஸ்கரும்தான். இதுக்காக இன்னொருத்தனையா பங்குக்கு கூப்ட முடியும். ஏற்கனவே துட்டு சாப்ட்டாச்சு. நாங்க பாத்துக்குறோம். மேல சொல்லு. அப்பால?'.

'உன் இன்டிகா கார் சாவி குடுனா. அப்டியே அந்த பி.எம்னு ஏதோ சொன்னியே அந்த‌ என்ஜினையும் எடுத்தா. ரெண்டுத்தையும் நான் இப்போ கெளப்பிக்கினு போறேன். நீ நாளைக்கு வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷன்ல வண்டியக் காணோம்னு ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துடுனா. மத்தத நான் பாத்துக்குறேன். நாளைக்கு ஒரு நாளைக்கு நீ எங்களுக்கு மாமா மாதிரி நடிச்சா போதும்.' பழனி ஒரே மூச்சில் சொல்லிவிட்டு எழுந்தான்.

'என்ன!! கம்ப்ளைன்ட் குடுக்குறதா!!. போலீஸ்கிட்டயா!! நாளைக்கா!!.. நாளைக்குதான் செக்கிங் பீக்ல இருக்கும். ஒனக்கு கிறுக்கு புடிச்...' பெரியவர் கார் சாவியை எடுத்து நீட்டியபடியே இழுக்க‌, அவசரமாய் இடைமறித்தான் பழனி.'

'என்ஜினை சென்னைக்கு கொண்டுவரது என் மேட்டருனா. நா மட்டுந்தான் வேலை பண்றேன்னு சொல்லிடுனா. எதனா ஆச்சுனா என் பொறுப்புனா. என்ஜின் எடுத்தானா'.

'ஹ்ம்ம்ச்ச்' ஒரு சலித்த உதட்டுச் சுளிப்புடன் ஒரு நொடி யோசித்த பெரியவர் தொடர்ந்தார்.

'டேய் பாஸ்கர், அத்த எடுத்தாந்து இன்டிகா பின் சீட்ல வச்சிட்றா. பாரு பழனி, உன் பொறுப்பு. நீ மட்டும்தான் பண்றனு ராவுத்தர்ட்ட சொல்லப்போறேன். சரக்கு போலனா நீ திருடிட்டதாதான் ராவுத்தர் நினைப்பான். நீ எந்த ஜில்லால இருந்தாலும் கத்தி உன்ன தேடிவரும். சொல்லிட்டேன் சொல்லிட்டேன்'.

கேட்டுக்கொண்டிருந்த பழனியின் முகம் சாந்தமாய் எல்லாம் தெரியும் என்பது போல் இருந்தது.

*******************************************
ஆம்பூரில் நேதாஜி ரோட் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சன்னல் கதவு மறைவில் இறங்கி நின்றுகொண்டு பாக்கேட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டார் ஏட்டு மாணிக்கம். அவரின் பார்வை சற்று தள்ளி நிறுத்தியிருந்த ஒரு டாடா இன்டிகா காரில் நிலைத்தது.

'யோவ் வேலு, என்னய்யா புது வண்டியா இருக்கு. என்ன கேஸ் இது' எரிச்சல் கலந்த வெறுப்பு கலந்திருந்தது அவரின் குரலில்.

'ஆங், அதுவா, நேத்து சாயந்திரம் அந்த வாணியம்பாடி ஏரியா பெரியவரு கம்ப்ளய்ன்ட் குடுத்தார்ல, அவரோட கார காணோம்னு. அதான் இது. ரெண்டு பசங்க தள்ளிகிட்டு வந்திருக்கானுங்க. கார்ல ஏதோ கோளாறு. பாதில நின்னுடுச்சு. திருட்டு வண்டினு தெரிஞ்சதுக்கப்புறம் நம்ம ஏரியாவா இருந்தா என்ன, அடுத்த ஏரியாவா இருந்தா என்ன‌?. அதான் டோப் பண்ணி புடிச்சிட்டு வந்துட்டேன் சார்'.

வேலு இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அவசரமாய் ஒரு சுமோ வந்து நின்றது. வாடகை வண்டி போலிருந்தது அது. அதிலிருந்து இறங்கிய அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் விறுவிறுவென ஸ்டேஷனுக்குள் வந்துகொண்டிருந்தார்.

சற்று தொலைவில், என்.ஹெச்.46 ல், ஏனைய போலீஸ்காரர்கள் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி செக் செய்து கொண்டிருக்க, முன் தினம் இன்டிகாவை டோப் செய்து வந்த வண்டி இப்போது ஒரு அரைவட்டம் அடித்துத் திரும்பி, ஒற்றையடிப்பாதையையும் விட அகலத்தில் சற்றே பெரியதான, ஆனால், தார் ரோடு அல்லாத ஒரு பாதை வழியே இறங்கி வேறொரு காரை டோப் செய்யச் சென்றது. போலீஸ் செக்கிங் இல்லாத‌, இன்டிகாவை இழுத்து வந்த பாதை வழியே விரைவதைப் மாணிக்கம் பார்த்துக்கொண்டிருக்க‌, பெரியவரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார் வேலு.

'சார் சார் வாங்க வாங்க இப்போதான் உங்களப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன். உங்க கார் இதானா பாருங்க'.

வந்தவர் இன்டிகா காரை அருகில் சென்று ஏற இறங்க சுற்றிலும் பார்த்துவிட்டு கத்தினார் 'அடப்பாவிங்களா, பொண்ணு மாதிரி வச்சிருந்தேன் சார். கோடு போட்ருக்கானுங்க சார். என்னோடதுதான் சார். எங்க சார் கிடச்சிது. எவன் சார் அந்த நாதாரி?'. பெரியவர் அவார்டு ஃபிளிமை மிஞ்சிக்கொண்டு நடித்தார்.

'பொறுங்க பொறுங்க கோவப்படாதீங்க. உங்களோடதுதானே. அப்றம் என்ன. வாங்க. இங்க ஒரு கையெழுத்து போடணும் நீங்க. இப்படி வாங்க' என்றபடியே அவரை உள்ளே அழைத்துப்போனார் வேலு.

'எங்க‌ வேணா போட‌றேன் சார். யார் சார் அவ‌னுங்க‌. இவ‌னுங்க‌ள எல்லாம் தூக்குல‌ போட‌ணும் சார். தூக்குற‌துக்கு என் கார் தான் கிடைச்சிதா. இந்த‌ கார‌ வாங்க‌ எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருப்பேன். ரெண்டு நாளைக்கு என் கார‌ என‌க்கே இல்ல‌னு ஆக்கிட்டானுங்க‌ளே சார். யார் சார் அவ‌னுங்க‌' அவ‌ர் ஸ்டேஷ‌னுக்குள் நுழைந்த‌ப‌டியே ஆக்ரோஷமாய் உறுமிக்கொண்டிருந்தார். கொஞ்ச‌ம் விட்டாலும் யாரென்று பார்த்துக் க‌டித்து குத‌றிவிடுவார் போலிருந்த‌து வேலுவிற்கு.

'தோ இவிங்க‌ தான் சார் அவிங்க‌'

வேலு காட்டிய‌ திசையில் பார்த்த‌வ‌ருக்கு அதிர்ச்சி.

'டேய் பாஸ்க‌ர், ப‌ழ‌னி, என்ன‌டா ப‌ண்றீங்க‌ இங்க' பெரியவர் கத்தியே விட்டார்.

'ஆங் மாமா...அது வந்து... ம்ம்ம்ம்ம்' அவர்கள் இருவரும் மென்று முழுங்கினார்கள்.

இப்போது வேலு அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க வந்தவருடன் பாஸ்கரும், பழனியும் கட்டிக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன நடக்கிறதென்று பார்த்தபடி வேலு அமைதியாய் நின்றிருந்தார். அவருக்கு ஓரளவு புரிந்து விட்டது. மாமனின் வண்டியை, சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வந்தவர்களை மடக்கி ஸ்டேஷனில் வைத்திருந்திருக்கிறோமென்று.

தவறு நம்முடையது அல்ல. வந்தவர் நேற்று வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தார். வாக்கிடாக்கியில் மெஸேஜ் வந்தது. அதே வண்டி. அதே நம்பர். பார்த்ததும் மடக்கியாகிவிட்டது. இதென்ன ஜோஸியமா, யாருக்கு யார் உறவு என்று பார்த்ததும் கண்டுபிடிக்க. இதற்காக எத்தனை மெனக்கெட வேண்டியிருந்தது. வண்டியை பார்த்தது என். எச் 7 ஹொசூர் கர்னாடகா எல்லைக்குள். பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் போயிருந்தாலோ அல்லது தேசிய நெடுஞ்சாலை வழியே டோப் செய்திருந்தாலோ செக்கிங்கில் மாட்டி, அவர்களின் கேஸாக்கியிருப்பார்கள். அவர்கள் கேஸாகிவிட்டால் தன் பெயர் வராது. வராவிட்டால் எப்படி இந்த வருடம் ப்ரமோஷன் வாங்குவது. தன் கேஸாக இருக்கவேண்டும் என்றுதான், தேசிய நெடுஞ்சாலை வழியே வராமல் ஒதுங்கி வந்தது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த கேஸு புஸ்ஸாகிவிடும் போல என்று எண்ணியபடியே பார்த்துக்கொண்டிருந்தார் வேலு. சற்றைக்கெல்லாம் அவர்களுக்குள் ஏதேதோ கிசுகிசுத்துக்கொண்டுவிட்டு பெரியவர் அவர்களை சாந்தப்படுத்திவிட்டு வேலுவிடம் திரும்பினார்.


'சார், நம்ம பயக தான். சொல்லாம கொண்டுவந்துட்டானுங்க சார். இவனுங்க எப்பவுமே இப்படிதான் சார். பெரிய தலைவலி சார். ரெண்டு சாத்து சாத்தினாதான் சரிவரும். பாவம் உங்களுக்கு தான் சிரமம் கொடுத்திட்டோம். அவுங்க சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார். வெரி சாரி சார். நான் குடுத்த கம்ப்ளெயின்ட வாபஸ் வாங்கிக்கிறேன் சார்' என்றார் பெரியவர்.


வேலுவிற்கு சப்பென்றது. இந்தக் காருக்கு ஊரெல்லாம் தேடி அலைந்து, ஹைவேஸில் நிறுத்தியிருந்த காரைப் பார்த்ததும் மடக்கி, முன் சீட், பின் சீட், டிக்கி என்று முழுக்க செக் செய்து ஓடாத காரை டோப் செய்து கொண்டுவந்து ஸ்டேஷனில் நிறுத்தினால், சர்வ சாதாரணமாக கம்ப்ளெயிண்ட் வாபஸ் வாங்குகிறேன் என்கிறான்கள். ம்ம்ம்ம் எல்லாம் தலையெழுத்து என்று சலித்துக்கொண்டபடியே கம்ப்ளெயின்ட் வாபஸ் பெறுவதாக எழுதி கையழுத்து வாங்கிக்கொண்டு நகர்ந்தார் வேலு.


அந்த பெரியவர் இருவரையும் ஸ்டேஷனிலேயே தலையிலும் புரடியிலும் அடித்து திட்டியபடி வாசலுக்கு விரட்டிக்கொண்டிருந்ததை எனக்கென்ன என்றபடியே ஒரு கணம் அலட்சியமாய் பார்த்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கிப்போனார். அவர்கள் தயாராய் கொண்டுவந்திருந்த சுமோவில் இன்டிகாவை சங்கிலியால் பிணைத்து , பாஸ்கரும் பெரியவரும் சுமோவில் ஏறிக்கொள்ள, பழனி இன்டிகாவில் உட்கார்ந்துகொண்டு ஓட்டிக்கொண்டு போக, இப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருந்தார்.


'இதோ பாருங்கய்யா, பி.எம்.டபிள்யூங்குறது ரொம்ப காஸ்ட்லி கார். விலை ஐம்பது லட்சம் இருக்கும். அதோட இஞ்சின் மட்டுமே சுமாரா முப்பது லட்சம் இருக்கும். அத எந்தக் களவானிப் பயலோ பங்களூர்லேர்ந்து லவட்டி வேலூர் வழியா சென்னைக்கு கொண்டு போகப் பாக்கறான்னு நியூஸ் கிடைச்சிருக்கு. நம்ம கிரிமினல்ஸ் லிஸ்ட தரோவா செக் பண்ணியாச்சு. நம்ம மாரிய கூடக் கேட்டுட்டேன். அவன் லோக்கல் ஆளா இருக்கவே முடியாதுன்னு சத்தியம் பண்றான். வேற எவனோ தான் பண்றான்.அலர்ட்டா இருக்கணும். ஒரு வண்டி விடக்கூடாது. புரியிதா. தரோவா செக் பண்ணுங்க போங்க. போய் வேலையப் பாருங்க. வேலு, அந்த ஃபைல பாத்துட்டீங்கல. எதாச்சும் க்ளூ கிடைச்சிதா?'

இன்ஸ்பெக்டர் சுந்தரம் நட்ட நடு ஸ்டேஷனில் நின்று உருமத்துவங்கியிருந்தார்.

*******************************************

சுமோ வேகமெடுக்க, இன்டிகா பின் தொடர‌ வண்டிகள் இரண்டும் ஆம்பூர் வாணியம்பாடி தாண்டி, வேலூரை நோக்கி வேகமெடுத்தது. வேலூருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் சென்று ஒதுக்குபுறமாய் ஒதுங்கியிருந்த ஒரு வீட்டின் முன் நின்றது சுமோ. நின்ற வண்டியிலிருந்து ஆர்வமாய் இறங்கிய பாஸ்கரும், பெரியவரும் சுமோவுடன் பிணைத்திருந்த இன்டிகாவை தனியே பிரித்துவிட்டனர்.

பெரியவர் அவசரமாக இறங்கி, இன்டிகா காரின் பின் சீட், டிக்கி கதவுகளை திறந்து பார்க்க, காலியாக இருந்தது.

'டேய் பழனி, என்ஜின் எங்க?'. பெரியவர் பரபரத்தார்.

பழனி, இன்டிகாவின் பானட்டை திறக்க, உள்ளே சற்றும் பொறுத்தமில்லாமல், இன்டிகா காரின் இதர உதிரிபாகங்களுடன் இன்டிகா என்ஜின் இருக்கவேண்டிய இடத்தில் பி.எம்.டபிள்யு என்ஜின் கண்சிமிட்டியது.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3231)
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11008013&format=html)