அத்தியாயம்
- 12
மாலை ஐந்து
மணி சுமாருக்கு அலைபேசி ரீங்கரிக்க அஞ்சலி என்னவென்று எடுத்துப்பார்த்தாள். ஏர்டெல்லில்
இருந்து வழக்கமாய் வரும் குருஞ்செய்திதான்.
அஞ்சலி மெட்
செயலியைத் தொடுதிரையில் தீண்டினாள். செயலி கணிணியின் திரையை ஆக்ரமித்தது. அதில் வினய்யின்
புகைப்படம் ‘சமமான பொருத்தம்’ என்ற நிலைத்தகவலுடன் காட்டப்பட்டது.
அஞ்சலி வினய்யை
சரியாக ஒரு நிமிடத்துக்குப் பார்த்தாள். பின் செயலியுடன் இணைக்கப்பட்டிருந்த முக நூல்
சுட்டியை சொடுக்கினாள். வினய்யின் இணையக்கணக்கு திரையில் படர்ந்தது. நண்பர்கள் பட்டியலில் எண்ணிக்கை 1033 என்று காட்டியது.
திடீரென
திரையில் ஒரு அறிவிப்பு தலையெழுத்து போல் அலைபேசித்திரையின்
உச்சியில் வலமிருந்து இடமாக ஓடியது. லீ ஜீன்ஸில் ஸ்ட்ரெச்சபிள் ரகம் முப்பது சதவிகிதம்
சலுகையில் கிடைப்பதாகக் அறிவித்திருந்தது.
அஞ்சலி சட்டென
கைப்பை, காலணி அணிந்துகொண்டு ஊபர் வாடகை மகிழுந்து பதிவு செய்தாள். சற்றைக்கெல்லாம்
வாடகை மகிழுந்து வர, கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று ஏறிக்கொண்டாள். மகிழுந்து கோடம்பாக்கம்
நோக்கி விரைந்தது.
கோடம்பாக்கத்தில்,
வாடகை மகிழுந்துக்கான பணத்தைத் தந்துவிட்டு அஞ்சலி கடைக்குள் புகுந்தாள். சரியாக பதினைந்து நிமிடங்கள். அஞ்சலி ஜீன்ஸை ரசீது போடச் சொல்லிவிட்டு
அலைபேசியை எடுத்து ஊபர் பதிவு செய்தாள். பின் ஜீன்ஸை வாங்கிவிட்டு வெளியே வர, கடை வாசலில்
சட்டென யாரோ ஒருவரின் புஜத்தில் இடித்துக்கொள்ள, யாரென்று பார்த்தாள்.
“ஆம் சாரி”
என்றவனை எங்கோ பார்த்தது போலிருக்க, அவனைத்தான் மெட் செயலி காட்டியது என்று நினைவுக்கு
வந்து ஆச்சர்யமுற்றாள்.
‘……கிட்டத்தட்ட
சொல்லி வச்சா மாதிரி நடக்குதாம்…..’ என்ற
பவித்ராவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“இட்ஸ் ஓகே”
என்றாள் அஞ்சலி.
“வாவ்”
“பார்டன்
மீ?”
“உங்க அப்பா
தீவிரவாதியா?”
“ஏன்?”
“பாம் மாதிரி
இருக்கீங்களே”
அஞ்சலிக்கு
மீண்டும் அரவிந்தை சந்தித்தது போலிருந்தது. அர்விந்த் இல்லாதது ஒரு குறையாகத் தோன்றத்
துவங்குவதற்குள்ளாகவே அடுத்ததாக வினய்.
“யாருன்னே
தெரியாமலேயே கடலையா?”
“அழகா இருக்கீங்க..
அழகா இருக்கிற பொண்ணோட அழகு தெரிஞ்சா போதாதா?”
“கல்யாணம்
ஆய்டுச்சா?”
“உங்களோடயா?
இனிமே தான் ஆகணும். அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும்”
“ஐய்யோ..
உங்களுக்கு இதுவரை யாரோடயாச்சும் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன்.”
“இல்லை.
உங்களுக்கு?”
“ஆயிடுச்சு”
“ஆஆஆஆ”
“என்னாச்சு?”
“என்னோட
இதயம் வெடிச்ச சத்தம் உங்களுக்கு கேட்டுச்சா?”
“இருந்தா
தானே வெடிக்கும்? வெடிச்சாத்தானே கேக்கும்?”
“என்ன இப்படி
சொல்லிட்டீங்க?”
“பின்ன?
இப்படி போறவ வர்றவட்டலாம் வழிஞ்சா எப்படி இதயம்ன்னு ஒண்ணு இருக்கும்?”
“போறவ, வர்றவன்னு
ஏன் உங்களை நீங்களே கேவலமா பேசிக்கிறீங்க?”
“கொழுப்பா?”
“கண்ணாடியில
பாருங்க… யாருக்கு அதிகம்ன்னு தெரியும்”
வினய் பேசிக்கொண்டிருக்கையிலேயே
ஊபர் வாடகை மகிழுந்து அங்கே வந்து நின்றது.
“விட்டா
பேசிட்டே இருப்பீங்க.. நான் கிளம்புறேன்..” என்ற அஞ்சலி மகிழுந்தில் ஏறிக்கொள்ள, மகிழுந்து
மெல்ல சாலையில் ஊர,
“உங்களுக்கு
லைக் குடுத்திருக்கேன். அப்புறமா நியாபகமா மெஸேஜ் பண்ணுங்க” என்றான் வினய் சிரித்தபடி.
தோற்றத்தின்
அடிப்படையிலான ஈர்ப்பு குறித்து நான் அறிந்ததுதான். நீங்கள் ஒரு பெரிய மைதானத்தை, ஒரு
குறுகலான சந்துக்குள் நுழைந்து நூறு அடி தூரம் நடந்து அடைவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அழகான பெண்களும்
அப்படித்தான். அவர்களே சொல்வது போல், அவர்களின் தோற்றத்தைக் காட்டிலும், மனம் அதிக
அழகாகவே இருக்கலாம்.
ஒரு அழகான
பெண். திடீரென்று நீங்கள் வசிக்கும் தெருவில் தோன்றுகிறாள். அவள் அங்கு அதிக நேரம்
இருக்கப் போவதில்லை. ஒரு கடையில் நுழைந்து தனக்கு விருப்பமான பொருளை வாங்கிவிட்ட பிறகு
கடையிலிருந்து வெளியேறி வாடகை மகிழுந்து ஏறும் வரையிலான மிக மிகக் குறுகிய காலம் தான்
உங்களுக்கு இருக்கிறது அவளை அணுக.
இந்த மிக
மிகக் குறுகிய காலச் சந்துக்குள் உங்களுக்கு அவளிடம் இனிமையான விதத்தில் அறிமுகம் கொள்ள
கடலை போடுவதைத் தவிர வேறு என்னென்ன உபாயங்கள் இருக்கின்றன? ஆக, ஆண் என்பவன் பெண்ணை
அணுகுகையில் சாத்தானின் பக்கமிருந்தே அணுக நிர்பந்திக்கப்படுகிறான். இதையெல்லாம் யோசித்துப்
பார்க்கையில், இந்தக் கிரகத்தில் ஆண்கள் பாவம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால், இந்த
சிக்கலையெல்லாம் மீறி ஆண்களை தரம்பிரித்து தேர்வு செய்யும் பெண்களின் நிலை ஆண்களின்
நிலையை விடவும் பாவம் என்றும் தோன்றாமல் இல்லை.
இத்தருணத்தில்
ஒரு குறுக்குச்சிந்தனை: எல்லாப் பெண்களுமே தத்தமது ஆண்கள் மீது முழுத்திருப்தி அடைந்தவர்களாக
இல்லை. ஆண்கள் மீது குறை சொல்ல, ஒரு மூட்டையையே வைத்திருக்கிறார்கள். உலகில் எந்த ஆணுக்கும்
எந்தப் பெண்ணும் தாஜ்மஹால் கட்டியதில்லை என்று வேடிக்கையாகக் கூட சொல்கிறார்கள். பெருமளவு
பெண்களின் அகமன வலிகளின், வேதனைகளின் கூற்றுப்படி அது சரிதான். இதற்கு என்ன பொருள்?
ஆண்களைத் தரம்பிரித்து பெண்கள் செய்யும் தேர்வு துல்லியமாக இல்லை என்பதா? ஆண்களைத்
தரம் பிரிப்பதில் பெண் தொடர்ந்து தோற்கிறாள் என்பதா?
ஓரு வாதத்திற்கு
இப்படி வைத்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியமான
பண்பட்ட மரபணுக்கள், மனிதர்களை, அவர்கள் தவறான சூழல்களில் அகப்பட நேர்ந்தாலும், இறுதியில்
சரியான பாதையில் பயணிக்க வைக்கிறது; ஆரோக்கியம் குன்றிய, பண்படாத மரபணுக்கள் மனிதர்களை,
அவர்கள் சரியான சூழல்களில் இருந்தாலும், இறுதியில் தவறான பாதையில் பயணிக்க வைத்துவிடுகிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தவனைப் பார் போற்றும் சான்றோனாக உயர்த்துவதும் பண்படைதல்
தான். செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தவனை ஏழையாக்குவதும் பண்படையாத தன்மை
தான்.
இப்பூலகில்,
ஒரு பண்பட்ட மரபணு, தன் வாழ்க்கையை ஒரு தொழிற்சாலையின் கடை நிலை ஊழியனாக, அழுக்கேறிய
ஆடைகளுடன் திருமணச்சந்தையில் யாருமே சீந்தாத ஒரு மாப்பிள்ளையாக இருக்கலாம்; ஒரு பண்படாத
மரபணு, செல்வச்செழிப்பு மிக்க இடத்தில், பட்டாடைகளுடன், புத்தொளி வீச, மிகவும் விரும்பப்படுகிற
மாப்பிள்ளையாக இருக்கலாம்; இது போன்ற காட்சிப்பிழைகளே ஆண்-பெண் உறவுகளில் நான் உருவாவதைத்
தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆக, நல்ல ஆண், தீய ஆண் என்று பேசுவதைக்காட்டிலும் பண்பட்ட
மரபணு, பண்படாத மரபணு என்று பேசுவதில் லாபம் இருப்பதாகவே பார்க்கிறேன்.
நூறு ஆண்களில்
சரி பாதி பண்பட்ட மரபணுக்கள், எஞ்சியது பண்படாத
மரபணுக்கள் எனில், இதன் பொருள் என்ன?
நூறு ஆண்களுக்கு
93 பெண்கள் என்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தின் பிரகாரமும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற
தமிழ்க் கலாச்சாரத்தின் பிரகாரமும், 42 பெண்களுக்கு பண்பட்ட மரபணுக்களும், எஞ்சிய
42 பெண்களுக்கு பண்படாத மரபணுக்களும் திருமண பந்தத்தில் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது.
அல்லவா?
ஆனால், நிஜம்
அதாவது ரியாலிட்டி நமக்குச் சொல்வதென்ன? அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்கள் திருமணம்
செய்யாமலே தான் இப்பூலகை விட்டுப் போயிருக்கிறார்கள். பொதுவில், அப்பாவித்தனம் மிகுத்த
ஆண்கள், பெண் அல்லாத பிறவற்றின் மீது பொருளாதார மேன்மைக்காய், சமூக மேன்மைக்காய், அறவுணர்வுக்காய்
கவனக்குவிப்பு செய்த ஆண்கள் திருமணத்திற்கோ, காதலுக்கோ உகந்தவர்களாகப் பெண்களின் தேர்வில்
பெரும்பான்மைக்கு இருப்பதில்லை.
இது சொல்ல
வருவது என்ன? எல்லாப் பெண்களுகளுமே தத்தமது ஆண்கள் மீது முழுத்திருப்தி அடைந்தவர்களாக
இல்லை என்பதை வைத்து 50:50 பண்பட்ட: பண்படாத மரபணுக்களில் எந்த 50க்கு பெண்களின் அருகாமை
கிடைக்கவில்லை, இந்தத் உலகம் எந்த 50ன் விளைவாக வெளிப்பட்ட தலைமுறையால் நிரம்பியிருக்கிறது
என்பது ஊகிக்க முடிவதாகவே இருந்தது; இதன் பின்னணியில், இந்தச் சமூகத்தில் பெண்களுக்கு
எதிரான வன்முறை ஏன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதும் கணிக்கக்கூடியதாகவே இருந்தது;
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது தான் சமூகத்தின் போக்காக இருப்பதாகவே எனக்குப் பட்டது.
அதிர்ஷ்டவசமாக,
சூர்யாவின் கணித மாதிரி ஒன்று தான் இதை வெளிப்படுத்தும் வகையினதாகவே அமைந்திருக்கிறது;
அதுதான் ஆண், பெண் விகிதாசாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது;
ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது; ஆண் பெண் இருவரையும்
0 முதல் 9 வரை இலக்கம் தந்து துல்லியமாகத் தரம் பிரிக்கிறது; சமூகத்திற்கு ஏற்பில்லாதவைகளுக்கு
தழைத்துப் பெறுகக்கூடிய வாய்ப்பை மட்டுறுத்துவதாக இருக்கிறது.
அடுத்த நாள்
ரவி பவித்ராவை அர்விந்த் இல்லாத நேரத்தில் அவளின் வீட்டில் சந்தித்தபோது நான் அங்குதான்
இருந்தேன். அதற்குக்காரணம் இல்லாமல் இல்லை. சூர்யாவின் கணித மாதிரி, ஒரே எண்ணுடையவர்கள்
ஒருவரையொருவர் ஈர்ப்பார்கள் என்றது.
சூர்யாவின்
அட்டவணையின் பிரகாரம் பவித்ராவும், ரவியும் எண் மூன்று ஆவார்கள்.
அந்தப்படி
ரவியும், பவித்ராவும் இணைகிறார்களா என்று பார்க்க ஆர்வம் மேலொங்கியது.
அந்த வீட்டின்
படுக்கையறையில் பவித்ராவின் மடியில் ரவி படுத்திருந்தபோது,
“ஏன் இன்னிக்கு
வர இவ்ளோ லேட்?” என்றாள் பவித்ரா.
“அதுவா?
எங்க ஜாதி சங்கத்துல ஒரு சந்திப்பு; வருடாந்திர சந்திப்பு தான். அதுக்கு போயிட்டு வந்ததுல
லேட் ஆயிடுச்சு” என்றான் ரவி.
சற்று நேர
மெளனத்திற்குப் பின்,
“நாம கல்யாணம்
பண்ணிக்கலாமா, ரவி?” என்றாள் பவித்ரா.
பவித்ராவின்
மடியில் தலை வைத்திருந்தவன் சட்டென எழுந்து பவித்ராவைப் பார்த்தான் ரவி.
“என்ன திடீர்ன்னு?”
“கேக்கணும்னு
தோணுச்சு. அதான்.”
“அது சரி
வரும்ன்னு தோணலை”
“ஏன்?”
“அஞ்சலி
எனக்குக் கிடைச்சது எனக்கு அதிர்ஷ்டம், பவி. அவளும் நானும் ஒரே ஜாதி; இந்த ஜாதி மட்டும்
இல்லைன்னா, என்னை மாதிரி ஒருத்தனுக்கு அவ மாதிரி பொண்ணு கிடைச்சிருக்கவே வாய்ப்பில்லை.
அந்த விதத்துல, ஜாதிகள் வாழணும்; வளரணும். அவ எனக்கு உண்மையா இல்லாம இருக்கலாம். ஆனா,
வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கே. என் கல்யாணத்துக்கு முன்னாடி வாழ்க்கை எனக்குப் பெரிய
சவாலா இருந்துச்சு. அப்போல்லாம் கனவுல பாம்பு வரும்; காலை சுத்திக்கிட்டு விடாது; பயந்து
முழிச்சிக்குவேன். அவளோட கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாதிரி கனவு வர்றது நின்னுச்சு.
வாழ்க்கை நிம்மதியா போகுது; எளிமையா இருக்குது. அதுமட்டுமில்லாம ஒரு புத்திசாலி குழந்தை
வேணும்னு நான் நிறைய ஆசைப்பட்டிருக்கேன். அவகூட எனக்கு ஒரு குழந்தையாச்சும் வேணும்.
என்னால எப்படியெல்லாம் இருக்க முடியலையோ அப்படியெல்லாம் என் குழந்தையாச்சும் இருக்கணும்.”
“இது என்ன
லூசுத்தனமா இருக்கு? உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா? அறிவை மரபணு மூலமா கடத்த முடியாதாம்.
தெரியுமா?”
“அது கேள்வி
இல்லை. என் குழந்தை என்னை மாதிரி இருக்கக்கூடாதுன்னா என்னை விட சிறப்பான ஒருத்தருடைய
ரத்தமும் அதில இருக்கணும். அது அவளால முடியும். தவிரவும், அவளை மாதிரி ஒரு அதிர்ஷ்டக்கட்டை
எனக்குக் கிடைக்குமாங்குறது தான்.”
பவி ஏதும்
பேசவில்லை.
“ஹானஸ்ட்லி
எனக்கு, அஞ்சலியோட ஒத்துப்போகலை தான். ஆனா அவ கூட இருக்கிறதுதான் என் வாழ்க்கைக்கு
பாதுகாப்பு. நான் அவளுக்குப் புருஷன். நான் அவளோட ஈகோவோட சம்பந்தப்பட்டிருக்கேன். என்னை
எல்லார் முன்னாடியும் விட்டுக்கொடுக்க அவ விரும்பமாட்டா. சமூகத்துல நாலு பேர் நம்மளைப்
பத்தி நல்ல விதமா சொல்லணும்னா ஒண்ணு அதுக்கு நாம உழைக்கணும், இல்லைன்னா, அடுத்தவங்க
நம்மளை நல்ல விதமா சொல்ல வைக்கக்கூடிய இடத்துக்கு போயிடனும். அஞ்சலிக்கு புருஷங்குற
ஸ்தானம் அப்படி ஒரு இடம் தான். இதை விட எனக்கு
ஒரு பாதுகாப்பு எப்படி கிடைக்கும் சொல்லு? நான் எதுவுமே செய்ய வேண்டியது இல்லை. அவளுக்கு
புருஷனா இருந்தா மட்டும் போதும். மத்ததெல்லாம் தானா நடந்துடும்.” என்றான் ரவி.
“என்னைக்
கேக்குறியே? நீ சொல்லேன். உன் புருஷன் திறமைசாலின்னா, அவங்கிட்டருந்து நீ ஏன் கத்துக்கலை?”
என்றான் ரவி தொடர்ந்து சவால் விடும் தோரணையில்.
“உண்மையைச்
சொல்லணும்னா, என்னால ஈடுகொடுக்க முடியலை. அவர், உன் மனைவி மாதிரி ஆளுங்க எல்லாம் பத்து
ஆளுக்கு சமம். அவங்களைப் பின் தொடர்ந்து போக நினைச்சா, அவங்க வேகத்துக்கு நம்மால ஈடு
கொடுக்க முடியாது. அது நம்மளை இன்னும் தாழ்ச்சியாத்தான் காமிக்கும். நாம வேறன்னு காமிச்சிக்கிறதுல
தான் நாம கெத்தா இருக்க முடியும். Opposite
poles attracts தான் நம்ம success formula” என்று சொல்லிவிட்டுக் கண்ணடித்தாள் பவித்ரா.
அர்விந்த்
எல்லா விதத்திலும் தன்னை விடவும் மேலாகத்தான் அதுகாறும் இருந்திருக்கிறான் என்பது அப்போதுதான்
தனித்து தெரிவதாய்த் தோன்றியது அஞ்சலிக்கு.
அர்விந்தும்
புத்திசாலி தான். அவனிடமும் சேமிப்பு, சொத்துக்கள் இருக்கிறது. பொறுப்பு அதிகம். குடும்பம்,
வீடு, க்க்ஷேமம், லாபம் என்று சிந்திக்கிறவன். அவனுமே ஜாதி பார்த்த திருமணத்தில் கிடைத்தவன்
தான். அவனுடன் இருப்பது எத்தனை பாதுகாப்பு என்று அதுகாறும் ஏன் தோன்றியிருக்கவில்லை
என்று அப்போது தோன்றியது பவித்ராவுக்கு.
சொல்லப்போனால்,
‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று ரவியிடம் கேட்டுவிட்டாளே ஒழிய, அவனுடைய பதிலில்
தான் அவளுக்கான பதிலும் இருந்ததை அதன் பிறகு தான் உணர்ந்தாள் பவித்ரா.
என் வரையில்
இதை நான் இவ்விதம் பார்க்க முயல்கிறேன்; ஏனெனில் அதில் அர்த்தங்கள் அதிகமிருப்பதாகத்
தோன்றுகிறது. அர்விந்த் அஞ்சலி இருவருமே சூர்யாவின் கணித மாதிரியின் பிரகாரம் அதிக
எண் கொண்டவர்கள். தன்னிச்சையாக இயங்கக்கூடியவர்கள். இவர்கள் இருவரையும் சார்ந்திருக்கும்
ரவி, பவித்ரா இருவருமே அஞ்சலி, அர்விந்தைச்
சார்ந்திருப்பவர்கள்.
நூறு ஆண்கள்,
93 பெண்கள் கொண்ட ஒரு குழுவில், ஆண்களில் 50 பண்பட்ட மரபணு, எஞ்சியது பண்படாத மரபணு
என்கிற பட்சத்தில், ஒரு பண்பட்ட மரபணு எந்தச் சூழலிலும் தன் ஒழுக்க, அற விழுமியங்களை
மீட்டெடுக்கும் உத்வேகம் கொண்டதாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. குறைந்தபட்சம்,
அந்த உத்வேகத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் பின்னணியில்,
ரவி எனக்கு பண்பட்ட மரபணுவாகத் தோற்றம் தரவில்லை.அப்படியிருக்க சமூகத்தில் அவனுடைய
இருத்தல் என்பது, அவனுக்கு முந்தைய தலைமுறையில், பண்படாத மரபணு ஒன்றுக்கு அளிக்கப்பட்ட
வாய்ப்பெனவே என்னால் ஊகிக்க முடிந்தது.
அந்த பண்படாத
மரபணு பவித்ரா போன்ற மற்றொரு குறை எண்ணிக்கை கொண்ட பெண்ணின் அருகாமைக்குத் தகுதிப்பட்டது
ஏற்கும்படியாகத்தான் இருந்தது. என்னால் எதை ஏற்க முடிந்திருக்கவில்லை என்றால், அது,
ரவி போன்ற பண்படாத மரபணு அடுத்த தலைமுறைக்குப் பரவ, அஞ்சலி போன்ற பெண், கிடைப்பதுதான்.
குறைகளின்
தொடர் நீக்கத்தில், நிறைகளின் தொடர் மிகுவிப்பில்,
நன் நோக்கங்களின் தொடர் இயக்கத்தில், தொடர் உழைப்பில் மட்டுமே உச்சம் தொட முடியும்;
அதுதான் என்னை உருவாக்கும் முறையும் கூட. ஆனால், அஞ்சலி போன்ற பெண், ரவி போன்ற பண்படாத
மரபணுவுக்கு அளிக்கும் வாய்ப்பு எனக்குப் பின்னடைவையே தரும்.
“பண்படாத
மரபணு எல்லாமும் அடுத்தடுத்த தலைமுறை நீட்டிப்புக்கு தகுதியற்றதென்று எப்படிச் சொல்ல
முடியும்?” என்று இந்தப்
புள்ளியில் யாரேனும் வாதம் செய்யலாம். நான் மறுக்கப்போவதில்லை. விதிவிலக்குகள் சாத்தியமே.
பண்பட்ட மரபணுக்களும் கூட அடுத்தடுத்த தலைமுறை நீட்டிப்புக்கு தகுதியற்றதென்று கொள்ளத்தக்க
தவறுகளைச் செய்யக்கூடியதே. விதிவிலக்குகளுக்கு ஏது பாரபட்சம்?
ஆனால், விதிவிலக்குகளை
வைத்து, நாம் மனித முயல்வுகளின் உச்சத்தை எட்டுவதற்கான வழிமுறைகளை வகுக்க முடியாது;
உச்சத்தை எட்டும் வழிமுறையில் தானே களை நீக்கமும், சமன்படுதலும் நிகழும். மேலும் விதிவிலக்குகள்
எண்ணிக்கையில் வெகு குறைவு. அல்லவா?
என்னதான்
அஞ்சலி தன் கணவன் மீது வெறுப்புற்றிருந்தாலும், அதற்கு எதிர்வினை ஆற்ற அவள் தேர்ந்தெடுத்த
பாதை தவறென்பேன் நான். அவள் விவாகரத்தைக் கையிலெடுத்து, ரவியைப் பிரிந்திருந்தால்,
அவள் தகுதிக்கு இணையான ஒரு ஆணைச் சேர்ந்திருந்தால், பண்பட்ட மரபணு ஒன்றிற்கு வாய்ப்பளிக்கும்
பெண்ணாக ஆகியிருந்திருக்கலாம்; அது அடுத்தடுத்த தலைமுறையை, எந்த 50ன் தலைமுறை என்பதைத்
தீர்மானிக்க உதவும் என்பது என் வாதமாக இருந்தது.
ஆனால், அதைச்
செய்வதிலிருந்து அவளை தடுத்தது சாட்சாத் அவளே தான். ஏனெனில், அவள் முதலில் சூர்யாவின்
கணித மாதிரியை உள்வாங்கியிருந்திருக்கலாம்; அதன் வழி, ரவி மற்றும் அர்விந்த் இருவரையும்
பீராய்ந்திருக்கலாம்; அதன் வழி பண்பட்ட மரபணுவுக்கு அளிக்கப்படும் தொடர் வாய்ப்பில்
தான் பெண்கள் அனைவருக்குமான விடுதலை, சுதந்திரம் இருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கலாம்;
அதன் வழி, ரவியுடன் பாலுறவு மேற்கொண்டு பண்படாத மரபணுக்களுக்கு பெண்களை அண்டுவதை எளிதாக்குவது
நாளைய பெண் இனத்தையே ஆயிரமாயிரம் பண்படாத மரபணுக்கள்
காமத்தில் வீழ்த்த முயலும் அபாயத்தில் தள்ளும் ஒன்று என்பதை புரிந்திருக்கலாம் – அதுவே,
அவள் ஒரு பெண்ணாகச் செய்ய வேண்டிய ‘பண்பட்ட மரபணுக்கள் தொடர் ஊக்குவிப்பை’ தடுப்பதைப்
போன்றது என்பதை தெரிந்திருக்கலாம்; அவளானால்,
இது எல்லாவற்றுக்கும் கதவு திறக்கும் கணித மாதிரியை வெறுமனே நுகர்வுப் பொருளாக்கிவிட்டிருந்தாள்.
இறுதியில்,
குறை எண்ணுடையவர்கள், அதிக எண்ணுடையவர்களைத் தேடி அடைவது தங்களின் இருப்பை இன்னும்
இன்னும் இலகுவாக்கிக்கொள்ளவும், காபந்து செய்துகொள்ளவும் தான் என்பதற்கு நிரூபனமாக
ரவி மற்றும் பவித்ராவின் வார்த்தைகள் அமைந்ததில் எனக்கு சந்தோஷமே.
இதை வைத்து
என்னால் வேறொன்றை அவதானிக்க முடிந்தது. அது, இப்பூவுலகில் பிறக்க நேர்ந்த எல்லோரையும்
இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: அழகான பெண்கள் மற்றும் அறிவான ஆளுமை மிகுந்த ஆண்கள் ஒருபுறம்.
ஏனைய பெண்கள்
மற்றும் ஆண்கள் மறு புறம்.
கருவைச்
சுமந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் திறனுக்காக, பெண் ஏமாற்றப்படுகிறாள்; பொருளாதார
மேன்மையால் பலரின் வாழ்வை மலரச்செய்யவைக்கக்கூடிய அறிவு மற்றும் ஆளுமை திறனுக்காக ஆண்
ஏமாற்றப்படுகிறான்.
இவ்விதமாக
ஏமாற்றப்பட்ட பெண்ணும் ஆணுமாகவே என்னால் அஞ்சலி மற்றும் அர்விந்தைப் பார்க்க முடிந்தது
– இந்தப் பார்வை அஞ்சலி, மற்றும் அர்விந்திற்கே இல்லாமல் கூட இருக்கலாம்; நான் தான்
சொன்னேனே – பலர் தங்கள் பிறப்பின் பிரபஞ்ச நோக்கம் என்ன என்பதையே உணராமல் செத்து மடிவார்களென.
இந்தப் பின்னணியில்,
அர்விந்த் மற்றும் அஞ்சலி இருவரும் தொடர்ந்த கள்ள உறவுக்கு ஒரு நியாயம் இருப்பதாகவே
பட்டது எனக்கு. எது நியாயமற்றதாகப் படுகிறதென்றால்,
அது ரவி மற்றும் பவித்ராவின் கள்ள உறவுகள் தாம். வாழ்வியலின் மையமான ‘வாழ்தல்’ல், கள்ள
உறவுகள் தேவையா? முன்னேற்றத்திற்கும், களைய முடியாத சோம்பலுக்கும் தோதாக திறன் படைத்த
ஒருவரைத் துணையாக்கியது வரை கூட ஏற்கலாம்; அதுவும் கூட அர்விந்த் மற்றும் அஞ்சலி ஆகிய
இருவருக்கும் விவாகரத்து வரை செல்ல அனுமதிக்காத தைரியமின்மையின் நிமித்தமாக மட்டுமே.
ஆனால், ரவி
மற்றும் பவித்ராவின் கள்ள உறவை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது? இவர்களின் கள்ள உறவு, உண்மையில், அர்விந்த் மற்றும்
அஞ்சலியின் முகத்தில் நரகல்லைப் பூசுவதையொத்தது என்பது என் வாதம். இந்த ஈனச்செயலை செய்ய
ரவி மற்றும் பவித்ரா தரப்பில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது: அந்த நியாயம் அவர்களின்
குறை எண்கள் தாம். இந்தக் குறை எண்களை வைத்து, இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
நியாயமாக, இந்த தர்க்கத்தை யோசித்திருக்க வேண்டியது ஏமாளிகளான அர்விந்தும், அஞ்சலியுமே;
என்ன கிரகமோ, நான் இதையெல்லாம் பீராய்ந்துகொண்டிருக்கிறேன், பாருங்கள்!!!
