என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 24 November 2020

அன்னை வயலட் கலை, அறிவியல் கல்லூரி - பன்னாட்டு கருத்தரங்கம்

 சென்னை மேனாம்பேட்டில் அமைந்துள்ள, அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் "உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது.

வரும் நவம்பர் 27, 28 திகதிகளில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இலண்டன், கொழும்பு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரையாளர்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா சார்பில் நான் பங்கேற்கிறேன். "அமெரிக்கத் தமிழ் எழுத்துகளில் அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
என் தந்தை திரு.ரங்கசாமி அவர்கள் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. ஒரு கட்டட பொறியாளர். தமிழக அரசாங்கத்தில் பொதுப்பணித்துறையில் சுமார் முப்பத்தி ஐந்து வருடம் எவ்விதக்குறையும் இன்றி வேலை பார்த்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு அக்கம்பக்கத்து பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கிறார். அவரிடம் சுமார் ஐம்பது முதல் அறுபது பேர் படிக்கிறார்கள். இந்த மாணவர்களில் பலருடைய நெருக்கமான சொந்தத்திலிருந்தும், நட்புறவிலிருந்தும் அனேகம் பேர் இந்தக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் வகுப்புகள் படிப்பதாக, டியூஷனுக்கு வரும் பிள்ளைகள் மூலம் முதன் முதலில் பரிச்சயமான இந்தக் கல்லூரியில் தற்போது உரையாற்ற இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
"அமெரிக்கத் தமிழ் எழுத்துக்களில் அறிவியல்" என்பதுதான் தலைப்பு. தமிழாசிரிகளை விடவும் 'தமிழ் எழுத்துக்களில் அறிவியல்' குறித்து நாமென்ன விஸ்தீரணமாகப் பேசிவிட முடியும்? 'கல்லூரிக்குப் பிறகு என்ன?' என்பதே மாணவர்களின் ஆர்வமாக இருக்கும் என்பது என் ஊகம். ஆதலால், என் சிற்றுரையை முடித்துவிட்ட பிறகு மாணவர்களிடமிருந்தே கேள்விகளைப் பெற்று அதற்கேற்றார்போல் பதிலளிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எப்படியாகினும், மாணவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஊக்கமுடன் கலந்துகொள்ள நாம் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் கேள்வி பதிலாக நிகழ்வை நகர்த்திச் செல்ல முயல்வதன் நோக்கம். பார்க்கலாம்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய S2S நிறுவனர் திரு.இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.