Monday, 22 February 2016

ரத்தக்காட்டேரி

ரத்தக்காட்டேரி


மிருதன் தமிழ் சினிமாவுக்கு புதுசு. Zombie வகையான கதை. Speculative Fiction ல் ஒரு வகை. நான் இன்னும் பார்க்கவில்லை.

ரத்தக்காட்டேரி கதைகள் தமிழில் ஏதேனும் வந்திருக்கிறதா ??.. பெரிதாக யாரும் முயற்சித்திருப்பது போல் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு டேஸ்ட் வரவில்லை என்று தோன்றுகிறது. சின்னதம்பி போல் படமெடுத்தால், சி சென்டர்களில் நூறு நாள் கியாரண்டி.. போட்ட பணத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கும் சேர்த்து பணம் ரெடி பண்ணிவிடலாம்.

ஒரு வருடம் முன்பு கடைசியாக ஒரு பேய்ப்படம் பார்த்தேன். பெயர் 'சிவி'. அட!! என்று தோன்றியது. ஆனால் பிற்பாடு எச்.பி.ஓ சேனல் காட்டிக்கொடுத்துவிட்டது. ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி அப்படியே வரிக்கு வரி காப்பி அடித்து எடுத்திருந்தார்கள்... ம்ஹூம்... ஒரிஜினலாக முயற்சிக்க சத்யஜித்ரே தான் மீண்டும் வரவேண்டும் போல.

பின்வருவது ஒரு ரத்தக்காட்டேறி கதை. தமிழில் எழுதினால் வெளியாக மாட்டேன் என்கிறது என்று நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவோம் என்று தோன்றி இதை எழுதினேன். Quail Bell Magazine என்பது ரத்தக்காட்டேரி கதைகளுக்கேயென இயங்கும் இணைய பத்திரிக்கை. Feathery Hugs இதன் எடிட்டராக இருக்கிறார். சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நான் எப்படியோ அதை கவனிக்காமல் விட்டுவிட்டிருக்கிறேன்.. (இப்போதுதான் கவனித்தேன். இதுபோல் இன்னும் எத்தனையை கவனிக்க இருக்கிறேனோ தெரியவில்லை).

எழுதிய பிறகு தான் தெரிந்தது, அறிவியல் புனைவு, க்ரைம் அளவிற்கு இது போன்ற கதைகள் எழுதுவதில் அத்தனை சாகசம் இல்லைதான். எழுதுகையிலேயே ரத்த வாடை அடிப்பது போல ஒரு உணர்வு. இதற்கு பிறகு ரத்தக்காட்டேறி கதை எழுத தோன்றவில்லை.

சரி. எதற்கு அதெல்லாம்? கதை இதோ..

Wednesday, 17 February 2016

குறுங்கதைகள்

குறுங்கதைகள்


காதலர் தினத்துக்கு நான் எழுதிய குறுங்கதைகளிலேயே காதல்' என்கிற கதை மிகவும் பிடித்திருந்தது..காதல் - ஒரு பக்க கதைநேரான மருவற்ற சாலையில், சாதனா தன் தோழி சரிதாவுடன் எதிர்படுகையில், தடுமாறி அவர்களெதிரே வழுக்கி விழுந்தான் மதன்.

'ஏங்க, மேடு பள்ளம் இல்லாத புது ரோட்டுலகூடவா வழுக்கி விழுவீங்க' என்றாள் சரிதா கேலிச்சிரிப்புடன்.

'ரோட்டுல மேடு பள்ளம் இல்லதாங்க.. ஆனால் அபாய வளைவு தான் உங்க ஃப்ரண்டு கிட்ட‌ இருக்கே.. அதுதான் வழுக்கிடுச்சு' என்றான் மதன், எழுந்து நின்றபடி.

வெட்கி சிரித்த சாதனா, அணிந்திருந்த சேலை முனையை விரல்களால் இழுத்து தனது இடுப்பை மறைத்துக்கொள்ள,

'எது இருக்கோ இல்லையோ.. வாய் இருக்கு' என்றாள் சரிதா.

அடுத்த நாள், தூரத்திலேயே மதனை பார்த்துவிட்டு, தனது இடுப்பை சாதனா, சேலை முனையால் மறைத்துக்கொள்ள, நெருங்கி வருகையில் மீண்டும் வழுக்கி விழுந்தான் மதன்.

'இப்ப என்னாச்சு சாருக்கு?' என்றாள் சரிதா.

'இப்பவும் அதே அபாய வளைவு தாங்க' என்றான் மதன்.

'ஹலோ.சாருக்கு என்ன எக்ஸ்ரே பார்வையா இருக்கு? அதான் இழுத்து போத்தியிருக்காளே. அப்புறம் எப்படி தெரிஞ்சுதாம்' என்றாள் சரிதா.

'நான் சொன்னது உங்க இடுப்பை தாங்க' என்றான் மதன்.

'அப்போ நேத்து அவ இடுப்புன்னு சொன்னீங்களே?' என்றாள் சரிதா.

'ஐம் சாரி.. நான் நேத்து உங்களை பத்தி அவங்ககிட்ட தாங்க சொன்னேன்..' என்றான் மதன்.

இப்போது சரிதா வெட்கப்பட, சாதனா அதிர்ச்சியானாள்.
 - ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)
இது போன்ற கதைகள் எழுதப்படுவதை ஊக்குவிக்க கொஞ்ச நாள் முன்பு வரை உயிர்மை பதிப்பகத்தின் உயிரோசை இணைய தளம் இருந்தது. வாரம் ஒரு கதை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். அவர்களும் வெளியிட்டார்கள்.

ஒருமுறை கவிஞர் மனுஷ்யப்புத்திரனை அவரது மயிலாப்பூர் அலுவலகத்தில் சந்தித்தபோது, 'யாருமே சரியா எழுத மாட்டேன்றாங்க' என்றார் என்னிடம். அப்போதே நினைத்தேன். அந்த இணைய இதழை நிறுத்தி விடுவார்கள் என்று. நிறுத்தியே விட்டார்கள்.

இப்போது இவ்வகை கதைகளை குங்குமம்,  குமுதம், ராணி போன்ற வெகு ஜன பத்திரிக்கைகள் ஆதரவளித்தால்தான் உண்டு. எழுத்தாளருக்கு சன்மானமும் இந்த பத்திரிக்கைகள் தான் தருகின்றன. கதைக்கு ரூ.300 குறைந்தபட்சம் கியாரண்டி.

இவ்வகை கதைகள் என்னால் அதிகளவில் எழுத முடிகிறது. தோன்றுவதை வேறென்ன செய்ய? ஆங்கிலத்தில் critical thinking, Logical reasoning என்பார்கள்.  இதெல்லாம் சிந்தனா முறையில் இருந்தால், இவ்வகை கதைகள் தண்ணி பட்டபாடு தான் அதைச் செய்கையில் ஒரு சாகச உணர்வு கிடைக்கிறது பாருங்கள்.. அது அலாதியோ அலாதி. இவ்வகை கதைகளில் ஆபத்தும் இருக்கிறது. இலக்கியவாதி இல்லை என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். ஜனரஞ்சக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆணானப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவுக்கே அதுதான் கதி. ஆனாலும் அவருடைய சில கதைகள் இலக்கிய மதிப்பு வாய்ந்தவை தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். எனக்கு இலக்கிய காவலராக இருக்கவெல்லாம் விருப்ப‌மில்லை. அதை ஒரு நோயாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. நான் காணும் உண்மைகளை பதிய ஒரு மார்க்கம். எழுத பிடிக்கிறது. எல்லா வகை எழுத்தையும் எழுதக்கூடியவனாக இருக்கவே விரும்புகிறேன். புத்திசாலித்தனமான எழுத்து. சமூகத்துக்கு எதையேனும் உருப்படியாக சொல்லக்கூடிய எழுத்து.

இலக்கிய வரையரை எது என்று தெரியும். அதை வெளிப்படுத்த நாவல்களும், கவிதைகளும் மட்டுமே எனக்கு சரியான தளமாக படுகின்றன. 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவலுக்கு இலக்கிய மதிப்பு உயர் தரம். உயிர்மையின் உயிரோசையில் வெளியான எனது கவிதைகளும் தான். சிறுகதைக‌ள் இலக்கிய மதிப்பு மிக்க ஆக்கத்திற்கு கொஞ்சம் சுருங்கிய வடிவமாகவே பார்க்கிறேன்.

மிகவும் பிடித்த இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதி  Magnolia Review Magazine என்கிற சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். இந்த இடத்தில் இந்த சிற்றிதழ் பற்றி சொல்லவேண்டும்.

அமேரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள Bowling Green State University என்கிற பல்கலைக்கழகத்தின் Creative Writing மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிற்றிதழ் தான் Magnolia Review Magazine என்பது. தற்போது Suzanna Anderson என்பவர் இதன் எடிட்டராக உள்ளார்.

இந்த கதையை அனுப்பிவிட்டு மறந்துவிட்டேன். ஆங்கிலத்தில் பல பத்திரிக்கைகளிலிருந்து பதில் வர‌ அதிகபட்சமாக 90 நாட்கள் கூட ஆகும். ஆகையால் அனுப்பிவிட்டு மறந்துவிடுதல் உத்தமம். சமீபமாக Suzanna மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்களது சிற்றிதழில் வெளியிடுவதாக. சொன்னபடி வெளியிட்டுவிட்டார். ஆங்கிலம், தமிழ் இரண்டையும் வாசித்துவிட்டு சொல்லுங்கள். எது நன்றாக இருந்தது என்று. இப்படி வெளியாவது இது வரை எத்தனையாவது முறை என்பது மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.

என்னைப்பொறுத்தவரை, Speculative Fiction களுக்கு சந்தை இருக்கிறது. குறுங்கதைகளுக்கு ஒரு இடம் இருக்கிறது. இனி தாராளமாக தோன்றியதையெல்லாம் எழுதலாம்.

ஒரே கதை. இரண்டு மொழிகளில். எப்படி இருக்கிறது என்பதை வாசித்துப்பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள்..

Monday, 8 February 2016

குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை

08-பிப்ருவரி-2016 தேதியிட்ட இந்த வாரம் குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை.
எனது குறுங்கதையை தேர்வு செய்து வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.Sunday, 7 February 2016

இந்த வார குங்குமம் இதழில் என் குறுங்கதை

ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள்.
லவ் என்கிற தலைப்பில் காதலர் தினத்திற்கென நான் எழுதிய குறுங்கதையொன்று இந்த வார குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது.
பணி நிமித்தம் அமேரிக்காவில் இருப்பதால், நண்பர்கள் யாரேனும் இந்த இதழில் கதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?