Thursday, 5 November 2015

கல்லடி - ஒரு பக்க கதை

கல்லடி - ஒரு பக்க கதைஇரண்டு கட்சி ஆட்களும் அந்த அகண்ட சாலையில் 200 மீட்டர் இடைவெளியில் எதிரெதிரே நின்றிருந்தனர். பலரது கைகளில் பெரிய சாக்குப்பை. அதனுள் பெரிய கருங்கற்கள். 

மாநகர பேருந்துகள் வேறு வழியின்றி நின்றுவிட, பயணிகளும் பொதுமக்களும் அலறி அடித்து பேருந்துகளை விட்டிரங்கி அகப்பட்ட சந்துபொந்துகளில் புகுந்து மறையத் துவங்கினர். சாலையோர கடைகளின் ஷட்டர்களை இறக்கிவிட்டு உள்ளுக்குள் ஒளிந்துகொண்டார்கள் கடை முதலாளிகள்..

அபார்ட்மெண்ட் வீடுகளுக்குள்ளிருந்து அவசர அவசரமாக, பேண்ட் அணிந்துகொள்ளும் அவகாசம் கூட தராமல், அணிந்திருந்த கால்சட்டைகளுடன் ஓடோடி வந்து தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையிலிருந்து அகற்றி அபார்ட்மென்டுகளுக்குள் பாதுகாப்பாக நிறுத்தத்துவங்கினர் குடும்பத்தலைவர்கள்..சுற்றிலும் எல்லா பால்கனிகளிலும், பெண்களும் சிறுவர்களும், கிழவர், கிழவிகளும் என்னதான் நடக்கிறதென வேடிக்கை பார்க்க குழுமி, தங்களுக்குள் 'கலியுகத்தின் பலாபலன்களை' அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர். 

மா நகரின் அத்தனை பிரதான பத்திரிக்கைகளின் ரிப்போர்ட்டர்களும் லைவ் கவரேஜ் செய்ய வந்துவிட்டது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, இரண்டு கட்சி கூட்டத்தினரும் தங்கள் கூட்டத்தலைவன் மூலமாக தலைவருக்கு செய்தி அனுப்பினார்கள்.. பதில் வர சற்று தாமதமானது.

ரேடியோவில், 'எதிர்கட்சித்தலைவர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தால், நகரில் பதட்டமான சூழ் நிலை நிலவுகிறது. பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.......' என்று செய்தி அறிவிப்பாளினி அறிவித்துக்கொண்டிருந்தார்.

சட்டென இரண்டு தரப்பிலும் பதட்டம் கூடியது. பரபரப்பு அப்பிக்கொண்டது. 

எல்லோரும் ஆவேசமாக, சாக்குப்பைக்குள் கைவிட்டு பெரிய பெரிய கற்களை அள்ளிக்கொள்ள, ஆங்காங்கே தெரிந்த காக்கிச்சட்டைகள், லத்தியை ஓங்கியபடியே, தற்காப்புக்கென மரத்தால் செய்யப்பட்ட தடுப்பான்களை தங்களின் முன்னே நீட்டியபடியே எதிர்கட்சி ஆட்களை நேருங்கினர்.

'தப்பு செய்யிறவனுக்கு கல்லடிதான்.. இன்னிக்கு எத்தனை பேருக்கு மண்டை உடையப்போகுதோ!!'  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார் 

அப்போதுதான் சற்றும் எதிர்பாராத விதமாக அது நடந்தது. 

கருங்கற்களை ஏந்தியிருந்த இரு கட்சி ஆட்களும் கற்களை கீழே போட்டுவிட்டு ஓட,  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  சிறியவர்களும், பெண்களும் , பெரியவர்களும் சிரித்தனர். போலீஸ் தங்கள் ஜீப்புக்குள் ஐக்கியமாக, சூடான செய்திக்கு காத்திருந்த ரிப்போர்ட்டர்கள் சலித்தபடி தாங்கள் வந்த செய்தி நிறுவன ஊர்திக்குள் தஞ்சம் புகுந்தனர்.

வானம் கருத்து, மழை பொழிந்தது. கல் மழை.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@gmail.com)

Thursday, 8 October 2015

ஆனந்த விகடனில் எனது கவிதை

ஆனந்த விகடனில் வெளியான எனது கவிதை 'சாலையை கடத்தல்'...

எனது கவிதையை தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

Tuesday, 29 September 2015

'பறக்கும் முத்தம்' சிறுகதை - ராணி

06.10.2015 தேதியிட்ட இந்த வார ராணி இதழில் பக்கம் 33ல் வெளியான எனது சிறுகதை 'பறக்கும் முத்தம்'
Wednesday, 9 September 2015

குங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த வாரம் குங்குமம் இதழில் பக்கம் 51 ல்  வெளியாகியிருக்கும் எனது சிறுகதை ' சமாளிப்பு' பிரதி இங்கே.


வாசித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..


குங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை

இந்த வாரம் குங்குமம் இதழின் கவிதைக்காரர்கள் வீதியில் வெளியாகியிருக்கும் எனது கவிதை 'கடைசித்துளி' பிரதி இங்கே.


வாசித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..

Saturday, 29 August 2015

கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதைஅன்பு நண்பர்களுக்கு,


'இடஒதுக்கீடும், சலுகையும்' என்ற தலைப்பிலான எனது கவிதை ஒன்று இந்த மாத கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் பக்கம் 68ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Friday, 3 July 2015

நடைபிணங்கள் - ராணி முத்து சிறுகதை

இந்த வார ராணி முத்து இதழில் வெளியான எனது சிறுகதைMonday, 18 May 2015

கல்கி இதழில் எனது 'பயணம்' கவிதை


24.05.2015 தேதியிட்ட இந்த வார கல்கி இதழில் எனது 'பயணம்' கவிதை வெளியாகியிருக்கிறது.
எனது கவிதையை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, 6 May 2015

குங்குமம் "கவிதைக்காரர்கள் வீதி"


குங்குமம்  "கவிதைக்காரர்கள் வீதி"


11.05.2015 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழ் "கவிதைக்காரர்கள் வீதி"யை என் கவிதைகளுக்கு அளித்திருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்...

குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

Sunday, 3 May 2015

கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத்

கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத் 


download
  
அவனை எல்லாரும் அப்படித்தான் அழைப்பார்கள்.
அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கலாம். சைதாப்பேட்டையில் , பிள்ளையார் கோயில் தெருவில் வாடகைக்கு குடியிருந்தோம். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.
வீட்டு உரிமையாளர் பேரன் பேத்தி பார்த்தவர். மாடியில் இருந்துகொண்டு, கீழ் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். எங்கள் வீட்டையும் சேர்த்து அங்கே ஆறு போர்ஷன்கள் அவருடையதாய் இருந்தது. அவர் வேலைக்கென்று போய் நான் பார்த்தது இல்லை. அவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி, மூத்தவனுக்கு ஒரு ஆண் பிள்ளையும், இளையவனுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருந்தது. அவருக்கு ஒரு தம்பி உண்டு. அரசியலில் இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அப்போதைய திமுக பிரமுகர் ஒருவருடன் இணைந்து கொண்டு ஆங்காங்கே தென்படுவார். தேர்தல் நேரத்தில் அந்த பிரமுகர் வீடுவீடாக ஓட்டு சேகரிக்க வருகையில், அவரும் அவர் மனைவியும் வாசல் வரை வந்து ஆரத்தி எடுப்பார்கள். மற்றபடி அவர் உண்மையில் அரசியலில் என்னவாக இருந்தார் என்பது நான் உள்பட யாருக்கும் விளங்கியதில்லை. எங்கள் ஆறு போர்ஷனுக்கு பின்புறம் எட்டு போர்ஷன்கள் அவருக்கு சொந்தமாய் இருந்தன. அவைகளை அவரும் வாடகைக்கு விட்டிருந்தார்.
நாங்கள் அங்கே குடியேறியபோது, எங்கள் யாருக்கும் கிஷ்ணா, யார் என்பது தெரியாது. இன்னும் சொல்லப்போனால், குடிவந்த சில வருஷங்களில் கூட எங்களுக்கு தெரியவரவில்லை. அவனை நாங்கள் எல்லோருமே , ஒருமித்த கருத்துடன், பைத்தியம் என்று தான் நினைத்திருந்தோம்
அந்தளவிற்கு கிஷ்ணாவின் தோற்றமே பயமுறுத்தும்.
ஐந்தடியில் ஒல்லியான தேகம். உடலெல்லாம் முடி. சவரம் செய்து நாளான முகம். செம்பட்டையும் வெள்ளையுமாய் தலை முடி. எப்போதுமே மயங்கிச் செருகும் கண்கள். கிழிந்த நைந்த அழுக்கேறிய சட்டை. கிழிந்த இடத்திலெல்லாம் கையாலேயே அனுபவமின்றி, முறையான தையல் அறிவு இன்றி ஒட்டுப்போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், அந்த வேலையைச் அவனே தான் செய்திருக்கிறான் என்பதை என்னைப்போலவே , பார்க்க நேர்ந்த அனைவரும் நினைத்தனர் என்று எனக்கு தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு விதமான சாராய நெடி. நடக்கையிலேயே தள்ளாட்டம் கண்கூடாகத் தெரியும். பல சமயங்களில் கட்டியிருக்கும் அழுக்கடைந்த வெள்ளை வேட்டி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்கிற தோரணையில், தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டே நடக்கும் பிள்ளை போல, அவனது இடுப்பை பலகீனமாக கவ்வி தவழும். அவ்வப்போது தனக்குத் தானே பேசிக்கொள்வான். எப்போதுமே குடித்திருப்பதால், ஒரு விதமாக குழறி குழறியே அவன் பேச்சு இருக்கும். அந்த மொழி யாருக்குமே புரியாது.
தெருமுனையில் உள்ள போர் பைப் அருகில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். ஏதாவது ஒரு தெரு நாய் அவன் கால்களின் மீது தலை வைத்து படுத்துக்கிடக்கும். பிற்பாடு அவனாகவே எழுந்து, தள்ளாடியபடியே நடந்து எங்கள் வீட்டு மாடி வராந்தையில் வந்து அமர்ந்துகொள்வான். அவனுடன் தெரு நாய்களும் வராந்தை வரை வரும். தெரு நாய்கள் அவனை தொடர்ந்து வருவதாலேயே, குடித்தனக்காரர்கள் அவனை ஏசுவார்கள். நாய்களை விரட்டுவார்கள். பகல் நேரங்களில் தான் இப்படி. இரவுகளில் மாடியில் நாய்கள் அவ்வப்போது ஊளையிடும் சத்தம் கேட்கும்.
கிஷ்ணாவுடன் இருக்கும் நாய்கள் என்று நாங்கள் நினைத்துக்கொள்வோம். நாய்கள் இருப்பதால், திருடர்கள் பயம் இருக்காது என்பதால், அதை யாரும் பெரிதாக ஏதும் சொல்வதில்லை. அவைகளுக்கு அவன் உணவோ, வேறு ஏதேனும் பராமரிப்போ செய்யாதபோதிலும் அந்த நாய்கள் அவனையே எப்படி ஒட்டிக் கிடக்கின்றன என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது பேசுகையில் வியந்திருக்கிறோம்..இன்னும் சொல்லப்போனால், பல வீடுகளில் இந்த தெரு நாய்களின் பாதுகாப்பிற்கெனவே, கிருஷ்ணாவை அவர்கள் வீட்டில் தங்க வைக்க கூட உத்தேசித்தார்கள். மழை பெய்யும் இரவுகளில் மாடிக்கு செல்ல நேர்ந்த இரண்டொரு தினங்களில் அவன் வராந்தையிலேயே குளிரில் நனைந்தபடி அரை மயக்கமாக கிடப்பதை கவனித்திருக்கிறேன். அவன் எங்கே குளிக்கிறான், காலைக் கடன்களை எவ்வாறு கழிக்கிறான் என்பது பற்றியெல்லாம், தெரு பையன்களுக்குள் பேசுகையில், கேள்விகளாக எல்லோருமே கேட்டிருக்கிறோமே ஒழிய எவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.
நானெல்லாம் தி. நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கு போக காலை ஏழறைக்கெல்லாம் சாப்பாடு கட்டிக்கொண்டு வாசலுக்கு வருகையிலேயே தள்ளாடியபடியே கடந்து போவான் கிஷ்ணா. ‘காலையிலேயே மப்பா’ என்று அக்கம்பக்கத்தில் சலிப்பார்கள். அப்படியான தருணங்களில், அப்பா, வாசல் வரை வந்துவிட்ட என்னை மீண்டும் உள்ளே போகச் சொல்லி, ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கொடுத்து பருகச் சொல்லிவிட்டு மீண்டும் போகச் சொல்லுவார். இது போல் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. முதலில் அப்படி நடக்கும்போதெல்லாம் , ஜாடை மாடையாக அவன் காது பட சொல்லி, அதற்கு பெரிதாக அவனிடமிருந்து பலன் ஏதும் இல்லாமல் போகவே, முகத்துக்கு நேராக திட்டியும் இருக்கிறார்கள் என் அப்பா உள்பட அக்கம்பக்கத்தில்.
‘கண்ணுக்கு லட்சணமா, ஒரு ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா, இங்க இத்தனை குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்குற இடத்துல, அபசகுனம் மாதிரி தினம் தினம் இவனால எவ்ளோ தடங்கள்?’ என்று சொல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். இன்னும் பல குடும்பங்கள் என்னென்னவெல்லாமோ சொல்லி திட்டினாலும், எல்லோருமே பொதுவில் ‘ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா’ என்கிற வார்த்தைகளை பயன்படுத்தியதை நான் கவனத்தில் கொண்டிருந்தேன். அந்த நேரத்திலெல்லாம் அவன் முகம் அரை மயக்கத்திலேயே இருக்க, நாளடைவில், அப்படியெல்லாம் சொல்வதையும் விட்டுவிட்டார்கள்.
இத்தனை இருந்தும் பெரிதாக அவன் மீது எந்த குறையும், எவரும் சொல்லவில்லை. தெருவில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம் சில பையன்கள் வம்பிழுத்ததாக பேச்சு வந்து, இரண்டு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போட்டுக்கொண்ட போது, கிஷ்ணா மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு அதுவரை வந்ததில்லை என்பது குறித்து எல்லாருமே வியப்புடன் தான் பேசிக்கொண்டார்கள். அக்கம்பக்கத்தில் பைப் அடைத்துக்கொண்டால், அவனைத்தான் கூப்பிடுவார்கள். அவன் ஒன்றும் கை தேர்ந்த ப்ளம்பர் இல்லை. ஆனால், இப்படி கூப்பிடும் வீட்டுக்கெல்லாம் போய் சொன்ன வேலையைச் செய்து, கொஞ்சம் வேலை தெரிந்திருந்தபடியாலும், இவனை விட்டால் சாக்கடையில் கைவிட, வேறு ஆள் இல்லை என்பதாலும் எல்லோரும் இவனையே கூப்பிடுவார்கள். வேலை முடிந்ததும் கொஞ்சம் பணம் தருவார்கள். அந்த பணத்தில் தான் அன்றிரவு அவனுக்கு சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கரன்ட் போய்விட்டாலோ, காத்தாடி எவர் வீட்டுக் கொடியிலாவது சிக்கிக் கொண்டாலொ, எவர் வீட்டுக்கேனும் மாவரைக்கவேண்டுமென்றாலோ, எவர் விட்டிலேனும் ஸ்விட்ச் பாக்ஸ் வேலை செய்யவில்லை என்றாலோ, வீடு காலி செய்யவேண்டுமென்றாலொ, எல்லோரும் கூப்பிடுவது கிஷ்ணாவைத்தான். எந்த வேலையையும் தனக்கு தெரியாது என்று அவன் சொன்னதே இல்லை. வேலைக்கேற்ப பணம். பணத்திற்கேற்ப சாராயம். இதுதான் கிஷ்ணா.
ஒரு முறை, நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி மொட்டை மாடியில் காத்தாடி விடக் கிளம்பினோம். தெருவின் மாஞ்சா வல்லுனன் கோபாலு வஜ்ரம், ஆல மர வேர், கலர் பவுடர், முட்டை . சோடா மாவு, பாட்டில் துண்டுகள், நாயின் கக்கா முதலானவற்றை சேர்த்து காய்ச்சி மாஞ்சா தயார் செய்தான். லோட்டாய் சுற்றி, சூஸ்திரம் போட்டு, வால் கட்டி காத்தாடியை பறக்க விட்டோம். உயர உயர பறந்த காத்தாடி நடுவானில் எங்களுடனான தொடர்பை இழந்து, தன் போக்கில் பறக்க, கிஷ்ணா நான்கு வீட்டின் மொட்டை மாடிகளை தாண்டி, ஓடிச்சென்று காத்தாடியின் அறுந்த நுனியை பற்றியதில் அவன் விரல்களில் மாஞ்சா கிழித்து ரத்தம் வந்தது.
எங்களுக்கு காத்தாடி கிடைத்த மகிழ்ச்சியில், காற்றின் பிரிதொரு திசையை பயன்படுத்திக்கொள்ள, வேறு நாண்பனின் வீட்டு மாடியில் முயற்சி செய்ய கிளம்பிவிட்டோம். பிற்பாடு இந்த நிகழ்வை மறந்தும் விட்டோம். நான்கு நாட்களுக்கு பிறகு, அவன் வராந்தையில் வாந்தியெடுத்து அதன் மீதே படுத்துக்கிடக்கையில் தான், எதேச்சையாக அந்தப் பக்கம் போக நேர்ந்த நான் கவனித்தேன், அவன் விரல்களில் இருந்த வெட்டுக்காயத்தில் ரத்தம் உறைந்து வடுவாகியிருந்தது. அதைப் பார்த்ததிலிருந்து, அவன் மீது எனக்கு ஏதோ இனம் புரியாத கரிசனம் தோன்றியது. எல்லோரும் அவனை கேலி செய்ய நான் மட்டும் மெளனமாக அவன் மீது பரிதாபம் கொண்ட நாட்கள் அவை.
அவனுக்கு வந்ததைச் செய்வான். ப்ளம்பிங், மின்சார இணைப்பு தருவது, சரிபார்ப்பது என்று அவன் செய்யும் வேலைகளுக்கு, அவனளவிற்கு வேலை தெரிந்த வேறொருவர் எனில், கேட்கப்படும் கூலியில் எளிதாக இரண்டு பேர் குடும்பம் நடத்தலாம் என்று அக்கம்பக்கத்தில் பேச்சுக்கள் உலவின. ஆயினும் அவன் அதிகம் கேட்பதில்லை. கொடுப்ப‌தை வாங்கிக்கொள்வான். கிடைக்கிற கூலியில் சாராயம் குடிப்பான். கூலி இல்லையெனில் சுருண்டு படுத்துக்கொள்வான். அடித்துப் பிடுங்கியதாகவோ, இரைந்து கேட்டதாகவோ எங்கும் அவனைக் குறித்து பேச்சு இருக்கவில்லை. தெருவில் எல்லோருக்கும் உதவியாய் இருந்தான். பிரதிபலன் எதிர்பார்த்து எதையும் செய்து நான் பார்த்ததாக நினைவில் இல்லை. சும்மா கொடுத்து அவன் வாங்கியும் நான் பார்த்ததில்லை. பண்டிகைக்கு பலகாரங்கள் தந்தால் சிரித்துக்கொண்டே வாங்கிக் கொள்வான். அவற்றையும் பல சமயங்களில் தெரு நாய்களுக்கு தின்னக் கொடுத்துவிட்டு அவைகள் உண்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த வீட்டுக்கு குடி வந்து மூன்று வருடங்கள் இருக்கும். இந்த மூன்று வருடங்களில், அவன் எங்கு வேலையாக சுற்றினாலும் பொழுது சாய்ந்தால், எங்கள் வீட்டு மாடியில் வராந்தையிலேயே துணி விரித்து படுத்துக்கொள்வதை பார்த்துவிட்டு, அவனுக்கும் எங்கள் வீட்டு ஓனருக்கும் ஏதோ இருக்கிறது என்று ஒருவாறு நாங்கள் புரிந்துகொண்டோம்.
விடுமுறை நாட்களில், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் அம்ர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கிஷ்ணா பற்றி பேச்சு வருகையிலெல்லாம், அவன் எங்கே தங்குகிறான், அவன் வீடு எது, மனைவி குடும்பம் எல்லாம் இருக்கிறதா, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொள்ளும் போது தான், எங்கள் வீட்டு ஓனரின் தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்கு மதிய உணவு தர அவன் போய் வரத்துவங்கியிருப்பது, அதே பள்ளியில் படிக்கும் தெரு பிள்ளைகள் சொல்லி தெரியவந்தது. அந்த தெருவில் வசிக்கும் இன்ன பிற குடும்பங்களை விட எங்கள் வீட்டு உரிமையாளர் குடும்பத்துக்கும் அவனுக்குமான கூடுதல் ஒட்டுதல் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கவே அதிலிருந்து, கிஷ்ணாவுக்கும் எங்கள் வீட்டு உரிமையாளருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்பதாக அவன் யார் என்பது குறித்த‌ தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக‌ உருப்பெறத் துவங்கின.
அந்தப் பிள்ளைகள் வாயை, அதே பள்ளியில் பயிலும் எங்கள் தெரு நண்பர்கள் கிண்டியதில், கிஷ்ணா, என்பவன், எங்கள் வீட்டு உரிமையாளருக்கும், அவரது தம்பிக்கும்,உடன் பிறந்த‌ இளைய தம்பி என்கிற உண்மை தெரியவந்தபோது நாங்கள் அதிர்ந்தே போனோம். சொந்த தம்பி. ஒரே வயிற்று பிள்ளைகள். முதல் இருவரும் இத்தனை வசதியாய் இருக்கையில், மூன்றாமவன் மட்டும் ஏன் இப்படி? என்று தெருவே பேசியது. எட்டும் ஆறும் பதினான்கு போர்ஷன்களில் ஒன்றே ஒன்றை கூட தம்பிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத கல் நெஞ்சு குறித்து வாடகைக்கு குடியிருக்கும் நாங்கள் அனைவருமே கூடி கூடிப் பேசிக்கொண்டோம். எங்கள் வீட்டு உரிமையாளரையும், பின்னால், எட்டு போர்ஷன்களுக்கு உரிமையாளராய் இருக்கிற, அவரது தம்பியையும் ‘பொழைக்கிறவன் பொழைக்கிறான்’ என்றார்கள்.
‘அந்த கிஷ்ணா, அவனோட அண்ணனுங்க மாதிரி ஒழுங்குமுறையோட இருந்திருக்க மாட்டான். ஒழுங்குடன் இருத்தல்ங்குறது என்ன சும்மாவா? அண்ணனுங்க ரெண்டு பேரும் என்னமா குடும்பத்தை பாத்துக்குறாங்க.. புள்ளைங்களை படிக்க வைக்கிறாங்க‌?! வாடகை தான் வருமானம்னாலும் குடும்பமா சேர்ந்து செலவு செஞ்சிக்குறாங்கல்லா?!’ என்று சில பெரியவர்கள் அங்கலாய்த்தார்கள்.
‘அட! யோசிச்சிருப்பாங்க. குளிருக்கு கால் மட்டும் வச்சிக்கிறேன்னு ஒட்டகம் சொல்லிச்சாமே. அந்த கதையா, போனாப்போகுதுன்னு பதினாலு போர்ஷன்ல ஒண்ணு குடுக்க போக, அவன் சோம்பேறி ஆயிடலாம். அல்லது, அதான் சாக்குன்னு சொத்து பிரச்சனை கிளப்பலாம்ன்னு யோசிச்சிருப்பாங்கல. இன்னிக்கு நவீன உலகத்துல எதுவும் நடக்கலாம்ப்பா’ நியாயம் பேசினார்கள் பலர். .ஆனால் எதுவும் பெரிதாக நடக்கவில்லை. கிஷ்ணா எப்போதும் போல், தெருவிற்கே எடுபிடியாகத்தான் இருந்தான். வராந்தை தான் அவனுக்கு வீடாக இருந்தது.
இதற்கிடையில், பத்தாவது பொதுத் தேர்வு துவங்கியது. அப்போதுதான் மெட்ரோ சானல் துவங்கியிருந்தார்கள். அதற்கு முன்பு வரை, தொலைக்காட்சி என்றால் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், சனிக்கிழமை தூர்தர்ஷனில் ராஜேஷ் கண்ணா, ஷம்மி கபூர், நஸ்ருதின் ஷா , அமிதாப்பச்சன் நடித்த ஏதாவது ஹிந்தி படம், ஞாயிறு தமிழ்ப்படம். இவ்வளவுதான். மெட்ரோ சானல் வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரங்களுக்கு மட்டும் நிகழ்ச்சிகள். ப்ரியா என்றொரு தொகுப்பாளினி வாய் ஓயாமல் பேசினார். முக்காபுலா என்றொரு நிகழ்ச்சியில் பாபா சேகல் என்றொருவர் தொகுப்பாளராக அறிமுகமானார். ஜுனூன், அஜ்னபி என்றெல்லாம் ஹிந்தி நிகழ்ச்சிகளில், தூர்தர்ஷனால் பாலைவனமாக இருந்த தொலைக்காட்சிகள், மெட்ரோ வருகையால் நந்தவனமாகியது. குறிப்பாக ஜுனூன் சீரியலின் துவக்க பாடல், கிட்டத்தட்ட தேசிய கீதம் போல் எல்லா பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருந்தது. ஹிந்தி தெரியாத பையன்கள் கூட அந்தப் பாடலை மனப்பாடமாக பாடினார்கள்.
மெட்ரோ புண்ணியத்தில் பின்மாலை பொழுதுகளில் வீட்டில் படிக்க முடியாத சூழல் உருவானது.. அக்கம்பக்கத்து வீடுகளில் மெட்ரோ நிகழ்ச்சிகளின் சத்தம் தாங்காமல், நான் மொட்டை மாடிக்கு படிக்க அனுப்பப்பட்டேன். மொட்டை மாடி வந்த பிறகு தான் தெரிந்தது அனேகம் பிள்ளைகள் மொட்டை மாடிக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்று.
மொட்டை மாடிக்கு வழிவிடும் கதவுக்கு முன்னால், ஒரு சிறிய, இரண்டு சூட்கேஸ்கள் படுக்க வைத்தால் எத்தனை இடம் இடைக்குமோ அத்தனை இடத்தில் தட்டுமுட்டு சாமான்கள், பழைய டயர், ஸ்பேனர், துருபிடித்த அறிவாள், ஓடாத ஃபேன்கள் இரண்டு, சைக்கிள் ரிம், உடைந்த லாக், பிய்ந்து போன சோபா குஷன்கள், காலாவதியாகிப் போன ட்ரான்சிஸ்டர்கள், ரேடியோ, செய்தித்தாள்கள், திருமண அழைப்பிதழ்கள், காலி பாட்டில், எட்டு செங்கற்கள், மண் பானை, உருக்குலைந்த எவர்சில்வர் தட்டுகள் என பலதரப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் கொஞ்சம் சுத்தமான பெட்டி ஒன்றும் இருந்தது.
மொட்டை மாடியில், திறந்த வெளியில் நடந்தபடி படிக்கும் நான், கால் வலித்தாலோ அல்லது லேசாக தூரல் போட்டாலோ அங்கே கதவைத் திறந்து வைத்தபடி அமர்ந்து படிப்பது வழக்கம். அப்போதெல்லாம் சுற்றிலும் கலைந்து, தூசி படிந்து கிடக்கையில் அந்த பெட்டி மட்டும் ஓரளவு சுத்தமாக இருப்பது என் கண்களை உறுத்தும். உள்ளே என்ன இருக்கும் என்றெல்லாம் பலமுறை சிந்தனை செய்துவிட்டு, அடுத்தவர் பெட்டியை தொடுவானேன் என்று பல நாள், அந்த பெட்டியை திறந்து பார்ப்பதை ஒத்திப் போட்டிருக்கிறேன்.
இருந்தும் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.
கிஷ்ணா எங்கள் வீட்டு உரிமையாளரின் தம்பி என்கிற தகவல் தெரிந்துவிட்ட பிறகு, அந்த பெட்டி கிஷ்ணாவுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவன் மணமானவனா, அவனுக்கு குடும்பம் இருக்கிறதா, பிள்ளைகள் இருக்கிறார்களா, சகோதரர்கள் வசதியாக இருக்க அவன் மட்டும் ஏன் இப்படி என்று எங்கள் எல்லோரிடமும் இருந்த விடை தெரியாத கேள்விக்கு, பதில் தேடும் ஆர்வம் மேலிட, ஒரு நாள், அதைத் திறந்தேன். உள்ளே சிகப்பில் ஒரு காட்டன் புடவை, ஒரு நைந்த லுங்கி, சட்டை, தீப்பெட்டி, ஒரு காகிதத்தில் மாயூரம் அடுத்த பேரளம் கிராமத்தில் ஒரு முகவரி, லெட்சுமி என்ற பெயரில் ஒரு ஜாதக குறிப்பு, சில வளையல்களுடன், ஒரு பெண்ணின் புகைப்படமும் இருந்தது. ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்தப் பெண் புடவை அணிந்திருந்தாள். லேசான குண்டு. வட்ட முகம். உயரம் ஐந்தடிக்கும் சற்று குறைவு. கழுத்தில் ஒரே ஒரு செயின். காதில் கம்மல்.
பெட்டியை மூடிவைத்தேன்.
அந்தப் பெண் யாராக இருக்கும் என்று சிந்தனையில் அன்றைய பாடம் மனதில் ஏறவில்லை. ஒருவேளை மனைவியாக இருக்குமோ? அல்லது காதலியோ? அந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் பார்த்ததாக நினைவிருக்கவில்லை. அப்படியானால் அது யாராக இருக்குமென்று சிந்தனை போனது. வெகு நேரம் எப்படியெல்லாமோ யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. இரவு மணி ஒன்பதரையாகிக் கொண்டிருந்தது. லேசாக பசித்தது. நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு எழுந்தேன். யோசனையுடனே மாடிப்படியிறங்கினேன். வீட்டு உரிமையாளரின், மூத்த மகனின், மனைவி நின்றிருந்தாள்.
‘பெட்டி திறந்து பாத்தியா?’ என்றாள்.
நான் ஏதும் பேசவில்லை. அமைதியாக அவளையே பார்த்தேன்.
‘அதுக்கு பாத்த பொண்ணு தான். அது ஒண்ணு தான் சம்பாதிப்பு ஏதும் இல்லைன்னாலும் , அவனை ஆசைப்பட்டு கட்டிகிறேன்னு சொல்லிச்சாம். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண, புடவை , வளையல் எல்லாம் வாங்கிட்டு போயிருக்கு. இது வேலையில‌ இல்லைன்னு அவங்கப்பா பொண்ணு குடுக்கலை போல. கல்யாணம் நடக்கலை. அந்த பொண்ணு இந்நேரம் யாரையாவது கட்டி, புள்ள பெத்து அரை கிழமா கூட ஆயிருக்கும்.. இது என்னடான்னா அதோட ஃபோட்டோவை வச்சிக்கிட்டு அதோடவே வாழ்ந்துட்டு இருக்கு. ஆத்தா அப்பன் போய் சேந்தாச்சு, வீட்டு ஆம்பளைங்களுக்கு வேலை இல்லை. தம்பிகாரனுக்கு வேணும்னே ஊத்திக்குடுத்து பழக்கிவிட்டு,. கேக்க ஆளு இல்லை, தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க இத. ‘
சலிப்பாக முடித்துவிட்டு, உள்ளே சென்றாள். ‘கேட்க ஆளு இல்லை..தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க’ என்கிற அவளின் வார்த்தைகள் மனத்தின் அறைகளில் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டே இருந்தது எனக்கு.
வெளியே சாலையில், அடிபட்ட ஒரு எலியை நான்கைந்து காக்கைகள் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. எலி உயிருடன் தான் இருந்தது. காக்கைகள் கொத்தாமல் இருந்தால், எலி தட்டுத்தடுமாறி பிழைத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்தது. ஆனாலும், சுற்றிலும் காக்கைகள் விடாமல், காயம் பட்ட இடத்திலேயே கொத்த, கொத்த எலியின் உடலில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையும், கொஞ்சம் கொஞ்சமாக எலியின் உடல் அசைவுகள் நிற்கத்துவங்கியிருப்பதையும் நான் வெறுமையுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். அந்த நேரம், ‘பகிர்ந்து உண்ணும் காக்கை’ என்று முதுகில் எழுதப்பட்டு, ஆட்டோ ஒன்று கடந்து போனது.
பிற்காலத்தில், கிஷ்ணா என்கிற அந்த பைத்தியம் என் மனதில் விஸ்வரூபம் எடுத்து, வார்த்தைகளாக உடைந்து, சிதறி, மீண்டும் உயிர்த்தெழுந்து, ஒருங்கிணைந்து இதோ இந்த கதையாகி நிற்பான் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லைதான்.

#நன்றி
மலைகள் 73வது இதழ்(http://malaigal.com/?p=6642)

Monday, 20 April 2015

மலைகள் இதழில் எனது சிறுகதை


'கிஷ்ணா' என்ற தலைப்பிலான எனது ஒரு சிறுகதை, மே மாதம் 3ம் திகதி வெளியாக இருக்கும் மலைகள் இதழில் வெளியாக இருப்பதாக  தகவல் வந்திருக்கிறது.

மலைகள் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்..

Wednesday, 4 February 2015

குறும்படக் கதை - 2

குறும்படக்கதை - 2குறும்பட இயக்குனரும் நண்பருமான முருகேஷ் ராமதாஸுக்காக எழுதிய கதை இது. எனது மற்ற கதைகளைப்போலவே இந்தக் கதையின் க்ளைமாக்ஸ் திருப்பமும் எந்தத் திரைப்படத்திலாவது எனக்கே தெரியாமல், இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம்.

இனி கதை:


விடாது சிகப்பு - சிறுகதை

விடாது சிகப்பு - சிறுகதை


மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேரக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை, இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லாக் கலேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார் பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் அன்றைய தினத்தை சற்று வித்தியாசமாகவே கழித்துக்கொண்டிருந்தது அந்த இடம்.

சாலையோரம் போலீஸ் ஜீப்புகள் இரண்டும், ஹுண்டாயின் போலீஸ் ரோந்து கார்கள் இரண்டும், நெடுஞ்சாலைப் பாதுகப்புத்துறையின் ஆன்புலண்ஸும் நின்றுகொண்டிருந்தது இன்னும் பரபரப்பை அதிகமாக்கிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் சவுக்கு மரங்கள் சீராக வளர்ந்திருக்க, இடையில் இருந்த மண் சாலையில் சற்று தொலைவில் ஒரு டாடா இன்டிகா டாக்ஸி கார் கடலை நோக்கி நின்றிருக்க, அதன் இரு பின் கதவுகளும் திறந்திருந்தது. உள்ளே வெள்ளை அரைக்கை சட்டை, கருப்பு பாண்ட் அணிந்த ஒருவன் டிரைவர் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவாறே மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தபடி மல்லாந்து கிடந்திருந்தான். மண்டையில் எதனாலோ பலமாகத் தாக்கப்பட்டிருப்பதறகான அத்தாட்சியாய் அடர்த்தியாய் தலைமயிருடன் ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தது. காயத்தைப் பார்க்கையில் அடர்த்தியான சதுர வடிவம் கொண்ட இரும்பால் தாக்கப்பட்ட தோரணை இருந்ததை உணர முடிந்தது.கண்கள் அரைத்தூக்கம் கொண்டது போல் மூடியும் மூடாமலும் செருகிக்கிடந்தன. உட்கார்ந்தவாறு அவனைப் பார்க்கலாம் அவனது உயரை ஐந்தடி மூன்றங்குளம் இருக்கலாமென்று தோன்றியது. அதைச் சுற்றுச் சுற்றி ஒரு ஃபோட்டோக்ராபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே போலீஸ் தலைகள் நின்று அவரவர்க்கு கிடைத்த வாக்கி டாக்கிகளில் யாருக்கோ எதையோ சொல்லிக்கொண்டிருக்க, அந்தக் காரின் பக்கவாட்டில் காரையே பார்த்தபடி நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் சேது. அவருக்குப் பக்கத்திலேயே சப்‍இன்ஸ்பெக்டர் சங்கர் கையில் ஒரு ஃபைலில் தான் எழுதிக்கொண்ட ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்டை சரிபார்த்துவிட்டு சேதுவை நெருங்கினார்.


'சேது, எளனீ கடைக்காரர் மருது சொன்னத வச்சி எஃப்.ஐ.ஆர் எழுதிட்டேன் சேது. அவர் காலைல 10 மணிக்கு பாத்திருக்கார். உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். நாம 10:15 க்கு வந்திருக்கோம். ஃபோட்டோ செஷன் சொல்லி முடிஞ்சாச்சு. இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றதுக்கான பேப்பர் வொர்க் கூட முடிஞ்சது. நாம‌ இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணிடலாமா?'.

'உனக்கு என்ன தோணுது சங்கர்?'.

'ம்ம்.. கேப் டிரைவரை அடிச்சி கொன்னிருக்கானுங்க. அதுவும் ஹைவேஸ்க்கு பக்கத்துல. எதாவது கள்ளக்கடத்தல் இல்லேன்னா வழிப்பறி சண்டையா இருக்கும் சேது. அந்த ஆங்கிள்ல ப்ரோசீட் பண்ணலாம்னு தோணுது. வாட் டூ யூ சே?'.


'ம்ம்.. இல்ல சங்கர். வண்டிய பாத்தியா? இவன் ஒரு ரெஜிஸ்டர்டு கேப் டிரைவர். இவன மாதிரி ஆள வச்சிலாம் கள்ளகடத்தல் பண்ணிருக்கமாட்டாங்கன்னு என் இன்ஸ்டிங்ட் சொல்லுது. அப்புறம், அவன் பாக்கேட்ல பாத்தியா, பணம் அப்படியே இருக்கு. வழிப்பறி பண்ணனும்னு நினைச்சா ஏன் பணத்தை விட்டுட்டு போகணும்?'.

'ம்ம்... அதுவும் சரிதான். அப்போ எப்டிதான் ப்ரொசீட் பண்றது சேது?'.

'தெரியல. சரி, கார்ல எவ்ளோ பெட்ரோல் பாக்கி இருக்குன்னு பாரு?'.

'ஓகே சேது' என்றுவிட்டு அகன்றார் சங்கர்.

வண்டியின் டாகுமென்ட்ஸ் எல்லாம் டாஷ்போர்டில் இருந்தது. அதன்படி செத்தவன் பெயர் கதிர். வயது முப்பது. வண்டி 2007 மாடல். ஐந்து வருட லோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆர்.சி யில் இருந்த ஹைப்போதிகேஷன் முத்திரை தெரிவிக்கிறது. வண்டியில் சிகரெட் லைட்டரோ அல்லது வத்திப்பெட்டியோ அல்லது லைட்டரோ இல்லை. அவன் உதடுகளைப் பார்க்கையில் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவனாகத் தோன்றவில்லை. பார்க்கவும் டீசன்டாக இருந்தான். ஷூ அணிந்திருந்தான். தலை படிய வாரப்பட்டிருந்தது. காருக்குள் ஆண்கள் பயன்படுத்தும் வேக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசம் அடிப்பதை சேது குறித்துக்கொண்டார்.

சங்கர் இப்போது சேதுவின் அருகில் வந்தார்.

'சேது, டாங்க்ல இன்னும் 9 லிட்டர் டீசல் இருக்கு சேது'.

'சங்கர், 10 லிட்டர் டீசல் போட்டிருக்கான்.  9 லிட்டர் இருக்கு. இன்டிகாவொட மைலேஜ் 18 கிலோமீட்டர் லிட்டருக்கு. அப்படின்னா 18 கிலோ மீட்டர் வந்திருக்கான். இங்கிருந்து 18 கிலோமீட்டர் முன்னாடி யாரோ ஏறியிருக்காங்க. அவந்தான் சஸ்பெக்ட். அவந்தான் கொன்னிருக்கனும்னு எனக்கு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?'.

'கரெக்ட், சேது'.

 'என்கூட‌ வாங்க‌ ச‌ங்க‌ர்' என்று விட்டு நேராக‌ ஜீப்பை நோக்கி ந‌ட‌க்க‌, ச‌ங்க‌ர் தொட‌ர்ந்தார்.  சேது கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக் குறித்துக்கொண்டார். ஜீப் உருமி, இருவ‌ரையும் உள்வாங்கிப்ப‌ற‌ந்த‌து.

'சேது, நாம‌ எங்க‌ போறோம்?'.

'கதிரோட கார்ல ஒரு லிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கு. அதாவது 18 கிலோமீட்டர். சோ, முதல்ல அந்த பதினெட்டு கிலோமீட்டர் நாம போய் பாக்கலாம். அங்க ஏதாவது க்ளூ கிடைக்கும்'
~ * ~


சேதுவும், சங்கரும் 18 கிலோமீட்டர் தள்ளி வந்து பார்த்தபோது, அங்கே வெறும் பெட்ரோல் பங்க் மட்டுமே இருந்தது. விசாரித்ததில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் வேக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசம் வீசுகிறதா என்று சோதிக்க எண்ணுவதே அசட்டுத்தனமான ஐடியாவாக இருந்தது. கிடைத்த ஒன்றையும் க்ளூ என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. சேது நற நறவென பற்களை கடித்துவிட்டு ஜீப்பில் ஏற, உச்சி வெய்யிலில் ஒரு இள நீர் கூட வாங்கித்தரவில்லையே என வெறுப்பில் சங்கரும் சேதுவை முறைத்தபடியே ஜீப்பில் ஏறினார்.~ * ~போலீஸ் ஸ்டேஷனில், :

'க்ளூ எதுமே கிடைக்கலையே சேது' என்றார் சங்கர்.

சங்கரிடம் பாடி ஸ்ப்ரே பற்றி சொல்ல நினைத்து,

'கொலையானவன் வீட்டுக்கு சொல்லியாச்சா' என்றார் சேது.

'இல்லை சேது..வண்டி பிரைவேட்டு.. ஆர்.சி லாம் செக் பண்ணிட்டேன்.. ரிஜிஸ்டர் ஆகி இருக்கிற இடத்துல ஆள் இப்போ கரன்டா இல்லை.. பர்சுல காசு தான் இருக்கு.. மொபைல் இல்லை..சோ ஆள் யாரு என்னன்னு தெரியலை'

'அப்போ யாராவது டிரைவர் காணோம்ன்னு கம்ப்லெயின்ட் பண்ணிருக்காங்களா பாருங்க'


~ * ~கொஞ்ச நேரம் கழித்து சேதுவை நெருங்கினார் சப் இன்ஸ்பெக்டர்.

'சேது, வினோதமான தகவல்.. இதே மாதிரி போரூர் ஏரிகிட்ட ஒரு கார்ல டிரைவர் கத்தியாக குத்தப்பட்டு செத்திருக்கான்.. கொலை செய்யப்பட்டவன் டிரைவர்ங்குறதை தவிர வேற ஏதும் தெரியலை...பேரு சசி... அந்த கேஸும் கொலையாளி யாருன்னு தெரியாம தான் இருக்கு'

'அப்படீன்னா இதை சீரியல் கொலைன்னு சொல்றீங்களா?'

'இருக்கலாம்ல..சேது, ஒரு பொண்ணு கம்ப்ளெயின் பண்ணியிருக்கு...பேரு வசந்தி... ஒரு டிரைவரை காணோம்ன்னு'

'அப்படியா.. எப்போ?'

'அது இருக்கும் ஒரு பத்து நாள்.. இந்த டிரைவர் இன்னிக்கு தானெ செத்திருக்கான்.. இவனா இருக்காது சேது'

'ஆங்.. அப்படி விட முடியாது.. ஒரு வேளை இவனே கைவிட்டுட்டு வந்திருக்கலாம்ல.. போட்டோ ஏதாவது குடுத்திருக்கா?'

'இல்லை.. '

'அந்த பொண்ணு அட்ரஸ் என்ன'


~ * ~


அரசு பொது மருத்துவமனையில், பிணவறையை விட்டு வெளியே வந்த போது, அந்த பெண் முகத்தில் சலனம் இல்லை.

'அப்போ, அது உன் காதலன் இல்லைன்னு சொல்ற இல்லையா?' என்றார் சேது.

அந்தப் பெண் ஆம் என்பதாய் தலையசைத்தாள். சங்கர், சேதுவின் காதருகே வந்து, சன்னமாய்,

'சேது, அனுப்பிடலாமா?' என்றார்.

'இருங்க' என்ற சேது, அந்த பெண்ணிடம் திரும்பி,

'வசந்தி, ஃபோட்டோ இருந்தா தான் தேட முடியும்.. ஊரு எது? விலாசம் ஏதாச்சும் இருக்கா? ஆள் பாக்க எப்படி இருப்பான்னு சொல்லு அடையாளம் சொல்லு' என்றார்.

'சொல்றேன் சார்.. பேரு முருகன்... ஊரு கோவில்பட்டி சார்.. பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்துல புள்ளையார் கோயில் சார்.. அதுக்கு பக்கத்துல இரண்டாவது வீடு சார் ....அவனை நம்பி தான் சார் என் வாழ்க்கையே இருக்கு..என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டு ஓடிட்டான் சார்... எப்படியாவது கண்டுபுடிச்சி குடுத்துடுங்க சார்' என்றாள் அவள்.

'அப்போ, முதல்ல ஸ்டேஷனுக்கு வாம்மா. அங்க எங்க ஆளுங்க இருப்பாங்க.. அவங்க கிட்ட அடையாளம் சொல்லு.. மத்ததை அவங்க பாத்துக்குவாங்க' என்றுவிட்டு சேது ஜீப்பிற்கு நடக்க, சங்கரும், அந்தப் பெண்ணும் பின்னால் நடந்தார்கள்.

~ * ~


கோவிபட்டி கிராமத்தில் சேதுவும், சங்கரும் சசி மற்றும் கதிர் புகைப்படங்களை காட்டி விசாரித்த போது, யாரும் சரியாக தகவல்கள் சொல்லவில்லை.

'அவன் ஒரு உதவாக்கறை சார்..  படிப்பு இல்ல.. மெட்ராஸ் போய் பொளச்சிக்கிறேன்னு போயிட்டான்'  ஒருவர் சொன்னார்.

'அவன் குடும்பம்லாம் இங்க இல்லை சார்.. ஆளு தனிக்கட்டை ...அவ்ளோதான் தெரியும்' என்றார் இன்னொருவர்.

'இவன் அவன் கூடத்தான் எப்பவும் திரிவான்.. வெட்டிப் பயலுக‌' என்றது ஒரு கிழம்.


~ * ~
'என்ன சேது, இந்தக் கேஸும் அம்பேலாயிடும் போல இருக்கு?' என்றார் சங்கர்.

'ம்ம்ம்... பார்க்கலாம் சங்கர்... இதை மாதிரி எத்தனை பாத்திருக்கோம்' என்று சேது சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, மூச்சிறைக்க ஒருவன் ஓடி வந்தான்.

'சார், சார், என்னை காப்பாத்துங்க சார்'

சேது மேஜையிலிருந்த புகைப்படத்தையும், அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு, சங்கரிடம் திரும்பி,

'கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்தாமாதிரி ஆயிடுச்சு பாருங்க' என்றுவிட்டு, அவனிடம்

'ஏன்ய்யா இப்படி அரக்கபரக்க ஓடி வர.. கம்பி எண்ணுறதுக்கு இவ்ளோ அவசரமா..?' என்றார்.

'சார், என்னை கொலை பண்ண பாக்குறா சார்..'

'என்னய்யா சொல்ற?'

'சார், ஒரு பொண்ணு சார்.. லவ் பண்றேன்னு சொன்னா.. எனக்கு லவ்லாம் இல்ல சார்.. சும்மா அனுபவிக்கலாம்ன்னு சரின்னேன்.. ஒரு நாள் குடி போதையில நானும், என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து அவளை கெடுத்துட்டோம் சார்.. தப்பு நடந்து போச்சு சார்.. கல்யாணம் பண்ணுன்னா..முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சார்.. ஒருத்தன் போரூர்ல செத்துட்டான்.. இன்னொருத்தன் இன்னிக்கு ஈ.சி.ஆர் ல‌ செத்துட்டான் சார்.. அவளா தான் சார் இருக்கும்.. அவ வந்து அவனையும் கொண்ணுட்டா சார்.. என்னையும் கொன்னுடுவா.. காப்பாத்துங்க சார்.. ஏதாவது கேஸுல போட்டுடுங்க சார்... லாக்கப்புல உயிரோடயாவது இருந்துக்குறேன் சார்..'

சேதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அரசு பொது மருத்துவமனையில் வைத்துப் பேசிய அந்த பெண், இரண்டு கொலைகள் செய்திருப்பாளா? கொலை செய்பவள் மாதிரியா இருக்கிறாள் அவள்? ஆனா, இப்படியெல்லாம் ஏதேனும் நடந்தால் தான் பயப்படுகிறான்கள் என்று நினைத்துக்கொண்டார்.

'சரி சரி..அந்த லாக்கப்புல உக்காரு' சேது சொல்ல, லாக்கப்புக்குள் ஓடிச்சென்று உட்கார்ந்து கொண்டான் முருகன்.

யோவ், இவன் சரண்டர் ஆனது அவளுக்கு தெரிஞ்சிருக்காது.. அவளை நைஸா கூப்பிடு ஸ்டேஷனுக்கு.. காணமா  போனவனை கண்டுபுடிச்சிட்டோம்ன்னு..இங்க வச்சே விசாரிச்சு தெரிஞ்சிக்கலாம்' என்றார் சேது சங்கரிடம்.

சங்கர் தலையாட்டியபடி, தனது செல்போனை உருவி, அந்த பெண்ணின் எண்ணை ஒற்றினார்.~ * ~


சற்றைக்கெல்லாம், அக்கம்பக்கத்து லாட்ஜ்களில் பிடித்துவரப்பட்ட விபசாரப் பெண்கள், மாமாக்களுடன் ஸ்டேஷனுக்குள் அழைத்து வரப்பட்டு, குந்தி உட்காரவைக்கப்பட்டனர். ஒரு பச்சை புடவை அணிந்த விபசாரப்பெண் அமர இடம் இல்லாமல், ஜெயில் கதவுகளை உரிமையாகக் திறந்து உள்ளே அமர்ந்தாள்.

அப்போது அந்த பெண் வசந்தி சிகப்பு சுடிதாரில் வந்தாள். முகம் சலனமற்று இருந்தது. எடுத்தவுடன் ஆர்பாட்டம் காட்டினால் அவள் உஷாராகி பிறழ்ந்துபேசக்கூடும் என்பதால், சேது மெளனமாக இருந்தார். ஆனால் விழிப்பாக இருந்தார். அப்போது அங்கே, வேக்ஸ் பர்ஃப்யூம் வாசம் ஏதும் வீசவில்லை. ஒருவேளை, போலீஸை குழப்புவதற்காகவே, அந்தப் பெண் அப்படி மாற்றி பர்ஃப்யும் பயன்படுத்தியிருப்பாளோ என்று தோன்றியது.

சங்கர் சேதுவின் அருகில் வந்து, சற்று குனிந்து.

'சார் பொண்ணு வந்துடுச்சு.. ' என்றார்.

'பாத்தேன்..  அந்த சுடிதார் பொண்ண லாக்கப்புல விடாத.. பென்ச்சுல உக்கார வை..' என்றார் சேது.

வசந்தி பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டாள்.

விபசார கேஸ் ரொட்டீன். மாதா மாதம் கணக்கு காட்டவென பிடிக்கப்படும் கேஸ்கள். போன முறை பிடித்தவர்களையே இந்த முறையும் காட்டக்கூடாது. பிடித்து வரப்பட்ட பெண்களுள் யாருக்கும் இதற்கு முன் கேஸ்கள் இருந்தால் அதை வேறு விதமாய் ஹாண்டில் செய்ய வேண்டி வரும். இது போன்ற எண்ணற்ற தலைவலிகளை கவனிக்க வேண்டும்.

கூட்டம் அதிகமாக இருந்தது. வசந்தி எழுந்து,

'பாத்ரூம் எஙகே?' என்று கேட்டாள். சங்கர் வழி காட்டினார். வசந்தி செல்கையில்,

'எனக்கும் வருது' என்றுவிட்டு பச்சை நிற புடவை கட்டிய‌ ப்ராத்தல் பெண் ஒருத்தி தானும் எழுந்து சென்றாள்.~ * ~


சேதுவும் சங்கரும் உள் அறையில், பழைய ஃபைல்களை உருவி, எதையோ நோண்டிக்கொண்டிருந்தபோதும், வசந்தி குறித்து மனதோரத்தில், ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துகொண்டே இருந்தது இருவருக்கும்.

'சங்கர் அந்த சிகப்பு சுடிதார் வசந்தி மேல ஒரு கண்ணு இருக்கட்டும்' என்றார் சேது.

'சரி சேது' என்ற சங்கர், திரும்பி எக்கி பார்க்க, சற்று தள்ளி சிகப்பு சுடிதார் மற்றும் பச்சை புடவையின் முதுகுப்புறம் தெரிந்தது. சிகப்பு சுடிதாரின் வாளிப்பான பின் புறம், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், மனதுக்குள் விசுக்கென்று ஏதோ செய்தது.

சற்று நேரத்தில் செல்போனில் அழைப்பு வர,

'ஹலோ, ஹலோ ' என்று இரண்டுமுறை கத்திப்பார்த்துவிட்டு, டவர் கிடைக்காமல், சுடிதார் பெண், மொபைலுடன் வாசலுக்கு சென்றாள்.. சங்கர் ஓரக்கண்ணால் அவளை நோட்டம் விடுவது தெரிந்து, சேது ஃபைலை நோண்டுவதை தொடர்ந்தார்.

ஆயினும், சேதுவுக்கு ஏதோ மனதில் பொறி தட்ட, பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை அப்படியே கீழே போட்டுவிட்டு,  லாக்கப்பிற்கு அவசரமாய் விரைய, சேது பதட்டமாக விரைவதைப் பார்த்து திடுக்கிட்டு, சங்கரும் சேதுவைத் தொடர்ந்து லாக்கப்பினுள் நுழைந்தார்.

அங்கே முருகன், ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தான்.

போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் ரத்த வெள்ளத்தில் ஒரு சடலத்தை பார்த்து, போலீஸ் ஸ்டேஷனே சலசலத்தது. விபசாரப் பெண்கள் 'ஹோ..'வென அலறி அங்குமிங்கும் ஓட, காக்கிச்சட்டைகள் சில அவர்களை கட்டுப்படுத்தினார்கள்.

'யோவ் அந்த சுடிதார் பொண்ணை விடாத' சேது அலற, சங்கர் உடனே வாசலுக்கு சென்று அங்கே வெய்யிலுக்கு தலைக்கு துப்பட்டாவை போட்டுக்கொண்டு, போனில் பேசிக்கொண்டிருந்த  சிகப்பு சுடிதார் பெண்ணை கெட்டியாக பிடித்து உள்ளே இழுத்து வந்தார்.

சேது கோபத்துடன், சுடிதார்ப்பெண்ணின் துப்பட்டாவை விலக்கி அறைய கைகளை ஓங்க‌, சுடிதாருக்குள் அந்த ப்ராத்தல் பெண் 'அய்யோ' என்று அலறினாள்.

சங்கர், ப்ராத்தல் பெண்ணை சுடிதாருக்குள் பார்த்துவிட்டு மெர்சலானார்.

'இந்த சுடிதார்ல நான் ராசாத்தி மாதிரி இருக்கேன்ல...அந்தப் பொண்ணு கேட்ட உடனே குடுத்திடிச்சி.. தங்கமான பொண்ணு' என்றாள் பிராத்தல் பெண், அசிங்கமாக சிரித்தபடி.


~ * ~


இரண்டு தெரு தள்ளி பச்சை புடவை அணிந்த வசந்தி ஆட்டோவில் ஏறினாள்.

'எக்மோர் போப்பா' என்றாள்.

ஆட்டோ எக்மோர் விரைந்தது. அக்குளை சற்று உயர்த்தி, முகர்ந்து பார்த்து அசூயையாக முகம் சுளித்தாள்.

ரத்தம் படிந்த கத்தி ஓடும் ஆட்டோவிலிருந்து சாலையில் விழுந்தது.


Tuesday, 3 February 2015

ஒரு பாடம்எனது பீகே - திரைப்பட விமர்சனம் ஒரு கலை இலக்கிய இதழில் வெளியாக தேர்வாகியுள்ளதாக இதழ் ஆசிரியர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால் ஏற்கனவே இணையத்தில் வெளியாகிவிட்டதால், வேறு வழியின்றி இறுதியில் கைவிடப்பட்டது துரதிருஷ்டவசமானது.


அந்த விமர்சனம் இதோ:

Tuesday, 27 January 2015

குறும்படக் கதை - 1குறும்பட இயக்குனரும், நண்பருமான Arul Siva ஒரு நாள் 'கிளி துப்பு துலக்க உதவுவது போல் ஒரு துப்பறியும் கதை சொல்ல முடியுமா? குறும்படமாக எடுக்கலாமென்று இருக்கிறேன்' என்றார். அவருக்கென எழுதியது தான் இந்தக் கதை.


இந்தக் கதையின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் (Climax Twist), எங்கேனும் உண்மையிலேயே நடக்க, இனி வரும் காலங்களில் மிகப்பல சாத்தியக்கூறுகள் (Probability) உள்ளது. அல்லது எனக்கே தெரியாமல் ஏதேனும் திரைப்படத்தில் கூட இடம்பெறலாம்.

ஆனால் இந்தக் கதையால் நான் சமூகத்துக்கு சொல்ல வரும் விஷயம் என்னவெனில்,

1. செமன் ட்ரேசஸ் (Semen Traces) இருப்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. ஒருவரை மாட்ட வைக்க இக்கதையில் வருவது போல செயற்கையாகக் கூட ஆதாரம் (Evidence) உருவாக்க முடியும்.

2. அடாப்சி (Atopsy) செய்யும் மருத்துவர்கள், செமன் ட்ரேசஸைக் (Semen Traces) கொண்டு தாங்களாகவே இன்னார்தான் குற்றவாளி என்று முடிவு செய்ய இயலாது. நான் எப்போதும் சொல்வது போல், தவறான மதிப்பீடுகள் குற்றவாளியை, நிரபராதியாகவும், நிரபராதியை குற்றவாளியாகவும் காட்டும் திறன் பெற்றவை.

3. செமன் ட்ரேசஸ் (Semen Traces) மேட்ச் ஆகிவிட்டது என்றுவிட்டாலே, வழக்கறிஞர்கள் 'தோற்றுவிட்டோம்' என்று தலை கவிழ வேண்டியதில்லை. அடுத்த கட்டமாக, மீண்டும் அப்பீல் செய்யலாம். ஆதாரம் செயற்கையாக எப்படி உருவாக்கப்பட்டது என்கிற கோணத்தில் வழக்கை தொடரலாம்.

கிளி - சிறுகதை

கிளி - சிறுகதை
இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட தரை. ஒரு பெரிய ஹோண்டா சிஆர்வி நிற்க ஒரு போர்டிகோ. அதன் தலையில் இரண்டடுக்கு வீடு. இவையெல்லாம் அடைத்த இடம் போக எஞ்சிய இடத்தில் அலங்காரத் தென்னை, ஒரு மாமரம், நிறைய பூச்செடிகள், க்ரோடான்ஸ் என வீட்டம்மாளின் ரசனை தெரிந்தது. தலைக்கு மேல் ஒரு கூண்டில் கிளி ஒன்று கீச் கீச் என்று கத்திக்கொண்டிருந்தது.

கூண்டுக்கு நடுவே மரத்தாலான சிறிய குச்சி ஒன்று திங்க விடப்பட்டிருக்க, அதன் மீது அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது.

வீட்டு காவல்காரனுக்கு ஐம்பது வயது இருக்கலாம். வாசலில் இரண்டு கான்ஸ்டபில்கள் அவனை மடக்கி அமர்த்தியிருக்க அழுதுகொண்டிருந்தான். போர்டிகோ வாசலில் சிமென்ட்டில் சரிவான தளம் சமீபத்தில் போடப்பட்டிருந்தது. அதன் மீது , யாரோ நடந்து சென்ற கால் தடம் கேட்டை நோக்கிய திசையில் தெரிந்தது.

சப் இன்ஸ்பெக்டர் தரணி உடன் வர, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், போர்டிகோ தாண்டி, வீட்டினுள் நுழைந்து, மாடிப்படியேறி முதல் மாடி சென்றார். உள்ளே ஒரு படுக்கை அறையில் ….ச்சு..

அந்த  வட்ட முகம், எந்த ஆணையும் அத்துமீற வைக்கும் அழகான வழவழ பிங்க் நிற உதடுகள், கருமையான நீண்ட தலை மயிர், பக்கவாட்டில் சரிய முயன்ற மார்புச் செழுமை என இத்தனை அழகையும் கொண்ட அந்த பதினேழு வயது இளம் பெண், அணிந்திருந்த நைட்டி  இடுப்பு வரை உயர்த்தப்பட்டு, தொடைகளின் இடையே……
ஒரு அழகான பெண்ணை எத்தனையோ விதமாக பார்க்க ஆண் மனம் ஏங்கித் தவிக்கலாம். பூமியின் எட்டாவது அதிசயத்தை, அவளது வனப்பை இப்படி ஒரு அவல நிலையில் பார்க்க கிடைத்த தருணத்தை என்னவென்று சொல்வதென்று அறியாதவராய் இன்ஸ்பெக்டர் ரஞ்சன், படுக்கையில் கிடந்த அவளது போர்வையை அவள் மேல் போர்த்தினார். அந்த துர்பாக்கிய நிலையிலும், அவலத்திலும் அவள் உடலின் வனப்பு, அவரின் மூளையில் ஒரு வக்கிர ஓநாயை விழித்தெழ வைத்தது.

எஞ்சிய வீட்டை நிறுத்தி நிதானமாக ஆராய்ந்தபடியே, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், பிற்பாடு, படியிறஙகி தரை தளம் வர, பின்னாலேயே தொடர்ந்தார் சப் இன்ஸ்பெக்டர் தரணி.

கேட் அருகே வந்த ரஞ்சனுக்கு மாடியில் பார்த்த பூலோக தேவதையின் உடல் வனப்பு கண்களை உறுத்தியது. கண்களை அகல விரித்து, மூடித்திறக்க, அந்த கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சார், இந்த சிமென்ட்ல கால் தடம் இருக்கு தான்.. வாசல் கேட்டை பாத்தாமாதிரி.. யாரோ நடந்து வெளியில போயிருக்காங்க.. ‘ என்றார் தரணி.

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘கால் தடத்தைப் பாக்கும்போது ஆம்பளைதான் சார்.. இளம் வயசா இருக்கலாம்.. நடந்து போய் ஒரு எட்டு மணி நேரம் இருக்கலாம் சார்..நேத்து அந்த வாட்ச்மேன் ரங்கன்கிட்ட‌ விசாரிச்சேன் சார்.. அவன் தான் சொன்னான், சிமென்ட் வேலை நேத்து பாத்திருக்காங்க.. ‘

‘குட் காட்ச் தரணி.. சீன் ஆஃப் க்ரைம்ல எவிடென்ஸா இதைக் குறிச்சி வச்சிக்கோங்க.. நம்ம இன்வெஸ்டிகேஷனுக்கு தேவைப்படும்’ என்றார் ரஞ்சன்.

இருவரும் காவல்காரன் ரங்கனை நெருங்கினார்கள். ரங்கன், இப்போது தலையில் கைவைத்தபடி சோகமாய் அமர்ந்திருந்தான். சற்று தள்ளி கைகளைப் பிசைந்தபடி ஒரு பெண் நின்றிருந்தாள்.

‘என்னய்யா, எத்தனை வருஷமா இங்க வாட்ச்மேனா இருக்க?’ அதட்டலாக கேட்டார் ரஞ்சன்.

‘பத்து வருஷமா சார்’

‘குடும்பம் இருக்கா?’

‘ஒரே ஒரு பொண்ணு சார். பேரு ரம்யா. பொஞ்சாதி செத்துப்போச்சி. இந்த வீட்டுக்கு வேலைக்கு வரதுக்கு முந்தியே சார்’

‘சார், அந்தப் பொண்ணு ரம்யாவையும் சொல்லி வரவச்சிட்டோம்.. அதோ நிக்கிது சார்’ என்று சற்று தள்ளி நின்றிருந்த பெண்ணைக் காட்டி காதருகே கிசுகிசுத்தார் தரணி. அந்தப் பெண் விசித்து அழுது கொண்டிருந்தது.

‘தரணி, அந்த பொண்ணை நீங்க விசாரிங்க.. ‘

ரஞ்சன் ஆணையிட, தரணி, அந்தப் பெண் ரம்யாவை நோக்கிச் செல்ல,

‘ நேத்து இங்க என்ன நடந்தது?’ என்று தன் கேள்வியை ரங்கனிடம் வீசினார் ரஞ்சன்.

‘சார், எங்க ஓனர் ப்ரகாஷ் திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்கு பொஞ்சாதியோட போயிருக்காரு சார். அவரோட ஒரே பொண்ணு அஞ்சலிக்கு இஸ்கூல்ல எக்ஸாம் சார்..அதுனால அது போவலை சார்.. என் அக்கா பையன் குமாரு கார்பென்டர் சார். எங்க ஓனர், கேட்டாண்ட சிமென்ட் தளம் போட குமாராண்ட‌ சொல்லிருந்தாரு சார். அவனும் நேத்து வந்தான். வேலையை எட்டு மணி கிட்ட முடிச்சிட்டு அவனும் போயிட்டான் சார்… ஆனா அப்பால தான் சார் நான் கவின்ச்சேன்.. இருட்டுல சிமென்ட்ல நடந்து போயிருக்குறான்.. வீட்டுக்கு வந்தானான்னு என் பொண்ணுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன் சார். வரலைன்னு சொன்னா.. அப்பால நான் அவனுக்கு போன் போட்டு சொன்னேன் சார்.. ராவைக்கு சரி பண்ண முடியாது.. அதுனால காலைல வந்து மறுக்கா போடறேன்னு சொன்னான் சார்..’

‘ நீ அவனுக்கு கால் பண்ணும்போது நேரம் என்ன?’

‘எட்டு மணி இருக்கும் சார்’

‘சரி மேல சொல்லு’

‘அதுக்கப்புறம், அஞ்சலியம்மா தூங்கிட்டாங்களான்னு பாத்துட்டு கீழ கதவை சாத்திட்டு நான் இங்க கேட்ல வந்து உக்காந்துட்டேன் சார்..’

‘அப்புறம் அந்த பொண்ணு இறந்துட்டான்னு உனக்கு எப்படி தெரியும்?’

‘சார், காலைல சிமென்ட் வேலை பாக்க குமாரு வந்தப்போ, சிமென்ட் மிக்ஸ் பண்ண தண்ணி கேட்டான் சார்.. மோட்டார் சுவிட்ச்சு மாடில இருக்கு சார்.. அதை ஆன் பண்ண் மாடிக்கு போனப்போ தான் சார் பாத்தேன். கோயில் சிலை மாதிரி இருக்கும் சார் அந்த பொண்ணு.. அத்தை அந்த கோலத்துல……’

ரங்கன் மீண்டும் விசித்து அழுதான்.

அப்போது தரணி அருகே வர, தரணியும், ரஞ்சனும் தனியே ஒதுங்கினார்கள்.

‘சார், அந்த பொண்ணு ரம்யாகிட்ட பேசினேன் சார். எட்டு மணிக்கு ரங்கன், குமாரு வீட்டுக்கு வந்தானான்னு கேட்டு ஃபோன் பண்ணிருக்கான்.. அப்போ குமாரு சிமென்ட்ல கால் வச்சி கலைச்சிட்டதா சொல்லிருக்கான் சார்’

‘ஆமா, ரங்கனும் அதே தான் சொன்னான்’

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா…’ என்றுவிட்டு நிறுத்திய தரணியை,

‘சொல்லுங்க தரணி’ என்று ரஞ்சன் மேற்கொண்டு பேசப் பணிக்க,

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா, அந்தப் பொண்ணை அந்த ரங்கன் தான் கொன்னிருக்கணும் சார்’

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘சார், அவனுக்கு பொண்டாட்டி பத்து வருஷம் முந்தியே செத்துப்போச்சி.. அப்படீன்னா, அவனுக்கு அப்போ வயசு நாப்பது இருக்கணும். அந்தப் பொண்ணு தனியா இருந்திருக்கு. சோ, அவன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி கடைசியில அது கொலையாகியிருக்கணும் சார்’

‘மோட்டீவ் ஓகே.. ஆனா, அதுக்காக எவிடென்ஸ் இல்லாம அந்தப் பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்கான்னு சொல்ல முடியாது தரணி.. ஃபாரென்ஸிக் ரிப்போர்ட் வரட்டும்..அந்தப் பொண்ணோட பாடியை அடாப்ஸிக்கு அனுப்பியாச்சா?’

‘ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும், நீங்க பாத்ததுமே அனுப்பியாச்சு சார்’

‘ஓகே.. அப்படீன்னா ஃபாரென்ஸிக் ரிப்போர்ட்ல தான் க்ளியர் பிக்ச்சர் கிடைக்கும்’

‘ஆமா சார்.. கொடுத்து வச்சவன் அந்த ஃபாரென்ஸிக் டாக்டர் சார்.. அந்த பொண்ணு என்னா ஒடம்பு சார் அதுக்கு, சிலுக்குக்கு கூட அப்படி ஒரு உடம்பு இருக்கலை சார்…..’

‘தரணி.. அந்த பொண்ணு பாவம் பதினேழு வயசுல சாவு.. எத்தனை கனவு கண்டிருக்கும் அது.. காதல் கூட பரிச்சயமாச்சோ இல்லையோ..பாவம்..செத்துப் போன பொண்ணை பத்தி இப்படி பேசுறது….’

‘சார், நீங்க வேற.. பாவம் புண்ணியமெல்லாம் இந்தக் காலத்துல ஏது சார்.. போன வாரம் அந்த கற்பழிப்பு கேஸ் பாத்தோமே.. பதினைஞ்சு வயசு தான்.. கொலை பண்ணினவன் பலவந்தப்படுத்தினப்போ அவ இணங்கலைன்னு கொன்னுட்டான்..  அடாப்ஸில அவளுக்கு பால்வினை நோய் கன்ஃபர்ம் ஆயிருக்கு.. நம்ம நல்ல மனசுக்கு நாம பாவம் பாக்குறோம்தான் சார்.. ஆனா, உண்மை இதுதான்’ என்றார் தரணி.

ரஞ்சனுக்கு யோசனையாக இருந்தது.

தரணி சொல்வது உண்மை தான்.. அந்த பதினைந்து வயதுப் பெண் மூர்க்கமாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்திருந்தாள்.. தாக்கியவன் வன்புணர்ச்சி செய்ய முயன்று, அதற்கு அந்தப் பெண் இணங்காததால், ஆத்திரத்தில் உயிர் போகும் அளவு தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்தான். அவளது அடாப்ஸி ரிப்போர்டில், அவளுக்கு பால்வினை நோய் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு பால்வினை நோய் எதுவும் இருக்கவில்லை. அவன் அவளை கற்பழிக்கவும் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு பால்வினை நோய் இருந்திருக்கிறது.. பதினைந்து வயதில்.. அப்படியானால் அவள் வேறு ஒரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.. அவனிடமிருந்து அவளுக்கு பால்வினை நோய் தொற்றியிருக்க வேண்டும்..

பால்வினை நோய் தொற்று இருக்கிறதெனில் அவன் எத்தனைக்கு பெண் பித்தனாக இருந்திருக்க வேண்டும்? அப்படி ஒரு ஆணிடம் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு என்ன விதமான பழக்கம் இருக்க முடியும்? அந்த பெண்ணின் பெற்றோர்களின் அழுகுரலுக்கு செவி சாய்த்து,  பதினைந்து வயதுப்பெண்ணின் மானம் போய் விடக்கூடாது என்ற ஸ்திதியில், அவளது குடும்ப மானம் கப்பலேறிவிடக்கூடாதென்கிற ஸ்திதியில் அவளுக்கு பால்வினை நோய் இருந்த விவகாரம் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கொலை விவகாரம் வெளியே வந்த போது, மீடியாவால் மிகவும் உரத்து தமிழகமெங்கும் பேசப்பட்டது. ஃபாதர் டிவி, கலைஞி டிவி, மாயா டிவி என ஒரு டிவி விடாமல் ஒரு விவாத மேடை விடாமல் இந்த விவகாரம் தமிழகமெங்கும் உரத்து பேசப்பட்டது.

ஒரு பெண், அதுவும் இளம் பெண் கூக்குரலிட்டால் என்ன ஏதென்று கூட அறியாமல், பாய்ந்து வந்துவிடுகிற சமூகம் தானே இது. உண்மையில், மூர்க்கமாகத் தாக்கியவன் ஒரு வகையில் தப்பித்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். அவளைப் புணர்ந்திருந்தால் அவனுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். ஒரு வேளை அந்தப் பெண் தனக்கு பால்வினை நோய் இருப்பதை அறிந்தே இருந்திருக்கலாம். பதினெட்டு வயதடைய, தனக்கு பால்வினை நோய் தந்தவனையே மணக்க முடிவு செய்திருக்கலாம். அல்லது மானத்துக்கு பயந்து தற்கொலை செய்ய முனைந்திருக்கலாம். மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை. எதையும் அறியாமல் தானாக வந்து தலையை கொடுத்து கொலைப்பழியில் மாட்டிக் கொண்டு விட்டான்.  அந்தப் பெண் வேண்டாம் என்று சொன்னபோதே விலகிப்போயிருந்தால், கொலைப்பழி இல்லை. வேறொரு நல்ல பெண்ணாகப் பார்த்து காதலித்து கரம் பிடித்து வாழ்ந்திருக்கலாம். இனி ஆயுள் முழுவதும் சிறை.

இவர்களைப் பொருத்த வரை , ‘பெண்’ என்றாலே பரிசுத்தம். எல்லாப்பெண்ணும் பரிசுத்தம். அது கூட, பெண்ணின் வகையான பரிசுத்தம் இல்லை. ஆணின் வகையான பரிசுத்தம். அப்பழுக்கில்லை. இந்த நினைப்பு அந்த பெண்ணுக்கான சுதந்திரத்தை தடை செய்வதையே புரிந்துகொள்ளாத மூர்க்கமான நம்பிக்கை. முட்டாள்தனமான நம்பிக்கை. ஒரு பெண், தன்னிடம் அண்டுபவனை ‘வேண்டாம்’ என்று சொல்கிறாளானால், தான், அவனுக்கு பொருத்தமான இணை இல்லை என்கிற நினைப்பாகக் கூட இருக்கலாமென்கிற எளிய சிந்தனை இல்லை. பெண்ணை பெண்ணாகப் பார்த்தால் தானே, இப்படியெல்லாம் சிந்தனை கொள்ள. பெண்ணை பெண்ணாக பார்க்க இயலாத மனப்போக்கின் விளைவு.

ஃபாரென்சிக் ரிப்போர்ட்டுடன் தரணி ஓடி வர, சிந்தனை கலைந்தார் ரஞ்சன்.

‘ நான் சொன்னேன்ல.. அந்தப் பொண்ணு கொலை செய்யப்படுறதுக்கு முன்னாடி கொலையாளி அவளை கற்பழிச்சிருக்கான் சார்..’

‘ஓ..ஓகே.. ஆனா, இப்பவும் கற்பழிச்சது அந்த ரங்கன் தான்னு சொல்லணும்னா, டி என் ஏ டெஸ்ட் எடுக்கணுமே?’

‘ஒரு சந்தேகத்துல அதையும் செய்யச் சொல்லிருந்தேன் சார்.. அதுகூட ரெடி.. அந்த பொண்ணு உடம்புல இருந்த செமன்ல இருக்குற டி என் ஏ வும், ரங்கனுடையது நூறு பர்சென்ட் ஒத்துப்போகுது சார்’

‘ஓ..அப்போ என்ன சொல்ல வரீங்க தரணி?’

‘சார், ரொம்ப சிம்பிள் சார்.. நேத்து வேலைக்கு வந்தவன் 8 மணிக்கு வெளியில போயிட்டான்.. அதுக்கு எவிடென்ஸ், ரங்கன் பொண்ணும், அந்த சிமென்ட் தளமும் தான்..  அதுக்கப்புறம் இந்த வீட்டுல இருந்தது ரங்கனும், அந்தப் பொண்ணும் தான்…  அந்தப் பொண்ணு தனியா இருக்கிறதை பயன்படுத்தி ரங்கன் அவளை கெடுத்துட்டான்.. வெளியில சொல்லிடுவாளோன்னு கழுத்த நெரிச்சு கொலை பண்ணியிருக்கான் சார்..அதுக்கு ப்ரூஃப், அந்த பொண்ணோட பெண்ணுருப்புல அந்த ரங்கனோட விந்தணுதான்…’

தரணியிடமிருந்து ஃபாரென்சிக் மற்றும் அடாப்ஸி ரிப்போர்ட் வாங்கி ஆழமாக சற்று நேரம் பார்த்துவிட்டு, ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சரி.. நீங்க ரிப்போர்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா ஃபைல் பண்ணிட்டு இருங்க. நான் இதோ வந்திடறேன்’ என்றுவிட்டு ரிப்போர்ட்களுடன் அகண்டார் ரஞ்சன்.

ரஞ்சன் நேராக காவலாளி ரங்கனின் வீட்டை விசாரித்து அடைந்தார். அங்கே ரம்யா இருந்தாள். வீட்டை கவனமாக நோட்டமிட்டவருக்கு ஹாலில் ஒரு மூலையில் ஒரு மூட்டை கண்ணில் பட்டது.

‘என்ன இது?’

‘பழைய துணிங்க. லாண்டரிக்கு போடுறதுக்கு.. குமாரு வந்து எடுத்துட்டு போவான்’

‘குமாரா?’

‘ஆமாங்க.. அவன் லாண்டரியும் பண்ணுவான். அவன் தான் எங்க வீட்டுக்கு லாண்டரி’ என்றாள் ரம்யா.

‘அவன் வீடு எங்க?’

‘பக்கத்துலதான்’

‘காட்டறியா?’

ரம்யா வழிகாட்ட, அருகாமையில் இருந்த குமாரின் வீட்டை அடைந்த ரஞ்சன் அங்கே மேஜையில் இருந்த சில மெடிக்கல் பில்களை எடுத்து வைத்துக்கொண்டார்.

குமாரின் விட்டை விட்டு வெளியேறி, அந்த மெடிக்கல் பில்லுக்கான மருந்துக்கடையில் விசாரித்துவிட்டு கொலை நடந்த வசந்த விகாருக்கு  வந்தடைந்த ரஞ்சன், தரணியை அழைக்க, தரணி விரைப்பாய் வந்து நின்றார்.

‘தரணி, அந்த குமாரை கஸ்டடியில எடுத்தாச்சா?

‘எடுத்தாச்சு சார்’

ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அதன் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

மாலை நான்கு மணி அளவில் கையில் ரிப்போர்டுடன் வந்தார் தரணி. ரஞ்சன், ரிப்போர்டை வாங்கிப் பார்த்துவிட்டு,

‘தரணி, நேத்து எட்டு மணிக்கு அப்புறம் இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?’ என்றார்.

‘ரெண்டு பேர் சார். ஒண்ணு அந்த ரங்கன், இன்னொன்னு அந்தப் பொண்ணு அஞ்சலி’

‘எப்படி சொல்றீங்க?’

‘ஃபுட் மார்க்ஸ் சார். சரியா கேட்டை பாத்த திக்குல இருக்கு. எட்டு மணிக்கு  புதுசா போட்ட சிமென்ட் தளத்து மேல நடந்து போயிருக்கான். கால் தடம் அவனோடதுதான். ஃபாரென்சிக்ல ஃப்ரூஃப் ஆயிடிச்சு’

‘ஒரு சமயம் அவன் பின்பக்கமா நடந்திருந்தா?’

சற்று நேர யோசனைக்கு பிறகு,

‘அவன் வீட்டுக்குள்ள போயிருக்கலாம் சார்’

‘எக்ஸாக்ட்லி.. குமார் வெளியில போகலை.. வீட்டுக்குள்ளதான் போயிருக்கான்.. ராத்திரி முழுக்க இந்த வீட்டுக்குள்ள தான் இருந்திருக்கான்.. அவனுக்கு அஞ்சலி மேல ஒரு கண்ணு.. அவளை அனுபவிக்க திட்டம் போட்டிருக்கான்.. இந்த வீட்டுக்கு சிமென்ட் வேலைக்கு போகுறதுக்கு முந்தி மருந்துக்கடையில ஆணுறை வாங்கியிருக்கான். அவனுக்கு கல்யாணம் ஆகலை.  காலைல குமார் தான் முதல்ல வந்திருக்கான்..’

‘ஓகே சார்.. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனுடைய செமன் ட்ரேசஸ் இருக்கிறதா நிரூபிக்கப்பட்டிருக்கே சார்..அது எப்படி?’

‘அதை அவனே சொல்வான்.. இழுத்துட்டு வாங்க அவனை’ என்றார் ரஞ்சன்.

சப் இன்ஸ்பெக்டர் தரணி பணிக்க, இரண்டு கான்ஸ்டபுல்கள் குமாரை இழுத்து  வந்தார்கள். ரஞ்சன் கையிலிருந்த லத்தியை எடுத்து,  குமாரின் நடுவயிற்றில் வேகமாக குத்த, ‘அம்மாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்ற கூவலுடன் அலறி விழுந்தான் குமார்.

‘சொல்றா. ராத்திரி ஏன் இந்த வீட்டுக்குள்ள பதுங்கின? அவளை கற்பழிச்சது நீ. கொன்னது நீ.  ஆனா, பழியை ரொம்ப புத்திசாலித்தனமா வாட்ச்மேன் ரங்கன் மேல போட்டுட்ட. அதுக்கு ரங்கன் வீட்டுல லாண்டரிக்கு துணி எடுத்தது உனக்கு வசதியாப் போயிடிச்சு.. அது எப்படின்னு  என் கொல்லீக் தரணிக்கு புரியிறா மாதிரி இப்ப நீ சொல்லப்போற.. இல்லைன்னா இதே லத்தி உன் வாய் வழியா குடல் வரைக்கும் போகும்’ என்றார் ரஞ்சன்.

அடிவயிற்றில் விழுந்த அடியால், மூச்சுத் திணறிய குமார் மெல்ல நிதானித்து,

‘அஞ்சலி மேல எனக்கு ஒரு கண்ணு சார். ரொம்ப நாளா நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். அன்னிக்கு சிமென்ட் வேலை பாக்க என்னை கூப்பிட்டாங்க.. வீட்டுல ஓனர் இல்லை. அஞ்சலி தனியா இருந்தா. அதுதான் சமயம்ன்னு நான் மருத்துக்கடையில ஆணுறை வாங்கிக்கினேன். பத்து வருஷமா பொஞ்சாதி இல்லாம இருந்தாரு ரங்கன் சித்தப்பா. அவரு ராத்திரியில லுங்கியில கஞ்சி விடுவாறுன்னு தெரியும்.. லாண்டரிக்கு எடுத்தப்போ தண்ணி ஊத்தி, அவரோட விந்துவை சேகரிச்சேன்.. அதை அப்படியே ஒரு ஆணுறையோட மேல் பாகத்துல தடவிக்கிட்டேன்… அன்னிக்கு நான் வெளியே போயிட்டேன்னு எவிடென்ஸ் உருவாக்க, சிமென்ட் தளத்துல நானா பின் பக்கமா நடந்து வீட்டுக்குள்ளாற போய் பதுங்கிட்டேன்.. நடு ராத்திரி எந்திரிச்சு, அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அவளை கத்தியை கழுத்துல வச்சி ரேப் பண்ணினேன். அப்புறம் எங்க உண்மையை சொல்லிடுவாளோன்னு கழுத்தை நெரிச்சு கொலை பண்ணினேன். அப்புறம் காலைல சிமென்ட் வேலை பாக்க வரா மாதிரி வந்துட்டேன்’ என்றான் குமார்.

‘வாவ்.. ரஞ்சன் சார்.. சூப்பர் ப்ரேக்த்ரூ சார்..எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?’

‘அந்தக் கிளிதான் காட்டிக்கொடுத்தது. குமார் மேல சந்தேகம் வந்தது. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனோட செமன் எப்படின்னு குழப்பம் இருந்தது? குமாரோட வீட்டுல நோண்டினப்போ, கிடைச்ச மெடிக்கல் பில்ஸ வச்சு மெடிக்கல் ஷாப்ல விசாரிச்சப்போ, அவன் ஆணுறையும் வாங்கினதா சொன்னாங்க. ஒரு பேச்சுக்கு குமார் அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அஞ்சலியை பலவந்தப்படுத்தினான்னு வச்சிக்கிட்டா, அப்போ செமன் ட்ரேஸ் ரங்கனோட எப்படி மேட்ச் ஆகுதுன்னு ஒரு கேள்வி வருது. குமார்தான் ரங்கன் வீட்டுல சலவைக்கு துணி எடுக்குறான்னு விசாரணையில‌ தெரிஞ்சது..சோ,  ஒரு ஆணுறையோட மேல்பக்கத்தை ஒருத்தர் ஏன் இப்படி பயன்படுத்தியிருக்கூடாதுன்னு யோசிச்சேன்.. குமார் மாட்டிக்கிட்டான்’ என்றார் ரஞ்சன்.

– ராம்பிரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=28109)

Monday, 5 January 2015

PK - திரைப்பட விமர்சனம்

PK - திரைப்பட விமர்சனம்


படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின் கழுத்தில் அந்த விண்கலத்தை இயக்கும் ரிமோட் தொங்குகிறது. அமீர் இறங்குவதை அல்தாப் ராஜா பாடலை கேட்டுக்கொண்டே நடை போடும் ஒரு ராஜஸ்தானி பார்க்கிறான். (அல்தாப் ராஜா எத்தனையோ பாடல்களை தந்திருந்தாலும் ‘தும் தோ டஹரு பர்தேசி’ பாடலையே ஏன் அவருக்கு அடையாளமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஷாரூக்கானின் குச்குச் ஹோத்தா ஹை, பீகே என ஒரு லிஸ்டே போடலாம் போல)
அந்த ரிமோட்டை ஏதோ விசேஷக்கல் என்று நினைக்கும் அந்த ராஜஸ்தானி, அமீரிடமிருந்து அந்த சாவியை நொடிப்பொழுதில் பறித்துவிட்டு, கடந்து போகும் ரயில் தப்பிச் சென்றுவிட, சாவியின்றி விண்கலத்தோடுனனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, அமீர் ராஜஸ்தானிலேயே தங்க நேர்கிறது.
pk

நாம் எல்லோரும் எப்படி டிசைன் டிசைனாக விண்வெளி ஓடங்கள் செய்து, குப்பைபோட்டு வீணாக்க இன்னொரு கிரகம் கிடைக்கிறதா என்று தேடுகிறோமோ, அதே போல், அமீர் வேற்றுகிரகத்திலிருந்து, பூமையை வந்தடைபவர். அவரது கிரகத்தில் எல்லோரும் பிறந்த மேனியாகவே இருக்கிறார்கள். பாஷை என்று ஏதும் இல்லை. டெலிபதியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டாலே, அவர் ஆழமனதிலிருந்து, மொழி உள்பட எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
சாவி தேடி ராஜஸ்தானில் சுற்றுகையில் சஞ்சய்தத் சினேகம் கிடைக்கிறது. அங்குள்ள மக்களை மேலதிகம் தெரிந்துகொள்ள அமீர் ராஜ்ஸ்தான் பெண்களின் கைகளை பிடிக்க முயல, கலவரம் வந்துவிடுமோ என பயந்து, சஞ்சய் தத் அமீரை ஒரு ஆடல் மகளிர் விடுதியில் விட, ஒரு விபச்சாரியின் கைகளை விடியும் வரை பிடித்து, பாஷையையும் (போஜ்பூரி) கற்றுக்கொள்கிறார் அமீர்.
ரிமோட்டைத் தேடி தில்லி பயணிக்கிறார் அமீர். அமீர். தில்லியில் ஒரு போலீஸ்காரரிடம் ‘ரிமோட் காணவில்லை’ என்ற சொல்ல, ‘குடித்திருக்கிறாயா?’ என்று போலீஸ் கேட்கிறார். (குடித்துவிட்டு வந்திருக்கிறாயா என்பதை ஹிந்தியில் பீகே ஆ ரஹே ஹோ க்யா என்பார்கள். அந்த பீகேவைத்தான் படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்.). தில்லியில், அனுஷ்காவின் அப்பா வழிபடும் சுவாமிஜியிடம், அமீரின் ரிமோட் அகப்பட, சுவாமிஜியுடன் கடவுள் இருக்கிறாரா இல்லையா கேள்விகளின் மூலமான போரில் , இறுதியில், அனுஷ்காவின் காதல் கைகூடுகிறது. ஒரு தலைக்காதலுடன் அமீர் தனது கிரகம் திரும்பிச்செல்வதாக படம் முடிகிறது.
குலுங்கும் கார்களில் கசமுசா செய்யும் காமுகர்களிடமிருந்து ஆடைகளை கவர்ந்து செல்வதன் மூலம், ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான ஆடைகளையும், ஆடைகளின் நிறங்களை வெவ்வேறு மதங்கள் எப்படி அடையாளப்படுத்துகின்றன என்கிற காட்சிகளின் மூலமாக ஒரே நிறத்துக்கு எப்படி வெவ்வேறு விதமான கற்பிதங்கள் என்பதை பகடி செய்கிறார்கள்.
எந்த பகவானை கும்பிட்டால் தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல், எல்லா பகவானையும் கும்பிட்டால் யாரேனும் தனக்கு வழிகாட்டுவார்கள் என்றெண்ணி, கங்கையில் முங்குவது, லிங்கம் மற்றும் புத்தருக்கு பாலாபிஷேகம் செய்வது, இரும்பால் தன் உடலை தானே வருத்திக்கொள்வது காலணிகளை சுத்தம் செய்வது என அமீர் செய்யும் செயல்களில், மனித மனம், இலக்கற்று தெளிவற்று, குழப்ப நிலையில் இருக்கையில் பற்றிக்கொள்ள கழுகொம்பு தேடி, தான் இறைவன் என்கிற கற்பிதம் பிறக்கிறது என்பதைக் காட்டுகிறார்கள். .
என்னைக் கேட்டால், முதலில் எது எதன் மீதோ நம்பிக்கை வைக்கத்துவங்கி, ஒரு கட்டத்தில் நம்பிய எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை பொய்த்து போகையில் தான், மனித மனங்களுக்கு இறுதியாக பொய்க்கவே முடியாத‌ நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், மனிதன் ஆறறிவு படைத்தவன் அல்லவா. எதை நம்ப எத்தனித்தாலும், அதையும் நோண்டிப் பார்க்கத் தோன்றுவது இயல்பு. அது அடுத்து என்ன? அடுத்து என்ன? என்கிற தேடலின் இயல்பு. நோண்டிப் பார்க்க முனைந்தாலும் அகப்படாத ஒன்றே “அடுத்து என்ன” என்கிற கேள்விக்கான பதிலை மட்டுப்படுத்துவது, தாமதப்படுத்துவது. அது ஒரு தந்திரம் மட்டுமே. மனிதனின் நம்பிக்கைக்கான இறுதி வடிவம் என்பது கேள்விக்கான பதிலைத்தராமல் இழுத்தடிப்பது. பதில் என்ற ஒன்று இல்லை என்பதாலேயே அது பொய்க்க முடியாததாக ஆகி விடுகிறது. அதுவே அதை வெல்ல முடியாததாகவும் ஆக்குகிறது. இதுவரை கண்டிராத, ஆராய வாய்ப்பளிக்காத, நோண்ட வாய்ப்பளிக்காத, ஆனால் மனிதனின் வியப்பை சம்பாதிக்கக்கூடிய‌ ஒன்று மட்டுமே தான், அந்த பொய்க்கவே முடியாத நம்பிக்கையினை தர இயலும். அது தான் இறைவன் என்கிற கற்பிதம் என்பேன்.
இழுத்தடிக்கும் ஒன்று ஈர்க்கவும், அதே நேரம் ஆச்சர்யப்படவும் வைத்தால், அது கடவுள். இழுத்தடிக்கும் ஒன்று அதே நேரம் பயப்பட வைத்தால், அது சாத்தான். புரிகிறதா?
‘அடுத்து என்ன? அடுத்து என்ன?’ என்கிற கேள்வி மனிதனை துரிதப்படுத்துகிறது. இன்றைய நவீனத்துவ உலகில், சுற்றுப்புறவியலாளர்கள் சொல்வது என்னவெனில், இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த நூறு ஆண்டுகளில் தான் பூமி மிக மிக அதிகமாக மாசுபட்டிருக்கிறது என்பதுதான். கடந்து நூறு ஆண்டுகளில் தான் மனிதன் பற்பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். ஆனால் விளைவு, அடுத்தென்ன என்கிற மனிதனின் தேடல், அழிவை துரிதப்படுத்துகிறதே (Accelerated)  அன்றி வேறில்லை. இந்த வேகம் ஏன் என்கிற கேள்வியை அமீர்கானின் ‘பீகே’ எழுப்பவில்லை என்பதே நான் அவதானித்தது. பிறக்கும் அனைத்தும் அழியத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த பூமியில் எல்லோருக்குமான உணவை இயற்கை உணவுச்சுழற்சி (Food Chain) முறையாக வைத்திருக்கிறது.ஆக உண்ண உணவு இருக்கிறது. வசிக்க இருப்பிடம் இருக்கிறது. அப்படியிருக்க, ஏன் துரிதப்பட (Accelerated) வேண்டும்?
இப்போதிருக்கும் இயற்கை யாரோ ஒரே நொடியில் சொடுக்கி உருவாக்கியதல்ல. பல்லாயிரங்கோடி வருடங்களாக நடந்த பல நிகழ்வுகளின் விளைவே இது. பேரண்டத்தின் ஆயுளை மொத்தமாக கணக்கில் கொண்டு ஒரு வருடத்தை உருவாக்கினால், மனிதன் தோன்றியது அந்த ஒரு வருடத்தின் கடைசி நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் தான். அப்படி இருக்க, மனிதன் கடைசி ஒரு மணி நேரத்தில், உலகை ஆராய்ந்து கண்டுபிடித்த கோட்பாடுகள், கற்பிதங்கள், அனுபவம் எல்லாம் இயற்கையின் பல்லாயிரங்கோடி வருட அனுபவத்திற்கு எப்படி ஈடாகும்? மனிதம் பிழைத்திருக்க வேண்டாமா? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். பல்லாயிரங்கோடி வருடங்கள் இப்பிரபஞ்சத்தின் வயது. இந்த காலகட்டத்தில் எதை எதையோ உருவாக்கி, எப்படியெப்படியோ அழித்திருக்கிறது. மனிதன் பிற விலங்குகளை விடவும் உயர்வானவனே. ஆனால், அது பிரபஞ்ச விதிகளிலிருந்து எவ்விதத்திலும் மனிதனை விலகி இருக்க, தகுதியாக்கப்போவதில்லை.
“பிரபஞ்சங்களுக்கும், கோள்களுக்கும், பூமிக்கும், அதனுள் நமக்கும், நம் அத்தனை செயல்களுக்கும் கடவுள் தேவையில்லை. இயற்பியல் விதிகளே போதும்” என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்வதை நினைவூட்ட விரும்புகிறேன்
“காட்டில் ஒரு மரம் வீழ்கிறது. அதை எந்த மனிதனும் பார்க்கவில்லை என்றால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதே மரம் விழுவதை ஒரு மனிதன் பார்க்கிறான் எனில், அதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது. மனிதன் தரும் அர்த்தங்களை அன்றியும் வேறு அர்த்தங்கள் இப்பூவுலகிற்கு இல்லை ” என்கிறார் சார்த்தர். ஒரு மனிதனுக்கு கஷ்டங்கள் வருவது இன்னொரு மனிதனாலே தான். ஏனெனில், கஷ்டங்களை உருவாக்குவது இயற்கை அல்ல, மனிதனின் அர்த்தங்களே. பேருண்மை என்னவெனில், மனிதனுக்கு எட்டாத அர்த்தங்களையும், இந்த இயற்கை தன்னுள்ளே அடக்கித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் செய்வது வெறும் டிகன்ஸ்ட்ரக்ஷன் (deconstruction) மட்டுமே. அதுகூட முழுமையாக அல்ல.
அந்த‌ அர்த்தங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறது பீகே.
இன்னொன்றை பற்றி மிக முக்கியமாக சொல்ல வேண்டும்.
‘எங்கள் கிரகத்தில் எல்லோரும் அம்மணமாகவே இருப்பார்கள். பறவைகள், விலங்குகள் எல்லாம் அம்மணமாகத்தானே இருக்கின்றன‌’ என்பார் அமீர். இது குறித்து ‘ஏவாளின் ஆப்பிள்கள்’ என்றொரு கவிதை கூட எழுதியிருக்கிறேன். அந்தக் கவிதையின் சாரம் இதுதான்.
மனிதன் தவிர வேறு எந்த விலங்கினத்திலும், வன்புணர்ச்சி (Rape) என்பது இல்லவே இல்லை. பெண்ணை கவர ஆண் விலங்குகள் தான் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும். இறுதியில் வெல்பவருக்கே பெண். தோற்ற ஆண் விலங்குகள் வேறு ஜகா மாற்றிக்கொள்ளும். பைபிளில் வரும். ஆப்பிளை உண்ட பின், ஏவாளுக்கு குறிகள் பற்றிய பிரஞை ஏற்பட்டு, மறைக்க எத்தனிக்கிறாள். வன்புணர்ச்சிக்கான (Rape) விதை அந்த இடத்தில் தான் விழுந்திருக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில், அத்தருணத்தில் குறிகள் பற்றி கவலைப்படாத வேறு எந்த விலங்கினத்திலும், வன்புணர்ச்சி (Rape) இல்லை. இன்னும்சொல்லப்போனால், டார்வினின் பரிணாமக்கொள்கையின்படிகூட ஆண்டாண்டுகால உயிர்மலர்ச்சி வேறுபாடுகளால் வெவ்வேறு இனங்கள் உருவானதே ஒழிய, வன்புணர்ச்சி உருவாகவே இல்லை.
ஒரு சமன்பாடு சொல்கிறேன் கேளுங்கள்.
பெண்மை நிர்வாணத்திலிருந்து குறிகளை மறைக்கத்துவங்குகிறது. ->
மறைத்து மறைத்தே அதை பிரத்தியேகப்படுத்துகிறது. ->
பிரத்தியேகப்படுவது வெல்ல வேண்டியதாகி விடுகிறது. ->
வெல்வதற்கு ஆண் இன‌ம் முகமூடி அணிகிறது. ->
பெண்மை ஏமாறுகிறது. ->
ஏமாந்த பெண்மை மேலும் மறைக்கிறது. ->
மறைத்து மறைத்தே அதை பிரத்தியேகப்படுத்துகிறது. ->…………………..
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.
வெற்றுகிரகத்திலிருந்து வருவதாகச் சொல்லும் அமீருக்கு பூமி மனிதர்களைப் போலவே கண்கள், கால்கள், கைகள் என எல்லா உடலுறுப்பும்.
பூமி ஒரு ப்ரத்தியேக கிரகம். சூரியனுக்கு மிக மிக சரியான தூரத்தில் நிற்பதால், குளிரில் உறையாமலும், உஷ்ணத்தில் எல்லாமே ஆவியாகி ஜூபிடர், சாடர்ன் போல வெறும் வாயு கிரகமாகிவிடாமலும் இருக்கிறது. சிலிக்கான் அடிப்படைத்தாது. கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியன அடிப்படையாக இருப்பதால் தான் மனிதனுக்கு மெல்லிய தோலினூடே எலும்பு, மஜ்ஜை என உருவாகியிருக்கின்றன.
அமீர் போல, பூமி மனிதன் போலவே ஒரு ஏலியன் இருக்க, வாய்ப்புக்கள் மிக மிக குறைவு. ஏனெனில், நான்காவது பரிமாணமான காலம் என்பது. பூமி போலவே ஒரு கிரகம் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், நான்காவது பரிமாணமான காலம் அங்கும் பூமியில் போல் இருக்காது. அதற்கு என்ன காரணம் என்று எழுதப்போனால், தனியாக ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும் என்பதால் விட்டுவிடலாம். சூரியன் மற்றும் நிலவுடனான தூரத்தில் இம்மி மாறினாலும், ஈர்ப்பு விசையில் (gravity) மாற்றம் வரும். அப்படி வந்தால், மனிதனின் உருவம் நிச்சயமாக இருக்காது. செல்வ ராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இந்த தவறை செய்திருப்பார்கள். ஒரு காட்சியில், இரண்டாம் உலகில் தலைக்கு மேல், இரண்டு பெரிய நிலாக்கள் தெரியும். அத்தனை பெரிய நிலாக்களை ஈர்க்கும் (gravity) கிரகத்தில் மனிதர்கள் சித்திரக்குள்ளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், பூமியில் பார்த்த அதே ஆர்யா, அனுஷ்கா அங்கும் இருப்பார். அதே உயரத்தோடு.
‘ப்ரிடேட்டர் 2′ படத்திலும் இப்படி செய்திருந்தார்கள். ஒரு காட்சியில், காட்டின் எல்லைக்கு வந்து பார்த்தால் தலைக்கு மேல் இரண்டு கிரகங்கள் தெரியும். ஆனால், அதே பூமி மனிதர்கள். இதை சரியாகக் காட்டியது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தில் தான். இந்த லாஜிக் ஓட்டை சிக்கல்களையெல்லாம் தவிர்க்கத்தான், ஜேம்ஸ் கேமரூன் மிக மிக புத்திசாலித்தனமாக, மனிதர்கள் அவதார் எனப்படும் உடற்கூடுகள் மூலமாக ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதாக காட்டியிருப்பார். மிக மிக நல்ல தந்திரம் அது. அந்த கிரகத்தில், ஈர்ப்பு விசை (gravity) குறைவாக இருப்பதால், அவதார்கள் உயரமாக இருப்பார்கள். தொங்கும் பாறைகள் இருக்கும். போதாத குறைக்கு, படத்தின் வில்லன் ஒரு காட்சியில் உடற்பயிற்சி செய்துகொண்டே வசனமாகவும் சொல்வார். ‘அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையெனில் தசைகள் வலுவிழக்கின்றன’ என்கிற அர்த்தத்தில்.
பீகே, இரண்டாம் உலகம் போன்ற படங்கள், திரைப்படங்கள் எடுக்க கற்பனை வளமும், படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் மட்டும் போதும், என்றே நினைக்க வைக்கின்றன. உலகத்தரமான படம் உருவாக்க வேண்டுமெனில், வெறும் கற்பனை மட்டும் போதாது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகிறது.
காண்டம் வைத்து பத்திரிக்கை அலுவலகத்தில் அமீர் கேட்கும் கேள்விகள் நெத்தியடி.
“செக்ஸ் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று இத்தனை பகிரங்கமாக நாங்கள் பேசுவதில்லை”
“அட!!.. மேளம் கொட்டி ஊருக்கெல்லாம் சொல்லி, திருமண நாளன்று மட்டும் பகிரங்கமாக ஏன் சொல்கிறீர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று”
அமீரின் இதே வசனத்தை, பூப்பு நீராட்டு விழாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் விரும்பத்தகாதவைகள் ஒருபக்கம் எனில், விரும்பத்தக்கவைகளும் இருந்தன தாம். 
மனிதன் உருவாக்கிய கடவுள்கள் , மதங்கள் போன்றவைகளை , அவைகளின் குறைகளுக்காக, பிற்போக்குத்தனங்களுக்காக, கைவிடுவது சரியே. ஆனால், கடவுள் பெயரால், மதங்கள் பெயரால் நமக்கு நாமே இதுகாறும் உருவாக்கி வைத்திருந்த செளகர்யமான, புத்திசாலித்தனமான முறைகளை கைவிடாமலோ, அல்லது அதற்கு சமமான முறைகளை நவீன உலகில் கட்டமைத்தோ பயணித்தலே பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்த மனித இனத்தின் அனுபவ அறிவை நாம் பாதுகாத்துக்கொள்வதும், சரியாக பயன்படுத்திக்கொள்வதுமாகும். இல்லையெனில், பாஸ்மதி அரிசியின் வரிசையில் மேலும் பல சேரலாம்.
பீகே இந்த கோணத்தில் எதையும் சொல்லவில்லை.
அமீர்கான், விரைத்தபடியே, கைகளை அசைக்காமலே ஓடுகிறார். திரைப்படம் முழுவதும் கண்களை சிமிட்டாமல் விரைத்து பார்க்கிறார். (ஆனால், க்ளைமாக்ஸ் காட்சி பேட்டியில் மட்டும் இயல்பாகவே அழுதபடி பேசுகிறார்) செவிகள் விடைத்திருக்கின்றன. டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டுக்கு கிடைத்த செளகர்யம் அமீருக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
சமூக நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் தான். ஆனால், பீகே எழுப்பும் கேள்விகளை, இதற்கு முன்னும் பலரும் பல படங்களில் காட்டியிருக்கிறார்கள்.
“பாலை ஏன் கருங்கல்லுக்கு ஊற்றுகிறீர்கள்.. பசியோடிருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுங்கள்”
“கடவுள் ஒன்றுதான். மனிதர்கள் உருவாக்கும் கடவுள்கள் தேவையில்லை”
“பெண் வயசுக்கு வந்ததைப்பற்றி சத்தம்போட்டு சொல்வானேன்”
“செக்ஸை ஏன் பாவமாக, பகிரங்கமாக பேசக்கூடாத விஷயமாக்குகிறீர்கள்”
“வெறும் கல்லை, கடவுளாக்காதீர்கள்”
இந்தக் கேள்விகளை பீகே தான் முதன் முதலாக முன்வைக்கிறது என்றில்லை. சாமான்யர்கள், இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்கள் கூட இத்தகைய கேள்விகளை கேட்பார்கள் தாம். அதோடு அவர்களின் பார்வைக்கோணம் முடிந்துவிடும். அதே போலவே பீகேவும் முடிந்துவிட்டதுதான் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)