Monday, 30 July 2012

தெளிவற்ற நாடகங்கள்

தெளிவற்ற நாடகங்கள்


நாடகங்கள்
எங்கு,
எவ்விதம்
துவங்குகிறதென‌
நம்மிடம்
தெளிவான குறிப்புகள்
இல்லை...

பிற நாடகங்களின்
பக்க விளைவுகளெனவும் கூட‌
புதியதாய்
ஓர் நாடகம்
உயிர்த்தெழக் கூடும்...

நாம்
நடித்துக்கொண்டிருக்கும்
நாடகம் கூட‌
அப்படி ஒன்றாக‌
இருக்கக் கூடும்...

இப்ப‌டித்
தெளிவான‌குறிப்புக‌ள்
இல்லாத‌நாட‌க‌ங்க‌ளைத்தான்
நாம்
தின‌ம் தின‌ம்
விரும்பி ந‌ட‌த்துகிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5802)

Monday, 23 July 2012

பயணத்தின் சாரம்

பயணத்தின் சாரம்ஓர் நாழிகை கூட‌
வீணாகிவிடாமல்
சீராக‌
பாதையினூடே
பயணித்தல்
இலக்கை எட்டுதலைத்
துரிதமாக்குகிறது தான்...


ஆனால்,
மைல்கற்கள் தோறும்
பயணத்தை நிறுத்தி
திரும்பிப் பார்த்தலே
பயணத்தின் சாரமாகிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

தனியாத வேட்கை

தனியாத வேட்கை


எந்த ஒரு நாடகத்தையும்
நம் விருப்பப்படிதான்
நடத்துகிறோமென‌
நாம் எல்லோரும்
நினைத்துக்கொள்கிறோம்...


நாடகங்கள் அனைத்தும்
தங்கள் விருப்பப்படிதான்
நம்மை இயக்குகின்றன‌
என்பதை
நாடகம் முடியும் தறுவாயிலோ,
முடிந்த பின்னரோ தான்
உணர்ந்து கொள்கிறோம்...


ஆயினும்,
ஓர் நாடகத்தை
நம் விருப்பப்படியே
நடத்திட வேண்டுமென்கிற‌
தனியாத வேட்கை
நம் அனைவருள்ளும்
பெருந்தீயென எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

Wednesday, 18 July 2012

அவளின் ரகசியம் - சிறுகதைஅவளின் ரகசியம் - சிறுகதை

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

நிரஞ்சனா கதவு திறக்க, முகம் மலர்ந்தாள் காஞ்சனா.

"ஹாய் நீரு.."

"ஹேய்ய்ய்ய்..... வாடீ" என்ற நிரஞ்சனாவின் முகம் அசுவாரஸ்யப்பட்டிருந்தது.

இத்தனைக்கும் காஞ்சனா நிரஞ்சனாவின் பால்ய வயதுகளின் தோழி. இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆறாவது அரையாண்டுத் தேர்வில் பெயிலானதிலிருந்து, பொறியியல் கல்லூரியில் டிகிரி படிப்பு வரை ஒன்றாகவே படித்தவர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் , ஆர்ட்ஸ் காலேஜ் ரமேஷை நிரஞ்சனா காதலிக்கத் துவங்கியது, கடிதத்தூது அனுப்பினது, க்ளாஸ் கட் அடித்துவிட்டு சினிமா பார்த்தது, வீட்டில் பொய் சொல்லிவிட்டு கல்லூரி இறுதியாண்டில் ரமேஷுடன் சுற்றுலா சென்றது உள்பட எல்லாமே காஞ்சனாவிற்கு அத்துப்படி. தற்சமயம் வெவ்வேறு மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் ஐந்தில‌க்க‌ ஊதிய‌த்தில் வேலையில் இருக்கிறார்கள். வெகு நாட்களுக்குப்பின் நிரஞ்சனாவை அவளின் திருமணத்திற்கு சந்திக்க வந்திருக்கிறாள் காஞ்சனா.

"என்னடீ.. இது.. கல்யாணத் தேதி வந்தாச்சு. இன்னமும் முகத்திலே கல்யாணக் களை இல்லாம இருக்கே. எல்லாம் சரிதானே? பிரச்சினை ஏதும் இல்லையே?" வினவினாள் காஞ்சனா.

"ஆங்.. அது.. ம்ச்சு.. வா காஞ்சு.. உட்காரு" என்றாள் நிரஞ்சனா, காஞ்சனாவின் கேள்விகளை ஆர்வமின்றி புறக்கணித்தவளாய்.

நிரஞ்சனா வீட்டு ஹாலின் சோபா அமிழ்ந்து அவர்களை அருகருகே உள்வாங்கியது. மின்விசிறி மெளனமாகத் தன் போக்கில் சுற்றிக்கொண்டிருந்தது. அறையில் நிலவிய பேரமைதியையும், வீட்டில் நிரஞ்சனாவின் அப்பா, அம்மா என வேறு யாரும் அப்போதைக்கு இல்லை என்பதையும் கவனித்துக்கொண்டாள் காஞ்சனா.

"இல்லையில்லை... ஏதோ பிரச்சினை.. என்னன்னு சொல்லுடி. ரமேஷ் எதாவது சொன்னாரா?"

"என்னத்தை சொல்றது காஞ்சு.." சலித்தாள் நிரஞ்சனா.

"விஷயம் என்னன்னு சொல்லுடி."

"எப்ப‌டி சொல்ற‌துன்னு தெரிய‌லைடி... இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சு"

"ஓ.. உனக்கும் ரமேஷுக்கும் ஊடலா?" கண்ணடித்தாள் காஞ்சனா.

"அப்படி ஏதாவது இருந்தாதான் பரவாயில்லையேடீ. பிரச்சினையே வேற. ரமேஷோட அம்மா, அப்பா, தங்கை எல்லாரும் அவங்க வீட்டுக்கு வாராவாரம் கூப்பிடறாங்கடீ. நானும் போய் தங்கிட்டு வரேன். என் அப்பா, அம்மாக்கு ஓகே தான். வாழப்போற வீடு, பழக்கமாகணும்னு சொல்றாங்க. அதெல்லாம் சரிதான். ஆனா, அந்த வீட்டுல இப்போல்லாம் நான் எது செஞ்சாலும் குத்தமாயிடுதுடி..." என்றுவிட்டு நிறுத்தினாள் நிரஞ்சனா, சோகம் அப்பியவளாய்.

"என்ன நடந்ததுன்னு சொல்லுடி" சுருங்கிய புருவங்களுடன் நிரஞ்சனாவை எதிர்கொண்டாள் காஞ்சனா.

"ஒரு மாசம் முன்ன ஒரு தரம் அங்க போயிருந்தேன்டீ. ரமேஷோட தங்கை சியாமளாவும் நானும் சாம்பார் வச்சோம். சாம்பார் சட்டியை மூடி வச்சேன்டீ. அவ வேணாம்னு எடுத்துட்டா. நான் காஸ் மிச்சம் பண்ணலாம், பூச்சி பொட்டு விழும்ன்னு மூடி வைக்கிறது பத்தி சொன்னேன்டீ. அவ என்னடான்னா, சாம்பாரை மூடி வச்சா, நீராவி சேருமாம். அது உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்றாடீ. இப்படி எங்காச்சும் கேள்விப்பட்டிருக்கோமா?"

"ஓ.."

"இதாச்சும் பரவாயில்லைடீ.. அவங்க வீட்டுல சர்வ சாதாரணமா நாக்குல அலகு குத்திக்கிறாங்கடீ. கேட்டா வேண்டுதல்னு சொல்றா. அதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்ல முடியலை. வேணாம்னு சொன்னா, குறை சொல்றாங்க. ஏதாவது ஒண்ணுன்னா உடனே நான் அலகு குத்தாததினாலதான்னு என்னைக் குத்தம் சொல்றாங்க. சாதத்தை குக்கர்ல வைக்க வேணாமாம், சட்டியில‌ வடிக்கணுமாம். அந்த நாட்கள்ல உப்பு சேத்துக்காம சாப்பிடணுமாம். அவங்க வீட்டு மனுஷாளோட அணுகுமுறையே சரி இல்லை. அதைச் சொன்னா, நான் எல்லாரையும் சந்தேகப்படறேனாம். சிட்னி ஷெல்டன் படிச்சா, விரோதமா போயிடுது. ப‌டிச்சிருக்கோம்னு சீன் போடுறான்னு முதுகுல‌ பேசுறாங்க‌டீ ஏதோ அன்னியப்பட்டு போனா மாதிரி தோணிடுதுடீ. இப்படி எத்தனையோ இருக்குடீ. சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வீட்டுல ரமேஷ் உள்பட யாருக்கும் படிப்பு அவ்வளவா இல்லை. நாம ஏதாச்சும் சொன்னா, அவுங்க அதை திமிராதான் பாக்குறாங்க. சரி, உங்க நம்பிக்கை எங்களுக்கு இல்லை, நாங்க தனியா இருந்துக்குறோம்ன்னு சொன்னா, வந்த உடனே வீட்டைப் பிரிக்கிறியான்னு கேக்குறாங்க. ரமேஷ் கூட அவுங்க அம்மா, தங்கையைத்தான் சப்போர்ட் பண்றாரு. கல்யாணம் ஆயிட்டா, அந்த வீட்டுல எப்படி வாழப்போறேன்னு பயமா இருக்குடீ" என்றாள் நிரஞ்சனா பரிதாபமாக.

"ம்ம்ம்" யோசனையாய் கனைத்தாள் காஞ்சனா மத்திமமாக‌.

பெண்மை உன்னதமானது. பெண்கள் மென்மையானவர்கள். அன்புக்கு ஏங்குபவர்கள். உண்மையான அன்பிற்காய் உருகுபவர்கள். அன்பு செய்கையில் பிரிதெதுவும் பெரியதாய்த் தோன்றாது அவர்களுக்கு. அன்பு அவர்களுக்கு ஜீவாதாரம்,. வாழ்வாதாரம். அன்பு இல்லாத இடத்தில் அவள் இருக்க விரும்புவதில்லை. ஆனால், சமூகம் என்று வருகையில், அவளுக்கு நேரும் பல்வேறு பிரச்சினைகள், அன்பைக் கேடயமென முன்னிறுத்தி ஒளிந்து வருவனதாம்.

காதலென்று வந்துவிட்டால், பெண்ணுக்கு நிறம் முக்கியமில்லை. ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடில்லை. ஜாதி மத பேதமில்லை. படித்தவன், படிக்காதவன் என்கிற வேற்றுமை இல்லை. அவளைப் பொருத்தமட்டில், தன்னை அன்பு செய்பவனே, உலகிலேயே அதி பிரதானமானவன். அழகன். திறமைசாலி. அன்பு, நடைமுறை வாழ்வின் அசெளகர்யங்களைக் கடந்து போகும் ஊக்கம் த‌ருகிற‌து அவ‌ளுக்கு. பெண்மை, உல‌க‌த்தை, த‌ன் க‌ண்கொண்டு பார்ப்ப‌தில்லை. த‌ன் மீது அன்பு செய்ப‌வ‌ன், க‌ண்க‌ளினூடே பார்க்கிறாள். த‌க‌ப்பன், அன்பாய் ந‌ட‌ந்துகொள்கையில், அவ‌ன‌து குடியும், புகையும் ஆணிற்கான‌ ரிலாக்சேஷ‌ன், பொறுத்துப் போக‌ வேண்டிய‌, ச‌கித்துக் கொள்ள‌ வேண்டிய‌ ஒன்று. அன்பை நீட்டிக்கும் வழி. அன்புக்காய் பெண்மை அதை சகிக்கும். ச‌கோத‌ர‌ன் அன்பாய் ந‌ட‌ந்துகொள்கையில், அவ‌னின் காத‌ல், அவ‌ளின் பிர‌ச்ச்சினை. அன்பை நீட்டிக்கும் வழி. அன்புக்காய் பெண்மை அதை தன் பிரச்சினையெனக் கொள்ளும். அன்பாய் ந‌ட‌ந்துகொள்ளும் நண்பன், தேர்வில் தோற்றாலும் அது அவளைப் பொறுத்தமட்டில் ஒரு தோல்வியடைந்த முயற்சி. அன்பை நீட்டிக்கும் வழி. அன்புக்காய் பெண்மை அதை சகிக்கும். இந்த சமூகத்தில், ஒருவன், அடிமட்டத்தில் துவங்கி அடிமட்டத்திலேயே உழலவும் முடியும். உயர உயர பறக்கவும் முடியும். அனேகம் பெண்மை விரும்புவது, இரண்டாம் வகை. சமூகத்தின் எந்த நிலைப்பாடும், அவளைப் பொறுத்தமட்டில், அடுத்து நிலைக்குச் செல்ல கடக்க வேண்டிய முதல் படி. உய‌ர்வை நோக்கியே அவ‌ள். முன்னேற்ற‌த்தை நோக்கியே அவ‌ளின் ஒவ்வொரு அசைவும்.

எந்த ஓர் விஷயத்திலும் ஈடுபட, ஒன்று அது தனக்குப் பிடித்திருக்கவேண்டும். இல்லையெனில், தன்னை அதற்குப் பிடித்திருக்க வேண்டும். இவ்விரண்டிலும் பொருந்தாதது பற்றி அக்கறைகள் தேவை இல்லை என்கிற நிலைப்பாடு, தனிப்பட்ட மனிதர்களுக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், சமூகம் என்று வருகையில், இவ்விதமான அக்கறைகளும் நிச்சயம் வேண்டும். எவரொருவரும் இந்தச் சமூகத்தின் அங்கத்தினர்களே. மனித‌ர்க‌ளின் அன்றாட வாழ்வியல் இந்த சமூகத்திலேயே நிகழ்கிறது. இங்கே நமக்கான ஜீவனம் செய்ய, சமூகத்தைப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகம் எதற்குப் பழக்கப்படுகிறது என்பதை நுணுக்கமாக அவதானிக்க‌ வேண்டும். இது நிர்ப்பந்தம். அன்பின் காரணத்தால் அணுகுமுறைகள் மாறலாம். ஆனால், ச‌மூக‌த்தில் இயக்கங்களுக்கான விளைவுகள் மாறாது. பார்வைக் கோணங்களை வசதிக்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், விளைவுகள் மாறாது.

இங்கும், அப்படித்தான் நிகழ்கிறது. நிரஞ்சனா, ரமேஷ் காதல் அப்படித்தான். நிரஞ்சனா, ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கிறாள். ரமேஷ், கலைக் கல்லூரியில் பூகோளம் படித்தவன். வங்கியொன்றில் விற்பனை பிரதிநிதியாக நான்கில‌க்க‌ ஊதிய‌த்தில் வேலை செய்கிறான். காதலில், உலகை நிரஞ்சனா, ரமேஷின் கண்களால் பார்க்கிறாள். ரமேஷின் நிலைப்பாடு, அவளுக்கு, ஒரு தோல்வியடைந்த முயற்சி. ஏனெனில் அது காதல். அவனும் ஒரு நாள் வெற்றி கொள்வான் என்கிற நம்பிக்கையை இந்த நினைப்பு அவளுக்கு ஊட்டியிருக்கிறது. இந்த நினைப்பு அன்பைக் கூட்டுகிறது. ஓர் எதிர்பார்ப்பை விதைக்கிறது.

பெண்கள் எல்லோரும் அழகானவர்கள். வாளிப்பானவர்கள். நளினம் நிறைந்தவர்கள். எளிமையானவர்கள். புதுமை விரும்பிகள். புரட்சி விரும்பிகள். தங்கள் அறிவாலும், முதிர்ச்சியாலும், பண்பாலும், அன்பாலும் எல்லோரையும் ஈர்ப்பவர்கள். ஈர்ப்பு, நினைவு தெரிந்த நாளிலிருந்து பெண்மை அனுப‌விப்ப‌து. இதுதான் பெண்மையின் ப‌ல‌மும் ப‌ல‌வீன‌மும். சில நேரங்களில் ரசனையுடன் சில நேரங்களில், அசூயையுடன். என்னேரமும் எவரேனும் பார்த்துக்கொண்டே இருப்பது, சில சமயங்களில் சுதந்திரமின்மை அவளுக்கு. விழித்திருக்கும் நேர‌ம‌னைத்தும் எல்லோர் கண்களுக்கும் இனிமையாக‌வே காண‌ப்ப‌டுவ‌த‌ன் அசெள‌க‌ர்ய‌ங்க‌ள் ஒவ்வொரு பெண்ணும் அறிவாள். தன்னைப் போலவே அசெளகர்யப்படும் இன்னொரு பெண்ணின் மேல் ப‌ச்சாதாப‌ம் கொள்வாள். ச‌ட்டென‌ உத‌விக்கு வ‌ருவாள். கேட்டுக்கொள்ளாம‌லே உத‌விக‌ள் ப‌ரிமாற‌ப்ப‌டும். ந‌ட்பு உருவாகும்.

தொட‌ர்ந்து பார்க்க‌ப்ப‌டுவ‌து, கொஞ்ச‌ம் நிதான‌ம் த‌வ‌றினாலும், அழ‌குதான் பிர‌தான‌ம் என்று நினைக்க‌ வைத்துவிடும். அழ‌குதானா எல்லாம் என்று ச‌லிக்க‌ வைத்துவிடும். எதிர்பாலின‌த்தைக் குறைத்து ம‌திப்பிட‌ வைத்துவிடும். ம‌ரியாதை இழ‌க்க‌ச் செய்யும். ஆண்மை, பெண்மையை, தொட‌ர்ந்து பார்க்க‌க் கூடாது. வெறிக்கக் கூடாது. அது ஆண்மைக்கு இழுக்கு. மரியாதை இழப்பு. பெண்மை த‌வ‌றாக‌ எண்ணும். நெருங்கி வ‌ர‌ எண்ணுப‌வ‌ள் கூட‌ வில‌கிப் போவாள். ப‌ய‌ந்து ஒதுங்குவாள். ச‌ரியான‌வ‌ன் கூட பெண்ணின் பார்வைக்குத் த‌வ‌றாகிப் போவான்.

தொட‌ர்ந்து பார்க்க‌ப்ப‌டுவ‌து, அழ‌கு இல்லாத‌வ‌ர்க‌ளை, த‌ன்ன‌ம்பிக்கை இழ‌க்க‌ச் செய்யும். உல‌கை, சூழ‌லை, ச‌மூக‌த்தை வெறுக்க‌ச் செய்யும். விரும்ப‌ப்ப‌டுத‌லுக்கென‌ மென‌க்கெட‌ வைக்கும். போலியான‌ அன்பென்று தெரிந்தும் அழ‌கில்லாத‌வ‌ர்க‌ளை அத‌ற்கு ஏங்க‌ வைக்கும். போலியான‌ அன்பின் த‌ற்காலிக‌த்த‌ன்மை க‌ண்டு ப‌ய‌ம் கொள்ள‌ வைக்கும். அதை நிர‌ந்த‌ர‌ப்ப‌டுத்த‌ புத்தியைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வைக்கும். பெண்மை உண்மையான‌ அன்பை இன‌ம் காண‌ க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும். அது தெரியாவிடில், த‌வ‌றான‌வ‌ர்க‌ளைச் ச‌ரியென‌க் கொண்டு, நெருங்க அனுமதிக்கும். ச‌ரியான‌வ‌ர்க‌ளைப் புரிந்துகொள்ளாம‌ல் த‌வ‌றாக‌ அனுமானித்து வில‌கிப் போக‌ வைக்கும்.

பொறியியல் கல்லூரியில் எவ‌ரும் ச‌ரியென‌ப்ப‌டாத‌தில் எவராலும் ஈர்க்கப்படாத நிரஞ்சனா, ரமேஷிடம் ஈர்ப்பை உணர்கிறாள். ர‌மேஷுட‌னான‌ ஈர்ப்பின் மூல‌ம் ச‌மூக‌த்தை, அவ‌ள் வ‌கையான‌ காத‌லுக்குப் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தியிருக்கிறாள். த‌ன‌க்கு பிடிக்காததான‌, த‌ன்னைப் பிடிக்காததான‌ இந்த‌ இர‌ண்டிலுமே பொருந்தாத‌வைக‌ள் ப‌ற்றிய‌ அக்க‌றைக‌ள் அவ‌ளிட‌த்தில் இருக்க‌வில்லை.

ஏதும் பேசாமல், அமைதியாய் காஞ்சனா ப‌ல‌வித‌மாக‌ யோசித்தவாறு அமர்ந்திருந்தாள். காஞ்சனாவின் மெளனம் நிரஞ்சனாவின் கவலையை இரட்டித்தது. ஏமாற்றமளித்தது. நிரஞ்சனாவிற்குள் இருந்த கடைசி சொட்டு பொறுமையையும் சுத்தமாய் வழித்தெடுத்தது. இய‌லாமையில் அழுகை வ‌ந்த‌து. அவர்களிடையே வலுக்கத் துவங்கியிருந்த அடர் மெளனத்தை உடைக்க எத்தனித்தவளாய்...

"என்ன காஞ்சு.. ஒண்ணும் சொல்லமாட்டேங்குற? ஏதாச்சும் சொல்லேன்?" என்றாள் நிர‌ஞ்ச‌னா.

விசும்பும் நிரஞ்சனாவை ஆதரவாய் கை நீட்டி அணைத்துக்கொண்டாள் காஞ்சனா.

"இல்லைடீ.. அழாதே.. இன்னமும் காலம் இருக்கு. எதுவும் கைமீறிப் போயிடலை. ரமேஷ்தான் உன் வாழ்க்கைன்னு நீ முடிவு பண்ணிக்கிட்டன்னா, எது நடந்தாலும் இனி ரமேஷ்தான்னு நீ நம்பிட்டேன்னா, வேறு எதையும் விட உன் காதல்தான் முக்கியம் எனில், இது மாதிரி சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திச்சுத்தான் ஆகணும்னு உன்னை நீயே தயார் பண்ணிக்க. இதுக்கு மேலயும், இதை விட அதிகமாகவும் பிரச்சினைகள் வரலாம்ன்னு நினைச்சுக்க. அதுக்கெல்லாம் உன் மனசைத் தயார் பண்ணிக்க. வாழ்க்கையே விட்டுக்கொடுக்குறது தான். அந்த விட்டுக்கொடுத்தல் இனிமே, உன் பக்கமிருந்துதான் அதிகம் நடக்குங்கறதை புரிஞ்சிக்க. அதையெல்லாம் பொறுத்துப் போக எத்தனை மனவலிமை வேணுமோ அதை இந்த நிமிஷத்துலேர்ந்து கடவுள் கிட்ட வேண்டிக்க. அதுக்கு நீ மனசளவுல தயாரா இருக்கணும். உனக்கு எதெல்லாம் தெரிஞ்சிருக்கோ, அதெல்லாம் இந்த உலகத்துல இருக்குங்குறதே அவங்களுக்கு தெரியாம இருக்கலாம். அதையெல்லாம், இன்னிக்கு விளக்கமா சொல்லி, நாளைக்கே அவங்களுக்கு புரிய வச்சிட முடியாதுன்னு புரிஞ்சிக்கோ. உன் குடும்பமே அதுதான்னு ஆனதுக்கப்புறம் அதை நீ அவுங்க வழியிலேயே போய் தீர்க்குறதுதான் முறை.

இல்லை, உன்னாலே இது முடியாது, இது ஒரு முட்டாள்தனம், இது உனக்கு வேணாம்னு உ தோணிச்சின்னா, ரமேஷ்கிட்ட நீ பேசு. இன்னமும் கல்யாணம் ஆகலை. கல்யாணம்ங்குறது கடைசிக் காலம் வரை வர வேண்டிய உறவு. அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய உறவு. அதைத் தொடக்கத்திலேயே கவனமா தொடங்கிடு. இது சரிவராதுன்னு உனக்கு ஆணித்தரமா தோணிச்சின்னா, ரமேஷ்கிட்ட பேசி, அவர் சம்மதத்தோட நண்பர்களா பிரிஞ்சிடுங்க. தவறான துணைகள் பிரிஞ்சிடறதுதான் நல்லது. அவர் துணையை அவரும் அவர் குடும்பமும் தேடிக்கட்டும். உன் துணையை நீ தேடிக்கோ. உனக்கேத்த உன் வகையான ஆண்பிள்ளையை இனிமேலாவது ஒழுங்கா தேர்ந்தெடுக்கிற வழியைப் பாரு. முதல்ல, நீ என்னங்குறதை தெரிஞ்சிக்க. புரிஞ்சிக்க. அப்புறம் உனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சிக்க. அப்புறம் உனக்கு வேண்டியது இருக்குற மனுஷன் யாருன்னு தேடு. கண்டுபிடி. அவனோட பேசு. நட்பாய் பழகு. புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. அப்புறம் கல்யாணம் பண்ணு. ஒருத்தரும் கிடைக்கலையா? அப்பா அம்மா தேடிக் கொடுக்குற வாழ்க்கையை விரும்பி ஏத்துக்கோ. மனசார அனுபவிச்சி வாழ்ந்து காமி. வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். நிம்மதியான வாழ்க்கை வாழு" என்றுவிட்டு நிறுத்தினாள் காஞ்சனா.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5778)

Monday, 9 July 2012

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்


நமக்கு
என்ன வேண்டுமென்பதில்
எப்போதுமே
நமக்கு
குழப்பங்கள் இருக்கிறது...


நமக்கு
வேண்டாதவைகளிலிருந்து
வேண்டியவைகளை
துல்லியமாக இனம் காண‌
நம்மால்
எப்போதுமே முடிவதில்லை...


ஆனாலும்,
நாம் எல்லோரும்
எப்போதும்
எதையேனும்
வேண்டியபடியேதான் இருக்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

ஓர் மெல்லிய இடைவெளி

ஓர் மெல்லிய இடைவெளி


கைக்கெட்டும் தொலைவிலேயே
இருந்தாலும்
நம்மில் பலர்
வெகு தொலைவில்
நின்று கொள்கிறார்கள்...


நம் பாதைகளுக்கு
அவர்கள் எட்டாது
நிற்கிறார்கள்...


அவர்களை அண்டுவதான முயற்சிகள்
நமது பயணங்களைத்
தாமதமாக்க கூடுவதாக,
ரத்து செய்யவும் கூடுவதாக‌
இருக்கிறது...


இங்கு வலுக்கிறது
தவிர்க்க இயலாமல்
ஓர் மெல்லிய இடைவெளி...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

Monday, 2 July 2012

அதுவாகவே ஆகி விடுதல்

அதுவாகவே ஆகி விடுதல்


நாம்
அடைய விரும்பும் எல்லையின்
வெவ்வேறு பரிமாண‌ங்களை
அவதானித்துக் கொண்டே
இருக்கிறோம்...


அப்பரிமாணங்களுக்கு
நம்மை நாமே
தொடர்ந்து
பழக்கப்படுத்திக் கொள்கிறோம்...


நாம்
எதைத் தொடர்ந்து
பழக்கப்படுத்துகிறோமோ
பிற்பாடு
அதுவாகவே ஆகி விடுகிறோம்...

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5725)