என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை

ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை

4.3.2012 தேதியிட்ட ராணி குடும்ப (வெகுஜன) வாரந்திரியில் நான் எழுதிய சிறுகதை 'அம்மி அம்மா' என்ற தலைப்பில் பக்கம் 40 ‍- 41 ல் வெளியாகியிருக்கிறது. சிறுகதை வெளியான ராணி வார இதழின் 40 - 41 பக்கங்களின் பிரதிகள் இங்கே.



அம்மி அம்மா - சிறுகதை




'என்ன காரணம்னாச்சும் சொல்லுங்கப்பா?' அழுகையும், ஆத்திரமும் உள்ளுக்குள் மண்டிக்கிடக்க வெடித்தாள் ராகினி.

'காரணம்லாம் சொல்லிகிட்ருக்க முடியாது ராகினி. படிச்சிட்டோம்னு கொழுப்பா உனக்கு? இல்ல நாலு காசு சம்பாதிக்கிறோம்னு திமிரா? உன்ன வேலைபாக்க விட்டது தப்பாபோச்சி. படிச்சகையோட எவன்கிட்டயாச்சும் புடிச்சு குடுத்திருக்கனும்' கோபத்தில் பதிலுக்கு உருமினார் மனோகரன்.

'அப்பா, இப்ப என்னப்பா நான் தப்பா கேட்டுட்டேன். ஒருத்தர லவ்பண்றேன்னு சொன்னேன். கட்டிவையுங்கன்னு கேக்குறேன். அதுக்கு ஏன்பா திமிரு, அது இதுன்னு பேசறீங்க?' உடைந்து போயிருந்த அவளின் குரல் இயலாமையின் விரக்தி சூழ மேலும் தழுதழுத்தது.

'ஆமா, இது திமிரு இல்லாம என்னவாம்? நம்ம சாதிப் பையனா இருந்தாலும் பரவால்ல. எவனோ புள்ளைமாராம். காதலிக்கிறேன்னு நீ சொன்னா உடனே நான் கட்டிவைக்கணுமா? காதல் பண்ணத்தான் உன்ன வேலைக்கு அனுப்பினேனா? அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் குடுத்தா தலைக்குமேல போறியே நீ. இன்னும் ஒரு வார்த்தை பேசாத ராகினி. வயசானவன் நான். அம்மா மட்டும்தான் உனக்கு இப்ப இல்ல. அப்பாவும் இல்லாம அனாதையாயிடாத, போ உள்ள'. கோபத்தின் உச்சத்தில் எழுந்து நின்று கத்தினார் மனோகரன். அவரின் குரல் அந்த வீட்டின் நாற்புறமும் எதிரொலித்தது. அவர் முகம் உஷ்ணம் கூட்டி வியர்த்திருந்தது. அறுபது வருடங்கள் அவருடனே பயணித்த விரல்கள் அவரையும் மீறி நடுங்கின.

அவர் இத்தனை ஆத்திரமாய் அவளிடம் குரல் உயர்த்தி அதுவரை கத்தியிருக்கவில்லை. அவரின் அத்தனை பெரிய கோபத்தின் முதல் ஸ்பரிசம் அவளுக்கு அதிர்ச்சியளித்திருக்கவேண்டும். அதற்கு மேல் ஏதும் பேச இயலாதவளாய், பொங்கி வந்த அழுகையை அடக்க முயன்றவளாய் உள்ளங்கையில் அழுத்திய துப்பட்டாவினால் வாயை மூடியபடி உள்ளே பக்கவாட்டிலிருந்த த‌ன் அறைக்குள் அடைந்தாள் ராகினி. அவளின் விசும்பல் சப்தங்கள் வெகு நேரம் அவரின் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது.

மனோகரன், மணி பார்த்தார், மணி இரவு 12 தாண்டியிருந்தது. எப்போது இத்தனை நேரங்கடந்தது என்பதாய்த் தோன்றியது அவருக்கு. ராகினியுடனான 25 வருட அப்பா மகள் உறவில் இத்தனை கடுமையாய், ஆக்ரோஷமாய், துவேஷமாய் நடந்துகொண்டதில்லை. முதல்தடவை அப்படி நடந்திருப்பதுதான் தன்னையுமறியாமல் நேரங்கடந்துபோகக் காரணமென்று நினைத்துக்கொண்டார். இரண்டடி எட்டிவைத்து சோர்வாய் விளக்கை அணைத்துவிட்டு தளர்வாய் அந்த சோபாவில் விழுந்தார் மனோகரன்.அந்த அடர்ந்த இரவில் தூரத்தில் எங்கோ குலைக்கும் நாயின் கதரலோடு, கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.



மனோகரன் இடது மணிக்கட்டை, ஜன்னலோர நிலாவொளி நோக்கித் திருப்பி மணி பார்த்தார். மணி நடுநிசி ஒன்று காட்டியது. ராகினி விசும்பும் சத்தம் இப்போது கேட்கவில்லை என்பது சற்று நிம்மதியளித்தது. அழுது அழுது தூங்கியிருக்கலாமென்று நினைத்துக்கொண்டார். இப்போது அந்த‌ க‌ர‌க் க‌ர‌க் ச‌ப்த‌ம் முன்னைவிட‌வும் அதிக‌ம் கேட்ப‌து போலிருந்த‌து.அதே கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார் ம‌னோக‌ர‌ன். இருள் கிடைத்த‌வ‌ற்றையெல்லாம் க‌வ்விக்கொண்டிருந்த‌து. ம‌னோக‌ர‌ன் மெல்ல‌ எழுந்து ப‌க்க‌வாட்டிலிருந்த‌ ஜ‌ன்ன‌ல‌ருகே சென்று பார்த்தார். அந்த‌ ச‌ப்த‌ம் இன்னும் தெளிவாய்க் கேட்ட‌து. சுற்றிலும் எந்த‌ வீட்டிலும் விள‌க்கெரிய‌வில்லை. நிச‌ப்த‌ம் எங்கும் சூழ்ந்திருக்க‌ அந்த‌ ச‌ப்த‌ம் அவ‌ர் வீட்டின் கொள்ளைப்புர‌த்திலிருந்து வ‌ருவ‌து போலிருந்த‌து.

ம‌னோக‌ர‌னின் வீடு அவ‌ரின் த‌ந்தை க‌ட்டிய‌து. த‌னி வீடு. த‌ரைத‌ள‌ம் ம‌ட்டுமே. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. பின்னால் கொல்லை. முதலில் வரும் ஹாலைத்தொடர்ந்து, பக்கவாட்டில் இரண்டு அறைகள், ஹாலை அடுத்து சமையலறை. ஹால், அறைகள், சமையற்கட்டு, கொல்லை என எல்லாமும் மரக்கதவால் தடுக்கப்பட்டு, திரைச்சீலையிட்டு கதவுகள் மறைக்கப்பட்டிருக்கும். வீட்டில் ஹாலில் இருந்ததெல்லாம் மரத்தாலான மேஜை, டிவி ஸ்டாண்டு, குஷன் சோபா, பவர் ஹவுஸ் என எதுவுமே இரும்பால் ஆனது அல்ல. உள்ளறையில் பீரோ, கட்டில், டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர் டேபிள் என எல்லாமும் மரத்தாலானதுதான். கொல்லை பெரிதென்று கிடையாது. நான்கைந்து பூச்செடிக‌ளும், ஒரேயொரு கொய்யா ம‌ர‌மும், ஒரு துள‌சி மாட‌மும் இருக்கும். கொல்லையை ஒட்டி சமையல் அறை. ம‌னோக‌ர‌னின் ம‌னைவி வ‌ள்ளி உயிருட‌ன் இருந்த‌ கால‌ம் வ‌ரை முழுப்ப‌ராம‌ரிப்பும் அவ‌ளுடைய‌து. பண்பானவள். அதிகாலை ஐந்து மணிக்கே குளித்துவிடுவாள். புடவை சுற்றி முந்தினம் தோட்டத்தில் பூத்த பூக்களைச் சேகரித்துக் கட்டிய‌ பூச்சரத்தை கூந்தலிலிட்டு பயபக்தியுடன் துளசி மாடம் சுற்றி, சுலோகம் சொல்லி, அப்பபா ஒரு பண்பான குடும்பத்துப் பெண்ணாக அந்தக் கொல்லை அவளின் இறைத்தழுவலில் திளைத்துக்கிடக்கும். அவ‌ள் இற‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆகிவிட்டிருந்த‌து. சமையற்கட்டின் கொல்லைப்புற ஓரத்தில் உட்கார்ந்தவாக்கில் அப்படியே இறந்திருந்தாள். அதிகாலை ஆறு மணிக்கு மனோகரன் விழித்தெழுந்தபோது அவள் அப்படித்தான் கிடந்தாள்.என்ன‌ கார‌ண‌மென்று தெரிய‌வில்லை. உட‌ல் சில்லிட்டிருந்த‌து.அவ‌ள் இற‌ந்துவிட்டிருந்தாள். 25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவள் எந்த ஒரு சமயத்திலும் அதண்டு இருந்ததேயில்லை. எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை. சண்டைபோட்டுக் கோபித்துக்கொண்டதில்லை. பொய்க்கோபங்கள் இல்லை. மனோகரன் அலுவலகம் விட்டு வீடு வர மாலை நேரக்காத்திருப்புக்கள் கூட இருந்ததில்லை. எப்போதும் கோயில், பூஜை, புனஸ்காரம், விரதம், நெய் விளக்கேற்றுதல், கோயில் திருக்கல்யாணம், பிரதோஷம் என ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருப்பாள். தானுண்டு தன் வேலையுண்டு என் இருப்பாள். தன் வழியில் செல்லும் நத்தை போல அவள். எதற்கும் ஒரு புன்னகை மட்டுமே. அதிகம் போனால் அதுவே சிரிப்பாக மலரும். அவ்வளவே. ஆனால், திருமண வாழ்வின் முக்காலே மூணுவீச காலம் அடுப்பங்கறையிலேயே கழித்தவள். மீதம் பூஜையறையில்.





மனோகரன் சற்று சுதாரிப்பானார். திருட்டு மிகுத்த சென்னைப் பட்டினம் அவரை எச்சரிக்கையுணர்வு கொள்ள வைத்தது. சப்தம் கொல்லையிலிருந்து தான் வந்தது. ஒருவேளை ஏதேனும் திருட்டாக இருக்குமோ. ராகினியின் நகைகளாக ஒரு ஐம்பது சவரம் வீட்டில் இருந்தது வயிற்றைப் பிசைந்தது. மெல்ல நகர்ந்து அவர் சமையலறை திரைச்சீலையை விலக்கி பார்க்கக் கதவு திறந்திருந்தது. அவர் மேலும் எட்டிப் பார்க்க‌ அங்கே நிழலாடுவது தெரிந்தது. மனோகரன் கண்களைச் சுருக்கிப் பார்க்க, கால்களை மடித்து பக்கவாட்டில் சாய்த்தவாறே அடுப்பங்கறை சுவற்றில் சாய்ந்தபடி ராகினி கொல்லைப்புறத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். கொல்லைக் கதவு லேசாக திறந்திருக்க, வெளியே மங்கிய நிலவொளியில் அம்மிக்கல் காய்ந்துகிடந்தது. அந்த கரக் கரக் சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.


மெல்ல மனோகரன் சமையற்கட்டினுள் நுழைந்து ராகினியின் அருகில் சென்றார். அத்தனை பக்கத்தில் நின்றும் மனோகரனில் இருப்பை உணராதவளாய் ராகினி கொல்லையையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

'ம்மா!'.

'......'.

'ம்மா!'.

'ம்ம்.. என்னப்பா?'.

'என்னடா பண்ற இங்க?'.

'ஆங்.. ப்பா.. அந்த சத்தம்!..அது..'.

'ம்ம்.. தெரியலமா.. அக்கம்பக்கத்து வீடுங்களா இருக்கும்மா.. நீ போயி படுத்துக்கோம்மா'.

'உங்களுக்கு அது கேக்குதாப்பா?'

'கேக்குதும்மா... யாராவது தூக்கம் வராம மராமத்துவேலை பண்றாங்களா இருக்கும்மா.. காலைல பாத்துக்கலாம் யாருன்னு. நீ போயி படும்மா'.

'இல்லப்பா... அம்மா!'.

'என்னம்மா?'

'அம்மா பா.. அம்மா.. உங்ககிட்ட ஏதோ சொல்ல வராங்கபா' என்றபடி ராகினி கொல்லையை ஒட்டி இருந்த அந்த அம்மிக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு தூக்கிவாறிப்போட்டது போலிருந்தது.

மனோகரன் அப்போதுதான் கவனித்தார். அந்த சப்தம், அம்மியை கல்லில் எதையோ இட்டு அரைப்பதான ஒலியை ஒத்து இருந்தது. வள்ளி எப்போதும் இங்குதானிருப்பாள். வீட்டில் மிக்ஸி இருந்தாலும் அவள் இங்குதான் தேங்காய் சட்னி, கார சட்னியெல்லாம் அரைப்பாள். சில நேரங்களில் அரைக்க ஏதுமில்லையென்றாலும் எதையாவது வைத்து அரைத்துக்கொண்டிருப்பாள். கேட்டால் ரெஸிப்பி அது இது என்பாள். அவருக்கு சட்டென ஏதோ அமானுஷ்யமாய் இருப்பது போலப்பட்டது. அவருக்கு நினைவு தெரிந்து, ஒரு வாரம் முன்பு கூட அப்படி அவர் அங்கே அந்த அர்த்த ராத்திரியில் தண்ணீர் குடிக்க வந்தார். ஆனால் அப்போது அப்படி ஏதும் கேட்கவில்லை. இப்போது கொல்லைக் கதவு திறந்திருக்கிறது. அம்மிக்கல் அப்படியே இருக்கிறது. ஆனால், அதில் எதையோ அரைப்பதான ஒலி மட்டும் நிற்கவேயில்லை. அது எப்படி.
கிட்ட நெருங்கி எட்டி கொல்லையில் சுற்றுமுற்றும் பார்த்தார். சத்தியமாக யாருமில்லை. அரவமுமில்லை. ஆனால் சப்தம் மட்டும் நிற்கவில்லை.

'அம்மாவா?' மனோகரன் தன்னிச்சையாய் குழப்பத்துடன் இழுக்க,

'ஆமாப்பா, அம்மாதான்பா அது. பாவம்பா அம்மா.'

'என்னடா சொல்ற? எப்படிடா?'.

'நீங்கதான்பா, நீங்களும்தான்பா'.

'நானா? நான் என்னடா செஞ்சேன்?'

'அம்மா காதலிச்சாங்களே பா. உங்க கல்யாணத்துக்கு முன்னால. அவரு நாயக்கருன்னு அம்மாவோட அப்பா அவருக்குக் கட்டிக்குடுக்காம உங்களுக்கு குடுத்தாரு. கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட அவரபத்தி அம்மா சொன்னாங்களாமேபா. நீங்களும் நம்ம ஜாதிப்பொண்ணு இன்னொரு ஜாதிக்குப் போய்டக்கூடாதுன்னு அம்மாவ வலுக்கட்டாயமா கட்டிக்கிட்டீங்களாமேபா. அம்மா அப்போவே மனசளவுல செத்துட்டாங்கப்பா. எனக்கு மஞ்சள் நீராட்டுவிழா அன்னிக்கு யாரோ திருட்டுத்தனமா பந்திக்கு வந்துட்டதா சொல்லி ஒருத்தர அடிச்சீங்களேபா. அவருதான்ப்பா அம்மாவ காதலிச்சவர். அம்மா கிடைக்காததுனால, யாரையுமே அவரு கல்யாணம் முடிக்கலபா. அவர் வீடு இந்தக் கொல்லைலேர்ந்து பாத்தா தெரியும்பா. அம்மாவ மறக்க முடியாம, அம்மாவொட நினைவுலயே இருந்தாராம்பா. உடம்பாலயும், மனசாலயும் அம்மா உங்களோட வாழ்ந்தாலும், தன்னால அவரோட வாழ்க்கை நாசமாயிட்டதா அம்மா அவர் மேல ரொம்ப பரிதாபப்பட்டாப்பா. அந்த பரிதாபத்துக்கு வடிகால் கிடைக்கவேயில்ல அவங்களுக்கு. பாத்துக்க சொந்தங்கள் ஏதும் இல்லாம, அம்மாவ மறக்க குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி போன வருஷந்தான்ப்பா அவரு செத்தாரு. அந்த துக்கமோ என்னமோ அம்மாவும் செத்துட்டாங்கபா'. சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் இப்போதும் அந்த அம்மியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த சப்தம் இப்போதும் தெளிவாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

'இதெல்லாம் உனக்கெப்படிம்மா தெரியும்?'.

'அம்மாதான்ப்பா. தோளுக்கு மேல வளந்துட்டா தோழன்னு சொல்வாங்க. ஆனா, அம்மாவுக்கு பொண்ணு தோளுக்கு மேல வளரணும்னு கூட இல்லப்பா. அம்மா ஒரு தோழியா என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்காங்க. அம்மா செத்துப்போனதுக்கப்புறம் கூட இந்த ஒரு வருஷமா அவுங்ககிட்ட என் காதலைப் பத்தி பேசிட்டுதான்ப்பா இருக்கேன். இப்படித்தான் அவுங்க கேட்டுக்கிட்டிருக்காங்க'.

மனோகரன் காதுக்கு அந்த சப்தம் இன்னும் துல்லியமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

ராகினி சொன்ன ஒவ்வொரு விஷயமும் மனோகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணத்துக்குமுன் வள்ளி தன் காதலைப் பற்றி சொன்னாள்தான். ஆனால், அப்போதிருந்த ஜாதிபுத்தி அவள் சொன்னதை உதாசீனப்படுத்தமட்டுமே தூண்டியது. அவள் காதலித்தவன் யாரென்று கூடப் பார்க்காமல் வள்ளியின் அப்பா கேட்டுக்கொண்டதன் பேரில் வள்ளியை உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார் மனோகரன். அதன்பின் வந்த நாட்களில் வள்ளி ஒரு பெண் குழந்தைக்கு தாயானதும், சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதாய்தான் தோன்றியது. வள்ளியிடம் ஏதொரு பெரிய மாற்றமும் இருக்கவில்லை. ஆதலால், அந்தப்பிரச்சனையை அதோடு முடிந்துவிட்டதென்று மறந்தும் போனார்.

ராகினியின் பூப்பு நீராட்டுவிழா இன்றும் நினைவிருக்கிறது. ஊரிலேயே பெரிய மஹால் புக் செய்து, ஐந்நூறு பேருக்கு சமைத்துபோட்டு, பந்தி பந்தியாய் இனிப்பு பரிமாறி, கட்டவுட் வைத்து, போஸ்டர் ஒட்டி கொண்டாடிய விழாவில், வண்ண ஓவியத்தில் ஒரு கரும்புள்ளியாய்த் தான் நினைத்திருந்தார் திருட்டுத்தனமாய் வேற்று ஜாதிப்பயல் பந்தி நடக்கும் இடத்தருகே பிடிபட்டதில். ஆனால், அவந்தான் வள்ளியின் முன்னால் காதலனென்று அப்போது அவருக்கு தெரியாது. இப்போது புரிகிறது. தான் தகப்பனாக இல்லாவிட்டாலும், தான் மனமார காதலித்தவளின் பெண்ணைத் தன் பெண்ணாய் பாவித்து வந்திருந்தவனை அடித்து விரட்டி அவமானப்படுத்தியபோது வள்ளியின் இதயம் எத்தனை வலித்திருக்கும். இப்போது புரிந்தது, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வள்ளி ஏன் எப்போதும் இந்த அம்மிக்கல் கொல்லையிலேயே தவம் கிடந்தாளென்று.

மனோகரனுக்கு வெகு தாமதாய், வள்ளியின் பல செய்கைகளுக்கு இப்போதுதான் காரணம் புரிந்தது. திருமணத்தில் இன்னொரு பெண்ணை தன்னிடத்தில் நிறுத்த முடியாமல் தனக்காகவே மணமுடிக்காமல் திரிந்தவன் வாழ்க்கை வீணாய்போவதை எண்ணியெண்ணி அவள் மனம் வெதும்பித்தான் தன்னுடனான திருமண வாழ்வில் மனம் ஒன்ற முடியாமல் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறாள். நாளோ, கிழமையோ எதுவானாலும் அவளுக்கு எல்லாமும் ஒன்றாய்த்தான் இருந்ததன் காரணம் பொய்யாகிப்போன அவளின் காதல். உள்ளத்தால் பிணமாகிவிட்டவளால் தான் அப்படி இருந்திருக்கமுடியும். அவள் இயல்பாய்த்தான் இருக்கிறாள் என்ற தன் அனுமானம்தான் தவறாகியிருக்கிறதென்று தோன்றியது அவருக்கு.

அவளுக்கு அவன் மேல் பரிதாபம் இருந்திருக்கிறது. தனக்குக் குடும்பம் அமைந்ததுபோல் அவனுக்கும் அமையாமல், தனிமரமாகிவிட்டானென்பதில் தோன்றியதில் பச்சாதாபம் இருந்திருக்கிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன். சிந்திக்கும் திறனுள்ளவன். பகுத்தறியமுடியும் அவனால். ஆனாலும், மனிதனை சமூகம் என்னும் கட்டுக்குள் கொண்டுவருவது மனிதனுக்கு மனிதன் உணர்ச்சிகளுக்குண்டான மதிப்பளிப்பதில்தான். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமன், மச்சான் என எல்லா உறவுகளும் உணர்ச்சிகளை முறையாக்குவதில்தான் தொடங்கியிருக்கிறது. அக்கா விரும்பியவனுக்கு கட்டிக்கொடுத்தால் அவன் மாமாவாகிறான். மாமனின் பெண் முறைப்பெண் ஆகிறாள். இப்படித்தான் உறவுகள் உருவாகின்றன. அதுதான் சமூகத்தை உருவாக்குகின்றன. அது இல்லையெனில் நாய்களைப் போல் என்றோ அடித்துக்கொண்டு அழிந்துபோயிருக்கும் மனித இனம். ஆனால், ஜாதி என்கிற பெயரில் மனிதனுக்கு மனிதன் தோள் கொடுத்துக்கொள்ளவேண்டிய உணர்ச்சிகளை காலில் போட்டு மிதித்திருக்கிறோமென்று புரிந்தது. முறைப்படுத்தப்பட வேண்டிய உணர்ச்சிகள் சாகடிக்கப்பட்டால் மனிதனே உயிருடன் இருந்தாலும் பிணமாகிவிடுகிறான். வாழ்க்கை அர்த்தப்படுவதில்லை. முடமாகிவிடுகிறது. அப்படிப்பார்த்தால் ஜாதி எதன் அடையாளம்? உணர்ச்சிக்கொலையின் அடையாளம். பிணமாக்குதலுக்கு மறுபெயர். பிணந்தின்னிகளின் பசி.

'நீ சொல்றதெல்லாம் உண்மையாம்மா?'.

'ஆமாப்பா'.

'உனக்கெப்படிம்மா தெரியும் இதெல்லாம்?'.

'அம்மா என்கிட்ட சொல்லியிருக்காப்பா. உண்மையான காதலுக்கு மட்டும்தான்ப்பா அந்த சக்தி இருக்கு. இல்லன்னா அம்மாவுக்கு சாகுற வயசாப்பா. அம்மாவோடது உண்மையான காதல்ப்பா. அவுங்க காதல் ஜெயிச்சிருக்குப்பா. அதனாலதான் அம்மாவும் காரணமேயில்லாம‌ செத்திருக்கா. அந்தப் பரிதாபம், பரிவு இதெல்லாம் அந்த உண்மையான‌ காதலோடதுப்பா. அதுக்காகத்தான் அம்மா உயிர் போயிருக்கு. என் காதலும் உண்மைதானப்பா. அதுவும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா ஜெயிக்கும்ப்பா' சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் பார்வை இப்போதும் அந்த அம்மிக்கல்லின் மீதே நிலைகுத்தியிருந்தது.

'வேணாம்மா. இந்த முறை உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா' மனோகரன் மகளின் தலையை கோதிவிட்டவாறே, கொல்லையில் அதே அம்மிக்கல்லை பார்த்துக்கொண்டிருக்க, ராகினி சட்டென மனோகர‌ன் பக்கம் திரும்பினாள்.

'என்னப்பா சொன்னீங்க?'.

'உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா. நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கோம்மா' என்ற மனோகரனின் கண்கள் கலங்கியிருந்தன. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த சப்தம் சட்டென நின்றுபோனது.


முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

நன்றி
ராணி (4.3.2012) குடும்ப வார இதழ்.




என் சிறுகதையை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கும், இதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.