என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 18 May 2015

கல்கி இதழில் எனது 'பயணம்' கவிதை


24.05.2015 தேதியிட்ட இந்த வார கல்கி இதழில் எனது 'பயணம்' கவிதை வெளியாகியிருக்கிறது.




எனது கவிதையை தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday 6 May 2015

குங்குமம் "கவிதைக்காரர்கள் வீதி"


குங்குமம்  "கவிதைக்காரர்கள் வீதி"


11.05.2015 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழ் "கவிதைக்காரர்கள் வீதி"யை என் கவிதைகளுக்கு அளித்திருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்...





குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

Sunday 3 May 2015

கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத்

கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத் 


download
  
அவனை எல்லாரும் அப்படித்தான் அழைப்பார்கள்.
அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கலாம். சைதாப்பேட்டையில் , பிள்ளையார் கோயில் தெருவில் வாடகைக்கு குடியிருந்தோம். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.
வீட்டு உரிமையாளர் பேரன் பேத்தி பார்த்தவர். மாடியில் இருந்துகொண்டு, கீழ் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். எங்கள் வீட்டையும் சேர்த்து அங்கே ஆறு போர்ஷன்கள் அவருடையதாய் இருந்தது. அவர் வேலைக்கென்று போய் நான் பார்த்தது இல்லை. அவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி, மூத்தவனுக்கு ஒரு ஆண் பிள்ளையும், இளையவனுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருந்தது. அவருக்கு ஒரு தம்பி உண்டு. அரசியலில் இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அப்போதைய திமுக பிரமுகர் ஒருவருடன் இணைந்து கொண்டு ஆங்காங்கே தென்படுவார். தேர்தல் நேரத்தில் அந்த பிரமுகர் வீடுவீடாக ஓட்டு சேகரிக்க வருகையில், அவரும் அவர் மனைவியும் வாசல் வரை வந்து ஆரத்தி எடுப்பார்கள். மற்றபடி அவர் உண்மையில் அரசியலில் என்னவாக இருந்தார் என்பது நான் உள்பட யாருக்கும் விளங்கியதில்லை. எங்கள் ஆறு போர்ஷனுக்கு பின்புறம் எட்டு போர்ஷன்கள் அவருக்கு சொந்தமாய் இருந்தன. அவைகளை அவரும் வாடகைக்கு விட்டிருந்தார்.
நாங்கள் அங்கே குடியேறியபோது, எங்கள் யாருக்கும் கிஷ்ணா, யார் என்பது தெரியாது. இன்னும் சொல்லப்போனால், குடிவந்த சில வருஷங்களில் கூட எங்களுக்கு தெரியவரவில்லை. அவனை நாங்கள் எல்லோருமே , ஒருமித்த கருத்துடன், பைத்தியம் என்று தான் நினைத்திருந்தோம்
அந்தளவிற்கு கிஷ்ணாவின் தோற்றமே பயமுறுத்தும்.
ஐந்தடியில் ஒல்லியான தேகம். உடலெல்லாம் முடி. சவரம் செய்து நாளான முகம். செம்பட்டையும் வெள்ளையுமாய் தலை முடி. எப்போதுமே மயங்கிச் செருகும் கண்கள். கிழிந்த நைந்த அழுக்கேறிய சட்டை. கிழிந்த இடத்திலெல்லாம் கையாலேயே அனுபவமின்றி, முறையான தையல் அறிவு இன்றி ஒட்டுப்போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், அந்த வேலையைச் அவனே தான் செய்திருக்கிறான் என்பதை என்னைப்போலவே , பார்க்க நேர்ந்த அனைவரும் நினைத்தனர் என்று எனக்கு தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு விதமான சாராய நெடி. நடக்கையிலேயே தள்ளாட்டம் கண்கூடாகத் தெரியும். பல சமயங்களில் கட்டியிருக்கும் அழுக்கடைந்த வெள்ளை வேட்டி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்கிற தோரணையில், தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டே நடக்கும் பிள்ளை போல, அவனது இடுப்பை பலகீனமாக கவ்வி தவழும். அவ்வப்போது தனக்குத் தானே பேசிக்கொள்வான். எப்போதுமே குடித்திருப்பதால், ஒரு விதமாக குழறி குழறியே அவன் பேச்சு இருக்கும். அந்த மொழி யாருக்குமே புரியாது.
தெருமுனையில் உள்ள போர் பைப் அருகில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். ஏதாவது ஒரு தெரு நாய் அவன் கால்களின் மீது தலை வைத்து படுத்துக்கிடக்கும். பிற்பாடு அவனாகவே எழுந்து, தள்ளாடியபடியே நடந்து எங்கள் வீட்டு மாடி வராந்தையில் வந்து அமர்ந்துகொள்வான். அவனுடன் தெரு நாய்களும் வராந்தை வரை வரும். தெரு நாய்கள் அவனை தொடர்ந்து வருவதாலேயே, குடித்தனக்காரர்கள் அவனை ஏசுவார்கள். நாய்களை விரட்டுவார்கள். பகல் நேரங்களில் தான் இப்படி. இரவுகளில் மாடியில் நாய்கள் அவ்வப்போது ஊளையிடும் சத்தம் கேட்கும்.
கிஷ்ணாவுடன் இருக்கும் நாய்கள் என்று நாங்கள் நினைத்துக்கொள்வோம். நாய்கள் இருப்பதால், திருடர்கள் பயம் இருக்காது என்பதால், அதை யாரும் பெரிதாக ஏதும் சொல்வதில்லை. அவைகளுக்கு அவன் உணவோ, வேறு ஏதேனும் பராமரிப்போ செய்யாதபோதிலும் அந்த நாய்கள் அவனையே எப்படி ஒட்டிக் கிடக்கின்றன என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது பேசுகையில் வியந்திருக்கிறோம்..இன்னும் சொல்லப்போனால், பல வீடுகளில் இந்த தெரு நாய்களின் பாதுகாப்பிற்கெனவே, கிருஷ்ணாவை அவர்கள் வீட்டில் தங்க வைக்க கூட உத்தேசித்தார்கள். மழை பெய்யும் இரவுகளில் மாடிக்கு செல்ல நேர்ந்த இரண்டொரு தினங்களில் அவன் வராந்தையிலேயே குளிரில் நனைந்தபடி அரை மயக்கமாக கிடப்பதை கவனித்திருக்கிறேன். அவன் எங்கே குளிக்கிறான், காலைக் கடன்களை எவ்வாறு கழிக்கிறான் என்பது பற்றியெல்லாம், தெரு பையன்களுக்குள் பேசுகையில், கேள்விகளாக எல்லோருமே கேட்டிருக்கிறோமே ஒழிய எவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.
நானெல்லாம் தி. நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கு போக காலை ஏழறைக்கெல்லாம் சாப்பாடு கட்டிக்கொண்டு வாசலுக்கு வருகையிலேயே தள்ளாடியபடியே கடந்து போவான் கிஷ்ணா. ‘காலையிலேயே மப்பா’ என்று அக்கம்பக்கத்தில் சலிப்பார்கள். அப்படியான தருணங்களில், அப்பா, வாசல் வரை வந்துவிட்ட என்னை மீண்டும் உள்ளே போகச் சொல்லி, ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கொடுத்து பருகச் சொல்லிவிட்டு மீண்டும் போகச் சொல்லுவார். இது போல் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. முதலில் அப்படி நடக்கும்போதெல்லாம் , ஜாடை மாடையாக அவன் காது பட சொல்லி, அதற்கு பெரிதாக அவனிடமிருந்து பலன் ஏதும் இல்லாமல் போகவே, முகத்துக்கு நேராக திட்டியும் இருக்கிறார்கள் என் அப்பா உள்பட அக்கம்பக்கத்தில்.
‘கண்ணுக்கு லட்சணமா, ஒரு ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா, இங்க இத்தனை குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்குற இடத்துல, அபசகுனம் மாதிரி தினம் தினம் இவனால எவ்ளோ தடங்கள்?’ என்று சொல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். இன்னும் பல குடும்பங்கள் என்னென்னவெல்லாமோ சொல்லி திட்டினாலும், எல்லோருமே பொதுவில் ‘ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா’ என்கிற வார்த்தைகளை பயன்படுத்தியதை நான் கவனத்தில் கொண்டிருந்தேன். அந்த நேரத்திலெல்லாம் அவன் முகம் அரை மயக்கத்திலேயே இருக்க, நாளடைவில், அப்படியெல்லாம் சொல்வதையும் விட்டுவிட்டார்கள்.
இத்தனை இருந்தும் பெரிதாக அவன் மீது எந்த குறையும், எவரும் சொல்லவில்லை. தெருவில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம் சில பையன்கள் வம்பிழுத்ததாக பேச்சு வந்து, இரண்டு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போட்டுக்கொண்ட போது, கிஷ்ணா மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு அதுவரை வந்ததில்லை என்பது குறித்து எல்லாருமே வியப்புடன் தான் பேசிக்கொண்டார்கள். அக்கம்பக்கத்தில் பைப் அடைத்துக்கொண்டால், அவனைத்தான் கூப்பிடுவார்கள். அவன் ஒன்றும் கை தேர்ந்த ப்ளம்பர் இல்லை. ஆனால், இப்படி கூப்பிடும் வீட்டுக்கெல்லாம் போய் சொன்ன வேலையைச் செய்து, கொஞ்சம் வேலை தெரிந்திருந்தபடியாலும், இவனை விட்டால் சாக்கடையில் கைவிட, வேறு ஆள் இல்லை என்பதாலும் எல்லோரும் இவனையே கூப்பிடுவார்கள். வேலை முடிந்ததும் கொஞ்சம் பணம் தருவார்கள். அந்த பணத்தில் தான் அன்றிரவு அவனுக்கு சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கரன்ட் போய்விட்டாலோ, காத்தாடி எவர் வீட்டுக் கொடியிலாவது சிக்கிக் கொண்டாலொ, எவர் வீட்டுக்கேனும் மாவரைக்கவேண்டுமென்றாலோ, எவர் விட்டிலேனும் ஸ்விட்ச் பாக்ஸ் வேலை செய்யவில்லை என்றாலோ, வீடு காலி செய்யவேண்டுமென்றாலொ, எல்லோரும் கூப்பிடுவது கிஷ்ணாவைத்தான். எந்த வேலையையும் தனக்கு தெரியாது என்று அவன் சொன்னதே இல்லை. வேலைக்கேற்ப பணம். பணத்திற்கேற்ப சாராயம். இதுதான் கிஷ்ணா.
ஒரு முறை, நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி மொட்டை மாடியில் காத்தாடி விடக் கிளம்பினோம். தெருவின் மாஞ்சா வல்லுனன் கோபாலு வஜ்ரம், ஆல மர வேர், கலர் பவுடர், முட்டை . சோடா மாவு, பாட்டில் துண்டுகள், நாயின் கக்கா முதலானவற்றை சேர்த்து காய்ச்சி மாஞ்சா தயார் செய்தான். லோட்டாய் சுற்றி, சூஸ்திரம் போட்டு, வால் கட்டி காத்தாடியை பறக்க விட்டோம். உயர உயர பறந்த காத்தாடி நடுவானில் எங்களுடனான தொடர்பை இழந்து, தன் போக்கில் பறக்க, கிஷ்ணா நான்கு வீட்டின் மொட்டை மாடிகளை தாண்டி, ஓடிச்சென்று காத்தாடியின் அறுந்த நுனியை பற்றியதில் அவன் விரல்களில் மாஞ்சா கிழித்து ரத்தம் வந்தது.
எங்களுக்கு காத்தாடி கிடைத்த மகிழ்ச்சியில், காற்றின் பிரிதொரு திசையை பயன்படுத்திக்கொள்ள, வேறு நாண்பனின் வீட்டு மாடியில் முயற்சி செய்ய கிளம்பிவிட்டோம். பிற்பாடு இந்த நிகழ்வை மறந்தும் விட்டோம். நான்கு நாட்களுக்கு பிறகு, அவன் வராந்தையில் வாந்தியெடுத்து அதன் மீதே படுத்துக்கிடக்கையில் தான், எதேச்சையாக அந்தப் பக்கம் போக நேர்ந்த நான் கவனித்தேன், அவன் விரல்களில் இருந்த வெட்டுக்காயத்தில் ரத்தம் உறைந்து வடுவாகியிருந்தது. அதைப் பார்த்ததிலிருந்து, அவன் மீது எனக்கு ஏதோ இனம் புரியாத கரிசனம் தோன்றியது. எல்லோரும் அவனை கேலி செய்ய நான் மட்டும் மெளனமாக அவன் மீது பரிதாபம் கொண்ட நாட்கள் அவை.
அவனுக்கு வந்ததைச் செய்வான். ப்ளம்பிங், மின்சார இணைப்பு தருவது, சரிபார்ப்பது என்று அவன் செய்யும் வேலைகளுக்கு, அவனளவிற்கு வேலை தெரிந்த வேறொருவர் எனில், கேட்கப்படும் கூலியில் எளிதாக இரண்டு பேர் குடும்பம் நடத்தலாம் என்று அக்கம்பக்கத்தில் பேச்சுக்கள் உலவின. ஆயினும் அவன் அதிகம் கேட்பதில்லை. கொடுப்ப‌தை வாங்கிக்கொள்வான். கிடைக்கிற கூலியில் சாராயம் குடிப்பான். கூலி இல்லையெனில் சுருண்டு படுத்துக்கொள்வான். அடித்துப் பிடுங்கியதாகவோ, இரைந்து கேட்டதாகவோ எங்கும் அவனைக் குறித்து பேச்சு இருக்கவில்லை. தெருவில் எல்லோருக்கும் உதவியாய் இருந்தான். பிரதிபலன் எதிர்பார்த்து எதையும் செய்து நான் பார்த்ததாக நினைவில் இல்லை. சும்மா கொடுத்து அவன் வாங்கியும் நான் பார்த்ததில்லை. பண்டிகைக்கு பலகாரங்கள் தந்தால் சிரித்துக்கொண்டே வாங்கிக் கொள்வான். அவற்றையும் பல சமயங்களில் தெரு நாய்களுக்கு தின்னக் கொடுத்துவிட்டு அவைகள் உண்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த வீட்டுக்கு குடி வந்து மூன்று வருடங்கள் இருக்கும். இந்த மூன்று வருடங்களில், அவன் எங்கு வேலையாக சுற்றினாலும் பொழுது சாய்ந்தால், எங்கள் வீட்டு மாடியில் வராந்தையிலேயே துணி விரித்து படுத்துக்கொள்வதை பார்த்துவிட்டு, அவனுக்கும் எங்கள் வீட்டு ஓனருக்கும் ஏதோ இருக்கிறது என்று ஒருவாறு நாங்கள் புரிந்துகொண்டோம்.
விடுமுறை நாட்களில், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் அம்ர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கிஷ்ணா பற்றி பேச்சு வருகையிலெல்லாம், அவன் எங்கே தங்குகிறான், அவன் வீடு எது, மனைவி குடும்பம் எல்லாம் இருக்கிறதா, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொள்ளும் போது தான், எங்கள் வீட்டு ஓனரின் தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்கு மதிய உணவு தர அவன் போய் வரத்துவங்கியிருப்பது, அதே பள்ளியில் படிக்கும் தெரு பிள்ளைகள் சொல்லி தெரியவந்தது. அந்த தெருவில் வசிக்கும் இன்ன பிற குடும்பங்களை விட எங்கள் வீட்டு உரிமையாளர் குடும்பத்துக்கும் அவனுக்குமான கூடுதல் ஒட்டுதல் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கவே அதிலிருந்து, கிஷ்ணாவுக்கும் எங்கள் வீட்டு உரிமையாளருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்பதாக அவன் யார் என்பது குறித்த‌ தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக‌ உருப்பெறத் துவங்கின.
அந்தப் பிள்ளைகள் வாயை, அதே பள்ளியில் பயிலும் எங்கள் தெரு நண்பர்கள் கிண்டியதில், கிஷ்ணா, என்பவன், எங்கள் வீட்டு உரிமையாளருக்கும், அவரது தம்பிக்கும்,உடன் பிறந்த‌ இளைய தம்பி என்கிற உண்மை தெரியவந்தபோது நாங்கள் அதிர்ந்தே போனோம். சொந்த தம்பி. ஒரே வயிற்று பிள்ளைகள். முதல் இருவரும் இத்தனை வசதியாய் இருக்கையில், மூன்றாமவன் மட்டும் ஏன் இப்படி? என்று தெருவே பேசியது. எட்டும் ஆறும் பதினான்கு போர்ஷன்களில் ஒன்றே ஒன்றை கூட தம்பிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத கல் நெஞ்சு குறித்து வாடகைக்கு குடியிருக்கும் நாங்கள் அனைவருமே கூடி கூடிப் பேசிக்கொண்டோம். எங்கள் வீட்டு உரிமையாளரையும், பின்னால், எட்டு போர்ஷன்களுக்கு உரிமையாளராய் இருக்கிற, அவரது தம்பியையும் ‘பொழைக்கிறவன் பொழைக்கிறான்’ என்றார்கள்.
‘அந்த கிஷ்ணா, அவனோட அண்ணனுங்க மாதிரி ஒழுங்குமுறையோட இருந்திருக்க மாட்டான். ஒழுங்குடன் இருத்தல்ங்குறது என்ன சும்மாவா? அண்ணனுங்க ரெண்டு பேரும் என்னமா குடும்பத்தை பாத்துக்குறாங்க.. புள்ளைங்களை படிக்க வைக்கிறாங்க‌?! வாடகை தான் வருமானம்னாலும் குடும்பமா சேர்ந்து செலவு செஞ்சிக்குறாங்கல்லா?!’ என்று சில பெரியவர்கள் அங்கலாய்த்தார்கள்.
‘அட! யோசிச்சிருப்பாங்க. குளிருக்கு கால் மட்டும் வச்சிக்கிறேன்னு ஒட்டகம் சொல்லிச்சாமே. அந்த கதையா, போனாப்போகுதுன்னு பதினாலு போர்ஷன்ல ஒண்ணு குடுக்க போக, அவன் சோம்பேறி ஆயிடலாம். அல்லது, அதான் சாக்குன்னு சொத்து பிரச்சனை கிளப்பலாம்ன்னு யோசிச்சிருப்பாங்கல. இன்னிக்கு நவீன உலகத்துல எதுவும் நடக்கலாம்ப்பா’ நியாயம் பேசினார்கள் பலர். .ஆனால் எதுவும் பெரிதாக நடக்கவில்லை. கிஷ்ணா எப்போதும் போல், தெருவிற்கே எடுபிடியாகத்தான் இருந்தான். வராந்தை தான் அவனுக்கு வீடாக இருந்தது.
இதற்கிடையில், பத்தாவது பொதுத் தேர்வு துவங்கியது. அப்போதுதான் மெட்ரோ சானல் துவங்கியிருந்தார்கள். அதற்கு முன்பு வரை, தொலைக்காட்சி என்றால் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், சனிக்கிழமை தூர்தர்ஷனில் ராஜேஷ் கண்ணா, ஷம்மி கபூர், நஸ்ருதின் ஷா , அமிதாப்பச்சன் நடித்த ஏதாவது ஹிந்தி படம், ஞாயிறு தமிழ்ப்படம். இவ்வளவுதான். மெட்ரோ சானல் வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரங்களுக்கு மட்டும் நிகழ்ச்சிகள். ப்ரியா என்றொரு தொகுப்பாளினி வாய் ஓயாமல் பேசினார். முக்காபுலா என்றொரு நிகழ்ச்சியில் பாபா சேகல் என்றொருவர் தொகுப்பாளராக அறிமுகமானார். ஜுனூன், அஜ்னபி என்றெல்லாம் ஹிந்தி நிகழ்ச்சிகளில், தூர்தர்ஷனால் பாலைவனமாக இருந்த தொலைக்காட்சிகள், மெட்ரோ வருகையால் நந்தவனமாகியது. குறிப்பாக ஜுனூன் சீரியலின் துவக்க பாடல், கிட்டத்தட்ட தேசிய கீதம் போல் எல்லா பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருந்தது. ஹிந்தி தெரியாத பையன்கள் கூட அந்தப் பாடலை மனப்பாடமாக பாடினார்கள்.
மெட்ரோ புண்ணியத்தில் பின்மாலை பொழுதுகளில் வீட்டில் படிக்க முடியாத சூழல் உருவானது.. அக்கம்பக்கத்து வீடுகளில் மெட்ரோ நிகழ்ச்சிகளின் சத்தம் தாங்காமல், நான் மொட்டை மாடிக்கு படிக்க அனுப்பப்பட்டேன். மொட்டை மாடி வந்த பிறகு தான் தெரிந்தது அனேகம் பிள்ளைகள் மொட்டை மாடிக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்று.
மொட்டை மாடிக்கு வழிவிடும் கதவுக்கு முன்னால், ஒரு சிறிய, இரண்டு சூட்கேஸ்கள் படுக்க வைத்தால் எத்தனை இடம் இடைக்குமோ அத்தனை இடத்தில் தட்டுமுட்டு சாமான்கள், பழைய டயர், ஸ்பேனர், துருபிடித்த அறிவாள், ஓடாத ஃபேன்கள் இரண்டு, சைக்கிள் ரிம், உடைந்த லாக், பிய்ந்து போன சோபா குஷன்கள், காலாவதியாகிப் போன ட்ரான்சிஸ்டர்கள், ரேடியோ, செய்தித்தாள்கள், திருமண அழைப்பிதழ்கள், காலி பாட்டில், எட்டு செங்கற்கள், மண் பானை, உருக்குலைந்த எவர்சில்வர் தட்டுகள் என பலதரப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் கொஞ்சம் சுத்தமான பெட்டி ஒன்றும் இருந்தது.
மொட்டை மாடியில், திறந்த வெளியில் நடந்தபடி படிக்கும் நான், கால் வலித்தாலோ அல்லது லேசாக தூரல் போட்டாலோ அங்கே கதவைத் திறந்து வைத்தபடி அமர்ந்து படிப்பது வழக்கம். அப்போதெல்லாம் சுற்றிலும் கலைந்து, தூசி படிந்து கிடக்கையில் அந்த பெட்டி மட்டும் ஓரளவு சுத்தமாக இருப்பது என் கண்களை உறுத்தும். உள்ளே என்ன இருக்கும் என்றெல்லாம் பலமுறை சிந்தனை செய்துவிட்டு, அடுத்தவர் பெட்டியை தொடுவானேன் என்று பல நாள், அந்த பெட்டியை திறந்து பார்ப்பதை ஒத்திப் போட்டிருக்கிறேன்.
இருந்தும் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.
கிஷ்ணா எங்கள் வீட்டு உரிமையாளரின் தம்பி என்கிற தகவல் தெரிந்துவிட்ட பிறகு, அந்த பெட்டி கிஷ்ணாவுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவன் மணமானவனா, அவனுக்கு குடும்பம் இருக்கிறதா, பிள்ளைகள் இருக்கிறார்களா, சகோதரர்கள் வசதியாக இருக்க அவன் மட்டும் ஏன் இப்படி என்று எங்கள் எல்லோரிடமும் இருந்த விடை தெரியாத கேள்விக்கு, பதில் தேடும் ஆர்வம் மேலிட, ஒரு நாள், அதைத் திறந்தேன். உள்ளே சிகப்பில் ஒரு காட்டன் புடவை, ஒரு நைந்த லுங்கி, சட்டை, தீப்பெட்டி, ஒரு காகிதத்தில் மாயூரம் அடுத்த பேரளம் கிராமத்தில் ஒரு முகவரி, லெட்சுமி என்ற பெயரில் ஒரு ஜாதக குறிப்பு, சில வளையல்களுடன், ஒரு பெண்ணின் புகைப்படமும் இருந்தது. ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்தப் பெண் புடவை அணிந்திருந்தாள். லேசான குண்டு. வட்ட முகம். உயரம் ஐந்தடிக்கும் சற்று குறைவு. கழுத்தில் ஒரே ஒரு செயின். காதில் கம்மல்.
பெட்டியை மூடிவைத்தேன்.
அந்தப் பெண் யாராக இருக்கும் என்று சிந்தனையில் அன்றைய பாடம் மனதில் ஏறவில்லை. ஒருவேளை மனைவியாக இருக்குமோ? அல்லது காதலியோ? அந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் பார்த்ததாக நினைவிருக்கவில்லை. அப்படியானால் அது யாராக இருக்குமென்று சிந்தனை போனது. வெகு நேரம் எப்படியெல்லாமோ யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. இரவு மணி ஒன்பதரையாகிக் கொண்டிருந்தது. லேசாக பசித்தது. நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு எழுந்தேன். யோசனையுடனே மாடிப்படியிறங்கினேன். வீட்டு உரிமையாளரின், மூத்த மகனின், மனைவி நின்றிருந்தாள்.
‘பெட்டி திறந்து பாத்தியா?’ என்றாள்.
நான் ஏதும் பேசவில்லை. அமைதியாக அவளையே பார்த்தேன்.
‘அதுக்கு பாத்த பொண்ணு தான். அது ஒண்ணு தான் சம்பாதிப்பு ஏதும் இல்லைன்னாலும் , அவனை ஆசைப்பட்டு கட்டிகிறேன்னு சொல்லிச்சாம். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண, புடவை , வளையல் எல்லாம் வாங்கிட்டு போயிருக்கு. இது வேலையில‌ இல்லைன்னு அவங்கப்பா பொண்ணு குடுக்கலை போல. கல்யாணம் நடக்கலை. அந்த பொண்ணு இந்நேரம் யாரையாவது கட்டி, புள்ள பெத்து அரை கிழமா கூட ஆயிருக்கும்.. இது என்னடான்னா அதோட ஃபோட்டோவை வச்சிக்கிட்டு அதோடவே வாழ்ந்துட்டு இருக்கு. ஆத்தா அப்பன் போய் சேந்தாச்சு, வீட்டு ஆம்பளைங்களுக்கு வேலை இல்லை. தம்பிகாரனுக்கு வேணும்னே ஊத்திக்குடுத்து பழக்கிவிட்டு,. கேக்க ஆளு இல்லை, தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க இத. ‘
சலிப்பாக முடித்துவிட்டு, உள்ளே சென்றாள். ‘கேட்க ஆளு இல்லை..தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க’ என்கிற அவளின் வார்த்தைகள் மனத்தின் அறைகளில் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டே இருந்தது எனக்கு.
வெளியே சாலையில், அடிபட்ட ஒரு எலியை நான்கைந்து காக்கைகள் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. எலி உயிருடன் தான் இருந்தது. காக்கைகள் கொத்தாமல் இருந்தால், எலி தட்டுத்தடுமாறி பிழைத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்தது. ஆனாலும், சுற்றிலும் காக்கைகள் விடாமல், காயம் பட்ட இடத்திலேயே கொத்த, கொத்த எலியின் உடலில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையும், கொஞ்சம் கொஞ்சமாக எலியின் உடல் அசைவுகள் நிற்கத்துவங்கியிருப்பதையும் நான் வெறுமையுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். அந்த நேரம், ‘பகிர்ந்து உண்ணும் காக்கை’ என்று முதுகில் எழுதப்பட்டு, ஆட்டோ ஒன்று கடந்து போனது.
பிற்காலத்தில், கிஷ்ணா என்கிற அந்த பைத்தியம் என் மனதில் விஸ்வரூபம் எடுத்து, வார்த்தைகளாக உடைந்து, சிதறி, மீண்டும் உயிர்த்தெழுந்து, ஒருங்கிணைந்து இதோ இந்த கதையாகி நிற்பான் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லைதான்.

#நன்றி
மலைகள் 73வது இதழ்(http://malaigal.com/?p=6642)