அத்தியாயம் - 6
அந்தப்
பெரிய வணிக வளாகத்தின் வாசலில்
தன் மேல் மொய்க்கும் ஓராயிரம்
கண்களை அலட்சியமாய் சட்டை செய்யாமல், கொழுத்த, நடைக்கேற்ப அதிரும் தொடைகளை இறுகிக் கவ்விக்கிடக்கும் கருப்பு நிற லெக்கின்னிலிருந்து அலைபேசியை நெகிழ்த்தி
எடுத்து கணவனின் எண்ணையொற்றி அழைத்தாள் அஞ்சலி. வானம் மேக மூட்டமாக இருந்தது.
எப்போது வேண்டுமானாலும் மழை பொழியலாம் என்றிருந்தது.
"I
am done. Where are you?" என்றாள்.
"I got stuck. Take an auto or book a taxi" என்றது மறுமுனை.
"ப்ச்ச்"
என்றாள் அஞ்சலி.
'கொஞ்சம்
கூட அறிவே இல்லை' உள்மனத்திலிருந்து தொண்டை வரை வந்துவிட்ட வார்த்தைகள்
அங்கேயே கரைந்து போனது. ஒருமுறை திரும்பி தன்னை ஓரவிழிகளால் நோட்டம் விடும் ஒரு இரண்டு டஜன்
கண்களில் எதையேனும் வேறெங்கேனும் பார்த்ததாய் நினைவிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அப்படி ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் தன்னை யாரோ தொடர்வதாய் ஒரு
பிரஞை ஏன் தனக்கு எப்போதும்
இருக்கிறது என்று ஆயிரத்து முந்நூறாவது முறையாக யோசித்தாள். அப்போது, ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க
ஒருவர் அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடி கடந்து போனார். கண்ணாடி அணிந்திருந்தார். முன்
தலையில் வழுக்கை விழுந்திருந்தது. சன்னமான தொப்பை. அஞ்சலி ஒரு கோபப்பார்வையை உதிர்த்துவிட்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
ஊபரா
அல்லது ஓலாவா? எதை அழைப்பது என்று
சட்டென உத்தேசம் வரவில்லை. கடைசியாக ஊபரோ, ஓலாவோ அழைத்து நான்கைந்து ஆண்டுகள் ஆகி இருந்தது. அவளிடம்
ஒரு ஸ்விஃப்ட் மகிழுந்து இருந்தது. வழமையாக அவள் அதைத்தான் பயன்படுத்துவாள்.
எல்லாமும் திருமணம் வரை தான். திருமணமான
பிறகு அந்த மகிழுந்தை கணவன்
ரவிதான் பயன்படுத்துகிறான். ஏதோ அவனுக்கே எழுதிக்கொடுத்தது
போலாகிவிட்டது. அஞ்சலியின் ஸ்விஃப்ட் கிடைத்ததும், அவன் தான் வைத்திருந்த
காரை விற்றுவிட்டான். அவள் எங்கே செல்வதாய்
இருந்தாலும் அவன் ஓட்டுனராகிவிடுவான். அவ்வப்போது கைவிட்டும்
விடுவான். இப்போது கைவிட்டதைப்போல.
என்ன
செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவள் முன் ஒரு
மகிழுந்து வந்து நின்றது. அது ஒரு பழைய
மாடல் வெர்னா மகிழுந்து. ஊபர் , ஓலா என்றோ குறைந்தபட்சம்
டாக்ஸி என்றோ கூட அதில் எதுவும்
எழுதியிருக்கவில்லை. ஒட்டுனர் இருக்கையிலிருந்து ஒருவன் கண்ணாடியை கீழிறக்கி எட்டிப்பார்த்தான். சுமாராகத்தான் இருந்தான்.
"லிஃப்ட்
வேண்டுமா?" என்றான்.
தலையை
இடமும் வலமுமாய் ஆட்டினாள் அஞ்சலி. வானிலிருந்து ஒரு துளி அவள்
கன்னத்தில் விழுந்தது.
"மழை
இன்னிக்கின்னு பார்த்து ரொம்ப கனமா வரும் போல
இருக்கு" என்றான். அடுத்தடுத்த சொட்டுக்கள் அவள் கன்னங்களை நனைத்தன.
தூறல் மேலும் வலுக்கும் போலிருந்தது. ஊபர் செயலியில் அடுத்த
வாடகைக்கார் வர இன்னும் பத்துப்
பதினைந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமெனக் காட்டியது. அஞ்சலி கார் கதவைத்திறந்து ஏறிக்கொண்டாள்.
சாலையில்
வழுக்கிச்சென்ற கார் சற்றைக்கெல்லாமே ஒரு
சிக்னலில் நிற்க, மழை சடசடவென பிடித்துக்கொண்டது.
"என்
பேரு அர்விந்த்." என்றான் அர்விந்த்.
"நான்
அஞ்சலி"
"நல்ல
வேளை நான் வந்தேன். இல்லைன்னா
நனைஞ்சிருப்பீங்க"
"தாங்க்ஸ்."
"மை
ப்ளஷர். உண்மையை சொல்லணும்னா சமூகத்துக்கு என்னால முடிஞ்ச நல்லதைப் பண்ணினேன்."
"எதைப்பத்தி
சொல்றீங்க?"
"உங்களுக்கு
லிஃப்ட் கொடுத்தது பத்தி தான். கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்க..இந்த மழையில நீங்க
நனைஞ்சிருந்தா என்னாகியிருக்கும்?"
"என்னாகியிருக்கும்?"
"மவுன்ட்
ரோடுல ட்ராஃபிக் ஆகியிருக்கும். ஒண்ணு ரெண்டு ஆக்ஸிடென்ட் கூட நடந்திருக்கலாம்"
அஞ்சலி
மகிழுந்தின் கண்ணாடி வழியே வெளியே பார்ப்பதான பாவனையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
"தெரியாதவங்க
வண்டியில பொதுவா ஏறுறது இல்லை." என்று மட்டும் சொன்னாள் முகத்தைத் திருப்பாமல்.
"நானும்
தெரியாதவங்களுக்கு லிஃப்ட் கொடுக்குறது இல்லை"
அஞ்சலி
அர்விந்த்தை திரும்பிப் பார்த்தாள். முகத்தில் சிரிப்பை எதிர்பார்த்தாள். அப்படி ஏதும் இல்லை என்றவுடன்,
"அப்புறம்
எதுக்கு எனக்கு லிஃப்ட் கொடுத்தீங்க?" என்றாள்.
"விகடன்ல
சிலிக்கான் சிலம்பம்ன்னு ஒரு கவிதை, நீங்க
எழுதினது தானே" என்றான் அர்விந்த்.
சட்டென
அர்விந்த்தை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்த்தாள் அஞ்சலி. இவனுக்கு எப்படித் தெரியும் என்பதான பார்வை அது.
"ஆமா"
"அந்த
கவிதை சூப்பர். அதைப் படிச்சதுமே ஃபேஸ்புக்ல உங்களை தேடினேன். அப்போ உங்களை பாத்திருக்கிறேன். சோ, டெக்னிக்கலா உங்களைத்
தெரியாதுதான். ஆனா, உங்க கவிதை
மூலமா உங்களைத் தெரியும். அதான் நிறுத்தினேன்"
அஞ்சலிக்கு
அப்போதுதான் அவனை முழுமையாகப் பார்க்க
வேண்டுமென்று தோன்றியது. அவன் பக்கம் திரும்பினாள்.
முகத்தைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் வசீகரமான முகம் இல்லை தான். கோதுமை நிறம். உலர்ந்த, புல் போன்ற தலை
முடி ஒரு சினிமா கதாநாயகனை
நினைவூட்டியது. அதில் ஆங்காங்கே நரை முடி அவனை
முப்பதுகளின் மத்திம வயதுக்காரன் என்றது. முகத்தில் எதுவோ இயற்கையாகவே செயற்கையாக இருந்தது. அது அதீத அழுத்தத்தை
கை மற்றும் கால்களில் எடுத்துக்கொள்ளும்போது முகத்தின் நரம்புகளும், தசைகளும் இறுகுவதன் குறியீடு. முகத்தில் செப்பனிடப்பட்ட எனினும் அடர்த்தியான ரோமம்.
"வரிகள்
எனக்கு துல்லியமா நியாபகத்துல இல்லை. ஆனா, புரிஞ்சதை வச்சி
சொல்லணும்னா ஒரு மலை எப்படி
நூற்றாண்டுகளா ஒவ்வொரு அடியா வளருதோ அதை வச்சின்னு ஏதோ
சொல்லியிருந்தீங்க.. கவிதையோட இந்தப் பகுதி ரொம்ப அழகா இருந்தது. அதைப்
படிச்சதுக்கு அப்புறம் யோசிச்சு யோசிச்சுப் பாக்குறேன். எவ்வளவு ஆழமான கருத்துன்னு" என்றான் அர்விந்த்.
"நினைக்கவே
இல்லை. இப்படி ஷாப்பிங் போயிட்டு திரும்புறப்போ ஒரு வாசகனை சந்திப்பேன்னு"
"ஹஸ்பண்டுக்காக
வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?"
"ஆமா..பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லியிருந்தாரு.. கடைசியில, வழக்கம் போல....." வாய் தவறி உதிர்ந்த
வார்த்தைக்கென நாவை லேசாகக் கடித்துக்கொண்டாள். அரவிந்த்
அதைக் கேட்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
"ஏதோ
முக்கியமான வேலை வந்துட்டு.. " என்றாள் அஞ்சலி.
"நீங்க
தினமும் இந்த நேரத்துக்கு இங்க
ஷாப்பிங் வருவீங்களா?" என்றான் அர்விந்த்.
"ஏன்? நேரடியாவே
அடுத்து எங்க சந்திக்கலாம்ன்னு கேட்கலாமே"
என்றாள் அஞ்சலி. பேர் என்ன
அர்விந்த்
சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்.
"என்னை
ஷெனாய் நகர்ல ட்ராப் பண்றீங்களா?" என்றாள் அஞ்சலி.
"ஓ..
ஷெனாய் நகர்ல தான் வீடுன்னு சொல்றீங்களா?
நோட் பண்ணிக்கிட்டேன்" என்றான் அர்விந்த்.
அஞ்சலி
மீண்டும் சிரித்தாள். இதழ்களை விரல்களால் மறைத்தாள்.
அர்விந்தின்
கார் ஷெனாய் நகர் பூங்கா அருகே
நின்றுகொள்ள, அஞ்சலி "தாங்க்ஸ்" சொல்லி இறங்கிக்கொண்டாள்.
அர்விந்தின்
கார் சாலையில் வழுக்கிச் செல்வதைப் பார்த்தபடி தன் வீட்டுக்கு நடந்தாள்
அஞ்சலி.
அர்விந்த்
போல் இனிமையாக ஏன் ரவி பேச
மறுக்கிறான்? நிச்சயதார்த்தம் நடந்த தேதி முதல் கல்யாணத்திற்கு முன் வரை அடர் மழை போல் காதலுடன் பேசியவன் இப்போதானால் பேசுவதே இல்லை. திருமணத்துக்குப் பின்னும் ரவி தன் ஒரே
பாய் பெஸ்டியாக இருப்பான் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இப்போது அவன் பாய் பெஸ்டியாக
இருப்பது தனக்கல்ல என்பது வரை மட்டுமே அவளுக்கு
தீர்மானமாகத் தெரிந்திருந்தது. ஒரு வேளை பாய்
பெஸ்டி என்ற உறவே திருமண
பந்தத்துக்குள் வராதோ?
வீடு
வரும் வரை கேள்விகளை அசைபோட்டபடியே
நடந்தாள் அஞ்சலி. வரும் வழியில் தோழி பவித்ராவின் நினைவு
வந்தது.
'....சின்ன
வயசுல ரொம்ப கட்டுப்பாடா இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல
இந்த இடத்துக்கு வந்துடறீங்க...' என்ற அவளின் வார்த்தைகள்
எங்கோ உறுத்தியது. கல்லூரி முடித்த புதிதில் வேலைக்கு முயற்சித்ததில் ஒரு ரிசார்டில் வரவேற்பாளர்
வேலை கிடைக்க, அங்குதான் பவித்ராவுடன் பழக்கமாயிற்று.
பெயர்
தான் பவித்ரா. மற்றபடி, பவித்ரா அத்தனை பவித்ரமில்லை. அப்போதெல்லாம் அவளை ஒரு எட்டத்தில்
வைத்தே பழகியிருக்கிறாள் அஞ்சலி. காரணம், ரிசார்ட் ஊழியன் மூர்த்தியுடன் அவளுக்கிருந்த உறவு. ரிசார்டில் எந்த அறை காலியானாலும்,
அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை அது பவித்ரா-மூர்த்தியின்
லீலைகள் அறை. அப்படி இருந்தவள்
திருமணமாகிவிட்ட பிறகான இன்றும் அதையே தான் செய்கிறாள். அதுவும்
தன் சொந்த வீட்டிலேயே.
அவள்
குறித்தெல்லாம் யோசிக்கையில், அடக்க ஒடுக்கமாகக் கண்டவனையும் அனுமதித்திடாத தன்னைக்காட்டிலும், கண்டவனுடனும் கண்டதையும் பகிர்ந்த அவள் பெரியதாக ஒன்றும்
சீர்கெட்டுப் போய்விடவில்லை என்று தான் தோன்றியது. இத்தனை
காலமும் பவித்ராவின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு தான் இருந்திருக்கிறது என்று
தெரிந்துவிட்டபிறகு, அந்தச் சிறிய வயதில் அத்தனை கட்டுப்பாடுடன் இருந்து அப்படி என்னதான் சாதித்தோம் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் அஞ்சலி. பவித்ரா குறித்து நினைக்க நினைக்கத்தான் மனனம் செய்த வாய்ப்பாட்டையொத்தத்
தன் வாழ்க்கையை மறுசீரமைக்கும் எண்ணம் மெல்ல மெல்ல வலுப்பதாகக் தோன்றியது அவளுக்கு.
முகநூலில்
பவித்ராவின் கணக்கை தோண்டி எடுத்து நட்பழைப்பு விடுத்தாள் அஞ்சலி. அது மறுமுனையில் சற்றைக்கெல்லாம்
ஏற்கப்பட்டது.
உண்மையைப்
பகிர வேண்டுமானால், '....சின்ன
வயசுல ரொம்ப கட்டுப்பாடா இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல இந்த இடத்துக்கு வந்துடறீங்க...' என்ற பவித்ராவின் வார்த்தைகள்
என்னையும் சற்றே உலுக்கிவிட்டது என்று சொன்னால் மிகையாக இருக்காது.
திருமண
பந்தம் என்பது அப்படித்தான் இயங்குவது எனவும், அதில் மேடு பள்ளங்கள் இருப்பினும்
சென்று சேரும் இடமே பிரதானம் எனவும்
யாரேனும் வாதிடலாம். இப்படியான
மேடு, பள்ளங்களால், பாவம்- புண்ணியம், வெற்றி-தோல்வி போன்ற முரண் இருமைகள் மனித வாழ்க்கையை முன்னகர்த்திச்
செல்லும் ஆதார நம்பிக்கைகளை கட்டமைக்கும் கருத்தாக்கங்களாக மனிதர்களுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். எனக்கு இல்லை.
என்
பார்வை என்னவென்றால், பள்ளங்களை நிரப்ப நிரப்ப, மேடுகள் மிகுக்கும்;
ஒரு கட்டத்தில் பள்ளம் என்ற ஒன்றே இல்லாமல் போகையில், யாருமே பள்ளத்தைச் சென்று சேர
வேண்டி இருக்காதல்லவா? சாமான்யனுக்கும் மேடுகள் கைக்கெட்டட்டுமே?.
இதை
வெகு நாட்களாக நான் அவதானித்து வருகிறேன்.
என் போல், ஒரு சில மனிதர்களும்
கூட அவதானித்திருக்கலாம். சூர்யா மட்டும் தான் அதை அவதானித்ததோடு,
அவ்வெண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு அட்டவணையை, ஒரு
எண்களாலான கட்டமைப்பை, எல்லோராலும் பயன்படுத்திவிடக்கூடிய
மாதிரியை முன்வைத்தான்.
என் எதிர்பார்ப்பெல்லாம், அதிலாவது
பிரபஞ்ச அர்த்தங்கள் மீட்டெடுக்கப்படுகின்றவனவா என்பதுதான். அதைத் தெரிந்துகொள்ளவே
நான் சூர்யாவை மிக அருகாமையில் சென்று அவதானிக்க முயல்கிறேன்.
இப்போது
சொல்லுங்கள் சூர்யாவை எப்படி எனக்குப் பிடிக்காமல் இருக்கும்.
