Tuesday, 16 March 2010

விநோதன் - சிறுகதை

என் 'விநோதன்' என்ற தலைப்பிலான இச்சிறுகதையை வெளியிட்ட உயிர்மை இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=2665


விநோதன் - சிறுகதை


அவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில் எந்த வித அசைவும் இன்றி சிலையாய் நின்றிருந்தான்.

அவன் பார்வை சிறையெடுத்த காட்சியில், அவனே கைதியாகிடும் படிக்கு தோன்றிய‌து , அவள் மட்டும்தான். அவள் லாவண்யா. சிகப்பு நிற சல்வாரில், தலை நிறைய மல்லிப்பூவுடன், நிலம் பார்த்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி இருந்த அத்தனையும், விலக எத்தனிக்கும் பனிமூட்டம் போலவே பதியும் அவன் நினைவுகளில். அவளுடன் யாரும் இல்லை. தனியே தான் நடந்து கொண்டிருந்தாள். மிக வேகமாயும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல், நிதானமாக, அவளைத் தாங்கும் நிலம் கூட அவள் இருப்பை உணர்ந்திருக்குமா என்று சந்தேகம் கொள்ளும் விதத்துக்கு நடந்திருந்தாள். எல்லாம் சில நொடிப்பொழுதுகள் தான்.

எங்கிருந்தோ அவனைத் தாண்டி கடந்து போன ஒரு கனரக‌ வாகனம் அவன் பார்வை கோணத்தை கத்தரித்துச் செல்ல, துண்டாகிப் போன மறுபாதியில் அவள் எங்கோ மறைந்துவிட்டிருந்தாள். அவள் பார்வையில் பட்ட அதிர்ச்சியினின்று மீள்வதற்குள்ளாக, சட்டென அவள், கண்களை விட்டு அகன்றதை ஜீரணிக்க முடியாமல், அனிச்சையாக அவளை தேடத்தொடங்கியிருந்தான். அவ‌ள் நின்றிருந்த‌ இட‌த்தில், இருள் சூழ பூட்டிக் கிடந்த வீட்டின் முன், அக்கம்பக்கத்திலிருந்த கடைகளில், இந்தப்புறம், அந்தப்புறம் என எந்தப்புறம் நோக்கினும் அவளைக் காண‌வில்லை.

நடுக்கடலில் தத்தளிக்கையில், தூரத்தே தெரிந்து, உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையூட்டி பின் அப்படியே பார்வையினின்று மறைந்து போன கப்பலைப் போல உணர்ந்தான். அவனை விட மூன்று வயது மூத்தவளிடம் தனக்கு ஏன் இந்த மாதிரியான ஒரு உணர்வு என்று அந்த நேரம் அவனுக்கு தோன்றினாலும், 'இப்படித்தான் கடந்த நான்கு வருடமாய் தோன்றுகிறது, ஆனாலும் இது மாறுவதற்கில்லை, மாறுவதும் பிடித்தமில்லை' என்பதாக அவனுக்கு தோன்றியது வழக்கம்போல்.

மனத்திற்கு எது சாசுவதம் என்பது பல சமயங்களில் ஒரு முரணின் பிம்பமாகவே இருக்கின்றது. அவனுக்கு அவள் பிடித்தம். இத்தனைக்கும் இந்த நான்கு வருடங்களில் எதிர்வீடாக இருந்தபோதிலும் அவளுடன் அவன் பேசியது இல்லை. பேசவென்று அவன் முயன்றதில்லை. அவள் மேல் அவன் காதல் வயப்பட்டிருக்கவில்லை. தோழி என்றழைத்திட அவளுடன் பேசியுமிருக்கவில்லை. வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொள்ளவோ, பேசவோ காரணங்களில்லை. வலுக்கட்டாயமாய்க் ஒரு உறவை வளர்த்து அதற்கு காதல் என்று பெயரிட்டு உலவ அவனுக்குத் தேவைகள் இருக்கவில்லை. ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க பிடிக்கிறது. அதில் ஏதோ இருக்கிறது. மனம் லேசானது மாதிரி, வர வேண்டிய இடத்துக்கு வந்தாயிற்று என்பது போல. பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று கூட அவ்வப்போது யோசித்திருக்கிறான்.

அவளைப் பார்க்கும் போது ஒரு அமைதி கலந்த சாசுவதம் மனதில் பரவுகிறது. அந்த நேரம் அது போதும். எந்த பேச்சும் வேண்டாம். பேசி என்னாகப்போகிறது. இந்தப் பார்வையில், ஆயிரம் கோடி காதல்கள் கூடுமே. அவ்வப்போது இவன் புறமாக அவள் திரும்புவது போதுமே. அது தன்னைப் பார்க்கவா, சீ சீ வேறு யாரையோ பார்க்கவா? இப்படி ஏன் யோசிக்கவேண்டும்? கோயிலுக்கு போகிறோம். அம்பாள் தன்னைப் பார்க்கிறாளா? இல்லையா? என்பது அனாவசியம். அம்பாளின் மேல் த‌னக்கு பக்தி இருக்கிறது. அந்த பக்திக்கு உண்மையாய் இருத்தல் போதும். அது போதும் த‌னக்கு என்பதாகும்போது, அம்பாள் எதைப் பார்க்கிறாள், எப்படிப் பார்க்கிறாளென்றெல்லாம் கண்டேனா? எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவதில் இது அடங்கிப்போகுமா? உண்மையில் அப்ப‌டி அன்பு செலுத்துவ‌துதான் அவ‌ன் இய‌ல்பு அல்ல‌து அவ‌ன் விருப்ப‌ம். விருப்ப‌மே இய‌ல்பாகியிருக்க‌லாம். அதனை அவன் தன் இயல்பென நினைத்திருக்கலாம்.

அவ‌ள் பார்வையில் அக‌ப்ப‌ட‌வில்லை. அவ‌ன் பார்வை மீண்டும் மீண்டும் அலைபாய்ந்த‌து. ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வீடு மாற்றி சென்றுவிட்டது அவ‌ள் குடும்ப‌ம். அன்றிலிருந்து இந்த‌ தேடல். அவ‌ளை போகும் இட‌மெல்லாம் தேடும் வேத‌னை. காணும் பெண்க‌ளிலெல்லாம் அவ‌ளைத் தேடும் பிர‌ங்ஞை.
இன்று அவளே எதிர்படுகையில், எதிர்பட்டது அவள் தானா என அவதானிக்கையிலேயே, அவள் மறைந்துவிட்டிருந்தாள். எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்திட மாட்டோமா என் ஏங்கியது அவன் மனம். சளைக்காமல் இங்குமங்கும் பார்த்தபடியே இருந்தான் அவன்.

குறைத்தபடி ஓடும் நாய், பேப்பர் பொறுக்கும் சிறுவன், தனியே சுழலும் காற்றோடு சேர்ந்து சுழலும் குப்பை காகிதங்கள், கையில் காய்கறிக்கூடையுடன் கடந்து போகும் குடும்பப்பெண்கள் என எல்லோர் மத்தியிலும் அவளைத் தேடிக்கொண்டே தெரு முனைக்கு வந்துவிட்டிருந்தான். அந்தத் தெரு இருபுறமும் பிரிந்தது. அதில் வலது புறம் பிரிந்த தெருவில் அவன் பார்வை படர்ந்த போது அவள் மீண்டும் அகப்பட்டாள். அதே சிகப்பு நிற சல்வார்.

அவளை மீண்டும் கண்ணால் கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. இதயத்தின் மூலையில் எரியத் தொடங்கிய ஏதோ ஒரு ஜ்வாலை மீது பனிக்குடம் கவிழ்ந்தது போலிருந்தது. அவளின் வசிப்பிடம் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளைத் தொடரலானான். அவள், அவன் பார்வைக்கு, காற்றிலே மிதந்தபடி, அருகாமையில் இருந்த கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே அவனும் சென்றான். அவ‌ன் வேக‌த்தில், அவ‌ளை கோயிலுக்கு முன்ன‌மேயே ச‌ந்தித்து விடுவோமோ என‌த் தோன்றிய‌து. அது நாள் வ‌ரை பேசாத‌ அவ‌ளிட‌ம் திடீரென்று என்ன‌ பேசுவ‌து. அவ‌னுக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. பிற்பாடு பேச‌லாம், இப்போதைக்கு அவ‌ளின் இருப்பிட‌ம் அறிய‌லாமென்று சற்றேன வேகம் குறைத்து ந‌ட‌க்க‌லானான்.

சாலையோர‌ம் ஒரு வீட்டின் முகப்புக்கதவில் கட்டப்பட்டிருந்த நாய் அவளையும், சற்று பின்னாலேயே வரும் அவனையும் பார்த்து என்ன நினைத்ததோ, குறைக்கத் தொடங்கியது. அவ‌ள் கோயிலை நெருங்கினாள். அவ‌னும் பின்னாலேயே நெருங்கினான். அவ‌ள் ச‌ட்டென‌ வ‌ல‌துபுற‌ம் திரும்பி, கோயிலை ஒட்டியிருந்த‌ வீட்டினுள் நுழைந்தாள். அதுதான் அவ‌ள் வீடாக‌ இருக்க‌ வேண்டும். அவ‌ன் நினைத்துக்கொண்டான். இத்த‌னை ப‌க்க‌மாக‌வா இருக்கிறாள். இது நாள் வ‌ரை எப்ப‌டி க‌வ‌னியாது போனோம் என‌ ஆச்ச‌ரிய‌ம் கொண்டான். வீட்டு வாச‌லில் நீர் தெளித்து கோல‌மிட‌ப்ப‌ட்டு, அந்த‌ கோல‌ப்பொடியை சில‌ எறும்புக‌ள் ஓர் ஓர‌மாய் மொய்த்திருந்த‌ன‌. வீடு, முக‌ப்பிலிருந்து, துளசி மாடத்தை மையமாகக் கொண்ட, பல்வேறு பூச்செடிகள் நிறைந்த, சீராக‌ ந‌டைபாதை அமையப்பெற்ற‌ தோட்ட‌த்தைத் தாண்டி, உள்வாங்கியிருந்த‌து.

அவ‌ன், உள்ளே செல்வ‌தா வேண்டாமா என்ற‌ த‌ய‌ங்கிய‌வாறே நின்றிருந்தான். என்ன‌வென்று சொல்லிச் செல்வ‌து என்று யோசித்த‌ப‌டியே நின்றிருந்தான். ச‌ரி, வீட்டினுள் யாரெனும் தென்ப‌டுவார்க‌ள். மாமாவோ, அத்தையோ யாரேனும் தென்ப‌ட்டால் ந‌ல‌ம் விசாரித்த‌ப‌டி அறிமுக‌ம் செய்த‌வாறே பிர‌வேசிக்க‌லாம் என் எண்ணிய‌வாறே அவ‌ன் தோட்ட‌த்தைத் தாண்டி வீட்டினுள் பார்வையை செலுத்திய‌ போது அதைக் காண‌ நேர்ந்த‌து. அவ‌ள் த‌லை நிறைய‌ ம‌ல்லிப்பூவுட‌ன் ப‌ச்சை தாவ‌ணியில் சிரித்த‌ முக‌மாய் இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை சுற்றி மாலை அணிவிக்க‌ப்ப‌ட்டு எரிந்து கொண்டிருந்த‌ நிலையில் இர‌ண்டு ஊதுவ‌த்திக‌ள் கொலுத்த‌ப்ப‌ட்டு புகைப்படத்தைத் தாங்கியிருந்த சட்டத்தில் செருக‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தின் மீது அவ‌ன் பார்வை நிலை கொண்டிருக்க‌, அவ‌ன் மீண்டும் விநோத‌னாகியிருந்தான்.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Thursday, 11 March 2010

தவறிவிடும் சந்தர்ப்பங்கள்... - சிறுகதை

என் 'தவறிவிடும் சந்தர்ப்பங்கள்' என்ற தலைப்பிலான இச்சிறுகதையை வெளியிட்ட தமிழோவியம் இணைய இதழுக்கு என் நன்றிகள்...
http://www.tamiloviam.com/site/2010/03/missing-opportunity.html

தவறிவிடும் சந்தர்ப்பங்கள்... - சிறுகதைஃபுட்போர்டில் தொங்கியபடி பயணித்த பஸ்ஸிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் கல்லூரி வளாகத்தைக் கடந்து இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் லாப்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ரவியின் நடையில் அப்பட்டமாய் ஒரு அவசரம் இன்னமும் தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அப்படிப் போகக் காரணங்கள் இல்லாமலில்லை. அவனுக்கொரு தங்கை இருக்கிறாள். ஒரே தங்கை. பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். அவள் மேல் ரவிக்கு கொள்ளை அன்பு, பாசம். அவளின் கல்லூரிக்கு சொந்தமாக கல்லூரி பஸ் இல்லை. தினம் சென்னை மாநகர‌ பல்லவனுக்கு காத்திருந்து கூட்டத்தில் ஏறி இறங்கி வெகு சிரமத்திற்கு ஆளாவாளோ என கல்லூரிக்கு அனுப்பத் தயங்கி, இவனே தினமும் பைக்கில் விட்டுவிட்டு வருவான். வந்து தன் கல்லூரிக்கு விரைவான். இது தினமும் நடப்பதுதான். அன்றும் அப்படியே. அவசர அவசரமாய் காண்டீன் வழியாக குறுக்கில் முதன்மை வளாகத்தைக் கடந்து, சுற்றி வந்து படிகளில் இரண்டாம் மாடி ஏறுவது நேரமாகும் என்று ஒரு தோளுயர சுவற்றை எம்பிக் கடந்து அரைமாடி தாண்டி, எதிர்பட்ட ஓரிரு தெரிந்த முகங்களுக்கு ஹாய் சொல்லி, நடு நடுவே சீனியர் எனப்படும் சைத்தான்களின் பார்வையில் தன் அவசர ஸ்டன்ட்ஸ் விழுந்துவிடாமல் இங்குமங்கும் பார்த்தவாறே ஒரு வழியாக இரண்டாவது மாடி வந்தே விட்டான்.


முதல் வகுப்பே, ப்ராக்டிக்கல்ஸ். அன்றுதான் விருப்பப் பாடம் சார்ந்து வகுப்புக்களை பிரிக்க இருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. லாப்பில் நுழைந்த போது பேராசிரியர் வந்திருக்கவில்லை. மாணவர்கள் அவரவர்க்கு ஒரு குழு அமைத்து தங்களுக்குள் கதைத்துக்கொண்டிருந்தார்கள். ரவிக்கு ஒரு நிமிடம் தயக்கமாக இருந்தது. எந்தக் குழுவும் பொதுவாக இல்லை, எந்தக் குழுவில் தன்னை இணைத்துக்கொள்வது என்று. குழு என்ற ஒன்று ஏன் தேவை என்று பலமுறை நினைத்திருக்கிறான். ரவி எல்லோருடனும் அன்பாக, நட்பாக இருக்க வேண்டுமென நினைப்பவன். எல்லோருக்கும் பொதுவானவனாக இருக்க அவனுக்கு சர்வ நிச்சயம் வரும். அது எல்லோராலும்கூட முடியும். ஆனால், அப்படி நடப்பதில்லை. எவருடனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடைவெளியுடன், அதே நேரம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய தொலைவினதாக நின்று நட்பை வளர்ப்பது அவனுக்கு வரப்பெற்றிருந்தது.


சற்றே தயக்கத்துடன் அவன் நிற்கவும் பின்னாலேயே பேராசிரியர் நுழையவும் சரியாக இருந்தது. நுழைந்த வேகத்தில் பேராசிரியர், எல்லோரையும் நடு லாப்பில் ஒன்றாய்க் கூடச் சொல்ல, எல்லோரும் ஒன்றாய்க் கூடினார்கள். அவர்களுள் சஜிஷ் என்பவன் ரவியை நெருங்கி ஹாய் சொன்னபடியே, நட்பாய் சிரித்தான். தன்னை சஜிஷ் என்பதாய் அறிமுகப்படுத்திக்கொண்டான். ரவி அவனைப் முன்பே பார்த்திருக்கிறான். முதல் வருடத்தில் எல்லோரையும் விருப்பப் பாடம் சார்ந்து பிரிக்காமல் விட்ட போது இவன் வேறு வகுப்பில் இருந்தான். இதுவரை பேசியது இல்லை. அவன் தானாக வந்தது, பேசியது ரவிக்குப் பிடித்திருந்தது. தன் குழுவைத் தாண்டி தாமாக ஏன் போய் பேச வேண்டும் என்று ஈகோ பார்த்தவர்களின் மத்தியில் அவனை வித்தியாசமாய், தன்னைப்போல ஒருவனாய் பார்க்க முடிந்ததில் ரவிக்கு ஏக மகிழ்ச்சி. தானும் ஹாய் சொல்லி நட்பாய் சிரித்து அறிமுகப்படுத்திக்கொண்டான்.


பேராசிரிய‌ர் எல்லோரையும் பெய‌ர் வ‌ரிசையில் மூன்று மூன்று பேராய் பிரிக்க‌ ர‌வியும்,சஜிஷும் ர‌ம்யா என்ற‌ பெண்ணும் ஒரு குழுவானார்க‌ள்.

முதல் நாளே ரவியின் குழுவின் மேல் வகுப்பின் ரகசிய கவனம் பதிந்ததை ரவி கவனிக்க வில்லை. காரணம் ரம்யா. மிக அழகான பெண். முதல் ஆண்டில் இவளும் வேறு வகுப்பில் இருந்தாள். கல்லூரி சேர்ந்த புதிதில் அவள் மொத்த கல்லூரியின் கனவுத் தாரகை. அவளுடன் பேச ஒரு கூட்டமே போட்டி போட்டது. ரவி சலனமற்று இருந்தான். காதல்கள் இயல்பாய் அமைய வேண்டும் என்று நினைப்பவன். இயல்பாய் அவனுக்கு ரம்யாவின்மேல் எந்த சலனமும் ஏற்படவில்லை. அந்த கோணத்தில் அவன் சிந்திக்கவும் இல்லை.


ரவியும் சஜிஷும் ரம்யாவுடன் ஒன்றாய் மின்னியல் சோதனைகள் செய்து பார்த்தனர். நட்பு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் வளரத்தொடங்கியிருந்தது. கேலியும், கிண்டலுமாய் கல்லூரி நாட்கள் வேகமெடுத்தது மூன்றாம் வருடத்திற்கு. நாட்கள் செல்லச் செல்ல சஜிஷுக்கும் ரம்யாவிற்குமான இடைவெளி குறையத் தொடங்கியதை உணரலானான் ரவி. இருவரும் வாழ்க்கையில் இணைந்தால், வாழ்க்கை முழுவதுக்கும் நட்பை பகிர்ந்து கொள்ள இருவர் கட்டாயம் இருப்பர் என மகிழ்ச்சியானான் ரவி. வ‌குப்பிற்கு பொதுவான‌ ர‌வி, சஜிஷ் ‍ ர‌ம்யா காத‌லுக்கும் பொதுவான‌வ‌னாக‌வே இருந்தான்.


பூக்க‌ள் சூழ‌ ந‌ட‌ந்த‌ பாதையில் எதிர்பாராம‌ல் மிதித்துவிட்ட‌ அசிங்க‌த்தைப் போல‌ ம‌கிழ்ச்சியாக‌ சென்று கொண்டிருந்த‌ க‌ல்லூரி நாட்க‌ளில், எதிர்பாராம‌ல் அமைந்த‌ அந்த‌ ஒரு நாள் ர‌வியின் தூக்க‌த்தை கெடுக்குமாறு அமைந்த‌து. அன்று அவ‌னும் ர‌ம்யாவும் க‌ல்லூரியில் இருக்க‌ சஜிஷ் வ‌ர‌வில்லை. ஆண்க‌ள் ஹாஸ்ட‌லில் அவனைச் ச‌ந்திக்க‌போன‌போது, அங்கே அவ‌ன் இல்லை என்ப‌தும் ப‌க்க‌த்தில் வீடெடுத்துத் த‌ங்கியிருந்த‌ சில‌ மாண‌வ‌ர்க‌ளின் ரூமில் இருப்ப‌தாக‌ கேள்வியுற்று அங்கே போன‌போது அவ‌ன் க‌ண்ட‌ காட்சி அவ‌னை நிலைகுலைய‌ வைத்த‌து. சஜிஷ், அந்த வீட்டின் மறைவான மாடிப்படியை ஒட்டிய தாழ்வாரத்தில் ஒரு பெண்ணின் கைக‌ளைப் ப‌ற்றி மூன்று நூறு ரூபாய்த்தாள்க‌ளைத் திணிக்க‌ அவ‌ள் அவ‌னின் க‌ன்ன‌த்தில் த‌ட்டிவிட்டு ஏதோ சொல்லிச் சென்றாள். அந்த‌ப் பெண், சேலை அணிந்திருந்தாள் ஆனால் முந்தானை அவ‌ள் தோல்க‌ளில் எந்த‌ வித‌மாக ப‌ட‌ர்ந்திருந்த‌து என்ப‌து ப‌ற்றி துளியும் க‌வ‌லைய‌ற்ற‌வ‌ளாக‌, உத‌ட்டில் அட‌ர்த்தியாய் சாய‌ம் பூசி, ஆண்களின் அந்தரங்க இடங்களில் சகஜமாய் தொடுபவளாக, தான் ஒரு விலைம‌க‌ள் என்று சொல்லாம‌ல் சொல்லிக்கொண்டிருந்தாள்.


சஜிஷா இப்படி? ரவியால் சுத்தமாக நம்பமுடியவில்லை. சஜிஷிடம் பேசிய, பழகிய வகையில் அவன் எப்போதும் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே தோன்றியிருந்தான். அது ஏனோ, அந்த நொடியில், ரவியின் கோணத்தில் தோன்றியிருந்த‌ ஒரு கானல் நீர் காட்சியோ எனத் தோன்றியது. தன் கணிப்பும், பார்வைக்கோணமும் கூட எதையோ சார்ந்து சஜிஷைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை இதுகாறும் தந்திருக்கிறதா? முதலில் இதைத் தவறு என்று என் மனம் நினைப்பதையே சஜிஷும் கோணம் குறைகூறுமோ? இதில் எது சரி எது தவறு? அல்லது எதுவுமே சரியுமில்லை, எதுவுமே தவறுமில்லை என்கிற தர்க்கத்தின் தோற்றமா? இதை நான் தவறு என்று சொல்வதற்கான காரணங்களில் நிற்கவே மாட்டானோ சஜிஷ்? மனிதர்களுடன் எத்தனை தான் பழகினாலும் யார் எப்படி என்பது, பிரபஞ்சத்தின் தொடக்கம் போல் கடைசிவரை புரியாத புதிர்தானோ என்று தோன்றியது.

அழகான பெண் காதலியாக இருக்கும்போது, அழகான வாழ்க்கை வாழக் கொடுத்துவைத்திருக்கும்போது, சஜிஷ் ஏன் இந்தப்பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் பார்வைக் கோணத்தில் இது எந்த வகையில் நியாயமாக இருந்திருக்க முடியும். ரம்யாவுடனான காதல் அந்த கோணத்தில் எங்கே தொங்கிக் கொண்டிருக்கும்?. ரம்யாவின் கோணம் இதை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது தன் கோணம் தான் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணருகிறதா? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ரம்யாவிடம் சொல்ல வேண்டுமா தான் கண்டதை? அப்படிச்சொன்னால் ரம்யா நிச்சயம் வெறுப்பாள். ஒரு காதலை அழித்ததாக ஆகிவிடாதா? சொல்லாமல் விட்டுவிட்டால், அது ரம்யாவிற்கு செய்த துரோகமா? சஜிஷின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?


ரவி வெகுவாக குழம்பியிருந்தான். இந்தக் காட்சியை தான் பார்த்ததிற்கு பதிலாய் ரம்யா பார்த்திருக்கலாம். தன் வரையில் பிரச்னைகள் இல்லாமல் இருந்திருக்கும். வழக்கம்போல் பொதுவானவனாய் இருந்துவிட்டு போயிருக்கலாம். இப்போது இதை தான் பார்க்கப்போய், இப்போது இருவரின் காதலின் கடிவாளமும், நட்பின் கடிவாளமும் தேவையில்லாமல் என் கையில்.


ரவி ஒரு நிலைப்பாடு கொள்ளாமல் தவித்தான். பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்தமுடியவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தான் என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை. சஜிஷிடம் பேசலாம். நட்பாய் எடுத்துச்சொல்லலாம். அவனும் கேட்கலாம் அல்லது கேட்பதுபோல் நடிக்கலாம். தனக்குத் தெரியாமல் இத்தனை செய்தவன், இதற்கு மேலும் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம். அப்படி நடந்தால் முன்பைவிட வெகு சாமர்த்தியமாக அவன் செய்யலாம். அது தனக்கு தெரிய வராமல் இருப்பது போல. அதுவா நான் எதிர்பார்ப்பது. என் பார்வைக்கு வராமல் தடுப்பதா நான் எதிர் நோக்குவது? ரவி யோசித்துக்கொண்டிருக்கையிலே ஒரு வாரம் கடந்து போனது. ஒரு வழியாக வேறு உருப்படியான யோசனைகள் தோன்றாத படிக்கு பேசித்தான் பார்ப்போமே, என்று ரவி முடிவு செய்த அடுத்து வந்த வாரத்தில் சஜிஷும் ரம்யாவும் சேர்ந்தார்ப்போல் கல்லூரிக்கு வரவில்லை.


தன்னிடம் கூட சொல்லாமல் எப்படிச் சென்றார்கள்? இருக்கிற குழப்பம் போதாதென இதென்ன புதுக்குழப்பம். ஒரே பாட்ச் என்பதால் அவர்களிருவரையும் பற்றி அதிக கேள்விகள் ரவியிடமே வந்தன அனைத்து தரப்பிலிருந்தும். அந்தப் பேச்சை தொடங்கவேண்டிய தேவை தற்போது இல்லாது போனதில் மனதின் ஓரமாய் ஒரு சின்ன நிம்மதி எட்டிப்பார்த்தாலும், அதை விடப்பெரிய குழப்பமாய் இருவரின் ஒட்டம் அமைந்ததில் ரவி ஆட்டம் கண்டிருந்தான். ஒரு மாதம் கழித்து அவர்களை பங்களுரில் பார்த்ததாக ஒரு முன்னாள் சீனியர் மாணவர் சொன்னதில் இருவரின் குடும்பத்தாரும் ஒரு படையாக கிளம்பிப்போனார்கள். ஆனால் போன வேகத்தில் அந்தந்த குடும்பங்கள் ஊர் திரும்பினார்கள். ஆனால், கடைசிவரை சஜிஷ், ரம்யா இருவரும் பங்களூர் விட்டு வரவேயில்லை.

அவர்களாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர்களாய் வாழட்டும் என்று விட்டு விட்டதாக இரு குடும்பத்தாரும் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டதில் ஒரு வகையில் நிம்மதி ரவிக்கு. இளம்காதலர்கள் தங்கள் காதலில் ஜெயித்துவிட்டார்கள். எப்படியோ, சஜிஷுக்கு இனிமேல் ரம்யா இருக்கிறாள். அதனால், விலைமாதுவிடம் போகவே வேண்டிய தேவை இருக்காது. சஜிஷை என்றாவது ஃபோனில் பிடித்தால், வாழ்த்துச்சொல்ல வேண்டும். செமஸ்டர் விடுமுறையில் ஒரு முறை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும். தான் போய் பார்த்தால் அவர்கள் இருவரும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

பின் வந்த வாரத்தில் ஒரு நாள் மேலும் ஒரு அதிர்ச்சி ரவிக்காய் காத்திருந்தது. அது, சஜிஷிடமிருந்து ஒரு அழைப்பு. அதுதான் கடைசி அழைப்பு என்று சொல்லிவிட்டு பேசத் தொடங்கிய சஜிஷ், தனக்கும் ரம்யாவிற்கும் பங்களுர் வந்த இரண்டு நாட்களிலேயே ரெஜிஸ்தர் அலுவலகத்தில் திருமணம் நடந்துவிட்டதாகவும், தானும் ரம்யாவும் தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் என்றும், தற்போது எய்ட்ஸ் நோய் எதிர்ப்புக்குழுவில் இணைந்து பிரசாரம் செய்வதாகவும், இனிமேல் சென்னை திரும்பப்போவதில்லை என்றும், தங்களை தேடவேண்டாம் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.ரவி முற்றிலும் நொருங்கிப்போனான். உற்ற நண்பர்கள் வாழ்வில் ஜெயித்துவிட்டதாக அவன் எண்ணியது தவறென்பது புரிந்தது. அவர்களாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர்களாய் வாழட்டும் என்று விட்டு விட்டதாக இரு குடும்பத்தாரும் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டதில் இருந்த அர்த்தம் புரிந்தது அவனுக்கு. என்ன நடக்கிறது? பாவம், ரம்யா. சஜிஷைக் காதலித்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவனுக்காய் தன்னையே கொடுத்தாள். ஆனால், அவளுக்கு சஜிஷ் என்ன கொடுத்தான்? எய்ட்ஸ். அதையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு அவனோடே இருக்கிறாள். எத்தனை பெரிய மனம்? இத்தனை பெரிய மனம் கொண்டவளை சஜிஷ் என்ன செய்திருக்க வேண்டும். உள்ளங்கையில் வைத்து தாங்கியிருக்க வேண்டுமல்லவா? பூவைப்போல பாதுகாத்திருக்க வேண்டுமல்லவா? அவளுக்காய் என்ன தந்திருக்கிறான்?


இத‌ற்கெல்லாம் ஒரு வ‌கையில் தானும் ஒரு கார‌ண‌மோ? சஜிஷை அந்த‌ விலைமாதுவுட‌ன் பார்த்த‌போதே ர‌ம்யாவிட‌ம் சொல்லியிருக்க‌ வேண்டுமோ? சொல்லியிருந்தால் அவ‌ர்க‌ளுக்குள் ச‌ண்டை வ‌ந்திருக்கும். பிரிந்திருப்ப‌ரா? ர‌ம்யாவாவ‌து காப்பாற்ற‌ப்ப‌ட்டிருப்பாளா? இல்லை அப்போதும் உட‌ன்க‌ட்டை ஏறியிருப்பாளா?
அழகான காதலி இருக்க சஜிஷை விலைமாதுவுடன் போக சொன்னது எது? இப்படி ஒரு ஆண்மகனை, ரம்யா போன்ற பெண்ணை காதலிக்க வைத்தது எது? ரம்யா அவனில் என்ன பார்த்தாள்? ரம்யாவின் கோணத்தில் சஜிஷ் முழுமையாகத் தெரியவில்லை? அல்லது சஜிஷ் முழுமையாய்த் தெரிந்த நேரம் ரம்யா தன்னை இழந்துவிட்டிருந்தாளா? சஜிஷுக்காவது ரம்யா ஒரு உயர்ந்த பெண்ணா? அல்லது அவளும் அவனுக்கு அந்த விலைமாதைப் போன்றவள் தானா?சஜிஷின் தகாத பழக்கம் தெரிந்ததும், அது ரம்யாவுக்கு தன் மூலமாய்த் தெரிய வந்தால், அவர்கள் காதலைப் பிரித்ததாக ஆகிவிடுமோ என்ற தன் முந்தைய கவலைக்கு தற்போது எந்த அர்த்தமுமில்லை என்றாகிவிட்டது. ஆனால், இப்போது அதை விட பெரிய கவலை வந்த பிறகு, முன்னதையே செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. முன்னர் தவறெனப்பட்டது இப்போது சரியெனப் படுகிறது. இது யார் குற்றம்? அல்லது யாரின் நிறை? இறைவனின் படைப்பு இதுவென்றால், இதில் மனிதனின் பங்கு வெறும் நடிப்பு மட்டும்தானா? மனிதனின் பங்கு வெறும் நடிப்பு இல்லையென்பதாக, முன்னதை நான் நடத்தியிருந்தால் ரம்யாவாவது பிழைத்திருப்பாளே? ஆனால், நான் என்னவாகியிருப்பேன்? துரோகியா? எதிரியா? அல்லது, என் நிலைப்பாட்டை அவர்களும் புரிந்துகொண்டிருப்பார்களா? ஒருவேளை, முன்னதை நான் நடத்தியிருக்க, அப்போது பின்னது நடவாமல் போயிருக்க, தேவையில்லாமல் நான் குற்றவாளி ஆகியிருப்பேனோ?

சம்பந்தப்பட்டவர்கள் உழன்றுகொண்டிருக்க ரவியின் தூக்கமில்லா இரவுகள் மீண்டும் ஒரு முறை கண்விழித்திருந்தன.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Friday, 5 March 2010

தேனீர் கோப்பைக்குள்...

என் இக்கவிதையை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
http://www.geotamil.com/pathivukal/poems_march2010.htm


தேனீர் கோப்பைக்குள்...

வட்ட வாய்
கோப்பைக்குள்ளிருந்து
வெள்ளை தேவதைகள்
மேலெழும்பிப் பறந்தன...

இனி எழும்ப‌
தேவதைகள் மிச்சமில்லை
எனும்போது,
அம்மணமாய் கிடப்பதை
உணர்ந்து ஆடை கொண்டு
மூடிக்கொண்டது தேனீர்,
கோப்பைக்குள்...