Sunday, 19 December 2010

தண்டனை - சிறுகதை


தண்டனை - சிறுகதை


ரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய‌ அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? எதிரியை மூர்க்கமாய்த் தாக்க வேண்டி, உள்ளங்கைகள் இறுக்கிப் பிடித்த உருட்டுக்கட்டையைச் சுற்றி தசை நார்கள் இருகி கட்டையின் தின்மையை எதிர்க்கும் நிலையில் அவன் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? சட்டென ஒரு மூர்க்கம் உடலெங்கும் இறங்கி திக்குத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடி, ஒரு வன்மம் இன்னும் இன்னும் அதிகரிக்கும் நிலையில் அவன் மன நிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியாதா! எனக்கும் இதற்கு முன் தெரியாது தான். ஆனால் இப்போது நானிருக்கும் நிலை அப்படி ஒன்றாக இருக்கலாமென்று தோன்றியது. என் ஒரு கஸ்டமரின் காரை சர்வீஸ் செய்ய பழுதுபட்ட ரேடியேட்டருக்கான ஸ்பேர் பார்ட் வாங்கலாமென்று போட்டிருந்த சட்டை பாண்டுடன் பைக்கில் வந்தவன் நான். ஆனால் இப்போது என் கையில் ஒரு உருட்டுக்கட்டை. இதோ இந்த ஒதுக்குப்புறமாக உள்ளடங்கி வேலை பாதியில் நின்று போன ஒரு கட்டடத்தில் மறைவாய் நின்றபடி காத்துக்கொண்டிருக்கிறேன் நான். இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு இருளாய் இருந்தது. யாருமில்லை. இன்று சனிக்கிழமை. என் கணிப்பு சரியாக இருந்தால் நாளையும் யாரும் வேலைக்கு வரமாட்டர். இன்றே ரத்தம் வர அடித்துப்போட்டு, சத்தம் போடாமலிருக்க வாயை உடைத்து, ரணமான இடங்களில் மண்ணடித்து, நகராமல் இருக்க கை கால்களை உடைத்துப்போட்டால், இரண்டு நாட்களுக்கு யாரும் வரமாட்டர். கிருமி அண்டி ரணப்பட்ட இடங்களில் நோய் பீடிக்கும். சீழ் பிடிக்கும். கொலையாக இல்லாவிட்டாலும் ஆறாத காயங்கள் பல உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும். அதற்கு இந்த இடம் தான் சரி.

என் பைக் பக்கத்து தெருவில் ஒரு மர நிழலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் அவனுக்காக காத்திருக்கிறேன். இந்த வழியாகத்தான் ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் போனான். அவன் போய் ஒரு மணி நேரம் இருக்கும். இதே வழியில்தான் வந்தாக வேண்டும். ஒரு மணி நேரம் முன் போனதால், இன்னேரம் திரும்பி வரலாமென்று எனக்கு தோன்றுகையிலேயே தூரத்தில் யாரோ ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் வருவது தெரிந்தது. அவனா என்று கண்களைச் சுருக்கிப் பார்த்தேன் நான். அவனேதான். அதே அரக்கு நிற கட்டம்போட்ட சட்டை. பச்சை நிறத்தில் லுங்கி.சுதாரித்துக்கொண்டேன். என் வ‌ல‌துகையில் அந்த‌ உருட்டுக்க‌ட்டை இறுக்கிப் பிடித்தேன். என் கையில் அது திட‌மாக‌ பொறுந்திற்று. சரியான உருட்டுக்கட்டை இந்தத் தாக்குதலுக்காகத் தானாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது. சுற்றிலும் யாரும் இல்லை. நான் ம‌றைந்திருக்கும் இட‌த்திலிருந்து அவ‌ன் வ‌ந்துகொண்டிருந்த‌ ம‌ண் சாலை அருகாமைதான். அத‌னால் க‌ண்ணிமைக்கும் நேர‌த்தில் அவ‌ன் அருகே வ‌ருகையில் அவ‌ன் முன்னே பாய்ந்து, அவ‌ன் முக‌த்தை நோக்கி வேக‌மாக‌ க‌ட்டையை வீசினால், முக‌ம் குலைந்து போகும். மூக்கு சில்லு உடைந்து ர‌த்த‌ம் கொட்டும். தாக்க‌ம் அதிக‌மாக‌ இருந்தால் க‌ழுத்தெலும்பு உடைந்து மூச்சுக்குழ‌ல் அடைத்து உயிர் போகும். அத‌னால் அத்த‌னை வேக‌ம் வேண்டாம். அவ‌ன் உயிரோடு இருக்க‌வேண்டும். ஆனால் ந‌டைப்பிண‌மாக‌ இருக்க‌ வேண்டும். அதனால் வேகம் குறைத்து வீச வேண்டும். மூர்ச்சையாகும் அளவு வீசினால் போதும். நிலைகுலைந்து விழும் அவனை உடனே அந்தக் கட்டிடத்தில் இருட்டான பகுதிக்கு இழுத்து வந்தவிட வேண்டும். அவனின் மொபெட் சாலையில் கிடக்குமே. யாராவது பார்த்துவிட்டால்?

மணி மதியம் 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. அதனால் அவன் சுயநினைவிழக்கும்வரை அவனை அடிக்கும் வரைக்கும் சற்று நேரம் அது ரோட்டில் கிடந்தாலும் பெரிதாக பிரச்சனை வராது என்றே தோன்றியது. அவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அந்த உருட்டுக்கட்டையை நான் இறுக்கியபடி அவன் மேல் பாய ஆயத்தமானேன்.

அவனின் மொபெட் மிக அருகில் நெருங்க, உருட்டுக்கட்டையை ஓங்கியபடி மறைவிலிருந்து திடீரென்று அவன் மேல் பாய்ந்து உருட்டுக்கட்டை வேகமாய் பக்கவாட்டிலிருந்து அவன் முகத்தை நோக்கி இறக்கினேன். அது அவன் மூக்கையும் வாயையும் அதகமாக தாக்கியிருக்கவேண்டும்.

'அ ஆஆஆஆ ம்மா' என்றபடி அவன் கீழே விழுந்தான். நிலைகுலைந்த மொபெட்டின் பின் சக்கரம் சறுக்கியபடி என் கால்களில் இடித்ததில் நானும் அவன் மேல் விழுந்தேன். என் கையிலிருந்த உருட்டுக்கட்டை சற்று தொலைவில் போய் விழுந்தது. நான் சுதாரித்துக்கொண்டு உருட்டுக்கட்டையை நோக்கி ஓட அவன் திடீரென்று நடந்த தாக்குதலில் சுதாரித்து வலியில் முனகிக்கொண்டே மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட எழ முயற்சிசெய்வது தெரிந்தது. அப்போது தான் கவனித்தேன். அவனின் இடது கால், முட்டிக்கு கீழே இருக்கும் பகுதி அவனுக்கு இல்லை. ஊனமுற்றவனா இவன்!! என் கோபம் அப்போதுதான் தலைக்கேறியிருக்கவேண்டும். வேகமாக அந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் அவன் தலையில் அடித்தேன். எழ முயற்சித்து என் இரண்டாவது தாக்குதலில் அவன் மீண்டும் விழுந்தான்.


இப்போதுதான் அவனுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும். தள்ளாடி விழுந்தான் அவன். இப்போது ரத்தம் மண்ணில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் விழுந்தது. யாரெனும் பார்த்துவிடுவார்களோ என்று தோன்றியது. அவனின் அரக்கு நிற சட்டையுடன் அவனை அந்தக் கட்டிடத்தின் இருட்டான பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே நெடுஞ்சாலையில் வாகனத்தில் சிக்கி காலுடைந்த நாயைப் போலக் கிடந்தான் அவன். என் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தேன். அவனை குப்புறப் படுக்க வைத்து கைகளை நீட்டி, கட்டையால் அடித்து உடைத்தேன். பக்கவாட்டில் சரிந்து கிடந்த ரத்தம் தோய்ந்த அவன் முகத்தில் ஓங்கி ஓங்கி தாடை உடையும் வரை அடித்தேன். அத்தனை தடவை அடித்தது என் பயிற்சியின்மையைக் காட்டியது. அவன் இப்போது அடங்கியிருந்தான். உயிர் இருந்தது. ஆனால் நினைவு இல்லை. அவன் கால்களை உடைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே அது உடைந்து இருந்ததால் அதை உடைப்பது இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக்கே இழுக்கு என்று தோன்றியது.

அவனை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்து சுற்றும்முற்றும் பார்த்தேன். சாலையில் யாருமில்லை. அவசர அவசரமாக அவனின் மொபெட்டை இழுத்து கட்டிடத்தின் ஓரத்தில் ஒதுங்கப் போட்டேன். அதன் மீது அங்கு கிடந்த பெயிண்ட் கொட்டிக்கிடந்த சாக்கை போட்டு மூடினேன். முழுவதும் மறையவில்லை. எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. சாலையிலிருந்து மண்ணை வாரி அவன் உடலில் ரத்தம் வரும் இடங்களிலெல்லாம் கொட்டினேன். கைகளைத் தட்டிவிட்டு விறுவிறுவென வெளியில் வந்தேன்.

ஏதும் நடவாதது போல் சாலையில் இறங்கி என் பைக் நிறுத்தியிருந்த அடுத்த தெருவை நோக்கி நடக்கத்தொடங்கினேன். நாளை ஞாயிற்றுக்கிழமை. யாரும் வேலைக்கு வரமாட்டர். நடு நிசியில் இவனுக்கு நினைவு திரும்பினாலும் இவனால் கத்தவோ, நகர்ந்து மற்றவர் பார்வையில் விழும் வகைக்கு அசையவோ முடியாது. அசைக்க உதவக்கூடிய எல்லா உறுப்புக்களையும் அடித்து உடைத்தாயிற்று. நாளை ஒரு நாள் முழுவதிலும் காயங்கள் ரணப்பட்டு, வலி கொடுத்து, சீழ் பிடித்து உடல் கெடும். அவனுக்கு கெட்ட நேரமானால், நாளடைவில் அதுவே அவனை இறக்கவும் செய்யும்.

அவன் மேல் ஏன் இவனுக்கு இத்தனை வன்மம் என்றுதானே யோசிக்கிறீர்கள்? இவன் என்ன செய்தான் தெரியுமா? கல்பனாவிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். அவளின் கைப் பிடித்து இழுத்திருக்கிறான். தன்னுடன் படுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். இப்படி ஒரு விதவையை பலவந்தப்படுத்துகையில் இவன் ஊனமுற்றவனாக இருந்திருக்கிறான். எத்தனை கொடூரம் நிறைந்தவனாயிருந்திருக்கிறான் பார்த்தீர்களா? கல்பனா யார் தெரியுமா? அவள் ஒரு இளம் விதவை. வயது 25 தான். அவள் கதையை கேட்கும் யாருக்கும் பரிதாபம் வரும். அவளுடையது காதல் திருமணம். ஆசை ஆசையாய் காதலித்தவனை திருமணமான மூன்றே வருடத்தில் ஒரு விபத்தில் பரிகொடுத்துவிட்டு மூலியானவள் அவள். அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். காதல் திருமணத்தால் பெற்றவர்களின் துணையில்லை. தனியொருத்தியாய் அந்த இளம் வயதில் தன் பெண் பிள்ளைக்காக வாழத்தலைபட்டிருக்கிறாள். அவளிடம் இப்படி நடந்திருக்கிறான் இந்த மனசாட்சியில்லாதவன்.

சரி, உனக்கேன் இத்தனை அக்கறை என்று தானே கேட்கிறீர்கள்? என்னைப்போல் நீங்களும் அக்கறைப்படாததால் தான் ஒரு மாதம் முன்பு சீரழிக்கப்பட்டாள் அந்தப் பேதை. அப்போதுதான் அவள் விதவை ஆகியிருந்தாள். இருந்த வீட்டில் இறந்துபோன கணவனின் நினைவுகள் அதிகம் வந்ததால், வேறு வீட்டிற்கு மாறச்சொல்லி சுற்றுப்பட்டவர்களால் அறிவுறுத்தப்பட்டிருககிறாள். அவள் வீடு மாற்றிச் சென்ற புதிய வாடகை வீட்டில்தான் அந்தக் கொடுமை நடந்தது. சில அப்பாக்களின் கடின உழைப்பு அவர்தம் மகன்களிடம் விரயமாகும். அப்படித்தான் விரயமானது என் அப்பா சம்பாதித்து கட்டிய வீடு. என் சோம்பேரித்தனத்துக்கும், முட்டாள்தனத்துக்கும், கையாளாகாத தனத்துக்கும் அந்த ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைத்த பணம் என் வயிற்றை வளர்த்தது. அதே வீடுதான் அவளை கெடவும் வைத்தது.

சிற்றின்பங்களையே சுவைத்து பழக்கப்பட்ட என் சிற்றறிவுக்கு அவளின் வனப்பான உடலையும், எடுப்பான முலைகளையும் பிருஷ்டங்களையும் அன்றி வேறெதுவும் தெரியவில்லை. புதிதாக வந்த வீட்டில் அவளுக்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. அவளின் கையிலிருந்த மொபைலை அவளின் குழந்தை தண்ணீரில் போட்டு பாழடித்திருந்தது. அதனால் தகவல் தொடர்புக்கு அடுத்தவர்களை அண்டியிருக்க வேண்டிய சூழ் நிலை. என் மனைவி ஊருக்குச் சென்றிருந்த ஒரு கரிய நாளில், அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது என் வீட்டு தொலைப்பேசியில். நான் துள்ளிக் குதித்தேன், பின்னாளில் நானே அதற்கு வருத்தப்பட்டு வேறொருவனைக் கொலை கூட செய்யத் துணிவேன் என்றறியாமல். விரைந்தவளை வரவழைத்தேன். ஓநாயையும் நம்பி வந்தது அந்தப் புள்ளிமான். அன்று அந்த வீட்டில் அது நடந்தது. முதலில் திமிறினாள். ஆனால் சத்தம் போடவில்லை. நேரம் செல்லச்செல்ல அடங்கிப் போனாள். அவளுக்கும் அதில் விருப்பமோ!!! நான் குதூகளித்தேன். எனக்கொரு இரை சிக்கிவிட்ட மகிழ்வு. பலவீனமாக அவள், என் படுக்கையில் , அவள் மேல் நான் பலவந்தமாய் முயங்கிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கரைந்து கண்ணீரானது ஏனென்று அப்போது புரியவில்லை. அன்றிரவு நான் ஆனந்தமாய் உறங்கினேன், அதுதான் என் நிம்மதியான இரவுகளில் எஞ்சிப்போன கடைசி இரவு என்று விளங்காமல். மறுநாள் அவள் என் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவள் இல்லை. அக்கம்பக்கத்தில் யாரிடமும் அவள் ஏதும் சொல்லவில்லை. என் நெஞ்சை ஈட்டியால் நிதமும் கிழித்தெடுக்க‌ அவளின் மெளனத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தாள், யாரோ ஒரு பண்பட்ட தாயால் வளர்க்கப்பட்டவள்.


அவளின் மானம் கப்பலேறிவிடக்கூடாதென்றுதான் அவள் சத்தம் போடாமலிருந்திருக்கிறாள். அவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லையென்றுதான் திமிறியிருக்கிறாள். இழப்புகளால் சிதிலமடைந்து உடலாலும் உள்ளத்தாலும் பலவீனமாய்த்தான் எதிர்க்க சக்தியின்றி அடங்கிப் போயிருக்கிறாள். அவளின் இருத்தல் தொலைந்து போன அந்த நொடிகள், சம்மட்டியால் என் புத்தியை அறைந்து சொல்லிக்கொண்டிருந்தன அவள் இல்லாத அந்த வீட்டில்.


நினைவு தெரிந்து அன்று தான் நான் அத்தனை அதிகமாய் பலவீனமாய் உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். ஊருக்கு முன் என் முகத்திரை கிழித்திருக்கலாம். யாருமில்லாத அந்த இரவில் கத்தியால் என் அந்தரங்கம் கிழித்து என்னைக் கொன்றிருக்கலாம். என் முகத்தில் ஆசிட் வீசியிருக்கலாம். போதையில் மயங்கி கிடந்த நேரத்தில் ஆள் வைத்து என்னை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லது கொன்றே இருக்கலாம். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் நான் திமிருடன் எதிர்த்திருக்கலாம், என்னை படுக்கக் கூப்பிட்டதாக அவள் மேல் சேற்றை வாரி இரைத்திக்கலாம், அவளின் ஃபோன் நம்பரை எல்லா தியேட்டர் பாத்ரூமிலும் விபசாரியென பெயரிட்டு கிறுக்கியிருக்கலாம், நடு இரவில் அவள் வீட்டு முன் அசிங்கம் செய்துவிட்டு கதவு தட்டிவிட்டு ஓடிப்போயிருக்கலாம், அவள் கையால் கொல்லப்பட்டிருந்தால் ஆவியாகி, அவள் மகளை கெடுத்திருக்கலாம்.


ஆனால், அவ‌ள் ஒரேயொரு மெளனத்தால் என்னை நடைப்பிணமாக்கியிருந்தாள். அதை மெளனம் என்று சொல்லிட முடியாதுதான். இயலாமை. ஆணாதிக்க உலகில் ஒரு கைம்பெண்ணாய் என்ன செய்துவிட முடியும் என்று அவள் நினைத்திருக்கலாம். பாலின சமத்துவத்தில் காணாமல் போய்விட்ட பெண்மையின் வெளிகளை தன்னால் மட்டும் தேடிட இயலுமாவென நம்பிக்கை இழந்திருக்கலாம். அத்தனை வருடங்களில் என்னைப் பெற்ற தாயால் கூட கழுவ முடியாத என் ரத்தத்தை பரிசுத்தமாக்கியிருந்தாள். ஒரே நொடியில் என் ஆண்மையின்மேல் நரகலை ஊற்றியிருந்தாள். இனி உயிர் உள்ளமட்டும் என் முகத்தை என்னாலேயே பார்க்க முடியாமல் செய்துவிட்டிருந்தாள். அன்று தொடங்கியது இந்த தண்டனை. இனி அவளுக்கு நான் காவல். எதுவரை காவல்? உங்களில் யாரோ என்னை அடையாளம் கண்டு, இதே போல் ஒரு பாதி கட்டப்பட்ட கட்டிடத்திலோ அல்லது நாற்றமடிக்கும் சாக்கடையிலோ என்னை அடித்து போடும்வரை காவல்.

அவளுக்கே தெரியாமல் அவளைத் தேடினேன். கண்டுபிடித்தேன். எனக்குப் பயந்து நான்கு ஊர் தள்ளிப் போயிருந்தாள் அவ‌ள். அவளுக்கே தெரியாமல் தினமும் அவளை பின்தொடர்கிறேன். அவளிடம் யாராவது தவறாக நடப்பதாக கேள்வியும் பட்டாலே போதும், அவனை இது போல் யாருமில்லாத சமயம் பார்த்து கையை காலை உடைத்து போடுவதென முடிவு செய்தேன். இந்தத் தண்டனைதான் எனக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். ஆறடி, தொண்ணூறு கிலோ எடை, பருத்த தொப்பை, உடல் முழுவதும் கருப்பாய் அடர்த்தியாய் ரோமம், அதிகமாய் குடித்ததால் வீங்கிப்போன தாடை, மிதமிஞ்சிய மைதுனங்களால் விழுந்துவிட்ட முன் தலை வழுக்கை என‌ காட்டுமிராண்டி போல் வளர்ந்திருந்ததால் எனக்கு அந்த தண்டனை தரப் பயந்து சிலர் கண்டும் காணாமல் போயிருக்கலாம். உண்மையில், அப்படி யாராவது என்னை அடித்திருந்தால், எலும்பு நொறுக்கியிருந்தால், குடல் கிழித்திருந்தால், மண்டை உடைத்திருந்தால், அந்தரங்கத்தை சிதைத்திருந்தால் கூட இத்தனை பலவீனப்பட்டிருக்க மாட்டேன். நான் அவளுக்கிழைத்தது என்னை பலவீனப்படுத்தியது. ஆறடிக்கு நின்றபடி, யாரும் பார்க்காத வகைக்கு மறைவாக நின்று அழவைத்தது. தினம் தினம் உள்ளுக்குள்ளேயே புழுங்கி சாக வைத்தது. என்னை ஊனமாக்கியது.

காலத்தை பின்னோக்கிப் பயணிக்க எல்லோருக்கும் ஆசை. எல்லோருக்கும் திருத்திக்கொள்ள கடந்த காலத்தில் ஒரு பிழை நிச்சயம் இருக்கிறது. ஆனால், காலம் பின்னோக்கி நகராது. நடந்தது நடந்ததுதான். அதை மாற்ற முடியாது. ஆனால், இனி நடவாமல் பார்த்துக்கொள்ளலாம். அதைத்தான் செய்ய நினைக்கிறேன். செய்துகொண்டும் இருக்கிறேன். இக்கதையிலும் காலத்தை பின்னோக்கி செல்லக்கூடிய வகையில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதை நான் எழுதும் இக்கணம் வரை அது நிகழவில்லை. அது, காலம் கடந்த பின்னும் நீங்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளவில்லை. தண்டனைக்கு இன்னும் ஏங்குகிறேன் நான். யாராவது என் கையை காலை அடித்து உடையுங்களேன். என் முகத்தில் அப்பிக்கிடக்கும் நரகலைத் துடைக்க ஒரு காயம் தாருங்களேன்.- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11975:2010-12-18-11-11-58&catid=3:short-stories&Itemid=266)

Thursday, 2 December 2010

எந்திரன் - சிறுகதை

எந்திரன் என்ற தலைப்பிலான இந்த என் சிறுகதை காற்றுவெளி இலக்கிய இதழில் (டிசம்பர் மாத இதழ்) வெளிவந்துள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 38வது பக்கம் மற்றும் சிறுகதையின் கடைசி பக்கங்களின் பிரதிகள் இங்கே.எந்திரன் - சிறுகதை


இங்கிலாந்தில் எடின்பர்க்கின் பிரின்ஸஸ் தெரு எப்போதும் போல் ஜன நடமாட்டத்துடன் காணப்பட்டது. வெவர்லி ரயில் நிலையத்திற்கு எதிராக அமைந்த மெக்டொனால்ட் உணவகத்தின் உள்ளே எப்போதும் போல் வெள்ளைக்காரர்களும், வேலை செய்ய வந்த இந்தியர்களும், இலங்கை தமிழர்களும், சில பாக்கிஸ்தானியர்களும் நிரம்பியிருந்தனர்.

'கார்த்தி, சம்படி ஹஸ் கம் டு சீ யு' வெள்ளைக்கார வாடிக்கையாளர் ஒருவருக்கு பர்கர் எடுத்துச்சென்றபடியே அந்த மெக்டோனல்ட் உணவகத்தின் ஓரத்தை பார்வையால் காட்டி சொல்லிவிட்டுச் சென்றான் மாறன்.

கார்த்தி எக்கிப் பார்த்தான். இரண்டு பேர் இவனையே பார்த்தபடி நின்றிருந்தனர். பார்க்க இலங்கைத் தமிழர்கள் போலிருந்தனர். இருவருமே ஜீன்ஸும் குளிருக்கு ஜெர்க்கின்னும் அணிந்திருந்தனர். கார்த்தி அவர்களருகே ஒரு தயக்கத்துடனே சென்று நின்றான். அவர்களில் ஒருவன் கார்த்தியிடம் கைகுலுக்கியபடி தொடங்கினான்.

'ஹாய் இட் இஸ் இம்மெட்டீரியல் டு நோ எபெளட் அஸ். மாறன் ஸ்போக் டு அஸ் எபெளட் யு. உங்கள் ப்ராஜெக்ட்டுக்கு நாங்கள் ஃபண்ட் தரோம். பதிலுக்கு நீங்கள் ஒரு காரியம் பண்ண வேணும்'. சொல்லிவிட்டு நிறுத்தினான் அவன். அவர்கள் பேசியது அச்சு அசலாக இலங்கை தமிழே தான். ஆனால் இப்படிப்பேசுவதே கூட ஒரு வகையில் குழப்பும் ட்ரிக் தான். உண்மையில் அவர்கள் இலங்கைத் தமிழர்களாகக்கூட இருக்க மாட்டர்.

கார்த்தி என்ன என்பது போல் பார்க்க மீண்டும் அவனே தொடர்ந்தான்.

'எந்திரன் தெரியுமா?'.

'ம்ம் சூப்பர் ஸ்டார் மூவி. ஆஸ்கார் மியூசிசியன் ஏ.ஆர்.ரஹ்மான், டைரக்டர் ஷங்கர்லாம் வொர்க் பண்ணிருக்காங்க. இன்னும் ரிலீஸ் ஆகல'.

'ஆமாம். ஆனா எங்ககிட்ட சிடி இருக்கு'.

'ரிலீஸாக இன்னும் ஒரு வாரம் இருக்கே. அதுக்குள்ளவா. எப்படி?'.

'அது உங்களுக்கு தேவையில்ல. இந்த சிடிய நீங்கள் சென்னைக்கு கடத்திப்போகனும். இதை நீங்கள் செய்துட்டால் நாங்கள் உங்களுக்கு ஃபண்ட் பண்றோம்'. அவ‌ன் சொல்லிவிட்டு நிறுத்தினான். அவ‌ன் பார்வை கார்த்தியின் கண்க‌ளை ஊடுறுவிக்கொண்டிருந்த‌தை உண‌ர‌ முடிந்த‌து.


கார்த்தி கம்ப்யூட்டர் சயின்ஸில் எம். எஸ் ப‌டிக்க‌ க‌ல்விக்கான‌ க‌ட‌னில் இங்கிலாந்து வ‌ந்திருந்தான். எடின்பர்க் அருகில் கல்லூரி. இப்ப‌டிப் ப‌டிக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ள், கைச்செல‌வுக்காக‌ மெக்டொனால்ட், பிட்சா ஹட், க்ளப், ஹோட்டல் முத‌லான‌ இட‌ங்க‌ளில் வேலை செய்வார்க‌ள். ஒரு ம‌ணி நேர‌த்துக்கு ஆறு முத‌ல் ஏழு ப‌வுண்ட் ச‌ம்ப‌ள‌ம். கிடைக்கும் நேர‌த்தில் இப்ப‌டி வேலை செய்தே க‌ல்விக்க‌ட‌ன் அடைப்போரும் இருக்கிறார்க‌ள். கார்த்தி அவ‌னுடைய‌ டிகிரியை வாங்க‌ ஒரு ப்ராஜெக்ட் செய்ய‌ வேண்டும். ஆனால், அத‌ற்கான‌ தொகையை க‌ல்விக்க‌ட‌ன் அளித்த‌ வ‌ங்கி த‌ர‌ ம‌றுத்துவிட்ட‌து. ரூம்மேட் நண்பன் மாறனிடம் கார்த்தி இதைச் சொல்லிப்புல‌ம்ப‌ அவ‌ன் இவ‌ர்க‌ளிட‌ம் கார்த்தியை கோர்த்துவிட்டிருந்தான்.

கார்த்தி ச‌ற்றே யோசித்துவிட்டு ச‌ரியென்றான். வேறென்ன‌ சொல்ல‌. இந்த‌ப் ப்ராஜெக்ட் செய்யாவிட்டால், ம‌திப்பில்லை. டிகிரி கிடைக்காது. இர‌ண்டு வ‌ருட‌ முய‌ற்சி வீண் போகும். வேறு வழியில்லை.

'குட். நாளை மறுநாள் நீங்கள் சென்னை போய் திரும்ப இங்கே வரும் செலவை நாங்களே பாத்துக்குவம். சென்னை போனதும் ஏர்போர்ட் வெளில எங்களவனிடம் சிடியை தந்துவிட வேணும். எங்களவன் எங்களிடம் ஃபோனில் சொன்னதும் இந்த ஃபைலையும், உங்களின் ப்ராஜெக்டுக்கான ஃபண்டயும் உங்கள் ஃப்ரண்டிடம் நாங்கள் தந்துவிடுவம்' என்றபடி அவன் ஒரு ஃபைலை எடுத்து மேஜைமேல் வைத்தான். அதில் கார்த்தியின் படிப்புச் சான்றிதழ்களும், இன்னபிற முக்கியமான படிப்பு தொடர்பான தஸ்தாவேஜுகளும் இருந்தன.

கார்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுடைய சர்டிஃபிக்கேட்கள் இவர்கள் கையில் எப்படி? கார்த்திக்குப் புரிந்துவிட்டது. இது நாள்வரை இவர்கள் தான் இந்தக் கடத்தலை செய்திருக்கவேண்டும். இப்போது போலீஸ் கெடுபிடி மற்றும் மற்ற கடத்தல் கும்பல்கள் ஒருவரைப் பற்றி மற்றோருவர் போலீஸில் போட்டுக்கொடுத்துவிடுவதால், முற்றிலும் புதியதான முறையில் தன்னை வைத்து கடத்தல் செய்ய நினைக்கிறார்கள். மாட்டாமல் கடத்திவிட்டால் ப்ராஜெக்ட். மாட்டிக்கொண்டால் அம்போதான். ஆனால் வேறுவழியில்லை. ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும். கார்த்திக் ஆமோதிப்பாய் தலையசைத்தான். அவர்கள் இருவரும் அவனைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தார்கள்.

'எப்படிக் கடத்த வேண்டுமென்று நாங்கள் சொல்லித்தருவம். நீங்கள் அத.....' அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே இடைமறித்தான் கார்த்தி.

'வேணாம். நானே பண்றேன்'. சொல்லிவிட்டு நிறுத்தினான் கார்த்தி.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முன்னர் பேசியவ‌னே மீண்டும் தொடர்ந்தான்.

'இதற்கு முன் செய்திருக்கிறீர்களா? எப்படிச் செய்வீர்கள்?'.

'அது என் பிரச்ச‌னை. இங்கிருந்து ஃப்ளைட் ஏறும்போது உங்ககிட்ட ஒரு சிடி தரேன். ரிஸ்க்கான மூவி சிடி நான் கடத்துன அன்னைக்கு மறுநாள் ரிஸ்கில்லாத அந்த சிடிய‌ உங்க ஆளு ஒருத்தன் கொண்டு வரட்டும். ரெண்டு சிடியும் இருந்தாதான் படத்தை பாக்க முடியும். அந்த இன்னொரு சிடி தான் கீ. சென்னைல கை மாத்துறதோட என் வேலை முடிஞ்சது. ஓகே வா'.

இருவரும் மீண்டும் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இப்போது அவர்கள் ஆமோதிப்பாய் தலையசைத்தார்கள்.


இரண்டு நாட்களுக்குப்பிறகு....

'பச்னா ஹை ஹஸீனோ, லோ மே ஆகயா, பச்னா ஹை ஹஸீனோ, லோ மே ஆகயா' மேஜை மீது பாடத்தொடங்கியிருந்த செல் ஃபோனை ஓடி வந்து எடுத்தான் திவாகர்.

'ஹலோ'

'ஹலோ திவா, நான் கார்த்தி பேசறேன்'.

'மாப்ள, வந்துட்டியா க்ளாஸ்கோலேர்ந்து. நம்பர் லோக்கல் லாண்ட்லைன் மாதிரி இருக்கு. எங்க இருக்க? ஜர்னிலாம் ஒகே தானே.'

'ம்ம் ஜர்னி ஓகே தான். இங்கதான் ஏர்போர்ட்லேர்ந்து தாம்பரம் போற ரூட்ல ஒரு பிசிஒலேர்ந்து பேசறேன்டா'.

'ஒ ஒகேடா. என்னடா என்னென்னமோ கேள்விப்பட்டேன். இங்கிலாந்துல‌ பண்ணிட்டிருந்த எம் எஸ்ஸ பாதில விடறதா இருக்கியாமே'.

'ஆமாடா, ப்ராஜெக்ட் பண்ண ஃபண்ட் பத்தல. இப்போதைக்கு மெக்டொனால்ட்ஸ்ல பண்ற பார்ட் டைம் ஜாப்ல கிடைக்கிற பணம் ப்ராஜெக்டுக்கு பத்தாது. அத விட்றா. நான் பாத்துக்குறேன். ஒரு மேட்டரு. நீ ஒரு பொலேரோ வச்சிருந்தியே. அது இப்பவும் உன்கிட்ட இருக்குல?'

'ம்ம். இருக்குடா'.

'ம். எனக்காக ஒரு காரியம் பண்ணேன். நாளைக்கு காலைல ஒரு கேர்லெஸ் ஆக்ஸிடென்ட் ஒண்ணு பண்ணேன்'.

'என்ன, கேர்லெஸ் ஆக்ஸிடென்டா? அதென்ன கேர்லெஸ் ஆக்ஸிடென்ட்?

'கேர்ஃபுல்லா பண்ணினா சம்பந்தப்பட்டவன் செத்துருவான். கேர்லெஸ்ஸா பண்ணினா அவன் லக்கேஜ் மட்டும் நாஸ்தி ஆகும். நாளைக்கு எமிரேட்ஸ் ஃப்ளைட்ல ஒருத்தன் க்ளாஸ்கோலேர்ந்து காலைல எட்டு மணிக்கு வரான். அவனோட ஃபோட்டோ உனக்கு மெயில் அனுப்பியிருக்கேன். அவன்கிட்ட ஒரு கருப்பு கலர் அமேரிக்கன் டூரிஸ்டர் லக்கேஜ் இருக்கும். அந்த லக்கேஜை மொத்தமா நசுக்கணும். எப்படி என்னனு நீயே யோசிச்சுக்க. ஆனா கண்டிப்பா பண்ணிடுடா'.

'டேய் என்னடா சொல்ற. ஏன் இது? அவன் வண்டி நம்பர நோட் பண்ணி போலீஸ்ல கம்ப்ளெய்ன் பண்ணிட்டான்னா? எங்க அப்பா வண்டிடா அது'.

'டேய், அவன் போலீஸுக்கேல்லாம் போக மாட்டான்டா. நான் டீடெயிலா நாளைக்கு சொல்றேன். இப்போதைக்கு நான் ஜாஸ்தி பேசமுடியாது. நியாபகம் வச்சிக்கோ. நாளைக்கு எட்டு மணிக்கு எமிரேட்ஸ் ப்ளைட். கண்டிப்பா பண்ணிடு மச்சான். பை'. டெலிஃபோன் அவசரமாக வைக்கப்பட்டது.

திவாகர் செல்ஃபோனை ஒரு முறை சுருங்கிய புருவங்களுடன் பார்த்துவிட்டு மேஜையில் வைத்தான். டீவிக்கருகில் இருந்த கீ ஸ்டாண்டில் போலெரோவின் சாவியை அவன் பார்வை நிலைகுத்தியது.

கார்த்தி எப்போதுமே இப்படித்தான். திடீரென்று தந்தி அடிப்பது போல ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவான். எதையாவது செய்யச் சொல்வான். அடுத்த சந்திப்பில் ஏன் செய்யச்சொன்னதென்று சொல்லிவிடுவான். அவனிடம் அப்படி செய்யச்சொல்வதற்கான காரணங்கள் எப்போதுமே சரியாக இருக்கும். சில நேரங்களில் அந்தக் காரணங்கள் இனிமையாகவும் இருக்கும். ஒரு நாள் இப்படித்தான், திடீரென்று பாக்கேட்டில் பதினைந்தாயிரம் பணத்தோடு தி. நகர் எல்.கே.எஸ் வர சொல்லிவிட்டான். அவசர அவசரமாக அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி கொஞ்சம் வாங்கி, மீதிக்கு நண்பனின் மோதிரத்தை அடகு வைத்து எடுத்துக்கொண்டு போனால், அங்கு திவா நீண்ட நாட்களாய் சைட் அடித்தும் அன்றுவரை பேசிக்காமல் இருந்த மைதிலியுடன் நின்றிருந்தான் கார்த்தி. என்ன ஏதென்று விசாரித்ததில் மைதிலி தன் ஒரு பவுன் செயினை தொலைத்துவிட்டு வீட்டில் திட்டுவார்களே என்று அழுதுகொண்டிருந்ததாகச் சொல்லவும் திவா அந்தப் பணத்தில் அதே போன்றதொரு செயினை வாங்கிக்கொடுக்க, அன்று விழுந்தது ஆழமாய் ஒரு காதல் வேர் திவாவுக்கும் மைதிலிக்கும். அதனாலேயே திவாவுக்கு கார்த்தியின் இது போன்ற தந்திச் செய்திகளை எப்போதுமே தட்ட முடிந்ததில்லை.


திவா உடனே தன் மெயில் பாக்ஸை திறந்து பார்த்தான். கார்த்தியின் ஒரு மெயிலில் அந்த ஆளின் ஃபோட்டோ இருந்தது. ஃப்ரென்ச் தாடியுடன், கோதுமை நிரத்தில், கண்ணாடியுடன், டீக்காக ட்ரஸ் செய்தபடி ஏதோ ஐ.டி நிறுவன ஊழியன் போலிருந்தது. அந்தப் புகைப்படத்தை பிரின்ட் எடுத்துக்கொண்டான். அடுத்த நாள் செய்யப்போகும் ஆக்ஸிடெண்ட்காக போலெரோவை சரிபார்த்துவிட்டு, சிகப்பு நிறத்தில் எல் போர்டு முன்னேயும் பின்னேயும் ஒட்டிவிட்டு, வேறு ஏதோ ஒரு நம்பருக்கான ஸ்டிக்கரை நம்பர் ப்ளேட்டில் ஒட்டிவிட்டு, ராத்திரி அருகிலிருந்த கிரவுண்டில் மோதுவதுபோல் ஓட்டி பயிற்சி செய்ததில் இரவு சற்றே வித்தியாசமாகத்தான் கழிந்தது.

மறு நாள் காலை ஏழு மணிக்கே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திவா ஆஜ‌ர். க்ளாஸ்கோவிலிருந்து எமிரேட்ஸ் ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வந்திருந்தது. ச‌ரியாக‌ 7:50க்கு திவா போலேரோவை ஸ்டார்ட் செய்துவிட்டு காத்திருக்க‌, ஃபோட்டோவில் பார்த்த‌ ஆள் விமான‌ நிலைய‌த்தின் வெளியே வ‌ந்த‌தும், கையோடு கொண்டு வ‌ந்திருந்த‌ க‌றுப்பு நிற‌ அமேரிக்கன் டூரிஸ்ட‌ரை கீழே வைத்துவிட்டு செல்ஃபோனில் சிம் மாற்றி யாரிட‌மோ பேச‌த்தொட‌ங்க‌, திவா வ‌ண்டியைக் கிள‌ப்பி வேக‌மாக‌ ஓட்டி நிமிஷ‌த்தில் அவ‌ன‌ருகில் வேக‌மாய்ச் செல்ல‌ ச‌ட்டென‌ அவ‌ன் வ‌ண்டியை பார்த்துவிட்டு அனிச்சையாய் ஒதுங்க‌, வ‌ண்டியின் வ‌ல‌து முன் ம‌ற்றும் பின் ச‌க்க‌ர‌ங்க‌ள் அந்த‌ அமேரிக்கன் டூரிஸ்ட‌ர் பையை மொத்த‌மாய் ந‌சுக்கிவிட்டு சிட்டாக விமான நிலையத்தை விட்டு வெளியே ப‌ற‌ந்த‌து போலேரோ.

வடபழனி சிக்னலில் வலதுபுறம் திரும்பி, ஜன நடமாட்டம் இல்லாத நான்காவது இடது புறத்தில் வண்டியை திருப்பி நிறுத்தி, ஒட்டிய நம்பர் ப்ளேட் ஸ்டிக்கரை பிய்த்து கசக்கி எறியவும், கார்த்தி திவாவின் மொபைலில் கால் செய்யவும் சரியாக இருந்தது.

'திவா, முடிஞ்சதா?'

'ஆங், முடிஞ்சது. ஆனா, ஏன் இப்படி பண்ண சொன்ன மச்சான். அவனால ஏதாவது பிரச்சனையா?'.

'ம்ம் சொல்றேன். இப்ப நீ அண்ணா நகர் டவர்கிட்ட வரியா. நான் அங்கதான் இருக்கேன். வா. சொல்றேன்'.

'ம்ம் சரிடா. அங்க மெயின் கேட்ல நில்லு. நான் வந்துடறேன். பை'.

திவா ஃபோனை அணைத்துவிட்டு வண்டிக்குள் தாவி அமர்ந்து வண்டியை அண்ணா நகர் டவருக்கு விரட்டினான். டவர் வாசலில் வண்டியை பார்க் செய்துவிட்டுத் திரும்ப, தூரத்தில் கார்த்தி பார்க்கில் ஒரு பெஞ்சில் அமர்ந்து உள்ளே வரச்சொல்லி சைகை செய்வது தெரிந்தது. திவா, மெயின் கேட்டை ஊடுறுவி, அவன் அருகே சென்று கைக்குலுக்கி அமர்ந்து கொள்ள திவாவிடம், ஆக்ஸிடண்டிற்கான காரணத்தை விளக்கத்தொடங்கினான் கார்த்தி.

'என்ன, ஃபண்டுக்காக எந்திரன் மூவி டிஸ்க் கடத்தினியா? எப்படி? ஏர்போர்ட்ல மாட்டலயா? டிஸ்கையெல்லாம் சிடி டிரைவ்ல போட்டு செக் பண்ணிருப்பானே'.

'ஆமா திவா. அப்படித்தான் பண்ணினானுங்க. ஆனா, டிஸ்க்ல எழுதுற சாஃப்ட்வேர் நானே எழுதினதாச்சே. அவனுங்க வச்சிருக்கறது மார்க்கேட்ல கிடைக்கிற விண்டோஸ் சிடி டிரைவ்ல. அதுல ஒவ்வொரு 8 பிட்டயும் பாரிட்டி
பிட்ஸொட‌ 14 பிட்ஸ்ல எழுதியிருப்பாங்க. ஆனா, என்னோட சாஃப்ட்வேர்ல அந்த 14 பிட்ஸ 28 பிட்ஸ்ல என்கோட் பண்ணி எழுதுறாமாதிரி டிசைன் பண்ணிருக்கேன். அப்படி எழுதின டிஸ்க, சாதாரண டிஸ்க் டிரைவ்ல போட்டா ஃபார்மட் ஒத்துப்போகாம‌ கரப்ட் ஆன டிஸ்க் எப்படி இருக்குமோ அப்படித்தான் காமிக்கும். அவன் நாலு டிஸ்கையும் செக் பண்ணினான். ப்ராஜெக்டுக்கான டேடா டிஸ்குன்னு சொல்லிட்டேன்'.

'சரி கார்த்தி, ஆனா என்ன எதுக்கு அந்த கருப்பு பேக்கை நசுக்க சொன்ன?'.

'ஓ அதுவா, அந்த பேக்ல தான் இந்த டிஸ்க்ல என்கோட் பண்ணி எழுதியிருக்குற டேடாவ படிக்கிறதுக்கான சாஃப்ட்வேர பதிஞ்சி வச்சிருக்கேன். அந்த சாஃப்ட்வேர் இல்லாம எந்திரன் மூவிய டீகோட் பண்ணி எடுக்க முடியாது. மாறன்கிட்ட ஃபோன்ல பேசினேன். என்னோட சர்டிபிக்கேட்ஸயும், ப்ராஜெக்டுக்கான ஃபண்டயும் மாறன் கிட்ட கொடுத்துட்டானுங்க. இப்ப இந்த சாஃப்ட்வேருக்கு மறுபடியும் அவுங்க என்கிட்ட தான் வந்தாகணும். ஆனா, நான் மறுபடி ரெடி பண்றதுக்குள்ள எந்திரன் படமே ரிலீஸாயிடும். அவனவன் வட்டிக்கு காசு வாங்கி வருஷக்கணக்கா உழைச்சி படம் எடுத்தா, இவனுங்க அசால்ட்டா திருட்டு விசிடி பண்ணி வயித்துல அடிக்கிறானுங்க. அதான் இப்படி ஆப்பு வச்சேன். அதோட என் ப்ராஜெக்டுக்கும் பணம் கிடைக்குதுல‌'.


'அட‌ப்பாவி, பெரியாளுடா நீ'. என்றவாறே வாய் பிளந்தான் திவா.- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11766:2010-12-01-22-10-45&catid=2:poems&Itemid=265)
காற்றுவெளி இலக்கிய இதழ் (டிசம்பர் 2010)

Tuesday, 12 October 2010

க‌ற்ற‌து த‌மிழ் - சிறுக‌தை

க‌ற்ற‌து த‌மிழ் - சிறுக‌தை


அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான்.இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த‌ தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற செய்தி தான் அதற்கு காரணம்.


மாலதி பி.ஏ படிக்கிறாள். அதுவும் தமிழில். முருகனிடம் சீனியர் என்கிற முறையில் பேச ஆரம்பித்தது. மாலதி, முருகனின் தமிழ் கவிதைகளின் விசிறி. அப்படியே ஏற்பட்ட நட்பு, முருகனின் மனதில் காதலை விதைத்திருக்கிறது.


தன் காதலை போய் மாலதியிடம் சொல்லிடலாம் தான். ஆனால் எப்படி சொல்வது. அவனுக்கோ வேலைவெட்டி இல்லை. கிராமத்தில் அப்பம் விற்று அம்மா அனுப்பும் தொகையில் தான் இங்கு சென்னையில் இந்த பேசிலர் ரூமில் தங்கிக்கொண்டு அவன் வேலை தேடுகிறான். என்னதான் தமிழில் எம்.ஏ, டிஸ்சிங்சனில் பாஸ் செய்திருந்தாலும், வேலை கிடைப்பதென்னவோ குதிரைக்கொம்பாக இருக்கிறது. எங்கு போய் வேலை கேட்டாலும் துரத்துகிறார்கள். வங்கிகளில் மார்கெட்டிங் துறை இந்த ரெசசனில் படுத்து விட்டது. அதை விட்டால் ஐ.டி துறையில் பி.பி.ஒ வில் தான் வேலை வாய்ப்பு இருக்கிறது. மற்றவை எல்லாம் தற்காலிக வேலைகளே. இங்கிலீசில் சரளமாய் பேச வேண்டுமாம். டிகிரிக்கேற்றார்போல் சம்பளம். ஆனால் பள்ளியிலிருந்தே தமிழ் மீடியத்தில் படித்ததில் ஆங்கிலம் அவ்வளவாக பழகவில்லை. இதில் எங்கிருந்து சரளமாய் பேசுவது, வேலை வாங்குவது, பெண் கேட்பது.


ஏதாவ‌து செய்ய‌ வேண்டும். இத்த‌னை வ‌ருட‌ம் த‌ன்னை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு படிக்க‌ வைத்த‌ அம்மாவை அவ‌ளின் வ‌ய‌தான‌ கால‌த்திலாவ‌து ந‌ன்றாக‌ வைத்து காப்பாற்ற‌ வேண்டும். தலை நிமிர்ந்து மாலதியிடம் தன் காதலை சொல்ல வேண்டும். மால‌தியின் பெற்றோரிட‌ம் க‌வுர‌வ‌மாய்ப் பெண் கேட்க‌ வேண்டும். இத‌ற்கெல்லாம் தேவை நல்ல சம்பளத்தில் ஒரு வேலை. என்ன‌ செய்ய‌லாம். எப்ப‌டிச் செய்ய‌லாம்.


முருக‌னுக்கு இருப்பு கொள்ள‌வில்லை. ஆண்பிள்ளைக்கு அழ‌காய் ல‌ட்ச‌ண‌மாய் வேலையில் இல்லாம‌ல் இருப்ப‌து அவ‌ன் ம‌ன‌தை பார‌மாய் அழுத்திய‌து. த‌ன் காத‌லை த‌ன‌க்கு சொந்த‌மாக்கிக் கொள்ள‌ முடியாத‌ நிலை அவ‌ன் தூக்க‌த்தை, பசியை விர‌ட்டிய‌து. பெற்று வளர்த்த தாயை காப்பாற்ற இயலாத தன் இயலாமையை கண்டு அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.


விர‌க்தி த‌னிமைப்ப‌டுத்தும். அவ‌னையும் த‌னிமைப்ப‌டுத்தியிருந்த‌து மொட்டை மாடியில். இந்த‌ விர‌க்தியை வாழ்நாளில் ஒருமுறையேனும் ச‌ந்திக்காத‌ ம‌க்க‌ள் யாருமில்லை. கோழைக‌ள் விப‌ரீத‌ முடிவைத் தேடுவார்க‌ள். முருக‌ன் கோழைய‌ல்ல‌. நிதான‌மாய் சிந்தித்தான்.

க‌டின‌மான‌ காரிய‌த்தை முத‌லிலேயே செய்து விட்டால் பின் வ‌ரும் அனைத்துக் சுல‌ப‌மே. க‌டின‌மான‌தும், அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் கிடைக்க‌ப்பெறுவ‌துமான‌ வேலைக்கு முய‌ற்சி செய்தால்தான், குறைந்த‌ப‌ட்ச‌ வேலையாவ‌து க‌ட்டாய‌ம் கிடைக்கும். அந்த‌ வ‌கையில் பி.பி.ஒ வேலைக‌ள் தான் முத‌லில் வ‌ருகின்ற‌ன‌. பி.பி.ஒ
வேலைவாய்ப்புக்க‌ளில் முக்கால் ச‌த‌வீத‌ம் ஆங்கில‌ப்புல‌மையை சார்ந்தே இருக்கிற‌து. வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ வேண்டிய‌ திற‌மையும் அதுதான். 216 எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ த‌மிழைக் க‌ரைத்துக்குடிக்க‌ முடியுமென்றால், அதில் எட்டில் ஒரு ப‌ங்கு ம‌ட்டுமே உள்ள, மொத்த‌மே 26 எழுத்துக்க‌ளை ம‌ட்டுமே கொண்ட‌ ஆங்கில‌ம் எப்ப‌டி ச‌வாலாக‌ இருக்க‌ முடியும். மேலும், தொட‌ர்பு கொள்ளும் எந்த வெளிநாட்ட‌வ‌ரிட‌மும்‌ அதிக‌ம் போனால் ஐந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் பேச‌ வேண்டிய‌ தேவை இராது. ஐந்து நிமிட‌ங்க‌ளில் என்னென்ன‌ பேசிவிட‌ முடியும் என்று சுல‌ப‌மாக‌ க‌ணிக்க‌லாம். அதை, ச‌ப்த‌ம் முத‌ற்கொண்டு ஒரு பாட‌ல் போல ம‌ன‌ப்பாட‌ம் செய்துவிட்டால் வேலை முடிந்த‌து. த‌மிழின் வெண்பா, தொல்காப்பிய‌ம், அக‌நானூறு முத‌லானவ‌ற்றில் உள்ள‌, உச்ச‌ரிக்க‌ க‌டின‌மான‌‌ பாட‌ல்க‌ளையே அடிப்பிற‌ழாம‌ல் ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பித்த‌ த‌ன்னால், 26 எழுத்துக்க‌ளில் ஆங்கிலத்தை அவர்கள் எதிர்பார்க்கும் ஸ்டைலில் பேச‌ முடியாதா? நிச்ச‌ய‌ம் முடியும். எந்த‌ வித்தையும் ப‌ழ‌க‌ ப‌ழ‌க‌ வ‌ச‌ப்ப‌டும்.


முருக‌ன் ந‌ம்பிக்கை பூண்டான். பி.பி.ஓ வேலைவாய்ப்புக‌ளுக்கு த‌யார் செய்யும் ஒரு க‌ன்ச‌ல்ட‌ன்சி க‌ம்பெனியை ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்து அனுகி, த‌வ‌ணையில் 3500 ஃபீஸ் க‌ட்டுவ‌தாக‌ச் சொல்லிச் சேர்ந்தான். அங்கு ஆங்கில‌ உச்ச‌ரிப்பு ப‌ழ‌கினான். ஒரு தொலைபேசி உரையாட‌லில் அதிக‌ப‌ட்ச‌ம் என்னென்ன‌ அம்ச‌ங்க‌ள் இருக்குமென்று வ‌கை பிரித்து, ஒவ்வொன்றாய் பேசிப் ப‌ழ‌கினான். வீட்டில் த‌னிமையில் க‌ண்ணாடி முன் அம‌ர்ந்து ஒரு பாட‌ல் போல் சொல்லிப்பார்த்து ப‌ழ‌கினான். அவ‌ன் எதிர்பார்த்த‌தையும் விட‌ ஆங்கில‌ம் மிக‌ சுல‌ப‌மாக‌ வ‌ந்த‌து. த‌மிழின் தொன்மைக்கு முன் ஆங்கில‌ம் எம்மாத்திர‌ம்.


அவ‌ன் முய‌ற்சியை, புத்திசாலித்த‌ன‌மாய், ஒரு தொலைபேசி உரையாட‌லைக் குறிவைத்து, வ‌கை பிரித்து அவ‌ன் அணுகிய‌ முறையை, அதில் காட்டிய‌ க‌டின‌ உழைப்பை, உச்ச‌ரிப்பில் காட்டிய‌ நுணுக்க‌த்தை க‌ன்ச‌ல்ட‌ன்சி வெகுவாக‌ப் பாராட்டிய‌து. அதுவே அவ‌னை ஒரு ந‌ல்ல‌ பி.பி.ஓ க‌ம்பெனிக்கு நேர்காண‌லுக்கு சிபாரிசு செய்த‌து. நேர்காண‌லில் த‌ன் வெற்றியைப்ப‌திவு செய்த‌ முருக‌னுக்கு மாத‌ம் பதினைந்தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌த்தில் வேலை கொடுத்தது அந்த கம்பெனி. அது த‌விர‌, மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ், போக்குவ‌ர‌த்து, திற‌மையாய் வேலை செய்யும் ப‌ட்ச‌த்தில் ஆறு மாத‌த்திற்கொருமுறை ச‌ம்ப‌ள‌ உய‌ர்வும் அளிப்ப‌தாக‌ உறுதிய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.


முருக‌ன் இறைவ‌னுக்கு உள‌மாற‌ ந‌ன்றி சொன்னான். கிராம‌த்திற்கு சென்று அம்மாவிட‌ம் வேலை கிடைத்த‌து ப‌ற்றி சொன்னான். பெற்ற‌வ‌ள் வ‌யிறு குளிர்ந்தாள். ம‌க‌னை உச்சி மோர்ந்தாள். அம்மாவை சென்னைக்கு கூட்டி வ‌ந்து வாட‌கைக்கு வீடு பிடித்து குடிய‌ம‌ர்த்தினான். கேஸ் வ‌ச‌தியும், தவணையில் ஃப்ரிஜ் ம‌ற்றும் வாஷிங்மெஷின் வாங்கி, வ‌ய‌தான‌ அம்மாவிற்கு அதிக‌ வேலையில்லாம‌ல் பார்த்துக்கொண்டான்.


ஒரே ஏரியா என்ப‌தால் மால‌திக்கும், அவ‌ள் வீட்டாருக்கும் விஷ‌ய‌ம் போயிற்று. மால‌தி வீட்டார் முருக‌னைப் பெருமையாய் பேசினார்க‌ள். ஒரு ந‌ல்ல‌ நாளில், மால‌தியிட‌ம் த‌ன் ம‌ன‌ம் திற‌ந்தான் முருக‌ன். மாலதி மெளனமாய் சிரித்து சம்மதம் சொன்னாள். மாலதி மூலமாக அவள் வீடு வ‌ரை விஷ‌ய‌ம் போயிற்று. முருக‌ன் மால‌தியின் ச‌ம்ம‌த‌த்துட‌ன், த‌ன் அம்மாவுட‌ன் மால‌தி வீடு வ‌ந்து பெண் கேட்டான். இரு வீட்டாருக்கும் ச‌ம்ம‌தமாக‌, ஒரு ந‌ல்ல‌ நாளில் மால‌தி முருக‌ன் திரும‌ண‌ம் இனிதே ந‌ட‌ந்த‌து.சென்னையில், சொந்த‌மாய் வாங்கிய‌ ப்ளாட்டில், கார் வ‌ச‌தியுட‌ன், மால‌தி முருக‌ன் த‌ம்பதியை, நான்கு வ‌ய‌து குழ‌ந்தை ஒன்று, 60 வ‌ய‌துக் குழ‌ந்தை ஒன்றுமாக இரண்டு குழந்தைகளாய் வைத்து அழகு பார்த்தது அடுத்து வந்த ஐந்து வ‌ருட‌ங்க‌ள். முருக‌னின் த‌மிழ்ப்ப‌ற்று, ஐந்து வருட தமிழ் கல்லூரி படிப்பு, அதையும் ஆர்வமுடன் பயின்றது அவ‌னின் டி.என்.ஏ வில் ப‌திந்திருந்த‌து. அந்த‌ நாவ‌ன்மையின் சாரம், அவ‌னின் நான்கு வ‌ய‌துப் பெண், த‌மிழ‌ர‌சியின் நாவில் சேர்ந்திருந்த‌து. த‌மிழ‌ர‌சி, ச‌ங்கீத‌ம் ப‌யின்றாள். முருக‌னின் க‌விதைக‌ளைப் பாட‌ல்க‌ளாக்கி த‌மிழ‌ர‌சிக்கு சொல்லிக்கொடுத்தாள் மால‌தி. த‌மிழ் அந்த வீட்டையே தமிழாக்கியிருந்தது.


- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11010105&format=html)

Saturday, 2 October 2010

ஒரு பைத்தியமும் ஒரு கொலையும் - சிறுகதைஒரு பைத்தியமும் ஒரு கொலையும் - சிறுகதை


ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா.


இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து, புடுபுடுவென புல்லட் சத்தம் காதைக்கிழிக்க பவனி வரும் ஒரு உதவாக்கரை. ஏழ்மை காரணமாக புவனா அதே ஊரில் ஒரு காய்கறிக்கடையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். என்ன‌தான் காய்கறிக்கடையில் வேலை என்றாலும் புவ‌னாவிற்கு ம‌ன‌சு ரொம்ப‌ பெருசு. த‌ன்னால் முடிந்த‌வரை, யாரென்றும் பாராமல் தைரியமாய் எல்லோர்க்கும் உத‌வுவாள். அதே ஊரில் பைத்திய‌மாய்த் திரிந்து கொண்டிருந்த மஞ்சு என்ற ஒரு பெண்ணை ஒரு ம‌ழை நாளில் சில‌ பொறுக்கிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்பார்க்க‌, அதைத் த‌ந்திர‌மாய்த் த‌டுத்து அவ‌ளை அன்று முத‌ல் பாதுகாப்பாய் த‌ன் வீட்டிலேயே த‌ங்க‌ வைத்த‌வ‌ள். என்ன‌தான் ம‌ஞ்சுவிற்கு பைத்திய‌ம் தெளிந்தாலும், ஊர் ந‌ம்ப‌ ம‌றுக்க‌ த‌ன் ச‌கோத‌ரியாய் அவ‌ளைத் த‌ன் ஒத்தாசைக்கு என்று கார‌ண‌ம் சொல்லித் த‌ன்னுட‌னேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். வீடுவீடாய் ட்ரை சைக்கிளில் சென்று காய்கறி விற்ப‌துதான் வேலை. ம‌ஞ்சுவும் புவ‌னாவும் மாறி மாறி செய்வார்க‌ள்.


உதவி கேட்க ஆயிரம் பேர் இருந்தும் ஓரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி இவனிடம் பண உதவி கேட்டு, திருப்பிதர முடியாமல் போகவே, அந்த பணத்திற்கு ஈடாக நன்றாய் வளர்ந்து ஆளாகியிருந்த, அழகு மயில் புவனாவை 'வைத்துக்கொள்வதாக' வைரவன் கட்டாயப்படுத்த, அதனால் வந்த மாரடைப்பில் விழுந்தவர்தான், இதோ வீடே துக்கவீடாய் மாறியிருந்தது.


அந்த மோசமான சூழ் நிலையிலும், கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சியின்றி புவ‌னாவை த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தான். கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி அருணா என்கிற பெண்ணை தூது அனுப்பி, அதிலும் தன் அனுபவத்தை காட்டியிருந்தான். புவனாவிற்கு சகலமும் புரிந்துபோனது. அவன் நிறுத்தப்போவதில்லை. அவன் ஒரு மிருகம். மிருகத்திடம் மனசாட்சி எதிர்பார்க்க முடியாது. தவிர்க்க முடியாது என்று தெரிந்துவிட்டபின் போராடிப் பலன் இல்லை. இதை வேறுவிதமாகத்தான் அணுகவேண்டும்.


தூதாய் வந்த பெண்ணிற்கு இதில் நல்ல அனுபவம் போல. பக்குவமாய் புரிய வைத்தாள். புவனா ஒரு முடிவிற்கு வந்தாள். அங்கீகரிப்பாய் புன்னகை செய்தாள். அதில் பல அர்த்தங்கள் உள்ளடக்கினாள். கடைக்குச்சென்று மீடியம் சைஸ் சட்டை ஒன்றை வாங்கி தூது வந்தவளிடம் தந்தனுப்பினாள். யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்படி வைரவனிடம் சொல்லச்சொல்லி அனுப்பினாள்.


அருணா புன்சிரிப்பாய் அந்த ச‌ட்டையை வைர‌வ‌னிட‌ம் த‌ர‌, அவ‌னுக்கு புரிந்துவிட்ட‌து. த‌ன் ஆஜானுபாகு உட‌ல் இளைக்க‌வேண்டும், இள‌ந்தோற்ற‌ம் வேண்டுமென்று அவ‌ள் குறிப்பால் உண‌ர்த்திய‌து புரிந்துகொண்டு உட‌ல் இளைத்தான். ப‌டித்த‌ பெண் அல்ல‌வா? விருப்ப‌த்திலும், அதை வெளிக்காட்டுவ‌திலும் தெரிந்த‌ முதிர்ச்சி க‌ண்டு அதிச‌யித்தாள் அருணா. அவ‌ளும் ஒரு கால‌த்தில் விப‌சாரியாய் இருந்த‌வ‌ள் தான். இருந்தாலும் இத்துணை நெளிவு சுளிவு தெரிந்த‌வ‌ளாய் அவ‌ள் இருக்க‌வில்லை. இந்த கால‌த்துப்பெண்க‌ள் மிக‌வும் தெளிவுதான்.


புவ‌னா இளைத்துக்கொண்டே போனாள். உட‌ல் மெலிந்து கொண்டே போன‌து. ஆனால், புவ‌னா அதைப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட்ட‌தாக‌த் தெரிய‌வில்லை.


வைர‌வ‌னைத் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ வேண்டாமென்றாள். தானே ஒரு நாள் அவ‌ன் வீட்டுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள். ஒரே வீட்டில் இருந்த‌தினால், ம‌ஞ்சுவுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து புரியாம‌ல் இல்லை. எல்லாம் வைர‌வ‌னால்தான். இதுபோல் எத்த‌னை பெண்க‌ளை சீர‌ழித்திருப்பான். த‌ன்னைக் காப்பாற்றிய‌ புவ‌னாவை காப்பாற்ற‌ வேண்டும். அவ‌ளை ம‌ட்டும‌ல்ல‌, எல்லா பெண்க‌ளையும். அத‌ற்கு வைர‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும். யாருக்கும் தெரியாமல் தான் கொன்றுவிட்டால், போலீஸ் க‌ண் த‌ன் மீது விழாது. ஏனெனில் தான் ஒரு பைத்திய‌ம் என்ப‌தாக‌த்தான் ஊரில் எல்லோருக்கும் நினைப்பு. அப்ப‌டியே தெரிந்தாலும் பைத்திய‌த்திற்க்குதான் ம‌ருத்துவ‌ சிகிச்சை த‌ருவார்க‌ள். இந்த ப‌ண‌ப்பைத்திய‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் பைத்திய‌க்கார‌ ஆஸ்ப‌த்திரி எவ்வ‌ள‌வோ மேல். ம‌ஞ்சு வ‌ஞ்ச‌ம் கொண்டாள். அவ‌னைக் கொல்ல‌ ச‌ம‌ய‌ம் பார்த்தாள். நாள் குறித்தாள்.


இர‌ண்டு நாள், க‌ழித்து ஒரு மாலை வேளையில், ம‌ஞ்சு த‌ன் இடுப்பில் கூர்மையான‌ க‌த்தியை ம‌றைத்து வைத்து வைர‌வ‌ன் வீட்டுக்கு ட்ரை சைக்கிளில் காய்கறி இற‌க்க‌ சென்றாள். செல்லும் வ‌ழியெங்கும் ச‌ன‌ம் த‌ள்ளிப்போன‌து. வாலிப‌ர்க‌ள் பைத்திய‌த்திற்கு ப‌ய‌ந்து ஒதுங்கினார்க‌ள். ச‌த்த‌மாய் பாட்டுப்பாடி, த‌லையை இப்ப‌டியும் அப்ப‌டியுமாய் அசைத்து, சிரித்த‌வாறே ம‌ஞ்சு வைர‌வ‌ன் வீட்டை நெருங்கினாள். கொல்லைப்புற‌த்தில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு, இடுப்பில் ம‌றைத்த‌ க‌த்தியுட‌ன் வைர‌வ‌னை தேடினாள். ஹால், வ‌ராண்டா, ரூம், சாமிய‌றை, ச‌மைய‌ற்க‌ட்டு, தோட்ட‌ம் என் எங்கு தேடியும் வைர‌வ‌ன் கிடைக்க‌வில்லை.


எங்கு போயிருப்பான்? ச்சே, இவ‌னுக்கெல்லாம் நேர‌ம் ச‌ரியாய் அமைகிற‌தே? த‌ப்பிவிட்டானே.. மாட்டாம‌லா போவான். நாளையோ நாளை ம‌று நாளோ நிச்சயம் மாட்டுவான். புவ‌னாவை க‌ள‌ங்க‌ப்ப‌ட‌ விட‌க்கூடாது. அத‌ற்குள் அவ‌னை கொன்றுவிட‌லாம். நாளையே கொன்றுவிட‌லாம் என்று முடிவு செய்து வ‌ண்டியை திருப்பினாள், க‌டைக்கு. க‌டைதாண்டி ஒரு குப்பைமேட்டை ஒட்டிய‌ வாய்க்காலில் விற்ற‌து போக‌ மீதியைக் கொட்டிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.வாய்க்காலை ஒட்டி வ‌ண்டி நின்ற‌தும் இராலும், காய்கறி மூட்டைக‌ள் மெல்ல அசைந்தது கண்டு மஞ்சு துணுக்குற்றாள். நொடிகள் செல்ல செல்ல பலமாக அசைந்தது. சற்று நேரத்தில் காய்கறி மூட்டைகளைக் க‌லைத்துக்கொண்டு புவ‌னா இற‌ங்குவ‌தைக்க‌ண்டு ம‌ஞ்சு அதிர்ச்சிய‌டைந்தாள். வ‌ண்டியில் வைர‌வ‌னின் உயிர‌ற்ற‌ உட‌ல் அழுகிப்போன காய்கறிகளுக்கு ம‌த்தியில் தெரிந்த‌து. ‌புவ‌னா, வைர‌வ‌னின் பிரேத‌த்தோடு ஒரு பெரிய‌ க‌ல்லைக் க‌ட்டி சாக்க‌டையில் த‌ள்ளினாள். கையோடு வைத்திருந்த கொடிய விஷம் நிறைந்த குப்பியை சாக்கடையில் வீசினாள்.‌ பின், கடைக்கு வந்து தண்ணீர் தெளித்து தன் விரல்களை மிகக்கவனமாக சோப்பு போட்டு கழுவினாள்.


ம‌ஞ்சுவுக்கு புரிந்துவிட்ட‌து. தான் வைர‌வ‌னைக் கொல்ல‌, அவன் வீடு நோக்கி ட்ரைசைக்கிளில் சென்ற‌போதே புவ‌னா ட்ரைசைக்கிளில் தான் இருந்திருக்கிறாள். அவ‌ள் உட‌ல் மெலிந்து போயிருந்த‌தால் வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. மஞ்சு வீட்டினுள் வைரவனைத் தேடிக்கொண்டிருந்தபோது, புவ‌னா வைர‌வ‌னை அவன் படுக்கையறையில் ச‌ந்தித்திருக்க‌ வேண்டும். புவனாவை நெருங்கிய வைரவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக்கொண்டே அவள் விரல்களை பொங்கி வந்த காமத்தில் கடித்திருக்கவேண்டும். விஷம் தடவப்பட்ட விரல்களிலிருந்த‌ கொடிய விஷம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். வைரவனின் உயிரற்ற உடலை புவனா ட்ரைசைக்கிளில் மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து தானும் ஒளிந்திருக்கவேண்டும். வைரவன் ஏற்கனவே மெலிந்திருந்ததால், வித்தியாசமாய் தெரிந்திருக்கவில்லை.


இப்போது புரிந்தது மஞ்சுவிற்கு, புவனா வைரவனை ஏன் இளைக்கச் சொன்னாள் என்று.- ராம்ப்ரசாத், சென்னை.(ramprasath.ram@googlemail.com)


#நன்றி
வல்லினம் கலை இலக்கிய இதழ்(http://www.vallinam.com.my/issue22/story2.html)

Sunday, 26 September 2010

பச்சை ரிப்பன் - சிறுகதை

பச்சை ரிப்பன் - சிறுகதை


ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.

இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.

இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.

கடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப்பைய‌னுட‌ன் தொலைப்பேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்றுவிட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம்போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப்போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம்.


ஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்துவிட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக்கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார்.

இப்போது ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கல‌த்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.

புறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.


நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.

மறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக்கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் 'என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்' என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்தால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு.


அந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டுகொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌வைத்து, குடுப்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌துபோல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக்காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.

ஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த்தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.


வீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக்கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தார்.

'ஃப‌ர்ஹான், கோட‌ப்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்'.

அவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்த‌து.


- ‍ ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11009261&format=html)

Monday, 13 September 2010

அந்த இரவு - சிறுகதை


அந்த இரவு - சிறுகதை...
அந்த லண்டன் மாநகரின் அமைதியான தெருவில் அமைந்த ஆடம்பர ஹோட்டலின் நான்காவது தளத்தில் உள்ள 11வது ரூமில் நிர்மலாவும் சாண்டி என்கிற சந்தியாவும் அவசர அவசரமாய்க் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். வடநாட்டுத்தோழி ஒருத்தியின் பார்ட்டி தரை தளத்தில். பார்ட்டிக்கு வருபவர்களில் சிலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள் என்பதால் நிர்மலா, சாண்டி உட்பட வெகு சிலருக்கு ரூம்கள் புக் செய்யப்பட்டிருந்தது. உச்சி முதல் பாதம் வரை இழுத்துப்போர்த்திய சல்வார் அணிய எத்தனித்தவள், சந்தியாவின் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பார்த்தவுடன் பார்ட்டியில் தன் மதிப்பு போய்விடுமோவென எண்ணி தானும் ஒரு ஃப்ராகிற்கு மாறினாள். 10 வயதாய் இருந்தபோது பிங்க் நிறத்தில் ஃப்ராக் போட்ட நியாபகம். அதற்கப்புறம் ஃப்ராக் போட வாய்ப்பு கிட்டவில்லை. நிர்மலா, இருக்கும் இடத்திற்கேற்றவாறு உடை அணிய வேண்டுமென்று தோழிகளுக்கெல்லாம் அட்வைஸ் செய்பவள். கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு வீட்டிலிருந்து சுடிதாரில் வந்து, காலேஜில் ஜீன்ஸ்க்கு உடை மாற்றிக்கொள்ளும் ரகம்.


இந்த ஃப்ராக், நிர்மலாவின் காதலன் ரகு வாங்கிக்கொடுத்தது. இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.


அவனும் பார்ட்டிக்கு வருகிறான் என்பதால் நிர்மலாவிடம் துள்ளல் அதிகம் இருந்தது. ரூமை லாக் செய்துவிட்டு, வெளியில் வந்த பின்பு, உள்ளே மறந்து வைத்துவிட்ட மொபைல் ஃபோன் எடுக்க
மீண்டும் ரூமிற்க்குள் ஓடி, மறுபடி ரூமை லாக் செய்து, ஒரு வழியாக பெண்கள் இருவரும் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். பார்ட்டி ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தது. ரகு ரெண்டாவது பெக்கை தொண்டைக்குள் இறக்கிக்கொண்டிருந்தபோது நிர்மலா அவன் அருகே அமர்ந்து ஹாய் சொன்னாள். பரஸ்பரம் இருவரும் கன்னங்கள் உரசிக்கொள்ள‌ முத்தமிட்டுக்கொண்டனர். இந்தியாவில் இருந்தவரை, கைக்குலுக்கிக்கொள்வதோடு நின்றுவிடும். லண்டனில் இதெல்லாம் சகஜம் என்பதால், நிர்மலாவுக்கும் இது கனநேரத்தில் தொற்றிக்கொண்டது. வேற்று நாட்டில் காலடியெடுத்து வைத்த பிறகு அவள் பழக்கப்படுத்திக்கொண்ட பல செய்கைகளில் இதுவும் ஒன்று.


சுமாராக ஒரு 30 பேர் வந்திருந்தார்கள். மெடையில் மெல்லியதாய், என்ரிக்கின் இசைஆல்பமும், பேயொன்ஸ் இசையும் சேர்ந்து சிந்தையை மயக்கிக்கொண்டிருந்தது. சந்தியாவும் தன் பங்குக்கு ஒரு பெரிய கோப்பையில் மது ஊற்றி, நிர்மலாவிற்க்கும் ஒன்று எடுத்திவந்தாள். நிர்மலாவிற்கு இதெல்லாம் பழக்கமில்லை என்பதால் முதலில் பெரிதாகத் தயங்கினாள். கூட வந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கத்தொடங்க, அதற்க்குமேல் மறுத்தால் நன்றாக இருகாதென்று வாங்கிக்கொண்டாள்.


சிறிது நேரத்தில் அடிவயிறு முட்டத்தொடங்க, ரகு ரெஸ்ட்ரூம் எங்கே எனக்கேட்டு லேசாக தள்ளாடியபடி சென்றுவிட்டான். திரைப்படங்களிலும், அலுவலக பார்ட்டிக்களில் அடுத்தவர் கைகளில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மதுக்கோப்பை. அதிலும் இரண்டு வருடம் அவள் வேலை செய்த ப்ராஜெக்டில் ரீவ் என்கிற அமேரிக்க பெண்மணி ஸ்டைலாகக் குடிப்பாள். அலுவலகமே அவள் அழகில், நவீனத்தில், ப்ராஜெக்ட் நுணுக்கத்தையும், கோப்பையையும் ஒரே வேகத்தில் கையாளும் அழகில் மயங்கிப்போகும். அப்போதெல்லாம் நினைத்திருக்கிறாள், இந்த மதுவை கையில் கொண்டிருந்தவர்கள் அனைவரும் மேல்தட்டு வகுப்பைச்சேர்ந்த, தன்னிறைவு பெற்ற, தனித்தன்மை வாய்ந்த, சுதந்திரத்தின் எல்லைகள் கடந்தவர்கள் போலும் என்று. இன்று அப்படி ஒரு இடத்தில் தானும் நிற்பது பெருமையாகப்பட்டது அவளுக்கு.


கல்லூரி படிப்புவரை தன் ஒவ்வொரு செயலுக்கும் அப்பா அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிகொண்டிருந்துவிட்டு, கேம்பஸில் பன்னாட்டு நிறுவனத்தில், 54 வயது அப்பாவைவிட 3 மடங்கு சம்பளம் வாங்கும் வேலையில் அமர்ந்தபிறகு அது நாள்வரையில் கேள்வி கேட்ட பெற்றோர் அதன்பிறகு தன் மகள் செய்வதெல்லாம் சரி என்கிற அங்கீகாரத்தை வெளிப்படையாய் காட்டத்துவங்க, அந்த சுதந்திரம் அவளுக்கு தன்னை பாரதியின் புரட்சிப்பெண்ணாய் தன்னையே பார்க்க வைத்ததில் அதிசயம் ஒன்றுமில்லைதான்.


சந்தியா இரண்டாவது கோப்பையை எடுத்திருந்தாள். நிர்மலாவுக்கு ஏனோ இந்நேரத்தில் ரீவின் நினைப்பு அதிகம் வந்தது. உலகின் ஃபார்ச்சுன் 500 நிறுவனத்தின் ப்ராஜெக்ட் லீட், ரீவ்வைப்போல் ஒரு பெண்ணாய் தானும் மாறிவிட்டதாய் அந்த‌ நொடி தோன்றிய‌து. மெல்ல‌ மெல்ல‌ ம‌துவை சுவைக்க‌த்தொட‌ங்கினாள். முத‌லில் சுவை ச‌ற்றே வித்தியாச‌மாய்த் தோன்றினாலும் நேர‌ம் போக‌ போக‌, அப்ப‌டித்தோன்ற‌வில்லை. ஒரு அரைம‌ணியில் முழுக்கோப்பை காலி. ச‌ந்தியா மூன்றாவ‌துக்கு தாவியிருந்தாள்.


நேர‌ம் செல்ல‌ செல்ல‌, உள்ளே சென்ற‌ ம‌து த‌ன் வேலையை காட்ட‌த்துவ‌ங்கியிருந்த‌து. நிர்ம‌லாவிற்கு த‌லை சுற்றிய‌து. த‌ட்டாமாலை சுற்றுவ‌து போலிருந்த‌து. ச‌ற்றைக்கெல்லாம் க‌ண்க‌ளைத் திற‌ப்ப‌தே க‌டினமாக‌ இருந்த‌து. அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் முன் குடித்து ம‌ய‌ங்கி விழுந்த‌தாய் பெய‌ர் வ‌ந்துவிடுமோவென‌ ப‌ய‌ம் வ‌ந்த‌து. ச‌ந்தியாவின் காதில் த‌ன்னை ரூம் வ‌ரை கைதாங்க‌லாய் அழைத்துச் செல்லும்ப‌டி கிசுகிசுத்தாள். அப்போதுதான் ஒரு ஆட‌வ‌னுட‌ன் சுவார‌ஸ்ய‌மாய் பேச‌ தொட‌ங்கியிருந்த‌ ச‌ந்தியா முத‌லில் ம‌றுத்தாலும் பிற‌கு ம‌றுநாள் அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்திக்க‌வேண்டுமே என்கிற‌ நிர்ப‌ந்த‌த்தில் அவ‌னுக்கு எக்ஸ்க்யூஸ் சொல்லிவிட்டு நிர்ம‌லாவை கைத்தாங்க‌லாய் அழைத்துச்சென்றாள். ச‌ந்தியாவுக்கும் த‌ள்ளாட்ட‌மாக‌வே இருந்த‌து. இருந்தாலும் அவ‌ளுக்கு ப‌ழ‌க்க‌ம் தான் என்ப‌தால் வ‌ழ‌க்க‌ம்போல் ச‌மாளித்தாள். நிர்ம‌லாவை லிஃப்ட் ஏற்றி ரூமிற்கு கொண்டுவ‌ந்து ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்து விட்டு மீண்டும் த‌ரைத‌ள‌த்துக்கு போய்விட்டாள்.


நேர‌ம் ந‌ள்ளிர‌வு தாண்டி விடிகாலை மூன்று ம‌ணி ஆகிவிட்டிருந்த‌து. நிர்ம‌லா மெல்ல‌ க‌ண்விழித்தாள். த‌லை வ‌லித்த‌து. உட‌ம்பெல்லாம் வ‌லியாய் இருப்ப‌தாய் உண‌ர்ந்தாள். இந்த ரூம் தன் ரூம் போல் முற்றிலும் இல்லை என்பதாய் தோன்றியது. தன் பெட்டி, படுக்கை, துணிகள், லாப்டாப் என எதுவும் இல்லை. த‌லைசுற்ற‌ல் ச‌ற்று த‌னிந்திருந்த‌து. மெல்ல‌ எழுந்தாள். ப‌டுக்கையில் அவ‌ள் க‌ண்ட‌ காட்சி அவ‌ளுக்கு தூக்கிவாரிப்போட்ட‌து. அவ‌ள் அணிந்திருந்த‌ ஃப்ராக் த‌னியே கிட‌ந்த‌து. அவ‌ள் உட‌ல் பிற‌ந்த‌மேனியாய், உள்ளாடைக‌ள் ஆங்காங்கே சித‌றி, அவ‌ள் இடுப்புக்கு கீழே ப‌டுக்கையில் ர‌த்த‌மாய், உட‌ல் வ‌லி பின்னியெடுத்து, ந‌ட‌ந்த‌து என்ன‌வென்று அவ‌ளுக்கு உண‌ர்த்திய‌து. இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ க‌ற்பை அங்கே அவ‌ள் எவ‌னுக்கோ இழ‌ந்துவிட்டிருந்தாள்.


அழுகையும் ஆத்திர‌மும் வ‌ந்த‌து. உட‌ல் வ‌லியோடு, துணிக‌ளை அணிந்தாள். வெளியில் வ‌ந்து ரூம் க‌த‌வு பார்த்தாள். ரூம் ந‌ம்ப‌ர் 17. த‌ன்னுடைய‌து 11 ஆயிற்றே. அவ‌ளுக்கு புரிந்துவிட்ட‌து. குடிபோதையில் ச‌ந்தியா ரூம் ந‌ம்ப‌ர் சரியாய் பார்க்காம‌ல் த‌ன்னை இந்த‌ ரூமில் விட்டிருக்க‌ வேண்டும். குடிபோதையில் தான் ம‌ய‌ங்கி இருந்த‌ ச‌ம‌ய‌த்தில், எவ‌னோ த‌ன்னை நாச‌ம் செய்திருக்கிறான். அவ‌ளுக்கு வாய்விட்டு க‌த‌றி அழ‌வேண்டும் போலிருந்த‌து. த‌ட்டு த‌டுமாறி த‌ன் ரூமிற்க்கு வ‌ந்தாள். க‌த‌வு சாத்தி தாழிட்டு, ஆடைக‌ள் க‌ளைந்து, பாத்ரூம் சென்று ஷ‌வ‌ரில் நின்றாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். நெடுநேர‌ம் அழுதாள். உட‌ம்பெல்லாம் புழு ஊர்வ‌து போல் அருவ‌ருப்பாய் இருந்த‌து. தன் முழு உருவ‌மும் சாக்க‌டையாய் உண‌ர்ந்தாள். எத்த‌னை குளித்தாலும் இந்த‌ சாக்க‌டை உண‌ர்வு போகாது போலிருந்த‌து. உட‌ல் துடைத்து, உடை மாற்றி ப‌டுக்கையில் வ‌ந்து அம‌ர்ந்தாள்.


இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ மான‌த்தை, ஆசைக்காத‌ல‌ன் ர‌குவிற்காக‌ பாதுகாத்து வைத்த‌ அன்புப்ப‌ரிசை யாரென்று கூட‌த் தெரியாம‌ல் எவ‌னிட‌மோ இழ‌ந்த‌தை நினைத்து ம‌ன‌ம் வெதும்பினாள். இனி ர‌குவிற்க்கு கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து த‌ன்னிட‌ம். ஆசை ஆசையாய் காதலிப்பவன் ரகு என்றாலும் இந்தியாவில் இருந்த‌வ‌ரை அவனை தொடக்கூட விட்டதில்லை. கல்யாணம் முடிந்து முதலிரவன்று தன்னையே அவனுக்கு விருந்தாய் தர அவனிடமிருந்தே தன்னை எத்தனை முறை பாதுகாத்திருக்கிறாள். அவன் பிறந்த நாளுக்குகூட ரகு எத்தனை கெஞ்சியும் ஒரு முத்தம் கூட தந்ததில்லை. அப்படியெல்லாம் பாதுகாத்து வைத்த கற்பை இன்று எவனோ அனுபவித்துவிட்டு போய்விட்டான். அவன் யாரென்று கூட தெரியவில்லை.


ர‌குவிற்கு இனி தான் எவ்வ‌கையிலும் பொறுத்த‌மில்லை. இனி என்ன‌ செய்தாலும் த‌ன் ம‌ன‌ம் அதை ஏற்காது. எதை இழ‌க்கக்கூடாதோ அதையே இழ‌ந்துவிட்ட‌பின் இனி வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன். செத்துவிடலாம் போலிருந்தது. விர‌க்தி, த‌னிமை, இழ‌க்க‌க்கூடாத‌தை இழ‌ந்துவிட்ட‌ வேத‌னை, அத‌னால் வ‌ந்த‌ அருவ‌ருப்பு அவ‌ளை முழுமையாய் ஆட்கொண்ட‌து. ப‌டுக்கையை ஒட்டிய‌ ட்ராய‌ரை திற‌ந்தாள். அதில் ச‌ந்தியா ப‌ய‌ன்ப‌டுத்தும் தூக்க‌ மாத்திரைக‌ள் இருப‌தை எடுத்து மேஜையில் வைத்தாள். வாஷ்பேசினை திற‌ந்து ஒரு க்ளாஸில் த‌ண்ணீர் பிடித்தாள். ஒரு முடிவுக்கு வ‌ந்த‌வ‌ளாய், மாத்திரைக‌ளை விழுங்க‌ கைக‌ளில் எடுக்கையில் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய், மாத்திரைக‌ளை த‌லைய‌ணைக்கு அடியில் வைத்து விட்டு, முக‌ம் துடைத்துவிட்டு, க‌த‌வு திற‌ந்தாள். ர‌கு நின்றிருந்தான். அவ‌ன் மார்பில் புதைந்து ஓவென்று அழ‌வேண்டும் போலிருந்த‌து. வெறுமையாய் ஹாய் சொல்லிவிட்டு திரும்பி ந‌ட‌ந்து ப‌டுக்கையில் அம‌ர்ந்தாள்.
தொட‌ர்ந்த‌ ர‌கு அருகிலிருந்த‌ சோபாவில் அம‌ர்ந்தான்.


'ஹெய் நிர்ம‌லா, ஏன் என்ன‌மோ போல‌ இருக்க‌?'.


'ஒண்ணுமில்ல'.


'ம்ம்ம்...'.


ச‌ற்று த‌ய‌க்க‌த்துக்குப்பின் ர‌கு தொட‌ர்ந்தான்.


' நிர்ம‌லா, உன்கிட்ட‌ நான் எதையும் ம‌றைக்க‌ விரும்ப‌ல‌. நேத்து ஒரு விஷ‌ய‌ம் ந‌ட‌ந்த‌து. நானும் ஒரு பொண்ணும் த‌ப்பு ப‌ண்ணிட்டோம். நான் தெரிஞ்சு ப‌ண்ண‌ல‌. த‌ண்ணிய‌டிச்சிருந்த‌துனால‌ தெரிய‌ல‌. அவ‌ யாருன்னு கூட‌ தெரியாது. நேத்து நைட் த‌ண்ணி அடிச்ச‌தும் த‌ம்ம‌டிக்க‌ ம‌ர்வானா சிக‌ரெட் ரூம்ல‌ இருக்குனு ப்ர‌ண்டு சொன்னான்னு நான் அவ‌ன் ரூம் போனேன். அங்க‌தான் அது ந‌ட‌ந்துடிச்சு. போதைல‌ அந்த பொண்ணு யாருன்னு கூட‌ தெரிய‌ல‌......‌'.


'எந்த‌ ரூம்?'. நிர்ம‌லா அவ‌ச‌ர‌மாய் இடைம‌றித்தாள்.


'ரூம் ந‌ம்ப‌ர் 17'.


நிர்ம‌லாவிற்கு போன‌ உயிர் திரும்பி வ‌ந்த‌து போலிருந்த‌து. அடிவ‌யிறு ஒருமுறை சுருண்டு திரும்பிய‌து. எழுந்து போய் அவ‌னை க‌ட்டிக்கொண்டாள். ர‌கு, ர‌கு, ர‌கு. ம‌ன‌சு நொடியில் ஆயிர‌ம் முறை அவ‌ன் பெய‌ர் சொல்லிய‌து. த‌ன் ஆசைக்காத‌ல‌னிட‌ம் தான் த‌ன்னை இழ‌ந்திருக்கிறோம் என்ற‌ நினைப்பே தேனாய் இனித்த‌து. புழு ஊரும் அருவ‌ருப்பு ம‌றைந்து, அந்த‌ வ‌லியை ம‌ன‌சு அனுப‌விக்க‌ ஆய‌த்த‌மாவ‌தை உண‌ர்ந்தாள். ந‌ல்ல‌ வேளை, ர‌குதான் அது.


ர‌கு திண‌றினான். எப்ப‌வும் தொட‌க்கூட‌ விடாத‌வ‌ள் இன்று க‌ட்டிப்பிடிக்கிறாளே என‌ குழ‌ம்பினான். அதுவும் த‌ன்னை அறைவாள் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, இது முற்றிலும் புதிய‌தாக‌ இருந்த‌து. ர‌கு குழ‌ம்புவ‌தை உண‌ர்ந்த‌வ‌ள், ச‌ற்றே சுதாரித்து, விடிகாலை மூன்று மணியை காரணம் காட்டி தான் அவ‌னிட‌ம் பிற‌கு பேசுவ‌தாக‌ சொல்லி, அனுப்பினாள்.


எல்லாம் இந்த‌ பாழாய்ப்போன‌ குடியால் வ‌ந்த‌ குழ‌ப்ப‌ம். ந‌ம‌க்கு இதெல்லாம் தேவையா. அணிலைப்பார்த்து முய‌ல் சூடு போட்டுக்கொண்ட‌தைப்போல‌, மேற்க‌த்திய‌ர் க‌லாசார‌த்தை பார்த்து நாமும் செய்ய‌ நினைத்தது த‌வ‌று தான். மேற்க‌த்திய‌ரைச் சொல்லி குற்ற‌மில்லை. ஆங்கில‌ம் அவ‌ர்க‌ள‌து தாய்மொழி. அவ‌ர்க‌ளின் தாய்மொழியைதான் அவ‌ர்க‌ள் பேசுகிறார்க‌ள். ந‌ம் தாய்மொழி த‌மிழ். ஆனால் நாம் ஆங்கில‌ம் தான் அதிக‌ம் பேச‌ நினைக்கிறோம். ஆங்கில‌ம் பேசினால் உய‌ர்வாய் நினைக்கிறோம். ஹாரிபாட்ட‌ர் எழுதிய‌ ஜெகெ ரொள‌ளிங்கின் பேர‌ன்க‌ள் கூட‌ மெர்சிடிஸ் காரில் செல்கிறார்க‌ள். அந்த‌ள‌விற்க்கு அவ‌ரின் நாவ‌ல் விற்க‌ப்ப‌டுகிற‌து த‌மிழ‌க‌த்தில். ம‌து கூட‌ அவ‌ர்க‌ளின் க‌லாசார‌மே. அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள். நாம் ந‌ம் க‌லாசார‌த்தை விட்டு விட்டு அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை பின்ப‌ற்ற‌ முய‌ல்கிறோம். இது முற்றிலும் த‌வ‌றுதான்.


நிர்ம‌லா ஒரு முடிவிற்கு வ‌ந்தாள். சமீபமாய் வாங்கிய முட்டிக்கு மேல் தெரிவதான மேற்கத்திய நாகரீக உடைகளை குப்பையில் வீசினாள். பாந்த‌மாய் ச‌ல்வார் அணிந்துகொண்டாள். க‌ந்த ச‌ஷ்டி க‌வ‌ச‌த்தை லாப்டாப்பில் த‌ட்டி பாட‌ வைத்தாள். ம‌ன‌சு லேசான‌து. நிம்ம‌தி ப‌ர‌விய‌து. அந்த‌‌ நிம்ம‌தியை முழுக்க‌ உண‌ர்ந்தாள். விடிந்த‌தும் ர‌குவிட‌ம் விஷ‌ய‌த்தை சொல்ல‌வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3392)

கோகெய்ன் - சிறுகதை


கோகெய்ன் - சிறுகதை'இது துரோகம் இல்லையா, செல்வா?'


'எது துரோகம் ராஜி? அந்த வழுக்கை மண்டையன் எனக்கு பண்ணினது தான் துரோகம். என் அப்பா கொத்து வேலைக்கு சவுதி வந்தப்போ இந்தாளுகிட்ட வாங்கின 500 தினார் கடனுக்கு இந்தாளு ஆறே மாசத்துல 5000 தினார் கடன்னு கடனுக்கு வட்டி போட்டு, அதுக்கு ஈடா என்ன பெரியாளாக்குறேன்னு சொல்லி சின்ன வயசுலயே இங்க கொண்டாந்துட்டான். அன்னைலேர்ந்து இந்தாளோட கஞ்சா, அபின் , கோகெய்ன்னு எல்லா கடத்தல்லயும் என்ன வேல வாங்குறான் சம்பளமே இல்லாம‌. லீவ் கிடையாது. சாப்பாடு கூட ரெண்டு வேல தான். இருபத்தியஞ்சு வருஷம் போச்சு. எனக்குனு எதுவுமே இல்ல. ஊர்ல அப்பா செத்ததுக்கு கூட இவன் என்ன விடல. என்னோட இந்த எல்லா இழப்புக்கும் ஒரே செட்டில்மென்ட். அவனோட இந்த சரக்க நான் ஆட்டைய போட்டு இந்தியா போகப் போறேன். அதுல கிடைக்கிற பணத்துல அப்டியே எங்கனா செட்டில் ஆகப் போறேன்'.


'இவன் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டான்னா?'.


'இது கடத்தல் சரக்குடா. போலீஸுக்கு போனா அவனுக்கு தான் டேஞ்சர். அதனால போக மாட்டான்.'


'ம்ம்... சரி ஆனா ஏர்போர்ட்ல இம்மிக்ரேஷன் அது இதுன்னு செக் பண்ணுவானே. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அபின் கடத்தினப்போ, நியூஸ் லீக் ஆயி மஜீத் மாட்டினானே. அப்படி ஏதாச்சும் ஆயிட்டா?'.


'சரக்க எடுத்துக்கிட்டு துபாய் ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு. இந்நேரம் நான் சரக்கோட எஸ் அயிட்டத கண்டுபுடிச்சிருப்பான். இனிமே திரும்பி போக முடியாதுடா'.


'ம்ம்.. சரி அப்டி என்ன சரக்குதான் வச்சிருக்க இப்ப?'.


செல்வா ஒரு துண்டு சீட்டை எடுத்து நீட்டினான். ஒரு ஏ4 சைஸ் பேப்பரில் கைவாகாய் சின்னதாய் கிழித்தது போலிருந்த பேப்பரில் 'subject code: 33' என்று எழுதியிருந்தது.


கடத்தப்பட இருக்கும் பொருளின் சங்கேத வார்த்தை. கடத்தலில் இயங்கும் ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென சங்கேத மொழி வைத்திருப்பார்கள். 33 என்பது இவர்களைப் பொருத்தவரை, CC என்பதாக விரியும். cocaine என்பதின் சுருக்கம் அது.


'கோகெய்னா, அய்யயோ, ரிஸ்க் ஜாஸ்தியாச்சேடா'. கிசுகிசுப்பான குரலில் கத்தியே விட்டான் ராஜி.


'ம்ம்..' என்று ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவன், ராஜியின் பயத்தை அனுமானித்தவனாய் 'சரி நான் தனியா போறேன் சரக்கோட. நீ தனியா போய்க்க' என்றபடி வலதுகையிலிருந்த சூட்கேசை இடது கைக்கு மாற்றிவிட்டு, பாண்ட் பாக்கேட்டிலிருந்து பாஸ்போர்ட், விசா மற்றும் இடிக்கட்களை எடுத்துக்கொண்டு செக்கின்னை நோக்கி நடக்க ஆரம்பித்தான் செல்வா. தன் பதிலுக்கு காத்திராமல் செல்வா நடப்பதை உணர்ந்தவன் அதை முகத்தில் காட்டாதவனாய் சற்றே இடைவெளி விட்டு செல்வாவை தொடர்ந்தான் ராஜி.


செல்வாவின் பேக்கேஜை எக்ஸ்ரே கருவி சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வகை கருவிகள் துப்பாக்கி, வெடிபொருட்கள் முதலானவைகளை கண்டுபிடிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்ரே மிஷின் அமைதியாகவே அவனின் பேக்கேஜை விழுங்கி புறம்தள்ளியது. மாஸ்டர் பேக்கேஜ் செக்கின் முடிந்து செல்வாவிடம் போர்டிங் பாஸ் தரப்பட்டதும் தான் ராஜிக்கு மூச்சு வந்தது. நல்லவேளை இதுவரை எதுவும் ஆகவில்லை. இப்படியே சென்னை மீனம்பாக்கம் ஏர்போட்டிலும் க்ளியர் ஆகிவிட்டால் நன்றாக‌ இருக்கலாமென்று தோன்றியது. இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகளுக்கு பின்னர் ராஜியும் செக்கின் செய்துவிட்டு போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டான்.


சற்றே இடைவெளி விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் விமானம் ஏறினர் இருவரும். விமானம் கிளம்பும் வரை திக்திக்கென்றது ராஜிக்கு. செக்கின் செய்யப்பட்ட பேக்கேஜ்களை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் ஃபிக்ஸட் சைட் சிஸ்டம்ஸ் என்கிற ஒரு பெரிய இயந்திரத்தில் வைத்து சோதிப்பார்கள். இது ஒரு விமானத்தில் பயணம் செய்யும் அனைவரது பேக்கேஜ்களையும் ஒரே நேரத்தில் சோதிக்க உதவும் எக்ஸ்‍ரே கருவி. இக்கருவி கொண்டு வெடி பொருட்கள், துப்பாக்கிகள் முதலானவற்றை கண்டுபிடிக்க இயலும். இது தவிர கெமிக்கல்களை கண்டுபிடிக்க கே9 யூனிட் வைத்திருப்பார்கள். கே9 யூனிட் என்பது மோப்ப நாய்களைக் குறிக்கும்.


கோகெய்ன், அபின், கஞ்சா முதலானவைகளை மோப்பம் பிடித்து பழக்கப்பட்ட நாய்களைக் கொண்டு எந்த பேக்கேஜ்ஜிலாவது அப்படிப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்று தேடுவார்கள். இது போன்ற மோப்ப நாய்கள் மிகவும் துள்ளியமாய் கண்டுபிடிக்கும் திறனுள்ளவை.


ஃப்ளைட் கதவுகளை மூடும்வரை ராஜிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. ஃப்ளைட் கதவுகள் மூடப்பட்டு, ரன்வேயில் வண்டி ஓடத்துவங்கிவிட்ட பிறகே அவனுக்கு நிம்மதியாக‌ இருந்தது. பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. மீதிக்கிணறு சென்னை விமான நிலையம். ஆனால், சரக்கை எப்படி கே9 நாய்கள் கண்டுபிடிக்காமல் விட்டன? ஒரு வேளை, சரக்கு கடத்தப்படுவதாக செய்தி போலீசுக்கோ, இன்டர்போலுக்கோ இது நேரம் வரை கசியாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. அப்படித்தான் இருக்க வேண்டும். சவுதி மோப்ப நாய்கள் மிகத் துள்ளியமானவை. அவைகளிடமிருந்து தப்புவது முடியாத ஒன்று.


எப்படியோ, விமானம் சற்று நேரத்தில் அரபிக் கடல் மீது பறக்கத்தொடங்கியிருந்தது. மீதிக்கிணறும் இதே போல் தாண்டிவிட்டால் சந்தோஷம் தான் என்று நினைத்துக்கொண்டான் ராஜி.


ஆறுமணி நேரம் பல யுகங்கள் போலக் கடந்துகொண்டிருந்தது. ராஜி அவ்வப்போது எக்கிஎக்கி மூன்று வரிசை முன்னால் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் செல்வாவை நோட்டம் விட்டான். செல்வா ஏதோ உல்லாசப்பயணம் செய்யும் பிரயாணி போல் சற்றும் பதட்டப்படாமல், எதிர் சீட்டின் பின் பக்கத்தில் அமைந்த சின்ன டிவியில் டினோசார்களைப் பற்றிய டாகுமென்டரி பார்த்துக்கொண்டிருந்தான்.


அடப்பாவி, இத்தனை களேபரத்திலும் எப்படி இவனால் சாதாரணமாக இருக்க முடிகிறது. இத்தனைக்கும் ராஜியோ, செல்வாவோ இதற்கு முன் இப்படி கடத்தியதில்லை. கடத்தல்களில் இவர்களுக்கு வேலை இல்லை. இவர்களின் வேலை கடத்தப்பட போகும் சரக்கை தரம் பிரிப்பது, எங்கிருந்து வந்தது, எங்கு போகிறதென்று தகவல் சேகரிப்பது , பாஸின் சொந்த அலுவல்களைப் பார்ப்பது, ஊருக்கு ஊர் இருக்கும் பாஸின் வப்பாட்டிகளுக்கு மாதம் தவறாமல் பணம் அனுப்புவது போன்ற வேலைகள் தான். கடத்தலை மஜீத் போன்றவர்கள் தான் செய்வார்கள்.


செல்வா சொன்னதுபோல் ஒடிவிட்டது தான் 25 வருஷங்கள். ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அந்த வழுக்கை மண்டையன் ஒரு ஷேக்கின் பார்ட்னர். சவுதியில் மண்ணின் மைந்தர்களை அன்றி வேறு எவரும் பெரியதாக எதுவும் செய்துவிட முடியாது. யாரேனும் புதியதாக வியாபரம் தொடங்க வேண்டுமானால் எதாவதொரு ஷேக்குடன் இணைந்துதான் தொடங்க முடியும். தனியாக தொடங்க முடியாது. ஷேக் கள்ள பிஸினஸ் செய்ய இந்த வழுக்கை மண்டையனைத் தான் பயன்படுத்துகிறான். ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் இவனைக் கழட்டிவிட்டுவிடலாமென்று ஷேக் கணக்கிட்டிருக்கலாம். இந்த வழுக்கை தான் ஷேக்கின் வலதுகை. இவன் தான் தங்களை இங்கே கொண்டுவந்ததும். இங்கு வந்ததில் குடும்பம் குழந்தையென்று எதுவும் இல்லை. வாழ்க்கையில் தோற்றுவிட்டோமோ என்று விரக்தியாக சில நேரங்களில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எங்கே தப்பாகிப்போனது என்று புரியவில்லை. ராஜி வெகுவாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆறுமணி நேரம் கடந்தது தெரியவில்லை.


விமானம் சென்னையில் தரையிற‌ங்கியது.மீண்டும் ஒரு பதட்டம் அவனை பீடித்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று மனம் அடித்துக்கொண்டது. மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. போலீஸ் தலைகள் வழக்கத்தைவிட அதிகமாக தென்பட்டன. அதிக அள‌வில் மோப்ப நாய்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன. ராஜிக்கு புரிந்துவிட்டது. ராஜியையும், செல்வாவையும் சரக்கோடு காணவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வழுக்கை மண்டையன், விமானம் பறந்து கொண்டிருந்த இந்த ஆறு மணி நேரத்தில் வேண்டுமென்றே கடத்தல் பற்றிய செய்தியை போலீஸுக்கு கசிய விட்டிருக்கிறான். படுபாவி பழிவாங்கிவிட்டானே. சற்று முந்தான் செய்தி கிடைத்திருக்கவேண்டும். ஏனெனில், விமான‌த்திலிருந்து பேக்கேஜ்களை இறக்குகையிலேயே சோதித்திருந்தால் இப்போது இங்கே பயணிகள் தங்கள் பேக்கேஜ்களை எடுத்துக்கொண்ட பின்னர் சோதிக்கவேண்டிய அவசியமில்லை.


போலீஸார் எல்லோரையும் வரிசையில் வரச்செய்து மோப்ப நாய்களைக்கொண்டு சோதித்தனர். பேக்கேஜ்களை வலது புறத்தில் நின்றபடி இரண்டு நாய்களும், இடது புறத்தில் பயணிகளை மேலோட்டமாய் ஒரு போலீஸ்காரரும், இன்னொரு நாயும் சோதித்தனர். செல்வாவின் முறை வந்தது. போலீஸ்காரர் சோதித்தார். நாய்கள் அவனுடைய பேக்கேஜ்ஜை சோதித்தன. ஆனால் பெரிதாக ஏதும் நிகழவில்லை. செல்வா பேக்கேஜை கையிலெடுத்துக்கொண்டு, பல்ஸ் இன்டெக்ஷன் எக்ஸ்ரே கருவியில் ஊடுறுவி வெளியேறி விமான நிலையத்தின் வெளிப்புறத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான். ராஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் முழுமையாக எந்தச் சிக்கலுமில்லாமல் சவுதியிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. அதுவும் செல்வா மாதிரி ஒரு கத்துக்குட்டியால். கண்முன்னே சாத்தியாமாகியிருக்கிறது.


ராஜிக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. அத்தனை மோப்ப நாய்களும் ஏமாறிவிட்டனவா? இல்லை செல்வாவுக்கும் இந்த போலீஸுக்கும் எதாச்சும் கையூட்டு இருக்குமா? யோசித்தபடியே ராஜி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டில் செல்வாவைத் தேட, ஒரு ஆம்னி டாக்ஸி வண்டியில் வந்த செல்வா கையசைத்து ராஜியை வண்டியில் ஏறிக்கொள்ளச்சொன்னான்.


ராஜி வண்டியில் ஏறிக்கொள்ள‌ வண்டி வெகுவிரைவாக வேகமெடுத்து விழுப்புரம் நோக்கி விரைந்தது. ராஜிக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படி இது நடந்தது என்கிற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அவன் ரொம்பவும் அலைபாய்ந்திருந்தான். செல்வாவும் ராஜியும் பொத்தாம் பொதுவான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள் விழுப்புரம் வரை. விழுப்புரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன் அவர்கள் இறங்கிக்கொள்ள, வண்டி திரும்பி வந்த வழியே போனது.


'டேய், எப்டிடா சரக்கு எஸ்கேப் ஆச்சு?' ஆர்வம் கொப்புளிக்க ராஜி கேட்க, லேசாக சிரித்தபடியே செல்வா, கொண்டுவந்திருந்த பேக்கேஜை திறந்து ஒரு சாம்பல் நிற தடிமனான உருளை வடிவ பொருள் ஒன்றை எடுத்தான். கிராமத்தில் சிறுவனாக இருந்த காலத்தில் திருவிழாக்கூத்துகளில் பார்த்த கண்ணகி காற்சிலம்பு போலிருந்தது. செல்வா, இரண்டு கைகளாலும் அதைப் பிடித்து, அழுத்தம் கொடுத்து உடைக்க, தெரித்து பேக்கேஜின் மேற்பரப்பிலிருந்த துண்டின் மேல் ஒன்றிரண்டு படர்ந்து விழுந்தது. மினுமினுப்பாய் வைரங்கள்.


ராஜி அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க, 'சரக்கு இந்த வைரம்தான். ஆனா, இந்த வைரத்தோட கோட்வோர்ட் தான் 33, கோகெய்ன்னு வச்சேன். நம்மல பழி வாங்குற கோபத்துல அந்த வழுக்க மண்டையன் கோகெய்ன் தான் கடத்தபடுதுன்னு போலீஸ்ல நம்பத்தகுந்த இடத்துல பத்தவச்சிருப்பான். நமக்கு அதுவே சாதகமா போயிடிச்சு' என்று செல்லிக்கொண்டிருந்த செல்வாவை ஒரு விஷமப்புன்னகையுடன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜி.- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11009122&format=html)

பின் குறிப்பு : இக்கதையின் கருவை பயன்படுத்த நினைப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, 29 August 2010

பதிலளிக்கப்படாத கேள்விகள் - சிறுகதை

'பதிலளிக்கப்படாத கேள்விகள்' என்ற தலைப்பில் , நான் எழுதிய‌ சிறுகதை, செப்டம்பர், 2010 மாத காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 48வது பக்கம், மற்றும் சிறுகதையின் கடைசி பக்கங்களின் பிரதிகள் இங்கே.

பதிலளிக்கப்படாத கேள்விகள் - சிறுகதைஹலோ எவ்ரிபடி. என் பெயர் எண்ணங்கள். என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மைதான். நான் எண்ணங்களே தான். நான் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விருப்பு, வெருப்பு, குணாதிசயம், உணர்வுகளின் எல்லை, திறன் முதலானவைகளால் உருவம் பெறுபவன். அம்மனிதனின் நினைவடுக்குகள்தான் நான் விளையாடும் விளையாட்டின் விதிகள். அதனால் நானாக உருவாவதில்லை. எனக்கென்று ஒரு உருவமுமில்லை. நான் நிரையாத மனிதன் உலகிலேயே இல்லை. உங்களுக்குள்ளும் இருக்கிறேன் நான். இதை நீங்கள் படிக்கையில் கூட நான் இன்னும் ஒரு பிறவி கொண்டு எனக்குள்ளே ஐக்கியமாகிவிடுவது புரிகிறதா உங்களுக்கு? ஹ்ம்ம். எனிவே தட்ஸ் நாட் த பாய்ன்ட் நவ். நான் சொல்ல வந்தது வேறு. எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும்.


நான் முன்பே சொன்னதுபோல, நான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வெறு விதமாய் உருவம் கொள்கிறேன். என் உருவம் எல்லா மனிதருக்குள்ளும் ஒன்றுபோலவே இருக்காது. ஆனால் என் உருவம் அந்தந்த மனிதனைச் சார்ந்தே அமைகிறது. அவன் கடந்து வந்த பாதை, அதில் கற்ற பாடங்கள், அடுத்தவரிடம் கேட்டறிந்த பாடங்கள், அவனின் குணாதிசயங்கள் என எல்லாவற்றையும் சார்ந்தே நான் அமைவேன். கிட்டதட்ட டி.என்.ஏ மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒவ்வொரு மனிதனின் செயல்பாடுகளுக்கும் நானே காரணகர்த்தா. ஆனால் எதையும் நானாக உருவாக்குவதில்லை. எல்லா மனிதருக்குள்ளும் நான் பாய முடியும். மனிதர்களின் மனங்கள் நான் நீந்தி விளையாடும் கடல். என் உருவம் எல்லா மனிதருக்குள்ளும் ஒன்று போலவே இல்லாதிருப்பதால் பல சமயங்களில் நான் மிகவும் நெருங்கிய உறவுகளுக்குள்ளும் குழப்பம் வர கூச்சல் போட காரணமாகிவிடுகிறேன். அது என் தவறல்ல என்றபோதிலும் இது தொடர்கிறது. நானென்ன செய்ய.


வெகு சமீபத்தில் கூட அப்படி ஒன்று நடந்தது. அது இங்கிலாந்து. வானம் மழையென நினைத்து தவறுதலாய் பனியை அள்ளி அள்ளிப் பொழிந்துவிடும் நாடு. அந்த நாட்டின் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருந்தது ஒரு வங்கியின் கணிப்பொறித்துறையின் அலுவலகம். அந்த இடத்தை சவுத்வார்க் என்பார்கள். லண்டனின் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பாலம் இங்கிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். அங்கே தான் வேலை நிமித்தம் வந்திருந்தனர் அஞ்சலியும் சுந்தரும்.


ஈஸ்ட் ஹாம் என்னும் தென்னிந்தியர்கள், தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நண்பர்களுடன் ஒரு மேன்ஷன் வீட்டில் தங்கியிருந்தான் சுந்தர். வீட்டிற்கு வெகு அருகாமையில் ரயில் நிலையம். இரவு நேரங்களில் வேலை பலு காரணமாக அலுவலகத்திலேயே இருக்கும்படி நேர்ந்தால், அகால வேலையில் கூட சீக்கிரம் ரூம் போய்விடலாம். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வீட்டிலிருந்து ஈஸ்ட் ஹாமில் ரயில் ஏறி வெஸ்ட் ஹாம் வந்து மீண்டும் பாதாள ட்யூப் ரயில் ஏறி சவுத்வார்க் வந்து சப்வே படிகள் ஏறினால் அலுவலகம். லண்டன் மாநகரை இந்த ட்யூப் ரயில்கள் குறுக்கிலும் நெடுக்கிலுமாய் முழுவதுமாய் படர்ந்து இருக்கும். இதனால், ஒருவர் லண்டனின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்கு ரயில் மூலமாகவே பயணிக்கலாம்.


குளிர்ந்த காற்று வீசும் காலையில் சுந்தர், மிகவும் மலர்ச்சியாய் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவன் அணிந்து வந்த ப்ரிங்கில் ஜெர்கின் அருகில் இருந்த ஜெர்கின் ஸ்டாண்டில் மாட்டியிருந்தது. அவன் எதிரில் கணிப்பொறித்திரையில் அஞ்சலியின் குட் மார்னிங் மெயில் திறந்திருந்தது. அஞ்சலி இல்ஃபோர்ட் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறாள். இந்த இடம் ஈஸ்ட் ஹாமிற்கு சற்றே அருகில் தான். லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் இவை.


அவன் நினைவடுக்குகளை நான் திறந்து பார்த்தபோது அதில் அஞ்சலியைப் பற்றி அதிகம் தகவல்கள் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அங்கு சந்தித்து மிக சில நாட்களே ஆகியிருந்தது. மேலும், ஒரு பெண்ணை முதன்முதலில் சந்திக்கையில், அவளுக்கு அந்நாள்வரையில் வேறு ஏதேனும் நெருக்கமான உறவுகள் இருந்திருக்கலாமென ஒரு எச்சரிக்கையுணர்வு கொள்ளும் குணாதிசயம் கொண்டவனாக சுந்தரும் இருக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது. அதனால் அவனின் அப்போதைய குதூகலத்திற்கு நான் தடையேதும் சொல்லவில்லை.


நீணட நாட்களாக சேவல்களே உலவிக்கொண்டிருந்த அவன் நினைவுகளில் முதல் முறையாக ஒரு அன்னம். அவன் குதூகலித்தான். கற்பனைகள் கொண்டான். நான் ஒத்துழைத்தேன். தடை சொல்லக் காரணங்கள் இருந்திருக்கவில்லை. அவனின் நினைவடுக்குகளை நான் துழாவியபோது எனக்குக் கிட்டியதெல்லாம் கல்லூரி நாட்களில் கூடப் படிக்கும் பெண்களிடம் பாடங்கள் தொடர்பான விளக்கங்கள் தந்ததுவும், காண்டீனில் நண்பர்களுடனும் தோழிகளுடனும் சேர்ந்து உண்டதுவும், கல்லூரிப்பருவத்து நண்பனொருவன் ஒரு திருமணமான பெண்ணை வளைத்துப் போட்டது எப்படி என்று ஒரு நாள் ராத்திரி முழுவதும் கதை சொன்னதுவும், பால்ய வயதில் ஒரு நாள் பக்கத்துவீட்டு பரிமளா ஆண்டி தூங்கிப்போன நிமிடங்களில் காற்றில் விலகிய முந்தானையினூடே பார்த்த அவளின் மார்புகளும் இன்ன பிற பால்ய வயதுக்கே உரிய விளையாட்டுக்களும், சில இடங்களில் மாட்டிக்கொண்டு முழித்ததும் தான் அதிகபட்சமாகக் கிட்டியது. அவனை வழிநடத்த அவனின் முன் வாழ்க்கையில் வேறேதும் நிகழ்ந்திருக்கவுமில்லை. அவனை வழி நடத்தும் விதிகள் குறைவாக இருந்தது. முன் அனுபவங்கள் அத்தனை முதிர்வடையவில்லை.


நான் கூடு விட்டுக் கூடு பாய்ந்தேன். அஞ்சலியை உலவு பார்த்தேன். அஞ்சலி ஒரு பெண். அதிலும் அழகான பெண். சுந்தர் போல அனேகம் நட்புகளைப் பார்த்திருந்தாள். அவளிடம் குதூகலம் இருக்கவில்லை. கற்பனைகள் இருக்கவில்லை. ஆனால், சுந்தருடன் பரிச்சயம் கொண்ட நாட்களில் அவனின் அவளது அழகைக் கண்டு வெளிப்படுத்திய கண்ணசைவுகளும், குதூகலமும், அவளை மேலும் தெரிந்து கொள்ளத் தூண்டும் ஆர்வமும் அவள் நினைவடுக்குகளில் பதிந்திருந்தன. இது நான் எதிர்பார்த்ததுதான் என்பதாக இருந்தது அவளின் அவதானிப்புகள். அவள் நினைவுகளை நான் தேடுகையில் இது போன்ற எண்ணற்ற பதிவுகள் இருந்தன. கல்லூரி படிக்கையில் ஷ்யாம், சிவா, மனோஜ் இன்னும் பலரும் கண்ணசைவுகளும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.


பள்ளிப்பருவத்தில் எதிர்வீட்டு பொறுக்கி கொடுத்த லவ்லெட்டர், கரண்ட் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மாடி வீட்டு மாமா அவள் இடுப்பை கிள்ளிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தது, கீழ் வீட்டில் இருந்த இரண்டு வயது இளைய சிறுவன் ஒரு நாள் இவளின் பின்னழகைத் தட்டிவிட்டு அறை வாங்கியது என்று இருந்தது. மேலும் அவளுக்கு அந்த நேரம் அவன் எப்படிப்பட்டவன் என்ற கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது எனக்கு. சுந்தரின் நடவடிக்கைகள், இதற்கு முன்பு அவள் பார்த்த, நல்லவன் என்று நம்பிய சிலரின் குணாதிசயங்களுடன் ஒத்துப்போனதால் நான் அவளுக்கு சுந்தரால் தீங்கு விளையாது என்றே அறிக்கை தர முடிந்தது.


எனக்குத் தெரியும் நான் சொன்னது ஒரு பொய்தான். உண்மையில் அவன் தீங்கு செய்பவனா இல்லையா என்று எனக்கும் தெரியாது. ஆனால் எனக்கு இதுவும் தெரியும் அவர்கள் அப்போதைக்கு அந்த பொய்க்கு மட்டுமே தகுதியானவர்களாய் இருந்தார்கள். உண்மையை எதிர்கொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லவேண்டுமானால், ஏதோ ஒரு வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை என் மேல் ஏவி என்னிடமிருந்து வார்த்தைகளைப் பிடுங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


அதே நேரம், சுந்தர் அறியாவண்ணம் அஞ்சலியின் மெயில் பாக்ஸில் வினோத், மாறன், தினா என்று மேலும் வேறு சிலரின் மெயில்களும் வந்திருந்தன. இவர்களும் அதே அலுவலகத்தில் வேறு ப்ராஜெக்டில் வேலை செய்கிறார்கள். அவைகளும் சுந்தரின் மெயில்கள் ரீதியானவைகளே. அவள் அழகில் மயக்கமுற்றதான, அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் நோக்கமுடையதானதாய் இருந்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. அதற்குள் சுந்தர் சற்றே நெருக்கமாகிவிட்டிருந்தான். ஒரே துறையில் ஒரே அலுவலகத்தில் வேலை. இல்ஃபோர்ட், ஈஸ்ஹாம் என்று வீடும் அருகாமையிலேயே அமைந்ததால், இல்ஃபோர்டில் இருக்கும் சினி வோர்ல்டில் வருட சாந்தா பெற்று வார இறுதிகளில் ஒன்றாக படம் பார்ப்பது, பார்த்த படங்களைப் பற்றி சிலாகிப்பது, அருகிலேயே இருக்கும் ஷாப்பிங் மால், ஒன் பவுண்ட் ஷாப் மற்றும் செயின்ஸ்பரியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, வேலை நேரம் போக மீதி நேரத்தில் கட்டுரை, கவிதை எழுதுவது இருவருக்குமே பொழுதுபோக்கானதில் நெருக்கம் வளர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.


என் பாடு திண்டாட்டமாகியிருந்தது. சுந்தரிடம் நான் அவதானித்தவகையில், அவனின் கற்பனை உலகில் அவனும், அஞ்சலியும் தேவைப்படும் இடங்களில் அவனின் குடும்பமும் மட்டுமே இருந்தது. ஆனால், அவளின் கற்பனை உலகில் சுந்தர், வினோத், தினா, மாறன் இன்னும் பலர் இருந்தனர். அந்தக் கற்பனைகள் அவளின் நட்பு எல்லையைத் தாண்டி வரவில்லை கற்பனையில் கூட. அந்தக் கற்பனைகளில் அவள் பல சாதனைகள் செய்தவளாய் இருந்தாள். எல்லோராலும் புகழப்படும் இடத்தில் திறமை மிக்கவளாய் இருந்தாள். உலகில் உள்ள எல்லா பெண்களின் பிரதினிதியாக இருந்தாள். சுந்தர், வினோத் போன்றோர் அவளின் நலன் விரும்பிகளாக இருந்தனர்.


எனக்கு யோசனையாக இருந்தது. அஞ்சலி, தனக்கு மெயில் அனுப்பும் மற்றவர்களைப் பற்றி சுந்தரிடம் சொல்லச் சொல்ல வேண்டுமா என்று. அவளின் நினைவடுக்குகளில் நான் தேடியபோது பிரிதொரு சமயம், இப்படியாக வருண் என்பவனுடனான் நட்பை அஜய் என்ற இன்னொரு நட்பிடம் சொல்லப்போய் அதனால் சில பிரச்னைகள் வந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. அது, அஜய், வருணுடனான அஞ்சலியின் நெருக்கத்தை தேடப்போய் கடைசியில் நட்பு முறிந்ததாக இருந்தது.


அவளிடம், மற்ற மெயில்களைப் பற்றி சுந்தரிடம் சொன்னால், சுந்தர் இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்கமாட்டான் என்று சொல்ல போதுமானதாக இருந்தது. ஒருவகையில் என்னை அப்படிச் சொல்ல வைத்ததும் அவளேதான். அவள்தான் என்னிடம், சுந்தரை என் நட்புவளையத்தில் பொருத்துவதாய் இருக்கவேண்டும் உன் கருத்துக்கள் என்றாள். அதே நேரம், என் ஏனைய நட்புகள் என்னிடமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் அவளேதான் நிர்பந்தித்தாள். அந்தக் கட்டளை அவளின் அடிமனதில் வாயில்களிலிருந்து வந்தது. நான் வேறு என்னதான் செய்ய. நான் சொல்லிவிட்டேன். அஞ்சலியும் அதையே தான் செய்தாள். அவள் சொல்லவில்லை. இது ஒரு சிறிய விடயம் என்றும் சுந்தரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் நட்பு முதிரவில்லை என்றும் என்னிடம் திணித்தாள்.


இதற்குப் பிறகு நிறைய நடந்தது. சுந்தரும் அஞ்சலியும் காதலித்தார்கள். அப்போது, அது நாள்வரை அவளுக்கு இதர மெயில்கள் அனுப்பியவர்களெல்லாம் தெரிந்தவர்கள் என்ற எல்லையைத் தாண்டி, நண்பர்கள் என்ற எல்லைக்குள் வந்திருந்தனர். அவர்களை நண்பர்கள் என்றே அறிமுகப்படுத்தினாள் சுந்தருக்கு. பின் அஞ்சலி சுந்தர் இருவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா வந்து திருமணம் செய்துகொண்டு ஒரு மாதம் தேனிலவை கொண்டாடிவிட்டு மீண்டும் லண்டன் வந்தனர். அவைகளைப் பற்றிய விளக்கங்களெல்லாம் இந்தக்கதைக்கு உதவாது என்றே நினைக்கிறேன்.


இப்போது அவர்கள் கணவன் மனைவி. இல்லறம் இனிதே தொடர்ந்தது. நாட்கள் மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியிருந்தது. எனக்குத் தான் தர்மசங்கடம் இனி. எனக்கு நானே முரண்பட்டுக்கொள்ளும் காலம் தொடங்கிவிட்டதல்லவா. ஒரு நாள், சுந்தர் எத்தனை மணிக்கு செயின்ஸ்பரி போகலாம் என்று அஞ்சலியிடம் கேட்டு மெயில் அனுப்ப, அஞ்சலியிடமிருந்து பதில் இருக்கவில்லை. எங்காவது மீட்டிங் செல்வதாயிருந்தால் அஞ்சலி சுந்தரிடம் மெயிலில் சொல்லிவிட்டு செல்வது அவனின் நினைவுகளில் பதிந்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று மெயில் அனுப்பியும் பதில் இல்லாததால் சுந்தர் அஞ்சலியின் இடத்திற்கு வந்தான். நானும் அவனுடன் இருந்தேன். அஞ்சலி அவளின் இருக்கையில் தான் இருந்தாள். யாருக்கோ மெயிலில் பதிலளித்துக்கொண்டிருந்தாள். அவள் எதற்கு பதில் எழுதிக்கொண்டிருந்தாளோ அது சுந்தர் மெயில் இல்லை.


அந்த பதில் அலுவலக பதில் போல் இல்லைதான். தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியது போன்று இருக்கவே சம்பிரதாயமாய் நான் சுந்தரின் எச்சரிக்கை உணர்வுகளை எழுப்பிவிட்டேன். நானென்ன செய்ய. அவனின் கற்பனைகளிலோ, நினைவுகளிலோ இப்படி இதற்கு முன் பதிந்ததில்லை.அவனின் எதிர்பார்ப்புக்களையும் மீறி இருந்தது அது. அதனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. அவள் சிவா என்பவனுக்கு பதில் அனுப்பிக்கொண்டிருந்தாள். நான் அவனை எச்சரிக்கையாக இருக்கும்படியும், தற்போது பார்த்ததை அவளுக்கு தெரியாமல் வைத்துக்கொள்ளும்படியும் சொன்னேன். அது ஏமாற்றமா, துரோகமா, வலிவில்லாத அபாயமில்லாத ஏதோ ஒன்றா என்று தெரிந்துகொள்ள வேண்டும் சுந்தருக்கு.


சுந்தர் தன் இருக்கைக்குத் திரும்ப வந்தான். அவள் இன்னேரம் அவனின் மெயில் பார்த்து பதில் அனுப்பியிருந்தாள். சுந்தர் அவளுக்கு ஃபோன் செய்தான்.

ட்ரிங் ட்ரிங். ஃபோன் எடுக்கப்பட்டது. மறுமுனையில் அவள்.

'ஹாய் டியர்' இது அஞ்சலி.

'ஹாய், ஹேய் ரிப்லை பண்ண இவ்ளோ நேரமா?' சுந்தர் வினவினான்.

'இல்லப்பா, ஒரு மீட்டிங்க்கு ப்ரிபேர் பண்ணிக்கிட்டிருந்தேன், அதான்'.

'சரி விடு, ஈவ்னிங் சிக்ஸ்க்கு செயின்ஸ்பரி போலாம். ஒ கே?'.

'ஆங் ஓ கே டியர்'.

'ஒ கே பை'. மறுமுனையில் ஃபோன் வைக்கப்பட்டது.

ஃபோனை மேஜையில் வைத்துவிட்டு அதனின்றும் கையை எடுக்காமல் விரல்களால் மெல்லியதாய் தட்டியபடியே அமர்ந்திருந்தான் சுந்தர். அவன் கண்கள் சன்னலினூடே தேம்ஸ் நதியில் செயற்கையாய் நீரோட்டம் உருவாக்கப்படுவதை வெறுமையாய் வெறித்துக்கொன்டிருந்தது. பொய் சொல்கிறாள். யாருக்கோ பதில் எழுதித்தான் நேரம் கடந்திருக்கிறது. ஆனால், தன்னிடம் மறைக்கிறாள்.


அஞ்சலியின் இந்த செய்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒருவேளை அவனுக்கும் அஞ்சலிக்கும்............??!! ஒரு பதிலளிக்கப்படாத கேள்வி உருவாகியிருந்தது. சுந்தரின் எல்லைக்குள் இந்தக் கேள்விக்கு எனக்குமே பதில் தெரியவில்லை. ஒருவேளை அஞ்சலியின் எல்லைக்குள் எனக்கு இதற்கான பதில் கிடைக்கலாம்.


நான் அஞ்சலியின் எல்லைக்குள் நுழைந்த‌ போது உண்மை புரிந்தது. அவள் க‌விதைக‌ளைச் சிலாகித்து வ‌ரும் ப‌தில்க‌ளை ப‌ர‌வ‌ச‌த்துட‌ன் பதிலனுப்பிக்கொண்டிருந்திருக்கிறாள். தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் எனக் கொண்டிருந்தாள். ஆனால் அவ‌ளுக்கு தெரிய‌வில்லை, அவ‌ள் க‌விதைக‌ளை சிலாகித்து எழுதிய யாரும் சுந்த‌ரின் க‌விதைக‌ளைப் பார்க்க‌க்கூட‌ இல்லை என்பது. அது ஏனென்று அவ‌ர்க‌ளின் எல்லைகளுக்குள் சென்றால் தான் என‌க்கு விள‌ங்கும். நான் சென்ற‌போது ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் தென்ப‌ட்டாலும் எதிர்பாலின‌ம் என்ற‌ கார‌ண‌மே பிர‌தான‌மாக‌த் தென்ப‌ட்ட‌து. ம‌னித‌ன் வில‌ங்கிலிருந்து வ‌ந்த‌வ‌ன் என்ப‌தை அடிப்ப‌டை குணாதிச‌ய‌ங்க‌ளில் நிரூபிக்க‌வே செய்கிறான்.


அவளைப் பொறுத்தமட்டில் அது அவளின் நட்பு. ஒரு நட்பு தரும் ஊக்கம். ஒத்த கருத்துடைய நண்பன் தன் படைப்பைப் பற்றி சிலாகிக்கும் நிகழ்வு. தன்னை ஊக்குவிக்கவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. சுந்தருக்கு இப்படி யாரும் செய்யவில்லை என்பதை அவள் உணர வாய்ப்பே இல்லை. அந்தக் கோணத்தில் யோசிக்கக்கூட தோன்றியிருக்கவில்லை அவளுக்கு. ஏனெனில், எதையும் ஆழ்ந்து யோசித்துப் பழகியிருக்கவில்லை. உறவுகளை ஆராய்ந்து பழகியிருக்கவில்லை அவள். தன்னிடம் வருபவர்களை அப்படியே நட்பாய் சுவீகரிக்க மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறாள். அஞ்சலி வெறும் நட்புறவாகத்தான் ஏனையோரிடம் பழகுகிறாள். ஆனால் அதை சுந்தரிடம் ஏன் மறைக்க வேண்டும். நான் அவளின் நினைவடுக்குகளைத் துழாவினேன். மறைக்க‌ வேண்டுமென்று அவ‌ள் ம‌றைத்திட‌வில்லை. மாறாக‌, இதெல்லாம் அற்ப‌ விஷ‌ய‌ம், இதையெல்லாம் சொல்ல‌ வேண்டிய‌ தேவையில்லை என்ப‌தாக இருந்தது. என‌க்கு புரிந்துவிட்ட‌து. அழகிய நட்பை அவள் இழக்க விரும்பவில்லை. ஆனால், இதை நான் சுந்த‌ரின் எல்லைக்குள் கொண்டு செல்ல‌ இய‌லாது. என‌க்கு அத‌ற்கு அதிகார‌மில்லை. ச‌க்தியில்லை. நான் மெளனித்துவிட்டேன்.


சுந்தர் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. உண்மைக்குத் தகுதியானவர்களாய் இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்றாவது ஒரு நாள். அவன் நினைவுகளில் நின்ற, கல்லூரிப் பருவத்து நண்பனொருவன் திருமணமான பெண்ணை வளைத்ததைப் பற்றிச் சொன்ன சமாச்சாரங்கள் இப்போது அஞ்சலியுடன் நடப்பதுடன் வெகுவாக ஒத்துப்போயின. சுந்தர் தோல்விகளை விரும்பாதவன். அவன் வாழ்க்கையில் தோற்க விரும்பவில்லை. அது அவன் குணாதிசயம். இப்படியிருக்கையில் எனக்கு வேறு வழியில்லை. நான் சுந்தரை எச்சரித்துத் தான் ஆகவேண்டும்.


'ஹேய் செல்லம், நீ கண்டிப்பா வேலைக்கு போகணுமா என்ன? நான் சம்பாதிக்கிறதே போதுமே' என்று படுக்கையறையில் கொஞ்சலுடன் ஆரம்பித்த சுந்தர், அஞ்சலியிடமிருந்து அவனுக்கு சாதகமாக பதில் வராது போகவே 'வீடு எப்படி கிடக்கு பாரு, கார்ப்பொரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி. இதெல்லாம் நீ கவனிக்கக்கூடாதா. இதக்கூட கவனிக்காம என்ன கிறுக்கல் வேண்டி கிடக்கு. எங்கம்மா வீட்டை எப்படி பாத்துப்பாங்க தெரியுமா? நடு வீட்ல சாதத்தை கொட்டி பாத்தி கட்டி திங்கலாம். அவ்ளோ சுத்தமா இருக்கும். பெருசா கிறுக்கறாளாம். நானும் தான் எழுதுறேன். ஒருத்தன் கூட பதில் போட மாட்டேங்குறான். அது சரி. நான் என்ன உன்ன மாதிரி பொட்டச்சியா' என்பதாக விரிந்தது.


நாளாக நாளாக, அவளைப் பற்றிய பதிலளிக்கப்படாத கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன‌. அவ‌ளுக்கு சுந்த‌ர் அனுப்பும் மெயில்க‌ளுக்கு தாம‌த‌மாக‌ ப‌தில் வ‌ருவ‌து வாடிக்கையாகிவிட்ட‌து. பிறிதொரு நாள், வேலை ப‌லு கார‌ண‌மாக‌ சுந்த‌ர் அலுவ‌ல‌க‌த்திலேயே தாம‌திக்க‌ நேரிட‌, அன்றைக்கென்று தினா அவ‌ளைத் காரில் அவ‌ள் வீட்டில் ட்ராப் செய்திருக்கிறான். இப்ப‌டியான‌ ட்ராப்க‌ள் த‌ன‌க்குக் கிடைப்ப‌தில்லை. இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. பதிலளிக்கப்படாத இன்னுமொரு கேள்வி. இப்போதெல்லாம், வினோத்தை அடிக்க‌டி அஞ்ச‌லியுட‌ன் தேனீர் இடைவெளிக‌ளில் பார்க்க‌ முடிகிற‌து. ஊர்ல இருக்கிறவன்லாம் டைம்பாஸ் பண்ற‌துக்கா நான் பொண்டாட்டி கட்டி வச்சிருக்கேன். சுந்தர் வார்த்தைகளால் கருவினான். ஏமாற்றம் அறவே பிடித்தமில்லை சுந்தருக்கு. அது அவன் குணாதிசயம். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பதில்கள் இல்லாத நிலையில் தனக்கே தனக்கென்று நினைத்த இதயத்தில் தனக்கென்று ஒரு சிறு பகுதிதான் அளிக்கப்பட்டிருக்கிறதென்று உருவகித்துக்கொண்டுவிட்டான் அவன். அந்த ஏமாற்றம் அவனை மிகவும் எரிச்சலூட்டியது. தான் ஒரு கதா நாயகன் என்று நினைத்திருந்த இடத்தில், பத்தோடு பதினொன்றாகியிருக்கிறோம் என்ற நினைப்பை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.


அஞ்சலியிடம் வேலையை விடச்சொல்லிக் கெஞ்சியதில் அவள் மிஞ்சித்தான் போனாள். நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ விஷ‌ய‌ம் கைமீறிப் போய்க்கொண்டே தான் இருக்கிற‌து. முன்பாவது மெயில்களுடன் நின்றது இப்போது வீடு வரை ட்ராப், காபி பிரேக், வீக்கென்ட் விசிட் என்று போகிறது. இரண்டொரு முறை இதையெல்லாம் அன்பாய் எடுத்துச்சொல்லப்போய், அஞ்சலியிடம் நாரோமைன்டட் என்று பெயர் வாங்கியதுதான் மிச்சமானது.


தான் எதிர்பார்த்த வேலையை உதவியாளனை சரியாக செய்ய வைக்க, முதலில் கண்ணாபின்னாவென்று கத்த வேண்டும். அடங்கித்தான் போக வேண்டுமென்கிற நிர்பந்தத்துடன் இருக்கும் உதவியாளன் நிச்சயம் பணிந்து போவான். எதிர்பார்த்த வேலையை தானாகச் செய்வான் என்று உலகம் கற்றுத்தரும் பாடம் அவன் நினைவடுக்குகளில் பதிந்திருந்தது. அன்பாய் சொல்லியும் அஞ்சலி கேட்கவில்லை. இப்போதைக்கு கைமீறிப்போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை கட்டுக்குள் கொண்டு வர வேறெந்த உபாயமும் தெரியாத பட்சத்தில் எனக்கும் சுந்தரின் எல்லைக்குள் வேறு வழியிருக்கவில்லை. அந்த யுக்தியையே சுந்தருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதாயிற்று வேறு வழியே இல்லாமல்.


சுந்தர் அதையே பிரயோகித்தான். 'எப்ப பாத்தாலும் ஏன் கண்ணாடி முன்னாடி நிக்கிற. பெரிய மேனா மினுக்கியா நீ. ராம்ப் ஷோவுக்கா போகப் போற? இப்ப பல்லிலிக்கிறவன்லாம் பத்தாதா உனக்கு? இதுல ஜிம் வேறயா. வாய்க்கு ருசியா சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு. எங்கம்மா அவ்ளோ நல்லா சமைப்பாங்க தெரியுமா. நீ மினுக்கிகிட்டு, ஜிம் போய்ட்டு அவசர அவசரமா சமைச்சா எப்படி நல்லா இருக்கும். கண்றாவி. இதெல்லாம் ஒரு டிபனா' என்ற அவனின் உருமல்கள் அவளின் பெருவாரியான நேரத்தை வீட்டிலேயே செலவிடும்படி சொல்லும் நோக்கமுடையதாகவே இருந்தது.


அஞ்சலி சுந்தருக்குமான சண்டை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தது. ' லவ் இஸ் பிளைண்ட்னு சொல்றது உண்மைதாண்டி. ஹி வாஸ் நாட் லைக் திஸ் பிஃபோர். லவ் பண்றப்போ கண்ணே மணியேன்னு கொஞ்சறது. கல்யாணம் ஆனதுக்கப்புறம் நாயே பேயேன்னு திட்றது. சுந்தரும் எல்லா ஆம்பிளைங்க மாதிரி இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லடி' என்பதாக தோழிகளுடன் புலம்பித்தீர்த்தாள் அஞ்சலி.


நான் அஞ்சலியை பார்த்து பரிதாபம் கொண்டேன். அவளுக்கு உண்மை புரியவில்லை. சுந்தருக்கும் தான். ஏனெனில் நான் விசித்திரமானவன். ஒருவரின் எல்லைக்குள் நடக்கும் எந்த விஷயத்தையும் அடுத்தவரது எல்லைக்குள் தானாய் பிரவேசிக்கச்செய்ய எனக்கு சக்தியில்லை. என்னில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. சரியும் உண்டு, தவறும் உண்டு. ஆனால் எதையும் நானாக உருவாக்குவதில்லை. நான் எந்த மனிதனிடம் இருக்கிறேனோ, அந்த மனிதனின் குணாதிசயங்களை, பண்புகளை, விருப்பு வெறுப்புக்களை, வாழ்க்கையில் அதுவரை கற்ற பாடங்களை, கடந்து வந்த நிகழ்வுகளைப் பொறுத்தே நான் அவனை வழி நடத்தமுடியும். அதனால், என்னைக் குறை சொல்வது அறிவீனம். முட்டாள்த்தனம்.


பிற்பாடு நடந்தவைகள் எதுவும் என் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவர்கள் உணர்வுகளால் என்னை பலவீனப்படுத்தியிருந்தனர். ஆத்திரமும், கோபமும், துவேஷமும் கொண்டு என்னிடமிருந்து தொடர்ச்சியாக வார்த்தைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தனர். அஞ்சலியிடன் பெண் சுதந்திர எண்ணங்கள் அதிகம் இருந்தன. நானறிவேன். யாரிடமும் அடிமையாக இருக்க தான் தயாராக இல்லையெனக் கருவினாள். அவளை ஊக்குவிக்க அனேகம் பேர் இருந்தனர். அந்த ஊக்குவிப்புகளுக்கான நோக்கங்கள் வேறு என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை. ஐந்திலக்க ஊதியமும், அந்நிய நாட்டு கலாச்சாரமும் அவர்களின் பேச்சும் அவளுக்கு தைரியம் தந்திருக்கவேண்டும். சுந்தருக்கும் பொறுமையில்லை. தன் கட்டுப்பாட்டை மீறி அவள் சத்தம் போடுவது அவனை எரிச்சலூட்டியது. நாலு கால் பாய்ச்சலில் முந்திக்கொண்டு விவாகரத்து பத்திரம் நீட்டினான் சுந்தர். நான் மட்டுமென்ன சளைத்தவளா என்பதாக ஆவேசமாய் கையழுத்திட்டாள் அஞ்சலி. நிதானமின்றி உணர்வுகள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டன. அவைகள் ஆசுவாசம் கொண்ட நொடிகளில் அவர்கள் இருவரும் நிரந்தரமாய்ப் பிரிந்திருந்தனர்.


பதிலளிக்கப்படாத கேள்விகள் அவர்களின் திருமண வாழ்வை சிதைத்திருந்தன. அஞ்சலி, சுந்தரை சந்தேகப் பேய் என்று கூடச் சொல்லலாம். சுந்தர் அஞ்சலியை திமிர் பிடித்தவள் என்று ஒதுக்கியிருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியும் இந்த பதிலளிக்கப்படாத கேள்விகள் தான் இவர்களின் திருமண வாழ்க்கை சிதைக்கப்பட்டதற்குக் காரணம்.


உண்மையில் எந்த ஒரு ஆண்மகனும் தன் மனைவியையோ, காதலியையோ வேற்று மனிதர்களுடன் நட்பு ரீதியாய் பேசவோ, அலுவலக ரீதியில் இணைந்து செயலாற்றிடவோ தடை சொல்லும் அளவிற்கு அறிவில் முதிர்ச்சியடையாதவர்களாய் இருப்பதில்லை. அப்படி செயலாற்றினால், உடனே அதற்கு பாலியல் ரீதியான காரணங்கள் கற்பித்து பெண்ணை ஒதுக்கிவிடுபவர்களாக‌ இருப்பதில்லை. மாறிவரும் புதிய உலகில், முதிர்ந்து வரும் சமூக சூழ்நிலையில் இதெல்லாம் பெரிய விஷயமாக கருதப்படுவதில்லை. ஆனால் எதற்குமே ஒரு எல்லை உண்டு. எதுவுமே ஒரு பதிலளிக்கப்படாத கேள்விகள் உருவாகும்வரை தான். பதில்களில்லாத கேள்விகள் வரும் அளவிற்கு ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் கேள்வி. பதிலளிக்கப்படாத கேள்விகள் வளரும் தன்மை உடையன. அவைகள் வளர்ந்தால், அது நாளடைவில் சந்தேகமாய் உருவெடுக்கின்றன‌


கணவன் மணைவிக்கிடையிலோ, அல்லது காதலர்களுக்கிடையிலோ இது போன்ற பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கிடைக்கப்பெற்றால், பிரச்சனைகள் வரவேண்டிய தேவை இராது. நான் சங்கடப்பட வேண்டிய அவசியமும் இராது. இப்போது நீங்கள் சொல்லுங்கள். இது போலொரு திருமண முறிவை அல்லது காதல் முறிவை இப்பூலகில் எங்கோ யாருக்கோ என‌ நீங்கள் கடந்திருக்கிறீர்களா?- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
காற்றுவெளி செப்டம்பர் (2010) மாத இதழ்

Wednesday, 18 August 2010

தங்க பிஸ்கட்ஸ் - சிறுகதை
தங்க பிஸ்கட்ஸ் - சிறுகதை

'என்ன பாண்டி, என்ன விசேஷம், நீ சும்மா கூப்பிடமாட்டியே?' மஃப்டியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் அந்த ஒதுக்குப்புரமான உள்ளடங்கிய சந்தில் நின்றபடி சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்.


'வழக்கம்போலதான் சார். 25 கோடி மேட்டரு. ஃபுல்லா தங்க பிஸ்கட்டு. திருப்பிவிட்றதுக்கு சொல்லிருக்கானுங்க. போன தபா மாரி சல்லிசு கெடையாது. அதான் சொல்ட்டு போலான்னு சார்'.


'ம்ம்..என்னிக்கி?'.


'நாளன்னைக்கு சார்'.


'ம்ம் ..55 கோடின்னு மெஸேஜ் வந்திச்சே'.


'அது தெர்ல சார். என்கிட்ட 25 தான் சார் சொன்னாங்க. மீதியை வேற யார்னா கிட்ட கூட குட்த்ருக்கலாம் சார்'.


'ம்ம்.. வ‌ர‌வ‌ர‌ நீங்க‌ல்லாம் கூட‌ கார்ப்ப‌ரேட் மாதிரியே ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டீங்க‌டா. ஒருத்த‌ன வ‌ச்சே கைமாத்துற‌தில்ல‌.'


'ஆமா சார், நாங்க‌ளும் பொழைக்க‌ணும்ல‌'


'அட‌ப்பாவிங்களா, இதுல‌ நியாய‌ம் வேற‌யா'


'என்னா சார் ப‌ண்ற‌து. அப்ப‌ன் ஆத்தா ப‌ண்ண‌ த‌ப்பு. ப‌டிப்பு இல்ல‌. ஆனா வ‌யிறுன்னு ஒண்ணு இருக்குல‌. ஆர‌ம்பிச்சாச்சு. பின்னால‌ போக‌ முடியாது சார். வாழ்வோ, சாவோ இதுல‌தான் சார். திருந்துரேன்னு சொன்னாலும் ஒலகம் எங்களையெல்லாம் ஒத்துக்கவா போவுது?'.


'ம்ம்.. ஹீரோலேர்ந்து வில்லன்வரைக்கும் எவ‌ன‌ கேட்டாலும் இது ஒண்ணு சொல்லிடுங்க‌. ச‌ரி என்னா ப்ளான்'.


'பாக் ரூட்ல‌தான் சார். க‌ட‌ல்ல‌யே கைமாத்த‌னும் சார். வ‌ழ‌க்க‌ம்போல‌ கைமாத்ன‌ப்புற‌ம் நான் போய்டுவேன். நீ புட்சிக்க சார். இல்ல‌னா என்னைய‌ போட்ருவானுங்க‌'.


'ம்ம்..சரி, ஆனா இந்த‌ த‌ட‌வ‌ ஒன்னையே புடிக்க‌லாம்னுதான் இருக்கேன்'.


'அது ஒன்னால‌ முடியாது சார்'.


'டேய், என்கிட்ட‌யே ச‌வாலா? நான் போலீஸூடா. நீ க‌ட‌த்த‌ல்ப‌ண்ற‌வ‌ன். நினைப்புல‌ இருக்க‌ட்டும்'.


'அது இருக்கு சார். ஆனா ஒன்னால‌ என்ன‌ ச‌ர‌க்கோட‌ புடிக்க‌ முடியாது சார்'.


'என்னடா சவாலா?'.


'அத்த‌ ஏன் சார் ச‌வால்னு சொல்ற‌. க‌த்துக்கோயேன்'.


' நானா? ஒன்ட்ட‌யா? நேர‌ம்டா'.


'இதுல‌ இன்னாசார் கீது. யார்ட்ட‌னாலும் க‌த்துக்க‌லாம் சார். ஒன்ன டபாய்ச்சி நான் கைமாத்திட்டா அப்ப நான் கில்லாடிதானே சார். ஒரு கில்லாடி இன்னொரு கில்லடி கிட்ட கத்துக்கலாம்தானே சார்.'


'ம்ம் நல்லாதான் பேசற. சர்டா சவால்டா. ஒன்னைய நாளன்னைக்கு புடிக்கிறேன்டா. சரக்கோட. மவனே ஓடிடாத. ஒழுங்கா வந்து சேரு'


சொல்லிக்கொண்டே சதாசிவம் திரும்பி, சந்து முனையில் நிறுத்தியிருந்த தன் பைக்கை நோக்கி நடக்கலானார். பாண்டி அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தான். சில‌ர் அடிப்ப‌டையில் மனசாட்சி சொல் கேட்கும் உத்தமர்களாய் பிற‌ந்திருப்ப‌ர். கால‌மும், வ‌ள‌ரும் சூழ‌லும் அவ‌ர்க‌ளை கெட்ட‌வ‌ர்க‌ளாக்கியிருக்கும். பாண்டி அப்ப‌டித்தான் க‌ள்ள‌க்க‌ட‌த்த‌ல் தொழிலுக்கு வ‌ந்திருந்தான். அடிப்ப‌டையில் ந‌ல்ல‌ ர‌த்த‌ம் இருந்த‌த‌னாலோ என்ன‌மோ ம‌ன‌சாட்சி உறுத்த‌, ஒரு க‌ட்ட‌த்தில் தேச‌துரோக‌ம் செய்ய‌ ம‌ன‌ம் கோணாம‌ல், அதே நேர‌ம், க‌ள்ள‌க்க‌ட‌த்த‌லிருந்து முழுமையாக‌ வெளிவ‌ர‌வும் முடியாம‌ல் குழம்பியிருந்தவனை ஒரு கேஸ் விஷயமாக விசாரித்ததில் தெரியவந்தது.


திருந்தவேண்டுமென நினைப்பவனுக்கு ஒரு வடிகால் கிடைத்தே ஆகவேண்டும். இல்லையென்றால், இனி திருந்தியென்ன என்பதாய் கள்ளத்தனத்திலேயே மூழ்கிப்போய்விட வாய்ப்புள்ளது. அப்போதுதான், அவனை இன்ஃபார்மராய் செயல்பட வைக்கும் எண்ணம் வந்தது. கள்ளத்தனம் செய்து கொண்டே இதையும் அவனை செய்ய வைக்க, சல்லிசாக வரும் கடத்தல்களை வேண்டுமென்றே பிடிக்காமல் விட்டுவிட்டு, அளவில் மற்றும் விளைவுகளில் பெரியதாக இருக்கும் கடத்தல்களில் அவன் கைமாற்றிய பின்னர், அடுத்தவர் கைகளில் சரக்கு இருக்கையில் பிடித்துவிட்டு, அவனைதேசத்துரோகம் செய்ததான குற்ற உணர்விலிருந்து காப்பாற்றி, அவனுக்கு பாதகமில்லாமல் அவனுக்கான வடிகால்களை கொடுப்பதுதான் சதாசிவத்தின் எண்ணம். இதனால் சதாசிவத்துக்கும் கேஸ் கிடைக்கிறது. பாண்டிக்கும் தான் ஒரு தேசத்துரோகி இல்லை என்ற எண்ணம் அவனை வாழ வைக்கிறது. இரண்டுபக்கமும் லாபம்.


சரியாக அவன் கைமாற்றிவிட்டு போனதும், ரெகுலர் ரெய்டில் பிடிப்பதுபோல் பிடித்துவிட்டு ஒருவாறாக இது நாள்வரை நிறைய கேஸ் பிடித்தாகிவிட்டது. பாண்டிக்கு சரியான க்ரிமினல் ப்ரெய்ன். போலீஸில் சேர்ந்திருந்தால் பக்காவான துப்பறியும் போலீஸ் ஆகியிருப்பான். அவனிடம் சவால் விட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஒருவேளை அவன் சொன்னது போல் தனக்கு உண்மையாகவே டிமிக்கி கொடுத்துவிடுவானோ என்று தோன்றியது. அப்படி அவன் செய்துவிட்டால், போலீஸ்ன்னு கெத்து காமிக்க முடியாதே. அதற்காகவேனும், அவனை சரக்குடன் பிடிக்கவேண்டும். சதாசிவம் பைக்கில் வீடு செல்லும்வரை இதே நினைப்பாகத்தான் இருந்தார்.


அவன் கைமாற்ற இருப்பது 25 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை. 24 காரட் தங்கம். ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடிக்கருகில், கடலில் 20 நாட்டிகல் மைல் தொலைவில் பாக் பே என்ற இடம் வருகிறது. அந்த ரூட் வழியாகத்தான் புலிகளுக்கான ஆயுதங்கள் கடத்தல்கள் பல நடந்திருக்கின்றன. இப்போதும் அதே ரூட்டில்தான் கடத்தப்போகிறான். எப்படியாவது பிடித்துவிடவேண்டும்.


அடுத்த நாள் முழுவதும் சதாசிவத்திற்கு அதே சவாலின் நினைப்பாகவே இருந்தது. அதற்கடுத்த நாள், மதியம் மணி மூன்று. இந்தியன் நேவியின் கோஸ்ட் கார்டு கப்பலில் ரோந்து வந்துகொண்டிருந்தார் சதாசிவம். தூரத்தில் ஒரு சின்ன கப்பல் தலைமன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாண்டியின் கப்பலாகத்தான் இருக்கும். அருகே செல்லச் செல்ல ஊர்ஜிதம் ஆயிற்று. பாண்டியின் கப்பலேதான். பெட்ரோல் இன்ஜினில் ஓடும் சிறிய ரக, மீன் பிடித்தலுக்கு பயன்படும் கப்பல். கப்பலை நிறுத்தச்சொல்லி வந்த கட்டளைக்குப்பணிந்து பாண்டி கப்பலை கோஸ்ட் கார்டு கப்பலுக்கருகில் நிறுத்தினான்.


சதாசிவம், இன்னும் இரண்டு போலீஸ் ஆட்களோடு பாண்டியின் கப்பலில் இறங்கினார். தேடுதல் வேட்டை தொடங்கியது. கப்பலின் கீழ்த்தளம், ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மரத்தாலான பெட்டி, இன்ஜின் ரூம், பின்பக்கம், முன்பக்கம் என எல்லா இடத்திலும் தேடப்பட்டது. மெகானிக் பாக்ஸில் வெறும் இன்ஜின் பழுதுபார்க்கும் இரும்பாலான‌ சாதனங்கள் மட்டுமே இருந்தன. தண்ணீரில் மிதப்பதான காற்றடைக்கப்பட்ட உருளை வடிவ ரப்பர் குழாய்கள், கத்தியால் கிழிக்கப்பட்டன. வெறும் ரப்பர் தோல்களே மிஞ்சியது. இன்ஜின் இருக்கும் இடத்தில் இன்ச் விடாமல் தேடப்பட்டது. மிதமிஞ்சி கொட்டப்பட்ட க்ரீஸ், துருப்பிடித்த இரும்பு சாமான்களுடன், கள்ள மார்க்கெட்டில் கிடைக்கும் தரம் குறைந்த உதிரி பாகங்கள் மட்டுமே கிடைத்தன.


பாண்டி நின்றிருந்த இடத்தின் கீழ், அவன் பாதங்களுக்கு அடியில் பத்து சென்டிமீட்டர் சதுர இடைவெளியில் ஸ்க்ரூக்கள் இருந்தன. அதில் ஒரு பக்கமான இரண்டு ஸ்க்ரூக்கள் சமீபத்தில் திருகப்பட்டதான தோற்றத்தில் இருந்தன. பொதுவாக ரகசிய அறை செய்து கடத்துபவர்கள், ரகசிய அறைக்கான கதவின் ஸ்க்ரூக்களை நெம்புவ‌தால், அந்த இடம் சற்றே வித்தியாசமாக புதிது போல் இருக்கும். சதாசிவம் ஒரு புன்முருவளுடன் அவனை தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு அந்த ஸ்க்ரூக்களை திருகித் திறக்க உள்ளே காலியாக இருந்தது. பாண்டி முகத்தில் எந்தவித உணர்வும் அற்று நின்றிருந்தான்.


சுருங்கிய நெற்றியுடன், தொடர்ந்து தேடிய சதாசிவத்திற்கு ஏதோ பொறி தட்ட, சட்டேன கப்பலின் பின்னே பார்த்தார். மீன் பிடிக்க உதவும் தூண்டில்கள் நாலைந்தில் ஒவ்வொன்றிலும் ஒரு பெரிய மீன் இறைச்சி கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. ஏன் தொங்கவிடப்படவேண்டும். இறைச்சி தொங்கினால், சுறாக்கள் வரும். சுறாக்களை ஏன் வரவைக்க வேண்டும். சதாசிவத்திற்கு வித்தியாசமாய்த் தோன்றியது. இந்த சமயத்தில் ஏனோ அவருக்கு நாயகன் கமல்ஹாச‌னெல்லாம் நினைவுக்கு வந்து போனார். உடனே ரோந்துக்கப்பலிலிருந்து இரும்புக்கூண்டு ஒன்று கடலில் இறக்கப்பட்டது. அதனுள் இறங்கிய‌ அவர், கப்பலின் கீழேயும் சென்று தேடினார். எந்தப் பெரிய பெட்டியோ அல்லது மூட்டையோ தொங்கிக்கொண்டு இருக்கவில்லை. கப்பலைச் சுற்றிச்சுற்றி முக்கால் மணி நேரத் தேடலுக்குப்பின் பாண்டி வேண்டுமென்றே தன் கவனத்தை திசைதிருப்ப இப்படிச் செய்திருக்கலாமென்று தோன்றியது.


சதாசிவம் மேலே வந்தார். ஒரு வேளை பாண்டி வந்திருப்பது பைலட் வண்டியாக இருக்கலாமென்று பட்டது. வாகனங்களில் கள்ளக்கடத்தல் செய்பவர்கள், சரக்கு எடுத்துச் செல்லும் வண்டிக்கு முன்பாக ஒரு டம்மி வண்டியை அனுப்பி வேவு பார்ப்பது வழக்கம். அந்த மாதிரி வண்டிகளையே பைலட் வண்டி என்பார்கள். மேலே வந்ததும் ராடார் உதவியுடன் பார்த்ததில் 30 நாட்டிகல் மைல் ரேடியஸ்ஸில் வேறெந்த கப்பலும் தென்படவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. பாண்டி இன்னும் கடத்தவில்லை. ஒரு வேளை அவனை மேலே போகவிட்டால், அடுத்த கட்டத்தில் மாட்டலாமென்று பட்டது. பாண்டி விதியே என்று கடலை வெறித்தபடி சதாசிவத்தின் அனுமதிக் கையசைப்பிற்க்கு காத்து நின்றிருந்தான். சதாசிவம் கோஸ்ட் கார்டு கப்பலில் ஏறிக்கொண்டு, கையசைக்க பாண்டி தன் கப்பலை தொடர்ந்து தலைமன்னாரை நோக்கி செலுத்தினான். சதாசிவம் பாண்டியின் கப்பல் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.


ஒரு அரை மணி நேரத்தில் பாண்டியின் கப்பல் கண்களை விட்டகன்றது. ஆனாலும் வேறெந்தக் கப்பலோ, ராடாரில் சமிஞ்கைகளோ தெரியவில்லை. அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது. சதாசிவத்துக்கு ஏமாற்றமாக இருந்தது. பாண்டி கப்பலில் துரும்பு விடாமல் சோதித்தாகிவிட்டது. தங்கக் கட்டிகள் நல்ல தின்மையுடன் கூடிய எடை இருக்கும். அப்படி ஒரு எடையுள்ள சமாச்சாரத்தின் இருப்பைக் கொண்டது போலவே தோன்றவில்லை அந்தச் சின்ன கப்பல். அளவில் சிறியதாய் இருந்ததால், அந்தக் கப்பலில் மறைத்துவைக்க நிறைய இடங்கள் இருக்க வாய்ப்பில்லை.


சதாசிவம் இரவு வெகு நேரம் வரை காத்திருந்தார். வேறெந்தக் கப்பலும் வரவில்லை. ஆனால், எப்படியோ தங்கக் கட்டிகள் கைமாறிவிட்டதாக போலீஸ் இலாக்காவிற்கு தகவல் வந்தது. இலங்கை வழியாக பே ஆஃப் பெங்கால் கடல் வழியே இந்தோனெஷியாவிற்கு கடத்தப்படப் போவதாக வந்த தகவலை அடுத்து, பே ஆஃப் பெங்கால் கடலில் வளைத்துப் பிடித்தது தமிழ் நாடு கோஸ்ட் கார்டு போலீஸ்.


பாண்டி பெரிய கில்லாடிதான். நிரூபித்துவிட்டான். ஆனால் எப்படிக் கடத்தியிருப்பான். அவனுடைய கப்பலை அக்குவேறு ஆணிவேறாக சல்லடை போட்டுத் தேடியாகிவிட்டதே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், அது மிகச் சிறிய கப்பல். அதில் இத்தனை பெரிய சரக்கை கடத்துமளவிற்கு இடமோ, வசதியோ இருக்காதே. இவனுக்கெல்லாம் கடத்தல் மன்னன் என்று தான் பெயர் வைக்கவேண்டும். சதாசிவத்துக்கு அவன் மேல் லேசாக ஒரு மரியாதை வந்தது.


இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே குறுக்குச் சந்து.


'என்ன வேலு பாய், எப்படியிருக்க' இது சதாசிவம்.


'வேலு பாயா, இன்னா சார் இப்டிலாம் கூப்டுற.' இது பாண்டி.


'ஆமா, சொன்ன மாதிரியே கடத்திட்டல. பெரிய ஆளுடா நீ. ம்ம் சரி, எப்டி கடத்தின'


'ஆங்..அதுவா சார்.. அதே கப்பல்ல தான் சார்'.


'அது தெரியுது.. ஆனா, நாந்தான் முழுக்க தேடினேனே. அதுல இல்லயே. அப்புறம் எப்படி கடத்தின?' தெரிந்து கொள்ளாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் தோரனையில் கேட்டார் சதாசிவம்.


'சார், நீ இன்ச் வுடாம தேடுவன்னு தெரியும் சார். அதான் அந்த தங்கத்தலாம் அப்டியே உருக்கி ப்ளேட் மாதிரி பண்ணி, மேல பெயிண்ட் அடிச்சி, கப்பலோட அடீல ஸ்க்ரூ போட்டு முடுக்கிட்டேன் சார். மிதக்கற கப்பல்ல நீ கவின்ச்சிருக்க மாட்ட சார்'. அமைதியாக பாண்டி அதைச் சொல்லச் சொல்ல வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் சதாசிவம்.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3287)

பின் குறிப்பு : என் சிந்தனையில் உருவான இந்தக் கதையின் கருவை, அதாவது தங்கக் கட்டிகளை உருக்கி கடத்தப்பட இருக்கும் வாகனத்தின் ஒரு பாகமாக மாற்றிக் கடத்துவதான கருவை சற்று மாற்றி பின்வருமாறும் எழுதலாம். நான்கு சக்கர வாகனத்தின் பானட், டிக்கி, கதவுகலாகவோ அல்லது ஏதொரு இருசக்கர வாகனத்தின் உதிரி பாகமாகவோ அல்லது தங்கத்தை வைக்க இருக்கும் ஏதொரு கண்டேய்னரகவோ மாற்றி எழுதலாம். அப்படி எழுதப்பட்டால் அது இக்கதையை திருடியது போன்றதே ஆகும். இக்கதையின் கருவை பயன்படுத்த நினைப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.