Sunday, 26 September 2010

பச்சை ரிப்பன் - சிறுகதை

பச்சை ரிப்பன் - சிறுகதை


ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.

இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.

இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.

கடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப்பைய‌னுட‌ன் தொலைப்பேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்றுவிட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம்போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப்போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம்.


ஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்துவிட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக்கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார்.

இப்போது ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கல‌த்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.

புறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.


நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.

மறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக்கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் 'என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்' என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்தால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு.


அந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டுகொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌வைத்து, குடுப்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌துபோல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக்காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.

ஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த்தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.


வீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக்கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தார்.

'ஃப‌ர்ஹான், கோட‌ப்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்'.

அவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்த‌து.


- ‍ ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11009261&format=html)

Monday, 13 September 2010

அந்த இரவு - சிறுகதை


அந்த இரவு - சிறுகதை...
அந்த லண்டன் மாநகரின் அமைதியான தெருவில் அமைந்த ஆடம்பர ஹோட்டலின் நான்காவது தளத்தில் உள்ள 11வது ரூமில் நிர்மலாவும் சாண்டி என்கிற சந்தியாவும் அவசர அவசரமாய்க் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். வடநாட்டுத்தோழி ஒருத்தியின் பார்ட்டி தரை தளத்தில். பார்ட்டிக்கு வருபவர்களில் சிலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள் என்பதால் நிர்மலா, சாண்டி உட்பட வெகு சிலருக்கு ரூம்கள் புக் செய்யப்பட்டிருந்தது. உச்சி முதல் பாதம் வரை இழுத்துப்போர்த்திய சல்வார் அணிய எத்தனித்தவள், சந்தியாவின் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பார்த்தவுடன் பார்ட்டியில் தன் மதிப்பு போய்விடுமோவென எண்ணி தானும் ஒரு ஃப்ராகிற்கு மாறினாள். 10 வயதாய் இருந்தபோது பிங்க் நிறத்தில் ஃப்ராக் போட்ட நியாபகம். அதற்கப்புறம் ஃப்ராக் போட வாய்ப்பு கிட்டவில்லை. நிர்மலா, இருக்கும் இடத்திற்கேற்றவாறு உடை அணிய வேண்டுமென்று தோழிகளுக்கெல்லாம் அட்வைஸ் செய்பவள். கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு வீட்டிலிருந்து சுடிதாரில் வந்து, காலேஜில் ஜீன்ஸ்க்கு உடை மாற்றிக்கொள்ளும் ரகம்.


இந்த ஃப்ராக், நிர்மலாவின் காதலன் ரகு வாங்கிக்கொடுத்தது. இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.


அவனும் பார்ட்டிக்கு வருகிறான் என்பதால் நிர்மலாவிடம் துள்ளல் அதிகம் இருந்தது. ரூமை லாக் செய்துவிட்டு, வெளியில் வந்த பின்பு, உள்ளே மறந்து வைத்துவிட்ட மொபைல் ஃபோன் எடுக்க
மீண்டும் ரூமிற்க்குள் ஓடி, மறுபடி ரூமை லாக் செய்து, ஒரு வழியாக பெண்கள் இருவரும் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். பார்ட்டி ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தது. ரகு ரெண்டாவது பெக்கை தொண்டைக்குள் இறக்கிக்கொண்டிருந்தபோது நிர்மலா அவன் அருகே அமர்ந்து ஹாய் சொன்னாள். பரஸ்பரம் இருவரும் கன்னங்கள் உரசிக்கொள்ள‌ முத்தமிட்டுக்கொண்டனர். இந்தியாவில் இருந்தவரை, கைக்குலுக்கிக்கொள்வதோடு நின்றுவிடும். லண்டனில் இதெல்லாம் சகஜம் என்பதால், நிர்மலாவுக்கும் இது கனநேரத்தில் தொற்றிக்கொண்டது. வேற்று நாட்டில் காலடியெடுத்து வைத்த பிறகு அவள் பழக்கப்படுத்திக்கொண்ட பல செய்கைகளில் இதுவும் ஒன்று.


சுமாராக ஒரு 30 பேர் வந்திருந்தார்கள். மெடையில் மெல்லியதாய், என்ரிக்கின் இசைஆல்பமும், பேயொன்ஸ் இசையும் சேர்ந்து சிந்தையை மயக்கிக்கொண்டிருந்தது. சந்தியாவும் தன் பங்குக்கு ஒரு பெரிய கோப்பையில் மது ஊற்றி, நிர்மலாவிற்க்கும் ஒன்று எடுத்திவந்தாள். நிர்மலாவிற்கு இதெல்லாம் பழக்கமில்லை என்பதால் முதலில் பெரிதாகத் தயங்கினாள். கூட வந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கத்தொடங்க, அதற்க்குமேல் மறுத்தால் நன்றாக இருகாதென்று வாங்கிக்கொண்டாள்.


சிறிது நேரத்தில் அடிவயிறு முட்டத்தொடங்க, ரகு ரெஸ்ட்ரூம் எங்கே எனக்கேட்டு லேசாக தள்ளாடியபடி சென்றுவிட்டான். திரைப்படங்களிலும், அலுவலக பார்ட்டிக்களில் அடுத்தவர் கைகளில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மதுக்கோப்பை. அதிலும் இரண்டு வருடம் அவள் வேலை செய்த ப்ராஜெக்டில் ரீவ் என்கிற அமேரிக்க பெண்மணி ஸ்டைலாகக் குடிப்பாள். அலுவலகமே அவள் அழகில், நவீனத்தில், ப்ராஜெக்ட் நுணுக்கத்தையும், கோப்பையையும் ஒரே வேகத்தில் கையாளும் அழகில் மயங்கிப்போகும். அப்போதெல்லாம் நினைத்திருக்கிறாள், இந்த மதுவை கையில் கொண்டிருந்தவர்கள் அனைவரும் மேல்தட்டு வகுப்பைச்சேர்ந்த, தன்னிறைவு பெற்ற, தனித்தன்மை வாய்ந்த, சுதந்திரத்தின் எல்லைகள் கடந்தவர்கள் போலும் என்று. இன்று அப்படி ஒரு இடத்தில் தானும் நிற்பது பெருமையாகப்பட்டது அவளுக்கு.


கல்லூரி படிப்புவரை தன் ஒவ்வொரு செயலுக்கும் அப்பா அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிகொண்டிருந்துவிட்டு, கேம்பஸில் பன்னாட்டு நிறுவனத்தில், 54 வயது அப்பாவைவிட 3 மடங்கு சம்பளம் வாங்கும் வேலையில் அமர்ந்தபிறகு அது நாள்வரையில் கேள்வி கேட்ட பெற்றோர் அதன்பிறகு தன் மகள் செய்வதெல்லாம் சரி என்கிற அங்கீகாரத்தை வெளிப்படையாய் காட்டத்துவங்க, அந்த சுதந்திரம் அவளுக்கு தன்னை பாரதியின் புரட்சிப்பெண்ணாய் தன்னையே பார்க்க வைத்ததில் அதிசயம் ஒன்றுமில்லைதான்.


சந்தியா இரண்டாவது கோப்பையை எடுத்திருந்தாள். நிர்மலாவுக்கு ஏனோ இந்நேரத்தில் ரீவின் நினைப்பு அதிகம் வந்தது. உலகின் ஃபார்ச்சுன் 500 நிறுவனத்தின் ப்ராஜெக்ட் லீட், ரீவ்வைப்போல் ஒரு பெண்ணாய் தானும் மாறிவிட்டதாய் அந்த‌ நொடி தோன்றிய‌து. மெல்ல‌ மெல்ல‌ ம‌துவை சுவைக்க‌த்தொட‌ங்கினாள். முத‌லில் சுவை ச‌ற்றே வித்தியாச‌மாய்த் தோன்றினாலும் நேர‌ம் போக‌ போக‌, அப்ப‌டித்தோன்ற‌வில்லை. ஒரு அரைம‌ணியில் முழுக்கோப்பை காலி. ச‌ந்தியா மூன்றாவ‌துக்கு தாவியிருந்தாள்.


நேர‌ம் செல்ல‌ செல்ல‌, உள்ளே சென்ற‌ ம‌து த‌ன் வேலையை காட்ட‌த்துவ‌ங்கியிருந்த‌து. நிர்ம‌லாவிற்கு த‌லை சுற்றிய‌து. த‌ட்டாமாலை சுற்றுவ‌து போலிருந்த‌து. ச‌ற்றைக்கெல்லாம் க‌ண்க‌ளைத் திற‌ப்ப‌தே க‌டினமாக‌ இருந்த‌து. அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் முன் குடித்து ம‌ய‌ங்கி விழுந்த‌தாய் பெய‌ர் வ‌ந்துவிடுமோவென‌ ப‌ய‌ம் வ‌ந்த‌து. ச‌ந்தியாவின் காதில் த‌ன்னை ரூம் வ‌ரை கைதாங்க‌லாய் அழைத்துச் செல்லும்ப‌டி கிசுகிசுத்தாள். அப்போதுதான் ஒரு ஆட‌வ‌னுட‌ன் சுவார‌ஸ்ய‌மாய் பேச‌ தொட‌ங்கியிருந்த‌ ச‌ந்தியா முத‌லில் ம‌றுத்தாலும் பிற‌கு ம‌றுநாள் அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்திக்க‌வேண்டுமே என்கிற‌ நிர்ப‌ந்த‌த்தில் அவ‌னுக்கு எக்ஸ்க்யூஸ் சொல்லிவிட்டு நிர்ம‌லாவை கைத்தாங்க‌லாய் அழைத்துச்சென்றாள். ச‌ந்தியாவுக்கும் த‌ள்ளாட்ட‌மாக‌வே இருந்த‌து. இருந்தாலும் அவ‌ளுக்கு ப‌ழ‌க்க‌ம் தான் என்ப‌தால் வ‌ழ‌க்க‌ம்போல் ச‌மாளித்தாள். நிர்ம‌லாவை லிஃப்ட் ஏற்றி ரூமிற்கு கொண்டுவ‌ந்து ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்து விட்டு மீண்டும் த‌ரைத‌ள‌த்துக்கு போய்விட்டாள்.


நேர‌ம் ந‌ள்ளிர‌வு தாண்டி விடிகாலை மூன்று ம‌ணி ஆகிவிட்டிருந்த‌து. நிர்ம‌லா மெல்ல‌ க‌ண்விழித்தாள். த‌லை வ‌லித்த‌து. உட‌ம்பெல்லாம் வ‌லியாய் இருப்ப‌தாய் உண‌ர்ந்தாள். இந்த ரூம் தன் ரூம் போல் முற்றிலும் இல்லை என்பதாய் தோன்றியது. தன் பெட்டி, படுக்கை, துணிகள், லாப்டாப் என எதுவும் இல்லை. த‌லைசுற்ற‌ல் ச‌ற்று த‌னிந்திருந்த‌து. மெல்ல‌ எழுந்தாள். ப‌டுக்கையில் அவ‌ள் க‌ண்ட‌ காட்சி அவ‌ளுக்கு தூக்கிவாரிப்போட்ட‌து. அவ‌ள் அணிந்திருந்த‌ ஃப்ராக் த‌னியே கிட‌ந்த‌து. அவ‌ள் உட‌ல் பிற‌ந்த‌மேனியாய், உள்ளாடைக‌ள் ஆங்காங்கே சித‌றி, அவ‌ள் இடுப்புக்கு கீழே ப‌டுக்கையில் ர‌த்த‌மாய், உட‌ல் வ‌லி பின்னியெடுத்து, ந‌ட‌ந்த‌து என்ன‌வென்று அவ‌ளுக்கு உண‌ர்த்திய‌து. இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ க‌ற்பை அங்கே அவ‌ள் எவ‌னுக்கோ இழ‌ந்துவிட்டிருந்தாள்.


அழுகையும் ஆத்திர‌மும் வ‌ந்த‌து. உட‌ல் வ‌லியோடு, துணிக‌ளை அணிந்தாள். வெளியில் வ‌ந்து ரூம் க‌த‌வு பார்த்தாள். ரூம் ந‌ம்ப‌ர் 17. த‌ன்னுடைய‌து 11 ஆயிற்றே. அவ‌ளுக்கு புரிந்துவிட்ட‌து. குடிபோதையில் ச‌ந்தியா ரூம் ந‌ம்ப‌ர் சரியாய் பார்க்காம‌ல் த‌ன்னை இந்த‌ ரூமில் விட்டிருக்க‌ வேண்டும். குடிபோதையில் தான் ம‌ய‌ங்கி இருந்த‌ ச‌ம‌ய‌த்தில், எவ‌னோ த‌ன்னை நாச‌ம் செய்திருக்கிறான். அவ‌ளுக்கு வாய்விட்டு க‌த‌றி அழ‌வேண்டும் போலிருந்த‌து. த‌ட்டு த‌டுமாறி த‌ன் ரூமிற்க்கு வ‌ந்தாள். க‌த‌வு சாத்தி தாழிட்டு, ஆடைக‌ள் க‌ளைந்து, பாத்ரூம் சென்று ஷ‌வ‌ரில் நின்றாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். நெடுநேர‌ம் அழுதாள். உட‌ம்பெல்லாம் புழு ஊர்வ‌து போல் அருவ‌ருப்பாய் இருந்த‌து. தன் முழு உருவ‌மும் சாக்க‌டையாய் உண‌ர்ந்தாள். எத்த‌னை குளித்தாலும் இந்த‌ சாக்க‌டை உண‌ர்வு போகாது போலிருந்த‌து. உட‌ல் துடைத்து, உடை மாற்றி ப‌டுக்கையில் வ‌ந்து அம‌ர்ந்தாள்.


இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ மான‌த்தை, ஆசைக்காத‌ல‌ன் ர‌குவிற்காக‌ பாதுகாத்து வைத்த‌ அன்புப்ப‌ரிசை யாரென்று கூட‌த் தெரியாம‌ல் எவ‌னிட‌மோ இழ‌ந்த‌தை நினைத்து ம‌ன‌ம் வெதும்பினாள். இனி ர‌குவிற்க்கு கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து த‌ன்னிட‌ம். ஆசை ஆசையாய் காதலிப்பவன் ரகு என்றாலும் இந்தியாவில் இருந்த‌வ‌ரை அவனை தொடக்கூட விட்டதில்லை. கல்யாணம் முடிந்து முதலிரவன்று தன்னையே அவனுக்கு விருந்தாய் தர அவனிடமிருந்தே தன்னை எத்தனை முறை பாதுகாத்திருக்கிறாள். அவன் பிறந்த நாளுக்குகூட ரகு எத்தனை கெஞ்சியும் ஒரு முத்தம் கூட தந்ததில்லை. அப்படியெல்லாம் பாதுகாத்து வைத்த கற்பை இன்று எவனோ அனுபவித்துவிட்டு போய்விட்டான். அவன் யாரென்று கூட தெரியவில்லை.


ர‌குவிற்கு இனி தான் எவ்வ‌கையிலும் பொறுத்த‌மில்லை. இனி என்ன‌ செய்தாலும் த‌ன் ம‌ன‌ம் அதை ஏற்காது. எதை இழ‌க்கக்கூடாதோ அதையே இழ‌ந்துவிட்ட‌பின் இனி வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன். செத்துவிடலாம் போலிருந்தது. விர‌க்தி, த‌னிமை, இழ‌க்க‌க்கூடாத‌தை இழ‌ந்துவிட்ட‌ வேத‌னை, அத‌னால் வ‌ந்த‌ அருவ‌ருப்பு அவ‌ளை முழுமையாய் ஆட்கொண்ட‌து. ப‌டுக்கையை ஒட்டிய‌ ட்ராய‌ரை திற‌ந்தாள். அதில் ச‌ந்தியா ப‌ய‌ன்ப‌டுத்தும் தூக்க‌ மாத்திரைக‌ள் இருப‌தை எடுத்து மேஜையில் வைத்தாள். வாஷ்பேசினை திற‌ந்து ஒரு க்ளாஸில் த‌ண்ணீர் பிடித்தாள். ஒரு முடிவுக்கு வ‌ந்த‌வ‌ளாய், மாத்திரைக‌ளை விழுங்க‌ கைக‌ளில் எடுக்கையில் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய், மாத்திரைக‌ளை த‌லைய‌ணைக்கு அடியில் வைத்து விட்டு, முக‌ம் துடைத்துவிட்டு, க‌த‌வு திற‌ந்தாள். ர‌கு நின்றிருந்தான். அவ‌ன் மார்பில் புதைந்து ஓவென்று அழ‌வேண்டும் போலிருந்த‌து. வெறுமையாய் ஹாய் சொல்லிவிட்டு திரும்பி ந‌ட‌ந்து ப‌டுக்கையில் அம‌ர்ந்தாள்.
தொட‌ர்ந்த‌ ர‌கு அருகிலிருந்த‌ சோபாவில் அம‌ர்ந்தான்.


'ஹெய் நிர்ம‌லா, ஏன் என்ன‌மோ போல‌ இருக்க‌?'.


'ஒண்ணுமில்ல'.


'ம்ம்ம்...'.


ச‌ற்று த‌ய‌க்க‌த்துக்குப்பின் ர‌கு தொட‌ர்ந்தான்.


' நிர்ம‌லா, உன்கிட்ட‌ நான் எதையும் ம‌றைக்க‌ விரும்ப‌ல‌. நேத்து ஒரு விஷ‌ய‌ம் ந‌ட‌ந்த‌து. நானும் ஒரு பொண்ணும் த‌ப்பு ப‌ண்ணிட்டோம். நான் தெரிஞ்சு ப‌ண்ண‌ல‌. த‌ண்ணிய‌டிச்சிருந்த‌துனால‌ தெரிய‌ல‌. அவ‌ யாருன்னு கூட‌ தெரியாது. நேத்து நைட் த‌ண்ணி அடிச்ச‌தும் த‌ம்ம‌டிக்க‌ ம‌ர்வானா சிக‌ரெட் ரூம்ல‌ இருக்குனு ப்ர‌ண்டு சொன்னான்னு நான் அவ‌ன் ரூம் போனேன். அங்க‌தான் அது ந‌ட‌ந்துடிச்சு. போதைல‌ அந்த பொண்ணு யாருன்னு கூட‌ தெரிய‌ல‌......‌'.


'எந்த‌ ரூம்?'. நிர்ம‌லா அவ‌ச‌ர‌மாய் இடைம‌றித்தாள்.


'ரூம் ந‌ம்ப‌ர் 17'.


நிர்ம‌லாவிற்கு போன‌ உயிர் திரும்பி வ‌ந்த‌து போலிருந்த‌து. அடிவ‌யிறு ஒருமுறை சுருண்டு திரும்பிய‌து. எழுந்து போய் அவ‌னை க‌ட்டிக்கொண்டாள். ர‌கு, ர‌கு, ர‌கு. ம‌ன‌சு நொடியில் ஆயிர‌ம் முறை அவ‌ன் பெய‌ர் சொல்லிய‌து. த‌ன் ஆசைக்காத‌ல‌னிட‌ம் தான் த‌ன்னை இழ‌ந்திருக்கிறோம் என்ற‌ நினைப்பே தேனாய் இனித்த‌து. புழு ஊரும் அருவ‌ருப்பு ம‌றைந்து, அந்த‌ வ‌லியை ம‌ன‌சு அனுப‌விக்க‌ ஆய‌த்த‌மாவ‌தை உண‌ர்ந்தாள். ந‌ல்ல‌ வேளை, ர‌குதான் அது.


ர‌கு திண‌றினான். எப்ப‌வும் தொட‌க்கூட‌ விடாத‌வ‌ள் இன்று க‌ட்டிப்பிடிக்கிறாளே என‌ குழ‌ம்பினான். அதுவும் த‌ன்னை அறைவாள் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, இது முற்றிலும் புதிய‌தாக‌ இருந்த‌து. ர‌கு குழ‌ம்புவ‌தை உண‌ர்ந்த‌வ‌ள், ச‌ற்றே சுதாரித்து, விடிகாலை மூன்று மணியை காரணம் காட்டி தான் அவ‌னிட‌ம் பிற‌கு பேசுவ‌தாக‌ சொல்லி, அனுப்பினாள்.


எல்லாம் இந்த‌ பாழாய்ப்போன‌ குடியால் வ‌ந்த‌ குழ‌ப்ப‌ம். ந‌ம‌க்கு இதெல்லாம் தேவையா. அணிலைப்பார்த்து முய‌ல் சூடு போட்டுக்கொண்ட‌தைப்போல‌, மேற்க‌த்திய‌ர் க‌லாசார‌த்தை பார்த்து நாமும் செய்ய‌ நினைத்தது த‌வ‌று தான். மேற்க‌த்திய‌ரைச் சொல்லி குற்ற‌மில்லை. ஆங்கில‌ம் அவ‌ர்க‌ள‌து தாய்மொழி. அவ‌ர்க‌ளின் தாய்மொழியைதான் அவ‌ர்க‌ள் பேசுகிறார்க‌ள். ந‌ம் தாய்மொழி த‌மிழ். ஆனால் நாம் ஆங்கில‌ம் தான் அதிக‌ம் பேச‌ நினைக்கிறோம். ஆங்கில‌ம் பேசினால் உய‌ர்வாய் நினைக்கிறோம். ஹாரிபாட்ட‌ர் எழுதிய‌ ஜெகெ ரொள‌ளிங்கின் பேர‌ன்க‌ள் கூட‌ மெர்சிடிஸ் காரில் செல்கிறார்க‌ள். அந்த‌ள‌விற்க்கு அவ‌ரின் நாவ‌ல் விற்க‌ப்ப‌டுகிற‌து த‌மிழ‌க‌த்தில். ம‌து கூட‌ அவ‌ர்க‌ளின் க‌லாசார‌மே. அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள். நாம் ந‌ம் க‌லாசார‌த்தை விட்டு விட்டு அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை பின்ப‌ற்ற‌ முய‌ல்கிறோம். இது முற்றிலும் த‌வ‌றுதான்.


நிர்ம‌லா ஒரு முடிவிற்கு வ‌ந்தாள். சமீபமாய் வாங்கிய முட்டிக்கு மேல் தெரிவதான மேற்கத்திய நாகரீக உடைகளை குப்பையில் வீசினாள். பாந்த‌மாய் ச‌ல்வார் அணிந்துகொண்டாள். க‌ந்த ச‌ஷ்டி க‌வ‌ச‌த்தை லாப்டாப்பில் த‌ட்டி பாட‌ வைத்தாள். ம‌ன‌சு லேசான‌து. நிம்ம‌தி ப‌ர‌விய‌து. அந்த‌‌ நிம்ம‌தியை முழுக்க‌ உண‌ர்ந்தாள். விடிந்த‌தும் ர‌குவிட‌ம் விஷ‌ய‌த்தை சொல்ல‌வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3392)

கோகெய்ன் - சிறுகதை


கோகெய்ன் - சிறுகதை'இது துரோகம் இல்லையா, செல்வா?'


'எது துரோகம் ராஜி? அந்த வழுக்கை மண்டையன் எனக்கு பண்ணினது தான் துரோகம். என் அப்பா கொத்து வேலைக்கு சவுதி வந்தப்போ இந்தாளுகிட்ட வாங்கின 500 தினார் கடனுக்கு இந்தாளு ஆறே மாசத்துல 5000 தினார் கடன்னு கடனுக்கு வட்டி போட்டு, அதுக்கு ஈடா என்ன பெரியாளாக்குறேன்னு சொல்லி சின்ன வயசுலயே இங்க கொண்டாந்துட்டான். அன்னைலேர்ந்து இந்தாளோட கஞ்சா, அபின் , கோகெய்ன்னு எல்லா கடத்தல்லயும் என்ன வேல வாங்குறான் சம்பளமே இல்லாம‌. லீவ் கிடையாது. சாப்பாடு கூட ரெண்டு வேல தான். இருபத்தியஞ்சு வருஷம் போச்சு. எனக்குனு எதுவுமே இல்ல. ஊர்ல அப்பா செத்ததுக்கு கூட இவன் என்ன விடல. என்னோட இந்த எல்லா இழப்புக்கும் ஒரே செட்டில்மென்ட். அவனோட இந்த சரக்க நான் ஆட்டைய போட்டு இந்தியா போகப் போறேன். அதுல கிடைக்கிற பணத்துல அப்டியே எங்கனா செட்டில் ஆகப் போறேன்'.


'இவன் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டான்னா?'.


'இது கடத்தல் சரக்குடா. போலீஸுக்கு போனா அவனுக்கு தான் டேஞ்சர். அதனால போக மாட்டான்.'


'ம்ம்... சரி ஆனா ஏர்போர்ட்ல இம்மிக்ரேஷன் அது இதுன்னு செக் பண்ணுவானே. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அபின் கடத்தினப்போ, நியூஸ் லீக் ஆயி மஜீத் மாட்டினானே. அப்படி ஏதாச்சும் ஆயிட்டா?'.


'சரக்க எடுத்துக்கிட்டு துபாய் ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு. இந்நேரம் நான் சரக்கோட எஸ் அயிட்டத கண்டுபுடிச்சிருப்பான். இனிமே திரும்பி போக முடியாதுடா'.


'ம்ம்.. சரி அப்டி என்ன சரக்குதான் வச்சிருக்க இப்ப?'.


செல்வா ஒரு துண்டு சீட்டை எடுத்து நீட்டினான். ஒரு ஏ4 சைஸ் பேப்பரில் கைவாகாய் சின்னதாய் கிழித்தது போலிருந்த பேப்பரில் 'subject code: 33' என்று எழுதியிருந்தது.


கடத்தப்பட இருக்கும் பொருளின் சங்கேத வார்த்தை. கடத்தலில் இயங்கும் ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென சங்கேத மொழி வைத்திருப்பார்கள். 33 என்பது இவர்களைப் பொருத்தவரை, CC என்பதாக விரியும். cocaine என்பதின் சுருக்கம் அது.


'கோகெய்னா, அய்யயோ, ரிஸ்க் ஜாஸ்தியாச்சேடா'. கிசுகிசுப்பான குரலில் கத்தியே விட்டான் ராஜி.


'ம்ம்..' என்று ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவன், ராஜியின் பயத்தை அனுமானித்தவனாய் 'சரி நான் தனியா போறேன் சரக்கோட. நீ தனியா போய்க்க' என்றபடி வலதுகையிலிருந்த சூட்கேசை இடது கைக்கு மாற்றிவிட்டு, பாண்ட் பாக்கேட்டிலிருந்து பாஸ்போர்ட், விசா மற்றும் இடிக்கட்களை எடுத்துக்கொண்டு செக்கின்னை நோக்கி நடக்க ஆரம்பித்தான் செல்வா. தன் பதிலுக்கு காத்திராமல் செல்வா நடப்பதை உணர்ந்தவன் அதை முகத்தில் காட்டாதவனாய் சற்றே இடைவெளி விட்டு செல்வாவை தொடர்ந்தான் ராஜி.


செல்வாவின் பேக்கேஜை எக்ஸ்ரே கருவி சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வகை கருவிகள் துப்பாக்கி, வெடிபொருட்கள் முதலானவைகளை கண்டுபிடிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்ரே மிஷின் அமைதியாகவே அவனின் பேக்கேஜை விழுங்கி புறம்தள்ளியது. மாஸ்டர் பேக்கேஜ் செக்கின் முடிந்து செல்வாவிடம் போர்டிங் பாஸ் தரப்பட்டதும் தான் ராஜிக்கு மூச்சு வந்தது. நல்லவேளை இதுவரை எதுவும் ஆகவில்லை. இப்படியே சென்னை மீனம்பாக்கம் ஏர்போட்டிலும் க்ளியர் ஆகிவிட்டால் நன்றாக‌ இருக்கலாமென்று தோன்றியது. இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகளுக்கு பின்னர் ராஜியும் செக்கின் செய்துவிட்டு போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டான்.


சற்றே இடைவெளி விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் விமானம் ஏறினர் இருவரும். விமானம் கிளம்பும் வரை திக்திக்கென்றது ராஜிக்கு. செக்கின் செய்யப்பட்ட பேக்கேஜ்களை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் ஃபிக்ஸட் சைட் சிஸ்டம்ஸ் என்கிற ஒரு பெரிய இயந்திரத்தில் வைத்து சோதிப்பார்கள். இது ஒரு விமானத்தில் பயணம் செய்யும் அனைவரது பேக்கேஜ்களையும் ஒரே நேரத்தில் சோதிக்க உதவும் எக்ஸ்‍ரே கருவி. இக்கருவி கொண்டு வெடி பொருட்கள், துப்பாக்கிகள் முதலானவற்றை கண்டுபிடிக்க இயலும். இது தவிர கெமிக்கல்களை கண்டுபிடிக்க கே9 யூனிட் வைத்திருப்பார்கள். கே9 யூனிட் என்பது மோப்ப நாய்களைக் குறிக்கும்.


கோகெய்ன், அபின், கஞ்சா முதலானவைகளை மோப்பம் பிடித்து பழக்கப்பட்ட நாய்களைக் கொண்டு எந்த பேக்கேஜ்ஜிலாவது அப்படிப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்று தேடுவார்கள். இது போன்ற மோப்ப நாய்கள் மிகவும் துள்ளியமாய் கண்டுபிடிக்கும் திறனுள்ளவை.


ஃப்ளைட் கதவுகளை மூடும்வரை ராஜிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. ஃப்ளைட் கதவுகள் மூடப்பட்டு, ரன்வேயில் வண்டி ஓடத்துவங்கிவிட்ட பிறகே அவனுக்கு நிம்மதியாக‌ இருந்தது. பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. மீதிக்கிணறு சென்னை விமான நிலையம். ஆனால், சரக்கை எப்படி கே9 நாய்கள் கண்டுபிடிக்காமல் விட்டன? ஒரு வேளை, சரக்கு கடத்தப்படுவதாக செய்தி போலீசுக்கோ, இன்டர்போலுக்கோ இது நேரம் வரை கசியாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. அப்படித்தான் இருக்க வேண்டும். சவுதி மோப்ப நாய்கள் மிகத் துள்ளியமானவை. அவைகளிடமிருந்து தப்புவது முடியாத ஒன்று.


எப்படியோ, விமானம் சற்று நேரத்தில் அரபிக் கடல் மீது பறக்கத்தொடங்கியிருந்தது. மீதிக்கிணறும் இதே போல் தாண்டிவிட்டால் சந்தோஷம் தான் என்று நினைத்துக்கொண்டான் ராஜி.


ஆறுமணி நேரம் பல யுகங்கள் போலக் கடந்துகொண்டிருந்தது. ராஜி அவ்வப்போது எக்கிஎக்கி மூன்று வரிசை முன்னால் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் செல்வாவை நோட்டம் விட்டான். செல்வா ஏதோ உல்லாசப்பயணம் செய்யும் பிரயாணி போல் சற்றும் பதட்டப்படாமல், எதிர் சீட்டின் பின் பக்கத்தில் அமைந்த சின்ன டிவியில் டினோசார்களைப் பற்றிய டாகுமென்டரி பார்த்துக்கொண்டிருந்தான்.


அடப்பாவி, இத்தனை களேபரத்திலும் எப்படி இவனால் சாதாரணமாக இருக்க முடிகிறது. இத்தனைக்கும் ராஜியோ, செல்வாவோ இதற்கு முன் இப்படி கடத்தியதில்லை. கடத்தல்களில் இவர்களுக்கு வேலை இல்லை. இவர்களின் வேலை கடத்தப்பட போகும் சரக்கை தரம் பிரிப்பது, எங்கிருந்து வந்தது, எங்கு போகிறதென்று தகவல் சேகரிப்பது , பாஸின் சொந்த அலுவல்களைப் பார்ப்பது, ஊருக்கு ஊர் இருக்கும் பாஸின் வப்பாட்டிகளுக்கு மாதம் தவறாமல் பணம் அனுப்புவது போன்ற வேலைகள் தான். கடத்தலை மஜீத் போன்றவர்கள் தான் செய்வார்கள்.


செல்வா சொன்னதுபோல் ஒடிவிட்டது தான் 25 வருஷங்கள். ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அந்த வழுக்கை மண்டையன் ஒரு ஷேக்கின் பார்ட்னர். சவுதியில் மண்ணின் மைந்தர்களை அன்றி வேறு எவரும் பெரியதாக எதுவும் செய்துவிட முடியாது. யாரேனும் புதியதாக வியாபரம் தொடங்க வேண்டுமானால் எதாவதொரு ஷேக்குடன் இணைந்துதான் தொடங்க முடியும். தனியாக தொடங்க முடியாது. ஷேக் கள்ள பிஸினஸ் செய்ய இந்த வழுக்கை மண்டையனைத் தான் பயன்படுத்துகிறான். ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் இவனைக் கழட்டிவிட்டுவிடலாமென்று ஷேக் கணக்கிட்டிருக்கலாம். இந்த வழுக்கை தான் ஷேக்கின் வலதுகை. இவன் தான் தங்களை இங்கே கொண்டுவந்ததும். இங்கு வந்ததில் குடும்பம் குழந்தையென்று எதுவும் இல்லை. வாழ்க்கையில் தோற்றுவிட்டோமோ என்று விரக்தியாக சில நேரங்களில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எங்கே தப்பாகிப்போனது என்று புரியவில்லை. ராஜி வெகுவாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆறுமணி நேரம் கடந்தது தெரியவில்லை.


விமானம் சென்னையில் தரையிற‌ங்கியது.மீண்டும் ஒரு பதட்டம் அவனை பீடித்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று மனம் அடித்துக்கொண்டது. மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. போலீஸ் தலைகள் வழக்கத்தைவிட அதிகமாக தென்பட்டன. அதிக அள‌வில் மோப்ப நாய்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன. ராஜிக்கு புரிந்துவிட்டது. ராஜியையும், செல்வாவையும் சரக்கோடு காணவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வழுக்கை மண்டையன், விமானம் பறந்து கொண்டிருந்த இந்த ஆறு மணி நேரத்தில் வேண்டுமென்றே கடத்தல் பற்றிய செய்தியை போலீஸுக்கு கசிய விட்டிருக்கிறான். படுபாவி பழிவாங்கிவிட்டானே. சற்று முந்தான் செய்தி கிடைத்திருக்கவேண்டும். ஏனெனில், விமான‌த்திலிருந்து பேக்கேஜ்களை இறக்குகையிலேயே சோதித்திருந்தால் இப்போது இங்கே பயணிகள் தங்கள் பேக்கேஜ்களை எடுத்துக்கொண்ட பின்னர் சோதிக்கவேண்டிய அவசியமில்லை.


போலீஸார் எல்லோரையும் வரிசையில் வரச்செய்து மோப்ப நாய்களைக்கொண்டு சோதித்தனர். பேக்கேஜ்களை வலது புறத்தில் நின்றபடி இரண்டு நாய்களும், இடது புறத்தில் பயணிகளை மேலோட்டமாய் ஒரு போலீஸ்காரரும், இன்னொரு நாயும் சோதித்தனர். செல்வாவின் முறை வந்தது. போலீஸ்காரர் சோதித்தார். நாய்கள் அவனுடைய பேக்கேஜ்ஜை சோதித்தன. ஆனால் பெரிதாக ஏதும் நிகழவில்லை. செல்வா பேக்கேஜை கையிலெடுத்துக்கொண்டு, பல்ஸ் இன்டெக்ஷன் எக்ஸ்ரே கருவியில் ஊடுறுவி வெளியேறி விமான நிலையத்தின் வெளிப்புறத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான். ராஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் முழுமையாக எந்தச் சிக்கலுமில்லாமல் சவுதியிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. அதுவும் செல்வா மாதிரி ஒரு கத்துக்குட்டியால். கண்முன்னே சாத்தியாமாகியிருக்கிறது.


ராஜிக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. அத்தனை மோப்ப நாய்களும் ஏமாறிவிட்டனவா? இல்லை செல்வாவுக்கும் இந்த போலீஸுக்கும் எதாச்சும் கையூட்டு இருக்குமா? யோசித்தபடியே ராஜி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டில் செல்வாவைத் தேட, ஒரு ஆம்னி டாக்ஸி வண்டியில் வந்த செல்வா கையசைத்து ராஜியை வண்டியில் ஏறிக்கொள்ளச்சொன்னான்.


ராஜி வண்டியில் ஏறிக்கொள்ள‌ வண்டி வெகுவிரைவாக வேகமெடுத்து விழுப்புரம் நோக்கி விரைந்தது. ராஜிக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படி இது நடந்தது என்கிற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அவன் ரொம்பவும் அலைபாய்ந்திருந்தான். செல்வாவும் ராஜியும் பொத்தாம் பொதுவான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள் விழுப்புரம் வரை. விழுப்புரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன் அவர்கள் இறங்கிக்கொள்ள, வண்டி திரும்பி வந்த வழியே போனது.


'டேய், எப்டிடா சரக்கு எஸ்கேப் ஆச்சு?' ஆர்வம் கொப்புளிக்க ராஜி கேட்க, லேசாக சிரித்தபடியே செல்வா, கொண்டுவந்திருந்த பேக்கேஜை திறந்து ஒரு சாம்பல் நிற தடிமனான உருளை வடிவ பொருள் ஒன்றை எடுத்தான். கிராமத்தில் சிறுவனாக இருந்த காலத்தில் திருவிழாக்கூத்துகளில் பார்த்த கண்ணகி காற்சிலம்பு போலிருந்தது. செல்வா, இரண்டு கைகளாலும் அதைப் பிடித்து, அழுத்தம் கொடுத்து உடைக்க, தெரித்து பேக்கேஜின் மேற்பரப்பிலிருந்த துண்டின் மேல் ஒன்றிரண்டு படர்ந்து விழுந்தது. மினுமினுப்பாய் வைரங்கள்.


ராஜி அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க, 'சரக்கு இந்த வைரம்தான். ஆனா, இந்த வைரத்தோட கோட்வோர்ட் தான் 33, கோகெய்ன்னு வச்சேன். நம்மல பழி வாங்குற கோபத்துல அந்த வழுக்க மண்டையன் கோகெய்ன் தான் கடத்தபடுதுன்னு போலீஸ்ல நம்பத்தகுந்த இடத்துல பத்தவச்சிருப்பான். நமக்கு அதுவே சாதகமா போயிடிச்சு' என்று செல்லிக்கொண்டிருந்த செல்வாவை ஒரு விஷமப்புன்னகையுடன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜி.- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11009122&format=html)

பின் குறிப்பு : இக்கதையின் கருவை பயன்படுத்த நினைப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.