என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறுநாவல் - அத்தியாயம் - 5

 

அத்தியாயம் - 5

 

 

 

ராய் தொலைக்காட்சியில் தேனீர் இடைவேளைக்குப் பின்னர் தொகுப்பாளினி அடுத்த கேள்வியைக் தொடுத்தாள்.

 

"ஒரு கணித மாதிரியோட பலங்களா எதைப் பார்க்கறீங்க?"

 

"ஒரு உதாரணம் சொல்லி சொன்னா புரிஞ்சிக்க எளிமையா இருக்கும்ன்னு தோணுது. ஒரு .டி நிறுவனத்துல வேலை பார்க்கிற ஆண், பெண் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. ஆனா, அந்த பொண்ணு ஒரு ஏழை செருப்பு தைக்கிறவருக்கு பிறந்து கடின உழைப்பால பொறியியல் படிச்சு முன்னணி மென்பொருள் நிறுவனத்துல வேலைக்குன்னு வந்திருக்கிறதாகவும்,  அந்தப் பையன் ஒரு பணக்கார குடும்பத்துல பிறந்து, பொறியியல் கல்லூரியையே நடத்திக்கிட்டு இருக்கிற குடும்பத்துக்கு நெருக்கமானவங்களா இருந்ததுனாலேயே பொறியியல் வல்லுனராகியிருக்கிறதாவும் ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொள்வோம்."

 

"மேலோட்டமா மேற்குலகம் இவங்க இரண்டு பேரையும் சமமானவங்கன்னு பாவிக்கலாம். ஆனா, இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற சமூக வித்தியாசத்தை மேற்குலகம் பதிவு செய்யாது. ஏன்னா, மேற்கு உலகத்தோட மதிப்பீடுகளின் படி பொருந்தாது. மேற்குலகம் தெற்காசிய சமூக படி நிலையை அங்கீகரிக்கிறது இல்லை. நாம பயன்படுத்துகிற ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற மென்பொருள்களுக்கு அடிப்படை மேற்குலக சமூகங்கங்கள் தான் அப்படீங்குறத நாம மறந்துடக்கூடாது. மேற்கு உலகம் எல்லோரையும் சமமா பார்க்குது. இதுல இருக்கிற பிரச்சனை என்னன்னா, இந்தப் பார்வை சம்மந்தப்பட்ட ஆண், பெண் இரண்டு பேருமே ஒரே சமூக இடத்திலிருந்து வருகிறவர்களா இருக்கணும்ன்னு எதிர்பார்க்குது. இதை மேற்குலகத்தோட அணுகுமுறையில இருக்கிற பலவீனமா பார்க்கிறேன். இந்த விதமான அடிப்படை வித்தியாசங்களை மிக மிகத் துல்லியமா படம் பிடிக்க நம்மோட இது நாள் வரையிலான புரிதல் பலனளிக்காதுன்னு நினைக்கிறேன். இந்தப் பிரச்சனையைப் பார்க்க ஒரு பிரத்தியேகமான, முற்றிலும் வேறான ஒரு பார்வை தேவைப்படுது. இந்த காரணங்கள்னால நமக்கே நமக்குன்னு ஒரு கணித மாதிரி தேவைப்படுது." என்றான் சூர்யா.

 

மீண்டும் அரங்கில் கை தட்டல் பறந்தது.

 

"அதுமட்டும் இல்லாம வேற காரணங்களும் இருக்கு. பொதுவா எந்த சமூகத்தை எடுத்துக்கிட்டாலும் அதில் இருக்கிற எல்லா சமூகப் பிரச்சனைகளையும் தனித்தனி பிரச்சனைகளா பார்க்கிற பார்வை இருக்கும்.  அதுதான் வெகுஜனப் பார்வையா இருக்கும்.  இதுக்கு நேர் எதிரா, ஆங்கிலத்துல பிக் திங்கிங் (Big Thinking) அப்படீன்னு சொல்வாங்க. எந்த சமூகத்திலயும் இந்தப் பண்பு இருக்கிறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்காது. மிக மிகக் குறைவாத்தான் இருக்கும். எல்லா சமூகப்பிரச்சனையையும் தனித்தனி பிரச்சனைகளா பார்க்கிறது வெகு ஜனப்பார்வையா இருக்குறதுக்கு இந்த குறை எண்ணிக்கை ஒரு காரணம். அப்போ, எல்லா சமூக பிரச்சனைகளையும் ஒரு குடையின் கீழ் பார்க்க வெகு ஜனத்துக்கு பழக்கப்படாம போகலாம். ஆனா, இது ஒரு பார்வை. ஒரு சமூகமா, ஆரோக்கியமான வழிகள்ல எல்லோரும் முன்னோக்கி பயணிக்கனும்னா இந்தப் பார்வையை ஒரு சமூகத்தின் எல்லா உறுப்பினர்களிடத்தும் திணிக்க வேண்டிய தேவை இருக்கு. இது கிட்டத்தட்ட அம்மையை தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கிறா மாதிரி தான். இந்த கணித மாதிரி இதைச் சாத்தியப்படுத்த உருவானதுதான்னு சொன்னா அது மிகையாக இருக்காதுன்னு நினைக்கிறேன்"

 

சூர்யா இப்படித்தான் சொல்வான் என்று அறிந்திராவிட்டாலும் இதைத்தான் சொல்வான் என்று நான் ஒருவாறு ஊகித்திருந்தேன். சூர்யாவின் இந்த விளக்கம் என் அவதானங்களை ஒத்திருந்தது.

 

என்னதான் என்னை எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு விதத்தில் உருவாக்கினாலும், அந்த மனிதர்களுக்கிடையில் ஒரு படி நிலை இருந்தது. அந்த படி நிலை, என் நீளத்தை முடிவு செய்வதாய் இருந்தது. எதில் நீளம் அதிகம், எதில் நீளம் குறைவு என்று என்னால் துல்லியமாகச் சொல்லமுடியாமல் போகலாம்.

 

என் உருவாக்கத்துக்கு கோடானு கோடி இயக்கங்களின் ஒருங்கிணைப்புகள் தேவை. அவ்வியக்கங்கள் சார்ந்து அவைகளை வகைப் பிரிக்க இயலும். உதாரணமாக, ஒன்று உற்பத்தி (output) செய்ததை பிரிதொன்றிற்குள் உள்ளீடு (input) செய்ய வேண்டுவது ஒரு விதமான இயக்கம். 

 

ஒன்றிலிருந்து வெளிப்படும் விளைவானது பல இயக்கங்களுக்குள் நுழைந்து வெளிவருவது இன்னொரு விதமான இயக்கம். இப்படி கோடான கோடி இயக்கங்கள்.

 

இந்தப் பிரபஞ்சம், இந்த எல்லா இயக்கங்களுக்கும் பொருத்தமான நாடகங்களுடன் தனக்குள்ளேயே சமன்பட்டுக்கிடக்கிறது என்பது என் அவதானம்.

 

என்னை சூர்யாவின் அட்டவணையின் பால் ஈர்க்கக்கூடிய சக்தி எதுவெனக்கேட்கின் நான் தைரியமாக, அதிலுள்ள இயக்கங்களும், முறைப்படுதல்களும் தாம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன்.