Wednesday, 29 June 2016

பிரியமின்மை கவிதைகள் - 1

பிரியமின்மை கவிதைகள்


உனக்கும் எனக்கும்
ஆயிரம் உறவுகள் நண்பர்கள் இருந்தாலும்
நமக்கிடையில்
நீ 
ஒரு முழு உலகமாக இருக்கையில்
நான் மட்டும் 
தனியனாகவே இருக்கிறேன்...
 - ஸ்ரீராம்எனக்கு சற்றும் பொறுத்தமில்லாத‌
உன் கள்ள மெளனங்களில்
நீ நீயாக இருக்கிறாய்.. 
நான் தான்
யார் யாரோவாக இருக்கிறேன்...
 - ஸ்ரீராம்உன் வார்த்தைகளை
நான் தேர்ந்தெடுக்கவில்லை...
நீயாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில்
நான் மட்டும் 
எங்குமே இல்லை...
 - ஸ்ரீராம்ஒரே ஒரு புன்னகை தான்
தேவைப்படுவதாக நினைக்கிறாய் நீ...
நமக்கிடையே நம்மை 
இருத்திக்கொள்ள...
 - ஸ்ரீராம்

பிரியமின்மை கவிதைகள்

பிரியமின்மை கவிதைகள்

என்னை 
கொஞ்சம் கொஞ்சமாக‌
சிறுகச்சிறுகத்தான்
அழிக்க நினைக்கிறாய் நீ...
நான் தான்
அதை உணர்ந்தது முதல்
மிக வேகமாக 
அழிந்துகொண்டிருக்கிறேன்...
 - ஸ்ரீராம்உனது ஆகச்சிறந்த‌ ஆயுதங்களுடனும்
என்னை எதிர்கொள்ளும் உன்னை
நிராயுதபாணியாகத்தான்
எதிர்கொள்கிறேன் நான்...

பிணங்களை 
எந்த ஆயுதத்தாலும்
வெல்ல முடியாது 
என்பது நீ அறியாததா?...
 - ஸ்ரீராம்


நானற்ற உன் நொடிகளை
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..
எனக்குள் லேசாக தலைக்கனம்
எழுகிறபோதெல்லாம்...
 - ஸ்ரீராம்


உன் மீதான‌
என் பிரியங்களை
எப்படியேனும் மலடாக்கிட‌
முயல்கிறேன்...
அவைகள் பல்கி பெறுகுவதில் தான்
எத்தனை சிரமங்கள் உனக்கு...
 - ஸ்ரீராம்ஒரே ஒரு துளி விஷம் தான்...
என் பால் கோப்பையில் கலந்திட‌
உனக்கு எத்தனை நேரமாகும்?
அதை நான் பருகிவிட‌
எனக்கு  எத்தனை நேரமாகும்?
அந்த சில நொடிகளுக்குத்தான்
என் அன்பை காட்ட
வாய்ப்பளிக்கிறாய் நீ...


 - ஸ்ரீராம்

Sunday, 26 June 2016

குங்குமம் 27.06.2016 இதழில் எனது ஒரு பக்க கதை


27.06.2016 தேதியிட்ட சென்ற வார குங்குமம் இதழில் பக்கம் 51ல் வெளியாகியிருக்கும் 'அப்ளிகேஷன்' எனது ஒரு பக்க கதை. எனது குறுங்கதையை தேர்வு செய்து வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


Sunday, 19 June 2016

குங்குமம் (27-06-2016) இதழில் எனது 'அப்ளிகேஷன்' ஒரு பக்க கதை

27-06-2016 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் 'அப்ளிகேஷன்' என்ற தலைப்பிலான எனது ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையின் பிரதி கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்..

Tuesday, 14 June 2016

Martian

Martian


இன்று மீண்டும் மார்ஷியன் படம் பார்த்தேன். இப்படியாக இந்த படம் பார்ப்பது எத்தனையாவது முறை என்று மறந்துவிட்டது.  கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.

பொதுவாக அறிவியல் புனைவுக்கதைகள் என்றால் எனக்கு இஷ்டம். மார்ஸ் கிட்டத்தட்ட பூமியைப்போலத்தான். சூரியனை சுற்றி வர கிட்டத்தட்ட 600+ நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இது ஏனெனில் பூமியை விட இது தள்ளி இருப்பதால் தான். இருப்பினும் கோல்டிலாக் ஸோனுக்கு அருகாமையில் இருப்பதால் இதில் மனிதர்கள் குடியேற தகுதியான புவியியல் இருக்கலாம் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

மார்ஸ் கிரகம் அதன் சுற்றுவட்டப்பாதையில் ஓரிடத்தில் பூமிக்கு அருகாமையிலும் ஓரிடத்தில் வெகு தொலைவிலும் வந்து போகும். எப்போது பூமிக்கு மிக அருகாமையில் வருகிறதோ அப்போது மார்ஸுக்கு அனுப்பவேண்டிய ராக்கேட்டுகளை அனுப்பினால் தூரம் குறைவாக இருப்பதால் மிக அதிக எரிபொருள் செலவின்றி போய் விடலாம் என்று மார்ஸ் ஆராய்ச்சிக்கென அனுப்பப்படும் ஆளில்லா ரோவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமும் கூட.


பூமியில் மார்ஸ் கிரகத்தின் கற்கள் விழுந்திருக்கின்றன. அதிலிருந்து தான்  முதன் முதலாக ஒரு செல் உயிரினம் பூமியை வந்தடைந்திருக்கும் என்று ஒரு தியரி இருக்கிறது. வசீகரமான தியரி தான்.

மார்ஸில் உங்கள் எடை மூன்றில் ஒரு பங்குதான். மார்ஸில் ஈர்ப்பு விசை குறைவு. காற்று மண்டலமும் அத்தனை தின்மையாக இல்லை. மார்ஸ் குறித்த இந்த படம் அதிகம் ஈர்க்கிறது. ஸ்டார் வார்ஸ் போல் அதீத ஃபாண்டஸி இதில் இல்லை. எல்லாமே மனித உழைப்பில் நிஜமாவதற்கு மிக மிக அருகாமையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.ஒரு வேற்று கிரகம் என்பதே நிறைய எதிர்பார்ப்புகளை திணிக்கிறது. இது இயல்புதான். இந்த இயல்புக்கு ஒரு காலத்தில் மிக அதிக விலை இருந்தது.

பூமியிலிருந்து மார்ஸை பார்த்தால் அது மைக்கேல் ஜாக்சன் போல் மூன் வாக் செய்வதை பார்க்கலாம். துவக்கத்தில் பல ஆராய்ச்சியாளர்களை குழப்பியது மார்ஸின் இந்த மூன் வாக் தான். சில கிரேக்க வானியலாளர்கள் இதை வைத்துத்தான் பூமியை மையமாக வைத்து இன்ன பிற கோள்கள் சுற்றுகின்றன என்று தவறாக கணக்கிட்டார்கள்.
வெகு ஜனம் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தது வெகு காலத்திற்கு. கிரகணங்களின் போது உயிர் பலி எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது மூன் வாக் தான் என்பதை வெகு ஜனத்திற்கு எப்போதுமே பிடிக்காத அதீத புத்திசாலிகள் தான் கண்டுபிடித்தார்கள். அந்த அதிபுத்திசாலிகள் தான் பல உயிர்கள் கிரகணங்களின் போது வெகு ஜனத்திடமிருந்து கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட காரணமானார்கள்.

ஆனாலும் அதிபுத்திசாலிகளை வெகு ஜனம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. இப்போதும் அப்படித்தான். இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் மரணத்தை தழுவியர்கள் ஏராளம். சாக்ரடீஸ், இத்தாலியின் புருனோ என்று சரித்திரத்தை புரட்டினால் ஏகப்பட்ட பெயர்கள் சிக்கலாம். இந்த ப்டத்தை பார்க்கையில் இவர்களை பற்றிய அனுதாபம் எழுகிறது.

வெகு ஜனத்திற்கு உண்மைகள் தேவையில்லை. அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பாத அந்த உண்மையில் தான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இயற்கையின் வினோதம் என்னவெனில், தங்களின் வாழ்வாதார உண்மைகளை தெரிந்துகொள்வதிலிருந்து விலகி நிற்கச்செய்யும் தன்மை தான் இவர்களை இவர்களாக மாற்றுகிறது.

சரி அதை விடுங்கள்.. ஒரு உபரித்தகவல் சொல்கிறேன்.. இந்த படத்தில் வரும் மார்ஸ் கிரகத்தின் காட்சிகள் உண்மையில் மார்ஸ் அல்ல. ஜோர்டான் நாட்டுக்கு சென்றீர்களானால், இந்த குன்றுகளையும், மணல் பரப்புகளையும் கண்முன்னே பார்க்கலாம்.

Monday, 13 June 2016

நாவல்

நாவல்


கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 8 மணி நேரம் தூக்கம். 9 மணி நேரம் அலுவலக வேலை. எஞ்சிய 7 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. உணவு, இயற்கை அழைப்புகள், தேனீர், சமையல் என்று ஒரு மூன்று மணி நேரம் போய்விடும். மீதமுள்ள மூன்று மணி நேரத்தில் அவ்வப்போது பார்த்த படங்களுக்கான விமர்சனம், கவிதைகள், கட்டுரைகள், ஒரு பக்க கதைகள் என்று தின்றது போக கடந்த ஆறு மாதத்தில் கணிசமான நேரத்தை கபளீகரம் செய்து உருவாகியிருக்கிறது ஒரு நாவல்.

இப்போதைக்கு 150 பக்கங்கள் வந்திருக்கிறது. 2015ல் எழுதிய இரண்டு குறு நாவல்கள் அவ்வளவு திருப்தியளிக்காததால், டெக்னிக்கலாக பார்க்கின் இது எனது மூன்றாவது நாவல். இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் எனது மூன்றாவது குழந்தை. பதிப்பாளர் கிடைக்கும் பட்சத்தில் இரண்டாவது புத்தகம். அதையெல்லாம் விடுங்கள். அதெல்லாம் மற்றவர்களுக்கு புத்தகத்தின் கருத்துக்களை விவாதப்பொருளாக கொண்டு சேர்க்கும் முறை.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது இந்த‌ நாவல். கருத்து குப்பைகளை உருவாக்க விருப்பமில்லை. ஏற்கனவே சொன்னதையோ, மற்றவர்கள் சொன்னதையோ மீண்டும் வேறொரு வார்த்தையில் சொல்ல முயற்சிக்கவில்லை.  நாவல் உருவாகியிருக்கும் விதத்தில் மனம் நிறைவாக இருக்கிறது. என் வகையான நாவல். எனக்கு இப்படியான நாவல்கள் எழுதவே விருப்பம். அந்த விருப்பத்தை ஒட்டியே உருவாகியிருக்கிறது இந்த நாவல்.

ராணி முத்து, தேவியின் கண்மணியில் தந்தால் "முந்நூறு பேர் மட்டும் வாசிச்சா எங்க பத்திரிக்கையை இழுத்து மூடுறதைத்தவிர வேற வழி இல்லைப்பா" என்று பதில் நிச்சயமாக வரும்.  எந்த பதிப்பகத்தை அணுகலாம் என்று உள்ளுக்குள் யோசனையாக இருக்கிறது. யாரேனும் கிடைப்பார்கள்.

முதல் புத்தகம் வெளியிட்ட போது அத்தனை விவரம் தெரிந்திருக்கவில்லை. விவரம் தெரிந்து கொள்வதற்காகவே முதல் புத்தகம் வெளியிட்டேன் என்று கூட சொல்லலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இருந்தாலும் புத்தக வெளியீடு, புத்தக கண்காட்சிகள் எல்லாம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள முதல் புத்தக வெளியீடுதான் உதவியது. இப்போது ஓரளவிற்கு ஐடியா இருக்கிறது.

எனக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லை. ஏதோ நான்கைந்து பேரை தெரியும். எனக்குத்தான் அவர்களை தெரியும். அவ்வளவுதான். அமேரிக்கா வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது. அந்த நான்கைந்து பேரும்  இந்நேரம் என்னை மறந்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் எதையும் செய்ய முடியாது என்பதுவும் தெரியும்.

நல்லவேளையாக புத்தகம் வெளியிட்டுத்தான் வயிற்றை கழுவவேண்டும் என்று இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் வயிறு வளர்க்க கைவசம் வேறு வேலை இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை நாவலின் விவாதப்பொருளுக்கென டிமான்ட் இருந்தால் மட்டுமே புத்தகமாக்குவது என்று இருக்கிறேன். டிமான்ட் எதுவும் இல்லையென்றால், ஏற்கனவே மூட்டை கட்டிய இரண்டு குறு நாவலோடு இதுவும் சேர்ந்துகொள்ளும். அவ்வளவுதான்.

ஆனால் நாவல் திருப்தியாக வந்திருக்கிறது. நிச்சயம் டிமாண்ட் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் வீட்டில் நான் மட்டும் தான் இப்படி காகிதத்தின் பின்னால் அலைகிறேன். முதல் மூன்று ராங்கிற்குள் வந்துவிடுவேன் என்பதால் என்னை எட்டாவது படிக்கும்போதே தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம், பொறியியல் படிப்பு பின்பு ஐடி கம்பெனியில் வேலை பிறகு அதிகம் தாகமெடுத்து, இலக்கியம், கவிதை கட்டுரை என்று நாவல் வரை வந்தாகிவிட்டது. பின்னால் திரும்பி பார்த்தால் 'இதெல்லாம் உன்கிட்ட யார் கேட்டது?' என்று உரத்து சத்தம் கேட்கிறது.

நாம் எல்லோரும் பிறந்து வளர்கையில் பெற்றோர் சொல்வதை கேட்டு, பிறகு வாத்தியார் சொல்வதை கேட்டு என்று தான் வளர்கிறோம். இதெல்லாம் சொந்தக்காலில் நிற்கும் வரை தான். சொந்தக்காலில் நின்றுவிட்ட பிறகு அதுவரை நமக்குள் உறங்கும் சுயம் வெளிவந்துவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் நமது சுயம் தான் நம்மை வழி நடத்துகிறது. நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கிறது. அதில் தான் ஒருவனுடைய‌ ஒரிஜினாலிட்டி வெளியே வரும். அதை மாற்ற யாராலும் முடியாது.

ரஜினிகாந்த் நடிக்க வந்தது, ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்தைய இசைக்கு போனது, அம்பேத்கர் சட்டம் படித்து எழுதியது, பவர் ஸ்டார் மொக்கை வாங்குவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுயம். நமது சுயம் எத்திசையில் நம்மை செலுத்துகிறதோ அத்திசையில் தான் நாம் போயாகவேண்டும்.

'இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டா?' இந்த கேள்விக்கு

'எனக்கு இதான் வருது.. நான் என்ன செய்ய?' இதுதான் பதில். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


Thursday, 2 June 2016

பேருண்மை

பேருண்மை


உண்மையை போல் ஒரு ஹம்பக் வேறு ஒன்றும் இருக்க முடியாது. உண்மை என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என்று கூட சொல்லலாம். There is no truth. Everything is perception என்று என்னால் திடமாக சொல்ல முடியும்.

பூமியை சூரியன் இன்ன பிற கோள்கள் சுற்றுவதாக வெகு காலத்துக்கு நம்பிக்கொண்டிருந்தார்கள். இப்போதுவரை உண்மை என்பது பூமியை சூரியன் சுற்றுகிறது என்பதுதான். இதை வைத்து கணித கோட்பாடுகள் எழுதினார்கள்.யூக்ளிட் பெரிய தில்லாலங்கடியாக விளங்கினார். எல்லாம் சில நூறு வருடங்களுக்குத்தான்.

பிரபஞ்சம் எல்லையற்றது என்று சொல்லத்துவங்கி கிருத்துவ சபையின் எல்லையற்ற கோபத்துக்கு ஆளான இத்தாலியின் புருனோவுக்கு அத்தனை அதிர்ஷ்டமில்லை. மற்றவர்களை உசுப்பிவிட்டு ஒரு மிகச்சிறிய அளவிளான பிரபல்யத்தை அனுபவித்ததோடு போய் சேர்ந்துவிட்டார் மனுஷன்.

கோபர்னிகஸுக்கு முன்பே கிரேக்கத்தில் பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டுபிடித்துவிட்டதாக சரித்திரம் சொல்கிறது. 1800 களின் பிற்பகுதியில் பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது. அது பூமி சூரியனை சுற்றுகிறது என்பதுதான். அதன் அடிப்படையில் கணிதம் மாற்றி எழுதப்பட்டது.

இந்த மனுஷன் ஐன்ஸ்டைன் எல்லா ஆராய்ச்சியாளர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டார். முக்கோணத்திற்கு வால்யூம் இருக்கிறது என்று சொல்லி அதற்குள் எத்தனை நீர் நிரப்பலாம் என்று கேட்டு எல்லோரையும் ஏகத்துக்கு குழப்பினார்.

இந்த ஐன்ஸ்டைனை பிறபாடு கம்ப்யூட்டர் கண்டுபிடித்து தான் ஜுஜுபி ஆக்கினார்கள்.. கம்ப்யூட்டர் வந்த பிற்பாடு மீண்டும் 1800 களிலான பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது.

அது எல்லாமும் ஒரு சேர வேறு "எதையோ" சுற்றுகிறது என்பதுதான். பூமி அதை சுற்றி வரும் வேகம் 70000 கிமீ. கிட்டத்தட்ட அதே வேகத்தில் சூரியன், சந்திரன், மெர்க்குரி, ஜூபிடர் என்று எல்லா கழிசடைகளும் அந்த "அதை" சுற்றி வருகின்றன. ஒரு வித்தியாசம்.

சூரியன் ஏறி இறங்குவதாக ஒரு கித்தார் கம்பியை நிமிண்டினால் எப்படி ஒரு அலைவரிசை வருமோ அது போல் சுற்ற, அதை சுற்றி மற்ற கோள்கள் அதே ஏற்ற இறக்கத்தில் ஆனால் வெவ்வேறு திசைகளில் சுற்றுகின்றன. இந்த பயணத்தை பக்கவாட்டிலிருந்து  ஒரு புகைப்படம் எடுத்து, வைத்து பார்த்தால் எல்லாமும் அதனதன் பாதையில் சும்மா அந்த "அதை" சுற்றுவது போலத்தான் இருக்கும்..

ஆக, பூமி சூரியனை சுற்றுகிறது என்பது முழுக்க உண்மை அல்ல.

அது பிம்பம் மட்டுமே. ச்சே.. நானும் உண்மை , வாய்மை என்று உளர ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள். உண்மையெல்லாம் இல்லை.. அது வந்து.....அது வந்து... என்ன எழவோ?,.. வேறு வார்த்தை தெரியவில்லை.. அதனால், .................... இப்போதைக்கு..................... அதை........................................ மை என்றே வைத்துக்கொள்வோம்.

இப்படித்தான் அந்த .....மை வெவ்வேறாக இருக்கிறது.

நாம் உண்மை என்று நினைக்கும் எதுவும் உண்மை அல்ல. நமக்கு உண்மை என்று சொல்லப்படுவதும் உண்மை அல்ல. அப்படியானால் எதைத்தான் நம்புவது என்று கேட்டால், ...........................................................


இதனால் தான் சொல்கிறேன். வெளிச்சம் என்பது ஒரு குறை மட்டுமே. அது என்றுமே முழுமை அல்ல. அதைக்கொண்டு எதையும் முழுமையாக காட்ட இயலாது. இருள் என்பதே முழுமையானது.  அதுவே பேருண்மை.