என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 15 December 2014

டிசம்பர் 2014 கணையாழி இதழில் எனது கவிதை

டிசம்பர் 2014 கணையாழி இதழில் பக்கம் 29ல் எனது கவிதை 'துர்பாக்கியத்தின் பலன் - கவிதை' வெளியாகியிருக்கிறது.

கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.

Tuesday 18 November 2014

மலைகள் 62 வது இதழில் எனது கவிதைகள்


மலைகள் 62 வது இதழில் வெளியான‌ எனது கவிதைகள்



http://malaigal.com/?p=5945



குடும்பம் – கவிதை


ஓங்கி உயர்ந்த ஓர் கட்டிடம்
அதைக் காட்டிக் காட்டியே
வைக்கிறீர்கள் ஒவ்வொரு செங்கல்லையும்
ஒன்றன் மீது ஒன்றாக‌
கட்டமைப்பாம்
நீள்சதுர கல்லுக்குள்
மூச்சுத் திணறுகிறது
அது பற்றி கவலையில்லை உங்களுக்கு
ஓரங்களில் பிசிறு வேண்டாம்
ஒழுங்காம்
சிதைக்கிறீர்கள் என் மேனியை
சத்தம் வரக் கூடாதாம்
வாயில் திணிக்கிறீர்கள் பிசினை
உடைந்துபோனால் தூக்கியெறிவீர்கள்
உடையவும் கூடாது
சேரவும், பிரியவும் வகுத்து வைத்திருக்கிறீர்கள்
அதற்கு
உச்சியிலிருந்து விழுந்து
செத்துப் போகலாம்
வேண்டாம் வேண்டாம்
காலால் மிதித்து இன்னுமொன்று செய்துவிடுவீர்கள்


விசிறியின் முதுகுக் கத்தியும், உப்பு நீரும்


யார் யாரோ பரிசளித்த‌
சிகப்பு நிற தடித்த சொற்கள்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கின்றன
வாசல் கதவைத் திறந்தால்
குவிந்த உதடுகளின் மத்தியில்
மேலண்ணத்துடன் ரகசியமாய் சுகிக்கிறது நா
நீயே தேர்ந்தெடுத்த விசிறியின்
முதுகில் கூரான கத்தி
நீ வீசுகிறாய்
ரத்தம் வெடிக்கிறது
உன் பக்கம்
உப்பு கரிக்கும் நீர்…


பட்டை தீட்டப்படும் மக்கிய சொற்கள் – கவிதை


பட்டை தீட்டுகிறாய்
ரம்பம் கொண்டு
சிகப்பு நிறத்தில் சிதறுகின்றன‌
சூடான உன் மக்கிய சொற்கள்
இதோ அறுக்க இருக்கிறேன்
உனக்கும் எனக்குமான‌
ஒரே ஒரு விளிம்பை
இனி உன் மக்கிய சொற்களின்
நாற்றம்
உனது மட்டுமே…

பறத்தலும் வானமும் – கவிதை


உனது வானத்தை வளைக்க‌
ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?
எல்லா பறவைகளும்
வளைந்த வானில் தான் பறக்கின்றன‌

Sunday 16 November 2014

Interstellar திரைப்படம் - விமர்சனம்

Interstellar திரைப்படம் - விமர்சனம்



பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொரு வஸ்துவினது ஈர்ப்பு விசையிலும் , அதனருகில் வர நேரும் பிரிதொரு வஸ்துவினால், ஈர்ப்பு விசை அலையில் வேறுபாடு உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஒரு நீச்சல் குளத்தில் யாரேனும் கால் வைத்தாலோ, அல்லது சிறியதாக இலையொன்று விழுந்தாலோ, ஒரு அலை உருவாகும் அல்லவா. அது போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

திரைப்படம், ஒரு விவசாயி ஆகிவிட்ட‌ ஒரு விண்வெளி ஓடத்தின் ஓட்டுனர், கூப்பரின் வீட்டிலிருந்து துவங்குகிறது. கூப்பர் தனது மாமனார், மகன், மகள் மர்ஃபியுடன் அந்த வீட்டில் வாழ்கிறான். மர்ஃபி தனது அறையில் பேய்கள் இருப்பதாக நம்புகிறாள். அதனால் பயப்படும் அவள், எப்போதும் தனது தந்தையின் அருகாமையை விரும்புகிறாள்.

ஒரு நாள் மிகப்பெரிய புயல் வீசுகிறது. அப்போது , மர்ஃபியின் அறையில் உள்ள மார்ஸ் கோட் இயந்திரத்தில் ஒரு ஈர்ப்பு அலை பதிவாகிறது. மர்ஃபீ அது பேயோ என்று ஐயம் கொள்கிறாள். அவளது ஐயத்தை நீக்கும் பொருட்டு, அதை கூப்பர் அவதானிக்கிறான். நிலப்பரப்பில் அது எங்கிருக்கிறது என்று தேடச்செல்கிறான். அவனுக்கு தெரியாமல், மர்ஃபி அவனுடைய காரில் ஏறிக்கொள்கிறாள். இருவரும் ஒரு மறைவிடத்தை அடைகிறார்கள்.

அங்கே ரகசியமாக இயங்கும் நாஸா குழுவை சந்திக்கிறார்கள். அவர்களின் தலைவர் ப்ராண்ட். அவர்கள் 'எங்கள் கோஆர்டினேட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?' என்று கேள்வியில் துருவத்துவங்குகிறார்கள்.

பூமி அழியப்போவதாக அவர்கள் நம்புகிறார்கள். அண்ட வெளியில், ஏதேனும் உயிரினங்கள் அழியும் முன் பிழைத்துக்கொள்ளவென, ஏலியன்கள் ஒரு வார்ம் ஹோலை உருவாக்கியுள்ளதாகவும், வார்ம்ஹோலின் அந்தப் பக்கம் மனிதர்கள் குடியேறத் தகுந்தவாறு மூன்று கிரகங்கள் மில்லர், எட்மண்ட் , மேன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளுக்கு சென்று சேரவென என்டூரண்ஸ் என்கிற விண்வெளி ஓடத்தை தயார் செய்திருப்பதாகவும் கூப்பர் சொல்லப்படுகிறான். பிற்பாடு, கூப்பரின் விண்வெளி ஓட ஓட்டுனர் அனுபவம் குறித்து அறிந்து, அவனையே ஓட்டுனராக வேலைக்கு எடுக்கிறார்கள்.


ஆங்கிலத்தில் ஆலிஸ் இன் வொன்டர்லேண்ட் (Alice in Wonderland) என்றொரு புத்தகம். அதை வாசித்தவர்களுக்கு பூனையற்ற புன்னகை என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, ஐன்ஸ்டைன், தன்னுடைய ஸ்பெஷல் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி பற்றி சொல்கையில் இன்னுமொன்றையும் சொல்கிறார். அண்டம் வளைந்து இருக்கிறது என்று.

அதன் படி, அண்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு, மில்லியன் கணக்கான மைல்கள், விண்வெளி களத்தில் பயணித்து அடையவேண்டும். அண்டமோ, குதிரையின் சேனை போல் (Saddle Shapped) வளைந்து இருக்கிறது. இப்போது உள்ளங்கையை குறுக்கி, வாழைப்பழத்தை சைகையில் காண்பிப்பது போல் செய்யுங்கள். பேரண்டம் இப்படி வளைந்து இருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இப்போது அண்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு குறுக்கால் ஒரு குறுக்கவழி வெட்டினால் எப்படி இருக்கும்? மில்லியன் கணக்கான மைல்கள் பறக்க வேண்டியதில்லை. உட்னேயே போய் விடலாம் அல்லவா? அப்படி ஒரு குறுக்கு வழி தான் வார்ம் ஹோல் என்பது.

கூப்பர், பிராண்டின் மகளான பயாலஜிஸ்ட் அமேலிய, ரொமிலி, புவியியல் ஆய்வாளர் டாயில் மற்றும் இரண்டு ரோபாட்களுடன் பயணப்படுகிறான்.

வார்ம் ஹோல் தாண்டுகிறான்.

முதலில் மில்லர் கிரகத்திற்கு செல்கிறார்கள். அங்கே தரையிரங்குகிறார்கள். அந்தக் கிரகம் பெரும்பாலும் நீரால் நிரம்பி இருக்கிறது. மேலும் அது, வார்ம் ஹோலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், வார்ம் ஹோலின்  ஈர்ப்பு விசையால், மிக மிக உயரமான அலைகள் உருவாகும் இயல்பினுடையதாக இருக்கிறது. மேலும் , இந்தக் கிரகத்தில் ஒரு மணி நேரம் என்பது, பூமியில் ஏழு வருடங்களுக்கு சமமாகிறது. இது மனிதர்கள் குடியேற உகந்ததல்ல என்று தீர்மானிக்கிறார்கள். அவர்கள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பெரிய அலை வந்து தாக்குகிறது. அமேலிய மில்லர் கிரகத்தின் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு முன் , அந்த பெரிய அலையால், டாயில் உயிரிழக்கிறான்.

அமேலியாவும், கூப்பரும் விண்கலம் திரும்புகிறார்கள்.

அந்த பெரிய அலை, விண்வெளி ஓடத்தை கிளப்புவதில் கால தாமதம் செய்கிறது. அந்த தாமதத்தில் பூமியில் 23 வருடங்கள் கடந்துவிடுகின்றன.

அங்கே பூமியில் கூப்பரின் மகள் மர்ஃபி, நாஸாவில் ஆராய்ச்சியாளர் ஆகிறாள். அவள் அவ்வப்போது கூப்பரிடம் வீடியோவில் பேசுகிறாள். மகள், மணி நேரங்களில், கண் முன்னே வளர்ந்து பெரியவளாவதை காண்கிறான் கூப்பர். அழுகிறான்.

அப்போது நாஸா ஆய்வு நிலையத்தில் ப்ராஜெக்ட் தலைவர், பிராண்ட் சாகும் தருவாயில் இருக்கிறார். அவர், கூப்பர் வார்ம் ஹோல் தாண்டி அனுப்பப்பட்டிருப்பதன் உண்மையான காரணத்தை சொல்கிறார்.

ஒரு பொருளின் தின்மை உட்பட, ஈர்ப்பு விசையை தீர்மானிக்கும் இலக்கங்கள் எந்த இடத்தில் எல்லையற்றதாக போய்விடுகிறதோ, அந்த இடத்தை சிங்குலாரிட்டி(Singularity) என்கிறார்கள். விண்வெளி ஓடங்களை நிறுத்தி வைக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்களை எவ்வாறு ஈர்ப்பு விசை நகர்த்துகிறது என்கிற ஆராய்ச்சியில், இந்த சிங்குலாரிட்டி தடைக்கல்லாகிறது. அதாவது, வார்ம் ஹோலின் இந்த இடத்தில் இலக்கங்கள் எல்லையற்றதாக ஆகிவிடுவதால், ஈர்ப்பு விசையானது ஸ்பேஸ் ஸ்டேஷன்களை எவ்வாறு நகர்த்துகிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் போய்விடுகிறது. அதற்கு வார்ஹோலின் அந்தப்பக்கமிருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன.

அதற்கு, வார்ம்ஹோலின் அந்த பக்கம் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களான மில்லர், எட்மன்ட்ஸ் , மேன் ஆகியவற்றிலிருந்து தகவல்கள் பெற ஆஸ்ட்ரோனாட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூப்பர் விண்வெளி ஓடத்தை வார்ம்ஹோல் மூலமாக அந்த மூன்று கிரகங்களுக்கு செலுத்தி, மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் எது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே கூப்பரிடம் கொடுக்கப்படும் வேலை.

இதற்குள் விண்வெளி களத்தில் எரிபொருள் குறைந்து விடுகிறது, மீதமுள்ள எரிபொருளால் மீதமுள்ள இரண்டு கிரகங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆதலால் ஏதாவது ஒரு கிரகம் மட்டும் செல்லலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. அமேலியா , பூமிக்கு திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லையெனில், அதில் எரிபொருள் சேமிக்கலாம். அதைகொண்டு எட்மன்ட், மேன் இரு கிரகங்களுக்கும் செல்லலாம் என்கிறாள். பலத்த வாக்குவாதங்களுக்கு பிறகு, மேன் கிரகத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆஸ்ட்ரோனாட் மேன், இன்னமும் அங்கேயே இருப்பதாகவும், அந்த கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான ஒன்று தான் என்றும் மேன் அடித்துச் சொல்வதால் அங்கேயே செல்லலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.

இதற்கிடையில், சாகும் தருவாயில் இருக்கும் பிராண்ட், பூமியைத் தவிர மனிதகுலத்திற்கு வேறு கதியில்லை என்று முடிவு செய்து, ப்ளான் பியை அமல்படுத்தலாம் என்கிறார். ப்ளான் பி என்னவென்றால், குளிரில் பதப்படுத்தப்பட்ட மனித இனத்தின் எம்ப்ரையோ. பூமியில் மனித இனம் அழிந்த பின் இந்த எம்ப்ரையோக்களால், மனித இனம் மீண்டும் உயிர்த்து எழும் என்பதே ப்ளான் பி.

கூப்பர் , அமேலியா, ரொமிலி மூவரும் மேன் கிரகத்திற்கு வருகையில் அங்கே கிரகம் மனித வாழ்விற்கு தகுதியில்லாத ஒன்றாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால் தன்னை மீண்டும் பூமிக்கு திருப்பிக் கூட்டிப்போக யாரும் வரமாட்டார்கள் என்பதால், மேன், தவறான தகவல்கள் அனுப்பி, கூப்பரை மேன் கிரகத்திற்கு வரவழைத்திருக்கும் உண்மை பிற்பாடு தான் புரிகிறது.

தப்பிக்க எண்ணி, மேன், கூப்பரை அடித்து வீழ்த்திவிட்டு, அவனது களத்தில் என்டூரண்ஸை அடைந்து , அதன் மூலமாக எட்மண்ட் கிரகம் சென்று அங்கே ப்ளான் பியை அமல்படுத்த முனைகிறான். ஸ்பேஸ் ஸ்டேஷன் வருகிறான். அமேலியா, தன்னுடைய களத்தில் கூப்பரை காப்பாற்றி ஸ்பேஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அங்கே தவறாக களத்தை, ஸ்டேஷனோடு இணைத்ததால், அழுத்தம் அதிகமாகி வெடித்து மேன் சாகிறான். விண்வெளி ஸ்டேஷன் சேதமடைகிறது.

ஆயினும் கூப்பர் தன்னுடைய திறமையால் சேதமடைந்த விண்வெளி ஸ்டேஷனோடு தன்னுடைய களத்தை ஒட்ட வைக்கிறான். கூப்பரும், ஒரு ரோபாட்டும், வார்ம் ஹோலின் முனையில் தோன்றும் சிங்குலாரிட்டியை அளவிட, கூடுதல் தகவலுக்காக வார்ம் ஹோலின் முனையில் இறங்குகிறார்கள். அங்கே, முன்பே பார்த்த அண்டவெளியின் மூன்று, பரிமாணங்களுடன், நான்காவதாக காலம் என்கிற பரிமாணமும், அதையும் தாண்டி வேறு சில பரிமாணங்களும் எதிர்கால மனித இனம் உருவாக்கி வைத்திருப்பதை கூப்பர் அவதானிக்கிறான்.

அமேலியா எட்மண்ட் கிரகம் செல்கிறாள். அந்த கூடுதல் பரிமாணங்கள், கூப்பரை மர்ஃபியின் குழந்தைப்பருவ காலத்திற்கு கூட்டிப்போகிறது.

அங்கே, அந்த கூடுதல் பரிமாணங்கள் மூலமாக வரும் கூப்பர் தான் , அதுகாரும் தான் தெரிந்து கொண்டதை மர்ஃபிக்கு தெரியப்படுத்த முயன்றதும், அதை அவள் பேய் என பயந்ததும் தெரிய வருகிறது. கூப்பர் தான் வார்ம் ஹோலில் ரோபாட்டின் உதவியுடன் சேகரித்த கூடுதல் தகவல்களை மார்ஸ் கோட் மூலமாக மர்ஃபிக்கு தெரியப்படுத்த, மர்ஃபி, பிராண்டின் ஆராய்ச்சியை முழுமை செய்கிறாள்.

பிற்பாடு, கூப்பர், தன்னுடைய 124 வது வயதில் சாடர்ன் கிரகத்தின் அருகில் கண்டுபிடிக்கப்படுகிறான்.

இளமையுடன் கூப்பர், வயதாகி கிழவியாகிவிட்ட தன்னுடைய மகளை மருத்துவமனையில் சந்திக்கிற காட்சி, காலப்பயணத்தை கவித்துவமாக சொல்கிறது.

பேரண்டம் Hyperbolic geometry யில் வருகிறது.

முழுக்க முழுக்க Hyperbolic geometry யில் வரும் அண்ட வெளிப்பயணத்தின் போது, ஒரு களத்தின் உள்ளே இடம் குறையும். ஏனெனில் Hyperbolic geometry யில்  ஒரு முக்கோணத்தின் உள்பக்க பாகைகளை கூட்டினால் அது 180 பாகைக்கும் குறைவாக இருக்கும். இதைக் குறிக்கும் வசனங்கள் எதையேனும் எங்கேனும் ஓரத்திலேனும் வைத்திருக்கலாம். அல்லது காட்சியாகவாவது காட்டியிருக்கலாம். நான் பார்த்த பிரிண்டில் கட் செய்யப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் கேட்டிருந்தால் தெரிவிக்கவும்.

வார்ம் ஹோல்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. வார்ம் ஹோல்களைப் பார்க்க டாப்லர் கண்ணாடிகள் வேண்டும்.  வார்ம் ஹோல்களுக்கு அருகில், மிதமிஞ்சிய ஈர்ப்பு விசை இருப்பதால், அதனருகே வரும் எல்லாவற்றையும் வார்ம் ஹோல் விழுங்கிவிடும். ஒளியைக்கூட.
ஒரு பொருள் கண்களுக்கோ, காமிரா கண்களுக்கோ தெரிய வேண்டுமெனில், அந்த பொருளில் ஒளி பட்டு திரும்பி கண்களில் விழ வேண்டுமல்லவா. அந்த ஒளியே விழுங்கப்பட்டுவிட்டால்? நம் கண்களுக்கு எதுவும் புலப்படாதல்லவா?அவ்வாறு விழுங்கப்படுகையில், நிறமாலை உருவாகும். விழுங்கப்படுவதை யாராலும் பார்க்க முடியாதெனினும், நிறங்களில் உள்ள வேறுபாடுகளை டாப்லர் கண்ணாடிகள் மூலமாக பார்க்கலாம். இதை டாப்லர் எஃபக்ட் என்பார்கள். படத்தில் இந்த வார்த்தையையும் எங்கேயும் கேட்கவில்லை. இதுவும், நான் பார்த்த பிரிண்டில் கட் செய்யப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் கேட்டிருந்தால் தெரிவிக்கவும்.

கூப்பர் திரும்பி வருகையில், வார்ம் ஹோல் வாயிலில் சிங்குலாரிட்டியை அளவிட இறங்கிவிடுகிறான். அப்படி இறங்கும் அவன் தான் மர்ஃபியின் குழந்தைப்பிராயத்தில் வந்து, ஈர்ப்பு அலை குறித்த தகவல்களை மார்ஸ் கோட்ஸ் மூலமாக மர்ஃபிக்கு அளிக்கிறான். மர்ஃபி மூலமாக கூப்பருக்கு தெரிந்து அவன் நாஸாவின் ரகசிய இடத்தை அடைகிறான். ஆக நாஸாவின் ரகசிய இடத்தை கூப்பர் அடைய கூப்பர் தான் காரணமாகிறான். 'எங்களுடன் இணைகிறாயா?' என்று பிராண்ட் தான் கூப்பரை கேட்கிறார். கூப்பர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கதையில் ஓட்டையாகவே இருக்கிறது. கூப்பர் மில்லர் கிரக பயணத்தில் இருக்கையில், பூமியில் வளர்ந்துவிடும் தன் மகள் மர்ஃபியின் அழுகையை, புலம்பலை கேட்டு தானும் அழுவதாகக் காட்டுகிறார்கள். கூப்பர், வார்ம் ஹோல் வாயிலில் விழுந்து தன் மகள் மர்ஃபியின் குழந்தைப்பருவத்திற்கே காலத்தை பின் நோக்கி பயனித்து வருகையில், மிக எளிதாக, வேறு எவருக்கேனும் , நாசாவின் ரகசிய இடத்தை அடையும் கோ ஆர்டினேட்டுகளை தந்து, தான் தப்பித்திருக்கலாம். தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை கூப்பர் தானே தவற விட்டுவிட்டு ஏன் பிற்பாடு புலம்ப வேண்டும் ?

நாசா என்றுவிட்டு, பிராண்ட் கூப்பருக்கு காட்டும் இடம், ஏதோ, வீட்டின் பின்னால் கார் நிறுத்தும் கராஜ் போல காட்டப்பட்டிருக்கிறது.

124 வயதில் கூப்பர் சாட்டர்னில் கண்டுபிடிக்கப்படுகிறான். கூப்பர் நாசாவின் ரகசிய இடத்தை அடைகையில் அவனின் மகள் வயது 10. கூப்பருக்கு 18 வயதில் மணமாகியது என்று கொண்டால் கூட, 28 வயதில் நாசாவின் பிராண்டை சந்தித்ததாக கொள்ளலாம். பதின்மூன்றரை மணி நேரத்தில், மில்லர் கிரகம் சென்று, அத்தனை பேசி, பெரிய அலையில் தடுமாறி, பின் இத்தியாதி இத்தியாதி செய்து, இறுதியில் வார்ம் ஹோலில் விழுகிறான் என்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை.

இத்தனை லாஜிக்குகளை புறந்தள்ளிவிட்டு Doppler effect, Great Grand Time, Hyperbolic Geometry, Gravitational Wave, Morse codes, Wormholes , Time travel, Saddle Space என்பன போன்ற  அரை டஜனுக்கு அதிகமாக கோட்பாடுகளை தெரிந்துகொண்டு படத்தை பார்த்தால், நிச்சயம் படம் பிடிக்கும்.

Thursday 13 November 2014

காதல் சோலை

காதல் சோலை


பங்களூர் தக்காளி
உன் கன்னத்தில் முளைப்பது
என்ன தாவரவியல்?...

பூவிதழ்களே
உன் கன்னங்களாகியிருப்பது
என்ன மரபணுவியல்?...

உன் அழகான கன்னத்தில்
வழுக்கி விழுகிறது என் காதல் மனம்...

உனக்கு
பஞ்சுப்பொதிகளே கன்னங்களாய்...
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்குள்
காதல்தீ பற்றிக்கொண்டது...

உன் வழுக்கும் கன்னங்களில்
இன்னுமொருமுறை
உதிக்கிறது சூரியன்...

உன் கன்னத்தில்
கற்றை முடி விழுந்தால்,
என் இதயத்தில்
பலத்த இடி இடிக்கிறது.

Sunday 2 November 2014

ராணி இதழில் எனது ஒரு நிமிடக் கதை



அன்புத் தோழர்களுக்கு,

4, நவம்பர் 2014 தேதியிட்ட இந்த வாரம் ராணி இதழில் 'ரிமோட்' என்ற தலைப்பிலான எனது ஒரு நிமிடக் கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான பக்கத்தை இங்கே இணைத்திருக்கிறேன். 



கதையை வாசித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Thursday 2 October 2014

ராணி முத்து இதழில் எனது கவிதை



அன்புத் தோழர்களுக்கு,

1, அக்டோபர் 2014 தேதியிட்ட இந்த வாரம் ராணி முத்து இதழில் பக்கம் 13ல் 'புன்னகை' என்ற தலைப்பிலான எனது கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதை வெளியான பக்கத்தை இங்கே இணைத்திருக்கிறேன். 



கவிதையை வாசித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.


நட்புடன்,
ராம்ப்ரசாத்

Friday 28 March 2014

தனிமையும், முகமூடியும் - ராம்பிரசாத்

தனிமையும், முகமூடியும் - ராம்பிரசாத்





அணிந்திருந்த முகமூடியை
கழற்றி வைத்துவிட்டு
சற்று நேரம் காலார நடந்தேன்...

என்னை எல்லோரும்
வினோதமாகப் பார்த்தார்கள்...

அருகில் வர அஞ்சினார்கள்...
ஒதுக்கி வைத்தார்கள்...
ஒதுங்கிக் கொண்டார்கள்...

தனிமை பயம் துரத்த ஓடிச்சென்று
கழற்றிய‌ முகமூடியின் பின்னால்
ஒளிந்துகொண்டேன்...

பேசாமல்
தனிமையிடம் பயம் கொள்வதை விடுத்து
அன்பு செய்தால் என்ன என்று தோன்றியது...



@நன்றி
இன்மை கவிதையிதழ் (மார்ச் 2014)

Thursday 13 March 2014

ராணி இதழில் எனது காதல் கதை

இந்த வாரம் ராணி இதழில் பக்கம் 30ல் எனது காதல் கதை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன் பிரதி இங்கே.



Saturday 15 February 2014

இன்மையில் எனது கவிதை

இன்மை கவிதையிதழின் பிப்ருவரி 2014 இதழில் எனது கவிதை எனது அறிமுகத்துடன்:

நுழைவாயில் – ராம்ப்ரசாத்



நாம் எல்லோரும், எப்போதும்
ஒன்றுக்கு மேற்பட்ட நாடகங்களின் அங்கமெனவே
இருக்கிறோம்....

பல்வேறு இயக்கங்கள்
குழுமி,
தங்களுக்குள் அளவளாவி
நாடகங்களை உருவாக்குகின்றன....


நம் எல்லோருக்கும்
ஒரு நாடகத்தின் அத்தனை இயக்கங்களையும்
கடந்து போகக்கூடிய வாய்ப்பு
எப்போதுமே கிடைப்பதில்லை....

நம் கவனங்களில் பதிந்த இயக்கங்களை
நாம் அசைபோட்டுப் போகையில்,
நம்  கவனங்களில் பதியாத இயக்கங்களின் பதிவுகளே
இலக்கியம் ஆகின்றன...

நம் பெரும்பான்மை கவனங்களில்
பதியாத இயக்கங்களே
புதினங்களின் நுழைவாயில்...


http://www.inmmai.com/2014/01/blog-post_30.html

$நன்றி
இன்மை