அத்தியாயம் - 13
பவித்ரா,
ரவியின் கலாபக் காமம் மற்றும் அஞ்சலி, அர்விந்த் சுரண்டப்படுதல் சூர்யாவின் அட்டவணை
மீதான என் நம்பிக்கையை வலுப்பெறச்செய்ய மட்டுமே உதவின.
அஞ்சலியின்
எண் 8.
வினய்யின்
எண் 8.
ஆக, அஞ்சலி,
வினய் இருவரும் நிச்சயமாக இணைவது எதற்காக இல்லாவிட்டாலும், ரவியாலும், பவித்ராவாலும்
சுரண்டப்படுவது தவிர்க்கப்படவாவது நிகழ வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன்.
ஆதலால்,
அஞ்சலி – வினய் என்னானார்கள் என்று பார்க்கும் ஆர்வம் எனக்குள் எழுந்தது.
அதற்காக
நான் அஞ்சலியையோ, வினய்யையோ அணுகவில்லை. நேராக சூர்யாவைத்தான் அணுகினேன். ஏனெனில் இப்போதெல்லாம்
மனிதர்களுக்கிடையேயான சந்திப்புகள் இயற்கையாக நிகழ்கின்றன என்று நான் நினைப்பதில்லை.
சூர்யா போல் கடவுளே கூட எங்கோ அமர்ந்திருந்தபடி மனிதர்களை காலம் என்னும் செயலி கொண்டு
இயக்கிக் கொண்டிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
நான் சூர்யாவின்
அலுவலகத்திற்குச் சென்றபோது அரசுவும் இருந்தார். இவர் தன் வீட்டுக்குப் போகவே மாட்டாரோ
என்று கூடத் தோன்றியது. அதுவெல்லாம் எனக்கெதற்கு என்று விட்டுவிட்டேன்.
“இன்று வெள்ளிக்கிழமை.
வினய் வங்கி ஒன்றில் தன் வியாபார முயற்சிக்குக் கடன் அனுமதி பெற்றிருக்கிறான். அதே
வங்கியில் அஞ்சலி கணக்கு ஒன்று வைத்திருக்கிறாள். இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்யட்டுமா?’
என்றது கணிணி.
சூர்யா ஒரு
பொத்தானை அழுத்த, ‘சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது’ என்றறிவித்தது கணிணி. இரண்டு
பேரைச் சந்திக்கச்செய்வது இத்தனை எளிதா என்று கூடத் தோன்றியது. நவீன யுகத்தில் என் பலம் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது
என்று தான் சொல்ல வேண்டும்.
நான் அஞ்சலி,
வினய்யை வங்கியில் வைத்து சந்தித்தேன்.
அந்தத் திவ்வியத்
திருநாளில், அஞ்சலியை வங்கியில் சந்தித்தான் வினய்.
“ஹலோ”
“ஹலோ”
“எப்படி
இருக்கீங்க?”
“உங்களை
பதிலுக்கு கேக்கணுமா?”
“கேட்டுட்டாலும்…”
“அப்புறம்
என்ன? உங்க வேலையைப் பார்க்கலாமே?”
“அடப்போங்க..
ஏதோ அழகா இருக்கீங்களேன்னு பாத்தா, ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க.” என்றவாரே வினய்
விலகினான்.
வினய் முகத்தில்
லேசான சலிப்பை அவதானித்தேன். பிறகு அஞ்சலியையும் பார்த்தேன்.
“உங்களை
எல்லாம் தெரியும் போடா” என்பது போல் இருந்தது அவளது பார்வை. அவள் அந்த வங்கிக்குத்
தான் வந்த வேலையைத் தொடர்ந்தாள்.
அன்று வினய்க்கு
ஏதோ அசந்தர்ப்பம் என்று கருதினேன். அவன் போலியாக சலித்தது போல் பாவனை செய்கிறான் என்று
தான் முதலில் நினைத்தேன். அஞ்சலி கொஞ்சமேனும் அவனுக்கு அந்தச் செயற்கையான சம்பாஷனையில்
ஈடுபடும் அளவிற்கு தைரியமளித்திருந்தாலும் போதும். எஞ்சியதெல்லாம் அவர்களின் மடியில்
தானே வந்துவிடும் ஸ்திதி இருந்தது.
அது வினய்க்கு
தேவையோ இல்லையோ, அஞ்சலிக்கு மிகவும் தேவையாக இருந்தது. அவள் மென்மேலும் சுரண்டப்படுவதிலிருந்து
தவிர்க்கப்பட அப்போதைக்கு வினய் மட்டுமே ஒரே அத்துவான ஒளி.
ஆனால், அஞ்சலி
ஒரு பாசாங்கிற்குக்கூட வினய்யிடம் இன்முகம் காட்டவில்லை.
‘சர்தான்
போடா’ என்கிற ரீதியில் அவனைக் கடந்து போனாள். ஒருவருக்குத் தான் இருக்கும் சமூக சூழல்
புரிந்திருக்கவில்லையெனில், தன்னை நோக்கி அணுகி வருவது அந்தச் சூழலுக்கான தீர்வு தான்
என்பது தெரிந்திருக்கவில்லையெனில், இதுவன்றி வேறென்ன நிகழ்ந்துவிடக்கூடும்?
நிஜமாகவே
எனக்கு அஞ்சலியை நினைத்தால் பரிதாபமாக இருந்தது.
இதை நான்
சற்றும் எதிர்பார்க்கவில்லை. வினய்யின் எண் 8. அஞ்சலியின் எண்ணும் 8. அப்படியானால்
அவர்கள் இணைய வேண்டுமே? இணக்கமாகப் பேச வேண்டுமே? அவர்கள் பேச்சில் இணக்கம் ஏன் இல்லை?
அப்போது
தான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்படி ரவியும், பவித்ராவும் தாங்கள் பொருத்தமான இணை
என்பதே தெரியாமல் இருந்தார்களோ அதே போல் அஞ்சலியும், வினய்யும் கூட தங்களுக்கிடையில்
அதிகபட்ச பொருத்தம் இருப்பது பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தார்கள். இது, மனிதர்களிடையே
சூர்யாவின் கணித மாதிரியின் தேவை எந்தளவிற்குத் தேவை என்பதைப் புரிந்துகொள்ள உதவியது.
அஞ்சலியின்
சூழலை என்னால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. அஞ்சலியின் அழகுக்கு நாளொன்றுக்கு நாலு பேர்
காதலுடன் அவளை அணுகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பார்த்தவுடன் தொற்றிக்கொள்ளும்
தற்காலிக காதல் பேச்சுக்களில் எவன் யோக்கியன், எவன் அயோக்கியன் என்று அவளால் எப்படி
ஒரு அரை நோடி நேரத்தில் கண்டுகொள்ள இயலும்?
இதைச் சொல்வதால்
நான் ஆண்களின் நியாயத்தைப் புறக்கணிக்கிறேன் என்றர்த்தமல்ல. அவள் போன்ற பேரழகியிடம்
அணுக யோக்கியனுக்கும் கூட கிடைப்பது அந்த அரை நோடி நேரம் தானே. ஆக, ஆண்களையும் குறை
சொல்வதற்கு இல்லை.
இந்தப் புள்ளியில்,
நான் சில விடயங்களைச் சொல்ல விழைகிறேன்.
அஞ்சலி
– வினய் எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக இல்லை;
நீங்கள் பத்து ரோஜாக்களைத் தொடர்ந்து வாசம் கண்டிருந்தால், 11வது ரோஜா, ப்ளாஸ்டிக்
ரோஜாவாக இருந்தாலும், பத்து ரோஜாக்களின் வாசம் உங்கள் புலன்களை ஏமாற்றவே செய்யும்.
அஞ்சலி போன்ற,
தகுதி வாய்ந்த பெண் பண்படாத மரபணுக்களுக்கு நல்கும் வாய்ப்புக்களால், பண்படாத மரபணுக்கள்
எண்ணிக்கையில் பெருகி ஒரு கட்டத்தில், பெண்களுக்கே அச்சுறுத்தலாக ஆகிவிடுகிறார்கள்
என்பது என் வாதம் மற்றும் பார்வை.
இல்லாவிட்டால்,
ரவி, அஞ்சலி இணைப்பு வேறெப்படி சாத்தியமாகியிருக்க முடியும்? அஞ்சலி, தனக்கொரு மணமகன்
தேடிய காலத்தில் அஞ்சலிக்கு நிகரான, சமமான எண் கொண்ட ஆண்கள் ஒருவர் கூடவா இல்லாமல்
போயிருப்பார்கள்? அந்த ஆண்கள் அவளின் ஆளுமை கருதி ஆணாதிக்கத்தை நிறுவ அவளைத் தவிர்த்திருப்பார்கள்
என்று சொல்லப்படும் ஊகங்களில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. அது ஒரு சாத்தியமாக இருக்கலாம்
- பல்லாயிரம் சாத்தியங்களிள் ஒன்றே ஒன்று.
தங்கள் கண்
முன்னே, தங்கள் சுற்றத்தில் இருக்கும் வரை, சில ஆண்கள் பெறாத நற்பெயரை, ஆதரவை, தங்கள் சுற்றத்திலிருந்து வெளியே
சென்றுவிட்ட உடனேயே அவர்கள் பெறத் துவங்குவதை இந்த அஞ்சலிக்கள் எப்போதுதான் கவனிப்பார்கள்?
ஒரு நற்பெயர் கொண்ட, அதீத திறமைகள் கொண்ட, தனக்கு எல்லா விதத்திலும் சமமான ஒரு ஆணை
இவர்கள் தங்கள் புழங்கு தளங்களில் உள்ள குடியிருப்பின் க்ளப்ஹவுஸ்களிலும், கடை வீதிகளிலும்
யார் என்றே தெரியாமல் தினம் தினம் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை இந்த
அஞ்சலிக்கள் எப்போதுதான் உற்று நோக்குவார்கள்? எந்த சமூக இடத்திலும் தனக்குச் சமமான
ஆண் ஏன் தனக்கு கடைசியாகப் பரிச்சயமாகிறான் அல்லது அறிமுகமாகிறான் என்பதை இவர்கள் எப்போதுதான்
கவனிப்பார்கள்? இவ்விதம், சில பெண்களின் சுற்றத்தில் இருந்தால், அதில் இருட்டடிக்கப்படுவோம்
என்பதை கணித்துவிடும் ஆற்றல் கொண்ட இந்த பெண்களுக்குச் சமமான ஆண்கள் தங்கள் எதிர்காலத்துக்காகவும்,
தங்கள் வளர்ச்சிக்காகவும், தங்கள் மன அமைதிக்காகவும், ஒரு மலினமான தெரு நாய்ச்சண்டையின்
தரத்துக்குத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளக்கூடாதென்கிற சுய பாதுகாவல் உணர்வின் நிமித்தமும்
அவளின் சுற்றத்தை விட்டு அவசரமாக வெளியேறுவதை,
அவளுக்குத் தெரியாமல் இருப்பதே சாசுவதம் என்றெண்ணி விலகுவதை இந்த அஞ்சலிக்கள் எப்போதுதான்
உணர்வார்கள்? அதிலிருந்து கற்பார்கள்? என்ற
கேள்விகள் என் மனதில் விரிந்தன. ஏனெனில், நான்
இந்தப் பெண்களின் சுற்றத்தில் உள்ளவர்களால் வேரூன்றுவதிலிருந்து தடுக்கப்படும் இடங்கள்
அவைகள். இந்த இடங்களை நான் கூர்ந்து அவதானித்திருக்கிறேன்.
இப்படியாக,
பண்படாத மரபணுக்களையே தொடர்ந்து எதிர்கொள்ள நேரும் பெண், வினய் போன்ற சரியான ஆணைக்
கடக்க நேர்கையில், அவனது பண்பட்ட மரபணுவின்
வாசம் உணர வாய்ப்பின்றி கடந்து போக நேர்வது அப்படி ஒன்றும் அதிர்ச்சி தரும் வகையில்
இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில்,
அஞ்சலியின் ரவியுடனான பாலுறவின் பின்னணியில், பண்படாத மரபணுக்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்ததினால்
மழுங்கடிக்கப்பட்ட அவளது புலன்களின் பின்னணியில், அஞ்சலி வினய்யை, அவனது பண்பட்ட மரபணுவின்
தன்மையை, அடையாளம் கண்டிருந்தால் அதுதான் எனக்கு ஆச்சர்யம் தரும் விடயமாக இருந்திருக்கும்;
அதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.
இங்கே இன்னுமொன்றும்
என் கவனத்திற்கு வந்தது: மிகை தகுதிகள் கொண்ட வினய்க்கும், அவனை விடவும் ஒரு தகுதி
குறைவாகக் கொண்ட அர்விந்துக்கும் இடையில், அஞ்சலி என்கிற அழகுப்பதுமையுடன், கள்ளுறவு
கொள்ள வாய்ப்பமைந்தது அர்விந்துக்குத்தானே தவிர வினய்க்கு அல்ல என்பதுதான். இதில் ஆறுதல்
என்னவென்றால், அர்விந்தையும், வினய்யையும் பிரிக்கும் திறன் வித்தியாசம் ஒன்றே ஒன்று
தான். திருமண பொருத்தத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, சிலரின் 'திரைமறைவிலாவது
நியாயம் தேடிக்கொள்கிறேன்' என்கிற ரீதியிலான தேர்வுகளில் கூட நியாயம் இருப்பதில்லை
என்பது என் வாதம்; அந்த நியாயங்களுக்கு சூர்யாவின் தகுதி மதிப்பீடுகளே தீர்வு.
ஆனால், நிஜம்
யாருக்கு, எக்காலத்தில் உவப்பாக இருந்திருக்கிறது?
இப்போது
நான் யாரைப் பின் தொடர்வது என்றெனக்கு கேள்வி வந்துவிட்டது. சூர்யாவைத் தொடர்வது என்றால்,
அவனின் அட்டவணை மீது அவநம்பிக்கை வரத்துவங்கிவிட்டது. வினய்யைப் பின் தொடரலாமென்றால்
அவன் நேராக அவனது காதலியிடம் தான் போய் வீழ்வான். அவனது காதலி ஜெஸித்தா. அவளின் எண்
4. அவளுக்குத் தன்னைப்பற்றிய அவதானம் சரியாக இருப்பின் அவள் வினய்யை கெட்டியாகப் பிடித்துக்
கொள்ளவே செய்வாள். அஞ்சலி போன்ற தகுதி வாய்ந்த பெண்கள் ரவி போன்ற பண்படாத மரபணுக்களின்
செல்வாக்கினால், பண்பட்ட மரபணுக்களின் வாசம் உணரும் தன்மையை இழந்துவிட்டபோது, வினய்
போன்றவர்களுக்கு ஜெஸித்தா போன்றவர்கள் துணையாகக் கிடைப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?
உண்மையில்
வினய் போன்ற பண்பட்ட மரபணுக்கள் மீது எனக்குப் பரிதாப உணர்வே எஞ்சுகிறது. பண்பட்ட மரபணுவாக
இருப்பது மட்டுமே தன் குறை என்பதையே உணராத அவர்கள் காலம் முழுவதும் தனக்கு ஏன் ஒரு
தகுதியான பெண்ணின் அருகாமை வாய்க்கவில்லை என்று எண்ணி, உள்ளுக்குள்ளாகப் புழுங்கி,
“பெண் என்பவள் புரியாத புதிர் தான் போல” என்கிற வரியில் தங்களைத் தாங்களே சமாதானம்
செய்துகொள்கிறவர்களாக இருப்பது தான் அவர்கள் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது; அவர்களின்
தவறென்று இங்கே எதுவுமே இல்லை என்பதை அவர்களுள் மிகச்சிலரே உணர்கிறார்கள். சூர்யாவைப்போல.
இங்கே ஒன்றைக்
குறிப்பிட வேண்டும். எல்லாமும் அறிந்தவர்களைப் பெண்கள் அண்டுவதே இல்லை; எனக்குத் தெரிந்து
சூர்யாவைச் சுற்றிக்கொண்டிருப்பது அரசு மட்டுமே; அவர் ஒரு ஆண்.
பாருங்கள்!!
இதுவும் கூட ஆச்சர்யம் தரவில்லை எனக்கு.
அரசுவின்
பக்கம் செல்லலாமென்றால் அவர் குட்டையைக் குழப்புவார். வழமை போல.
நான் அஞ்சலியை
பின் தொடர்ந்தேன். வினய்யின் தகவல்கள் அந்தச் செயலியில் இருக்கிறது. அவளது வினய் மீதான
பாராமுகம், தற்காலிக வினையாக இருக்கலாம் என்று தோன்றியது.
அஞ்சலி வங்கியில்
தன் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்றாள். அப்போது அவளது அலைபேசி சிணுங்கியது. அவள்
எதையோ கவனித்துப் பல்லைக்கடித்தாள். பின் பரபரவென குளியலறைக்குள் நுழைந்தாள். அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். பின் அவள் ஊபர் மகிழுந்து முன்பதிவு செய்து,
அது வந்ததும் ஏறிக்கொண்டாள்.
சொல்ல மறந்துவிட்டேன்
பாருங்கள்… அவள் அழகாக பாந்தமாகச் சேலை ஒன்று உடுத்தியிருந்தாள். அவளை நான் சேலையில் பார்ப்பது அதுவே முதல் முறை.
ஒரு சேலை பூந்தோட்டத்தைக் கட்டித்தழுவி தன்னை அழகாக்கிக்கொண்டது போலிருந்தது. கூந்தலில்
மல்லிகைப் பூக்கள். நானும் அவளுடன் பிரயாணப்பட்டேன். மகிழுந்து முழுவதும் மல்லிகைப்பூவின்
வாசம்.
மகிழுந்து
கிழக்கு கடற்கரைச்சாலையில் ஒரு உணவகத்தில் நின்றது. அவள் மகிழுந்துக்குப் பணம் கொடுத்துவிட்டு
இறங்கினாள். அங்கே அவளை ஒருவன் வரவேற்றான். பார்க்க உயரமாக இருந்தான். முகத்தை சவரம்
செய்திருந்தான். மார்பு விடைத்திருந்தது. தோல்கள் அகண்டிருந்தன. ஜீன்ஸும் டிசர்டும்
அணிந்திருந்தான். பார்க்க மெத்தப் படித்தவன் போலிருந்தான். தோற்றத்தில் ஒரு ஒழுங்கும்,
பொலிவும் இருந்தது.
“ஹாய்… புடவையில
அழகா இருக்கீங்க” என்றான் எடுத்ததுமே.
மற்றவர்களைச் சந்திக்க ஜீன்ஸில் சென்றவள், இவனைச்
சந்திக்க மட்டும் ஏன் புடவையில் என்ற கேள்வி எழுந்தது என்னுள்.
“ஸ்பெஷல்
அக்கேஷன்ஸுக்கு புடவை கட்டுறது வழக்கம் தான்” என்றாள் அஞ்சலி.
“நீங்க அழகா
கவிதை எழுதுவீங்கன்னு தெரியும். கவிதையாவே இருப்பீங்கன்னு நினைக்கலை”
“நல்லா பேசறீங்க..
ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் போல”
“ஆமா”
“என்னது
ஆமாவா? சும்மா கூட இல்லைன்னு சொல்ல மாட்டீங்களா?”
“எதுக்குங்க?
பொய் சொன்னா அதை நியாபகம் வச்சிக்கணும். அதை தொடர்ந்து சொல்லணும். உண்மையை சொல்லிட்டா
பிரச்சனையே இல்லை பாருங்க”
“நல்லாத்தான்
இருக்கு”
“என்னது?”
“நீங்க சொல்றது”
“சரி..என்னை
புடிச்சிருக்கா?”
“புடிச்சிருக்கு.
ஆக்ச்சுவலா நீங்க உங்க வயசுக்கு ரொம்ப சின்னப்பையனா தெரியறீங்க. நான் கூட முப்பத்தி
அஞ்சு வயசுக்கு ரொம்ப பெரியவரா இருப்பீங்களோன்னு நினைச்சிட்டேன். ஜிம்முக்கெல்லாம்
போவீங்களா?”
“ஜிம்மெல்லாம்
இல்லை. வெஜிடேரியன் தான். அளவா சாப்பிடுவேன். அப்புறம் க்ளாசிக்கல் டான்ஸ் ஆடுவேன்.”
“க்ளாசிக்கல்ன்னா?”
“பரத நாட்டியம்”
“என்னைக்
கவிதைன்னு சொல்லிட்டு நீங்க நாவல் மாதிரி இருக்கீங்க. கேக்கணும்னு நினைச்சேன். எப்படி
நாவலெல்லாம் எழுதறீங்க? எனக்கு ஒரு சிறுகதை எழுதவே சிரமமா இருக்கு. ஒரு முறை ஒரு கதை
எழுதிப் பார்த்தேன். அதைக் கதைன்னே யாரும் ஒத்துக்கலை.”
“அழகா இருக்கிற
பொண்ணுங்க என்ன சொன்னாலும் கவிதை மாதிரி தான் இருக்கும். நீங்க கொள்ளை அழகா இருக்கீங்க. அதுனால அதை ஒரு நெடுங்கவிதைன்னு
நினைச்சிட்டாங்களோ என்னவோ?”
“எனக்கு
சொல்லத்தெரியலை. ஆனா, இந்த நிமிஷம் சாகுறதா இருந்தாலும் நிம்மதியா செத்திருவேன்.”
“அப்படி
சொல்ல மாட்டேன்னு தைரியமா?”
“அப்படியும்
வச்சிக்கலாம். எனக்கு சொல்லணும்னுத் தோணிச்சு. எத்தனையோ பசங்களை பாத்திருக்கிறேன்.
பழகியிருக்கிறேன். ஆனா, அவங்க எல்லோரோடவும் ஏதோ ஒண்ணு எப்பவும் மிஸ் ஆச்சு. தினம் தினம்
என்னை யாரோ சுரண்டுறா மாதிரி ஒரு உணர்வு; என் உழைப்பை யாரோ திங்கிறா மாதிரி ஒரு உணர்வு;
யாரோ என்னைத் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிற உணர்வு; உங்கிட்ட தான் இப்படி முதல்
முறையா உணர்கிறேன். ஒண்ணு சொல்லவா? ”
“என்ன?”
“நாம கல்யாணம்
பண்ணிக்கலாமா? என்னால என் உழைப்பை யாரோ திங்கிற உணர்வைத் தாங்கவே முடியலை. உங்களுக்கு
ஓகேன்னா எனக்கும் ஓகே. விவாகரத்து பண்றதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” என்றாள் அஞ்சலி.
எனக்கு உருவம்
இருந்து அதில் கொஞ்சம் தலைமுடி இருந்திருக்கலாம் என்று தோன்றியது. இருந்திருந்தால்
தலையைப் பிய்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.
யாரிவன்?
அஞ்சலியும் அவனுடன் சற்றே நெருக்கமாக இணக்கமாகத் தெரிகிறாள். அப்படியானால், இருவருக்குள்ளும்?
அப்படியானால் சூர்யாவின் அட்டவணை என்னானது?
நான் சூர்யாவின்
அலுவலகத்துக்கு விரைந்தேன். அங்கே அரசு இருந்தார்.
“என்னப்பா,
இப்படி ஆயிடுச்சு? அந்த வினய் அவளை பிக்கப் பண்ணிடுவான்னு நினைச்சேன்?” என்றார் அரசு.
“நானும்
தான்” என்றான் சூர்யா.
“இப்படி
அவனுக்கு அல்வா குடுத்துட்டாளே”
“போகட்டும்”
“என்ன போகட்டும்?
அப்போ உன் அட்டவணை என்னாச்சு? வேலை செய்யலியா? இதை நம்பி எப்படி நான் முதலீடு பண்ணுறது?”
சூர்யா முகத்தில்
ஏமாற்றத்தின் ரேகைகள். அவன் எதிர்பார்க்கவில்லை போலும்.
“அஞ்சலி
ஐடியலி எண் 8 உள்ள ஆணைத்தான் தேர்ந்தெடுத்திருக்கணும். ஆனா, கட்டாயம் தேர்வு பண்ணனும்ன்னு
அவசியம் இல்லை.” என்றான் சூர்யா சமாளிக்கும் விதமாக.
“தேர்வு
பண்ணினாத்தானே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணும். அப்படி தோணினாத்தானே ரவியை விவாகரத்து
செய்ய வேண்டிய தேவை வரும்? அப்படி வந்தாத்தானே எனக்கு ஒரு கேஸ் கிடைக்கும்? அதுதானே
நம்ம மாஸ்டர் ப்ளான்? ஒரு நூறு பேர் கொண்ட குழுவுல இந்த முறையில சுமார் பதினைந்து விவாகரத்துகள்
கிடைக்கும்ன்னு நீ தானே உத்திரவாதமா சொன்ன. ஆனா, ட்ரெயிலர்லயே ஊத்திகிச்சே.”
“ஊத்திக்கிச்சு
ஏன் முடிவு பண்றீங்க? அவ வினய் கூட பழகலை. அவ்ளவுதானே. இன்னும் நேரம் இருக்கு. ப்ராபப்ளி,
வினய்க்கு இன்னொரு தடவை முயற்சி பண்ணலாம்ன்னு கூட தோணியிருக்கலாம் தானே.”
“நீ சமாளிக்காதே
சூர்யா. நீ வேணும்னா நல்லா பாரு. அந்த அஞ்சலி இத்தனை நேரம் கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு சமைச்சிப்போட்டுட்டு,
உடம்புல வெயிட் போட்டு மாமி மாதிரி இருக்கப்போறா”
“அதையும்
பார்த்துடலாம்”
சூர்யா தன்
மடிக்கணிணியில் துழாவினான். மெட் செயலியின் தகவல் களஞ்சியத்தைத் திறந்தான். சில பொத்தான்களை
அழுத்த,
“அஞ்சலி
சமீபமாக தேர்வு செய்திருப்பது தியாகு என்கிற ஆணை. தியாகுவின் எண் 9. இருவரும் கடந்த நான்கு மணி நேரங்களில் சுமார் நானூறு
மெகா பைட்டுகள் அளவிற்கு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றது செயலி.
சூர்யா மெட்
செயலியில் தியாகுவின் இணையக்கணக்கை வருவித்து எண்களின் பட்டியலை திரையில் தோன்றச்செய்தான்.
|
தியாகு |
|
1.
லேசான பழமைவாதம் |
|
2.
முற்போக்குச் சிந்தனை |
|
3.
பகுதியை தவிர்த்து முழுமையை தரிசிக்கும் திறம் |
|
4.
கடின உழைப்பு |
|
5.
படைப்பாற்றல் |
|
6.
நினைத்ததை அடையும் முயல்வு |
|
7.
அழகியல் |
|
8. பழகுதல் |
|
9. அறமான வாழ்க்கை |
“வாவ் சூர்யா.
உன்னோட அட்டவணை பிரகாரம் அந்தப் பொண்ணு தன்னை விட அடுத்த எண் உள்ள ஒருத்தனை தேடிக்கிச்சுப்பா”
“ஆமாங்க..
அப்படித்தான் தோணுது”
“இந்த அட்டவணையில
ஆண்- பெண் இணையில 5, 4, 3 வித்தியாசங்கள் இருக்கிறவங்களை மட்டும் தான் பாத்தீங்க. அதை
மட்டும் ஏன் வருவிச்சேன்னு உங்களுக்கு முன்னாடியே சொன்னேன்”
“ஆமா.
5, 4, 3 தவிர மத்ததுல எண்ணிக்கை ரொம்ப குறைவா இருக்கும். அது நமக்கு பயன்படாதுன்னு
சொன்ன”
“எஸ். அதே
தான். இப்போ 8, மற்றும் 9 வித்தியாசங்கள் இருக்கிற இணைகளையும் அதோட சேர்த்திருக்கேன்.
இப்போ பாருங்க” என்றவன் அட்டவணையை மேம்படுத்திக் காட்டினான்.
“8க்கு ஒண்ணே
ஒண்ணு தான் இருக்கு. 9க்கு ஒண்ணுமே இல்லையேப்பா?”
“கரெக்ட்.
அதான் பிரச்சனையே. ஒன்பது வித்தியாசங்கள் இருக்கிறவங்க எண்ணிக்கையில ரொம்ப ரொம்ப குறைவா
இருப்பாங்க. அதுனால, அவங்க 8 பொருத்தம் இருந்தாலே பொதும்ன்னு நினைக்கிறவங்களா இருப்பாங்க.
8 பொருத்தம் இருக்கிறவங்களோட நடத்தை எப்படி இருக்கும்னா, ‘நாம ஏன் இவர் கிட்டருந்து
அந்த ஒன்பதாவது விஷயத்தைக் கத்துக்கக்கூடாது’ அப்படீன்னு நினைக்கிறவங்களா இருப்பாங்க.”
“தியாகுவுக்கு
இருக்கிற, அதே நேரம் அஞ்சலிக்கும் தேவைப்படுகிற அந்த ஒன்பதாவது தகுதி படைப்பாற்றல்
தான். 8 பொருத்தங்கள் இருக்கிற பெண் கிடைக்கிறது தியாகுவுக்கும் கஷ்டம். அந்தக் காரணங்களால
தியாகு அஞ்சலியே போதும்ன்னு கூட நினைச்சிருக்கலாம்”
“ஆங்.. அதெப்படி..
நீ சொல்றதெல்லாம் நான் நம்பமாட்டேன். தியாகு ப்ரோஃபைலைக் காமி.நான் பாக்கணும்”
சூர்யா தியாகுவின்
இணையக்கணக்கை கணிணித் திரையில் வருவித்தான். அதில் தியாகுவின் புகைப்படத்துடன் அவனது
இதர தகுதிகள் குறித்து எழுதப்பட்டிருந்தது. தியாகு திருமணமானவன். மனைவி பெயர் இந்திராணி.
எண் 5. தியாகுவிற்கு வேலை இல்லை. வேலை நிமித்தம் மனைவியுடன் மனக்கசப்புகள் என்றிருந்தது.
கணிணி இந்திராணியின் எண்களையும் காட்டியது.
|
இந்திராணி |
|
1.
லேசான பழமைவாதம் |
|
2.
முற்போக்குச் சிந்தனை |
|
3.
பகுதியைப் பார்க்கும் பார்வை |
|
4.
அழகியல் |
|
5.
நினைத்ததை அடையும் முயல்வு |
|
6.
பழகுதல் |
“ஒரு வேளை,
சம்பாதிக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டா நாம எழுதலாம். வீட்டுக்கான பொருளாதாரத்தை மனைவி
பாத்துக்குவான்னு தியாகு நினைச்சிருக்கலாம். தியாகுவுக்கு படைப்பாற்றல் இருக்கு. அது
அஞ்சலிக்கு எங்க தேடியும் கிடைக்காத ஒரு விஷயமா இருந்திருக்கலாம்” என்றான் சூர்யா.
“ம்ம்ம்…
அப்படித்தான் தெரியிது.” என்றார் அரசு,
“இந்த விதத்துல
இந்த உறவு ரெண்டு பேருக்குமே லாபமாத்தான் இருக்க அதிக வாய்ப்பிருக்கும் அரசு. எப்படியோ,
உங்களுக்கு ஒரு விவாகரத்துக் கேஸ் கன்ஃபர்ம்டு” என்றான் சூர்யா.
“சூப்பர்
சூர்யா. கலக்கல். நாம இதைச் செய்யிறோம். வேற யாருக்கும் இந்த அட்டவணையை வித்துடாத. உனக்கு வேணும்னா ஒரு………………………” என்று அரசு சொல்லிக்கொண்டிருக்க,
“கட்டிங்,
மொத்த விலைன்னு ஏமாத்துற வேலையெல்லாம் வேணாம். வர்ற லாபத்துல ஐம்பது சதவிகிதம் எனக்கு”
என்றான் சூர்யா.
உண்மையைச்
சொல்ல வேண்டுமானால், எனக்குச் சூர்யாவைக் கட்டித்தழுவி கன்னத்தில் ஒரு முத்தமிடலாம்
போலிருந்தது.
ஒரு காலத்தில்,
நவீனத்துவம் என்னை உருவாக்கி மீட்சியே இல்லாத ஓரிடத்துக்குச் சென்றுவிட்டதோ என்று நான்
நினைத்திருந்தேன். நவீனத்துவம் உருவான புதிதில் என்னைப் பலரும் பலவிதமாக உருவாக்கினார்கள்.
இந்த ஜாதியில்
தான் மாப்பிள்ளை வேண்டும் என்றார்கள். அதெப்படி பிரபஞ்சம் எல்லா புத்திசாலிகளையும்
ஒரே ஜாதிக்குள் அடைக்கும் என்கிற அடிப்படைச் சிந்தனை கூட இல்லாமல்.
இத்தனை சொத்து
இருப்பவன் தான் வேண்டும் என்றார்கள். இனம் இனத்தோடே சேர்ந்தது. அழகு பிரதானப்பட்டது.
குணம் பலவீனப்பட்டது. எல்லோரும் தனக்கு ஒரு படிப்பு வருகிறதோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ
குருட்டாம் போக்கில் ஏன் படிக்கிறோம், எதற்குப் படிக்கிறோம் என்று தெரியாமலே படித்தார்கள்.
விளம்பரப்படுத்தப்பட்டது மட்டுமே திரும்பிப் பார்க்கப்பட்டது. கற்பு செல்லாக்காசாகிப்போனது.
நோக்கங்கள் புறக்கணிக்கப்பட்டன. செக்குமாட்டுத்தனம் மிகுத்தது.
அஞ்சலி
– தியாகு இணை எனக்குச் சரியாகப்படுகிறது. இதுவும் நான் தான். ஆனால் இது என்னை வைத்து
பிரபஞ்சத்தன்மைகளை தரிசிப்பது.
அஞ்சலி,
தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதால் ‘எனக்கு ஒரு பொறியியல் பட்டதாரி தான் தேவை’ என்று
கேட்டிருப்பின் அவளுக்கு வினய்யோ அர்விந்தோ கிடைத்திருக்கலாம். ஆனால், பிரபஞ்சம் அவளுக்கு
அளிந்திருந்த கலை உணர்வு மேலெழும்ப வாய்ப்பில்லாது போயிருக்கும்.
ஆனால், அவள்
தியாகுவைத் தேர்வு செய்து, தான் கற்ற கல்வியை, அதன் மூலம் பெற்ற அசலான ஞானத்தை நியாயப்படுத்திவிட்டாள்
என்று தான் தோன்றியது. தியாகுவும், ‘நான் ஒரு ஆண். ஒரு பெண் வேலைக்குப்போய் சம்பாதிக்க
நான் வீட்டைப் பார்த்துக்கொள்வதா?’ என்றிருந்திருப்பின், போதுமான வருமானம் இன்றி, வருமானத்திற்கென
ஓடத்துவங்கி படைப்பாற்றல் இருந்தும் அதைச் செயல்படுத்த முடியாமல் திணறி வாழ்வில் தோல்வி
கண்டிருக்கக்கூடும்.
அவனும் அதைச்
செய்யவில்லை. படைப்பாற்றல் கொண்டு ஒரு சமூகத்தின் நலனுக்கென இயங்குபவனை, அஞ்சலி தேர்வு
செய்தாள். இனி அவன் அடுத்த வேளை சோற்றைப்பற்றி கவலைப்படாமல் சமூக நலனுக்கென எழுத முடியும்.
அல்லாவிட்டால்
பிரபஞ்சம் ஏன் இவர்களுக்கு இத்தனை அறிவைத்தர வேண்டும்? லேசான பழமைவாதம், முற்போக்குச்
சிந்தனை, பகுதியைத் தவிர்த்து முழுமையைத் தரிசிக்கும் திறன், கடின உழைப்பு, படைப்பாற்றல்,
நினைத்ததை அடையும் முயல்வு, அழகியல், பழகுதல், அறமான வாழ்க்கை இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகக்
குத்தகைக்கு எடுத்தது போல் அஞ்சலியிடமும், தியாகுவிடமும் ஏன் கொட்டிக்கிடக்க வேண்டும்?
பிரபஞ்சம் ஏன் இந்த அத்தனையையும் இவர்களுக்கு ஒருங்கே வழங்கிட வேண்டும்?
பூமியில்
எந்த உயிரும் பிரபஞ்சம் தனக்கு அளித்ததை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டே
இயங்குகிறது. அதுவே பிரபஞ்சத்தன்மையுமாகிறது.
அஞ்சலி
– ரவி இணையும், தியாகு-இந்திராணி இணையும் இந்தப் பிரபஞ்சம் அஞ்சலிக்கும், தியாகுவுக்கும்
வரமாய் அளித்த கலையார்வத்தை அர்த்தப்படுத்தவில்லை. அஞ்சலி, அர்விந்துடன் இணைந்திருந்தாலும்,
வினய்யுடன் இணைந்திருந்தாலும் கூட இதுவே நடந்திருக்கும்.
பிரபஞ்சம்
அஞ்சலி, தியாகு இருவருக்கும் அளித்திருந்த கலையார்வம் அர்த்தப்படவேண்டுமானால் அஞ்சலி,
தியாகுவையும், தியாகு அஞ்சலியையுமே தேர்வு செய்திருக்க வேண்டும். அவர்கள் இருவரின்
திருமணங்களில் பூர்த்தியாகாத பிரபஞ்சத்தன்மையை, சூர்யாவின் ஆண்ட்ராய்ட் செயலி பூர்த்திசெய்துவிட்டது.
எப்படி? சரியான இரண்டு மனிதர்களைத் தேர்வு செய்வதன் மூலம், அவ்விரு சந்திக்க வாய்ப்பில்லாதவர்களை,
சந்திக்க வைப்பதன் மூலம்.
அஞ்சலி ரவியை
விவாகரத்து செய்யும் பட்சத்தில், அவனுக்கென பவித்ரா அர்விந்தை விவாகரத்து செய்யும்
பட்சத்தில் ரவி பவித்ரா இணைய முடியும். இன்னும் சொல்லப்போனால், ரவி பவித்ரா இருவரும்
இணைவது தான் சாலப்பொறுத்தமாக இருக்க முடியும்; ஏனெனில், என்னதான் சூழலின் பேரில் ரவி
அஞ்சலியுடனும், பவித்ரா அர்விந்துடனும் இணைந்துவிட்டாலும், அதில் விபத்தாகக் கிடைத்த
சலுகைகளில் இன்புற்று சோம்பிக் கிடந்தாலும் தங்கள் சுய நலத்தின் நிமித்தம் அவர்கள்
அசலாகவே அடுத்தவர்களை ஒட்டுண்ணி போல் சார்ந்திருக்க விரும்பியிருக்கமாட்டார்கள் என்றே
கணிக்கிறேன்.
எல்லாவற்றின்
முடிவிலும், எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசிக்குங்காலும், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்.
சூர்யாவின்
கணித மாதிரியை ரவியோ பவித்ராவோ முழுமையாக உள்வாங்கியிருந்திருப்பின் கூட, அவர்கள் அஞ்சலி
மற்றும் அர்விந்தை, தங்கள் சுய நலனுக்காக, நல்வாழ்வுக்காக மணம் முடித்திருப்பார்கள்.
அத்துடன் நில்லாது, அவர்கள் தங்கள் துணைகளான அர்விந்த், மற்றும் அஞ்சலி இருவரும் சூர்யாவின்
கணித மாதிரியை கண்டடையாதவண்ணம், அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவே முயன்றிருப்பார்கள்
என்பது என் அனுமானமாக இருந்தது.
அதே வேளை,
சூர்யாவின் கணித மாதிரியை அஞ்சலியோ, அர்விந்தோ முழுமையாக உள்வாங்கியிருந்திருப்பின்,
அவர்கள் நிச்சயமாக ரவி மற்றும் பவித்ராவை எக்காரணம் கொண்டும் சேர்ந்திருக்கமாட்டார்கள்.
அஞ்சலி வினய்யை மதித்துப் பேசியிருப்பாள். தியாகுவை முதலிலேயே கண்டுபிடித்திருக்க நினைத்திருப்பாள்.
இதை வைத்து,
சூர்யாவின் கணித மாதிரி யாருக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும், யார் இந்தக் கணித
மாதிரியின் வரவைத் தடுக்கும்/எதிர்க்கும் இடத்தில் இருப்பார்கள் என்று என்னால் ஊகிக்க
முடிந்தது.
இருப்பினும்
இங்கே இன்னுமொன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல விழைகிறேன்.
என்னதான்
சூர்யா ஆண்-பெண் உறவில் உள்ள அத்தனை சாத்தயங்களையும் பார்த்தக் கணத்திலேயே பீராய்ந்திட
ஒரு கணித மாதிரியை உருவாக்கும் அளவுக்கு உழைத்தாலும், என்னதான் சூர்யா போல் ஏனைய சிந்தனாவாதிகள்
தத்தமது பார்வைகளை முன்வைத்தாலும், ஒரு சமூகத்தின் இயக்க ஒழுங்கு, அதன் கடை நிலை பங்களிப்பாளர்களான,
ஆண்-பெண் இருவருக்குமிடையிலான போக்கின் நிமித்தமே பயணித்திருக்கிறது; அடுத்தடுத்த கட்டங்கள்
நகர்ந்திருக்கிறது. எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்பதில் பண்படுதல் இருப்பதாக நான்
நினைக்கவில்லை. பண்படுதலின் உச்ச சாத்தியங்களில்
மட்டுமே ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, மேடு பள்ளங்கள் மறைந்து சமதளம் உருவாகும் என்பதைத்
தீவிரமாக நம்புகிறேன் நான்.
ஆக, ரவி,
பவித்ரா, அஞ்சலி, அர்விந்த ஏன் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தார்கள் என்பதில் தான், ஆண்-பெண்
உறவு நிலைகளுக்கு அவர்கள் மட்டுமே காரணமுமாகிறார்கள் என்றாகிறது. சூர்யாவின் கணித மாதிரி,
இவருக்குப் பொருத்தம் இவர் தான் என்று சொல்லவில்லை. இன்னார் இன்னாருடன் இணைந்தால் இன்னின்ன
சாத்தியங்கள் உருவாகும் என்று மட்டும் தான் சொல்கிறது. இதில் குறை சொல்ல ஒன்றுமில்லை
என்றே தோன்றுகிறது. ஒரு உறவுக்குள் அடியெடுத்து வைக்கும் இருவர், அவ்வுறவின் சாதக,
பாதக அம்சங்களையும் முழுமையாகக் கருத்தில் கொண்ட பின்னரே அடியெடுத்து வைக்கட்டும் என்ற
அவனது சித்தாந்தம் எனக்குப் பிடித்திருக்கிறது.
கேள்வி:
'வாழ்தல்'ந் நிமித்தம் சமன்படுவதை இரண்டாம் பட்சமாக்குவதா அல்லது சமன்படுவதன் மூலம்
'வாழ்தல்' என்பதா என்பதுதான். ஆரோக்கியமுள்ளவன் பிழைக்கும் அதே நேரம் ஊனமுற்றவனும்
பிழைக்க வேண்டும் என்பது சரிதான். ஒப்புக்கொள்கிறேன். கேள்வி, ஆரோக்கியமானவனுக்கு என்னவெல்லாம்
நிகழுமோ அதுவெல்லாம் தனக்கும் நிகழ்ந்திடவேண்டும் என்று ஒரு ஊனமுற்றவர் எதிர்பார்க்கத்துவங்குதல்
சரியா என்பதுதான்? அது சரிதான் எனில் எந்த ஒன்றின் பின்னால் இருக்கும் பிரபஞ்ச அர்த்தங்களுக்கு
நாம் தரும் மரியாதை தான் என்ன என்பது என் கேள்வியாக இருந்தது.
இப்படி அந்த
அட்டவணை, என் சூழலில் சிக்கிய ரவி, பவித்ரா, வினய், அர்விந்த் போன்றவர்களை அவர்களின்
திருமண வாழ்வு சார்ந்த சமூக இடத்தைக் கலைத்துப்பார்த்து அவரவர்களை அவரவர்களின் பிரபஞ்சத்தன்மைகளை
நோக்கிச் செலுத்தியிருந்தது.
அப்படிச்
செலுத்துகையில் என்னை மீட்டுருவாக்கம் செய்கிறது என்பதை உணர்கையில் சிலிர்ப்பாய் இருந்தது.
நியாயமாகப் பார்க்கின், பிரபஞ்ச அர்த்தங்களை நோக்கி மனித உறவுகளைச் செலுத்துவதே காதலுக்கும்,
திருமணங்களுக்கும் அசலான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இக்காலத்தில் அவைகளின்
நோக்கம் பொருண்மை லாபங்களாகவே இருக்கின்றன. அந்தப் பொருண்மை லாபங்களே அஞ்சலி – ரவி,
அர்விந்த் – பவித்ரா போன்ற பொருந்தா திருமணங்களுக்கு அடிப்படைகளாயின.
என் பொருட்டு
விரியும் இழைகளில் பெரும்பாலும் பிரபஞ்சத்தன்மைகள் இருப்பதில்லை என்று நான் சொன்னது
நினைவிருக்கலாம். சூர்யாவின் அட்டவணை, கலைத்துப் போடுவதன் மூலம் என் பொருட்டு விரியும்
இழைகளிலும் பிரபஞ்சத்தன்மைகளை மீட்டெடுத்துத் தக்கவைக்க முயன்றது.
இறுதியில்
கலைத்துப்போடுதல் – இதில் இப்படி ஒரு சூட்சுமம் இருக்குமென்று நான் கனவிலும் கூட நினைத்திடவில்லை.
