Tuesday, 27 November 2012

ராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை

2.12.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'எவ்வகை ரோஜா' என்ற‌ க‌விதை ப‌க்க‌ம் 18 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதை வெளியான ராணி வார இதழின் 18 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


அந்தக் கவிதை இதோ:

அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்...


புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம் வகை
ரோஜாக்களில் இவள்
எந்த ரகம் என்றே...

தனி மரங்கள் - சிறுகதை

தனி மரங்கள் - சிறுகதை


வசந்த், திருமங்கலத்தில் அமைந்திருந்த‌அந்த இரட்டைப் படுக்கையறை வீட்டின் உள் அறையில் அலுவலகத்திற்கு கிளம்பத் தயாராகிக்கொண்டிருக்கையில் பால்கனியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சுந்தரம்பிள்ளை.

ஒரு வ‌கையில் சுந்த‌ர‌ம் பிள்ளைக்கு ம‌ன‌ நிறைவு. அவ‌ர் வெகு நாட்க‌ளாக‌ ஏங்கி எதிர்பார்த்திருந்த‌ ஓய்வு வ‌ந்தேவிட்ட‌து. சுந்த‌ர‌ம் பிள்ளைக்கு ஒரே ம‌க‌ன். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே திரும‌ண‌ம் செய்தாகிவிட்ட‌து. ம‌ண‌முடித்த‌கையோடு வெளி நாட்டிற்கு அலுவ‌ல் விஷ‌ய‌மாக‌ச் சென்ற‌ ம‌க‌னும், ம‌ரும‌க‌ளும் பேர‌ன் ர‌குவுட‌ன் சுந்த‌ர‌ம் பிள்ளை ப‌ணி ஓய்வு பெற்ற‌ வார‌ம்தான் திரும்பி வ‌ந்தார்க‌ள். ஓய்வின் கூடவே மகன், மருமகள், பேரனுடன். இனி நேரங்கழித்து அகால வேளையில் வீட்டுக்கு வரவேண்டாம். காலையில் அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மென பாதி கனவில் எழுந்திருக்க‌வேண்டாம். வேகாத‌ வெயிலில் அலுவ‌ல‌க‌த்துக்கு லோல்ப‌ட‌வேண்டாம். பொய்யாய் யாரையும் முக‌ஸ்துதிக்க‌ வேண்டாம். ம‌ன‌வொற்றுமை இல்லாத‌வ‌ர்க‌ளுட‌னே நாள் முழுவ‌தும் க‌ழிக்கும் நிர்ப்ப‌ந்த‌மில்லை. பிடிக்காத‌ ம‌னித‌ர்க‌ளின் சுக‌துக்க‌ங்க‌ளில் க‌ல‌ந்துகொள்ளும் அவ‌சிய‌மில்லை. மொத்த‌த்தில் த‌ன்னிய‌ல்பில் இருக்க‌லாம். ம‌க‌ன் ச‌ம்பாதிக்கிறான் என்றாலும் பென்ஷ‌ன் வ‌ருகிற‌து. அது போதும். வ‌யோதிக‌த்தை இனிமையாக‌க் க‌ழித்துவிட‌லாம் என்ப‌தில் ஒரு விள‌க்க‌ இய‌லாத‌ சாசுவ‌த‌ம் கிட்டிய‌து சுந்த‌ர‌ம் பிள்ளைக்கு.

பால், செய்தித்தாள்கள், வார இதழ்கள், பேத்தி வசந்தாவுக்கான பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கியாகிவிட்டது. வசந்தின் மனைவி சியாமளா, பேத்தி வசந்தாவைக் குளிக்கவைத்துக் கொண்டிருந்தாள். அதிகாலை ஆறரைக்கு எழுந்ததிலிருந்து பச்சைத்தண்ணீர் பல்லில் படவில்லை. சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய‌ க்ளுக்கோனாம் ஜிஒன் மாத்திரையை உட்கொண்டு அரை மணி கடந்துவிட்டது. வயிறு காந்துவதைத் தெளிவாக உணர முடிந்தது. மெதுவாக எழுந்து சென்று அடுப்பங்கரையில் எட்டிப் பார்த்தார். அடுப்பங்கரையில் மனைவி மங்களம் வசந்திற்கும், மருமகளுக்குமான மதிய உணவைத் தயாரிப்பதில் மும்முரமாயிருந்தாள். மங்களத்தையே பரிவுடன் பார்த்து நின்றார் சுந்தரம். இப்போது பார்த்து அவளிடம் தனக்கென்று டிபன் கேட்டு அவள் வேலைகளை இரட்டிப்பாக்க மனம் இன்றி திரும்பி பால்கனிக்கு நடந்தார் சுந்தரம்.

சுந்தரத்திற்கு மங்களத்தின் மீது பரிதாபமாகத்தான் இருந்தது. அவளைக் கல்யாணம் கட்டிய போது வனப்பாக, செழுமையாகத்தான் இருந்தாள். வயசில் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தாள் மிக்ஸி, கிரைண்டர் இல்லாத அக்காலத்தில் அம்மிக் குழவி கொண்டே மணக்க மணக்க விதம் விதமாய் ஒரு ஊருக்கே சமைத்துப்போடுவாள். அதெல்லாம் இளமைக் காலம். இப்போது அவள் ஐம்பதையும் கடந்து விட்டாள். தனக்கிருக்கும் சோம்பல், தளர்வு, மூட்டு வலி இதெல்லாம் அவளுக்கும் இருக்கும்தானே என்று தோன்றியது அவருக்கு. அவள் மேல் பரிதாப உணர்வு மேலிட்டது. அவளானால், அவசர அவசரமாக மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தாள். அவளும் தன்னைப்போல், தன் வலிகளைப் பிறருக்காக தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வது போல் எதையும் வெளியில் சொல்வதில்லை என்பதில் ஒரு ஒன்றுதல் அவருக்கிருந்தது. .

வயோதிகம், ஓய்வெடுக்க வேண்டிய பிராயம். ஆனாலும், வயோதிகத்திலும் உழைக்க வேண்டியிருக்கிறது. அதில் பல்வேறு சங்கடங்கள், நிர்ப்பந்தங்கள். இக்காலத்தில் வீட்டில் வயோதிகர்கள் இரண்டாம் பட்சம்தானே. பொருள், வருமானம் அவர்களால் வருவதில்லையே. வீட்டை செழிப்பூட்டத் தேவையான பொருள் எங்கிருந்து வருகிறதோ, அதை ஏனையவை தாங்கிப் பிடிக்கவேண்டும். அப்போதுதான் வீடு நிலைக்கும். கடமை என்ற ஒன்று எல்லோருக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்ற ஒன்று எல்லோருக்கும் இருக்க வேண்டியது. வயோதிகத்தில் ஓய்வை எதிர்பார்ப்பது பெற்றோர் உரிமை அல்லவா?. தன் வேலைகளைத் தானே செய்துகொள்வது தனி மனித ஒழுக்கம் அல்லவா?. எதிர்ப்பேதும் காட்டவில்லையெனில் எதை வேண்டுமானாலும் திணித்துவிடுதல் சர்வாதிகார மனப்போக்கு அல்லவா?. கெட்டித்த சுயநலம் அல்லவா?. அது ஏமாற்றுவேலை அல்லவா?. ஆதிக்கம் செலுத்துதல் அல்லவா?. ஓய்வு கேட்டால்தான், கொடுக்கப்பட வேண்டுமா? ஓய்வு வயோதிகத்தின் உரிமை. அது தானாக முன்வந்து அளிக்கப்பட வேண்டும்.

மகனும், மருமகளும் இப்போது அலுவலகத்திற்கு தயாராகிவிட்டிருந்தனர். வயிறு முன்பை விட அதிகமாக காந்தத் துவங்கியிருந்தது. வசந்த் காலை ஏழரைக்கு எழுந்திருக்கிறான். எழுந்தவுடன் செய்தித்தாள் கேட்பான். அவன் எழுமுன்பே அவர் வெளியில் சென்று வாங்கிவந்துவிட்டால் அவனுக்கு உதவியாக இருக்கும். அவ்வாறு வெளியே செல்கையில் காலை சிற்றுண்டியை சுந்தரம் முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால் சிற்றுண்டி எடுத்துக்கொள்வதற்கு அரைமணி முன்னதாகவே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தனை சீக்கிரத்தில் மாத்திரை போட்டுக்கொள்வது கூடாது. எட்டரைக்குப் போட்டுக்கொண்டால் ஒன்பது மணிக்கு டிபன். அது செரித்து மதிய உணவுக்குப் பசியெடுக்க மணி நண்பகல் ஒன்றாகிவிடும். இதையே தினமும் பழக்கினால் வயோதிகம் சுலபப்படும். கண்ட நேரத்திலும் சாப்பிட அல்சரும் சேர்ந்து ஒட்டிக்கொள்ளலாம். அல்சரும் சேர்ந்துவிட்டால் வேறுவினையே வேண்டாம். ஏற்கனவே உப்பு சப்பில்லாத உணவுதான்.

"அப்பா" வசந்த் அருகாமையில் வந்திருந்தான்.

"ம்..சொல்லுப்பா"

"இது.. நேத்து கரண்ட் பில் கட்ட முடியலப்பா. இன்டர்னெட் டவுன்."

"அய்யோ, இன்னிக்கு கடைசி நாள்ப்பா!"

"அப்படியா!!..இன்னும் கட்டலையேப்பா.. இப்போ உட்கார்ந்தா இன்னும் லேட் ஆகிவிடும்ப்பா"

சுந்தரத்திற்கு விஷயம் புரிந்துவிட்டது.

"சரிப்பா, நான் ஈ.பி. ஆபீஸ்லயே போய் கட்டிடறேன்ப்பா"

"இல்லப்பா, நான் ஆபீஸ்லேர்ந்து வேணும்னா கட்டிடறேன்ப்பா"

"வேணாம்ப்பா, நானே கட்டிடறேன்ப்பா. நீ ஆபீஸ் வேலையைப் பாரு. அதான் முக்கியம்." என்றார் சுந்தரம் மெல்லியதாய் சிரித்தபடி.

வேறென்ன சொல்லமுடியும். ஆபீஸ் போய் கட்டிவிடுகிறேன் என்னும் வாக்குறுதிகளெல்லாம் சும்மாதான். உண்மையில், வசந்த் உதவிதான் எதிர்பார்க்கிறான். சென்ற ஞாயிற்றுக்கிழமையே நினைவூட்டியது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் ஓய்வு என்றுவிட்டு வசந்தும், அவன் மனைவியும் வெளியில் போய்விட்டார்கள். கணினி மூலம் செலுத்த அரை மணி நேரம்கூட ஆகாது. ஆனாலும் அவர்கள் இருவருக்கும் அந்த அரை மணி கூட இழக்க விருப்பமில்லை அல்லது அது அவர்களுக்கு அத்தனை முக்கியமில்லை. அதெல்லாம் வீட்டிலேயே இருப்பவர்களின் தலைவலி என்று நினைக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டார் சுந்தரம். எதுவும் அவரவர்களுக்கே தோன்றுவதுதான் எல்லோருக்கும் ஆரோக்யம். இல்லையேல் நோய்தான். ஒரு அதிகப்படியான வார்த்தை கூட‌ யாரையேனும் குற்றவாளியாக்கிவிடலாம். யாருடைய தன்மானத்தையேனும் பதம் பார்க்கலாம். இக்காலத்தில் வார்த்தைகளைவிடவும் கூர்மையான ஆயுதம் வேறொன்றுமில்லை. அது மனத்தைக் காயப்படுத்தும். மனத்தில் காயம் சாதாரணமாக ஆறாது.

அந்த இழவெடுத்த கணினியை இயக்கத் தெரிந்திருந்தால் மகனை அண்டியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் இயக்கங்களை, ஞாபக மறதி மிகுந்த இந்த வயோதிக வயதில் கற்றுக்கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டியும் வசந்த் புரிந்துகொள்வதாயில்லை. சுந்தரம் எத்தனை முயன்றும் அது வரவில்லை. ஒரு நாள் கரண்ட் இல்லை. ஒரு நாள், திடீரென்று சிவப்பு நிறத்தில் அபாய தந்தி அடித்துவிட்டு அணைந்துவிட்டது. விலை அதிகமுள்ள பொருள். ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிட்டால், வயோதிக வயதில் மகனுக்கு செலவு வைத்துவிடுவோமோ என்ற பயம் ஒரு பக்கமும், அது நாள் வரையில் ஆளுமை காட்டி வளர்த்த மகனிடம், இயலாமை வெளிப்பட்டு, தன்மானம் பாதிக்கும் வகைக்கு ஆகிவிடுமோ என்ற பயமும் எந்த தகப்பனுடைய தன்னம்பிக்கையையும் வயோதிகத்தில் வெகுவாகத் தகர்த்துவிடுகிறது. எந்த தந்தைக்கும் மகனிடம், அறியாமையை வெளிப்படுத்திக்கொள்வது அத்தனை சுலபமில்லை. இந்திய தந்தை-மகன் உறவு அத்தனை சிக்கலானது.

மருமகள் சியாமளா அலுவலகத்திற்குச் சென்றதும் உலகமே அற்றுவிடும் பேரனுக்கு. வீறிட்டு அழுவான். மங்களம் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு பால்கனியில் நின்றபடி வேடிக்கை காட்டவேண்டும். சோறூட்டவேண்டும். மங்களத்திற்கு மூன்று வருடத்திற்கு முன்பு முதுகுத்தண்டுவடத்தில் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது. அவளால் தொடர்ந்து ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்திருக்க இயலாது. அத்தனை பாரத்தை அவளின் முதுகு வெகு நேரம் தாங்காது. சுந்தரம் இதில் அவ்வப்போது மங்களத்திற்கு உதவுவார். இன்று அதற்கும் சாத்தியமில்லாது போய்விடும் போலிருந்தது. மின்சார வாரிய அலுவலகத்தில் பில் கட்டும் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டால் மனைவி மங்களத்திடமிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் கொஞ்சம் பங்கெடுத்துக்கொள்ளலாம். மங்களம் கொஞ்ச‌மேனும் மூச்சுவிட அது உதவுமென்று தோன்றியது. மின்சார வாரிய அலுவலகம் எப்போதும் நிரம்பி வழியும். வரிசையில் நிற்க வேண்டும். தன் முறை வரக் காத்திருக்கவேண்டும். சுந்தரம், ஹாங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டார். தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்த மின்சார அட்டவணையை எடுத்துக்கொண்டு செருப்பணிந்து, மங்களத்திடம் சொல்லிவிட்டு மின்சார வாரிய அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினார். மின்சார வாரிய அலுவலகம் அண்ணா நகரில் இருந்தது.

பொட்டை வெயில் சுல்லெனச் சுட்டது. கொஞ்ச நேரம் ஒரே இடத்தில் நின்றால் சருமத்தைப் பொசுக்கிவிடும் போலிருந்தது. பசியில் லேசாக தலைசுற்றுவது போலிருந்தது. சர்க்கரை இருப்பதால் இனிப்பாக எதையும் சாப்பிட இயலாது. ஆனால் எல்லா கடைகளிலும் இனிப்பு தான் பிரதானப்படும். காரம் சாப்பிட்டால் தாகமெடுக்கும். வெறும் வயிறு கெடும். போகிற வழி பொட்டிக் கடையில் பன் ஒன்று வாங்கிப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஒரு தண்ணீர் பொட்டலம் வாங்கிக் கடித்து உறிஞ்சிக் கொண்டார். பன் நீரில் நனைந்து உணவுக்குழல் வழியே வயிற்றில் இறங்கி அரிக்க காத்திருந்த அமிலங்களை ஊமையாக்குவதை உணர முடிந்தது.

அவர் வாழ்க்கையில், எந்தத் தருணத்திலும் இது போல் முன்பு எப்போதும் இருந்ததில்லை. எந்த சூழ் நிலையிலும் பன் சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொள்ளும் நிலை வந்ததில்லை. ஆபீஸில் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும் வேலை பார்க்க நேர்கையில்கூட பணியாளர்கள் இருப்பார்கள். இன்னது வாங்கி வரச்சொல்லிவிட்டால் வாங்கி கொணர்ந்துவிடுவார்கள். சிலவேளைகளில் அலுவலகமே பார்த்துக்கொள்ளும். உடல் நலக்குறைவெனில், விடுமுறையை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்போது பன் சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொள்ளும் நிலை. வெளியாட்களிடம் சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய சலுகைகள், கவனிப்புகள், அக்கறைகள் பல சமயங்களில் வீட்டுக்குள் கிடைப்பதில்லை.

மின்சார வாரிய அலுவலகத்தில் கூட்டம் அதிகமிருந்தது. ஓடிப்போய் சற்று கம்மியாக இருந்த ஒரு வரிசையில் நின்றுகொண்டார். பசி இப்போது அத்தனை வீரியமாக இல்லை. ஆனால், சத்தாக உடலுக்குள் ஏதும் செல்லவில்லை. தற்காலிக நொண்டிச் சமாதானமே தரப்பட்டிருக்கிறது. சாலையில் நடந்து வரும்போது உடலில் பட்ட வெய்யிலின் வெப்பத்தை இன்னமும் துல்லியமாக உணர முடிந்தது அவரால். வேர்த்துக் கொட்டியது. சட்டை வியர்வையில் நனைந்து லேசாக வியர்வை நாற்றமெடுத்தது. இன்னமும் குளிக்கவில்லை என்பது சுந்தரத்திற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. சிறுமைப்பட்டது போல் உணர வைத்தது. குற்ற உணர்வு மேலோங்கியது. எத்தனை முயன்றும் இந்த குற்ற உணர்வைத் தள்ளி வைத்துப்பார்க்க அவரால் இயலவில்லை.

கவுன்டரில் இருந்த பெண்மணியின், பக்கத்து கவுன்டர் பெண்ணுடனான அரட்டையில் அரை மணி நேரத்துக்கு இத்தனை இன்ச் என மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வரிசையோடு, உபரியாக அவ்விரு பெண்களின் குடும்ப விவரங்களும் மீன் மார்க்கெட் இரைச்சல் போல கேட்டது, எரிச்சலூட்டியது. வரிசையில் நிற்கத்துவங்கி நேரமாகிக்கொண்டே போனதில் மூட்டிலும், குதி கால்களிலும் வலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால், கவுன்டர் பெண்கள் நிறுத்தின பாடில்லை. இங்கே எதுவும் யாருக்காகவும் நிற்பதில்லை. சுந்தரத்திற்குத் தெரியும், இது இப்படித்தான் என்பது. சுமூகமாக காரியம் முடிய வேண்டுமெனில் நாம்தான் பொறுத்துப்போக வேண்டியிருக்கிறது. இங்கே கத்தினால், சாதாரண தடங்கல்கள் ஊதிப் பெரிதாக்கப்படும். காரியத்தைக் கெடுக்க எல்லோராலும் முடிகிறது. காரியத்தை முடிக்க வேண்டியிருப்பவருக்குத்தான் பொறுமையும், நிதானமும்.

சுந்தரம் முறை வந்தபோதும் கவுன்டர் பெண்மணி தன்னிச்சையாக அவரின் பில்லை அசாதாரணமாக எந்தவித சரிபார்த்தலும் இன்றி பணத்தை வாங்கிக்கொண்டு பில் போட்டு ரசீது கொடுத்தாள். சுந்தரம் ரசீது வாங்கிய கையோடு, அறை ஓரமாக்க் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு எழுகையில், சட்டென வலது குதி காலில் அசாதாரணமாக மடிந்து உயிர் போகும் வலி வலிக்க, ஒரு நிமிடம் தடுமாறி, விழப்போனவர், அருகாமையிலிருந்த எவரோ தாங்கிப் பிடித்து உதவ, சுதாரித்து நின்றார்.

ஆனால் குதிகாலை அதற்கு மேல் அசைக்க முடியவில்லை. விண் விண்ணென்று தெறித்தது. எதுவோ விபரீதமாக உள்ளுக்குள் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது.

"சார், ரொம்ப வலிச்சதுன்னா பக்கத்துலதான் சார் க்ளினிக். ஆர்த்தோதான். உடனே ஊசி ஒண்ணு போட்டுடுங்க. இல்லேன்னா ரொம்ப கஷ்டமாயிடும்" என்றார் தாங்கிப் பிடித்தவர்.

சுந்தரத்திற்கு அது சரியென்று பட்டது. பேரனைத் தூக்கிக்கொண்டே திரிய வேண்டும். இல்லையென்றால் அழுவான். கால் சரியாக இருந்தால்தான் தூக்கிக் கொண்டே திரிய முடியும். இல்லையெனில் தேவையில்லாமல், வீணாக மங்களத்திற்குத்தான் வேலைப்பளு அதிகமாகும் என்று தோன்றியது.

ஆனால், தாங்கிப் பிடித்தவர் சொன்ன க்ளினிக் மருத்துவரை அண்ட சுந்தரம் பிள்ளைக்கு தயக்கம் இருக்கவே செய்தது. முன்பு மங்களத்திற்கு தொடைகளில் வலியெடுத்தபோது, அவசரத்திற்கு அருகாமையிலிருந்த ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர் சுந்தரமும், மங்களமும். வசந்த் கோபித்து சத்தம் போட்டான். அவன் அலுவலகம் அவனுக்கென்று மருத்துவ காப்பீடு மெடிக்ளெய்மில் செய்திருக்கிறது. அது செல்லுபடி ஆகும் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனை வரவில்லை. இருபத்திதைந்தாயிரத்துக்கும் அதிகமான பில் தொகையை ரீஇம்பர்ஸ் செய்ய படாதபாடு பட்டுவிட்டதாய் சத்தம் போட்டிருந்தான் வசந்த். ஆகையால் தாங்கிப் பிடித்தவர் சொன்ன க்ளினிக் அந்த பட்டியலில் வருகிறதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் வசந்தை அலைபேசியில் அழைத்தார் சுந்தரம்.

கேட்டதில் இல்லையென்றான் வசந்த். அண்ணா நகரில் இருந்த சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனுக்கு செல்லச் சொன்னான் அலைபேசி மூலமாகவே. நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாகிக்கொண்டே இருப்பதை உணர்ந்தார் சுந்தரம் . வெயிலின் உக்கிரம் வேறு நேரமாக ஆக கூடிக்கொண்டே போனதில், வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. உடுத்தியிருந்த சட்டை முழுவதும் நனைந்து கசகசவென்றிருந்தது. எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு ஷவரில் நின்று குளிக்க மாட்டோமா என்றிருந்தது.

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து சுந்தரம் ஃபவுண்டேஷன் சென்றால் அங்கு ஆர்த்தோ மருத்துவர் அன்று வரவில்லையென்றார்கள். வசந்த் தொடர்ந்து சுந்தரத்தை அழைத்து, சற்று தள்ளியிருந்த செளந்தரபாண்டியன் ஆர்த்தோ மருத்துவமனைக்கு போகச் சொன்னதில், சுந்தரத்திற்கு ஆட்டோ கிடைக்கவில்லை. அவசரத்திற்கு ஷேர் ஆட்டோ ஏறினதில், நெரிசலில் சிலர் காலை மிதித்ததில் வலி உயிர் போனது. செளந்தரபாண்டியனில் பெரிய வரிசை நின்றது. மருத்துவமனை நெடியையும் தாண்டி, சுந்தரத்தின் வியர்வை நெடி பரவ எல்லோரும் முகம் சுளிப்பதை உணர்ந்து சிறுமையாக உணர்ந்தார் சுந்தரம். போதாததற்கு, மின்சார வினியோகம் தடைபட்டிருந்தது. எக்ஸ்-ரே எடுக்க முடியாதென்றனர். போரூர் மியாட் மருத்துவமனை ஆர்த்தோவில் பிரபலம் என்று யாரோ சொன்னார். வசந்த் மீண்டும் அழைத்தான். அலைபேசியிலேயே சலித்தான். இந்த முறை சேத்துப்பட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்குப் போகச் சொன்னான். பொட்டை வெயிலில் நாயாய் அலைந்திருந்தார். இன்னமும் விடிவு இல்லை. தொப்பறையாய் நனைந்த உடைகள், வியர்வை நாற்றம், பாக்கெட்டில் பிசுபிசுக்கும் மின்சார வாரிய ரசீது, விண் விண்னென்று தெரிக்கும் வலி, காலையில் அரைகுறையாய் வயிற்றை நிரப்பித் தோற்ற பன் என எல்லாமுமாகச் சேர்ந்து அலைக்கழிந்தார் சுந்தரம். சுந்தரத்திற்கு சீ என்றாகிவிட்டது. இத்தனை அலைச்சலும் இந்த இழவெடுத்த காசை மிச்சம் பிடிப்பதற்காய்தானே என்று அலுத்துக்கொண்டார்..

இனியும் தொடர்ந்து அலையத் தெம்பின்றி துவண்டார். இனி மகனை அண்டியிராமல், எத்தனை செலவானாலும் தன் சொந்த பென்ஷன் பணத்திலேயே செய்துவிடுவது என்று முடிவெடுத்தார். தாங்கித் தாங்கி நடந்து வெளியே வந்து அருகாமையிலிருந்த ஆர்த்தோ மருத்துவரை சந்தித்ததில், ஏதோ லிகமென்ட் கிழிந்திருப்பதாக எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு சொன்னார். கட்டு போட்டு, மருந்தெழுதி, ஊசி போட்டுவிட்டார். குறைந்தது ஆறு வாரங்களுக்காகவாவது முடிந்தவரை கால்களைத் தொங்க போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் மருத்துவர். செலவு இரண்டாயிரம் ரூபாயாகியிருந்தது. ஆட்டோ ஏறி அவசரமாக வீடு வந்தார் சுந்தரம். மங்களம் பேரனுக்கு சோறூட்டிக் களைத்திருந்தாள்.

சுந்தரத்தைப் பார்த்ததும் மங்களத்தின் முகத்தில் நிம்மதியின் ரேகைகளைத் தெளிவாக உணர முடிந்தது. சற்று தாமதமாகியிருப்பினும், சரியான நேரத்துக்கு மங்களத்திற்கு உதவியாய் வந்துவிட்டதில் சுந்தரத்திற்கு நிம்மதியாய் இருந்தது. வலது காலில் கட்டைப் பார்த்துவிட்டு அலறிய மங்களத்தை சமாதானப்படுத்தியவாறே பேரனை வாங்கிக்கொண்டார் சுந்தரம்.

திருமணம் என்பது மூன்று முக்கிய காரணங்களுக்காய் நிகழ்வது. முறைப்படுத்தப்பட்ட காமம், பிள்ளைப்பேறு , வயோதிக வயதில் துணையிருத்தல். வயோதிக வயதில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உதவிகள் செய்து, துக்கங்கள் பகிர்ந்து, கஷ்ட நஷ்டங்களுக்கு துணை நின்று வாழ வேண்டும். மங்களம், கணவனின் அக்கறையைப் பூரணமாய் உணர்ந்தாள். அது அவள் அடைந்த களைப்பை இழக்க வைத்தது. கணவனின் கஷ்டத்தில் துணை நிற்க ஊக்கம் தந்தது. கணவனுக்குப் பக்க பலம் சேர்க்கத் தூண்டியது.

காலையிலிருந்து பொட்டை வெயிலில் அலைவது சுந்தரத்திற்கு ஒன்றும் புதியதில்லை. இளம் வயதில் எத்தனையோ அலைந்திருக்கிறார். கால் கடுக்க நின்றிருக்கிறார். அப்போதிருந்த பலம் முதிய வயதில், பென்ஷன் வாங்கும் வயதில் இல்லை. தளர்ந்திருந்தார். உண்ட களைப்பில் உறக்கம் கொண்டார். மங்களம் கணவனின் கால்மாட்டிலேயே அமர்ந்துகொண்டாள். மாலை மங்கி இரவு பூக்கத் துவங்கியது.

வசந்தனும், அவன் மனைவியும் வீட்டிற்குள் அடைந்தார்கள். சுந்தரமும், மங்களமும் அந்த நேரம் எழுந்திருந்தார்கள். பேரன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

"என்னப்பா ஆச்சு!" உடைமாற்றிக்கொண்டே கேட்டான் வசந்த்.

"ஒண்ணுமில்லையப்பா. ஈ.பி. பில் கட்டிட்டு வெளில வந்தப்போ கால் தடுக்கிடிச்சு. அவ்ளோதான்"

"டாக்டரைப் பாத்தீங்களா என்ன?"

"பாத்தேம்பா. அப்போலோவில பார்க்கலை. அண்ணா நகரிலேயே பார்த்திட்டேன்பா. எக்ஸ்ரே, மாத்திரை, இன்ஜெக்சன் எல்லாம் எடுத்தாச்சு. லிக‌மென்ட் ஏதோ கிழிஞ்சிருக்காம். ஓய்வெடுக்க‌ச் சொன்னாருப்பா. அங்க‌யே ம‌ருந்து மாத்திரை எக்ஸ்ரே எல்லாம் வாங்கிட்டேன்ப்பா".

"அய்யோ! என்ன‌ப்பா நீங்க! அப்பல்லோவிலேயே பார்த்திருக்கலாம்ல. பக்கம்தானே. மருந்து மாத்திரை கூட‌தெருக்கோடி முருகன் மெடிக்கல்ஸ்ல தேதி போடாம‌வாங்கியிருக்க‌லாம்ல‌. இந்த‌மாச‌த்துக்கு மெடிக்க‌ல் பில் வாங்கியாச்சு. அடுத்த‌மாச‌த்துக்கு ரீஇம்ப‌ர்ஸ் ப‌ண்ற‌துக்கு இத‌உப‌யோக‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம்... ச்சு" என்ற‌வாறே ச‌லித்தான் வ‌ச‌ந்த்.

சுந்த‌ர‌த்தின் கால் மாட்டில் அம‌ர்ந்திருந்த மங்களம் ஏதும் பேசாமல், மெளனமாய் மெதுவாக‌எழுந்து ச‌மைய‌ல‌றைக்குள் அடைந்துகொண்டாள். இனி பேச ஒன்றுமில்லை என்ப‌தாய் க‌ண்க‌ளை மூடி ஒருக்க‌ளித்துப் ப‌டுத்துக்கொண்டார் சுந்தரம். பென்ஷனென்று மாதம் கொஞ்சம் வருமானம் வரும் தனக்கே இந்த நிலையெனில் மங்களத்தின் நிலைப்பாட்டை நினைத்துப்பார்க்கையில் சுந்தரத்திற்கு அடிவயிற்றைச் சுழற்றியது. தனக்குப் பின்னான மங்களத்தின் வாழ்க்கையை நினைத்துப் பரிதாபம் கொள்ள வைத்தது. விடிந்ததும் நாளிதழ்களை நோண்டி, எங்காவது டியூஷன் சென்டர்களிலோ அல்லது சின்னச் சின்ன அலுவலகங்களிலோ குமாஸ்தா வேலையிலேனும் மங்களத்திற்காகவே சேர வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6103)

Monday, 19 November 2012

பழிக்குப்பழி - சிறுகதை


பழிக்குப்பழி - சிறுகதை

சுள்ளென்று அடிக்கும் வெய்லில், எங்கும் நிறைந்திருந்த பொட்டல் காட்டு மணலில் அவ்வப்போது லேசாக சுற்றிச்சுழலும் புழுதியில், நெற்றி வியர்வை இடது காதுக்கும் புருவத்துக்கும் இடையில் மெல்ல வழிவதைத் துடைக்கும் எண்ணம் அறவே இன்றி, நிலைகுத்தி வெறித்த பார்வையுடன் நான்காவது சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக்கொண்டிருந்தான் சுதாகர்.

'அந்த மனோகரைப் பழிவாங்க வேண்டும். எத்தனை பெரிய துரோகி அவன். அவனுக்காக என்னவெல்லாம் செய்திருப்பேன். கடைசியில், என்னையே காட்டிக்கொடுத்துவிட்டானே. 8 வருடங்கள் ஜெயிலில் கம்பி எண்ண வைத்துவிட்டானே. பணம், சொகுசு வாழ்க்கை, வேளா வேளைக்கு ருசியான சாப்பாடு எல்லாம் போச்சு. அவனை நிச்சயம் பழிவாங்கியே ஆகவேண்டும் சுதாகர் ஆத்திரத்துக்கு சிகரெட் துண்டுகள் தற்காலிகமாய் பலியாயின.

சுதாகர், மனோகர் இருவரும் கிரிமினல்கள். திருட்டு, கொலை, கொள்ளை, கை எடுப்பது, கால் எடுப்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். இன்னது செய்ய இத்தனை ரேட் என்று பேசிவிட்டால் போதும். பணம் முழுதும் கைமாறியதும் சொன்னதைச் சொன்னபடி செய்துவிடுவார்கள். கான்ட்ராக்ட் கில்லர்களாக இருப்பதில் பெருமை வேறு இவர்களுக்கு. ஒரு காலத்தில் இருவரும் இணைந்துதான் தொழில் செய்தனர். ஒரு சேட்டைக் கொலை செய்யப்போன இடத்தில், சுருட்டிய பணத்தில் பங்கு பிரிப்பதில் சாதாரணமாக எழுந்த வாக்குவாதம், யார் பெரியவன் என்ற ரீதியில் திரும்பி, இருவர் நட்பையும் கொன்று போட்டதில் பிரிந்தவர்கள். அதன் பிறகு, மனோகர் வேறு ஒரு கும்பலுடன் இணைந்து தொழில் செய்யத் தொடங்கினான். சுதாகர் தனியே தொழிலைத் தொடர்ந்தான். சில காலம் பிரச்சினையின்றிதான் கழிந்தது.

மனோகர் புதிதாய் சேர்ந்திருந்த கும்பல் சற்றே அரசியல் செல்வாக்கானது. மூடிவிட்ட கொலை கேஸ் ஒன்றை போலீஸ் திருப்பி எடுக்க, அதில் சுதாகரும், மனோகரும் சம்பந்தப்பட்டிருக்க , மனோகர் தான் தப்பிப்பதற்காக, அதில் சுதாகரை மாட்டி விட்டுவிட்டான். மனோகரிடம் அரசியல் செல்வாக்கு இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சுதாகர், அந்த ஒரு கொலைக்காக 8 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்ததில் வந்த க்ரோதம் இது.


அவனை சும்மா விடக்கூடாது. பழிக்குப் பழிவாங்க வேண்டும். 8 வருடங்கள் ஜெயிலில் கல்லுடைத்திருந்தாலும், இரத்தத்தில் இறங்கியிருந்த கிரிமினல் புத்தி, பாய முனையும் ஈட்டி போல கூராக இருந்தது. தீர்மானமாய், வெகு நேரம் யோசித்தான். மனோகர் சாக வேண்டும். அவன் சாவில்தான், தான் இத்தனை காலம் ஜெயிலில் கல்லுடைத்த வலி போகும். என்னை மாட்டிவிட்டு அவன் ஜெயித்துவிட்டதாக நினைக்கிறான். அவனைக் கொல்ல வேண்டும். அவன் உயிர் பிரியும் நேரம் அவன் கண்முன் தான் கர்ஜிக்கவேண்டும். 8 வருடம் தன் தூக்கம்காணா இரவுகளின் முடிவை அவன் கண்களில் பார்க்க வேண்டும். சுதாகர் உக்கிரமாய் கழுவிக்கொண்டான்.

எப்படிக் கொல்லலாம் என்று யோசிக்கையில் நகரத்தின் மத்தியில் அமைந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் நினைவுக்கு வந்ததில் அவனின் அந்நேரம் வரை சுருங்கிய நெற்றி, சற்றே தளர்ந்து இயல்பானது. உடனேயே பஸ் ஏறி அந்த ஹோட்டலை அடைந்தான். நேராக ஹோட்டலுக்குள் செல்லாமல், பக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து படியேறி நான்காம் தளம் வந்தான். அந்த ஹோட்டல் தெளிவாகத் தெரிந்தது.

பற்ற வைத்து இரண்டு சிகரெட்டுகள் முடிக்கும் முன் ப்ளான் ரெடி.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே அறை எடுத்துத் தங்க முடியுமென்கிற அளவிற்கு உயர்தர ஹோட்டல். சில சமயங்களில், தானும் மனோகரும் இணைந்து தொழில் செய்த காலத்தில் சில தொழிலதிபர்கள், இது போன்ற ஹோட்டல்களில் வந்து தங்கித்தான் தங்கள் வேலைக்கு அசைன்மென்ட் கொடுப்பார்கள். தாங்கள் இங்கு வந்து தங்கியதை மறைக்க, வேறு பெயரிலேயே தங்குவார்கள். ஹோட்டல் பில்லும் க்ரெடிட் கார்டுகள் மூலமாகச் செலுத்தப்படாமல், பணமாகவே செலுத்தி வேலை முடிந்ததும் போய் விடுவார்கள். சுதாகர், மனோகருக்குமான கான்ட்ராக்ட் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும். சுதாகரோ, மனோகரோ ஏமாற்ற நினைத்தால், அவர்களை விட பெரிய ஆட்களை வைத்து, இவர்களையும் க்ளோஸ் செய்துவிடுவார்கள் என்பதால் வேலை தொழில் பக்தியுடன் நடக்கும். சுதாகரையோ, மனோகரையோ நேரடியாக நெருங்க முடியாது. இதற்கென ரகசிய ஏஜன்ட்கள் இருப்பார்கள். அவர்கள் தான் கோர்த்துவிடுவார்கள். இது ஒரு நெட்வொர்க்.

மூன்று நாட்கள் அந்த ஹோட்டலை இப்படி இந்தக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் நின்று வேவு பார்த்ததில் ப்ளான் கச்சிதமாக ரெடி. இந்த நிமிடம் வரை, தான் அந்த ஹோட்டலின் உள் நுழையவில்லை. அதனால், கண்காணிப்பு காமிரா கண்களுக்குத்தான் எவ்வகையிலும் பரிச்சயமில்லை. மூன்றாவது மாடியில், லிஃப்டிற்கு பக்கத்தில் உள்ள அறையில் ஒருவன் தங்கி இருக்கிறான். வட நாட்டுக்காரன் போல இருந்தான். காலை 10 மணிக்கு வெளியே சென்றுவிட்டு மாலை 5 மணி சுமாருக்குத்தான் திரும்புகிறான். ப்ளான் இதுதான்.

மனோகரை, ஒரு கான்ட்ராக்ட் கொலைக்கான அசைன்மெண்ட் என்று சொல்லி ஹோட்டல் ரூமிற்கு அழைக்க வேண்டும். அதற்கு இந்த வட நாட்டுக்காரன் ரூமைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கள்ளச்சாவி போட்டு எந்த லாக்கையும் திறக்கத் தெரியும். அடுத்தவன் பெயரில் ரூம் இருப்பதால் என்ன நடந்தாலும் பழி அந்த வட நாட்டுக்காரன் பேரில்தான் விழும். தான் தப்பித்துக்கொள்ளலாம். மனோகர் ரூமிற்குள் வந்ததும் தயாராய் வைத்திருக்கும் கத்தியை அவன் குரல்வளையில் இறக்க வேண்டும். கத்த முயன்றும் முடியாமல் அடங்கிப்போவான் மனோகர். ஹோட்டலை விட்டு வெளியேறுகையில் காமிரா கண்களில் படாமல் ரூமின் ஜன்னல் வழியே, தண்ணீர் பைப் குழாய்களைப் பிடித்து இறங்கி வெளியேறிவிட வேண்டும். தயாராய் வாங்கி வைத்திருக்கும் மும்பை ரயில் டிக்கட்டில் இரவோடு இரவாக மும்பை போய் விட வேண்டும். அங்கு எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம். ப்ளான் ரெடி. இனி செயல்தான்.

சுதாகர் மறு நாளே நாள் குறித்தான்.

அன்றிர‌வே ம‌னோக‌ரைக் குறி வைத்து கான்ட்ராக்ட் கில்ல‌ர்க‌ளின் ஏஜன்டாக‌செய‌ல்ப‌டும் வேதாச‌ல‌ம் மூல‌மாக‌, த‌க‌வ‌ல் கொடுத்தான். 8 வ‌ருட‌இடைவெளியில் வேதாச‌ல‌ம் சுதாக‌ரின் குர‌லை ம‌ற‌ந்துபோயிருந்த‌தால் வேலை சுல‌ப‌மாயிற்று. 1 ம‌ணி நேர‌ம் க‌ழித்து சுதாக‌ரைத் தொட‌ர்பு கொண்ட‌ம‌னோக‌ரிட‌ம், ம‌று நாள் காலை 11 ம‌ணி அள‌வில், ஹோட்ட‌ல் மாஸ்க்கில் மூன்றாம் தளத்தில் லிஃப்டை ஒட்டிய‌ரூமில் வ‌ந்து ச‌ந்திக்கும்ப‌டி த‌ந்தியாய் சொல்லிவிட்டு போனை வைத்தான். வ‌ழ‌க்கமாக‌அசைன்மெண்ட் த‌ருப‌வ‌ர்க‌ள் போனில் அதிக‌ம் பேச‌மாட்ட‌ர் என்ப‌து ம‌னோக‌ர் அறிந்த‌துதான்.

மறு நாள், மனோகரை எதிர்பார்த்து கூர் தீட்டிய கத்தியை ஒரு சூட்கேசில் மறைத்து வைத்து, 10:45 மணி அளவில் அந்த ஹோட்டலை அடைந்தான். முன் வாசலில் நடமாட்டம் அதிகம் இருப்பதை உணர்ந்து, பின் வாசலில் கார் பார்க்கிங் ஏரியா வழியாக உள்ளே வந்தான்.

மழமழவென உயர்ரக டைல்ஸ் பதிக்கப்பட்ட மாடிப்படி தெரிந்தது. பக்கத்து குடியிருப்பில் நின்று பார்த்தபோது, லிஃப்ட் அருகில் இதே போன்ற டைல்ஸ்... பதிக்கப்பட்ட மாடிப்படிகளை போட்டோ எடுத்திருந்தான். அதனோடு ஒப்பிட்டதில் இதுதான் அது என்று தெளிவாயிற்று.

'மூன்றாவது தளத்திற்குத்தான் வர சொல்லி இருந்தோம். லிஃப்டில் செல்ல வேண்டாம். லிஃப்ட் ஆபரேட்டர் கண்களில் பட்டால் தேவையற்ற எவிடன்ஸ் ஆகிவிடும். ஆதலால், படிகளினூடே செல்வதே உசிதம். சுதாகர் மூளை நிதானமாக அதே நேரம் கனகச்சிதமாக வேலை செய்தது. ஒவ்வொரு மாடி ஏறும்போதும் எண்ணிக்கொண்டான். மூன்றாவது தளம் நெருங்கியது. தயாராய் வைத்திருந்த கைக்குட்டையால் முகத்தை துடைக்கும் பாவனையில் முகத்தைக் காமிரா கண்களிடமிருந்து மறைத்தவாறு தன்னிடமிருந்த திருட்டு சாவியால் திறந்தான். அதிகம் சிரமம் தராமல், இரண்டாவது சாவிக்கு வழி விட்டுத் திறந்து கொண்டது. உள்ளே நுழைந்ததும் கதவு சாத்திவிட்டு மணி பார்த்தான். மணி 10:56.

'அப்பாடா, ஒரு வழியாக யார் கண்ணிலும் படாமல் வந்தாயிற்று. சூட்கேஸைத் திறந்து கூர் தீட்டிய கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டான். இன்னும் சற்று நேரத்தில் மனோகர் வந்து விடுவான். அவன் கதவு தட்டியதும் அவனை உள்ளே வர விட்டு, கதவை சாத்தி, அவன் எதிர்பாராத நொடியில் இடுப்பிலிருந்த கத்தியால் அவன் தொண்டைக்குழியில், மூச்சுக்குழலைச் சேர்த்துக் கிழித்தபடி இறக்க வேண்டும். அதிகம் போனால் 10 நொடிகளில் மனோகர் உயிர் பறந்து விடும். ரூம் ஜன்னல் வழியாக பைப் பிடித்து இறங்கி நேராக சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று 11:45 க்கு மும்பை ரயில் பிடிக்க வேண்டும். அந்த வட நாட்டுக்காரன் ரூம் என்பதால் தன் மேல் நிச்சயம் சந்தேகம் வராது. அப்படியே, லேசாக சந்தேகம் வந்தாலும் அதற்குள் தான் மும்பை சென்றுவிடுவோம். ப்ளான் சூப்பர். மனோகர் வருவதற்குள் ரூம் ஜன்னல்களைத் திறந்து ரெடியாக வைத்துவிடவேண்டும்.'

சுதாகர் விரைந்தான். ரூமில் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த சிவப்பு நிற தடித்த‌திரைச்சீலையை விலக்கியபோது அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. ஜன்னல் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. ஒரு நொடி குழம்பியவன் சுதாரிக்குமுன் 'ரூம் சர்வீஸ்' என்ற குரலுடன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

'ச்சே, இந்த நேரத்தில் ரூம் சர்வீஸா? முதலில் இதைக் கவனிப்போம்.' அவசரமாக, திரைச்சீலையை பழையபடி மூடிவிட்டு கதவருகே நின்று ஓட்டை வழியே பார்த்தான். ஹோட்டல் சீருடையில் சிப்பந்தி நின்றிருந்தது தெரிந்தது.

'மனோகர் வரும் நேரத்தில் இவனா? முதலில் இவனை அனுப்பும் வழி பார்க்க வேண்டும்' என்றெண்ணியபடியே திறந்தான். சட்டென, காக்கி சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் நால்வர் பக்கவாட்டிலிருந்து சுதாகரைத் தள்ளியபடி உள்ளே நுழைந்தனர். இரு போலீஸ்காரர்கள் சுதாகரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, ஒருவர் சுதாகர் உடைகளைச் சோதனை செய்ய, மேலும் ஒருவர், ரூமை சோதனை செய்யலானார்கள்.

அவர்கள் அவனையும், அந்த ரூமையும் சோதனை செய்கையில், யதேச்சையாக சுதாகர் கண்ணில் பட்ட, அந்த ரூம் கதவில் இருந்த எண் சுதாகர் மூளையை என்ன நடக்கிறது என்று ஊகிக்கக்கூட விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.

201.

'அப்படியானால் இது இரண்டாவது தளமா? இல்லையே, மூன்று மாடிகள் சரியாகத்தானே எண்ணி ஏறி வந்தேன். எங்கே தவறியது' சுதாகர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவன் கண்ணில் பட்டது அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் கார்டு.

'பார் வசதிகள் -‍‍கீழ்த்தளத்தில்'

சுதாகருக்கு மெல்ல புரியத்தொடங்கியிருந்தது. அவன் குடியிருப்பிலிருந்து பார்த்ததில் கீழ்த்தளம் தெரிந்திருக்கவில்லை. பின்வாசல் வழியாக வந்ததில், அவன் முதலில் ஏறியது கீழ்த்தளத்திலிருந்து, தரை தளத்திற்கு. மூன்று முறை மாடி ஏறியது, கீழ்த்தளத்தில் தொடங்கி, இரண்டாவது தளத்தில் முடிகிறது. சுதாகர் இரண்டாவது தளத்தை மூன்றாவதென நினைத்து இந்த ரூமில் நுழைந்திருக்கிறான்.

சுதாக‌ர் உடையை சோத‌னை செய்த‌போலீஸ்கார‌ர், இடுப்பில் வைத்திருந்த‌க‌த்தியை எடுக்க‌வும், ரூமை சோத‌னை செய்த‌வ‌ர் மூடிய‌துணி க‌ப்போர்ட் க‌த‌வை திற‌க்க‌, உள்ளிருந்து, மார்பில் க‌த்தி சொருக‌ப்ப‌ட்டு, வ‌ழிந்த‌ர‌த்த‌ம் உறைந்த‌நிலையில் ஒரு ஆண் பிண‌ம் கீழே விழ‌வும் ச‌ரியாய் இருந்த‌து.

சுதாகர் அதிர்ச்சியில் உறைந்தான்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6087)


Monday, 5 November 2012

மனக்கணக்கு - சிறுகதை


மனக்கணக்கு - சிறுகதை


எஸ்!. எஸ்!. எஸ்!.

ஹரி குதூகலித்தான். எம்பிக் குதித்தான். உள‌ம் பூரித்தான். காரணம், அவன் கையிலிருந்த ராங்க் கார்டு. அதில் அவ‌ன் பெய‌ர். கீழே ம‌திப்பெண்க‌ள். 183, 192, 196 ..... அத‌ன் கீழே சிவ‌ப்பு மையில் 1. முத‌ன் முறையாக‌வாங்கிய‌முத‌லாவ‌து ராங்க். அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வில். முந்தைய வருடம் பதினோராம் வகுப்பு தேர்வுகள் அத்தனையிலும் ஹரியால் அதிகபட்சமாக ஆறாவது ராங்க்தான் வாங்க முடிந்தது. வினய் தான் இறுதியாண்டுத் தேர்வில் டாப்பர். வகுப்புத் தோழி ப்ரத்திமா, உஷா, ஷீலா எல்லோரும் சென்ற வருடம் அவன் பக்கம் மாறி மாறி அவன் மேல் விழுந்தது ஹரிக்கு எரிச்சலாக வந்தது. ஹரிக்கு ப்ரத்திமாவைப் பிரத்தியேகமாகப் பிடித்தம். எல்லாம் விடலை வயதுக்கோளாறுதான். ப்ர‌த்திமாவும் வினய்யும் அடிக்க‌டி பேசிக்கொள்வ‌தும், அலைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்வதும், உணவுக்கூடத்தில் ஒன்றாக‌சாப்பிடுவ‌‌தும் ஹரிக்கு ஏக‌த்துக்குக் கிள‌றிவிட்ட‌து.

அப்போதே கங்கணம் கட்டிக்கொண்டு பதினோராம் வகுப்பு படிக்கையிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படிக்கத் துவங்கிவிட்டான். இப்போது பன்னிரண்டாம் வகுப்பு துவங்கி காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்ற‌ன‌. ஹ‌ரிதான் டாப்ப‌ர். இனிமேல் வின‌ய் இல்லை. ஹ‌ரிதான். நினைக்கையிலேயே ச‌ந்தோஷ‌மாக‌இருந்த‌து ஹரிக்கு.

ஆனால் அன்றைக்கென்று ப்ர‌த்திமா ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை. அத‌னால் அவ‌ளுக்குத் தெரிந்திருக்க‌நியாய‌மில்லை. அவ‌ளுக்குத் தான் முத‌ல் ராங்க் வாங்கிய‌து தெரிய‌வேண்டுமே என்று ஹ‌ரி ம‌ன‌ம் அடித்துக்கொண்ட‌து. அவ‌ள் வீடு இருக்கும் தெரு வ‌ழியே போகிற மாதிரி போய்விட்டு, த‌ற்செய‌லாக‌அவ‌ளைப் பார்த்த‌து மாதிரியும், பின் த‌ற்செய‌லாக‌ராங்க் கார்டு ப‌ற்றிப் பேசுவ‌தாக‌வும், முத‌ல் ராங்க் வாங்கிய‌து ப‌ற்றி சொல்வ‌தாக‌வும், அவ‌ள் ஹ‌ரியின் முக‌த்தைத் தாழ்த்தி நெற்றியில் முத்த‌மிட்டு முத்த‌ப்ப‌ரிசு த‌ருவ‌தாக‌வும் ஹ‌ரிக்குக் க‌ற்ப‌னைக‌ள் தோன்றி இனித்த‌து.

இந்தக் கதையின் வாசகர்களுக்குக் கொஞ்சம் உபரித்தகவல். இது போன்ற எத்தனையோ ப்ரத்திமாக்களுக்கும், ஹரிக்களுக்கும், வினய்களுக்கும் இந்தியாவில் ராங்க் கார்டு என்பது ஒரு மனிதனின் தலையெழுத்து. க்ளார்க் வாய்ப்பாடோ, கணினியோ இல்லாமல் லாகரிதம் கணக்கிடத் தெரியாது. இவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியாது. கலவி பற்றி பெற்றோர்கள் கவனமாகச் சொல்லிக் கொடுக்காமல் போனால், சுற்றம் எப்படியாகினும் தப்பும்தவறுமாக நிச்சயம் கற்றுத் தந்துவிடும் என்பது தெரியாது. அடுத்தவருக்கு நிகழும் துன்பம் தனக்கும் என்றாவது நிகழலாம் என்பது தெரியாது. அப்பா என்கிற ஆணைப் பற்றி அம்மா என்கிற பெண்ணுக்கு தெரியாது. காதலன் என்கிற ஆணைப் பற்றி காதலி என்கிற பெண்ணுக்குத் தெரியாது. இப்படி எத்தனையோ தெரியாது. தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான். வாழ்க முரண்பாடுகள்.

அன்று வீட்டில் ஹரியின் அம்மா இருக்கவில்லை. அவள் நாகப்பட்டினத்தில் இருக்கும் தங்கை வீட்டிலிருந்து இரவுப் பேருந்தில் சென்னை வருவதாக இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லலாமென்றால் பிரயோஜனமில்லை. எத்தனை முறை அழைத்தாலும் ஒன்று எடுக்க மாட்டாள் அல்லது அலைபேசி கோமாவில் இருக்கும். மின் உயிரூட்டும் எண்ணமே இருக்காது. அம்மா அந்தக் காலத்து மனுஷி. கையில் ஒரு நோக்கியா அலைபேசி இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது இன்னமும் அவளுக்கு ஒரு சிந்துபாத் புதிர் தான். வீட்டில் அண்ணன் அப்பாவிடம் சொன்னதில், கல்லூரிக்கு பைக் வாங்கித் தருவதாக அப்பாவிடமிருந்து வாக்குறுதியும், அண்ணனிடமிருந்து ஒரு முறைப்பும் கிட்டியது.

எனினும் ப்ரத்திமாவுக்கு இது தெரியுமோ தெரியாதோ என்பதே ஒரே கவலையாக இருந்தது ஹரிக்கு. அலைபேசியில் அழைத்துச் சொல்லிவிடலாமா என்று யோசித்து, பின் தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாக அவள் நினைத்துவிடுவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி சிந்தித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான் ஹரி. தானாகத் தெரியட்டும், அதுதான் உசிதம் என்று தோன்றியது ஹரிக்கு.

உல‌கில், க‌லாச்சார‌மும், நாக‌ரீக‌மும் இப்ப‌டித்தான் உருவாகிற‌து. விளைவுகளைப் பற்றிய ஒரு முன்அனுமானம் கொண்டு, சாதகமான விளைவுகளை உருவாக்குவதான இயக்கங்களை இனம் கண்டு, தரம் பிரித்து, பின் செயற்கையாய் அதனை உருவாக்கி... இப்படித்தானே உருவாகிறது கலாச்சாரமும் நாகரீகமும். அன்பின் நாகரீக வெளிப்பாடுதான் காதல். எதிர்முனையில் அங்கீகரிக்கப்பட்டால் வெற்றி. இல்லையெனில் தோல்வி.

மறுநாளும் ப்ரத்திமா பள்ளிக்கு வரவில்லை. வைரஸ் ஜுரம் என்றார்கள் ஷீலாவும் உஷாவும். இரண்டொருமுறை அலைபேசியில் அழைக்க முயன்றதில் ப்ரத்திமாவின் அலைபேசி கோமாவில் இருந்தது. ஹரி பெரிதும் அலைக்கழிந்தான். வகுப்பில் கவனம் செல்லவில்லை. வீட்டுக்குச் செல்லும் வழியில் வரசித்தி வினாயகர் கோயிலில் ப்ரத்திமாவுக்கென வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

98405..... என்று துவங்கி ஒரு புதிய எண். இது ஏர்டெல் எண்ணாயிற்றே! குறுஞ்செய்தி, ஆங்கிலத்தில் முதல்வனுக்கு வாழ்த்துக்கள் என்றுவிட்டு கண்ணடித்து சிரித்தது.

வீட்டில் எல்லோரும் ஏர்செல். ஹரியின் நண்பர்களும் அனைவரும் வோடஃபோன். சில ஆசிரியர்கள் கூட. உஷா, ஷீலா இருவரும் கூட ஏர்செல்தான். ஹரி குழப்பமுடன் நிமிர்கையில், ஷீலாவும், உஷாவும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. பின் வெகு தீவிரமாய் கரும்பலகையைக் கவனித்தார்கள். அதில் ஒரு செயற்கைத்தனம் தெரிந்ததை ஹரி குறித்துக்கொள்கையில் அலைபேசி மீண்டும் அவனின் கால்சட்டைப் பையில் அமர்ந்தது.

மீண்டும் பாட‌ம். குப்புசாமி இம்முறை ஸ்பின் குவாண்ட‌ம் எண்க‌ள் ப‌ற்றிப் பாட‌மெடுத்துக்கொண்டிருந்தார். 'ஸ்பின் குவாண்ட‌ம் எண் என்ப‌து ஒரு அணுவைச் சுற்றி ஓர் நொதுமின்னி எந்த‌திசையில்....'

மீண்டும் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

இம்முறையும் அதே 98405..... எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. ஆங்கிலத்தில் 'நீ ஸ்மார்ட்டாக இருக்கிறாய்' என்றது. ஹரி இம்முறை சுதாரித்தவனாய், லேசாகத் தலை நிமிர்த்தி உஷா, ஷீலாவைப் நோட்டம் விட, அவர்கள் இருவரும் இம்முறையும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். முகத்தில் மெல்லிய புன்னகை. கரும்பலகை மீது கவனம்.

ஏதோ புரிந்தது போலிருந்தது ஹரிக்கு.

இந்தப் பெண்கள் ப்ரத்திமாவின் தோழிகள். ப்ரதிமா வைத்திருப்பது ஏர்டெல் எண். இப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படுவதும் ஏர்டெல் எண். ஒவ்வொரு செய்தி அனுப்பபடுகையிலும் இவர்கள் உளவு பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன நடக்கிறது? அப்படியானால், அப்படியானால்.... ஒருவேளை இப்படி இருக்கலாமா? இந்தப் பெண்கள் விளையாடுகிறார்கள். இவர்கள் தோழிகள். தன்னை வேவு பார்க்கும் தோழிகள். இளவரசி அங்கிருக்கிறாள். இந்த எண்ணின் மறுமுனையில் இருக்கிறாள். குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தோழிகள் மூலம் என் தவிப்பை உளவு பார்க்கிறாள் என்று இருக்கலாமா?.

ச்சேசே, அனுப்பப்படுவது ஏர்டெல் எண்ணிலிருந்து என்றால் அது உடனே ப்ரத்திமாவாகத்தான் இருக்க வேண்டுமா? இந்தப் பெண்கள் தற்செயலாகக் கூடத்தான் சிரித்திருக்கலாம். ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் ஹரி. ஆனாலும் இந்தப் புதிய எண் இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது, இதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மாலை அம்மா வந்திருந்தாள். அவளிடம் ராங்க் பட்டியல் காண்பித்தான் ஹரி. கட்டியணைத்துப் பாராட்டினாள் தாய் புவனா. இனி உனக்கு எல்லாம் வெற்றிதான் என்று அவள் வாழ்த்துகையில் அவன் நினைவுகளில் ப்ரத்திமா குறுக்கிலும், நெடுக்கிலும் கடந்து போனாள்.

அடுத்த நாள் ப்ரத்திமா வகுப்பறை வந்திருந்தாள். மதியம் உணவு இடைவேளையில் அவள் ஹரியின் இருக்கையை அண்டி, முதல் மதிப்பெண் வாங்கியதற்கு வாழ்த்தியபோது அவளின் முதுகிற்குப் பின்னால், உஷாவும், ஷீலாவும் கல்மிஷமாய் இவர்களைப் பார்த்தபடி தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

"நான் அனுப்பிய குறுஞ்செய்தி வந்ததா?" என்றாள் ப்ரத்திமா. ஹரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"ஆமாம், நேற்று இரண்டு குறுஞ்செய்திகள் வந்தன. அது, 98405 என்று தொடங்கிய எண்களாயிற்றே... அது ..உன்னுடையதா ப்ரத்திமா

தலையைப் பெரிதாக மேலும் கீழுமாக ஆட்டினாள் ப்ரதிமா.

"சரி, ஹரி.. குறிச்சுக்கோ.. நான் குறுஞ்செய்தி அனுப்பினா, பதில் அனுப்பிவிடாதே அந்த எண்ணுக்கு.. அது என் சித்திவழி தம்பியின் எண் தான்.. தற்காலிகமாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்... என் அலைபேசியில் பணம் இல்லையெனில் அவனிலிருந்து பேசுவேன்.. " என்றுவிட்டு தன்னிருக்கைக்குப் போய்விட்டாள் ப்ரத்திமா.

அப்படியானால், அவளேதானா? ச்சே.. முதலிலேயே தோன்றியது தான். ப்ரத்திமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. ஆனால் தற்செயல் நிகழுவுகள் என்று குழப்பிக்கொண்டாயிற்று என்று தோன்றியது ஹரிக்கு. உஷாவும் ஷீலாவும் இன்னமும் தங்களுக்குள் நகைத்துக்கொண்டிருந்தார்கள். என்ன‌முட்டாள்த‌ன‌ம்! கிட்ட‌த்த‌ட்ட‌க‌ண்டுபிடித்த‌விஷ‌ய‌ம் தான். என்ன‌வோ தோன்றி ப்ர‌த்திமாவாக‌இருக்காதென்று நினைத்த‌து எத்த‌னை த‌வ‌று? க‌டைசியில் அது அவ‌ள்தான். ஒரே ஏர்டெல் ந‌ம்ப‌ராக‌இருந்த‌திலிருந்தே அதை அறுதியிட்டிருக்க‌வேண்டும். த‌ன‌க்குள்ளாக‌வே அலுத்துக்கொண்டான் ஹ‌ரி. முதல் வேளையாக அந்தப் புதிய எண்ணை ப்ரத்திமா பெயரில் பதித்துக்கொண்டான்.

அதற்குப் பின்வந்த நாட்கள், இதுவே வாடிக்கையானது. வெள்ளிக்கிழமை கலர் சட்டைகள் அணிந்து வந்தபோது, அதே எண்ணிலிருந்து 'அற்புதம்' என்று குறுஞ்செய்தியில் வந்து விழுந்தாள் ப்ரத்திமா. வகுப்பறையில் சீரியஸாகப் பாடம் கவனிக்கையில் ஒன்றுமே நடக்காதது போல 'என்ன செய்கிறாய்?' என்று குறுஞ்செய்தியில் வினவி கண்ணடித்துவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல பாடம் கவனித்து சீண்டிவிட்டாள் ப்ரத்திமா.

ஹரி இப்போதெல்லலாம் முதுகுத்தண்டில் ரத்தம் பாய்வதை அடிக்கடி உணர்ந்தான். வகுப்பறையிலேயே ப்ரத்திமாவுடன் 'ஒல்லி ஒல்லி இடுப்பே.. ஒட்டியாணம் எதுக்கு' விஜய் பாடலுக்கு நடனம் ஆடினான். குதிரை வண்டியில் முகம் தெரியாத மனிதர்களால் ப்ரத்திமா கடத்தப்படுகையில் எங்கிருந்தோ வந்து குதித்து, காற்றிலே பறந்து பறந்து சண்டை போட்டு ப்ரத்திமாவைக் காப்பாற்றினான் பகல் கனவுகளில். ப்ரத்திமா அவ்வப்போது அவனை அர்த்தமுடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். ஹரிக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு ப்ரத்திமாவை அந்த நிமிஷமே திருமணம் செய்யவேண்டும் போலிருந்தது.

பொறு. பொறு. அவசரப்படாதே. இன்னும் காலம் இருக்கிறது. கல்லூரி இருக்கிறது. அதற்குப்பின் வேலை. பின்னர்தான் திருமணம். பொறு. நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை இப்படியே காதலி. தினம் தினம் காலி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் விடு. தொடரட்டும் இந்தக் குறுஞ்செய்திகள். தொடரட்டும் இந்த கல்மிஷ சிரிப்புகள். இது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க காதல். உபதேசித்தது மனம்.

இது எல்லாமும் எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அதைத் தக்க வைக்க வெகுவாகப் போராடினான். அரையாண்டுத் தேர்வு முடிவுகளும் ஹரியை முதல்வனாக்கி வேடிக்கை பார்த்தன. அம்மா முத்தம் கொஞ்சினாள். அப்பா கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் சேகரித்தார். அண்ணன் பெருமையுடன் ஹரியைத் தன் தம்பியென்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டான். ப்ரத்திமா இது அத்தனையையும் விட அதிகம் போதையேற்றினாள்.

ஒரு நாள், சனிக்கிழமை. சிறப்பு வகுப்பு அன்று. கெமிஸ்ட்ரி சிறப்பு வகுப்புகள் மதியம் மூன்று மணிவரை. விருப்பமில்லை என்றாலும் ப்ரத்திமாவைப் பார்க்க இன்னுமொரு வாய்ப்பென்று தவறாமல் வந்தான் ஹரி. ப்ரத்திமா வகுப்பில் இல்லை. பத்து மணிக்குத் துவங்கிய வகுப்பு ஒரு மணிக்கு இடைவேளை விட்டது. ஷீலா, உஷா கூட ப்ரத்திமா பற்றி உதட்டைப் பிதுக்கினார்கள். ஹரிக்குப் பாடத்தில் மனம் லயிக்கவில்லை. ப்ரத்திமா பற்றியே சிந்தனை போனது. மூன்று மணிக்கு வகுப்பு முடிந்து, ஹரி சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவிக்கையில் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தப்போது, ப்ரத்திமா, மாலை ஐந்து மணிக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் படி அழைத்திருந்தது சற்று ஆசுவாசம் கொள்ள வைத்தது. அப்பாடா! என்றிருந்தது. இனிமேல் இவளிடம் எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு, செல்லும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஹரிக்கு. வீட்டுக்குச் செல்லாமல் நேராக முருகன் கோயிலுக்கு நான்கு மணிக்கே சென்றுவிட்டான் ஹரி.

ப்ரத்திமாவுக்கென காத்திருந்த நிமிடங்கள், உண்மையில் யுகங்கள் தாம் என்பதை உணர்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கே கோயிலின் ஓர் ஓரத்தில் ப்ரத்திமா, அருகிலேயே வினய். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஹரிக்கு அடிவயிற்றில் அமிலம் வேகமாய்ச் சுரந்தது. வினய் எங்கே இங்கே வந்தான்? பூஜை வேளையில் கரடி போல். இதில் ப்ரத்திமாவுடன் வாக்குவாதம் வேறு. முதலில் அவனை அவளிடமிருந்து விலக்க வேண்டும் என்று தீர்மானித்தபடியே அவர்களை அவசரமாய் அண்டினான் ஹரி. ஹரியைப் பார்த்துவிட்டு, ஏதோ பார்க்ககூடாதவனைப் பார்த்துவிட்டதுபோல சலிப்புடன் வினய் அகல, இப்போது அழத்துவங்கியிருந்தாள் ப்ரத்திமா.

"என்னாச்சு ப்ரத்திமா?"

"ஹரி, எல்லாமே போச்சு ஹரி. உன் எண் என்று நினைத்து நான் இத்தனை நாளும் யாருக்கோ அனுப்பிக்கிட்டு இருந்திருக்கேன் ஹரி. அவன் இன்றைக்கு என் வீடு வரைக்கும் வந்து பெரிய கலாட்டா ஆகிவிட்டது. இப்போதென்றால் வினய் என்னை நம்பவே மாட்டேன் என்கிறான் ஹரி. நான் வினயை எத்தனை காதலிக்கிறேன் தெரியுமா!" என்றுவிட்டு விம்மினாள் ப்ரத்திமா, ஹ‌ரியின் இத‌ய‌ம் நொறுங்குவ‌தை உண‌ராம‌ல்.

ஹரி அதிர்ச்சியில் ஆழ்ந்து செய்வதறியாமல் திகைத்திருக்கையில் ஹ‌ரியின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு அதே 98405..... எண்ணிலிருந்து வ‌ர‌, அதிர்ந்தான் ஹ‌ரி. க‌ண்முன்னே ப்ர‌த்திமா விசும்பி அழுது கொண்டிருக்க‌, இத்த‌னை நாளும் அவ‌ள்தான் என்று நினைத்திருந்த‌எண்ணிலிருந்து அழைப்பு வ‌ந்து ஹ‌ரியை ஏக‌த்துக்கும் குழ‌ப்பிய‌து.

தடதடக்கும் இதயத்துடன் அவசரமாய் ஹரி அந்த அழைப்பை ஏற்று "ஹ‌லோ" என்றான்.

"ஹேய் ஹ‌ரி" என்ற‌து எதிர்முனையில் ஒரு பெண்குர‌ல். அந்த‌க் குர‌ல்! அந்த‌க் குர‌ல்! அப்ப‌டியே அச்சு அச‌லாய், ஹ‌ரியின் அம்மாவின் குர‌லை ஒத்து இருக்க‌, ஹ‌ரி அதிர்ச்சியில் உரைய‌,

"என்ன‌ஹ‌ரி, சீக்கிர‌மே வ‌ந்துவிட்டாய்? ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச் சொல்லியிருந்தேன்" அந்த‌க் குர‌ல் வெகு அருகாமையில் கேட்க‌திரும்பினான் ஹ‌ரி. ஹ‌ரியின் அம்மா புவனா புன்ன‌கைத்த‌ப‌டி நின்றிருந்தாள்.

"அம்மா, நீ... நீங்க‌..."

"என்ன‌டா ஹ‌ரி..ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச்சொன்ன‌து? ஏன் இத்த‌னை முன்கூட்டியே வ‌ந்துவிட்டு காத்திருக்கிறாய் ஹரி. பரவாயில்லையே! எம் புள்ளை கோயில் குளமென்று இருக்கிறானே. சமத்து!" என்று திருஷ்டி சுற்றி சிலாகித்தாள் புவனா.

"அம்மா, இது உங்கள் எண்ணா?"

"ஆமாம்டா, நாகைல‌உன் சித்தி வாங்கிக்கொடுத்தாள். ஏதோ அலுவலக எண்ணாம். இதில் பேசினாள் செலவு இல்லையாம். நீதான் என்னை எப்போதும் திட்டுவாயே! அதுதான், உன் சித்தியிட‌ம் இந்த‌க் குறுஞ்செய்திகள் அனுப்புவ‌து எப்படி என்று க‌ற்றுக்கொண்டேன். ச‌ரியா வ‌ந்த‌தா?"

"அம்மா, நீங்கள்தானென்று சொல்லக்கூடாதா?"

"அதையும்தான் குருஞ்செய்தியென அனுப்பினேனே ஹ‌ரி."

"அப்ப‌டியா? எப்போ அம்மா அனுப்பினீர்கள்? எனக்கு வரவில்லையே" என்றுவிட்டு அம்மாவின் கையிலிருந்த‌மொபைலை வாங்கிப்பார்த்தான் ஹ‌ரி.

'ஹாய் ஹ‌ரி -‍உன் அம்மா' என்ற‌குறுஞ்செய்தி அனுப்ப‌ப்ப‌டாம‌ல் காத்திருப்பிலேயே வைக்கப்பட்டதென அந்த அலைபேசி எந்த விதமான உணர்ச்சிகளும் இன்றி சிவனேயென்று சொன்னது..

ஹரிக்கு அழுகை வரும்போல இருந்தது.

முற்றும்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6054)