என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறுநாவல் - அத்தியாயம் - 9

 அத்தியாயம் - 9

 

 

 

தேனீர் தயாரிக்க பாலை சூடு செய்துகொண்டிருக்கையில் அலைபேசி சிணுங்க ஓடி வந்து எடுத்தாள் அஞ்சலி. அதில் அவள் வெகு நாள் தேடிக்கொண்டிருந்த போலோ அசாசின் (POLO ASSASSN) ஜீன்ஸ் முழுக்கால்சட்டை கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்திருந்த ஒரு கடையில் இருப்பதாகச் செய்தி வந்திருந்தது.

 

அது அவள் வெகு நாட்களாக வாங்கவேண்டுமென்று மெனக்கெட்டும் கிடைத்திடாத ஆடை. ஆதலால் கடையில் ஸ்டாக் இருக்கும்போதே வாங்கிவிட முடிவு செய்தாள் அஞ்சலி. ரவி மகிழுந்தை எடுத்துச்சென்று விட, கடைக்குப் போக ஊபர் முன்பதிவு செய்தாள். கிடைத்த இடைவெளியில் அவசரமாய்க் குளித்துவிட்டு ஒரு ஜீன்ஸும் டிசர்டும் அணிந்துகொண்டாள். இம்முறை கருப்பு ஜீன்ஸ், வெளிர் ரோஜாப்பு நிறத்தில் கைவைத்த டிசர்ட்.

 

அடுத்த கால் மணி நேரத்தில் ஊபர் அவளை அந்தக் கடையில் வாசலில் இறக்கிவிட, அவள் கடைக்குள் நுழைந்து அந்த குறிப்பிட்ட ஜீன்சை அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கத்துவங்கினாள்.

 

"என்ன ஒரு ஆச்சர்யம்?" என்றான் அர்விந்த். பரிச்சயப்பட்ட குரலாய் இருக்கவும், அஞ்சலி திரும்ப, அர்விந்தைப் பார்த்துவிட்டு,

 

"அடக்கடவுளே? என்ன நான் எங்க போனாலும் வந்துடறீங்க?" என்றாள் அஞ்சலி.

 

"நான் கேட்க வேண்டிய கேள்வி. நீங்க கேக்கறீங்க. ஏன்?  ஆடைகள்லாம் உங்களுக்கு மட்டும் தான் தேவைப்படுமா? நாங்கள்லாம் என்ன இலை தழையைக் கட்டிக்கிட்டா சுத்துறோம்?"

 

"அப்படி இல்லை தான்"

 

"எப்படி இருக்கீங்க?"

 

"பாத்தா எப்படி தெரியிது?"

 

"சில்க் ஸ்மிதா மாதிரி தெரியிது"

 

"என்னது?"

 

ஆமா.. எனக்கு சில்க் ஸ்மிதான்னா ரொம்ப புடிக்கும்"

 

"ஏன் புடிக்கும்?"

 

"ஏன்னா? அவங்க ரொம்ப வெளிப்படையா ஒளிவு மறைவு இல்லாம பழகுவாங்களாம்"

 

அஞ்சலி சிரித்தாள்.

 

"அப்போ நான் ஒளிவு மறைவு இல்லாம வெளிப்படையா உங்களோட பழகணும்னு மறைமுகமா சொல்றீங்க?"

 

".. அதென்னமோங்க.. உங்களை பாத்ததுக்கப்புறம் மனசுக்குள்ள எதையுமே மறைக்கக்கூடாதுன்னுலாம் தோணுதுங்க'

 

"இப்படில்லாம் பேசினீங்கன்னா உங்களை நான் அண்ணான்னு சொல்ல வேண்டி வரும்."

 

"நீங்க எனக்கு அப்படி இல்லையே..  உங்களை மாதிரி பொண்ணுக்கு அண்ணணா இருக்கிறதுக்கு தூக்குல தொங்குறது எவ்வளவோ பெட்டர். ஒரு அழகான பையன் சாவுக்கு நீங்க காரணமா இருக்கத்தான் வேணுமா? முடிவு பண்ணிக்குங்க."

 

"ரொம்ப பேசறீங்க.. கல்யாணம் ஆயிடிச்சா?"

 

"ஆச்சு.. நாலு வருஷம் ஆச்சு"

 

"அப்புறம் என்ன? சாருக்கு எத்தனை பொண்ணு வேணும்?"

 

"கல்யாணத்துல நாம எதிர்பார்க்குற எல்லாமும் கிடைச்சிடுதா என்ன? பல சமயங்கள்ல அது வெறும் சாபமாத்தானே இருக்கு பலருக்கு"

 

அர்விந்தின் அந்த பதில், அவளுக்கு அவள் கணவனுடனான அவளின் பிரச்சனைகளை நினைவூட்டியது.  

 

"இது துணிக்கடை. பக்கத்துல ஒரு ரெஸ்டாரென்ட் இருக்கு. அங்க போய் பேசலாமா அஞ்சலி?"

 

"என்ன பேசணும் அர்விந்த்?"

 

"ப்ளீஸ்.. இருபத்தி நாலு மணி  நேரமும் எதிர்பாலினத்துல ஒருத்தரோட குடும்பம்ங்குற பேர்ல தனியா இருக்கிற வாய்ப்பு கிடைச்சும், இன்னொரு பொண்ணு கூட பேச மனசு ஏங்குதுன்னா, அதுக்கு காமம் தவிர்த்து நிறைய முகாந்திரம் இருக்கலாம்ன்னு என்னை இப்போதைக்கு எடுத்துக்கிடுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும்."

 

கிட்டத்தட்ட அதையே தான் அவளும் சொல்ல எத்தனித்திருந்தாள் என்பதால் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் அவளுக்கு அவனுடைய மனப்போக்கை தெளிவாக உணர்த்தியிருக்க வேண்டும்.

 

"சரி வாங்க"

 

அஞ்சலியும், அர்விந்தும் பக்கத்திலிருந்த உணவகத்தில் நுழைந்தார்கள்.. ஆளுக்கொரு பழச்சாறு கொண்டு வரச்சொல்லி சிப்பந்தியைப் பணித்தார்கள்.

 

"உங்களைப் பத்தி சொல்லுங்க அர்விந்த்."

 

"என்னைப்பத்தி சொல்ல என்ன இருக்குங்க? ஒரு ஐடி கம்பெனியில வேலை பாக்குறேன். கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு. பெரிசா திறமைகள்ன்னு ஏதும் இல்லை.. அதனால, இலக்கே இல்லாம தோணினதை பண்ணிட்டு இருக்கேன்."

 

"தோணினதுன்னா, பெண்கள் எழுதின கவிதைகளைப் படிக்கிறதா?"

 

"அதென்னமோ தெரியலைங்க.. நீங்க என்ன சொன்னாலும் ரசிக்கிறா மாதிரி இருக்கு"

 

"நல்லா பேசறீங்க. நிறைய பேர் கூட பேசி பழக்கம் போல."

 

"ஆமாங்க .. பேச்சுல என்ன இருக்கு? காசா பணமா? எல்லாருக்கும் அள்ளி அள்ளித் தருவோம். இப்ப நீங்க யாரும் கேக்காமலேயே உங்க அழகை வச்சி எல்லாரையும் ரசிக்க வைக்கிறீங்களே.. அது போலத்தான்"

 

"அது சரி.. இது வரை எத்தனை பெண்களை இந்த மாதிரி பேசியே கவுத்திருக்கீங்க?"

 

"அப்ப நீங்க கவுந்துட்டீங்களா? பாருங்களேன்.. எனக்கு தெரியவே இல்லை"

 

"ஆசை தான்.. ஆனா, வெரி சாரி.. நான் அவ்ளோ ஈசியான பேப்பர் இல்லை."

 

"கஷ்டமான பேப்பர்னா நான் அரியர் வச்சிடுவேங்க"

 

"சப்ஜெக்ட்ல அவ்ளோ வீக்கா?"

 

"இல்லையே.. அரியர் வச்சா தான் அந்த பேப்பர் கூட ரொம்ப நாள் இருக்க முடியும்."

 

அஞ்சலி பேசுவதற்கென ஒன்றை எடுத்துக்கொடுக்க, அர்விந்த் விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். பேசிப்பேசி ரவியின் இருப்பை மறக்கடிக்கச் செய்தான். இளமைக்காலங்களில் தன்னிடம் பேச வரிசையில் நின்றவர்களை என்ன ஏதென்று கூட பார்க்காமல் அவமதித்தும், கிண்டல் செய்தும் விரட்டி அடித்த அஞ்சலி, இப்போது அர்விந்தை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அர்விந்தைப் பேச விட்டு வேடிக்கை பார்ப்பதில், அஞ்சலி, ஆணுலகில் தனக்கிருந்த செல்வாக்கு தன்னிடம் இன்னும் எத்தனை விழுக்காடு மிச்சமிருக்கிறது என்று சோதித்துக்கொண்டிருந்தாள். அந்த சோதனையின் மையம், பிற எல்லா ஆண்களையும் அசைத்துவிடும் ஒரு மந்திரம் தன் கணவனிடம் மட்டும் ஏன் முடங்கிப்போனது என்பதைத் தெரிந்துகொள்ள முயல்வது. புரிந்துகொள்ள முயல்வது. அர்விந்தோ, ஆணுக்கே உரித்தான சாகச உணர்வுக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதிலிருந்து தவிர்க்க இயலாதவனாய், தன்னையே அச்சாகசத்தில் மூழ்கடித்துக்கொண்டிருந்தான். ஆனால், என்னக்கென்னவோ, இதில் சொல்லாதது நிறைய இருக்கிறதே என்றே தோன்றியது.

 

கணவன் என்கிற ஆண் அவளின் உடைமையாகாமல் போய்விடில் சில பெண்கள் எப்படியெல்லாம் தடுமாறிப் போய் விடுகிறார்கள். குழம்பிப் போகிறார்கள். குறைகளே இல்லாத தன்னிடம் என்ன குறை என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு பைத்தியமாகிறார்கள். எல்லாமும் எதற்கு?

 

வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதில் பூமி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரஞை இருக்கிறது. அதுதான் அவர்களை ஏனைய விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அப்படி ஒரு நோக்கமே மனிதப் பிறப்புக்கு இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பதும் கூட இறுதியில் ஒரு நோக்கமாகவே ஆகிறது. இந்த நோக்கங்களில் நான் இருக்கிறேன். இந்த  நோக்கங்களைச் செயல்படுத்தும் முறைகளில் நான் இருக்கிறேன். இந்த நோக்கங்களின் ஒவ்வொரு செங்கல்லிலும் நான் இருக்கிறேன்,

 

சிலருக்கு சிரித்து, சந்தோஷமாக, நிம்மதியுடன் வாழ்வது நோக்கமாகிறது. அந்த சந்தோஷங்களைத் தேடிப் போகிறார்கள். சிலருக்கு தங்கள் பிறப்பின் நோக்கம் என்ன என்பது இறக்கும் வரை புரிவதில்லை.  அவர்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து மரித்தும் போகிறார்கள். மரிக்கும் நாள் வரை, நோக்கங்களுக்காக பிரயத்தனப்படுபவர்களை கேலி செய்கிறார்கள். இருத்தலியம் என்று கொடி பிடிக்கவும் கூடும். ஆனால் அப்படி மனம் போன போக்கில் வாழ்ந்து மரிப்பவர்களுக்கு, அவ்விதம் மனம் போன போக்கில் வாழ்ந்து மரிப்பதைத்தான் இந்தப் பிரபஞ்சம் அவர்கள் பிறந்ததின் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பது தெரிந்தால் என்னாவார்கள்?

 

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவுப்புள்ளியின் நிமித்தம் பிரபஞ்ச இயக்கங்களை, அவற்றுள் மானிட இயக்கங்களைத் தொக்குங்கால், இந்தப் பிரபஞ்சத்தில் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வதில் மேலதிக அர்த்தங்களைக் காண்கிறேன்.

 

வாழ்வைத்தெளிவாக அணுகுகிறவர்களுக்கு தாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் அல்லது நோக்கம் இருக்கிறது என்ற பிரஞை, வாழ்க்கை என்னும் நீண்ட பயணத்தின் ஏதோவோர் மைல்கல்லில் எப்படியேனும் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு வெகு சிக்கிரமே கிடைக்கிறது. சிலருக்கு மரணத்திற்கு வெகு அருகாமையில் தான் கிடைக்கிறது.

 

வேறு சிலருக்கு வாழ்வின் நோக்கம் இதுதான் என்று அவர்களாக ஒன்றைப் புரிந்துகொள்கிறார்கள். வாழ்க்கை அவர்களை, அவர்களின் குறை புரிதல்களை திருத்தாமலேயே வாழ அனுமதித்து மரித்திடவும் அனுமதிக்கிறது. சிலர் மிகவும் சிரமேற்கொண்டு தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிய சிறிதும் சலிப்பே இன்றி முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 

நான் ஒன்றை மிக மிகத்தெளிவாகவே சொல்ல முடியும்.

 

தன் வாழ்வின் நோக்கம் இன்னதென்று புரியாமல் இருந்தும், தாங்களாகவே ஒன்றை அனுமானித்துக்கொண்டு அதை நோக்கி இயங்குபவர்களையே இந்தப் புண்ணிய பூமி மிக அதிகமாகக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் கணிப்புக்கேற்ற ஓர் நோக்கத்தை தங்களுக்குத் தாங்களே கற்பித்துக்கொள்வதே வாழ்வினூடே நகர்தலைச் அவர்களுக்கு சாத்தியமாக்கும் விசையாகிறது.

 

அந்த நோக்கங்கள் தற்காலிகமானவையே, வாழ்க்கை அவர்களை அவர்களின் அசலான நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டு வீசி எறிந்துவிடுகிறது.

 

பவித்ரா பல ஆண்களுடன் தன் விருப்பம் போல் உறவுகொண்டு வாழ்பவளாய் இருந்தாள். அவளது சூழல் அவளின் அச்செய்கைகளை மட்டுறுத்துவதாய் இல்லை. எவ்வித எதிர்ப்புமின்றி பல்லுறவுகள் முளைத்திட, அவற்றை எதிர்க்க வேண்டிய தேவைகள் ஏதுமற்றுப்போய்விடும் ஒரு நிலைப்பாட்டில் அவள் வாழ்க்கையும் ஒரு தெளிந்த நீரோடை போலான பயணத்தையே அவளுக்கு அளித்திருந்தது. ஒரு வேளை அவள் வாழ்ந்த முறையே அவளது வாழ்வின் அசலான நோக்கமாகவும் இருந்திருக்கலாம்.  நான் அறியேன்.

 

இப்படியானவள், இப்படியாக வாழ்ந்து இப்படியாகச் செத்துப்போனாள் என்பது வரையில் தான் நிதர்சனம்.

 

அன்று அவரவர் வீடுகளுக்குத் திரும்பும் முன்னர் அஞ்சலியும், அர்விந்தும் தங்களது அலைபேசி எண்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.