என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 2 February 2023

Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

 Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

சென்ற வார இறுதியில் அவசர மூன்று நாள் விமான பயணமாக சென்னை வந்தது ஒரு விசேஷ அனுபவம். நான் பொறியியல் பயின்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி (Jerusalem Engineering College) 'Distinguished Alumni Award' விருதுக்கு என்னைத் தெரிவு செய்திருந்தார்கள். இத்தருணத்தில் இந்நிகழ்வு குறித்து எனக்குத் தெரியப்படுத்திய Anitha Gokulakrishnan அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா, கிடைத்தால் அது நல்ல வேலையாக இருக்குமா, வளர்ச்சி இருக்குமா, பெற்றவர்களுக்கு உறுதுணையாக நிற்க வைக்குமா, போராட்டமாக இருந்துவிடுமோ, இந்தப் பேரலையில் கரை ஏறிவிடுவோமா என்கிற குழப்பங்களுடனும், கேள்விகளுடனும் அந்தக் கல்லூரியின் வளாகங்களில் பல நாட்கள் திரிந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இப்போது அதே கல்லூரி வளாகத்தில் 'Distinguished Alumni' விருதுடன் நின்றது மெய் சிலிர்க்க வைத்த தருணங்களில் ஒன்று.
அப்போது கற்றுத்தந்த ஆசிரியர்களை இப்போதும் சந்திக்கக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. சுபாஷினி கலைக்கண்ணன், மாயா, பவானி சங்கரி போன்ற நெடுங்கால ஆசிரியர்களும், வனிதா ஷீபா, ஜமுனா போன்ற ஆசிரியர்களும் மாணவர்கள் மீது எடுத்துக்கொள்ளும் கவனமும், அக்கறையுமே இன்றளவும் எனக்கு நல்லாசிரியர்களுக்கான பெஞ்ச்மார்க்காக இருந்திருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகளுடன் மயங்கி நின்ற இடங்களையெல்லாம் சென்று பார்க்கலாம் என்றால், மாணவர்கள் வளர ஏது செய்த கல்லூரியே வளர்ந்திருந்ததில், அவ்விடங்கள் பல மறைந்து போயிருந்தன. பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நான் பொறியியல் பயின்ற போது கல்லூரியில் மொத்தமே மூன்று பிரிவுகள் தான்: ECE, EEE மற்றும் CSE.
இப்போதோ Mechanical, IT, MBA, Bio-medical, Cyber security, Artificial intelligence and data science இவற்றில் M.E. மற்றும் Ph.D படிப்புக்களுடன் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே தங்கும் விதமான ஹாஸ்டல்களுடன் கல்லூரி வளர்ந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இதில் Autonomous அந்தஸ்து வேறு.
கல்லூரி முழுக்க சுற்றித்திரிந்தேன். எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் மயங்கி நின்ற இடங்களிலெல்லாம் நின்று விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இன்றளவும் கைகொடுக்கும் Java இந்தக்கல்லூரியில் நான் பயின்றதுதான். உலகை, மனிதர்களை, அவர்களின் ஆதார இயங்கு இயல்பை, இக்கல்லூரியே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. பார்க்கப்போனால், இந்தக் பாடங்களின் அடித்தளத்தில் தான் நான் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறேன் எனலாம்.
ஒரு உண்மையைப் பகிர வேண்டுமானால், கல்லூரி படித்த நான்கு வருடங்களில் கல்ச்சுரல்ஸ், தமிழ் மன்றங்களின் திசையைக் கூட எட்டிப்பார்த்ததில்லை. எனக்குள் ஒரு எழுத்தாளன் ஒளிந்திருப்பதே தெரியாமல், நான்கு ஆண்டுகள் தமிழ் மன்ற செயல்பாடுகளை, கல்லூரியின் பத்திரிக்கை சார்ந்த செயல்பாடுகளை எட்ட நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். இப்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இந்த இயற்கை எத்தனை ஆச்சர்யம் வாய்ந்தது?!








All