என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 1 August 2023

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்....

 சமீபத்திய நீயா நானாவில் 'திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்' நிகழ்ச்சி அருமையாக இருந்தது.. அது குறித்து அப்போதே எழுத நினைத்தேன்.. வாய்ப்பமையவில்லை..

Marriage is no longer worth trying என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். ஆண் - பெண் இருபாலரில் இது பெண்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கிறது.. ஆண்களுக்கு இன்னும் புரியவில்லை.  பலர், ஆண் உலகம் பெண்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு எவ்வித பிசகும் இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு அங்குமிங்கும் நடக்கும் திருமணங்களும் பெரும்பாலும் பெண்களின் terms படி நடப்பவைகளே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் கூட ஒரு வித அறியாமை அல்லது சமூக வழமையின் பிரகாரம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டதன் பக்கவிளைவு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களிடமே கூட நெருங்கி அமர்ந்து பேசினால், 'ஏதோ தெரியாம பண்ணிட்டேன்' என்கிற ரீதியில் தான் பதிலளிக்கிறார்கள்.

இது யாருடைய தவறும் அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சமூக இயக்கமாகவே திருமணங்கள் தேவையற்ற ஒரு இடத்திற்கு நாம் நகர்ந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். There are other ways we could have handled it, ஆனால், அது நடக்கவில்லை  என்பதில் தான் ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை நாம் எல்லோருமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் சூழளில் நமக்கெல்லாம் தேவை prenuptial agreements/ வாடகைத்தாய் முறைகளை சட்டப்பூர்வமாக்குவது/  திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றலை சட்டப்பூர்வமாக்குவது / விவாகரத்துக்களை normalise செய்வது  போன்றவைகளே.


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்:


1. நன்றாக ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்; அந்த உணவு உங்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தில் பெற்றதாய் இருக்க வேண்டும். 

2. Be fit. Fitness ல் ஆர்வம் செலுத்துங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள்.

3. அறிவுசார் தளங்களில் இயங்கத்துவங்குங்கள்; மன ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம்.

4. Earn the opportunity for sex; அதாவது, உடலுறவுக்கான வாய்ப்பை எதிர்பாலினம் உங்களுக்கு தர விரும்பும் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.


இவ்வளவு தான். திருமணங்கள் இனி அருகித்தான் போகும்; ஏனெனில், சமூக நலனுக்கு ஒவ்வாதவைகள் அழிவது தான் நியாயம்.


Monday, 3 July 2023

திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023

 கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய அன்னை திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023 ல் எனது சிறுகதையான 'வாடகைத்தாய்' தேர்வாகியிருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.







Friday, 30 June 2023

Lust Stories - 2

Lust Stories -2 ல் இருந்த நான்கில் எனக்கு உருப்படியாய்த் தோன்றுவது மிருனால் தாக்கூர் நடித்த முதலாவது தான். 




அதில் வரும் அந்தப் பாட்டி சொல்வது அத்தனையும் happy path மட்டுமே என்பது என் வாதம். பெரும்பான்மையோர்க்கு happy path நிகழ்வதில்லை என்பதே இந்தப் பகுதியை எல்லோருக்குமானதாக்குவதில்லை.

இக்காலத்தில் திருமணங்களே முப்பதுகளின் மத்தியில் தான் நடக்கின்றன. இந்த வயதில், ஆரோக்கியமான உடல், வசீகரமாகவும் வைத்திருக்க மிகப்பல  மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் வணங்கக்கூடிய உடல் இங்கே பலருக்கும் வாய்ப்பதில்லை என்பதே நிஜம். திருமணம், தாய்மை ஆகிய மைல்கற்கள்களுக்குப் பிறகு உடல் அழகைத் தக்க வைப்பது பலருக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில், உடல் அழகு, வனப்பு மட்டுமே காமத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதில்லை என்று யாரேனும் வாதம் செய்யலாம். உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவ்விதமான விருப்பம் கொள்ள, குறிப்பிட்ட துணையிடம் ஏதேனும் ஒன்றாவது பிடித்திருக்க வேண்டும்; அது அந்தத் துணையை ரசிக்க வைக்க வேண்டும்; அது அவ்வுறவைப் படுக்கை வரை நீட்டிப்பதில் ஆட்சேபிக்காதவாறு அமையவேண்டும். அதற்கு அது இயல்பிலேயே மரியாதை, மற்றும் மதிப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அறிவுப்பூர்வமான பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைப் பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நடனத்தில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். கட்டான உடலில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். பயண அனுபவங்கள் சேகரிப்பவர்களிடம் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் ஒன்றே ஒன்று பொதுவாக இருந்திருக்கிறது.

ஒரு ஆண் தன்னிடம் flirt செய்யும் போது, அந்த courtshipஐ விரும்பும் பெண்கள் அவனைத் துணையாகத் தேர்வு செய்வதில்லை. தன்னிடம் மட்டும் தான் flirt செய்கிறானா என்று பார்க்க முயல்கிறார்கள். ஏன்? ஏனெனில், அவன் எல்லா பெண்களிடமும் flirt செய்கிறான் என்னும்போது, அது தனக்கானது இல்லை என்றெண்ணுகிறார்கள். அது அவன் மீதான மரியாதையை, மதிப்பைக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம். 

வசீகர உடல் தோற்றம் இல்லாதவர்க்கும் உறவுகள் வாய்ப்பது வேறெப்படி சாத்தியமாகிறது? 

புத்திசாலித்தனமாகப் பேசுபவராக இருந்து intellectual companionship வழங்குவதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. பெண்ணோ, பையனோ, புத்திசாலித்தனமான பேச்சில் மயங்கும் ஆளாக இருப்பின் இவ்வழி பொருந்தும். அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பது கடினம். ஆக, சிரிக்க வைப்பவராக இருப்பதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. எதிர்பாலினத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதன் மூலமாக, அவரிடமிருந்து மரியாதை, மதிப்பைப் பெற்று அதன் மூலம் ஈர்ப்பைப் பெறுபவராக இருந்தால் சாத்தியமாகிறது; பணம் படைத்தவர்கள் இந்த வழியைக் கைகொண்டு நான் பார்த்திருக்கிறேன்.

ஆக, வெறும் உறவுகள் தான் எனினும், அதற்கு அடித்தளமாவது மரியாதை, மதிப்பு போன்றவைகள் தாம்.

ஆனால், நிஜம் இப்படி எளிமையாக அமைவதில்லை. 

நல்ல வருமானம் ஈட்டக்கூடிய துணை, சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற இடங்களில், இவைகளே பிரச்சனையாகிவிடுகின்றனவோ என்று யோசிக்க வைக்கிறது இன்றிருக்கும் சமூகச் சூழல். இரு பாலரிலும் இது நடக்கிறது. அடுத்த நூல்களிலிருந்து ஐடியாக்களைத் திருடி, சொந்தப் பெயரில் நூல் வெளியிட்டுக்கொண்டார் என்ற காரணத்திற்காய், கணவர் மீது மரியாதை இழந்து விவாகரத்து பெற்ற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், அந்தப் பெண்கள் மீது இருந்த மரியாதையை விவாகரத்துக்கான இந்தக் காரணம் பன்மடங்காக்க மட்டுமே செய்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், பொதுச்சமூகம் அந்தப் பெண்களை 'இதுக்கெல்லாமா விவாகரத்து பண்ணுவாங்க' என்று குறை சொல்லும் தான். படுக்கையறைக்குள் சமூகத்துக்கு என்ன வேலை? 

போலவே, பெண்களிலும் பலர் புகுந்த வீட்டின் செழுமையில் மூழ்கி, முழுச்சோம்பேறிகளாகி விடுவது, அவர்தம் கணவர்களான ஆண்கள் அவர்கள் மீது மரியாதை மதிப்பிழந்து போகச் செய்துவிடுகிறது.. சென்னையில் ஒரு மருத்துவரைத் தெரியும். இவர் பார்க்க அரவிந்தசாமி போல இருப்பார். கெட்டப்பழக்கங்கள் ஏதும் இல்லை. ஐந்தடி தான் உயரம். பெற்றவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அதற்கேற்றார்போல் பெண் பார்த்துத் திருமணம் செய்தார்கள்.அந்தப் பெண் இவர் அளவுக்கு இல்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு இன்னும் குண்டாகிவிட்டார். ஒரு கட்டத்தில் வீட்டு டிரைவருடன் ஓடிவிட்டார். 'டாக்டர் சம்சாரம் டிரைவரோட ஓடிடிச்சு' என்று பேசினார்கள். இந்த மருத்துவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. மேலோட்டமாகப் பார்க்க, டாக்டர் தான் சரியில்லை என்ற தோற்றம் தரலாம். மருத்துவரின் மனைவியுடன் மருத்துவர் நெருக்கமாக இல்லாமல் இருந்ததற்கு அந்த மனைவியே கூட காரணமாக இருக்கலாம் என்றெல்லாம் யாருக்கும் யோசனை போகாது. வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்துவிட்டால், எதையுமே புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆனால், பலர் இப்படித்தான் இயங்குகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள நேரமிருந்தும், ஒரு விதமான சோம்பல் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. குருட்டுச் சமூகத்தின் வழமையை, இவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இது எவ்வகையிலும் இவர்களை எவ்வித மரியாதைக்கோ, மதிப்புக்கோ தகுதியானவர்களாக்குவதில்லை. 

திருமணம், குடும்பம் என்ற பெயரில் யாரும் யாரையும் எதற்குமே நிர்பந்தித்து விட முடியாது. காமம் அற்புதமானதுதான். ஆனால், மரியாதையும், மதிப்பும் இல்லாத இடத்தில், இக்குறும்படத்தில் சொல்வது போலெல்லாம் யாராலும் முழு மனதுடன் நடந்து கொள்ள முடியாது..

Sunday, 28 May 2023

தழுவு கருவி - 2023ன் அரூ கருவுருப்புனைவி மின்னிதழ் சிறுகதைப்போட்டி

தமிழில் வெளியாகும் அறிபுனை இதழான அரூ கருவுருப்புனைவிதழ் நடத்திய 2023ன் விஞ்ஞானச் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதையான 'தழுவு கருவி' தேர்வாகியிருக்கிறது..

தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகள்.. அரூவில் சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்...

Monday, 22 May 2023

Aphelion - Daisy - Ramprasath Rengasamy

The April 2023 issue of The Aphelion Science Fiction and Fantasy Zine edited by Dan Hollifield has my short story, "Daisy"! Delighted to have it placed among such great authors!!

http://www.aphelion-webzine.com/shorts/2023/04/Daisy.html






Monday, 15 May 2023

யாத்திசை - திரைப்படம்

 பணிச்சூழலுக்கு மத்தியில் 'யாத்திசை' பார்க்க நேற்று தான் நேரம் கிட்டியது. 


யாத்திசையில் சப்டைட்டில் இல்லாமல் படம் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனமெல்லாம் இருக்கிறதுதான்.  நாங்கைந்துமுறை திரும்பத்திரும்பப் பார்க்க வேண்டியிருந்தது.


Apocalypto மெல் கிப்சன் இயக்கிய படம்; மாயன் இனத்தவரின் மொழி, கலாச்சாரம் குறித்து பிற்காலத்தில் யாரேனும்  தெரிந்துகொள்ள விரும்பினால் Apocalyptoவை ஒரு reference ஆகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப்போனால், இயக்குனராக ஒரு படத்தை இயக்குகையில் கிடைத்த தகவல்களை எல்லோருக்கும் பயன்படும் விதமாக ஆவணப்படுத்த திரைப்படத்தையே ஒரு களஞ்சியமாகப் பாவித்திருப்பார் மெல் கிப்சன். யாத்திசையையும் அதில் தாராளமாகச் சேர்க்கலாம். 


சம காலத்தில் வெளியான சரித்திரப்படங்கள் சமகால ரசிகர்களை மகிழ்வித்துவிடலாம். எதிர்கால தகவல் தேடர்களுக்கு அவைகள் பயனளிக்கப்போவதில்லை. Apocalypto, யாத்திசை போன்ற படங்கள் மட்டுமே ஒரு தகவல் களஞ்சியமாக எதிர்கால பார்வையாளர்களுக்கு எஞ்சி நிற்கும் என்று நினைக்கிறேன். திரைப்படத்தின் எத்தனை சதவிகிதத் தகவல்கள் அவர்களுக்குப் பயன்படும் என்று வேண்டுமானால் நாம் விவாதிக்க முடியும். எப்படியாகினும் களஞ்சியம் களஞ்சியம் தானே.


Apocalypto வை ஒரு தகவல் களஞ்சியமாக நான் வைத்திருக்கிறேன். எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன். repeat audience எனபார்கள். யாத்திசையில் வரும் மொழி, repeat audience, மற்றும் reference நோக்கங்களுக்காக வைக்கப்பட்டதென்று எடுத்துக்கொள்வதில் பயன் அதிகம் என்பதே என் வாதம்.. 


தமிழ்த்திரை உலகில் பரீட்சார்த்த முயற்சிகள் அவ்வப்போது நிகழும். 'ழகரம்' என்றொரு படம் எடுத்திருந்தார்கள். 10 லட்சம் தான் மொத்த பட்ஜெட். எனக்குப் பிடித்திருந்தது. அதுபோல யாத்திசையையும் ஒரு பரீட்சார்த்த முயல்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.  என்னளவில் அது என் தகவல் களஞ்சியத்தில் இடம்பெற எல்லா தகுதியும் கொண்ட ஒன்று; Apocalypto போலவே.




Wednesday, 26 April 2023

மே மாதம் பிறந்த நாள் காணும் 'தல'

"மே மாதம் பிறந்த நாள் காண்பவர்" என்றாலே அவர் நினைவுக்கு வந்துவிடுவார்... அவர் தான் 'தல'... 

சுஜாதா!! 

(எழுத்துலகில் தல சுஜாதா தானே... ஹிஹிஹிஹி ) 

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் மே3.. எனது ஆக்கங்களில் சுஜாதாவை தரிசித்ததாக வாசகர்கள் சுட்டிக்காட்டிய சிறுகதைகளைப் பகிர்வதன் மூலம் இந்த முறை அவரை நினைவு கூறலாம் என்று தோன்றியது.. 

சுஜாதா!!

தன் எழுத்தின் வாயிலாக நம் எல்லோர் மனதிலும் இன்னமும் வாழ்பவர்..


அவன் – ராம்பிரசாத் 

http://www.vasagasalai.com/avan-short-story-by-vasagasalai/

குளம் - ராம்பிரசாத்

http://www.vasagasalai.com/kulam-short-story-ramprasath/

புதிய உலகம் - ராம்பிரசாத்

http://www.vasagasalai.com/pudhiya-ulagam-tamil-short-story/







Tuesday, 4 April 2023

வெற்றிமாறனின் "விடுதலை" - கலந்துரையாடல்

 வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் குறித்த கலந்துரையாடல்...

நிகழ்வுக்கு அழைத்த Jesu SA அவர்களுக்கு எனது நன்றிகள்!!...
May be an image of 5 people and text that says 'Tube Konal Maanal PANEL DISCUSSION VIDUTHALI (Tamil Movie) Part 1 Ilango Meyyappan Ajoy Kumar Sundar Pasupathy Ram Prasath Thursday 6.30PM,PST @konalmanal YouTube Channel Jesu Sundaramaran MadewithPosterMyWall.com வெற்றி மாறன் இளையராஜா'
Like
Comment
Share

Monday, 6 March 2023

Voice of men 360 - உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?


 Voice of men 360 - உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?


Voice of men 360 வாயிலாக "உயர் மதிப்பு மிக்க ஆணும் பெண்ணும் ஏன் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை?" என்ற தலைப்பில் பேசுகிறேன். அமெரிக்காவைச் சேர்ந்த வனிதாமதி வரதராஜா, கனடாவைச் சேர்ந்த செளந்தர்யா, இலங்கையைச் சேர்ந்த வேல் ராமர் மற்றும் கிருத்திகா ஆகியோருடன் வரும் சனிக்கிழமை மார்ச் 11, 2023 அமெரிக்க நேரம் காலை 10 முதல் 12 வரை இந்த விவாத அரங்கு இணைய வழியில் நடைபெறுகிறது.


திருமண சம்பந்தங்கள்

கலாச்சார போக்குகள்

சமூக அழுத்தங்கள்

இணைந்து தொடர்ந்து வாழுதல்

செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், முடிவெடுத்தல்

ஆகிய தலைப்புக்களில் உரையாட இருக்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுதான். ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்கள் பேசப்படுவதால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் செயல்பாடு அல்ல இது. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் போன்ற கருத்துக்களுடன் உருவாகும் நாளைய சமூகத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும், ஆரோக்கியமான இருபாலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதமாக ஆண் உலகின் செயல்பாடுகள், இயக்கங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதான நோக்கில் தான் என் வரையில் விவாதிப்பதாக உத்தேசம். இந்த நுண்ணிய பார்வையை முன்வைக்கத்தான் இதன் நிறுவனரான ஷிவம் வேலாயுதம் என்னை அழைத்திருக்கிறார். அதன் பேரில் கலந்து கொள்ள இருக்கிறேன். 


வாய்ப்புள்ள நண்பர்கள் இணையவழியில் கலந்து கொள்ளலாம்.


Thursday, 2 March 2023

கோணங்கி விவகாரம்

 கோணங்கி விவகாரம்


இணையத்தில் கோணங்கி பேசுபொருளாகியிருக்கிறார், மிகவும் மோசமான வழியில்.. எனக்குக் கோணங்கியையே அவரது அமைப்பையோ தெரியாது.. கோணங்கியை நான் வாசித்ததுமில்லை... ஆயினும், கோணங்கி விவகாரம் உண்மையெனில்,  தன்னை, தன் சிந்தையைச் சீர் செய்யும் நோக்குடன், இலக்கியத்தின் பால் திரும்பும்,  இள ரத்தங்களை தவறாகப் பயன்படுத்தி திசை திருப்புவது கண்டனத்துக்குரியது.. 

I think, going forward, 

இலக்கியத்தின் பால் திரும்புபவர்களின் கவனத்திற்கென்று Do's and Don'ts போல சில படிப்பினைகளை முன்மொழியக்கூடிய இடத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.


1. கோணங்கி போல் இள ரத்தங்களை பாலியலின் பக்கம் திசை திருப்பி காயடிப்பது ஒரு புறம்.

2. இதே காயடிப்பதை அமைப்பு ரீதியிலும் சிலர் செய்கிறார்கள்.. சில அமைப்புகளில் ஒரு பொதுவான ஒழுங்கைக் காண இயலும்...


அமைப்பு லாப நோக்கற்ற ஒன்று என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும். இங்கு தான் எல்லா பிரச்சனைகளும் துவங்குகிறது. லாப நோக்கு இல்லை என்பதால், யாருக்கும் ஊதியம் இல்லை. ஆனாலும் அமைப்பை நடத்த மனித ஆற்றல் தேவைப்படுகிறதே? அதற்கு என்ன வழி?


volunteering

இதுதான் வழி. இந்த volunteering ஐயும் unconditional ஆகச் செய்ய யாருக்கும் ஆர்வமில்லை. volunteering என்பது ஒரு சொல்லாடல் மட்டுமே. மற்றபடி, volunteering செய்பவர்கள், தங்களை promote செய்து கொள்ளும் நோக்கத்தில் தான் இதற்குள் வருகிறார்கள்.. அமைப்புக்கான, சஞ்சிகைகள், நிகழ்ச்சிகள் போட்டிகள் என அனைத்தையும் வாரி எடுத்துச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் மிகப்பல மணித்தியாலங்கள் செலவிடுகிறார்கள். அதெல்லாம் சரிதான்.. ஆனால் இதற்கெல்லாம் இலக்கிய அறிவு தேவை அல்லவா? அங்கு தான் பிரச்சனை.

தங்களுக்கு இருக்கும் கனிந்திடாத, முதிர்ந்திடாத எழுத்தையே 'இலக்கிய அறிவென்று' இவர்களே பிரகடனப்படுத்திக்கொண்டு விடுவார்கள்.. இதற்கு அமைப்பு ஏதும் சொல்வதில்லை.. ஏனெனில், அமைப்பை நடத்துபவர்கள் யாரும் இலக்கிய ஞானத்துடன் இருப்பதில்லை... இலக்கிய தரத்துடன் எழுதினால் இவர்களுக்குப் புரியவும் செய்யாது என்பதுதான் உண்மை... சரி, பார்வையாளனாவது ஏதாவது மறுதலிப்பானா என்று பார்த்தால் அதுவும் இல்லை...  உண்மையில் அவனுக்கு இலக்கியம் குறித்தோ, இலக்கிய உலகம் குறித்தோ, வாசிப்பு குறித்தோ எவ்விதப் பார்வையோ, புரிதலோ இருக்காது... 

சரி, இவர்களுக்கு நடுவில் இலக்கிய ஞானத்துடன் எவனாவது வந்தால் என்னாகும்? ஒன்றுமில்லை.. அவனை ஓரம் கட்ட இவர்களின் அஸ்திரம் volunteering hours தான்.. 

உதாரணமாக, இந்தக் கூட்டத்திற்குள் ஒரு புதுமைப்பித்தன் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.. புதுமைப்பித்தனும் இவர்களும் சந்திக்கும் சந்திப்புகளில் அடுத்தவர்களது ஆக்கங்களைப் புதுமைப்பித்தன் கண்டிப்பாகப் புகழ்ந்தே ஆக வேண்டும். அப்படிச் செய்தால், தான் பதிலுக்கு இவர்கள் புதுமைப்பித்தன் ஆக்கத்தை அதே அளவில் புகழ்வார்கள். புதுமைப்பித்தன் அங்கே இலக்கிய வாசம் தேடிவிட்டு ஒன்றும் அகப்படாததால் அமைதியாக இருந்தால், பதிலுக்கு அதே அமைதி புதுமைப்பித்தன் ஆக்கங்களுக்கும் அங்கேயே கிடைக்கும், சில கள்ள மெளனங்களுடனும், கள்ளச் சிரிப்புகளுடனும்.. புதுமைப்பித்தன்கள் இந்த இடத்தில் அமைப்பை விட்டு விலகிவிட்டால், குறைந்தபட்சம் அவர்கள் தங்களது மன அமைதியையாவது தக்க வைக்கலாம். 

இந்தப் புள்ளியில் வெளியேறாத புதுமைப்பித்தன்கள் அடுத்த கட்ட பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டும்.. உடன் அமைப்பில் இருக்கும் மற்றவர்கள் அமைப்புக்கு முன்பை விட அதிக நேரம் ஒதுக்கி volunteering ஐ intense ஆக்குவார்கள். ஏனெனில், இவர்களால் முடிந்ததும் அது ஒன்று தான்.. அதே அளவிலான volunteering ஐ புதுமைப்பித்தன் செய்தால் அவர் எங்கே இலக்கியம் படைப்பது? எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரங்கள் தானே.. ஆக புதுமைப்பித்தனால் அத்தனை நேரம்volunteer செய்ய முடியாமல் போகும்.. அமைப்புக்கு, இலக்கிய ஞானமா தேவை? volunteering தானே தேவை.. ஆக, இவ்விதம் volunteer hours அதிகமாக்கியவர்கள் அமைப்புக்குள் பதவிகள் தந்து ஊக்குவிக்கப்படுவார்கள்... அடுத்த சந்திப்பில், இலக்கிய ஞானமே அற்ற ஒருவர் சொல்வதைச் செயல்படுத்துபவராக புதுமைப்பித்தன் மாற வேண்டி வரும்... அல்லது புதுமைப்பித்தன் முதுகின் பின்னால், குறை சொல்லத்துவங்குவார்கள்..அல்லது வேறொரு நகுலனை வரவழைத்து வேண்டுமென்றே நகுலனுக்கு முக்கியத்துவம் அளித்து புதுமைப்பித்தனை பழி வாங்க முயற்சிப்பார்கள்...

"என் உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழுக்கே" என்ற கோஷத்தை அவர்கள் தன் தாய் மொழிக்காகச் சொல்லுவதில்லை என்பது இக்கணத்தில் தெள்ளத்தெளிவாக  புரிந்துகொள்ளலாம்.. உண்மையில் இது போன்ற கோஷங்களை இவர்கள் ஒரு கருவியாகத்தான் பாவிக்கிறார்கள்.. அதன் நோக்கம், தன்னை promote செய்துகொள்வது மட்டுமே..

சரிப்பா... atleast இந்த வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தி அவர்களாவது இலக்கியம் கற்கிறார்களா என்றால், அதுதான் இல்லை... ஆண்டுக்கணக்கில் துவங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருப்பார்கள்.... இதை எளிதாக ஊர்ஜிதம் செய்யலாம்.. இவர்கள் யாரும் உள்ளூர் இலக்கிய இதழ்களான உயிர்மை, கணையாழி, காலச்சுவடு முதலான இலக்கிய இதழில் எழுதவே மாட்டார்கள்... ஏனெனில், 'படைப்பூக்கம் இல்லை', 'கற்பனை/சிந்தனை வரட்சி' என்றெல்லாம் இவர்களது ஆக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட இதழ்களிலிருந்து பதில்கள் வரும்.. அதையெல்லாம் இவர்கள் காதும் காதும் வைத்தாற்போல் முயற்சித்துப் பார்த்துவிட்டு, விட்டே விடுவார்கள்... இவர்களால் அதிகபட்சம் முடிவது சுத்தத்தமிழில் எழுதுவதாகவும், பிறமொழிக் கலப்பின்றி எழுதுவதாகவும் தான் இருக்கும்... பார்வையாளர்கள் ஏமாந்தால், அதையே தங்கள் இலக்கிய தகுதியாகச் சொல்லி establish செய்துகொண்டுவிடுவார்கள் .  proof-readerகள் நூல்கள் வெளியிட்டு தங்களை சீரிய எழுத்தாளர்களாக நிறுவிக்கொள்வதெல்லாம் இந்த அமைப்புக்களில் சர்வ சாதாரணம். 

இவர்களிடம் பணம் இருக்கிறது... அதன் பின்னால், வரட்சி பாதித்த பதிப்பகங்கள் நிற்கின்றன... எவ்விதத் தர நிர்ணயமும் இன்றி இவர்கள் நூல்கள் வெளியிட்டுக்கொள்ள இந்தப் பதிப்பகங்கள் உதவும்.... அமைப்புக்களில் இவர்கள் செலவிட்ட volunteering hours க்கு ஈடாக அமைப்புக்கள் இவர்களை 'எழுத்தாளர்கள்' என்று மேடையேற்றி முன்மொழிந்து தங்கள் 'நன்றி நவிலலை' ஆற்றிக்கொள்கிறார்கள்.. அமைப்பில் பங்குபெற்ற எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் 'லாபம்'... இறுதியில் பார்வையாளன், வாசகன் தான் கேனை ஆவான்...

இந்த அமைப்புக்களை நம்பி, இவர்களை இலக்கியவாதிகள் என்று நம்பும் கூட்டத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கும்... பணியிடம், வேலைச்சுமை போன்றவைகளை சீராக்கிவிட்டு, எஞ்சிய நேரத்தில் இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும், இலக்கிய உலகுடன் எவ்விதப் பரிச்சயமோ, வாசிப்போ இல்லாத, ஆழ்ந்த புரிதல் இல்லாத கன்னி வாசகர்களே இவர்களது இலக்கு... 

இப்படியாக வருபவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஏமாறுவதில்லை.. ஒரு கட்டத்தில் விவரம் தெரிய வருகையில், கோணங்கியால் பாலியலுக்கு திருப்பப்பட்டவர்கள் போலவே அவர்களும் 'ச்சீய்' என்று தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள்... இது ஒரு மோசமான முன்னுதாரணமாவது மட்டுமல்லாமல், அதன் பிறகு யாருமே இந்தப் பக்கம் வராமல் போகச் செய்துவிடுகிறது என்பது சோகமான உண்மை... இந்தப் புள்ளியிலும் விழிக்காதவர்கள், மிகச்சிறந்த 'அடிமைகளாக' ஆகிறார்கள்... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... வேறு யாரெல்லாம் இவர்களது இலக்கு? சலூன் கடைகள் போலத்தான்.. முடி கொட்டி வழுக்கை விழுந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக, பதின்ம வயதில் அடியெடுத்து வைப்பவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் தான் அல்லவா? அது போல இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும் கன்னி வாசகர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் அல்லவா? 

ஆக, தொடர்ந்து இவர்கள் தங்களைப் promote செய்துகொண்டே இருப்பார்கள்... இலக்கியம் வளர்ந்ததா என்றால் இல்லை...இவர்களாவது தங்களை வளர்த்துக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை... 

ஆக, இவ்விதம் தான் பல இயக்கங்கள் இயங்குகின்றன... எழுத்தின் மீது தீராக்காதலுடன், எழுத்தை நேர்மையான வழியில், வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவ்வமைப்புகளிலிருந்தெல்லாம் விலகி இருப்பதுதான் இருப்பதிலேயே இருக்கும் நல்ல உபாயம் என்பது என் வாதம்... 

எல்லாமும் வணிக நோக்கமாகிவிட்ட இனி வரும் காலங்களிலும், இலக்கிய அமைப்புகள் இவ்விதம் இயங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது... ஆதலால் எழுத்தின் மீது ஈடுபாடு கொண்டு வரும் இளைஞ, இளைஞிகள் சூதனமாக நடந்துகொள்ள வேண்டும். அமைப்புகளை என்ன ஏதென்று கேளாமல் குருட்டாம்போக்கில் நம்பி இறங்கினால் கடும் சேதாரமாகவே வாய்ப்பதிகஃப்ம்... 

போதிய தயாரிப்பு இல்லாமல், போதுமான அவதானம் இல்லாமல், குருட்டாம்போக்கில், உணர்ச்சி வசப்பட்ட மன நிலையில் எழுத்தை, கலை அமைப்புக்களை நம்பி அண்டுபவர்கள் மீது இந்த அமைப்புகள் எவ்விதச் சலுகையும், கருணையும் காட்டுதில்லை... இதுதான் இன்றைய இலக்கிய உலகின் நிலை...