ஆவி மரபணுக்கள் (Ghost DNA)
ஆமாங்க. Ghost DNA என்று ஒன்று இருக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவில் ஒரு பழங்குடியினரின் மரபணுவில் ஒரு பகுதி, மனித இனத்துக்கு இதுகாறும் தெரிந்த எந்த இனத்தின் மரபணுச் சாயலும் இல்லாமல் இருக்கிறதாம். அதனாலேயே அந்தப் பகுதியை Ghost DNA என்கிறார்கள்.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த அத்தனை குரங்கினங்களின் மரபணுக்களும் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எப்படி? எல்லாம் படிமங்கள் அதாவது Fossilகள் வழியாகத்தான். அந்தப்படி மனித மரபணுக்களில் , நியாண்டர்தல், டெனிசோவன் என்று அக்காலத்தில் வாழ்ந்த பல மனித இனங்களுடன் ஹோமோ சாப்பியன்களான நாம் இணைந்து இனப்பெருக்கம் செய்திருக்கிறோம். ஆதலால், நாம் இனப்பெருக்கம் செய்த அத்தனை இனங்களின் மரபணுக்களும் நம் மரபணுக்களில் உள்ளன. ஆனால், படிமங்கள் வழி கூட இந்தக் குறிப்பிட்ட மரபணுத்தொகுதி எந்த இனத்திலிருந்து வந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்கிறார்கள்.
இப்போதைக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, படிமங்கள் தொலைந்த ஏதோ ஒரு இனமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது படிமங்கள் படிமங்களாகவே இருக்க ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. அந்த அளவி மிஞ்சினால், படிமங்கள் கூட கரைந்து விடலாம். அப்படி கரைந்து போன ஒரு இனத்தின் மரபணுவாக அது இருக்கலாம் என்பது ஊகம். இந்த வாய்ப்பும் இல்லையென்றால்,
வேற்று கிரக உயிரினங்களுடன் இனப்பெருக்கம் என்று தான் போய் நிற்கும். அதை விடுங்கள். எப்போதிருந்து ஜாதி பார்க்காமல் திருமணங்கள் செய்வதில்லை என்று கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. டெனிசோவன்களுடனும், நியாண்டர்தல்களுடனும் நாம் இனப்பெருக்கம் செய்யத்துவங்கியது சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். இப்படி கலப்பு இனப்பெருக்கம் வாயிலாகத்தான் மனித இனம் இன்றிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் கலப்பு இனப்பெருக்கத்திற்குத்தான் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சி கிடைத்திருக்கிறது. சில ஆயிரங்களில் இருந்த எண்ணிக்கை இன்று 800 கோடியாகியிருக்கிறது. Survival Advantage க்கு இதை விடவும் ஒரு யுக்தி வேண்டுமா என்ன?