எங்கள் வீட்டு புல்வெளியில் குருவி ஒன்று முட்டையிட்டிருக்கிறது. நான்கு முட்டைகள். அடைகாக்கிறது. நாங்கள் பின் கதவு திறந்து Lawnல் அடியெடுத்து வைத்தாலே கத்தத்துவங்கிவிடுகிறது.
தாய் குருவி ஒன்றும், மற்றொரு குருவியும் மாற்றி மாற்றி முட்டைகளை அடைகாக்கின்றன. உணவுக்கென ஒரு குருவி பறந்து சென்றால், மற்றொன்று காவல் காக்கும். உணவுக்கு அலைபாய்வதை கவனித்துவிட்டு walmartலிருந்து குருவிகளுக்காக உணவு வாங்கி, ஒரு கிண்ணத்தில் வைத்தோம். இன்னொரு கிண்ணத்தில் நீர். இப்போது குருவிகள் அந்த உணவை உட்கொள்கின்றன. நீர் அருந்துகின்றன. முன் போல அடிக்கடி முட்டைகளை விட்டு நீங்கி வேறெங்கும் செல்வதில்லை.
உலகையே, ஒட்டுமொத்த கிரகத்தையே தன் வீடாகக் கொண்டுவிட்ட ஒரு உலகார்ந்த பிரஜை என் வீட்டு Lawnல். அதை நினைத்தாலே பதற்றமாகிவிடுகிறது எனக்கு.
அவைகள் தன் வீடாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த கிரகத்தை, பல நாடுகளாக நாம் பிரித்திருப்பதோ, ஒரு மூலையில் பிறந்த ஒருவர், இன்னொரு மூலைக்குச் செல்லவே பொருளாதாரத்தில் ஒரு இடத்தை அடைய வேண்டுமெங்கிற நிர்பந்தம் நமக்கு இருப்பதோ, எவரோ கண்டுபிடித்த இந்த நடைமுறையை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே going with the flow என்கிற ஸ்திதியில் ஏற்றுக்கொண்டு இயங்கும் மனிதக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதோ அந்தக் குருவிக்குத் தெரிந்துவிட்டால் என்னை அது மதிக்குமா? பைத்தியக்காரன் என்று நினைத்துவிட்டால்? கோழை என்பதைக் கண்டுபிடித்துவிட்டால்? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ நான் என் வீட்டு Lawnக்கே செல்வதில்லை. அந்தக் குருவி தன் முட்டைகளை அடைகாக்கும் வரை, இளங்குறுவிகள் முட்டையைத் துரந்து பறக்கக் கற்கும் வரை, அவைகள் குடும்பமாக எங்கள் Lawnஐ விட்டு நீங்கும் வரை, Lawnக்கே செல்வதில்லை என்று இருக்கிறோம். அவ்வப்போது அவைகள் முட்டையை அடைகாப்பதை, Lawn முழுவதும் உணவுக்காக அலைந்து கிடைக்கும் பூச்சிகளை, நாங்கள் வைத்த தானியங்களை உண்பதை வேடிக்கை பார்ப்பது ஒரு நல்ல பொழுது போக்காகிவிட்டது.
இந்த நாடு, கடவுச்சீட்டுகள், விசா, வேலை, சம்பளம், வரவு அட்டைகள், இதையெல்லாம் யார் கேட்டார்? எப்போதிருந்து இப்படி நமக்கு நாமே சிறை வைத்துக்கொண்டோம்? எப்போது இதிலிருந்தெல்லாம் விடுதலை? எந்தக் கேள்விக்குமே பதில் இல்லை.
அக்குருவிகளைப் பொறுத்தவரை இந்தக் கிரகத்தில் எந்த பிரிவினையும் இல்லை. எந்த நாடும் இல்லை. எல்லாமும் ஒரே நிலம், ஒற்றை கிரகம். நாமெல்லாம், நம் உருவத்தையும் மீறி விதம் விதமாகக் கூடு கட்டி வாழும் சக ஜீவன்கள். வானத்தில் திரிய வேண்டியது. உணவு கிடைத்தால், பசியாறலாம். இல்லையானால், பட்டினி. உணவுச்சங்கிலிக்கு இரையாவது என்றோ ஒரு நாள் கூத்து. அவ்வளவுதான். யோசித்தால், அப்படியே நாமும் இருந்துவிட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.