தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி
நூல் விமர்சனப் போட்டி - 2025
_____________________________________
நூல் : தீசஸின் கப்பல் (சிறார் இலக்கிய
நூல்)
ஆசிரியர் : ராம் பிரசாத்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் : 138
விலை : ரூ 190
. ஆசிரியர் ராம் பிரசாத் மயிலாடுதுறையில்
பிறந்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்நூல் ஆசிரியரின் 15 வது நூல். இவர் தமிழ்
ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும்,
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய வெளியில்
சிறந்து இயங்குகிறார். கணினியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில்
முதுநிலைப்பட்டமும் பெற்றவர். 2009 ல் இருந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
. 2020 ல் வெளியான இவரது 'வாவ்
சிக்னல்' விஞ்ஞான புனைவுச் சிறுகதைத் தொகுதி நூலுக்குத் தமிழக அரசு தமிழ்
வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் என விருதளித்து கௌரவித்திருக்கிறது.
. தீசஸின் கப்பல் நூல் சிறார்
இலக்கியமாக மலர்ந்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியோடு கூடிய முன்னேற்றத்தை
சிறுவர்கள் எவ்வாறு கையாள வேண்டுமென அழகான புனைவுக்கதைகளாக கொடுத்திருக்கிறார்.
ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வளரும் இளம் தலைமுறையினரின்
பங்கு மிக மிக முக்கியமானது.
. ஓரிரு தலைமுறைக்கு முன்பு தகப்பன்
தொழிலைத்தான் பிள்ளைகளும் தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. இது
அத்தலைமுறையையே அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு விழித்துக் கொண்ட
பெற்றோர்கள் நம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் நான் பட்ட கஷ்டங்களை
அவர்கள் படவேண்டாம் என்று உணர்ந்து தன் சக்திக்கு மீறி படிக்க வைக்க
தலைப்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர்.
கல்வி ஒரு மனிதன் எட்ட முடியாத உயரத்திற்கு அவனை இட்டுச் செல்லும் அவன் தலைமுறையை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும்.
அதேபோல தான் ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி என்பது இளைய தலைமுறையின்
முற்போக்கு சிந்தனைகளிலும், அதை துணிந்து செயல்படுத்தும் விதத்திலும்
இருக்கிறது. நூலில் இருக்கும் 10
சிறுகதைகளும் கற்பனைக்கு எட்டாதவைகளாக தற்போது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இவையும்
சாத்தியமே.
. அறிவியல் சார்ந்த புனைவு கதைகள்
வாசிக்கும் போது ஒரு புறம் பிரமிப்பு ஏற்படுகிறது. இங்கனம் நிகழ்ந்தால் உலகம்
எப்படி இருக்கும் என்ற திகைப்பும், ஆச்சரியமும் நம்முள் ஏற்படுகிறது. ஆனால் சற்று
பின்னோக்கி சென்றால் நாம் இருந்த வாழ்வியல் முறையும் தற்போது நம் வாழ்வியல்
முறைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் நாம் வளர்ந்த பாதை புலப்படும். அதுபோல திசஸின்
கப்பல் நூல் சொல்கிற விஞ்ஞான வளர்ச்சிகளும் எதிர்காலத்தில் சாத்தியமாகும்.
. மூடநம்பிக்கைகளால் தெய்வங்களின்
மீது பழியைப் போட்டு ஏற்படும் நிகழ்வுகளை நாம் கடந்து சென்றுவிட தன் பழக்கப்பட்டு
இருக்கிறோம். அதையும் மீறி பேசினால் நாத்திகவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு
விடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. பிள்ளையார் பால்குடித்தார்
என்று செய்தி பரவிய போது குடம் குடமாக பாலை கொண்டு போய் பிள்ளையாரிடம் கொடுக்கத்
தெரிந்த நமக்கு அதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்து தைரியமாக கூறமுடியவில்லை.
இல்லை இல்லை கண்டுபிடிக்க விடவில்லை
சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள்.
. நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும்
அவரவரின் செயல்பாட்டிற்கும் பின்னும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கவே செய்யும்
அதுதான் நம் படைப்பின் ரகசியம். தேவையான நேரத்தில் தேவைப்படும் இடத்தில் கொண்டு
சென்று நம்மை நிறுத்தி விடும் காலம். அப்போது காலம் இட்ட வேலையை பூரணமாக செய்து
முடிப்பதில் தான் நாம் பூமியில் வாழ்வதற்கான அர்த்தம்.
அழகு என்பது உடல் சார்ந்தது அல்ல.
மனம் சார்ந்தது நம் வாழும் வாழ்வியல் சார்ந்தது.
செய்யும் செயல்களும் எண்ணங்களும் அழகானால் நாமும் அழகாகத்தான் தெரிவோம். வளரும் பதிம வயதினர்கள் புறத்தோற்றத்திற்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகாக தெளிவுபடுத்தும் சிறுகதை
தீசசின் கப்பல். உன்னை நீ யாராக
பார்க்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் கதை.
வாழ்வின் சவால்களை அனைத்தையும் எதிர்கொண்டு அதை வெல்பவர்களே வாழ்வில் நிலையான
வெற்றியை பெற்று சாதிக்கிறார்கள்.
மரபணுக்களைக் கொண்டு புதிது புதிதாக பிரதிகளை எடுத்துக் கொண்டால் பிரபஞ்சம்
என்னவாகும். இக்கதைகளில் உள்ளவைகள் மாதிரி நடந்தால் எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ஆனால் அவை எல்லாம் நடைபெறும் காலம் மிக
அருகாமையில் தான் இருக்கிறது போலும்.
.
இருட்டில் வாழ்ந்த மக்கள் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த போது பயந்தது
போலவே இப்போதும் நமக்கு பயம் ஏற்படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சி காலப்போக்கில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அசுர
வளர்ச்சியாக தான் இருக்கும். மெல்ல மெல்ல
மக்களும் அதை ஏற்றுக்கொண்டு அவற்றோடு வாழ்ந்து அவர்களின் வாழ்வில் பிரிக்க
முடியாதாதாக மாறிவிடும்.
. மன்னர்கள் காலத்தில் இருந்த
சுரங்கப்பாதைகள் பற்றி நாம் அறிந்திருப்போம்.
ஆபத்துக் காலத்தில் மன்னர்கள் தப்பியோட ஒளிய அது உதவுவதாக
படித்திருக்கிறோம். அதுவே விஞ்ஞான
வளர்ச்சியான பிறகு ரகசிய அறைகளாக மாறி ஒரு கதவை திறந்தால் எடின்பருக்கும், மற்றொன்றைத் திறந்தால் ஹாங்காங்கும், மற்றும்
ஒன்றை திறந்தால் தஞ்சை பெரிய கோவிலும்,
இன்னும் ஒன்றைத் திறந்தால் திருத்தணி முருகன் கோவிலுமாக விஞ்ஞான
வளர்ச்சியில் விரிவடைந்து இருக்கிறது.
இயற்கையை நாம் படுத்தும் பாட்டை
பார்த்தால் நாளடைவில் உண்மையிலேயே பூமி நம் வாழ்வதற்கு இயலாத ஒரு தட்பவெட்ப நிலையை
அடைந்து விடும் போலும். பூனையற்ற புன்னகை சிறுகதையில் கூறியிருந்த விதம்
இப்படியும் நடந்து விடுமோ என்ற பயத்தை
ஏற்படுத்தி விட்டது.
நம் முன்னோர்கள் வாழ்வதற்காக கடினமான உடல்
உழைப்பை தந்தார்கள். அடுத்தடுத்து வந்த
தலைமுறையினர் உடல் உழைப்பை விட புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பு போதும் என்று
நினைக்கத் துவங்கினர். நமக்கு அடுத்து
வரும் தலைமுறையினர் உடல் உழைப்பும் வேண்டாம்,
புத்திசாலித்தனமும் வேண்டாம் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அதன் மூலம் நாம்
முன்னேறி விட வேண்டும் என்று என்பதிலேயே முளைப்பாக இருக்கின்றார்கள் என்பதை அட்சய
பாத்திரம் சிறுகதையில் அச்சரம் பிசகாமல் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து சிறுகதைகளுமே வளர் இளம் பருவத்தினர் படித்து அறிந்து நல்லவற்றை
பகுப்பாய்ந்து வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விதத்தில் பயன்படுத்தினால்
நன்மையே விளையும்
. ஜெயா நவி
.