மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி
“மரபணுக்கள்” - ராம்பிரசாத் அவர்களின் பத்து
விஞ்ஞான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “ஏழாம் அறிவு” போன்ற திரைப்படங்களின் வாயிலாக
மட்டுமே மரபணுக்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்த என் போன்ற அறிவியல் ஞானம் இல்லாதவர்களுக்கும்
மரபணு மாற்றங்களின் சாத்தியக் கூறுகளைக் கொண்டு எதிர்வரக் கூடும் சமூக மாற்றங்களைப்பற்றியும்
மேலும் மரபணுக்கள் பற்றியும், விண்வெளி, கிரகங்கள், ஆராய்ச்சிகள் பற்றியும் அறிந்து
கொள்ள ஆர்வமூட்டும் வகையில் கதைகளின் களமும் கருத்துக்களும் அமைந்துள்ளன.
“பிரதி எடுக்காதே”
நாட்பட்ட உறவுகளில் ஏற்படும் ஏமாற்றத்தை
மிலி மூலம் தெளிவாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். விஞ்ஞானத்தின் உதவி கொண்டு மனிதனை
பிரதியெடுக்கும் இயந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமென யோசனை சொல்கிறான் மிலியன் காதலன்
கரீம்.
இயந்திரத்தின் மூலம் சூழ்நிலையை எப்படி கையாள்கிறார்கள்
என்று கதை விவாதிக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியுள்ளது.
“நீ என்னுடையவனா, அல்லது என் கவலைகள் மட்டுமே
என்னுடையதா” என்று கேட்கும் மிலியைக் கொண்டு அவர் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் சந்திக்கும்
ஏமாற்றத்தை கண்முன்னே கொண்டு வருகிறார்.
“சேஷம்”
கலப்பினங்கள் - பொருட்டு இதுகாறும் நமக்கிருக்கும்
புரிதலையும், வகைமைகளையும் தாண்டி வேறொன்றை நிருவுகிறார் ஆசிரியர்.
இக்கதையில் வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத்
தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என அழைக்கப்படுகிறார்கள்.
வேறுபட்ட குணாதியங்கள் கொண்ட விலங்கினங்களின்
மரபணுக்களை மனிதக்கருவில் செலுத்துவதன் வாயிலாக அத்தகு குணாதிசியங்களை கொண்டு பிறக்கும்
மனிதர்கள் முறையான உடற்பயிற்சிகளைக் கொள்வதின்
மூலம், உறங்கிக் கொண்டிருக்கும் மரபணுக்களை உசிப்பி விடவும், மீண்டும் உறக்கத்திற்கு
கொண்டு செல்லவும் கூடும் என மரபணு பொறியியலின் சாத்தியக்கூறுகளை விவரிக்கிறார் ஆசிரியர்.
இதனை, “ஸ்டுவர்டை” நேசிக்கும் பெண் வாயிலாகவும்,
அவன் சிறைபட்டபின் அவளுக்குள் ஏற்படும் உளப்போராட்டங்கள்
வாயிலாகவும், அவளுக்கும் நீதிபதிக்கும் இடையேயான விவாதங்கள் மூலம் அறியலாம்.
எழுத்தாளர் அம்பை அவர்களின் ஒரு கதைகளுக்குள்ளேயான
கதையில் லக்ஷ்மிக்கு மட்டும் படுக்கையில்லாதது ஏன்? விஷ்ணுவில் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார்
என கேட்டிருப்பார். இக்கதையில் முடிவு எனக்கு
அதை நினைவூட்டியது. வெகு நுட்பமாய் எழுதியிருக்கிறார்.
“ஊரும் மனிதன்”
உடல்வளர்ச்சியாலும், குணாதிசியங்களாலும்
வேறுபட்ட மகனை கொண்ட தந்தை அவனை எல்லோரையும் போல இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவங்கள்
பல மேற்கொண்டு தோற்றுப் போகிறார். இந்நிலை
அவனை குணப்படுத்த அமானுஷ்யம் நிறைந்த ஒரு நபரை சந்திக்க முயல்கிறார், அவரை சந்திக்க
முடிந்ததா, எவ்வாறான தீர்வு வழங்கப் பெற்றார் என்று கதை விவரிக்கிறது.
“சில பிரத்தியேக குணங்களுக்கு சில இழப்புகள்
தேவைப்படுகின்றன”.
“ஒரு பறவையாக சிட்டுக்கருவிகள் முழுமையடையவில்லை
என்று
ஏற்றுக்கொள்ள முடியுமா” என்பன போன்று பல வரிகளில்
இதுகாறும் நாம் கொண்டுள்ள எண்ணங்களின் கோணங்களை விரிவாக்குகிறார் எழுத்தாளர்.
“சரோஜாதேவி
புத்தகம்”
எங்கோ ஒரு காப்பகத்தில் வளரும் பையனுக்கு
முன்பின் அறியாத அவனது தாயை ஒத்த வயதில் உள்ள ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படக் கூடுமா? என்றெண்ணி காப்பாளர், மனநல மருத்துவரை அணுகிறார்.
ஃப்ராய்டின் தத்துவங்கள், மரபணுக்களின் ஒற்றுமை, வேற்றுமை வாயிலாக என்ன நடந்திருக்கக்கூடும்
என கதை சொல்கிறது.
“பச்சிலை”
காடுகளின் மீது ஆர்வம் கொண்ட “ஜோஸ்” அமெரிக்காவில்
உள்ள அமேசான் காடுகளை பார்க்க எண்ணி, அதற்கு இணையாக உள்ள காடுகளில் ஒன்றை “வானதி”யின்
தேர்வுப்படி காண இருவரும் காட்டிற்கு செல்கிறார்கள்.
வழியில் “ஞானன்” தன் குடிலில் அவர்களுக்கு
உற்சாக பானம் அளித்து உபசரிக்கிறார். பின்னர் அவர்கள் காடுகளில் பயணிக்க நதி ஒன்றினை
கடக்க இயலாது வேறு வழியில் செல்ல வானதி ஜோஸை தேடி காண இயலாது ஞானனின் உதவியுடன் இருவருமாய்
ஜோஸைத் தேடுகிறார்கள்.
“ஜோஸ்” தன்னைத்தானே எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஒன்று கிடைக்கிறது. அதில் தெரியும் மரத்தினைக் கொண்டு மேலும் இருவரும் தேடுகிறார்.
அவர்கள் “ஜோஸை கண்டடைகிறார்களா? எப்படி கண்டடைகிறார்கள்
” என்பதை கதை வழி படிக்கையில் அமானுஷ்ய உணர்வை தவிர்க்க முடியவில்லை.
எப்போதும்
பெண்:
“பெண் ஏன் அடிமை ஆனாள்? பெரியார் சொன்னது
போலல்லாத வேறொரு கோணத்தில் துவங்கி, மரபணுப் பொறியியலில் உள்ளபடி இயல்பிலேயே பெண்களும்
ஆண்களும் தனித்தனியே சந்திக்கும் பிரச்சினைகளை மரபணுச் சேர்க்கைகளில் மாற்றம் மூலம்
தீர்வினை அறிய அஞ்சலியுடன் தாயான அபியும் (மனநல மருத்துவர்கள்) மரியமும் முயல்கிறார்கள்.
சோதனைகளின் போக்கினை கதைகளில் காணலாம்.
தழுவு கருவி
ராமயண காலங்களில், விமானங்கள் இருந்தனவா
அல்லது அத்தகு கற்பனைகள் தாம் விமானங்களை கட்டமைக்க உதவியதா என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது
ஏற்படும். இன்றைய கற்பனைகள் நாளைய கண்டுபிடிப்புகள்.
விண்வெளிக் கப்பல் மூலம் ஒருவன், கிரகங்களுக்கிடையே
நடத்தும் பயணமும், அக்கிரகங்களுக்கு தகுந்தாற்போல அவன் எவ்வாறு தகவமைத்துக் கொள்ள கூடும்
என பல ஆச்சர்ய கற்பனைகள் கொண்டுள்ளது கதை.
தன் பாட்டிக்கும் தனக்குமிடையேயான ஒற்றுமையும்,
அவள் பால்தான் கொண்டுள்ள ஈர்ப்பும், எவ்வாறு சிறை செல்கிறான் எப்படி மீள்கிறான் என
கதை இயம்புகிறது.
“உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது
அது தன் இலக்கு நோக்கி செல்லத் துவங்குகறிது” “இசையில் தொலைவதும் இசைக்கு நிகரான சோடியாக்கில்
தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்று தான்” என அவன் தாய் கூறுகிறாள்.
திரும்ப திரும்ப கேட்டு அவன் ரசிக்கும் பாட்டியின்
வக்கிரதூண்ட மகாகாய பாடல், சிறை செல்வது, தப்பிப்பது, கிரகங்கள் பயணம் எல்லாமே தற்செயலா?
கதையை வாசிப்பதன் மூலமே முழு அனுபவத்தை பெறலாம்.
கண்ணாடிச்சுவர்
க்ளாராவும் நான்சியும் உலகளவில் முதலில்
தோன்றிய உயிரணு பெண்ணாக இருக்கவேண்டும், பரிணாம வளர்ச்சி அதன்பிறகு எவ்விதம் தொடர்ந்தது
என்ன ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பரிசோதனையில் கண்ணாடிச் சுவர்களினூடே
காண்பது என்ன?
ஏற்படும் பிறழ்வுகளின் பக்கவிளைவுகள் என்ன
என கதை இயம்புகிறது.
உயிரணுக்களில் துவங்கி பால்சார இனப்பெருக்கம்,
இயல்புநிலை மீறும் பொழுது சமூகம் அவர்களை பார்க்கும் கோணம் போன்றவற்றை பேசுகிறது கதை.
மாற்றுத்தீர்வு
எழிலும், உத்ராவும் ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணிபுரிகிறார்கள். மூலக்கூறு உயிரியல் படித்து பணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்,
சாகாவரத்திற்கான மருந்தை கண்டிப்பது நிறுவனத்தின் நோக்கம்.
இதற்காய் அவர்கள் செல்லும் வழியில் திருமய்யம்
கோயிலில் அவர்கள் உணரும் இனம்புரியா சலனம், தூணில் பொறிக்கப்பட்டுள்ள உருவம், அதைத்
தொடர்ந்து அவர்கள் செய்யும் பயணம், காட்டில் அவர்கள் சந்திக்கும் பெண் அவள் கூறும்
செய்திகள் சாகாவரத்திற்கான தீர்வை நோக்கி இட்டு
சென்றதா இல்லையா எனக் கதையில் காணலாம்.
சோஃபீ
நிறுவனம் தந்த கட்டாய பணி ஓய்வுக்கு பிறகு
பசுபிக் பெருங்கடலில் புதியதாய் உதயமாயிருக்கும் ஒரு தீவில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்
க்ளாரா.
போட்டிகள் நிறைந்த ஆராய்ச்சித்துறையில் ஒரு
புத்தம்புதிய ஆராய்ச்சியை யாரும் அறியாமல் குறிப்பாக யாரும் அதன் தகவல்களைப் பயன்படுத்தி
காப்புரிமையை அவர்கள் பெயரில் பதிந்து கொள்வார்களோ என தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு
இத்தகு தீவினைத் தேர்ந்தெடுத்து தனது ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அவர் எவ்வாறு எத்தகைய
படிநிலைகளை கடந்து சோஃபியைக் கண்டடைகிறார்.
சோஃபியின் சக்தி என்ன என்பதை கதை நம் முன்னே
படம் பிடித்து காட்டுகிறது.
இயல்பாகவே மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கொண்ட
மரபணுக்கள் சூழலுக்குத் தகுந்தாற்போல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதை பரிணாம வளர்ச்சி
என்று அறிகிறோம்.
மரபணு மாற்றங்களால் உருவாக்கப்பட்ட தாவரங்களின்
நன்மை, தீமைகளைப் பற்றி அறிவோம். மனிதர்களின் மரபணுக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக்
கொண்டு சில சிக்கல்களுக்கு தீர்வுகாண இயலும் என்ற நேர்மறையான கருத்துக்களை இக்கதைகள்
தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
இத்தகு அறிவியல் பேசும் கதைகளை தமிழில் படித்ததில்லை.
வெகு குறைவே ஆயினும், படித்த கேட்ட, தமிழ் நூல்கள், உணர்வுகள், சமூக அலுவலங்கள், பொருளாதார
மேம்பாடு, மருத்துவம்,வரலாறு, தனிமனித மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி பேசியது.
விஞ்ஞான கதைகளில் மரபணுக்களை கருப்பொருளாகக்
கொண்டு, என்னை அதீத உணர்வுக்களுக்குள்ளாக்காது (நான் படித்த கதைகளினால் உணர்ச்சி வசப்படக்கூடிய
நபர்) நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி,மேலும் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகளை
அமைத்தது சிறப்பு.
விஞ்ஞான கதைகளினுடே உள்ள மெய்ஞான தத்துவ
விசாரிப்புகள் இலக்கியம்.
இவ்வாறாக வெவ்வேறான கதைகளில், மரபணுக்களை
சாராம்சமாக கொண்டு, பிரதியெடுப்பது மரபணுக்களின் கட்டமைப்புகளால், ஏற்படக்கூடிய அல்லது
ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கான சாத்தியக் கூறுகளையும் கிரகங்களைப்பற்றியும், மரங்கள்,
காடுகள் பற்றியும் சாகாவரம் பற்றியும், நுட்பங்கள் வாயிலாக சுவாரசியமான கதைகள் தந்து
அனுபவங்களை பகிர வாய்ப்பளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியுடன்
நவில்கிறேன்.