என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 9 February 2020

தமிழும் ஃபெயிலியர் மாடலும்

தமிழும் ஃபெயிலியர் மாடலும்


உலகின் மூத்த மொழி, ஆதித்தமிழர் மொழி என்றெல்லாம் தமிழுக்கு பெருமைகள் பல இருப்பினும், தமிழ்ச்சமூகங்களுக்குள்ளேயே தமிழில் எழுதப் படிக்க தெரியாதவர்களின் தலைமுறையாக இன்றைய தலைமுறை இருக்கிறது.  போகப்போக இது எப்படி உருமாறும் என்று கொஞ்சமே கொஞ்சம் கணித்தாலும் பகீரென்று இருக்கிறது.

நம்மூரில் சில வழமைகள் இருக்கின்றன. தமிழ்க் கவிஞர் என்றால் ஜோல்னா பை சகிதம், ஆல மரத்தடியிலோ அல்லது ரயில் நிலைய பிளாட்பாரங்களிலோ அமர்ந்து பேனாவும், காகிதமுமாய் காணப்படும் ஒருவர் என்ற பிம்பம் முன்னர் இருந்தது. அந்த பிம்பம் இப்போதும் அதிகம் மாற்றத்துக்குள்ளாகவில்லை. இப்போதும் தமிழ் எழுத்தாளர் தமிழில் எழுதிவிட்டு அரசு பேருந்துக்கு வெய்யிலில் காத்திருப்பவராக, மாதத்தின் முதல் பாதி தாண்டிவிட்டால் கையைப் பிசைபவராக தான் இருக்கிறார். தமிழில் இயங்குபவர்களுக்கு யாரும் பெண் தரவோ, பெண் எடுக்கவோ கூட முன்வருவதில்லை. சமூகத்தில் பெரிய அங்கீகாரமோ, மரியாதையோ இல்லை.

இந்த பிம்பம் தமிழுக்கும், 'தமிழால்' என்ற கருத்தாக்கத்துக்கும், 'ஒரு ஃபெயிலியர் மாடல்' என்ற பட்டத்தை மட்டுமே அளிக்கிறது. தமிழில் படிப்பதை, எழுதுவதை பலர் உயர்வான ஒன்றாகக் கருதுவதில்லை. பொது இடங்களில் அது தானாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை அளித்துவிடுகிறது.

ஆனால் இந்த நிலை மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கனவுகளில் தமிழ் எழுத்தாளனும், கவிஞனும் ஒரு அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர், கவிஞருக்கு நிகரான பிரபல்யமும், வாழ்க்கையும் பெறுபவனாக இருக்கிறான்.

ஐ.டி. துறை அடைந்திருக்கும் வரவேற்பை தமிழ் மொழி  அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ் மொழி, ஆங்கில மொழி இப்போது அடைந்திருக்கும் வரவேற்பையும் மதிப்பையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆங்கிலம் நடப்பு உலகின் அறிவியலையும் கணிதத்தையும் வெளிப்படுத்துவது அந்த மொழியை இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து உயிர்ப்பில் இருக்குமாறு செய்கிறது. இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்பில் இருக்கும் ஒரு மொழி, குறைந்தது நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு உயிர்ப்பில் இருக்குமென்று கணிக்கப்படுகிறது.

இந்த நிலையை தமிழ் அடைய வேண்டுமானால், தமிழும் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரி. அறிவியலையும் கணிதத்தையும் பேசுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்து என்ன? அதைச் சந்தைப்படுத்தி தமிழால் ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகும் என்ற பிரஞையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கனவு பகுதியாக ஐ.டி. துறையில் இருந்துகொண்டே தமிழில் இயங்கும் எழுத்தாளர்களால் சாத்தியப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். தமிழில் எழுதும் ஐ.டி துறை சார்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணிசமானது. இவர்கள் முன்னிருத்தப்பட வேண்டும்.

இப்படிச்செய்வதால் 'தமிழால்' என்ற கருத்தாக்கம், ஒரு சக்ஸஸ் மாடலாகப் பார்க்கப்படும் என்று நம்புகிறேன். எது சக்ஸஸ் மாடலாக இருக்கிறதோ அது மக்களால் தன்னாலேயே விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகும்.
இது கிட்டத்தட்ட அமெரிக்க அரசு திவாலான வங்கிகளுக்கு பண உதவி செய்வதன் மூலம், உலகளாவிய வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் வாயிலாக பொருளாதார சுழற்சியை மேம்படுத்துவது போலத்தான்.

இவை யாவும் என்னுடைய  நம்பிக்கைகள் மட்டுமே. நான் தமிழில் கணித நாவல் எழுதியதன் பின்னால் இருக்கும் பல காரணங்களுள் இதுவும் ஒன்று. தமிழை எப்படியேனும் ஒரு சக்ஸஸ் மாடலாக்க வேண்டும். அதற்கு தமிழ் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேசவேண்டும்.

எப்படி ஆங்கிலத்தில் ஹாரி பாட்டரும், அவெஞ்சர்ஸ் மற்றும் மார்ஷியன் போன்ற நாவல்கள் நடப்பு உலகின் அறிவியல் மற்றும் கணிதம் பேசுகிறதோ அது போல.

ஒரு தமிழ்ப் புத்தகத்தையாவது வாங்குங்கள் என்று கெஞ்சக்கூடாது. மாறாக, தமிழ் நூல்கள் செருக்குடன் புத்தகச் சந்தையை எதிர்கொள்ள வேண்டும். தமிழ் நூல்களை நோக்கி மக்கள் தாமாகவே வருமாறு செய்ய வேண்டும். தமிழுக்கு ஒரு dignified பிம்பம் உருவாக வேண்டும். அதற்கு தமிழின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும்.

எப்படி ஆங்கிலம் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேசுகிறதோ அப்படி தமிழும் பேச வேண்டும். செயற்கைக் கை பற்றி பாண்டிய மன்னரும், மின்சாரம் பற்றி அகத்தியரும் எழுதியிருக்கிறார் என்று இன்னமும் சங்க இலக்கியப் புகழையே நாம் பாடிக்கொண்டிருப்பதே தமிழை பின்னுக்குத் தள்ளும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்.

தமிழில் நடப்புலக கணிதமும் அறிவியலுமே சாத்தியம் என்று பேச வேண்டும். அதுதான் நம்மை நம் தமிழ் மொழியை நாம் விரும்பும் இடத்துக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன்.

இந்தச் சிறிய தமிழ்க் கட்டுரையிலும் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆங்கிலம் தனக்கு வேண்டிய இடத்தில் ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகளை கடன் வாங்கிக்கொள்வது போல. ஏனெனில் ஆங்கிலம் என்பது ஒரு  idea சார்ந்த மொழி. ஒரு ஸ்பானிய அல்லது ஜெர்மானிய ஐடியாவை அமெரிக்க ஆங்கிலமானது, ஸ்பானிய அல்லது ஜெர்மானிய மொழியின் வார்த்தைகளை வைத்தே கையாள்கிறது. அதாவது ஒரு ஐடியாவை அதன் அசலான மூலத்துடனே கையாள்கிறது. அங்கே அந்த ஐடியாவுக்கு நிகரான ஆங்கில வார்த்தை என்ன என்று தேடுவதில்லை.  ஒரு ஐடியா மனதில் உருவாகையில் அங்கே ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தால், அதில் கவனம் செலுத்தினால், ஐடியா பின் தங்கிவிடும் என்பதுதான் காரணம்.

இங்கே மொழி முக்கியமல்ல. ஐடியா தான் பிரதானம். மொழியே ஐடியாவின் விளைவாகத்தான் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போல தமிழாலும் idea சார்ந்த மொழியாக வேண்டியது காலத்தின் போக்கில் உருவாகும் தேவை என்றே கருதுகிறேன்.