என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 19 February 2020

சில கவிதைகள்

நாடகங்களின் தேவைகள் - கவிதை


ஏதோவோர் நாடகத்தின் பாதையில்
ஒருமுறையேனும்,
எப்போதேனும்
குறுக்கிட்டே விடுகிறோம்...

அது ஒரு தேர்வு என்று
நாம் அறிவதில்லை...

நம்மைத் தேர்ந்தெடுக்க‌ நம்
இருப்பும்,
இயல்புகளும் மட்டுமே
அவைகளுக்கு போதுமென்பதை
நாம் உணர
அவைகள் எப்போதுமே அனுமதிப்பதுமில்லை...

- ராம்ப்ரசாத்















காட்டுப் பாதைகள் -  கவிதை 


நம்மையும் அறியாமல்
தவறுதலாக என்றேனும்
காடுகளுக்குள் நுழைந்துவிடுகையில்
நாம்
குழம்பித்தான் போகிறோம்...

காடுகளுக்கு எவ்வாறு
ஒரு துவக்கம் இருக்கிறதோ,
அவ்வாறே
ஒரு முடிவும் இருக்கிறது...

காட்டை விட்டு
வெளியேறும் பாதையில் தான்
பயணிக்கிறோம் என்றெண்ணியவாறேதான்
நாம் கிடைத்த பாதைகளிலெல்லாம்
பயணிக்கிறோம்...

இறுதியாக
நமக்குக் கிடைத்த பாதைகளை வைத்தே
காடு
நம்மில் உருக்கொள்கிறது...


 - ராம்ப்ரசாத்