என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 4 February 2020

வதுவை (குறுநாவல்) - விமர்சனம் - சீனிவாசன் பாலகிருஷ்ணன்

வதுவை (குறுநாவல்) - விமர்சனம் - சீனிவாசன் பாலகிருஷ்ணன்






வேலை தேடி அலையும் இளைஞன் ஒருவனுக்கு திருமண தகவல் மையத்தில் வேலை கிடைக்கிறது. திருமண தகவல் மையம் என்றால் கொஞ்சம் மொக்கையாகத் தோன்றுகிறது இல்லையா? இந்தியாவின் தலைசிறந்த மேட்ரிமோனி நிறுவனமான முக்தி மேட்ரிமொனியில் வேலை. அவனை வேலைக்கு எடுக்கும் நிறுவன அதிபர் அவனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து நாமும் கதைக்குள் பயணிக்கத் தொடங்குகிறோம். அந்த பதிலைப் பற்றி கூறும் முன் நாவலாசிரியர் குறித்து ஒரு தகவல். ராம் பிரசாத் கணிதவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்த போது கொஞ்சம் ஆச்சரியமாகவும், கணிதவியல் சார்ந்து எழுதப்பட்ட ஒருசில புனைவுகளில் ராம் பிரசாத்தின் புனைவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற தகவலும் அவர் உழைப்பின் மீது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமண தகவல் மையத்தில் வேலையில் சேர்ந்த கையேடு அவனுடைய வாழ்க்கையிலும் சில மாற்றங்களை மேற்கொள்கிறான். அதில் முதலாவது அவன் அதுவரைக்கும் தங்கியிருந்த அறையை மாற்றுவது. திருமண தகவல் மையத்தில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் அறைத்தோழர்களாக மாறுகிறான். வினீத், கௌரவ், ப்ரியா, பாயல் என அர்ஜூனும் அவர்களுடன் சேர்ந்துகொள்வதன் வாயிலாக சில சுவாரசியமான தருணங்களை எதிர்கொள்கிறான். ஒரு வீட்டை இளவயது ஆண் மற்றும் பெண் தோழர்கள் பங்குகொள்வது என்பதை நினைக்கும் போதே சற்றே குறுகுறுப்பு ஏற்படுகிறது என்றாலும் அதே போன்ற மனநிலைக்குத்தான் அர்ஜுனும் தள்ளப்படுகிறான். அதன் சாதக பாதகங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிபடுகிறது.

இடையே பணி நிமித்தமாக அர்ஜூன் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறார்கள். திருமண பந்தம் ஏற்படுத்துவதற்காக அர்ஜுன் சந்திக்கும் அவன் வாடிக்கையாளர்களும் சரி அர்ஜுனும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அர்ஜுனின் வாடிக்கையாளர்களாக வந்து சேரும் நபர்கள் கிருஷ்ணா மற்றும் ஆர்த்தி.

கிருஷ்ணா சற்றே வித்தியாசமான மனிதன். படைப்பு சார்ந்து இயங்கும் கலைஞன். அழகன். கட்டுமஸ்தான உடற்கட்டமைப்பைக் கொண்டவன். புறவயத் தோற்றங்களின் படி எல்லாவித்ததிலும் ஒரு திருமணத்திற்கு தகுதியானவன். ஒரேயொரு குறையைத் தவிர. கிருஷ்ணா ஒரேயொருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவன் என்பதைத் தவிர. அவனுடன் நெருங்கிப் பழகும் அர்ஜுன், கிருஷ்ணாவுடன் ஒருவித தோழமை உணர்வு ஏற்படுத்தை கவனிக்கிறேன். அவனுக்கு எப்படியேனும் நல்லதொரு வரன் அமைத்துக்கொடுத்துவிட வேண்டும் தீவிர தேடலில் இறங்குகிறான். கிருஷ்ணாவிற்காக அவன் ஒப்பீடு செய்யும் வரங்கள் அனைவரும் கிருஷ்ணாவைப் பின்தொடரும் விவாகரத்து என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கு எந்தப் பெண்கள் எல்லாம் பொருத்தமாக இருக்கும் என நினைத்தானோ அந்தப் பெண்கள் அனைவரும் அவர்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத கனவான்களை கணவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த குழப்பமான விந்தை அர்ஜுன் அதுவரைக்கும் கட்டமைத்திருந்த உலகை வேறு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. இடையே அவன் அறைக்குள் நிகழும் காதல் மற்றும் கள்ளக் காதல் களியாட்டங்கள், அறை தோழி ப்ரியாவுடன் மலரும் காதல், ஊடல் என அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த உலகை மிகத்தீவிரமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நாயகனின் பார்வையில் விரிகிறது.

தனுஜா என்கிற நவநாகரிக மாடல் உடனான தொடர்பு அவனுக்கு சற்றும் தொடர்பு இல்லாத வேறோர் உலகை அறிமுகம் செய்கிறது. நாவல் முழுக்க அர்ஜுன் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஏதோ ஒரு விதத்தில் அவனுள் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அவனும் அவர்கள் உலகில் சிறு அசைவையேனும் நிகழ்த்துகிறான். இந்த வேலை அவனுக்கு பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் ஒருசேர கற்றுக்கொடுக்கிறது. ஒருசமயம் சந்தோஷத்தையும் ஒரு தருணம் மனப் பிறழ்வையும் உண்டு செய்கிறது. மனம் பிறழ்ந்த தருணங்களில் அவன் செய்யும் காரியங்கள் சில அதிர்சிகரமான தேடலில் சென்று சேர்க்கின்றன. அதன் மூலம் வேறோர் நிழல் உலக பரிட்சியம் ஏற்படுகிறது. கண்ணுக்கும் முன் அவன் கணக்கும் போட்டு கட்டமைத்த சில கணங்கள் அவன் எதிர்பார்த்தது போலவே நிகழ்கின்றன, சில புதிராக தலைகீழ் மாற்றம் பெற்றுள்ளன.

அர்ஜுன் எதிர்பார்த்தது போல கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்து வைத்தானா? ப்ரியா என்னவானாள்? வினீத்தின் கள்ளக் காதல் என்னவாயிற்று? நிழல் உலக குற்றவாளிகள் என்னவானார்கள் என புதிர்போட்டு அந்தப் புதிரை சுவாரசியமாக அவிழ்த்திருக்கிறார் நாவலாசிரியர் ராம் பிரசாத். வதுவை என்கிற இந்த குறுநாவல், தற்கால இளைஞர்களின் மனவோட்டத்தையும், நவீன திருமண தகவல் மையங்கள் இயங்கும் முறையை கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  

 நன்றி
சீனிவாசன் பாலகிருஷ்ணன்