மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு
நூல் விமர்சனப் போட்டி 2025
மரபை முன் மொழியும் மரபணுக்கள்
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கு ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன என்றாலும், நிகழ்வுகள் குறித்தான நினைவுகள் மட்டும் காலம் முழுமைக்கும் மனதில் பொங்கிப் பிரவாகமாக அலையடித்துக் கொண்டே இருக்கும். அப்படியான அலையாக ராம் பிரசாத்தின் மரபணுக்கள் (வாவ் சிக்னல் – II விஞ்ஞான சிறுகதைகள்) சிறுகதைத் தொகுப்பு நூலும் எதிர்ப்படுகிறது.
மரபணுக்கள் தொகுப்பில் பொதிந்த எழுத்தும் உரை நடையும் விஞ்ஞானத்தின் துணையோடு கதைகளாக எதிர்ப்படுவதோடு தொன்மம், வரலாறு, பண்பாடு, கலை, அரசியல் யாவும் இணைந்தே வருகிறது. அதுவே உரைநடையை சுவாரஸ்யமாகவும் முக்கியமானதாகவும் மாற்றுகின்றன.
மரபணுக்கள் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள். அனைத்து கதைகளும் மரபணுக்கள் குறித்தும், அவை நிகழ்த்தும் கூறுகள் குறித்தும் அவற்றின் பரிமாணங்கள் குறித்தும் பேசுகின்றன. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதன் மனிதனாக இருக்க மரபணுக்கள் தான் காரணம் என்பதையே மையப்படுத்தி நிற்கிறது.
அஃறிணைப் பொருட்களை மட்டும் பிரதி எடுத்து பயன்படுத்தப்படுவதை அறிந்திருக்கும் நமக்கு நகமும் சதையுமாக இன்னொரு பிரதியாக உயிருள்ள மனிதன் பிரதியாக எதிர்ப்பட்டால் என்ன நிகழும் எப்படி இருக்கும் என்ற சாத்தியக்கூறை ஆராய்ந்து (நடை முறை படுத்தி) அதன் பல்வேறு பரிமாணங்கள் ஆச்சர்யத்துடன் காட்டுகிறது பிரதியெடுக்காதே கதை. மரபணுக்களுக்கு வெளியே உள்ளவைகளை மாற்ற நமக்கு பிரதிகள் தேவையில்லை என்ற கருத்தை ஓங்கிச் சொல்லுமிடமும், பிரதிகள் மாற்றுப் பிரபஞ்ச அளவில் உறவை மென்மேலும் மலினப்படுத்தும் என்ற கருத்தும் யோசிக்க வைத்து ஒத்துக் கொள்ள வைப்பது அபாரமாக இருக்கிறது.
சிறுகதைகளுக்கு மொழி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மொழி இலகுவாக, எளிமையின் உன்னதத்தோடு வாசிப்பாளனுக்கு அருகில் நின்று பேசும் தன்மையுடன் இருக்கிறது.
விஞ்ஞான கருத்துக்களும் அதன் வீச்சு சார்ந்த விஸ்தாரமும் மெல்லிய கோட்டில் வழுவாமல் நடப்பதற்கு இணையாக இருக்கிறது. அந்த வகையில் எந்த இடத்திலும் தடம் பிசகாமல் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் முன்வைத்து நகர்கிறது.
காலத்தின் போக்கில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. நடுவு நிலை என்ற ஒன்று இருப்பினும் அதைத் தீர்மானிப்பது யார், எது துவக்கத்தில் நாடகீயமான பொழுது போக்கிற்கு பயன்படும் என்று கணிக்கப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை புரட்டிப் போட்டது போன்ற கருத்துக்களையும், கேள்விகளைகளும் தரவுகளோடு ஆராய்கிறது சேஷம் சிறுகதை. வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என்ற கூற்றும், அவன் முன்பு சர்ப்பமாகி சிறையிலிருந்து தப்பி இருக்கக் கூடிய சாத்தியக் கூறும் உலகின் விசித்திரங்களையும் ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும் பாசாங்கின்றி அசலான அமைப்பை தரிசிக்க உதவுகிறது. இறுதியாக கால் நீட்டி படுத்துக் கொள்கையில் அவன் தன் உடல் என்னும் மடியை படுக்கையாக்கி அதில் கிடத்தி தன் ஐந்து தலைகளால் உடலைத் தாங்கி நிற்பதும், பிரபஞ்சமே கைகூப்பித் தொழுவதுமாக நிறைவுறுவது பரவசப் பொருளாய் இருக்கிறது. ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள் கால் நீட்டி சயனித்திருக்கும் காட்சி கண்களில் நிறைந்து நிற்கிறது.
நாம் அனைவரும் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல் கல்லிலும் எதையோ இழந்து எதையோ பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்கிறது ஊரும் மனிதன் கதை. இயற்கை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறது, அந்த அவதானிப்பு பார்வையால் அல்லாது இயக்கத்தால் நடைபெறுகிறது என்ற கருத்து உள்ளார்த்தமாகப் பாய்ச்சுகிறது. அதே நேரம் வேறுபாடுகள் யாவும் பிறழ்வுகள் என்பதும் இயற்கையின் இயக்கத்தின் பண்புகள் என்பதும் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. விட்டு விலகி வந்ததற்கு மீள்வது குறித்தே கவலை கொள்ளும் மனிதர்கள் அருகாமையில் இருப்பது குறித்து கவலை கொள்வதே இல்லை என்ற கேள்வியும் அதற்கு மௌனம் சாதிக்கும் பதிலும் உண்மையின் வெளிப்பாடுகளாக இருக்கிறது.
மரபணுக்களால் நிகழ்ந்த மாற்றங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் விளக்கும் மற்றொரு அற்புதக் கதை சரோஜாதேவி புத்தகம். எல்லோரும் கடந்து வந்திருக்கும், விடலைப் பருவத்திற்கே சொந்தமான ஒன்றான பதின் வயதில் காமுறும் தருணத்தை ஆராய்ந்து சொல்வதுதான் கதையின் மையம். சிக்மன் ஃபிராய்டின் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படுவதும். மரபணுக்களின் ஆய்வுகளால் முடிவு கண்டறிப்படுவதையும் சரோஜாதேவி புத்தகங்கள் செய்த சேவையுடன் தொடர்புபடுத்தி விளக்குமிடம் யதார்த்த நிஜத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
எனக்கும் உங்களுக்கும் ஒரே மரபணுதான் எனில் நான் தான் நீங்கள், நீங்கள்தான் நான் எனும் கேள்வி எதிர்ப்படும் இடம் சுவாரஸ்ய முடிச்சு. சொல்லப்போனால் தொகுப்பில் உள்ள கதைகளான பச்சிலை, தழுவு கருவி, கண்ணாடிச் சுவர், மாற்றுத் தீர்வு போன்றவை விலாவரியாக விமர்சிக்கவும் விவாதிக்கவும் சாத்தியக் கூறுகளை கொண்டு இருக்கவே செய்கிறது. அதே நேரம் கதைகளை முன் மொழியும் எழுத்து நடை கதைகளைப் படிக்கும் சுவாரஸ்யத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருப்பது தனி கவனத்தை ஈர்க்கிறது. கதைகள் அனைத்திலும் சுவாரஸ்யத் தகவல்களும் வரலாற்றுப் பதிவுகளும் நிறைந்திருக்கிறது.
மரபைத் புரிந்து கொள்ளாதவரை புதுமையை படைக்க முடியாது என்பார்கள். அது மரபணுக்களுக்கும் சாலப் பொருந்தும். மரபையும் மரபணுக்களையும் முழுமையாக உள்வாங்கி புதுமையைப் படைக்கத் தெரிந்த படைப்பாளியாகவும் தான் அறிந்ததை அடுத்தவருக்கும் புரிய வைக்கும் வல்லமை படைத்தவராகவும் எதிர்ப்படுகிறார் ராம்பிரசாத்.
அதற்கு மரபணுக்கள் தான் காரணம் என்றும் சொல்லாம்!!
X X X
ஸ்ரீநிவாஸ் பிரபு,
சென்னை