வேற்று கிரகத்தில் உயிர்கள்
K2-18b கிரகம் இருப்பது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், அதுவும் leo நட்சத்திரக் கூட்டத்தில்.
இந்தக் கிரகம் இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரு இந்திய ஆராய்ச்சியாளரால், K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமான DMS அதாவது dimethyl sulphide கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் இன்றைய முகநூல் வெளியை ஆக்ரமித்திருக்கின்றன.
கண்டு சொன்னவர் ஒரு இந்தியர் என்பதுவும், இந்தச் செய்தி வைரல் ஆனதற்கு ஒரு காரணம்.
உடனே இணையமெங்கும் fermi paradoxக்கு பதில் கிடைத்துவிட்டது, K2-18b கிரகத்திற்கு probe அனுப்ப முடிவு செய்திருக்கிறது நாசா என்றெல்லாம் சூடாக செய்திகள் பரவத் துவங்கிவிட்டது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், 124 ஆண்டுகளுக்கு முன்னான ஒளியை வைத்துக்கொண்டு, இப்போதே நல்ல நிலையில் இருக்கும் பூமியை சரிசெய்வதை விட்டுவிட்டு, புதிய கிரகம் எப்போது தாவலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள் என்று கேலியும் கிண்டலும் கூட இணையத்தில் அதிகம் காண முடிகிறது.
முதலில் ஒன்றைத் தெளிவாகப்பார்த்துவிடலாம்.
DMS எனப்படும் dimethyl sulphide மட்டுமே உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமாகக் கொண்டு விட முடியாது. அது, உயிர்கள் இருப்பதால் மட்டுமே வெளியிடப்படும் வேதிப்பொருள் இல்லை. இந்த வேதிப்பொருள் இயற்கையான முறையிலும் வெளியாகலாம். இதே வேதிப்பொருள் 67P/Churyumov-Gerasimenko காமட்டில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே உயிர்கள் என்று எதுவும் இல்லை. ஒரு நட்சத்திரத்தின் ஃபோடான்கள், கிரகத்தின் வான்வெளியில் உள்ள வேதிப்பொருட்களுடன் மோதுகையில் கூட DMS வெளிப்படுகிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, DMS இருப்பதே உயிர்கள் இருப்பதற்கான சமிஞை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அறுதி உண்மை.
நமக்குத் தொடர்ந்து தகவல்கள் தேவை. அது தற்போது நம்மிடம் இல்லை. அதற்கு இன்னும் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இன்னும் அதிகம் செலவாகும். இன்றோ நாளையோ சாத்தியப்பட்டுவிடும் காரியம் அல்ல. ஒளி ஒரு நொடியில் சென்றடையும் தூரமான சனிக்கிரகத்திற்கு, நம்மிடம் இருக்கும் அதி வேகமான விண்கலன் செல்ல சுமார் ஏழு வருடங்கள் ஆகும். உதாரணம்: Cassini. இதுதான் நம்மிடம் இருக்கும் உச்ச தொழில் நுட்பத்தின் வேகம்.
அப்படியிருக்கையில், 124 ஒளி ஆண்டுகள் தூரத்தை நாம் சென்றடையத் தேவையான தொழில் நுட்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட சாத்தியமில்லை. ஒருக்கால் இன்னும் இருபது ஆண்டுகளில் அதை மனித இனம் செய்துவிடமுடியும் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், அதுவரை நம் பூமி, குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போல, தொடர வேண்டும். அதுவே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதுதான் நிதர்சனம். ஆகையால், நாம் எல்லோரும் தரையில் நடப்போமாக.