என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 10 April 2025

Tartigrade என்னும் ஏலியன்

 Tartigrade என்னும் ஏலியன்



டார்டிகிரெட்ஸ் பற்றிப் புதிதாக நான் அறிமுகம் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த, அழிவே இல்லாத உயிரிணங்கள் இவைகள். பூமியில் காலத்தை வென்ற உயிரிணங்கள் வெகு சில மட்டுமே. உதாரணமாக, முதலைகள். முதலைகளுக்கு வயது, வயோதிகம் என்பதே கிடையாது. அவைகள் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது உண்ண உணவு கிடைக்காமல் போனாலோ தான் இறக்குமே ஒழிய இயற்கையாக மரணிப்பதே இல்லை.

அதே போல, விண்வெளியின் வெற்றிடத்திலும், மைனஸ் இருநூற்றைம்பது டிகிரி குளிரிலும், சூரியனின் கதிர்வீச்சிலும் கூட அழிந்து போகாமல் நீடிக்கும் தன்மை கொண்ட மற்றொரு உயிர், டார்டிகிரெட்ஸ். இவற்றின் வினோதத் தன்மைகளுக்காய், இவைகளையே வேற்று கிரக வாசிகள், ஏலியன்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இவைகள் எப்படி இயற்கையின் மிக மிக மோசமான சூழலிலும் அழியாமல், உயிர் பிழைக்கின்றன என்பது இதுகாறும் பெரும் புதிராய் இருந்தது.  நமக்கெல்லாம் விண்வெளிக்குச் சென்றால், நம் உடலைக் காக்க, Spacesuit தேவை. பிராணவாயு தேவை. ஆனால், டார்டிகிரேட்களுக்கு அப்படி அல்ல. அவைகள் எந்த ஒரு மோசமான சூழலிலும் உயிர் பிழைத்திருக்கும். இது ஒரு பெரும் புதிராக இருந்தது. அந்தப் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை தேடிக் கண்டடைந்திருக்கிறார்கள்

இந்த டார்டிகிரேட்கள் சில புரதங்களை உற்பத்தி செய்கின்றனவாம். அந்தப் புரதங்கள் தான் இவைகளின் உயிர் பிழைத்தலுக்கு அச்சாணி என்கிறார்கள். உதாரணமாகக் கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி வந்தால், இந்த புரதங்கள் இவற்றின் மரபணுவைச் சுற்றி அரண் போல தகவமைந்து கொள்ளுமாம். இதனால், மரபணுக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. 

 பூமியில், இப்போதைக்கு, மனித இனம் , ராப்பகலாகத் தேடும் சாகாவரத்தை, இந்தச் சின்னஞ்சிறிய உயிர்கள் இயல்பிலேயே பெற்றிருப்பது அதிசயம் தானே.