2024YR4
2032ல் ஒரு விண்கல் பூமி மீது மோத இருக்கிறது என்கிறார்கள். உடனே பதர வேண்டாம்.
விண்கல்லின் பெயர் 20242YR4. இதன் விட்டம் 50லிருந்து நூறு மீட்டர் இருக்கும் என்கிறார்கள். 2032க்கு இன்னும் 7 வருடங்கள் இருக்கிறது. இப்போது கையிலிருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கையில் தோராயமாக இங்கே தான் பூமியை அது அண்மிக்கும் என்று ஒரு வரைபடம் வரைந்திருக்கிறார்கள். அதன் படி, கிட்டத்தட்ட நிலவு இப்போது இருக்கும் இடத்தருகே பூமி மீது மோதாமல் கடந்து போகத்தான் பெரும்பான்மை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், பூமி மீது மோதவே செய்யாது என்றும் சொல்வதற்கில்லை. அதற்கும் சில சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கிறது.
இந்த தீர்மானமின்மைக்குக் காரணம், Data தான். 2028-2029களில் நமக்கு மேலதிகமான துல்லியமான தகவல்கள் தெரியவரலாம். அப்போது, இந்தளவிற்குத் தீர்மானமின்மை இருக்காது, ஓரளவுக்குத் துல்லியமாகவே நம்மால் இந்த விண்கல் பூமி மீது மோதிவிடுமா அல்லது கடந்து போய் விடுமா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அதுவரை நாம் பொறுக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது.
ஒரு ஒப்பீட்டுக்கு, டைனோசார்களை அழித்த விண்கல் சுமார் பத்து முதல் பதினைத்து கிலோமீட்டர் விட்டமுடையதாம். அதை ஒப்பிட்டால் 2024YR4 அத்தனை பெரிது இல்லைதான். அதற்காக, அப்படியே விட்டு விட முடியுமா என்ன?