என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 22 August 2025

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்


இப்படித்தான் அந்த நூல் எனக்குப் பரிச்சயம் ஆனது. இரா.முருகவேள் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  இந்த நூலை முழுமையாக வாசிக்க எனக்கு நேரம் அமையவில்லை. ஆனால், பகுதியாக வாசித்திருக்கிறேன். அந்த வாசிப்பனுபவம் எனக்குத் தந்தவைகள் எழுத்து குறித்த எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவின என்றால் அது மிகையில்லை. 

'எரியும் பனிக்காடு' நாவல் , PH Daniel அவர்கள் எழுதிய 'Red Tea' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு என்பது முதல் தகவல். 1941 முதல் 1965 வரை, அவர் தேயிலை தோட்டங்களில் மருத்துவராய் வேலை செய்த போது,   தான் கண்டுணர்ந்த தேயிலை தோட்டத்துப் பணியாளர்களின் வாழ்வை இந்த நூலில் பதிவு செய்கிறார்.

இதில் எனக்கு எழுந்த கேள்வி, ஒருக்கால், இந்த டேனியல் என்பவர் எழுத்தில் ஆர்வம் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பல மருத்துவர்கள் போல் இருந்திருப்பாரேயானால், நமக்கு ரெட் டீ  நூல் கிடைத்திருக்காது. இல்லையா? 

1941 முதல் 1965 வரை வாழ்ந்த எத்தனை மருத்துவர்களுக்கு, தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய வாய்ப்பமைந்தது? அவர்களில் எத்தனை பேருக்கு எழுத்து வசப்பட்டிருந்தது? அவர்கள் எல்லோருக்கும் ரெட் ரீ நாவல் எழுதத் தோன்றியதா? அப்படித் தோன்றியிருந்தால் இத்தனை நேரம் நமக்கு பல வெர்ஷன்களில் தேயிலைத் தோட்டத்துப் பணியாளர்கள் குறித்து கதைகள் கிடைத்திருக்க வேண்டுமே? அப்படி இல்லையே. ஆக, ரெட் டீ நூலை உருவாக்க, இந்த இயற்கை வலிந்து, எழுத்தில் ஆர்வம் உடைய ஒரு மருத்துவரை இக்காலகட்டத்தில் கச்சிதமாக அஸ்ஸாமுக்கு அனுப்பியிருக்கிறது என்று தான் அர்த்தமாகிறது. அல்லவா? இதன் பின்னால் ஒரு துல்லியம், ஒரு நைச்சியமான திட்டமிடல், மற்றூம் அபாரமான ஒருங்கிணைப்பு இயற்கையால் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.  

அப்படியானால், இது கடவுளின் செயல் அன்றி வேறென்ன? வேறு எப்படி இதனை அடையாளப்படுத்த முடியும்? வேறு எப்படி அடையாளப்படுத்தினால் இது பொறுத்தமாக இருக்கும்?

இந்தக் கேள்வி, எழுத்து என்கிற இலக்கிய செயல்பாடு குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வைத்தது எனலாம். இந்தப் பின்னணியில், நான், எழுத்துத் துறையில், முதன்மையானவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்கிற வரிசைகளையெல்லாம் முழுமையாக துவக்கம் முதலே மறுக்கிறேன். 

இயற்கையின் தேர்வு, அதற்கான நோக்கம் , அதன் தொலை நோக்கிய பயன்பாடு ஆகியனவே ஒரு எழுத்தின் இருப்பின் பின்னணிக் காரணிகளாகின்றன என்பது என் அவதானம். இதைத் தாண்டி எழும் வேறு எந்த விதமான புரிதலும், குறை புரிதலே அல்லது முதிர்ச்சியற்ற புரிதலே என்பது என் வாதம். எழுத்து வசப்பட்ட எல்லோரும் எதையோ ஒன்றை ஆவணம் செய்யவே உருவாகிறார்கள். அவர்களை வைத்து, இயற்கை, தான் செய்ய நினைப்பதைச் செய்து முடிக்கிறது. எல்லா எழுத்தின் பின்னாலும் இருப்பது இயற்கையின் ஆற்றல் மட்டுமே, இறை சக்தியின் ஆற்றல் மட்டுமே.

மெளனி 24 கதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். வொல்ஃப் டொடெம் எழுதிய ஜியாங் ராங்க் அந்த ஒரு நூல் மட்டும் தான் எழுதினார். ஆக, எழுத்தாளர்களை இயற்கை எந்தக் காரணத்திற்காக அனுப்புகிறதோ அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அதற்கான உத்வேகம், ஆற்றல், முனைப்பு, பைத்தியக்காரத்தனம், பித்து நிலை,  ஆகியனவற்றை இயற்கை, ஒரு சிற்பி மிகக் கவனமாகத் தன் சிற்பத்தை மிக மிகத் துள்ளியமாகச் செதுக்குவது போல், காரணிகளை உருவாக்கி, சூழல்களைச் செதுக்கி, எழுத்தாளர்களை அதனூடே பயணிக்க வைத்து செதுக்குகிறது. எழுத்தாளன், ஒரு கருவியாய் அவைகளினூடே பயணித்து மீண்டு தனக்கு இயற்கையும், இறை சக்தியும் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுகிறான். அவ்வளவுதான். 

எப்படியாகினும், மூலம், இறைவனுடையது. எழுத்தாளன் என்பவன் வெறும் கருவி என்பது என் வாதமாகவும், பார்வையாகவும் ஆகிறது. சில விடயங்கள் மாறப்போவதில்லை என்பதை நம் உள்ளுணர்வு சொல்லிவிடும். இந்தப் புரிதல், இனி என்னுள் மாறப்போவதில்லை என்பதை அந்த நூலைக் கடக்கையில் உள்ளுணர்வு சொல்லிவிட்டிருந்தது.