என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 24 August 2025

வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

 வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

******************************************


ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது வாசகசாலையின் 116வது இதழ்.

ஜெயபால் பழனியாண்டி எழுதியிருக்கும் பூச்செடி, ஒரு ஃபீல்-குட் கதை. பூச்சி ஒன்று இறந்து போகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அதனை அடக்கம் செய்யும் காட்சிதான் கதை. சிறார்களுக்கே உரித்தான காட்சிகளோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை. 

//மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்// என்று முடிக்கிறார் ஆசிரியர். 


*****************************

மொட்டு மலர் அலர் சிறுகதையில் ஆசிரியர் கமலதேவி கிராம வாழ்வை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார். வாசிக்க வாசிக்க, கிராமத்தில் நாமும் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட ஒரு உணர்வு எஞ்சுகிறது. சிரமேற்கொண்டு நேரமெடுத்து காட்சிகளை வர்ணிக்க உழைத்திருப்பது கதையை வாசிக்கையிலேயே தெரிகிறது. 



*****************************

பாலு எழுதியிருக்கும் 'மரணத்துளிகள் பல கேள்விகளை எழுப்பியது. உண்மையாகவே இப்படி ஒரு  சுகவீனம் இருக்கிறதா? இப்படி சுகவீனப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி ஒரு சுகவீனப்பட்ட பெண்ணின் குடும்பம் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு உள்ளாகும் என்கிற ரீதியில் அமைந்த விவரணைகள் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றன.  இறுதியில் கதையின் திருப்பமும் அருமை.


*****************************

இராஜலட்சுமி எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதையும் கிராமப் பின்னணி கொண்ட சிறுகதைதான். கதாபாத்திரங்களின் இயல்பில்,   தெய்வானைக்கு இறுதியில் என்ன நடக்கிறதோ  அது மட்டும் தான் நடக்க முடியும் என்ற ஸ்திதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான். //இதுக்கு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமதான்...// இப்படி எல்லா தலைமுறைகளிலும் யாரேனும் சொல்லப்படுவார்கள் என்பது உலகமே அறிந்த ரகசியம் தான்.  இது நிச்சயமாக சமூக அமைப்பின் தோல்வி தான். இல்லையா?


*****************************

தாழப்பறா சிறுகதை வெள்ளிப்பட்டறையில் ஊத்து வேலைக்கு வரும் ஒருவர் பற்றிய கதை. பற்பல வேலைகள் செய்துவிட்டு எதிலும் லயிக்காமல் வேலை மாறிக்கொண்டே வருகிறார். வெள்ளிப்பட்டறை வேலைகள் குறித்த விவரணை எனக்குத்தான் புரியவில்லை.கதாசிரியர் கவனத்துடன் எழுதியிருப்பதாகத்தான் தெரிகிறது. 

*****************************


இதிரிஸ் யாகூப் எழுதியிருக்கும் அமானிதங்கள் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த குடும்பமொன்றில் சகோதரிகளின் திருமணத்தின் நிமித்தம் அல்லலுறுபவனின் இக்கட்டை காட்சிப்படுத்துகிறது. பேச்சுவழக்கிலான உரையாடல்கள் அருமை. கபால், கல்பை வாஜிபாயிருச்சி, அஸர் ஆகிய வார்த்தைகள் எனக்குப் புதிது.

இப்போதைக்கு இவ்வளவு தான் வாசிக்க  நேரம் கிட்டியது. எஞ்சிய சிறுகதைகள் வாசித்ததும் எழுதுகிறேன்.