என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 17 August 2025

அரதப்பழசு

 பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று அறிவியல் உலகில் பரவலாக ஒரு கருத்து உண்டு. ஆம். கணக்குகளின் பிரகாரம் அது அவ்விதம் தான். இதன் அடிப்படையில் தான் Big Bang Model

முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கருதுகோளில் கல்லெறியும் வகையில், பிரபஞ்சத்தின் மிக மிகப் பழமையான நட்சத்திரம் HD 140283ன் வயது 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். தூக்கிவாரிப்போடுகிறது இல்லையா?

ஆம். லிப்ரா நட்சத்திரக்கூட்டத்தில் தான் இருக்கிறது இந்த அரதப் பழசான நட்சத்திரம். இதற்கு ஒரு செல்லப்பெயரும் உண்டு. "Methuselah".

வானிலை ஆராய்ச்சியில் இது ஒரு பாராடாக்ஸ் என்கிறார்கள். தூரக் கணக்கிடல், வேதியியல் காரணிகள், மற்றும் வானியல் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து நாம் வயதைக் கணக்கிடும் அளவீடுகளில் ஏற்படும் சன்னமான குறை, இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இப்போதுவரை எவ்விதமான வலுவான காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இத்தனைக்கும் இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் உள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கிறதே அப்படியானால், பூமியும் அத்தனை பழசானதா என்றால், அதுதான் இல்லை. பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் என்று தான் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த அரதப்பழைய நட்சத்திரம் உருவாகி சுமார் பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூமி உருவாகியிருக்கிறது.