என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 5 August 2020

மதங்களும் நீங்களும்

ஓகே. இப்படிச் சொல்கிறேன்.
வேட்டை சமூகமாக இருந்தபோது மதங்கள் ஆழ வேரூன்றி இருந்தன. ஏனெனில் பல கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியவில்லை. ஆக, தெரியாதவைகளையும், புரியாதவைகளையும் விளக்க மதங்கள் தேவைப்பட்டன. அறிவியல் மூலம் நாம் உலகை உணர்ந்துகொள்ள உணர்ந்து கொள்ள, மத நம்பிக்கைகள் மீதான பிடிமானம் மெல்ல மெல்ல விலகியது.
"மதங்களால் பிரித்தாண்டு நான் 'ஆட்சி அதிகாரம்' செலுத்த முடியும்" என்பது போல் ஒரு மடத்தனம் வேறு இருக்க முடியாது. இது, பிரபஞ்ச இயக்கத்தை மிக மிகக் குறைவாக மதிப்பிடுபவர்களின் மடத்தனமான நம்பிக்கைகள். பிரபஞ்ச விதிகள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஆட்சி அதிகாரம் செலுத்தும் உரிமை, பிரபஞ்ச விதிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. இதுதான் பேருண்மை. இதை உணராதவன் ஒரு நாட்டுக்கே தலைவனானாலும் அவன் முட்டாள் தான்.
ஆக, நான் புரிந்துகொள்வது இதைத்தான். புரியாமைகளும், தெரியாமைகளும் தான் மதமாகிறது. 'அறிந்து'விட்டால், மதம் தேவையில்லை. உங்களுக்கு மதம் தேவைப்படுகிறது என்றால் அதன் பொருள்: உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. ஆனால், அவைகளுக்கு உங்களிடம் பதில்களில்லை. ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், பதில்கள் வேறெங்கும் இல்லை. அவைகள் உங்களிடம் தான் இருக்கிறது.
நீங்கள் உங்களுக்குள் தேடுவதில் தான் இருக்கிறது. அதை நீங்கள் செய்யாதவரை, உங்களுக்கு மதங்கள் எக்காலமும் தேவைப்படத்தான் போகின்றன.
'அறிய' விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கின் என் பதில் இதுதான்.
உங்களுக்குள் தேடுங்கள். அவ்வளவுதான்.