நான் வாசித்த எழுத்துக்கள் - 3
சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு வழி எழுத்துக்கள் நுழைந்திருந்த காலம் அது. கீற்றுவில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். Speculative Fiction வகையறாக்கள் தான். அப்போது உயிர்மை பதிப்பகம் உயிரோசை என்றொரு இணைய வார இதழ் துவங்கினார்கள். அதில் எழுதத்துவங்கியிருந்தேன்.
சீனியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பது கல்லூரி முதலாம் ஆண்டில் கற்ற பாலபாடம்.
தமிழ் எழுத்துலகின் மும்மூர்த்திகளான சாரு, ஜெமோ, எஸ்.ரா மூவரையும் ஒரே நேரத்தில் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பணி நிமித்தம் லண்டனில் இருந்தேன். அதிகாலை ஐந்தரை மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன். அப்போது அலுவலகமே வெறிச்சோடிக்கிடக்கும். மடிக்கணினியைத் திறந்ததுமே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா பக்கங்களை ஏதோ அலுவலகத்துக்கு வந்தால் அடையாள அட்டையைத் தேய்ப்பது போல், தினசரி இந்த மூவரின் இணைய பக்கங்களை வாசித்துவிட்டுத்தான் அந்த நாளே துவங்கும்.
துரதிருஷ்டம் என்னவென்றால், அப்போது உடன் பணியில் இருந்தவர்களில் யாருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கவில்லை. அதனால், வாசிப்பது, எனக்குள் அசை போடுவது, இணையத்தில் மற்றவர்கள் விமர்சனங்களைப் படிப்பது, எழுதுவது என்று இருந்த காலகட்டம்.
சாருவின் நான் லீனியர் எழுத்து, எழுத்தையே வேறு விதமாகப் பார்க்க அணுக வைத்தது. அவருடைய ஜீரோ டிகிரி நூலை வாங்கி வாசிக்க வைத்திருந்தேன். அம்மா இரண்டு பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு, கடுமையாகத் திட்டினார். பின், ஒளித்து மறைத்துத்தான் படித்து முடிக்க வேண்டி இருந்தது. ஜெமோ பக்கங்களில் நிறைய இலக்கிய சிறுகதைகள், இலக்கிய சர்ச்சைகள், விமர்சனங்கள் பகிரப்படும். எஸ்.ராவின் எனது இந்தியா போன்ற நூல்களைத் தேடி வாங்கி வாசித்தேன். கே.கே.நகரில் இருந்த மறைந்த எழுத்தாளர் ஞானி அவர்களின் கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்வில் எஸ்.ராவை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தன் எழுத்துக்கென 'தேசாந்திரி' பதிப்பகம் துவங்கியிருந்தார். அதற்குள் பணி நிமித்தமாக அமெரிக்கா வரவேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கா வந்த பிறகு இணையம் மட்டுமே வழியாகிப்போனது. ஆதலால், கண்ணில் படுவது எல்லாவற்றையும் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட, தமிழ்ச்சூழலில் நடப்பில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும், குறைந்தபட்சம் அவர்களின் ஒரே ஒரு ஆக்கத்தையாவது இணையமென்னும் மாபெரும் கடலில் இருந்து பொறுக்கியெடுத்து நான் ஒரே ஒரு முறையேனும் வாசித்திருப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னால் எதைச் சொல்ல முடியாதென்றால், இத்தனை எழுத்தாளர்கள் குறித்து, நான் வாசிக்க நேர்ந்த அவர்களின் அந்த ஒரு ஆக்கத்தை வைத்து என்னால் எந்த தீர்மானத்துக்கு வர முடியாது என்பது தான். ஏனெனில், இங்கே அமெரிக்காவில் வேலையை தக்க வைக்கும் பிரயத்தனத்திலேயே பெரும்பான்மை நேரங்கள் கழிந்துவிடுகிறது. வாசிக்கக் கிடைக்கும் நேரத்தில் பெருமளவு எழுத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் போய் விடுகிறது. இந்தப் பின்னணியில், வாசிக்க நேரமே இருப்பதில்லை.
கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எனக்குக் கிடைப்பது இதுதான். இதுவரையில் எழுதியவர்கள் எல்லோரையும் வாசித்த பிறகு தான் எழுத வர வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. வாசிப்பே இல்லாமல் இருத்தலும் சரியில்லை. ஆக, வாசிப்பது பாதி, எழுத்து மீதி என்பதுதான் சரியான விகிதாச்சாரம். தமிழ் இலக்கிய உலகம் என்பது ஒரு பரந்துபட்ட களம். அதில் தேர்ச்சி என்றொரு நிலையே கிடையாது. நாம் எல்லோரும் மாணவர்களே. எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர். எஞ்சிய எல்லோரும் 'முயற்சிப்பவர்கள்' மட்டுமே. ஆகையால், காலத்தின் போக்கினூடே எழுத்தோடு கிடைக்கிற நேரத்தில், தேவைக்கு ஏற்ப வாசித்தல் தான் எனக்குச் சரியாக வருகிறது. அதை தான் நானும் செயல்படுத்துகிறேன்.

