நடிகை தமன்னாவின் ரகசியக் காதல்*****************************
தமிழகம் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆன்லைன் வகுப்புகள் தான். 2010 கிட்ஸை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் வரை பள்ளிக்கே வரவேண்டாமாம்.
இதையெல்லாம் கேள்விப்படுகையில் சின்ன வயதில் நடந்த பள்ளிக்கூட அட்ராசிட்டீஸ் நினைவுக்கு வருகிறது. அப்போதுதான் சென்னை, தி நகர் பனகல் பார்க் எதிரால் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தேன். என் அண்ணன் அப்போது ராமகிருஷ்ணா மிஷன் சவுத் பள்ளியில் எட்டாம் வகுப்பு. இரண்டு பள்ளிகளுக்குமே அருகாமையில் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளான சாரதா வித்தியாலயா பள்ளிகள் அமைந்திருந்தது. பஸ் ஸ்டாண்டில் தான் அனேகம் காதல்கள் துவங்கும் என்று திரைப்படங்களில் பார்த்திருந்த 'ஞானம்' வேறு.
ஆறாம் வகுப்புக்கு ஃபீஸ் கட்டிவிட்டு பஸ் பாஸ் வாங்கிவிட்டு பாடப்புத்தகங்கள், கியாமெட்ரி பாக்ஸ் எல்லாம் வாங்கி தயார் நிலையில் பற்பல கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன் முதன் முதலாக பச்சை தாவனிகளைப் பார்க்கலாம் என்று பள்ளியில் சேர்ந்தால், சேர்ந்த முதல் வாரத்திலேயே ஸ்டிரைக். என் கனவுகளில் இடியை இறக்கியது போலிருந்தது.
அண்ணனுடன் அண்ணனின் நண்பர்கள் வருவார்கள். பள்ளிக்கு செல்வோம். முதலில் பர்கிட் ரோட் பள்ளி. அங்கே ஸ்ட்ரைக் என்று தெரிந்துவிடும். உடனே மெயில் ஸ்கூலான என் பள்ளிக்கு ஒரு நடை. அங்கும் ஸ்டிரைக். பஸ் பிடித்து நேராக சைதாப்பேட்டையில் உள்ள டீச்சர்ஸ் காலனி விளையாட்டுத்திடல் வருவோம். என் அண்ணனின் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு டீமாகப் பிரிவார்கள்.
ஃபாஸ்ட் பவுளிங்கில் என் அண்ணன் சக்கரவர்த்தி. நான் ஒரு நோஞ்சான் வீரன். இருந்தாலும் அப்போது விளையாட்டுத்திடலில் அண்ணன்-தம்பி இருவராக இணைந்து டீமையே மைக்செட் ஷ்ரிராம் போல் தூக்கி நிறுத்தி புகழ் உச்சியில் இருப்பது ஒரு ட்ரெண்ட் ஆக இருந்தது. நான் தான் நோஞ்சான் வீரனாயிற்றே. என் அண்ணன் தன்னால் முடிந்த அத்தனை உத்திகளைப் பயன்படுத்தி என்னை ஒரு வேகப்பந்து வீச்சாளராக்கப்பார்த்தார். (இந்த இடத்தில் 'ஐயா' படத்தில் வரும் 'அய்யாத்துரை நீ பல்லாண்டு வாழனும், அய்யாத்துரை.....' பாடலை நினைவூட்டிக்கொள்ளவும்.) ஒரே சென்டிமென்ட் மொமென்ட்ஸ் தான்.
அவர் திறமைசாலிதான். எனக்குத்தான் வரவில்லை. முடிவில் நான் ஒரு விக்கெட் கீப்பராகத்தான் முடிந்தது. அதில் அண்ணனுக்கு ஒரு வருத்தம். என்னை 'ஆளாக்க' முடியவில்லையே என்று. எனக்கும் வருத்தம் தான் 'ஆளாக' முடியவில்லையே என்று. கோலமாவு கோகிலா நயந்தாரா போல் 'என் வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்' என்று கவலையில் ஆழ்ந்த காலம் அது.
இப்படியே போய்க்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்டிரைக் முடிந்து பள்ளி திறந்தார்கள். உடனே ஆர்வமுடன் பள்ளி செல்றோம். பாடம் அப்புறம்.
சாரதா வித்தியாலயா பச்சை தாவணிகள் தான் ப்ரையாரிட்டி. அப்போது 47A ரூட் பிரசித்தம். அந்த ரூட் பஸ்ஸில் கூட்டம் அம்மும். பள்ளி நேரம் பள்ளி செல்லும் பெண்கள் ஏறுவார்கள். அதில் ஒரு பெண் செம்ம அழகு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகை, ஒரு சாதாரண பச்சை தாவணிக்குள் அவள் போர்த்தியிருந்ததாகப் பட்டது. அவளை ஒரு நூறு பேர் பார்க்க, நூற்றியோராவதாக நானும் பார்த்தேன். பனகல் பார்க் நிறுத்தத்தில் அவள் இறங்கும் வரை பார்த்தேன். அவள் இறங்கும் போது என்னை ஒரே ஒரு தடவை பார்த்தாள். அவ்வளவுதான். அன்று முழுவதும் பள்ளியில் இருப்பே கொள்ளவில்லை. அன்று மாலை வீட்டுக்கு திரும்ப மீண்டும் பள்ளியை ஒட்டிய பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவள் வந்தாள். என்னைச் சுற்றி ஒரு நூறு பையங்கள் அவளையே பார்த்தபடி. அவளும் எங்கள் தரப்பில் பார்த்தாள். பின் பஸ் வந்தது. முதலில் அவள் ஏற, பின்னாலேயே எல்லா பையன்களும் முண்டியடித்து ஏறினார்கள். இந்த தள்ளுமுள்ளில் ஒரு நோஞ்சான் என்ன செய்துவிட முடியும்?
பேருந்தில் அவள் ஜன்னலூடாக என்னைப் பார்த்தது 'என்னைக் கைவிட்டுவிட்டாயே' என்பது போல் இருந்தது. அன்று சூளுரைத்தது தான். இனிமேல் ஜிம்மே கதி, அர்னால்ட் ஆகிவிடுவது தான் கதி மோட்சம். அதற்கு அடுத்த வந்த சில நாட்களும் மாலை பேருந்து நிறுத்தத்தில் அவள் எங்கள் பக்கம் பார்க்க, சில பையன் அவள் தன்னைத்தான் பார்ப்பதாக பேசிக்கொண்டது எனக்கே கேட்டது. அவள் என்னைப் பார்ப்பதை, தங்களைத்தான் பார்த்ததாக எவன் எவனோ நினைத்துக்கொள்வதை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டேன்.
நான் தள்ளி வந்தால், அவள் என்னைப் பார்ப்பது துண்டாகத் தெரியும் என்ற யோசனை வருவதற்கே இரண்டு வாரங்களாகிவிட்டது. அன்று திங்கள் கிழமை. நான் மற்ற பையன்கள் நிற்கும் இடத்தை வைத்து தள்ளி வந்து நின்று கொண்டேன். அவள் பார்த்தால் என்னைப்பார்ப்பது துண்டாக தெரியும் அளவுக்கான தொலைவில் என்னைத் தனிமைப்படுத்தி நின்றுகொண்டேன். இப்போது அவள் என்னைப் பார்த்தாள்.
அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எல்லாம் சரியாகப் போய்கொண்டிருப்பது போல் இருந்தது. எப்பேற்பட்ட அழகி, என்னைப் பார்க்கிறாள். வாவ்.
அன்று தலைகால் புரியவில்லை. அவளைச்சுற்றி பெண்கள் கூட்டமே இருந்தது. அவள் என்னைப் பார்த்து எதையோ கிசுகிசுக்க சுற்றியிருந்த பெண்களும் என்னை ஓரவிழிகளால் பார்த்துவிட்டு தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். அடுத்த நாளே ஒரு கிரீட்டிங் கார்டு வாங்கி அதில் 143 என்றெழுதி கைவசம் வைத்துக்கொண்டேன். பஸ்ஸில் ஏறும்போது வாய்ப்பு கிடைத்தால் அவள் பையில் திணித்துவிடவேண்டும் என்பது தான் திட்டம்.
அதற்கு அவள் பையை மிஷன் இம்பாசிபிள் டாம் குரூஸ் போல் கண்களாலேயே அளவெடுத்து, பிதகோரஸ் தியரமெல்லாம் பயன்படுத்தி எங்கே வைத்தால் நேராக அவள் இதயத்துக்குப் போய் விடும் என்றெல்லாம் கணக்கிட்டு ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டேன். எல்லாம் தயார். நான் அவள் ஸ்கூல் பேகில் கிரீட்டிங் கார்டை வைப்பதை எவனாவது பார்த்து சண்டைக்கு வந்தால், தாரை வார்க்க முகத்தில் சில பற்களைக் கூட தேர்வு செய்து வைத்துக்கொண்டேன். என்னானாலும் இன்று அந்தப் பெண்ணிடம் என் 'காதலை' திணித்துவிடுவது.
அன்றென்னவோ பஸ் சரியான நேரத்துக்கு வரவில்லை. பஸ் வராமல் போகப்போக இதயம் திக்திக்கென்று அடித்துக்கொள்வது எனக்கே கேட்கத்துவங்கியது. மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டேன். தொலைவில் அவளின் தோழிகள் அவளைப் பார்ப்பதும், பின் என்னையும் பார்த்துவிட்டு தங்களுக்குள் சிரித்துக்கொள்வதுமாக இருந்தார்கள்.
'இத்தனை ரவுடிப் பசங்களுக்கு நடுவுல எப்படித்தான் எங்கிட்ட அந்தக் கார்டை தரப்போறியோ?' என்பது போல் இருந்தது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்வதாக மனதுக்குள்ளேயே கறுவிக்கொண்டேன்.
பிறபாடு அவள் தோழிகளுள் ஒருத்தி தன் பையை என் மானசீக 'காதலி'யிடம் தந்துவிட்டு, என்னை நோக்கி வந்தாள்.
"ஐய்யய்யோ, நான் ஒங்களைப்பாக்கலீங்க.. தப்பாயிட்டுது... ஒங்க தோழியைத்தான்............" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னைக் கடந்து என் பின்னால் சென்றாள். நான் திரும்பிப் பார்த்தபோது அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பொட்டு, தோடுகள், லிப்ஸ்டிக், சின்ன கண்ணாடிகள், சீப்பு, ரோஸ் பவுடர் , ஃபேஸ் கிரீம் முதலான மேக்கப் ஐட்டங்கள் இருந்தன.
பின் குறிப்பு:
என் பள்ளிக்கால கதை என்று தலைப்பிட்டால் உங்களில் யார் வாசிக்கப்போகிறீர்கள்? யாரும் வாசிக்கப்போவதில்லை. அதனால், எப்படி வாசிக்க வைப்பது என்று யோசித்ததில் கிடைத்த ஐடியா தான் இந்தத் தலைப்பு. ஐ அம் வெரி சாரி. ஹிஹிஹி....
என் பள்ளிக்கால கதை என்று தலைப்பிட்டால் உங்களில் யார் வாசிக்கப்போகிறீர்கள்? யாரும் வாசிக்கப்போவதில்லை. அதனால், எப்படி வாசிக்க வைப்பது என்று யோசித்ததில் கிடைத்த ஐடியா தான் இந்தத் தலைப்பு. ஐ அம் வெரி சாரி. ஹிஹிஹி....