பிரிவின் சாசனம் - கவிதைத் தொகுப்பு நூல்
ஆசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்
வருடம் 2009 ஆ, 2010 ஆ தெரியவில்லை. உயிர்மை பதிப்பக நிறுவனர் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்கள் உயிரோசை என்றொரு இணைய இதழை துவங்கினார். அப்போதுதான் எழுதத்துவங்கியிருந்த எனக்கு அது ஒரு அற்புதமான தளமாக இருந்தது. அந்தத் தளம் ஒரு வாராந்திரியாக இயங்கியது.
அதில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எழுதிக்கொண்டிருந்தமையால், உடன் எழுதுபவர்கள் அனேகம் பேரை எனக்குத் தெரியும். அப்படி அடிக்கடி பார்த்து பரிச்சயப்பட்ட பெயர் செல்வராஜ் ஜெகதீசன். இன்றுவரை நேரில் சந்தித்துக்கொண்டதில்லை எனினும் கவிதைகள் வழியே இதுகாறும் அமைந்திருக்கிறது அவருடனான பரிச்சயம் எனக்கு.
அவரின் 'பிரிவின் சாசனம்' கவிதைத் தொகுதி நூல் மீதான விமர்சன பார்வையை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி.
செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் பெரும்பாலும் இயல்பாக நடக்கும் நிகழ்வுகளின் மூலம் கடத்தப்படும் உணர்வுகளை வார்த்தைகளால் விரிப்பதாக இருக்கும். எளிமையான, மிகக் குறைவான சொற்கள். உரை நடை பாணியிலமைந்த கவிதைகளே பெரும்பாலானவைகள். உவமை, உருவகங்களால் சிக்கலான மிகுபுனைவை உருவாக்கி வாசகனை பயமுறுத்தும், அறிவு ஜீவி வேஷம் காட்டும் கவிதைகள் அல்ல இவரின் கவிதைகள்.
இவரின் பல கவிதைகளை ஒரு உணர்வுப்பூர்வமான சினிமாவின் காட்சிகளில் 'அட!!' சொல்ல வைக்கும் வசனங்களாகவும் பார்க்க முடியும். திட்டமிட்டே இப்படி எழுதுகிறாரா தெரியவில்லை?
இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை ஏற்கனவே வாசித்த உணர்வு வாசிக்கையிலேயே கிடைத்தது.
பிரிவின் சாசனம், அந்தரங்கம் முதலான எண்ணற்ற கவிதைகளை அப்படிச் சொல்லலாம்.
பறத்தல் மட்டுமே கூட பறவையின் நோக்கமாக இருக்கலாம். எஞ்சிய அனைத்தும் பக்க விளைவுகளே என்று பதிவு செய்கிறது இந்தக் கவிதை.
ஒரு பறவை ஏன் பறக்க வேண்டும் என்ற கேள்விக்கு எது பதிலாக இருக்க முடியும்? பொருண்மை லாபங்களை மனதிற்கொண்டு இயங்குவதைக் காட்டிலும், வாழ்வை வாழ்வதற்காகவே வாழ்ந்தால் தான் என்ன என்ற கேள்வியாகவும் பார்க்கலாம் என்பதைச் சொல்வதாக இருக்கிறது இந்தக் கவிதை.
பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு....
ஏமாற்றத்தை தந்துவிட்ட ஓர் உறவை அதன் பின் எப்படி கடப்பது? யாரோ ஒருவன் என்றால் நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் ஒரு சினேக உணர்வு, ஏமாற்றிய உறவுகள் மீது வருவதில்லை. உறவுகளை பொருண்மை லாபங்களை விட்டு unclutch செய்து பார்த்தால் தான் என்ன என்பதைச் சொல்வதாக இருக்கிறது இந்தக் கவிதை.
ஒரு ரயில் சிநேகத்தைப்
போலாவது
இருந்திருக்கலாம்
நமதந்த
இறுதிப் பிரிவு....
எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்வில், மனிதத்தின் மீது பற்றுகொள்ள அழைப்பதாக அமைகிறது இந்தக் கவிதை.
எழுத்தில் இருப்பதை
எடுத்துக்கொடுக்கும் பணி தான்
என்றாலும் இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி இருக்கலாம்
இந்த மருந்துக்கடை விற்பன்னர்கள்...
முன்னரே சொன்னது போல் சில கவிதைகளை அப்படியே வசனமாக திரை வடிவில் வைத்துவிடலாம் போலிருக்கிறது. அப்படியான கவிதை இது.
தெய்வம்
நின்று கொல்லும்.
ஏன்?
பின் வரும் கவிதையில் இறுதியில் வரும் 'இவனைப்போலவே' இல்லாமல் இருந்திருப்பின் கவிதையின் அர்த்தம் மிக மிக சாதாரணமாக இருந்திருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய
கடிதமொன்றில் பெரிதும் மாறிப்போயிருந்தது
கையெழுத்து இவனைப்போலவே....
விதைகள் விருட்சமாவதன் பின்னால் தேர்வென்ற ஒன்று இருந்திருக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்வதாக அமைகிறது இந்தக் கவிதை. இதையே மானுடவியலிலும் பொருத்திப் பார்க்கவும் முடியும். அதை வெளிப்படையாக சுட்டாமல் பூடகமாக இப்படியும் சுட்டலாம் என்பதே இந்தக் கவிதையை பிரத்தியேகமானதாக்குகிறது.
விதை நெல்லொன்றை
வீசிவிட்டுப் போன பறவை
அறிந்திருக்கவில்லை
அது விழுந்த இடம்
ஒரு கான்க்ரீட் தளம் என்பதை...
புலன்கள் எத்தனை போலியானது என்பதை இந்தக் கவிதை சொல்லிவிடுகிறது.
எப்போதும் எப்படி
மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் எங்கிறீர்கள்...
'எப்போதும்' என்று எப்படிச் சொல்கிறீர்கள்....
சுமார் 100 தலைப்புகளில் கவிதைகள் என்றாலும் சில தலைப்புகளில் ஒன்றுக்கும் மேல் இருக்கின்றன. ஒரு கவிதையை வாசித்துவிட்டு அப்படியே எடுத்துவைத்துவிட்டு தீவிரமாக யோசிக்க வைத்தும் கவிதைகளாக பெரும்பான்மையும் இல்லாமல், படித்த உடனே புரிந்துவிடுகிற கவிதையாகவே எல்லாமும் இருக்கின்றன. ஆகையால், பல தரப்பட்ட வாசகர்களை நிச்சயம் சென்றடையும் என்றே நம்புகிறேன்.
தொகுப்பு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வாயிலாக நூலாகியிருக்கிறது.
நூலைப் பெற்றுக்கொள்ள வாசகர்கள் பின்வரும் கீழ்க்கண்ட முகவரியில் அணுகலாம்.
41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600 011
அலைபேசி: 9444640986
bookudaya@gmail.com