Social media influencers குறித்த "வா தமிழா வா" நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
தங்களிடம் ஏதோவொரு திறமை இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு, அதனை சோதித்துப் பார்க்க நிச்சயம் ஒரு தளம் தேவை. இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. நான் கல்லூரி படிக்கையிலெல்லாம் இந்த ஊடகங்களெல்லாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் கல்லூரி முடித்த 2002ம் ஆண்டில் 1100 நோக்கியா தான் சந்தைக்கு வந்திருந்தது. இரண்டே ஆண்டுகளில் வீட்டுக் கடன், கார் கடன் என்கிற சுழற்சியில் சிக்கியிருந்தேன். எழுத்து மட்டுமே கிடைத்த சொற்ப பகுதி நேரத்தில் முயன்று பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. கல்லூரியில் வெட்டி நேரங்கள் நிறைய கிடைக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்தி குறும்படங்கள் என்று இறங்கிவிடுகிறார்கள். மைக்செட் ஷ்ரிராம், ப்ரதீப் ரங்கநாதன் போன்றோர் கல்லூரி காலங்களிலேயே வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். அந்த வாய்ப்பெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்ற வருத்தம் தான்.
சமூக ஊடகங்கள் மக்களிடையே காட்சி ஊடகங்களைப் பழக்கப்படுத்திவிட்டன. மக்களும் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். ஆறு திரும்பும் திசையெல்லாம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஆற்றின் திசையில் தான் மனித நாகரீகங்கள் தழைக்க ஏதுவாகிறது இல்லையா? நாகரீகங்கள் தழைத்தபிறகு, திசை தவறானது என்றறிந்து என்ன பிரயோஜனம்?
சமூக ஊடகங்களில் திறமை பழகுதலும், அத்திறமை கனிந்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாகுதலும் இணையும் புள்ளியில் நல்ல திறமைகள் சமூகத்திற்கு வாய்க்கின்றன. எந்தப் புள்ளியிலும் இணையாத போது, அது சுதி சேராத இசை போல் அப்படி அப்படியே கலைந்துவிடுகிறது. அடையாளச்சிக்கலுக்குள் சிக்கிவிடுகிறது. எதைத் தேடி வந்தார்களோ அதை விட்டுவிட்டு, ஆள் சேர்ப்பில் இறங்கிவிடுகிறார்கள்.
அமெரிக்காவின் ஒன்லி ஃபான்ஸுக்கு நிகராக, பெண்கள் இன்ஸ்டாகிராமில் நிர்வாணம் காட்டுகிறார்கள். ஒன்லி ஃபான்ஸிலாவது சம்பாதிக்க வழி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அது தலையெழுத்தையே தீர்மானித்துவிடுகிறது.
மற்றபடி சமூக ஊடகத்தை திறமையை வெளிப்படுத்த நாடுபவர்களில் சொற்பமானவர்களே, தங்கள் இலக்கைக்கண்டடைகிறார்கள். எஞ்சியவர்கள் கிடைத்ததை இலக்காக்கிக்கொள்கிறார்கள். கிடைத்ததை இலக்காக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
திறமை என்று தாங்கள் நினைக்கும் ஒன்று உண்மையிலேயே இருப்பின், இலக்கை கண்டடைவீர்கள். இலக்கை அடைய முடியவில்லை என்றால் இதற்கு அர்த்தம் நீங்கள் திறமை அற்றவர் என்பதல்ல. உங்களுக்கு வேறொரு திறமை இருக்கலாம் என்பதுதான் அர்த்தம். அது என்ன என்ற தேடலில் இறங்குவது ஒரு நல்ல அணுகுமுறை என்று எனக்குத் தோன்றும். இதன் மூலம் நாம் தேங்கி நிற்கவேண்டியதில்லை.
இணையத்தில் இப்படி 'தேங்கி' நிற்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உண்மையில், 'தேங்கி'க்கிடந்தாலும் ஆபாசமே கூட பார்வையாளர்கள் இன்றித்தான் கிடக்கிறது. ( என்னுடைய இன்ஸ்டா பக்கத்துக்கு இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் என்று பீத்த வேண்டியதில்லை. ஏனெனில், அந்த இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் எல்லா ஆபாச இன்ஸ்டா பக்கத்திற்கும் இருப்பதைப் பார்த்தால், ஒரே இன்ஸ்டா பயனர் எல்லாவற்றிலும் ஃபாலோயராக இருப்பதன்று வேறு மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.) ஆக, ஆபாசமாகவே இருந்தாலும் எத்தனையைத்தான் பார்ப்பது? ஆபாசத்துக்கான கவர்ச்சியையே வீழ்த்தியதில் இந்தத் 'தேக்க'த்திற்கு நிறைய பங்கிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
சமூக ஊடகத்தில் திறமையைக் காட்ட முனைவோர்க்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்:
1. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
2. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. திறமையை வெளிக்காட்டுகையில், நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும் தான். ஆனால், கூட்டத்தை தக்கவைக்கவென இறங்காதீர்கள். கூடுபவனே தொடர்ந்து கூடினால், அவனும் வளரவில்லை. நாமும் வளரவில்லை என்று பொருள். தினம் தினம் புதுப் புதுக் கூட்டம் கூடினாலும் அது சரியல்ல. ஆக, கூட்டத்தைத் தக்க வைக்கவென பிரயனத்தபட இறங்காதீர்கள். திறமை கூட்டத்தை உருவாக்க வேண்டுமே ஒழிய கூட்டம் திறமையை அல்ல.
4. நம் இலக்குகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டம் அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
5. கூட்டமே கூடாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. புதிய புதிய முயற்சிகளில் நாம் இறங்க முடியும். அனானிமஸ் ஆக இருப்பது பல வழிகளில் நல்லது.