என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 25 October 2025

அறிவிப்பு!!

அறிவிப்பு!!

சர்வதேச அளவில் அறிவியல் புனைவிதழ்கள் குறித்து நமக்கெல்லாம் ஒரு பொதுவான பரிச்சயம் இருக்கிறது. Analog, Asimov, Clarkesworld போன்றவை அவற்றுள் சில.

இவை எதனால் பிரபல்யமான இதழ்களாக இருக்கின்றன? வார்த்தை ஒன்றுக்கு எட்டு சென்ட் வீதம் எழுத்தாளர்களுக்கு வெகுமதி வழங்குவதால். அதென்ன கணக்கு வார்த்தைக்கு எட்டு சென்ட்? இதை நிர்ணயிப்பது யார்? அதென்ன சொல்லி வைத்தாற்போல் Analog, Asimov, Apex போன்று எல்லா இதழ்களிலும் ஒரே வெகுமதி: ஒரு வார்த்தைக்கு ஒரு சென்ட்?

இதற்குக் காரணம், ஒரு அமைப்பு. அதன் பெயர் Science Fiction and Fantasy Writer's Association. சுருக்கமாக, SFWA. மேற்சொன்ன இதழ்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த SFWA தான். இந்த இயக்கம் தான் சர்வதேச தரத்திலான அறிவியல் புனைவுகளுக்கான இலக்கிய தரம் நிர்ணயித்தல், இலக்கிய இதழ்களை ஒருங்கிணைத்தல், அறிவியல் புனைவெழுத்தாளர்களுக்கான வருவாயை/ஆக்கத்திற்கான சன்மானத்தை நிர்ணயித்தல், அது எழுத்தாளரைச் சென்றடைகிறதா என ஊர்ஜிதம் செய்தல், என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து முறையாக நிர்வகிக்கிறது.

வார்த்தைக்கு எட்டு சென்ட் என்பது இந்த அமைப்பு நிர்ணயிக்கும் விலை/சன்மானம் தான். இத்தகு இதழ்களை Professional Market என்றும், இதில் விலைபோகும் எழுத்துக்களை Professional Sales என்றும், இத்தரத்திலான ஆக்கத்தை எழுதிய எழுத்தாளரை, Professional Writer அல்லது Pro-Writer என்றும் விளிப்பது சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய வெளியில் நடைமுறை தான். அதே போல, இந்த அமைப்பில், இந்த விலையில் ஆக்கத்தை விற்பனை செய்வது, இந்த அமைப்பில் உள்ள எல்லா இதழ்களின் தரத்தை எட்டியதாகவே கருதப்படுகிறது.

சமீபத்தில் எனது 'Mismatch' சிறுகதையை இந்த முறையில் Protocolized இதழுக்கு விற்ற வகையில், இந்தத் தரத்தை எட்டியிருக்கிறேன் என்பதை இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இத்தருணத்தில் ஈதனைத்தும், எல்லாம் வல்ல இறைவனின் அருளன்றி வேறல்ல என்பது திண்ணம். இறைவனுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஆதலால், இனி வரும் காலங்களில் என்னை 'Professional Writer' அல்லது 'Pro-Writer' என்று விளிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் பிரதிநிதியாக, சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய அமைப்பின் உறுப்பினராக உருவாகியிருப்பது, உலகம் முழுவதும் பரவி விரிந்திருக்கும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் நிகழ்காலத் தமிழ்ச்சமூகத்தின் அறிவியல் தேடலுக்கான அடையாளமாகக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.

பொதுவிலேயே எனது வாசிப்பு குறைவு தான். இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அமெரிக்காவில் வழங்கப்படும் 'Nebula Awards' போன்ற பல விருதுகளுக்கு வாக்களித்து விருதாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் என்பதால், சக வாக்காளர்களுடன் விவாதங்களில் ஈடுபட ஏதுவாக இருக்கவேண்டி, சர்வதேச அறிவியல் புனைவிலக்கியம், அதன் சரித்திரம், பூகோலம் எல்லாவற்றையும் அவசரஅவசரமாக தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இது, சில காலத்திற்கு தமிழில் எழுதுவதை சற்று சிக்கலாக்கும் என்றே கருதுகிறேன். ஆயினும், தொடர்ந்து சிறுகதைகள் கொணர முயல்கிறேன். நண்பர்கள் பொறுத்தருள்க. எழுத்து முழு நேரப் பணி இல்லை என்பதால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேலாண்மை செய்வதில் விழி பிதுங்குகிறது. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி.