என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 29 July 2025

ஆணவக்கொலை

ஆணவக்கொலை

********************** 

சில பேரெல்லாம் பாப்பதற்கு நவ நாகரீகமாக உடை அணிந்து, சிந்தனைச் செல்வர்கள் போல் தோற்றமளிப்பார்கள். நெருங்கிப் பார்த்தால் தான் தெரியும், அது ஒரு சாக்கடை என்பது.

 பலரெல்லாம் ஒரு குடும்பமாகவே மிகவும் Toxicகாகத்தான் இருப்பார்கள். நாம் நெருங்கி விடக்கூடாது. சூதனமாக ஒதுங்கிச் சென்று விடவேண்டும். 

"சாதியாவது மண்ணாவது" என்று சாதிவெறியர்கள் கூட, பேசக் கற்றுக்கொண்டுவிடுவது, சமூகப் புழக்கத்திற்கு மட்டுமே. ஒரு நடிகன் வந்து "என்னை வாழ வைக்கும் தெய்வம்" என்று பொதுமேடையில் மைக் முன் பேசினால், அது ஜோடனை என்று  நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் உள்ளூர் வந்து "வந்தாரை வாழ வைக்கும் ஊர்" என்று சொன்னால், அவன்  நம்மூரைப் புகழ்கிறான் என்று அர்த்தமல்ல. தன் புழக்கத்தற்கு, பிழைப்பிற்கு அந்த ஊரைத் தயார் செய்கிறான் என்று அர்த்தம். இதையெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். சூதனத்தை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காலம் தான் பதின்ம மற்றும் இருபதுகள் வயது. இந்த வயதில் காதல் எல்லாம் பெரும்பாலும் ஏமாற்றத்திற்குத்தான் இட்டுச்செல்லும். 

காதல் ஒரு நல்ல உணர்வு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதை இக்காலகட்டத்தில் உண்மையாகச் செய்வது யார்? காதலன் கொல்லப்பட்ட பிறகு, அவனை யார் என்றே தெரியாது என்று சொல்வதெல்லாம் என்ன ரகமான காதல்? இப்படி இருக்கும் நபர்களுக்காக உயிர் விடுவதெல்லாம் என்ன மடத்தனமான காதல்?

சென்ற மாதங்களில் ஒரு ஐடி நிறுவனத்தில் காதலித்த பெண் வேறு நபருடன் ஹோட்டல் சென்றார் என்ற காரணத்திற்காய் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதெல்லாம் என்ன மடத்தனமான காதல்? என்ன கண்மூடித்தனமான கேனத்தனமான காதல்?  இக்காலத்தில் உண்மைக் காதலுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் மிகவும் குறைவு.  நாம் தான் அந்தக் காதலர்கள் என்று நாமாக நினைத்துக்கொள்வதெல்லாம் delusionல் வேற லெவல். 

மாதம் இரண்டு லட்சம் ஊதியம் வாங்கும் இடத்திற்கு நகர்ந்த பிறகு, இரண்டு லட்சம் ஒரு மாதத்திற்குப் போதாதா என்ற எண்ணத்தில், வருமானத்திற்குள் வாழ்ந்தால் போதும் என்கிற 'போதுமென்கிற மனமே.....' என்ற எண்ணத்தில், பெண் தேடப்போனால், 'வேலைக்குப் போகாத பெண் வேண்டுமா? என்ன ஒரு ஆணாதிக்கம்?' என்பார்கள். ஒரு ஷோவில் "ஒரு ஸ்டீரியோடைப்பை உடைச்சிட்டு சமூகத்திற்கு பயப்படாம எவன் வரானோ அவன் கம்பீரமான பையன்" என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு ஷோவில், "கணவனைப் பிரிந்த அன்னையர்களை மறுமணம் செய்பவன் தான் உண்மையான ஆண்" என்று இன்னொரு பெண் சொன்னார்.  ஆக, நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிக்காத சமூகம் தான் இது. இதில் எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? அதைச் சொல்லப்போவது யார்? அவர்களின் யோக்கியதை என்ன? 

நம்மை வேறு யாரோவாக இருக்கச் சொல்லும் சமூகத்திற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு,நாம் நாமாக இருந்துவிட்டு போயிடலாம். 

நம்மை நம்பி வயதான பெற்றவர்கள் இருக்கிறார்கள். பதின்ம மற்றும் இருபதுகள் வயதுகளை, சுய முன்னேற்றத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், பெற்றவர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்துங்கள். இதுவும் ஒரு விதத்தில் காதல் தான்.   தன் சுயம் மீதான காதல். இந்த உலகம் 'காதலில் விழவில்லை' என்றால் ஏளனமாகத்தான் பார்க்கும். காதலில் விழுமளவிற்கு இங்கே யார் தகுதியாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் தான் எழுப்பிக்கொள்ள வேண்டும். 

தனிப்பட்ட முறையில், என்னைக் கேட்டால், யாருமே தகுதியில்லை என்று எல்லோருமே நினைத்துக்கொண்டு அவரவர் வேலையில் இயங்குவது ஒரு நல்ல strategy என்பேன். இந்த நினைப்பு தவறென்றால் எவரேனும் 'வாழ்ந்து காட்டி' நிரூபித்துக்கொள்ளட்டும். அப்படி 'வாழ்ந்து காட்ட' எவருமே இல்லையென்றால், ரொம்ப நல்லதாகிவிட்டது. அதுதான் அவரவர் வேலையில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிறோமே. சுய முன்னேற்றமாவது மிஞ்சும். 

விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.